Total Pageviews

Tuesday, October 25, 2016

இரண்டு பல்கலைக் கழக மாணவர்கள் சுட்டுக்கொலை: நியாயமா? தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டன அறிக்கை


இலங்கையில் ஆட்சி மாறினாலும், பழைய காட்சிகள், கொடுமைகள் நீடிக்கவே செய்கின்றன!

குறிப்பாக ஈழத் தமிழர்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்கள், அவர்களை கைதிகளைப் போல தமிழர் வாழும் பகுதிகளிலேயே சுதந்திரம் பறிக்கப்பட்டவர்களாக - பெரிதும் இராணுவக் கண்காணிப்பிலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களாகவே - அவர்தம் வாக்குகளைப் பெற்றதா லேயே இராஜபக்சேவுக்கு எதிராக ஆட்சியைப் பிடித்த சிறீசேனா, ரனில் விக்ரமசிங்கே ஆகிய அதிபர், பிரதமர் தலைமையிலான ஆட்சியின் மனப்போக்கில் பெரிய மாற்றம் ஏதும் வந்துவிட வில்லை. இது வேதனைக்குரியது.
நெஞ்சைப் பிளக்கும் செய்தி

என்ன கொடுமை! நெஞ்சைப் பிளக்கும் செய்தி; யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர்கள் இருவரை, எவ்வித காரணமும் இன்றி, சிங்களக் காவலர்கள் சுட்டுக் கொன்றுள்ள கொடுமை ஜனநாயகத்தில் கேள்விப்பட்டிராத கொடுமையாகும்!

சிங்கள இனவெறியர்களின் போக்கும், தமிழர் களைப்பற்றிய நோக்கும் மாறவே இல்லை என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டல்லவா?

யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர்கள் நடராஜா கஜன், பவுன் ராஜ் சுலெக்ஷன் ஆகிய இருவர் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, நிறுத்தச் சொன்னவுடன் நிறுத்தாமல் சென்றதாகக் கூறி, உடனே (சிங்கள) காவலர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார்கள்!

போர் முடிந்து 7 ஆண்டுகளுக்குமேல் ஆகியும், அரசியல் கைதிகளாக சிறைபிடிக்கப்பட்ட ஈழத் தமிழர்கள் விடுதலை செய்யப்படாமல், கொடுமைக்கு ஆளாவதாகச் சொல்லப்படுகிறது.
சர்வதேச மனித உரிமை ஆணையம் மற்றும் இந்திய அரசு என்ன செய்கிறது?

இதுகுறித்து சர்வதேச மனித உரிமை ஆணையம், இந்திய அரசு கவலை கொள்ளவேண்டாமா?

இலங்கையின் பொருளாதார ஒத்துழைப்பு கோரத் தான் நமது இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் சென்று பேசுகிறாரே தவிர, அங்குள்ள ஈழத் தமிழர் வாழ உரிமைபற்றியோ, அன்றாடம் அடித்து விரட்டப்படும் தமிழக மீனவர் பிரச்சினைக்கான தீர்வு பற்றியோ பேசப் போயிருப்பதாகத் தெரியவில்லை.

நெஞ்சு பொறுக்குதில்லையே!


தமிழினம் நாதியற்றுப் போன இனமா? அய்.நா.வால் போர்க்குற்றம் பற்றிய விசாரணைக் கமிஷனின் வேகம்கூட மங்கி மங்கி வருகிறது! ஒப்புக்குச் சப்பாணியாகவே ஆகிவிட்டது!
தமிழ்நாட்டிலோ, எங்கும் அரசியல் பிரச்சினை; எதிலும் கட்சி - வாக்குக் கண்ணோட்டம். அதன் காரணமாக அவிழ்த்துக் கொட்டப் பெற்ற நெல்லிக் காய் மூட்டை போன்ற அவலம் தொடரும் நிலை!

நெஞ்சு பொறுக்குதில்லையே!

சுட்டது விபத்து என்று தப்பிக்கும் முயற்சியைக் கண்டனம் செய்யவேண்டாமா?


கி.வீரமணி 
தலைவர்,   திராவிடர் கழகம்.


சென்னை
24.10.20160 comments: