Monday, August 20, 2007

2007-லும் கோயில் நுழைவுக்காகப் போராடும் நிலையா?

தமிழ்நாட்டில் இன்னும் சில ஊர்களில் குறிப்பாக, கிராமக் கோயில்களில் தாழ்த்தப்பட்டவர்கள் நுழையக் கூடாது என்கிற கொடுமை உண்மையிலேயே வெட்கப் படத்தக்கதாகும்.70, 80 ஆண்டுகளுக்கு முன்பே இத்தகைய போராட் டங்களில் சுயமரியாதை இயக்கம் ஈடுபட்டு, அதன்பின் சட்ட ரீதியாகவே தாழ்த்தப்பட்டோர் கோயில் நுழைவு என்பது அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகும்.அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்கிற தந்தை பெரியார் அவர்களின் அறிவிப்பு -வெற்றி பெற்றுள்ள தறுவாயில், கோயில் கருவறைக்குள்ளேயே தாழ்த்தப்பட்ட தோழர்கள் அதிகாரப்பூர்வமாக அர்ச்சக ராகலாம் என்கிற அளவுக்கு மனித உரிமை வளர்ச்சி பெற்றுள்ள இந்தக் காலகட்டத்தில் கோயிலுக்குள்ளேயே தாழ்த்தப்பட்டவர்கள் இன்னும் சில இடங்களில் நுழைய அனுமதியில்லை என்பது எந்த வகையிலும் அனுமதிக் கப்பட முடியாத ஒன்றாகும்.சேலம் மாவட்டம் கந்தம்பட்டியில் உள்ள திரவுபதை யம்மன் கோயிலுக்குள் தாழ்த்தப்பட்டவர்கள் அனுமதிக் கப்படவில்லை என்பதற்காக விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் சார்பில் கோயில் நுழைவுப் போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலையிட்டு, பிரச்சினைக்குத் தீர்வு காணும்வரை கோயிலை இழுத்து மூடிவிடுவது என்று முடிவு செய்து, அதன்படி கோயிலும் இழுத்து மூடப்பட்டுள்ளது.இந்து அறநிலையத்துறை இதில் தலையிட்டு, தமிழ்நாடு முழுவதும் இந்துக் கோயில்களில் எங்கெங்கு தாழ்த்தப் பட்டவர்கள் அனுமதிக்கப்படவில்லையோ, அந்தக் கோயில் களில் எல்லாம் அவர்களை அனுமதிக்க சட்ட ரீதியான முயற்சியினை மேற்கொள்ளவேண்டியது சட்டப்படியான கடமையாகும்.பிரச்சினை வரும் சூழல் இருந்தால் சுமுகமாகப் பேசிப் பார்ப்பதில் ஒன்றும் தவறு கிடையாது - நியாயத்துக்குக் கட்டுப்பட மேல்ஜாதி(?) மக்கள் மறுப்பார்களேயானால், அவர்கள்மீது சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்கவும் தயங்கக்கூடாது.21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நாம் வாழ்ந்துகொண்டு இருக்கிறோமா அல்லது கற்காலத்தை நோக்கிப் பின்னுக்குத் தள்ளப்பட்டு இருக்கிறோமா?பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், கொட்டக் கச்சியேந்தல் போன்ற தாழ்த்தப்பட்டோருக்கென்று ஒதுக்கப்பட்ட ஊராட்சிகளில் 10 ஆண்டுகாலமாக தேர் தலையே நடத்த முடியாது என்றிருந்த நிலையையே மாற்றி, அங்கெல்லாம் தேர்தலையும் நடத்தி, இந்த அரசு பெரியார் அரசு என்று நிரூபித்த மானமிகு மாண்புமிகு கலைஞர் ஆட்சி, இந்தப் பிரச்சினையிலும் தலையிட்டு, ஒரு சுமுகமான தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.இந்துக்களே ஒன்றுபடுவீர் என்று குரல் கொடுக்கும் சங் பரிவார்க் கும்பல் எங்கே போய் இப்பொழுது ஒளிந்து கொண்டுள்ளனர் என்று தெரியவில்லை.பேச்சுவார்த்தைக்குக் கட்டுப்பட்டு, தீர்வு காணும்வரை போராட்டத்தை ஒத்தி வைப்போம் என்று விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு அறிவித்திருப்பது அவர்களின் பொறுப்புணர்ச்சியைக் காட்டக்கூடிய ஒன்றாகும்; இதனைப் பலவீனமாக யாரும் கருதக் கூடாது.சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள பிற்படுத்தப்பட்ட சமு தாயத்தைச் சேர்ந்த தலைவர்களும், அரசியல் கட்சியி னரும், சமூக அமைப்பினரும் ஓரிடத்தில் அமர்ந்து பேச வேண்டும்.தாழ்த்தப்பட்டோர் கோயிலுக்குள் நுழையக் கூடாது என்று சொல்லுகிற தமிழகக் கட்சி ஏதும் கிடையாதே. அப்படியிருக்கும்பொழுது இதில் சுமுகத் தீர்வு காண்பதில் என்ன இடர்ப்பாடு இருக்க முடியும்? அப்படியே முட்டுக் கட்டை போட யாரேனும் முன்வந்தால் அவர்களை எளிதில் அடையாளம் காணமுடியுமே!இது ஒரு கட்சிப் பிரச்சினையாக யாரும் கருதத் தேவை யில்லை. ஒட்டுமொத்தமான மனித உரிமைப் பிரச்சினை யாகும். இதில் திராவிடர் கழகம் தன் ஒத்துழைப்பையும், பங்களிப்பையும் அளிக்க எப்பொழுதும் தயாராகவே உள்ளது என்பதையும் அழுத்தந்திருத்தமாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.
விடுதலை தலையங்கம்(17.08.207)

மாட்டு மூத்திரம் வாங்கலியோ, மாட்டு மூத்திரம்

நகர்ப்புறங்களைவிட கிராமப்புறங்களில் சில பொருள்களைக் கூவி விற்பதுண்டு - நாகரிகம் வளர்ந்து வரும் காலத்தில் இதுபோன்ற கூவும் குரல்களைக் கேட்பது அரிதாகி விட்டது.உத்தரப்பிரதேசத்தை இரு மாநிலங்களாகப் பிரித்து உத்தரகண்ட் என்று தனி மாநிலம் உருவாக்கப்பட்டது. இங்கு பார்ப்பனர்கள் கணிசமான எண்ணிக்கையில் இருக்கின்றனர். பா.ஜ.க., ஆட்சி நடந்துகொண்டு இருக்கிறது. கந்தூரி முதலமைச்சராக இருக்கிறார் (இவர் ஆட்சியும் இப்பொழுது ஆட்டம் கண்டுவிட்டது. பா.ஜ.க., தலைவர் ராஜ்நாத் சிங் அங்கு விரைந்துள்ளார் என்பது வேறு செய்தி!).இந்தப் பா.ஜ.க., ஆட்சியில் பசு மாட்டு மூத்திரத்துக்கு ரொம்பவும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. ஒரு லிட்டர் மூத்திரம் ஆறு ரூபாய்க்கு விலை போகிறதாம்.யோகா குரு ராம்தேவ் தயாரிக்கும் ஆயுர்வேத மருந்துக்கு இந்த மாட்டு மூத்திரம் மிகவும் தேவைப்படுகிறதாம்.அந்த மாநிலத்தில் இருக்கும் கால்நடை வளர்ப்புத் துறையும், நாட்டு மக்கள் மத்தியிலே மாட்டு மூத்திரத்தைப்பற்றி விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை நடத்தப் போகிறதாம்.ரத்த வங்கி போல மாட்டு மூத்திர வங்கிகளை கூட்டுறவு சங்கங்களை அமைத்து மக்களுக்கு வழங்கப் போகிறார்களாம்!சபாஷ்! பி.ஜே.பி., என்கிற இந்துத்துவா ஆட்சி வந்தால் தண்ணீ ருக்குப் பதிலாக மாட்டு மூத்திரத்தைக் குடிக்க உத்தரவு போட்டு விடுவார்கள். இதன்மூலம் தண்ணீர்ப் பஞ்சத்துக்கும் தீர்வு கிடைக்கக் கூடும் அல்லவா?

மாட்டு மூத்திரம் என்றால் அதுவும் பசுமாட்டு மூத்திரம் மட்டும்தான் - எருமை மாட்டு மூத்திரமோ, காளை மாட்டு மூத்திரமோ அல்ல! பசுதானே அவர்களின் கோமாதா! ஏற்கெனவே பசுவை உணவுக் காக வெட்டக் கூடாது என்று ஒரு சட்டத்தையும், அந்த மாநிலத்தில் பிறப்பித்து நடைமுறைப்படுத்தி விட்டனர். மீறி வெட்டினால் சிறைத் தண்டனையோடு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் வேறு கட்டவேண்டும்.மாட்டு மூத்திரத்தை எடுத்து இரசாயன பரிசோதனை செய்து பார்த்தார்களா என்று தெரியவில்லை. அது ஒரு கழிவுப் பொருள்தான். கழிவுப் பொருளைச் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது என்று இதுவரை எந்த மருத்துவத் துறை விஞ்ஞானமும் தெரிவிக்கவில்லை.பஞ்சகவ்யம் என்று சொல்லி மாட்டு மூத்திரம், சாணி, பால், தயிர், வெண்ணெய் அய்ந்தையும் ஒன்றாகக் கலக்கி, `சூத்திரன் வீட்டில் நடக்கும் திதி முதலிய காரியங்களில், வீட்டுப் பெரியவர்களைக் குடிக்கச் செய்வார்கள். அதற்குத் தட்சணையும் கொடுத்து பயபக்தியோடு குடிப்பார்கள் சூத்திரர்கள்.இதனை திருமண நிகழ்ச்சிகளிலும், புதுமனை புகுவிழா நிகழ்ச்சிகளிலும், நீத்தார் நினைவு போற்றும் நிகழ்ச்சிகளிலும் தந்தை பெரியார் எடுத்துக்காட்டி மானங்கெடப் பேசுவார்கள்.பஞ்சகவ்யத்தை முகம் சுளிக்காமல் குடிக்கிறானா என்று பார்ப்பான் பார்ப்பானாம். அப்படி முகம் சுளிக்காமல் குடித்தால் பார்ப்பான் கணக்குப் போடுவானாம்! `பரவாயில்லை இன்னும் நூறு வருஷங்களுக்கு இவாளைச் சுரண்டலாம்! என்று கணக்குப் போடுவானாம் - தந்தை பெரியார் கூறுவார்.இன்னும் ஓர் அளவுகோலையும் தந்தை பெரியார் கூறுவதுண்டு.பஞ்சகவ்யம் குடிப்பது என்பது நமது முட்டாள்தனத்தைப் பார்ப்பான் அளக்கும் தர்மா மீட்டர் என்றும் சொல்லுவார்.தமிழ்நாட்டில் தந்தை பெரியார் தோன்றினார்; பிரச்சாரம் செய்தார். திராவிடர் கழகம் இருக்கிறது; தொடர் பிரச்சாரம் நடந்துகொண்டு இருக்கிறது. இத்தகு காரணங்களால் இந்தப் பஞ்சகவ்யம் எல்லாம் அனேகமாகக் குறைந்து போய்விட்டது.அதேநேரத்தில், பா.ஜ.க., - சங் பரிவார்க் கும்பல் பசுமாட்டு மூத்திரத்துக்கு ஒரு மகத்துவத்தை உண்டாக்கும் வேலையில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறது என்பதை நம் மக்கள் தெரிந்துகொள்ளுவது நல்லது.தன் மலத்தையே தின்ன பரமஹம்சர்கள் எல்லாம் கூட இந்த நாட்டில் உண்டு.கேட்டால் அவர்கள் `மும்மலத்தையும் அறுத்த மலந்தின்னிகள் என்று பட்டம் கொடுத்தாலும் கொடுப்பார்கள்.வெட்கக்கேடு. இந்த 2007-லும் இப்படி ஒரு கூட்டம்!இந்துத்துவா என்றால், ஓகோ என்று பேசுகிறார்களே - ஒரு வெங் காயமும் இல்லை - மாட்டு மூத்திரத்தைக் குடிக்கச் சொல்லுவதுதான் - ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போதாதா?

- மயிலாடன்


Tuesday, August 14, 2007

வகுப்பு வாரி உரிமை நாள்! - தமிழர் தலைவர் அறிக்கை

தந்தை பெரியார் அவர்கள் 1950 ஆகஸ்ட் 14 ஆம் நாளை வகுப்புவாரி உரிமை நாள் என்று அறிவித்துப் போராடினார். அந்த நாளையொட்டி திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-


இன்று ஆகஸ்ட் 14!


இந்நாள் இயக்க வரலாற்றில் மட்டுமல்ல -ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாற்றில், சமூகநீதி தேவைப்பட்ட பெரும்பான்மை மக்களின் வாழ்வில் மறக்க முடியாத - மறக்கவே கூடாத ஒப்பற்ற ஒரு பெரும் நாள்!


சென்னை மாநிலத்தில் நீதிக்கட்சி ஆட்சியில் 1921 இல் உருவாக் கப்பட்டு, 1922, 1924 ஆம் ஆண்டுகளில் உறுதி செய்யப்பட்டு 1928 இல் திரு. எஸ். முத்தையா முதலியார் அவர்கள் அமைச்சராகயிருந்த காலத்தில் அமலுக்குக் கொண்டு வரப்பட்ட வகுப்புவாரி ஒதுக்கீடுச் சட்டம் பார்ப்பனர்களின் தொடர் முயற்சியால் செல்லாது என்று சென்னை - உயர்நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டது (28.7.1950).


உச்சநீதிமன்றமும் 1950 செப்டம்பரில் அந்தத் தீர்ப்பை உறுதி செய்தது.வகுப்புவாரி உரிமை நாள்!தந்தை பெரியார் வெகுண்டெழுந்தார்; போர்ப்பறை கொட்டினார். நாலாத் திசைகளிலும் சுழன்றடிக்கும் சூறாவளியாகக் கிளம்பி மாணவர்களை, ஒடுக்கப்பட்ட மக்களைத் தட்டி எழுப்பினார்.ஆகஸ்ட் 14 ஆம் தேதியை வகுப்புரிமை நாளென்று அறிவித்தார். தந்தை பெரியார் வேண்டுகோள்படி அன்று தமிழ்நாடெங்கும் கடைகள் திறக்கப்படவில்லை. தொழிற்சாலைகள் மூடப்பட்டன. மாணவர்கள் கல்வி நிறுவனங்களைப் புறக்கணித்தனர்.கல்வித் துறையில் பார்ப்பனர் ஆதிக்கம்!


தமிழ்மண் - தன்மான மண் - சமூகநீதி மண் என்ற உண்மை மத்தியில் ஆட்சியில் இருந்தோர்க்கு மிகத் தெளிவாக உணர்த்தப் பட்டது. அந்தக் காலகட்டத்தில் பார்ப்பனர் ஆதிக்கம் எப்படி இருந்தது?மக்கள் தொகையில் 2.7 சதவிகிதமாக இருந்த பார்ப்பனர்கள்பற்றிய புள்ளிவிவரம் இதோ:


இண்டர் மீடியட் 33.8 சதவிகிதம்

பி.ஏ.; பி.காம் 33.6 சதவிகிதம்;


பி.எஸ்ஸி., 46.6 சதவிகிதம்;


பி.ஏ. ஆனர்ஸ் 48.5 சதவிகிதம்


என்று நூற்றுக்கு மூன்று சதவிகிதம்கூட முழுசாக இல்லாத பார்ப்பனர்கள் இந்த அளவுக்கு அவர்களின் விகிதாச்சாரத்துக்கு மேலாக இருபது மடங்கு அனுபவித்து வந்தனர்.வகுப்புவாரி உரிமையும் செல்லாது என்று ஆக்கப்பட்டு விட்டதால் இந்த ஆதிக்கம் இன்னும் பன்மடங்கு உயர்ந்து, பார்ப்பனர் அல்லாத மக்கள் படுகுழியில் தள்ளப்படும் அபாயம் ஏற்பட்டு விடாதா?முதல் சட்டத் திருத்தம்அந்த நியாயமான கோபம்தான் தந்தை பெரியார் அவர்களைத் தணலாகக் கொதிக்கச் செய்தது; எரிமலையாக வெடிக்கச் செய்தது.


சென்னை மாகாணத்தில் தந்தை பெரியார் தலைமையில் மக்கள் கொதி நிலையை அடைந்ததைக் கண்ட பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்கள் இந்திய அரசமைப்புச் சட்டத்தை முதன்முதலாகத் திருத்த முன்வந்தார்.தமிழ்நாட்டில் நடக்கும் வகுப்புரிமைக்கான போராட்டம்தான் சட்டத் திருத்தத்துக்குக் காரணம் என்பதை நாடாளுமன்றத்திலேயே பிரதமர் நேரு அவர்கள் அறிவு நாணயத்தோடு ஒப்புக்கொண்டார்.


அதன்படி 1951 பிப்ரவரியில் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் (15(4)) கொண்டு வரப்பட்டு, ஒடுக்கப்பட்ட மக்களின் வயிற்றில் `பால் வார்க்கப்பட்டது.இன்றைக்கு தமிழ்நாட்டில் 69 சதவிகித இட ஒதுக்கீடு என்றால், இதற்கு அஸ்திவாரக் கல் அதுதான். இன்றைக்குத் தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கல்வியில் இட ஒதுக்கீடு கிடைத்திருக்கிறது என்றால், அதற்கான மூலம் - அதுதான் என்பதை மிகுந்த நன்றி உணர்ச்சியோடு நினைவு கூரவேண்டும்.


1950 இல் சென்னை மாநிலத்தில் இருந்த அதே நிலைதான் இன்றைக்கு இந்தியா முழுமையும் உருவாகியிருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது.கல்வியில் இட ஒதுக்கீடு கானல் நீரா?


பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பில் 27 சதவிகித இட ஒதுக்கீடு மண்டல் குழுப் பரிந்துரையின் காரணமாக -சமூகநீதிக் காவலர் மாண்புமிகு வி.பி. சிங் அவர்கள் பிரதமராக இருந்தபோது 1990 இல் ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதுவும் எளிதில் கிடைத்துவிட வில்லை. சட்ட ரீதியாகக் கிடைக்கவேண்டிய அந்த உரிமைக்காக திராவிடர் கழகம் 42 மாநாடுகளையும், 16 போராட்டங்களையும் நடத்தவேண்டியிருந்தது.


மண்டல் குழுப் பரிந்துரைகளில் கூறப்பட்ட - பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக் கல்வியிலும் 27 சதவிகித இட ஒதுக்கீடு என்பது இதுவரை கானல் நீராகவே இருந்து வருகிறது.வேலை வாய்ப்பில் 27 சதவிகித இட ஒதுக்கீடு என்பது எப்பொழுது அமலுக்கு வந்ததோ, அப்பொழுதே கல்வியிலும் இட ஒதுக்கீடு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு என்பது சொல்லாமலேயே அமலுக்கு வரத் தகுதி படைத்ததாகத்தான் பொருள்.


ஆனாலும், நீதிமன்றங்கள் அன்று முதல் இன்றுவரை எல்லை தாண்டிய பயங்கரவாதமாக இட ஒதுக்கீட்டுப் பிரச்சினையில் நடந்துவருவதைப் பார்க்கிறோம்.வெட்கப்படவேண்டிய ஒன்றுபிற்படுத்தப்பட்டோருக்குக் கல்வியிலும் 27 சதவிகித இட ஒதுக்கீடுக்கான சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட நிலையில், அந்தச் சட்டத்துக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது (29.3.2007) எந்த வகையில் நியாயம்? அந்தத் தடை ஆணையை நீக்கக் கோரி மத்திய அரசு மேல்முறையீடு செய்த நிலையில், அந்த மேல்முறையீடும் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது (7.8.2007).


மக்கள் தொகையில் பெரும்பான்மையினரான பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான ஜனநாயகத்தின் கெதி இந்த நிலையில்தானிருக்கிறது என்பது வெட்கப்படவேண்டிய ஒன்றல்லவா?பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காகப் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் (அரசமைப்புச் சட்டம் 340 ஆவது பிரிவின்படி) அமைக்கப்பட்டு, அந்த ஆணையம் தரும் பரிந்துரை களை அமல்படுத்தவேண்டும் என்று உள்ளதே அது வெறும் ``ஏட்டுச் சுரைக்காய்தானா?


1950- அதே நிலைதான் இன்றும்!1950 இல் வகுப்புவாரி உரிமைக்குக் கத்தி தீட்டப்பட்டபோது எழுந்த அதே கொந்தளிப்பு அதைவிடவும் அதிகமாக இப்பொழுது ஏற்பட்டாக வேண்டும். இதில் கட்சி, ஜாதி, மதக் கண்ணோட்டம் தேவையில்லை! ஓரணியில் அனைவரும் திரளவேண்டும். தங்களுக்கு ஏற்பட்டு இருக்கும் மிகப்பெரிய வாய்ப்புக் கேட்டை பிற்படுத்தப்பட்ட மக்கள் போதிய அளவுக்கு உணர்ந்ததாகத் தெரியவில்லை என்பது வேதனைக்கும், வெட்கத்திற்கும் உரியது.தந்தை பெரியார் 1950 இல் அறிவித்த இந்த வகுப்புரிமை நாளில் மக்களைத் திரட்ட உறுதிகொள்வோம் - திட்டங்களை வகுப்போம் - போராடுவோம் - வெற்றி பெறுவோம்!



சென்னை
14.8.2007






தலைவர்,திராவிடர் கழகம்.

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...