Total Pageviews

Tuesday, January 31, 2012

ஊடகங்களின் "முன்ஜென்ம' வியாபாரம் - இறைவி


தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதில் நேரத்தைச் செலவிடுவதென்பது இன்றைய நாளில் தவிர்க்கவே முடியாத ஒரு செயலாக ஆகிவிட்டது. அதுவும், பெண்கள் என்றால் அவர்கள் அலுவலகம் செல்பவர்களாக இருந்தாலும், வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருப்பவர்களாக இருந்தாலும் தொலைக்காட்சிகளில் வரும் நெடுந்தொடர்களில் நேரத்தை வீணடிப்பதில் சிறிதுகூட கவலைப்படுவதோ, வெட்கப்படுவதோ இல்லை. பெண்கள் மட்டும் அல்ல, ஆண்களில் பலரும் இந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதும் உண்மை.
எந்த அளவிற்கு இந்த நிலைமை சென்று கொண்டிருக்கிறது என்றால், ஒவ்வொரு பள்ளியிலும் உள்ள தலைமை ஆசிரியர்கள் பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் குழந்தைகள் இருக்கும் பெற்றோர்களை பெற்றோர் - ஆசிரியர் சங்கக் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளின்போது வீட்டில் உள்ள கேபிள் இணைப்புகளை நீக்கவும், தொடர்கள் பார்ப்பதைத் தவிர்க்கவும் என்று சொல்லி கேட்டுக்கொள்ளும் அளவிற்கு வந்துவிட்டது.
சரி, தொடர்களின் பிடியில் மாட்டக்கூடாது என்ற உறுதியுடன் அரசியல் விவாதங்கள், மருத்துவர்களின் ஆலோசனைகள், நாட்டு நடப்புச் செய்திகள், அறிவியல் சார்ந்த நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம் என்றால், அவற்றிலும் கூடுமானவரை மூடநம்பிக்கைகளைத் திணித்து, ஆசைகளை விதைத்து, அருவெறுப்புகளை வளர்க்கும் வண்ணம்தான் நிகழ்ச்சிகள் இருக்கின்றன. தொடர்களின் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம் என்றால், குப்புறத்தள்ளிய குதிரை, குழியையும் பறித்தது போல, மடமைச் சேற்றில் தள்ளுவதற்கு வரிசை கட்டி நிற்கின்றன நிகழ்ச்சிகள். அந்த வரிசையில், முன்ஜென்மம் என்ற பெயருடன் விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வரும் கூத்து மிகுந்த அதிர்ச்சியை உருவாக்கியது.
நடிகர் அஜய் ரத்தினத்தின் முன் உரையுடன் தொடங்கிய அந்த நிகழ்ச்சி பைபிள், குரான், கீதை போன்றவற்றைத் துணைக்கழைத்தது மட்டுமன்றி அறிவியல் ஏற்றுக்கொண்ட ஹிப்னாடிசம் மூலமாகவே இந்த நிகழ்ச்சி நடத்தப் பெறுகிறது என்றவுடன் அதனைப் பார்க்கும் ஆர்வம் இயல்பாகவே உந்த ஆரம்பிக்கிறது.
சில திரைப்படங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துப் புகழ்பெற்ற நடிகர் போஸ் வெங்கட்டும், அவரது அக்கா வளர்மதியும் அக்கா மகனும் கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சியில் தன்னை ஷீர்டி சாய்பாபாவின் பக்தன் என்றும், தாம் சரியான வாய்ப்புகளை நடிப்புத் துறையில் பெறாத பொழுதெல்லாம் தனது அக்கா சாமியாடி அருள்வாக்குச் சொல்லி தமக்கு நம்பிக்கை அளித்ததாகவும், அரசியலில் ஒரு பெரிய தலைவரின் கீழ் பணியாற்றும் மிகச் சிறப்பான வாய்ப்பும், அவர் கதை வசனத்தில் நடிக்கும் வாய்ப்பும் தமக்கு ஷீர்டி சாய்பாபாவின் அருளால் கிடைத்தது என்றும் புளகாங்கிதமடைந்த அவர் தனது குணங்களாக எல்லோரையும் நேசிப்பவன் என்றும், முன்கோபம் உடையவன் என்றும், சிறுவயதில் திருவிழாகடை ஒன்றில் கைக்கடிகாரம் ஒன்றைத் திருடிவிட்டு பின் பயந்து அதனைத் தூக்கி எறிந்ததாகவும், இசுலாமிய நண்பர்கள் பலர் உள்ளதாகவும், பலருக்கு நன்றிக்கடன் பட்டவராகவும் தம்மை அறிமுகம் செய்து கொண்டார்.
அவரை ஹிப்னடைஸ் செய்யும் மருத்துவராக வந்த வேதமாலிகா அவர் பங்குக்கு முன்ஜென்மம் என்பது கதையோ அல்லது கற்பனையோ இல்லை. இதன் தாய்வீடு இந்தியா என்பது நமக்கெல்லாம் மிகவும் பெருமையளிப்பதாகவும், ஆதிசங்கரரின் புனரபி ஜெனனம் முதல் திருவள்ளுவரின் எழுபிறப்பின் தீயவை தீண்டா வரை அனைத்தையும் துணைக்கழைத்து அமெரிக்காவில் இதனை நிரூபித்துள்ளார்கள் என்று நீண்ட புளுகு உரையுடன் போஸ் வெங்கட்டை நினைவுத் தூக்க (ஹிப்னாடிசம்) நிலைக்கு அழைத்துச் சென்றார்.
முதலில் இந்த ஜென்மத்தில் (0-வயது) அம்மா வயிற்றில் அவர் இருந்த நிலைக்கு அழைத்துச் சென்றதாக கூறி - அவரிடம் நீங்கள் இப்பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா என்று கேட்கிறார். போஸ் வெங்கட் இல்லை என்றும் மிகவும் கஷ்டப்படுவதாகவும் கூறுகிறார்.
பிறகு, அதிலிருந்து முந்தைய ஜென்மத்திற்கு அழைத்துச் செல்வதாகக் கூற போஸ் தான் ஒரு போர்வீரனாக சண்டையில் ஈடுபட்டுள்ளதாகக் கூறுகிறார். உடனே மருத்துவர் எந்த நாட்டுடன் சண்டை எனக் கேட்க அவர் வேறு நாட்டுடனல்ல, ஜாதிச் சண்டை என்கிறார். ஓ ஜாதிச் சண்டையா எந்த நாடு எனக் கேட்க நான் சீனாவில் போர்வீரனாக இருக்கிறேன் என்கிறார். பின் என்னவாயிற்று என்று கேட்க நான் இறந்துபோய்விட்டேன் என நினைக்கிறேன். வெள்ளை தாடி, பூமாலை சின்னப் பசங்க எல்லாம் குதித்து ஆடுவதுபோல் தெரிகிறது என்கிறார். ஓ நீங்கள் இறந்துவிட்டீர்கள். என்ன வயது என்று தெரிகிறதா எனக் கேட்க வயது 40-45க்குள் இருக்குமென நினைக்கிறேன் என்கிறார். அதற்குப் பிறகு மருத்துவர் அதற்கு முந்தைய ஜென்மத்திற்குச் செல்வதாகக் கூறுகிறார். அதில் பச்சை வயல்கள் நிரம்பிய ஊரில் மதகுருவாக மசூதி ஒன்றில் இருப்பதாகக் கூறுகிறார். வயது என்ன என்று கேட்க 70-க்கு மேல் என்கிறார். எந்த நாடு என்று மருத்துவர் கேட்க மலைகள் நிறைய இருக்கிறது. ஈரான் அல்லது ஈராக்காக இருக்கலாம் என்கிறார். அந்த வாழ்க்கையில் மிகவும் திருப்தியாக இருந்து இறந்ததாகக் கூறுகிறார்.
அடுத்து வேறொரு ஜென்மத்திற்குள் செல்ல அதிலும் முஸ்லிமாக இருப்பதாகவும் மலைப்பகுதியில் உள்ள தாஜ்மகால் போன்ற அமைப்பில் ஒரு இந்து கோவில் ஒன்றில் திருடச் செல்வதாகவும், ஆனால் அங்கு எதையும் திருடி வரவில்லை என்றும் கூறுகிறார்.
முடிவாக மருத்துவர் அவர் கடந்த எந்தப் பிறவியிலும் திருமணம் ஆகாதவராகவே இருந்திருக்கிறார் என்றும் அப்படி இருந்தது வாழ்க்கை முழுமையடைந்ததாகாது என்றும், எனவே அப்பா, அம்மா, அன்பான அக்கா, மனைவி குழந்தையுடன் வாழ்ந்து, விட்டுப்போன கடமைகளை முடிக்கவே இந்த ஜென்மத்தில் அவர் மகிழ்ச்சியான வாழ்க்கையைப் பெற்றிருப்பதாகவும், அனைவருக்கும் உதவும் நல்ல குணமுள்ளவராக இருப்பதாகவும் கூறி நிகழ்ச்சியை முடிக்கிறார்.
இந்த ஒரு நிகழ்ச்சியை நாம் முழுமையாகக் கூறக் காரணம், சீனாவின் போர் வீரனாக ஜாதிச் சண்டையில்(!?) ஈடுபட்டு இறந்ததையும், பசுமையான ஊராக(!?) ஈரானிலோ அல்லது ஈராக்கிலோ மதகுருவாக இருந்ததையும், தாஜ்மகால் போன்ற மொகலாய கட்டட அமைப்பில் இந்து கோவில்(!?) ஒன்றையும் பார்த்ததாகக் கூறுவதை நம்புவோம் என்று நிகழ்ச்சியைப் பார்க்கும் மக்கள் அனைவரையும் வடிகட்டிய முட்டாளாக ஆக்கும் எண்ணத்துடன் செயல்படும் ஹிப்னாடிசம் செய்யும் மருத்துவரையும், நிகழ்ச்சியை வழங்கும் நடிகரையும் பற்றி நாம் அனைவரும் அறிந்து கொள்வதற்காகத்தான்.
இதே போன்றுதான் அடுத்த வாரத்தில் வந்த தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் நிஷா, ஆண் மயிலாக ஒரு ஜென்மத்திலும், பசுமாடாக ஒன்றிலும், கேரளப் பெண்ணாக பாம்பு கடித்து இறப்பவராக ஒன்றிலும் இருந்ததாக கதையளக்கப்பட்டது. இவரும் இந்த ஜென்மத்தில் அம்மா வயிற்றில் இருந்தபோது மகிழ்ச்சியாக இல்லை என்றார். வாரத்திற்கு இருமுறையாவது சென்னை கபாலீசுவரர் கோவிலுக்குச் செல்லவில்லையென்றால் தனக்கு நிம்மதியாக இருக்காது. அந்த அளவிற்குப் பக்தி உள்ளவள் என்று தம் பெருமையைக் கூறினார்.
தொலைக்காட்சித் தொடர்களில் பார்ப்பனப் பெண்மணியாக நடித்து வரும் லட்சுமி என்ற நடிகை ஒரு ஜென்மத்தில் மைசூர் அரண்மனை நாட்டியக்காரியாகவும், அடுத்த ஒன்றில் காஞ்சிபுரத்தில் சிங்கப்பெருமாள்கோவில் அருகே இருக்கும் அக்கிரஹாரத்தில் உலாவும் ஆவியாகவும், திருப்பதி மடத்து(!) தோட்டத்தில் வண்ணத்துப் பூச்சியாக ஒன்றிலும், மற்றொன்றில் பார்ப்பனக் குடும்பத்தில் காயத்ரி என்ற பெயரில் இளம்பெண்ணாக இருந்ததாகவும் தண்ணீரில் விழுந்து இறந்த தனக்கு எல்லாக் காரியங்களும் செய்ததாகவும் கூறினார். காஞ்சிபுரத்தில் மாமா வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்ததாகக் கூறிய இவர் நினைவுத் தூக்கத்தின்போது காஞ்சிபுர கோவில் தெருக்களைச் சரியான முறையில் கூறி வேதம் புதிது படத்தில் வரும் கதையையும் சேர்த்துக் கதையளந்தார்.  அடுத்தடுத்த வாரங்களிலும் திரைப்படத்தில் கவர்ச்சி நடிகையாக நடித்து வரும் பாபிலோனா, தொலைக்காட்சித் தொடர் நடிகைகள் காவேரி, அபிதா போன்ற அனைவரையும் இந்த மாதிரியே பல ஜென்மங்களில் பிச்சைக்காரியாக, ராணியாக, புறாவாக என பலவிதமாக இருந்ததாகக் கூறி ஒவ்வொரு சனிக்கிழமையும் ஒரு மணிநேர வியாபாரத்தை கனகச்சிதமாக செய்து வருகிறார்கள். சாதாரண நிலையில் உள்ள பொதுமக்களில் யாரையாவது அழைத்து வந்து இந்த நிலைக்கு உட்படுத்த நினைக்காமல் நடிகர், நடிகையாகவே பார்த்து நடிக்க வைத்திருப்பதே இந்த நிகழ்ச்சியின் உண்மை நிலையைத் தெளிவாகக் காட்டுகின்றது. அப்போதுதானே அடுத்து வருபவர்களுக்கு எப்படிப் பேச வேண்டும் என்று பயிற்சியளிக்க முடியும்.
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு விதமான முன்னுரையுடன் மறுபிறப்பு பற்றி புத்த மதத்தில் இப்படிக் கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவில் டாக்டர் பிரைய்ன் வெய்ஸ் இப்படிச் செய்தார். பைபிளில் ஏசு இப்படிச் சொன்னார்; ஏதோ ஒரு நாட்டில் எட்கர் கேஸ் இப்படிக் குணப்படுத்தினார் என்று நிகழ்ச்சியைப்  பார்க்கும் மக்களை ஏதோ மருத்துவ முறைப்படிதான் நிகழ்ச்சியை நடத்திச்  செல்வதாக ஏமாற்றும் இந்தக் கயமையை நாம் எப்படி ஆதாரபூர்வமாக மறுப்பது? இப்படிப்பட்ட பேய், பில்லி, ஆவி, மறுபிறப்பு மூடநம்பிக்கைச் சவால்களை அறிவியல்பூர்வமாக எதிர்கொண்ட மனநல மருத்துவர் கோவூர் அவர்கள் தமது நூல்களில் இவற்றைத் தெளிவாக அம்பலப்படுத்துகிறார். டாக்டர் கோவூர் அவர்களின் வளரும் நாடுகளும் மடமை நம்பிக்கைகளும் என்ற கட்டுரையில் ஹிப்னாடிசம் (நினைவுத் தூக்கம்) மூலமாக இப்படிப்பட்ட கற்பனைக் கனவு காணும் உணர்வுகளை உந்திவிட முடியும். முற்பிறப்பில் நம்பிக்கையுள்ள ஓர் இந்து அல்லது பவுத்தரை இப்படி ஹிப்னாடைஸ் (மயங்க) செய்தால், அவர் உடனே தமது முந்திய பிறவி பற்றிக் கதையளக்கத் தொடங்குவார். சொர்க்கம் நரகம் இவற்றை நம்புகின்ற ஒரு கிறித்தவர் அல்லது ஒரு முஸ்லிம் இப்படி ஹிப்னாடிசத்துக்கு உள்ளாக்கப்பட்டால் அவர் சொர்க்கத்தில் இருப்பதாகவும் கூறப்பட்டால் உடனே அதைப்பற்றி வருணிக்கத் தொடங்கிவிடுவார். இப்படி ஓர் அரைமயக்க நிலையில் இருப்போரிடமிருந்து உண்மைகளை வரவழைப்பதாகச் சொல்வது முட்டாள்தனமாகும். மனோதத்துவ (உளவியல்) மருத்துவர்களுக்கு வேண்டுமானால் இது ஆராய்ச்சிக்கு உதவலாம் என்றும்,
படிப்பறிவில்லாத பாமரர்கள் தங்கள் அறியாமையால் மூடக்கற்பனை காணும் நோய்வாய்ப்பட்டு ஏதாவது சொன்னால், அவர்களுக்குப் பைத்தியக்காரர்கள் என்ற பெயரைச் சூட்டி மனநோய் மருத்துவ விடுதியில் சேர்த்து விடுகிறோம். ஆனால் படித்தவர்கள் இந்த நோயாளராகும்போது நிலைமை முற்றிலும் முரணாகிறது. சாதாரணப் பாமரப் பைத்தியத்தைவிட இவர்கள்தாம் சமுதாயத்துக்கு ஆபத்தானவர்கள், மானிட மனத்தூய்மையில் கலப்படும் செய்து கெடுப்பவர்கள்.
வேதியியல், ரசாயனம், தாவர இயல், விலங்கியல், பொறியியல், மருந்தியல், நிலநூல், வரலாறு, வான இயல் ஆகிய பல்வேறு அறிவியல் துறைகளைப்பற்றி ஆராயும் அறிவாளிகள் படைக்கின்ற நூல்கள் சிந்தனைக் கருவூலங்களாகத் திகழ்பவை. ஆனால் ஈசாப்புக் கதைகள், அராபிய இரவுக் கதைகள் (1001) ஒடிஸ்ஸி, இராமாயணம், பாரதம், குரான், பைபிள் போன்ற ஆபாசக் கற்பனைக் கதைகள் புராணிகர்களின் புளுகுமூட்டைகளாக விளங்குகின்றன.
மனிதனுடைய அறிவுபூர்வமான ஆக்கச் சிந்தனையின் விளைவாகத்தான் இன்றைய விஞ்ஞான விந்தைகளான அணுசக்தி, வானொலி, வானொளி, நிலவில் இறங்குதல், விண்கோள் செலுத்துதல், இருதய மாற்றுச் சிகிக்சை, இரத்தம் செலுத்துதல், செயற்கை மூச்சு (சுவாசம்) கொடுத்தல், சிறுநீரகம் பொருத்துதல் ஆகியவை சாத்தியமாயின. எந்த மதத்தையும் சார்ந்த பக்தி நூல்கள் எவையும் இம்மாபெரும் அற்புதங்களைக் கண்டுபிடிக்க எள்முனையும் உதவிடவில்லையே! என்று மிகத் தெளிவாக விளக்கி உள்ளார்.
மேலும் மற்றொரு கட்டுரையில், வாழ்கின்ற மதங்களில் மிகப் பழைமை வாய்ந்த இந்து மதத்தில், எல்லா உயிர் வாழ்வனவும், அழிவில்லாத ஆத்மா படைத்தவை என்று போதிக்கப்படுகின்றது. ஆனால் மாறுபடாத யூத-_கிறித்தவ_இசுலாமிய மதங்களில், மனித ஆத்மா மட்டுமே அழிவற்றது என்று கூறப்படுகின்றது! 2000 ஆண்டுகட்கு முன் இருந்த புத்தர் இந்து மதத்தை எதிர்த்துப் புரட்சி செய்தவர்; இந்தியாவின் சிறந்த சமுதாய _ மதச் சீர்திருத்தவாதி; அவர் மனித ஆவிகூட நிலையானதல்ல என்று கூறிவிட்டார். இதுதான் இன்றைய அறிவியல் (விஞ்ஞானம்) கண்டுபிடிப்பும் ஆகும். ஆனால் பிற்காலத்தில் புத்த வேதங்களை எழுத வந்த சிலர், பித்தலாட்டமாகப் புத்தரின் அடிப்படைக் கொள்கைகளையே திரித்துக் கூறிவிட்டனர்! மனித மரணத்துக்குப்பின் அந்த ஆவி நிலைத்திருப்பதற்கு ஏதாவது காரணகாரிய விளக்கம் உள்ளதா? பார்க்கலாம் நாமே!
உயிர் என்பது என்னவெனில், மூச்சு (சுவாச) ஓட்டத்தால் உற்பத்தி செய்யப்படும் ஒரு சக்தியேயாகும். மூச்சின் (சுவாசத்தின்) மூலமாக குளுகோஸ், புரதம், கொழுப்பு ஆகிய சத்துகள் ஆற்றலாக மாற்றப்பட்டு பயன் உள்ளவை ஆகின்றன. ஒரு மெழுகுவர்த்தி எரிவதற்கு இதை ஒப்பிடலாம். மெழுகு உருகிவிடாமல், அல்லது எரிபொருளாக மாறாமல் இருக்குமானால், ஒரே மெழுகுவர்த்தியை எத்தனை தடவை வேண்டுமானாலும் கொளுத்தி, அணைத்து, பயன்படுத்த முடியும்! அதே போல, உயிர் போனபின் மனித உடல் அழுகித் தேய்ந்து குறைந்து மாய்ந்துபோகாமல் இருக்கக் கூடுமானால், அந்த உயிர் அல்லது ஆவியையே மீண்டும் செலுத்தி, மனிதன் சாகாமல் இருக்கச் செய்ய இயலும்.
உயிர் என்பது தங்கியிருக்க எப்போதுமே ஓர் உடல் தேவை! உடலை விட்டுப் பிரிந்து, அது எங்கேயும், எதிலேயும், தங்கமுடியாது! அதேபோல், மனம் என்பது தனியாக இயங்கக் கூடியதல்ல. அறிவியல் பரிசோதனைகளில், மனத்தைச் சார்ந்த உணர்வுகளான காதல், அன்பு, கோபம், வெறுப்பு, கொடுமை, இரக்கம் ஆகியவற்றுக்கு மூளையில் தொடர்புடைய தனித்தனி நரம்புகளை, மின் அதிர்வு செய்ததன் மூலம், உருவாக்கிக் காட்ட முடிந்தது! அதன் வாயிலாக என்ன புரிந்தது? மனித உடலில்தான் உயிர் தங்க முடியும்! அந்த உடலில் உயிர் தங்கி, உடலும் கெடாமலிருக்கும்போதுதான், மூளையிலுள்ள மனம் என்று நாம் அழைக்கும் செயலும் இருக்க முடியும்! உயிருக்கும் மனத்திற்கும் அப்பாற்பட்டு, ஆத்மா என்றோ, ஆவி என்றோ, ஏதும் கிடையாது! கிடையவே கிடையாது!! என்றும் கூறுகிறார்.
மனித ஆத்மா மட்டும்தான் அழியாதது என்று பிற மதங்களின் நம்பிக்கைப்படிப் பார்த்தால், வண்ணத்துப் பூச்சியாகவும், வண்டாகவும், புறாவாகவும் பிறந்தவர்களின் ஆத்மா எப்படி அழியாமல் இருக்கிறது?
எல்லா உயிர்களுக்கும் ஆத்மா உண்டெனில், செடி, கொடி, புழு, பூச்சி, பூஞ்சை, பாசி வகையறாக்களின் ஆத்மாக்கள் எல்லாம் எங்கே? அவற்றின் மறுசுழற்சிக்கு என்று என்ன விதிகள் இருக்கின்றன?
ஆ... ஊ... என்றால் ஆயிரம் விளக்கங்களைக் கேட்கும் விஜய் டி.வி. நடந்தது என்ன? குழு, விஜய் டி.வி. அரங்கத்துக்குள் நடப்பது என்ன? என்பதை வெளியே கொண்டுவர வேண்டாமா?
ஆக்கபூர்வமான விவாதங்கள் என்று அறியப்படும் நிகழ்ச்சிகளிலேயே அமானுஷ்யங்கள் என்று விவாதிக்கும்போது, உங்கள் அறிவியல் மூளையைக் கழற்றி வைத்துவிட்டுப் பேசுங்கள் என்று அறிவுரை சொல்லப்படுகிறது. அப்படியென்றால் முட்டாள்தான் அங்கு பேச முடியுமா? பகுத்தறிவாளர்கள், அறிவியல் சிந்தனையாளர்கள் அத்தகைய நிகழ்ச்சிகளில் விளக்கமளிக்க முடியாத வண்ணம் இருட்டடிப்பு செய்யப்படும் அனுபவத்தைத் தொடர்ந்து பெற்று வருகிறார்களே! அப்படியென்றால் அவர்கள் விரும்புவது சுவாரஸ்யத்தை நீட்டித்துக் கிடைக்கும் வியாபாரத்தைத்தானே!
தொடர்கள் மூலமாக மட்டுமல்லாமல் இந்த மாதிரி உளவியல் மருத்துவர்கள் என்று சொல்லப்படுபவர்களாலும் நடத்தப்பெறும் நிகழ்ச்சிகளும் நம் மூளையை மழுங்கடிக்கின்றன என்றால் அறுவை சிகிச்சைக் கத்தியை எடுத்து கழுத்தை அறுத்துக் கொலை செய்வதற்கும் இதற்கும் என்ன வேறுபாடு இருக்க முடியும்?
ஆத்மா, மோட்சம், நரகம், மறுபிறப்பு, பிதிர்லோகம் ஆகியவற்றைக் கற்பித்தவன் முட்டாள், நம்புகிறவன் மடையன், இவற்றால் பலன் அனுபவிக்கிறவன் மகாமகா அயோக்கியன் என்று தந்தை பெரியார் சொன்னதில் எள்ளளவாவது பிசகு இருக்கிறதா? மக்களின் மடத்தனத்தைப் பயன்படுத்தி, அதை விரிவாக்கி விற்றுக் காசு பார்க்கும் இந்த மகாமகா அயோக்கியத்தனத்தைத்தான் அத்தனை ஊடகங்களும் செய்து வருகின்றன. இவற்றை அம்பலப்படுத்தி, மக்களைத் தெளிவுபெறச் செய்ய வேண்டியது நம் கடமை.

பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கை


உத்தரப்பிரதேச மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் அரசியல் கட்சிகள் வரிந்து கட்டிக் கொண்டு நிற்கின்றன. அரசியல் கட்சிகள் தத்தம் தேர்தல் அறிக்கைகளையும் வெளியிட்டுள்ளன.
குறிப்பாக பாரதீய ஜனதா கட்சி தன் தேர்தல் அறிக்கையில் இரண்டு அறிவிப்புகளை இடம் பெறச் செய்துள்ளது.
1) ஆட்சிக்கு வந்தால் பாபர் மசூதி இடிக்கப்பட்ட அதே இடத்தில் ராமன் கோவிலைக் கட்டுவோம் என்பதாகும்.
1992 டிசம்பர் 6இல் அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளைத் தேர்வு செய்து 450 ஆண்டு கால வரலாறுபடைத்த சிறுபான்மையினரின் வழி பாட்டுத் தலமான பாபர் மசூதியை இதே பி.ஜே.பி. கும்பல், தன் வானரப்படையான ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தள் (பஜ்ரங் என்றால் குரங்கு) விசுவ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட சிவசேனா போன்ற ஹிந் துத்துவா சக்திகளின் துணையோடு வெறித் தனமாக இடித்துத் தரைமட்டமாக்கி விட்டன.
20 ஆண்டுகள் கழிந்து விட்ட நிலையிலும், இதற்குக் காரணமான குற்றவாளிகள் தண்டிக்கப் படவில்லை. தண்டிக்கப்பட்டு இருந்தால் அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்டோர் தேர்தலில் நிற்கவே முடியாது.
வீராதி வீரம் பேசும் இவர்கள், சட்டத்தின் சந்து பொந்துகளில் வளைந்து நெளிந்து ஓடி வழக்கு விசாரணையை நேரில் சந்திக்கும் திராணியின்றி, கோழைத்தனமாக புறமுதுகு காட்டி ஓடி ஒளிந்து கொண்டு திரிகின்றனர்.
தாமதிக்கப்பட்ட தீர்ப்பு மறுக்கப்பட்ட நீதி என்று வார்த்தை வடிவில் அழகாகச் சொல்லப்படுகிறது. இந்தியாவை பொறுத்தவரை அது வெறும் காகித அம்பு - ஏட்டுச் சுரைக்காய்தான்!
சட்டம் நம்மைத் தீண்ட முடியாது என்கிற அசட்டுத் துணிவில் அதிகார பூர்வமான தேர்தல் அறிக்கையில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட அதே இடத்தில் ராமன் கோவிலைக் கட்டுவோம் என்று வீராவேசமாக இடம் பெறச் செய்துள்ளனர்.
ராமன் என்று சொன்னால் பக்திப் போதை ஏறி, தங்கள் பக்கம் நின்று வாக்களிப்பார்கள் என்ற நினைப்பு அவர்களுக்கு. இந்த இடத்தில் ஒன்றைக் கவனிக்கத் தவறக் கூடாது. பாபர் மசூதியை இடித்தவர்கள் - அந்த இடத்தில் ராமன் கோவிலைக் கட்டுவோம் என்று அதிகார பூர்வமாகத் தெரிவித்துவிட்ட நிலையில், இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள மதச் சார்பின்மையை (Secular State) எப்படிக் காப்பாற் றுவார்கள் என்ற கேள்வி அடிப்படையானது. இந்த முக்கியமான பிரச்சினையைத் தேர்தல் ஆணையம் எப்படி அணுகுகிறது? அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி எப்படிப் பார்க்கிறது?
பி.ஜே.பி.யின் இந்தத் தேர்தல் உறுதிமொழியை மய்யப்படுத்தி நீதிமன்றம் சென்றால்  தீர்ப்பு பி.ஜே.பி.க்கு எதிராக வரவே வாய்ப்புகள் அதிகம். இதைப்பற்றி பி.ஜே.பி. அல்லாத அரசியல் கட்சிகள் ஏன் சிந்திக்கக் கூடாது?
2) இரண்டாவதாக தேர்தல் அறிக்கையில் சிறுபான்மை மக்களான முசுலிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க மாட்டோம் என்று வெளிப் படையாகவே அறிவித்துவிட்டனர்.
மதவாதம்தான் பி.ஜே.பி.யின் பிரதான கொள்கையும், கோட்பாடும், அணுகுமுறையும் என்பதைத் தெரிந்து கொண்ட பிறகு சிறுபான்மை மக்கள் மத்தியில் மட்டுமல்ல; சமூக நீதியில் நம்பிக்கையுள்ள தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களும், அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து பி.ஜே.பி.யின் முகத்திரையைக் கிழிக்க வேண்டும் உ.பி. தேர்தலில் இவற்றை முதன்மைப்படுத்திப் பிரச்சாரம் செய்ய வேண்டும்; அந்த எதிரொலி இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் எதிரொலிக்க வேண்டும்.
இந்தத் தேர்தலோடு இந்த மதவாதச் சக்திகள் கடை விரித்தேன் - கொள்வாரில்லை என்று கடையைக் கட்டிக் கொள்ள வேண்டும் - செயல்பட வேண்டும் - எங்கே பார்ப்போம்!

Monday, January 30, 2012

இந்திய நீதிபதிகளின் மேலான பார்வைக்கு...!


கடவுள் வாழ்த்தை நிறுத்திய பெண்மணி! பள்ளிகளில் கடவுள் வாழ்த்து சட்ட விரோதம்! அமெரிக்க நீதிமன்றத்தின் சீரிய தீர்ப்பு
கிரேன்ஸ்டன் (அமெரிக்கா) ஜன. 30: தீயணைப்புப் படை வீரரின் மகளும், ஒரு செவிலியருமான ஜெஸ்ஸிகா அல்கு விஸ்ட் என்ற பெண் ரோமன் கத்தோலிக்க மக்கள் அதிகமாக வாழும் அமெரிக்க நாட் டின் கிரேன்ஸ்டனில் வழக்கு தொடுத்து, 49 ஆண்டு காலமாக பள்ளியில் இருந்து வந்த இறைவணக்கப் பாடல் ஒன்றை நீக்க வைத்து சாதனை படைத்துள்ளார். இது குறித்த நீதிமன்றத்தின் தீர்ப்பு சிறப்பான தாகும்.
கிரேன்ஸ்டன் மேற்கு உயர் நிலைப் பள்ளியின்  கலையரங்கத்தின் சுவரில்  ஒட்டப்பட்டு 1963 ஆம் ஆண்டிலிருந்து இருந்து வந்த இறைவணக்கப் பாடல் பள்ளியில் வைக்கப்பட்டிருப்பது  அரச மைப்பு சட்ட விரோதமானது என்று தீர்ப் பளித்த நீதிபதி மத விஷயங்களில் நடு நிலை வகிப்பது என்ற அரசின் கொள் கையை மீறுவதாக அது உள்ளது என்று கூறியுள்ளார்.
ஏழாம் வகுப்பு படித்த ஒரு மாணவி இந்த இறை வணக்கப்பாடலை ஒரு ஒழுக்கநெறி வழிகாட்டி போல் எழுதி யிருந்தார். அந்த ஆண்டு பள்ளிப் படிப்பை முடித்து சென்ற மாணவர்கள் அதனை பள்ளிக்கு ஒரு பரிசாக அளித்தனர். பள்ளிகளில் இறைவணக்க நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்து நடத்துவதை அமெரிக்க உச்சநீதி மன்றம் தடை செய்து தீர்ப்பு அளித்த ஆண்டிற்கு அடுத்த ஆண்டில் நடைபெற்ற நிகழ்ச்சி இது.
சிறப்பான செயல்களை ஒவ்வொரு நாளும் நாம் செய்வதற்கும், ஒழுக்க நெறி யிலும், உடல்வலிமையோடு நாம் வளரவும், கருணையுள்ளம் கொண்டு உதவி செய் பவர்களாக நாம் இருக்கவுமான விழைவை  சொர்க்கத்தில் இருக்கும் நமது தந்தை நமக்கு அளிக்கட்டும், என்று இந்த இறைவணக்கப் பாடல் தொடங்குகிறது.
