Total Pageviews

Monday, October 24, 2016

காவிரி: அனைத்துக் கட்சிக் கூட்டம் தமிழகத் தலைவர்களுக்கு வேண்டுகோள்!

தமிழர் தலைவர் ஆசிரியர் முக்கிய அறிக்கைதமிழ்நாட்டு மக்களின் உயிர்ப் போன்ற வாழ் வாதாரப் பிரச்சினையான காவிரி நீர் குறித்து தமிழ்நாட்டு மக்களின் உணர்வினை வெளிப்படுத்தும் வகையிலும், இந்தப் பிரச்சினையில் மத்திய அரசு ஆற்றவேண்டிய சட்ட ரீதியான கடமையினை வலியுறுத்தும் தன்மையிலும் தமிழ்நாடு அரசே அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டவேண்டும் என்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும், பல்வேறு சங்கங்களும்  அரசுக்கு வேண்டுகோள் விடுத்தன. அதனை ஒரு பொருட்டாக தமிழ்நாடு அரசு எடுத்துக் கொள்ளவில்லை என்பது கெட்ட வாய்ப்பே!
ஆளும் கட்சி அந்தக் கடமையைச் செய்யத் தவறும் பட்சத்தில் அடுத்து அதற்கான பொறுப்பை ஏற்கவேண்டியது சட்டமன்ற எதிர்க்கட்சியான தி.மு.க. வைச் சார்ந்தது என்பது ஒரு சரியான இயல்பான ஜனநாயக வழிமுறைதானே! அந்தக் கடமையைச் செய்ய தி.மு.க. முன்வந்ததற்காக கட்சி மாச்சரியங்களை ஒரு பக்கத்தில் ஒதுக்கி வைத்துவிட்டு வரவேற்பதுதான் பிரச்சினையின் மீது கவலை கொண்டவர்களின் கடமையாக இருக்க முடியும்.

கருநாடக மாநிலத்தைப் பாரீர், கட்சிகளைக் கடந்து பொதுப் பிரச்சினைகளில் ஓரணியாக நிற்கிறார்கள் என்று சொல்லி வந்திருக்கிறோம்; அப்படியொரு சந்தர்ப்பம் தமிழ்நாட்டிற்கு இப்பொழுது வரும்பொழுது ஒவ்வொருவரும் முந்திக்கொண்டு வந்து கைகோர்க்க வேண்டாமா?

உச்சநீதிமன்றம் ஆணையிட்டாலும் அதனை நிராகரிக்கும் துணிவு கருநாடகத்துக்கு வந்ததற்கே காரணம் -  அம்மாநில ஒற்றுமை,  சுருதிப் பேதம் காட்டாத ஒருமித்த உணர்வு.
அந்தப் பலம் நமக்கு இல்லாமல் போனதுதான், தீர்ப்பு இருந்தும் அதன் பலனை நாம் அனுபவிக்க முடியாமல் போனதற்கு முக்கிய காரணம்.

அரசியலில் முடி பிளந்து விமர்சன வித்தாரம் காட்டக்கூடிய நம் நாட்டு அரசியல் கட்சித் தலைவர்களுக்கு இந்தச் சிறிய விஷயம் உறைக்காமல் போனது ஆச்சரியமே!
இத்தகு முரண்பாடு ஒரு வகையில் தமிழர்களுக்குச் செய்யும் துரோகம் என்று உறுத்தல் ஏற்படாதது ஏன்? குறிப்பாக இடதுசாரிகள் இடம்பெற்ற நால்வர் அணி முரண்டு பிடிப்பது - எதிர்காலத்திற்கு மட்டுமல்ல - என்றென்றைக்கும் பதில் சொல்ல வேண்டியவர்களாக ஆகமாட்டார்களா?

நால்வர் அணியின் முக்கிய அங்கமான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் அருமைச் சகோதரர் மானமிகு தொல்.திருமாவளவன் அவர்கள் காவிரிப் பிரச்சினையில் தி.மு.க. அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டவேண்டும் என்று கோரிக்கை வைத்தாரே - அதன் தன்மை என்ன? பொது வாழ்வில் நம்மைவிட இளையவரான சகோதரர் மானமிகு திருமாவளவனுக்கு உள்ள முதிர்ச்சி - பக்குவம் மூத்தவர்களுக்கு வராதது ஏன்?

கடந்தகால அரசியலைப் பேச ஆரம்பித்தால் நால்வர் அணி ஓர் அணியில் சேர்ந்திருக்க முடியுமா?

தனிப்பட்ட கோபதாபங்களால் தமிழர்களின் உயிர்ப் பிரச்சினையைச் சுட்டுப் பொசுக்கிட வேண்டாம் என்று கனிவோடு கேட்டுக்கொள்கிறோம்.

ஆளும் அ.இ.அ.தி.மு.க. உள்பட அனைத்துக் கட்சிகளுக்கும், அமைப்புகளுக்கும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் அழைப்புக் கொடுத்துள்ளார். இது ஏதோ தி.மு.க.வுக்கு அரசியல் ஆதாயம் என்று எதற்கெடுத்தாலும் ஓட்டுக் கண்ணாடிப் போட்டுப் பார்க்காமல், தமிழ்நாட்டுக்கு ஆதாயம் என்ற கண்ணோட்டம் வரவேண்டாமா?
ஏற்பட்டுள்ள ஆபத்தின் ஆழத்தினை ஆழமாக உணர்ந்து தந்தை பெரியார் கூறுவதுபோல - இனமானத்துக்காகத் தன்மானத்தைக் கூடத் துறக்கலாம் என்ற வழிகாட்டும் வெளிச்சத்தில் கையணைத்து அனைத்துக் கட்சிகளின், அமைப்புகளின் தலைவர்களோ, பிரதிநிதிகளோ, சங்கமித்து ஒருமித்த கருத்தை எட்டி, தமிழர்களுக்கு உயிர்த் தண்ணீர் ஊற்றுமாறு அரசியலுக்கு அப்பாற்பட்ட திராவிடர் கழகம் உரிமையோடு, கனிவோடு வேண்டிக் கொள்கிறது.

இன்னும் இடையில் ஒரு நாள் இருக்கிறது - இணக்கமான முடிவுக்கு வருமாறு மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொள்கிறோம்.


கி.வீரமணி
தலைவர்,    திராவிடர் கழகம்.


சென்னை
23.10.2016

0 comments: