Total Pageviews

Tuesday, November 20, 2007

பா.ஜ.க., ஆசையில் விழுந்த மண்!

சாலமன் கிரண்டி திங்கள்கிழமை பிறந்தான் (Born on Monday) ஞாயிறு அன்று மரித்தான் என்று கூறும் ஆங்கிலக் கவிதை பலருக்கும் நினைவிருக்கலாம். அதனை மறந்து போனவர்கள், அல்லது இதுவரை அறியாமல் இருந்தவர்கள் கருநாடக மாநிலத்தில் பாரதீய ஜனதா கட்சி - ஆட்சி அமைத்த ஒரு வார காலத்தில் மரணித்ததன்மூலம் தெரிந்துகொள்ளலாம்.சோ ராமசாமி கல்கி போன்ற பார்ப்பன அமைப்பு களே குமட்டிக் கொண்ட அளவுக்கு பா.ஜ.க.,வின் பதவி வெறி அனைத்து நியாய தர்மங்களையும் தூக்கி எறியச் செய்துவிட்டது.மற்ற மற்ற அரசியல் கட்சிகளைப் போன்றதல்ல பா.ஜ.க.; அதற்கென்று அறநெறிக் கோட்பாடுகள் அநேகம் உண்டு என்று வானக் கூரையேறி முழக்கம் போடுவதில் குறைச்ச லில்லை. ஆனால், நடப்புகள் என்னவோ அதற்கு நேர் எதிர்மறைதான்.மதச்சார்பற்ற ஜனதா தளம் தொடக்கத்திலேயே தன் ஆதரவை அளிப்பதில் கோணங்கி வித்தைகளை எல்லாம் காட்டியது. அப்பொழுதே மரியாதையாக ஆட்சியும் வேண் டாம் - மண்ணாங்கட்டியும் வேண்டாம் என்று சொல்லியி ருந்தால், கொஞ்சம் மரியாதையாவது மிஞ்சியிருந்திருக்கும். இதில் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கேவ லத்தின் எல்லைக்கே சென்றுவிட்டது என்பது இன்னொரு சங்கதி.மதச்சார்பற்ற ஜனதா தளம் என்ற மகுடத்தைத் தரித்துக் கொண்டு, பாரதீய ஜனதாவின் தயவில் ஆட்சியை நடத்தியது. தொடக்கத்தில் பா.ஜ.க.,வுக்கு ஆதரவு இல்லை என்று தெரிவித்துவிட்டு, அதன்பின்னர் ஆதரவு என்றும், நேசக் கரத்தையும் நீட்டி துணை முதலமைச்சர் என்ற பதவியையும் பெற்றுக்கொண்டு, சட்டப்பேரவையில் பெரும் பான்மையை நிரூபிக்கும் தருணத்தில் காலை வாரிவிட்டது! பா.ஜ.க.,வின் தகுதிக்கு சரியான கூட்டாளிதான் என்பதை இதன்மூலம் தனக்குத்தானே அறிவித்துக் கொண்டுவிட்டது மதச் சார்பற்ற ஜனதா தளம்.பா.ஜ.க., மற்றும் மதச் சார்பற்ற ஜனதா தளம் ஆகிய இரு கட்சிகளும் ஒன்றுக்கொன்று மோசமாக நடந்துகொண்டாலும் எப்படியோ நாட்டுக்கு நல்லது நடந்துவிட்டது; மதவெறி ஆட்சியின் கீழ் அவலப்படவேண்டிய ஆபத்திலிருந்து கருநாடக மாநிலம் தப்பிப் பிழைத்துக் கொண்டுவிட்டது - அந்த அளவுக்கு அம்மாநில மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடலாம்.தென்மாநிலங்களில் கருநாடகத்தில் முதன்முதலாக ஆட்சியைப் பிடித்துவிட்டது பாரதீய ஜனதா தளம் என்ற மகிழ்ச்சியில் வாணவேடிக்கை நடத்தினார்கள். தமிழ்நாட்டு பா.ஜ.க.,வினர் இனிப்புகளை வழங்கி தீபாவளியும் கொண்டாடினார்கள். இப்பொழுது துக்க வீடாகக் களை யிழந்து காணப்படுகிறது.மதச்சார்பற்ற ஜனதா தளம் நம்பிக்கை மோசடி செய்துவிட்டது என்றெல்லாம் குற்றப் பத்திரிகை படிக்கலாம் பா.ஜ.க. ஆனால், அப்படி சொல்ல அதற்கு அடிப்படை அருகதை உண்டா என்பதுதான் முக்கியமான வினாவாகும்.ஜனசங்கத்தைக் கலைத்துவிட்டு ஜனதாவுடன் அய்க்கிய மான நிலையிலும்கூட, ஆர்.எஸ்.எஸில் உறுப்பினர் என்கிற இரட்டை நிலையை எடுத்தவர்கள்தானே இவர்கள்! அதன் காரணமாகவே தானே ஜனதா என்ற மதச்சார்பற்ற அமைப்பு நொறுங்கிப் போனது.நீதிமன்றத்தில் அளித்த வாக்குறுதியை மீறி கரசேவை என்ற பெயரில் பாபர் மசூதியை ஒரு பட்டப்பகலில் இடித்து தரைமட்டமாக்கிய வாக்குச் (அ)சுத்தக்காரக் கூட்டம்தானே அது!மண்டல் குழுப் பரிந்துரைப்படி பிற்படுத்தப்பட்ட மக்க ளுக்கு வேலை வாய்ப்பில் 27 சதவிகித இட ஒதுக்கீட்டினை சமூகநீதிக் காவலர் மாண்புமிகு வி.பி. சிங் அவர்கள் அமல்படுத்திய காரணத்தால்தானே, வெளியிலிருந்து அளித்து வந்த ஆதரவை பா.ஜ.க., விலக்கிக் கொண்டு, ஒரு நல்லாட்சியைக் கவிழ்த்த மாபாதகத்தைச் செய்தது.இந்த நிலையில், இன்னொரு கட்சியை நோக்கி விரலை நீட்டிக் குற்றம் சுமத்தும் யோக்கியதை பா.ஜ.க.,வுக்கு கிடையாது - கிடையவே கிடையாது என்பதைப் பொதுமக்கள் அறிவார்களாக!

நன்றி: விடுதலை தலையங்கம் 20.11.2007

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது!

கர்நாடக பா.ஜ.க. அரசு கவிழ்ந்தது

நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமல் 7 நாளில் பதவி விலகல்

பெங்களுர், நவ.20-
கர்நாடக மாநிலத்தில் அமைந்த எடியூ ரப்பா தலைமையிலான பா.ஜ.க. அரசு 7 நாள்களில் நம்பிக்கை வாக்கெடுப்புகூட நடத்தாமல் கவிழ்ந்தது.எடியூரப்பா அரசு அமைக்க முதலில் ஆதரவளித்த மதச் சார்பற்ற ஜனதா தளம் தனது முடிவை மாற்றிக் கொண்ட தால் சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக் கும் முன்னதாகவே எடியூரப்பா அரசு பதவி விலகியது.இம்மாதம் 12 ஆம் தேதி பதவியேற்ற எடியூரப்பா 20 ஆம் தேதிக்குள் தனது பெரும் பான்மையை மெய்ப்பிக்க வேண்டுமென்று ஆளுநர் ராமேஷ்வர் தாக்கூர் காலகெடு விதித்தார். அதற்கு ஒரு நாள் முன்னதாக 19 ஆம் தேதியே நம்பிக்கை வாக்கெடுப்பு கோரப் போவதாக எடியூரப்பா அறி வித்திருந்தார்.நேற்று மதச்சார்பற்ற ஜனதா தள சட்டமன்ற உறுப்பினர் கூட்டம் நடந்தது. குமாரசாமி முதல்வராக இருந்தபோது அவர் மீது கொலைப் பழி சுமத்திய சிறீராமுலுவுக்கு அமைச்சர் பதவி தரக்கூடாது என்ற கோரிக்கையை பா.ஜ.க. ஏற்க மறுத்ததால், எடியூரப்பா அரசை எதிர்த்து வாக்களிப் பது என முடிவு செய்யப்பட் டது.பரபரப்பான இந்தப் பின் னணியில் நேற்று காலை 11 மணிக்கு சட்டப்பேரவை கூடி யது. முன்னாள் உறுப்பினர் களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஒத்தி வைக்கப் பட்டு பிற்பகல் 3 மணிக்கு மறுபடியும் அவை தொடங் கியது. முதல்வர் எடியூரப்பா தனது அரசுமீதான நம்பிக்கைத் தீர்மானத்தைக் கொண்டு வந்த பேசினார். அதன் பின் அதன் மிது விவாதம் நடைபெற்றது.நம்பிக்கை வாக்கெடுப்பில் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் ஆதரவு கிடைக்காது என்பது உறுதியான நிலையில், தனது பதவியை ராஜினாமா செய்வ தாகத் தெரிவித்து விட்டு, ஆளுநர் மாளிகைக்குச் சென்ற அவர் தனது அமைச்சரவையின் ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் அளித்தார்.

Friday, November 16, 2007

பாசிச கொடூர சக்திகளிடமிருந்து ஈழ மக்களைக் காப்பாற்றும் ஒரே அமைப்பு விடுதலைப்புலிகளே! - கி.வீரமணி

சுப. தமிழ்ச்செல்வன் மறைவிற்கு முதல்வர் கலைஞர் இரங்கல் தெரிவித்தது மனிதாபிமான அடிப்படையில்தான்!

அதற்காக காங்கிரசார் இரத்தக் கண்ணீர் வடிக்கவேண்டுமா?காந்தியாரைக் கொன்ற பரம்பரையினர் ஆட்சிக்கு வரவில்லையா - அவர்களோடு தேவைப்படும்போது நாகரிகம் கருதிக் கைகுலுக்குவதில்லையா?


ஈழ மக்களை அழிக்கும் பாசிச கொடூர சக்திகளிடமிருந்து அம்மக்களைக் காப்பாற்றும் ஒரே அமைப்பு விடுதலைப்புலிகள்தானே!

ராஜீவ் படுகொலையையும், இதனையும் குழப்பிக் கொள்ளலாமா?
உரிமையுடன் காங்கிரசாருக்குச் சுட்டிக்காட்டுகிறோம்


தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை

விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் சுப. தமிழ்ச் செல்வன் மறைவிற்கு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் கண்ணீர் இரங்கல் தெரிவித்ததற்காக ரத்தக் கண்ணீர் வடிப்பதாக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

அரசியல் சட்டப்படி பதவிப் பிரமாணம் எடுத்துள்ள தமிழக முதல்வர், முன்னாள் பிரதமரை படுகொலை செய்த, தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வனுக்கு எழுதிய கண்ணீர் அஞ்சலி இரங் கற்பா எங்களின் கண்களில் ரத்தக் கண்ணீரை வரவழைத் துள்ளது என்று சத்தியமூர்த்தி பவனில் கூட்டிய கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி உள்ளனர்.உலகத் தமிழர்கள் ரத்தக் கண்ணீர் வடிப்பார்களே!தங்களுடைய தலைவர் ராஜீவ் காந்தி அவர்கள் இந்த மண்ணில் படுகொலை செய்யப்பட்டதன் காரணமாக, அவர்கள் மறக்கவொண் ணாத் துன்பம், துயரத்தின் காரணமாக இப்படி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர்; இத்தீர்மானத்தினைக் கண்டு உலகம் முழுவதிலும் வாழும் மனிதநேயமும், தமிழ் இன உணர்வும் கொண்ட கோடானு கோடி தமிழர்கள் உண்மையாகவே இரத்தக் கண்ணீர் வடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்பதை மிகுந்த மரியாதையுடன் காங்கிரஸ் நண்பர்களுக்கு நாம் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

மேனாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்கள் படுகொலை செய்யப் பட்டதை, மனித இதயம் படைத்த எவராலும் ஏற்கவே முடியாது.அப்படி ஒரு கோரமான, சோகமான சம்பவம் அதுவும் தமிழ் மண்ணில் நிகழ்ந்திருக்கவே கூடாது; அது கண்டனத்திற்குரியது. இதை நாம் இப்போது சொல்லவில்லை. இந்தச் சம்பவம் நடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லியிருக்கிறோம்.அந்நிகழ்வின் விளைவுதான் விடுதலைப்புலிகள் இயக்கம் தமிழ்நாட்டில் இல்லாத ஓர் இயக்கமாக இருப்பினும்கூட - தடை செய்யப்பட்ட ஓர் இயக்கமாக இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அண்டை நாட்டில் தமிழர்களைப் பாதுகாப்பவர்கள் யார்?
ஆனால், அண்டை நாடான இலங்கையில் ஈழத் தமிழர்கள் - ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் சொந்த நாட்டிலேயே அந்நாட்டு முப்படையினரால் - ஈவு இரக்கமின்றி காக்கைக் குருவிகளைப்போல் கொல்லப்பட்டும், வாழ்வுரிமையை இழந்தும், பட்டினியாலும், நோயாலும் அழிக்கப்படும் நிலை நிலவுகிறதே! சிங்கள அரசு தமிழர்கள்மீது மூர்க்கத்தனமாக கடந்த 20 ஆண்டு களுக்குமேல் திட்டமிட்டு போர் நடத்துகிறதே! சிங்கள அரசின் இனப்படுகொலையிலிருந்து அவர்களைக் காப்பவர்கள் அவர் களுக்குப் பாதுகாப்பாக அமைந்து போராடுபவர்கள் அவர்களின் வாழ்வுரிமையை மய்யப்படுத்தியுள்ள ஒரே இயக்கம் விடுதலைப் புலிகள் இயக்கம் என்பது மறுக்க முடியாத உண்மை அல்லவா?

ஈழத் தமிழர்களை அழித்துவரும் ராஜபக்சே அரசு ராஜீவ் காந்தி - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தில் இடம்பெற்ற சில குறைந்தபட்ச சலுகைகளைக்கூட காலில் போட்டு மிதித்துவிட்டது என்பதும் உலகம் அறிந்த உண்மையல்லவா!
சமாதானப் புறாவைச் சாகடித்துவிட்டனரே!
அந்த மக்களின் வாழ்வுரிமையைக் காப்பாற்ற பற்பல வெளி நாடுகள் - நார்வே, ஜப்பான், தாய்லாந்து போன்ற நாட்டவர்கள் எல்லாம் சமரசப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு, தங்களது மனித நேயத்தைக் காட்டிவரும் வேளையில், சிவிலியன் மக்கள்மீதும், ஆதரவற்ற குழந்தைகள் பராமரிப்பு நிலையத்தின்மீதும்கூட குண்டுமாரி பொழிந்தவர்களைத் தடுத்ததோடு, சமாதானப் புறாவாகப் பறந்து, இப்பிரச்சினைக்கு ஓர் இணக்கமான உடன்பாடு காண முயன்ற ஒருவரது படுகொலைக்காக மனிதாபிமானத்தோடு, அதுவும் நாட்டால் வேறுபட்டாலும், தமிழ் மான உணர்வில் ஒன்றுபட்ட ஒருவருக்காகக் கண்ணீர் சிந்தி அழுவது எப்படி தேசியக் குற்றமாகும் என்பதை நிதானித்து நமது காங்கிரஸ் சகோதரர்கள் ஆழ்ந்து சிந்திக்கவேண்டும்.
செய்யாத குற்றத்துக்கு ஜென்ம தண்டனை!

கலைஞர் அவர்கள் ஆண்ட போது இப்படி ஒரு படுகொலை நிகழ வில்லை; மாறாக மத்தியில் உள்ள ஆட்சி - காங்கிரஸ் ஆதரவுடன் நடந்த ஓர் ஆட்சி - குடியரசுத் தலைவர் ஆட்சி நடந்தபோதுதான் நிகழ்ந்தது என்றாலும், செய்யாத குற்றத்திற்கு ஜென்ம தண்டனை என்பதுபோல எத்தனையோ சொல்லொணாக் கொடுமைகளை தி.மு.க.,வும், அதன் தோழமையினரும் அன்று அனுபவித்தனர்.

அவைகளையெல்லாம் தாண்டி சில மாதங்களுக்குமுன் நடைபெற்ற தமிழக சட்டமன்ற நிகழ்வுகளின்போது, இப்பிரச்சினை குறித்து மிகத் தெளிவாக முதல்வர் கலைஞர் அவர்கள் விளக்கி, நடந்த சம்பவங்களைக் கண்டித்துவிட்டு, அதற்காக ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையை நாம் அலட்சியப்படுத்திவிடக் கூடாது என்பதை உள்ளடக்கமாகக் கொண்டு, தோழமைக் கட்சியினரின் ஒத்துழைப்போடு ஒரு தீர்மானத்தையும் நிறைவேற்றியுள்ளது நினைவூட்டப்பட வேண்டியதாகும்.

அன்று ராஜீவ் காந்தியோடு சந்திப்புஅம்பேத்கர் நூற்றாண்டு விழா குழு (1989 இல் மத்தியில் வி.பி. சிங் பிரதமராகவும், ராஜீவ் காந்தி எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தபோது)வில் ஓர் உறுப்பினர் என்ற முறையில் டில்லி பார்லி மெண்ட் அனெக்ஸ் கட்டடத்தில் நடந்த கூட்டத்தில் மதிய உணவுக் காகக் கலைந்து, உணவு பரிமாறும்போது, பலருடனும் ராஜீவ் காந்தி அவர்கள் சகஜமாகப் பேசி வந்தவர்; திடீரென என்னைப் பெயர் சொல்லி அழைத்து, அருகில் அழைத்து, தனியே பேசினார்.

இலங் கையில் இனப்படுகொலை நடப்பது மிகவும் கொடுமை; இதை நாம் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது. அங்கே தீவாயு (நாப்பாம்) குண்டு வீசுகிறார்கள் என்ற செய்தி வந்துள்ளது என்று கூறினார்.

முதலமைச்சர் கலைஞரிடம் கூறினேன்

ராஜீவ் அவர்களே, நீங்கள் தங்கள் தாயார் இந்திரா காந்தி அவர்கள் கடைசியாக தஞ்சாவூருக்கு வந்தபோதே இதே சொல்லை (ழுநடிஉனைந) பயன்படுத்தினார்; இப்போது நீங்களும் அதையே சொல்வது தங்களுக்குள்ள மனிதாபிமானத்தினைக் காட்டுகிறது என்று நான் சொன்னவுடன், தமிழ்நாடு முதல்வர் கலைஞரிடம் சொல்லுங்கள் என்றே சொன்னார். அதன்படி நான் சென்னை வந்து முதல்வரிடம் (கலைஞரிடம்) ராஜீவ் காந்தி அவர்கள் சொன்னதைக் கூறியதோடு, அவர்தம் பதில் பற்றி தன்னிடமோ அல்லது குறிப்பிட்ட சில அதிகாரிகளிடமோ கூறச் செய்யுங்கள் என்று ராஜீவ் காந்தி சொன்னதையும், முதலமைச்சரிடம் எடுத்துக் கூறினேன்.

அப்படிப்பட்டவர் கொல்லப்பட்டது மிகக் கொடுமை - ஏற்கவே இயலாது!என்னை அவர் தனியே அழைத்துப் பேசியவுடன் சற்று தூரத்திலிருந்து பார்த்தவர் இந்து ஆசிரியர் என். ராம் அவர்கள். அதற்குப்பின் எவ்வளவோ நடந்துவிட்டன! இரண்டையும் ஒன்றாகப் பார்க்கக் கூடாது! ராஜீவ் கொலையையும், இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் 20 ஆண்டுகளாக நொடிதொறும் அனுபவிக்கும் வாழ்க்கைத் துயரத் தையும் ஒன்றாகவே காங்கிரஸ் கட்சியினர் பார்த்தால் அது சரியாக இருக்குமா?

நிதியமைச்சர் ப. சிதம்பரம்கூறியதுகூடக் குற்றம்தானா?

அண்மையில் இலங்கைக்குச் சென்று உரையாற்றிய, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய, நிதியமைச்சர் ப. சிதம்பரம் அவர்கள், இராணுவ நடவடிக்கையால் ஈழத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது; அரசியல் தீர்வுதான் வழி; விடுதலைப்புலி களுடன் பேச்சுவார்த்தை நடத்துங்கள் என்று ராஜேபக்சே அரசுக்கு அறிவுரை கூறிவிட்டு வந்துள்ளாரே, அதுகுறித்து தடை செய்யப் பட்ட விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசியல் சட்டத்தின் மீது பிரமாணம் எடுத்தவர் பேசலாமா என்று கேட்டால், நியாயமா?அனுதாபம் தெரிவித்ததைவிட சற்றுக் கூடுதலான நடவடிக்கை அல்லவா, இது!

முதல்வர் தெரிவித்தநல்லெண்ணக் கண்ணீர் அஞ்சலி

நல்லெண்ணத்தோடு அவர்கள் சொன்னதைப்போலவே, எவ்வித உள்நோக்கமும் இன்றி கண்ணீர் அஞ்சலியை கலைஞர் விடுத்தால், அதைக் கண்டு ரத்தக் கண்ணீர் சிந்துகிறோம் என்று சொல்லி, இந்த ஆட்சியை வீழ்த்தவேண்டும், பலவீனப்படுத்தவேண் டும் என்று நினைக்கும் மதவெறி மற்றும் பார்ப்பனீய சக்திகளுக்கு அறிந்தோ, அறியாமலோ, தோழமைக்கட்சியினர் துணை போகலாமா?

ஒரு மரணத்துக்காகக் கண்ணீர் வடிக்கக் கூடாது; ஆனந்தக் கண்ணீர் உகுக்கவேண்டும் என்ற எண்ணத்தை காங்கிரசார் உருவாக்கலாமா? இந்நிலை அக்கட்சிக்குப் பெருமை சேர்க்காதே!

திரு. வீரப்பமொய்லி அவர்களிடம் கேட்கப்பட்டபோதுகூட, அவர்கள் அவர்களது தனிப்பட்ட உணர்வு என்று சொன்னதையும் சுட்டிக்காட்ட நாம் விழைகிறோம்.தேசத் தந்தை என்று போற்றப்பட்ட காந்தியார் அவர்களையே படுகொலை செய்த கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தனரே - அவர்களைப் பார்ப்பதே பாவம் என்றா கண்களை மூடிக்கொண்டு விட்டனர்? அரசியலில் தேவைப்படும் போது, கைகுலுக்கிக் கொண்டது இல்லையா? நாகரிகம் கருதி பல சந்தர்ப்பங்களில் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்வதில்லையா?

பிரதமர் இந்திரா காந்தியைக் கொன்றவர்கள் என்று கூறி ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தையே தீண்டத்தகாத பட்டியலில் வைக்க வில்லையே! தடை செய்யப்பட்ட காஷ்மீர், வடகிழக்கு மாகாண தீவிரவாத அமைப்புகளுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்துவது இல்லையா?ராஜீவ் படுகொலையில் தண்டிக்கப்பட்டு சிறையில் வாழும் ஒரு பெண்மணி (நளினி) விஷயத்தில் காங்கிரஸ் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்கள் எப்படி நடந்துகொண்டார் என்பதைப் பெருமை மிக்க எடுத்துக்காட்டாகக் காங்கிரசார் கொள்ள வேண்டாமா? வெறும் வாய்க்கு அவலா?அவரவர்கள் கருத்துகளை வெளியிட அவரவர்களுக்கு உரிமை உண்டு என்றாலும்,அரசியல் எதிரிகளுக்கும், கலைஞரைத் தனிப்பட்ட முறையில் எதிர்ப்போருக்கும் வெறும் வாயை மென்றவர்களுக்கு இந்த அவலை மெல்லுங்கள் என்று தருவதால், என்ன லாபம்? மத்தியில் உள்ள ஆட்சிக்கு மூலக்கல்லாக இருக்கும் தி.மு.க., ஆட்சியை அசைத்துப் பார்த்தால் யாருக்கு நட்டம் - யோசிக்க வேண்டாமா?மனிதநேயர்கள், அரசியலுக்கு அப்பாற்பட்ட மனிதநேயர்கள் மத்தியில் இது எவ்வகையான சிந்தனைகளை எழுப்பும் என்பதை யும் அருள்கூர்ந்து காங்கிரஸ் கட்சி நண்பர்கள் சிந்திக்கவேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

உரிமையுடன் சுட்டிக்காட்டுகிறோம்உங்களுக்கென்ன (தி.க.) உரிமை என்று யாரும் கேட்க மாட்டார்கள் என்று நம்புகிறோம்; காரணம், 1954 முதல் 1967 வரை அதை ஆதரித்ததோடு, 2004-லும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு மகத்தான ஆதரவினையும், 2006 சட்டமன்றத் தேர்தலில் அதனை ஆதரித்தோடு, இன்னமும் ஆதரிப்பவர்கள் என்ற உரிமையுடனும் சுட்டிக்காட்டுகிறோம்.

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்.
சென்னை
15.11.2007