கத்தோலிக்க தேவாலயத்தில் அறிவுக் குளியல் செய்யப்பட்ட ஜெஸ்ஸிகா தனது 10 ஆவது வயதில் இருந்து கடவுளை நம்புவதை நிறுத்திக் கொண்டார். இந்த இறைவணக்கப்பாடல் தன்னை இழிவு படுத்துவதாக உள்ளது என்று  இவர் கூறுகிறார்.
இந்த நீதிமன்றத் தீர்ப்பினையடுத்து அந்தப் பாடல் ஒட்டப்பட்டிருந்த சுவர் துணியால் மூடப்பட்டுள்ளது.
இதனையடுத்து பெற்றோர்கள் பெருங் கூட்டமாக பள்ளி வளாகத்தில் திரண்டு, இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யவேண்டும் என்று கோரினர். இது பற்றி பள்ளிக் குழு அடுத்த மாதத்தில் முடிவெடுக்கும் என்று தெரிவித்துள்ளது.
2010இல் இந்த இறைவணக்கப்பாடல் பற்றி ஒரு நண்பர் ஜெஸ்ஸிகாவின் கவனத்துக்குக் கொண்டு வந்தார். பெயர் வெளியிடாமல் ஒரு மாணவரின் பெற்றோர் இது பற்றி சிவில் சுதந்திர கூட்டமைப்பிடம் புகார் ஒன்று தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அந்தப் பாடலை நீக்கவேண்டுமா என்பது பற்றி  பள்ளியின் பொதுக் குழு விசாரணை நடத்தியது. அந்த விசாரணைகள் அனைத்திலும் ஜெஸ்ஸிகா அதை நீக்க வேண்டும் என்று பேசியுள்ளார். இது பற்றி ஒரு பேஸ் புக்கையும் அவர் தொடங்கியிருந்தார். இதில் இப்போது நான்காயிரம் உறுப் பினர்கள் உள்ளனர்.
இந்தப் பாடல் மதத்துக்கு புத்துயிர் அளிப்பது போல் உள்ளது என்று அமெ ரிக்க மாவட்ட நீதிபதி ரொனால்ட் ஆர்.லாகுக்ஸ் கடந்த மார்ச் மாதத்தில் கூறியிருந்தார். அத்துடன் ஜெஸ்ஸிகாவுக்கு அச்சுறுத் தல்களும் விடப்பட்டுள்ளன; அவருக்குக் காவல்துறையினர் பாதுகாப்பும் அளித்துள் ளனர்.  எண்பதாயிரம் மக்கள் தொகை கொண்ட இந்த ஊரில் உள்ள மக்கள் உணர்வுப் பெருக்கு கொண்டவர்களாக இருக்கின்றனர்.
நாத்திகக் கொள்கையாளர்
ஜெஸ்ஸிகா எதையும் வெளிப்படை யாகப் பேசும் ஒரு உண்மையான நாத்திகக் கொள்கையாளர் ஆவார்.  மதத்திலிருந்து விடுதலை அறக்கட்டளை  என்ற பெயர் கொண்ட தேசிய அளவிலான நாத்திகக் குழு இவரைப் பாராட்டி பூங்கொத்துக்கள் அனுப்பியுள்ளது. இந்த அறக்கட்டளையின் இணைத்தலைவர் அன்னி லாரி கெய்லர் என்பவர் ஜெஸ்ஸிகாவுக்கு படிப்புதவித் தொகையாக 13 ஆயிரம் டாலர்கள் அளித்துள்ளார். அத்துடன், ஜெஸ்ஸிகா வின் செயலைக் கண்டு நானும் பெரும் வியப்படைந்தேன்; இந்த அளவுக்கு வெறுப்புணர்வை வளர்த்துக் கொண்டு, ஒருவரை விலக்கி வைத்து களங்கப் படுத்தும் இத்தகைய ஒரு வழக்கை நீண்டதொரு காலத்திற்குப் பிறகு இப் போதுதான் நான் பார்க்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் அமெரிக்காவில் பலரும் கருத்துத் தெரி வித்து வருகின்றனர்.

இதோ மனுவின் கொள்ளு, கொள்ளுப் பேரர்கள்! - - கலி.பூங்குன்றன்உடையும் இந்தியா ஆரிய திரா விடப் புரட்டும், அந்நிய தலையீடுகளும் - எனும் தலைப்பில் ஆரிய மனுதர்மச் சுமையைத் தலையில் தாங்கி ராஜீவ் மல்ஹோத்ரா அரவிந்தன் நீலகண்டன் எனும் இருவரால் எழுதப்பட்ட அவதூறு நூலைப்பற்றி திராவிடர் கழகத் தலைவர் - தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் சென்னை பெரியார் திடலில் இம்மாதம் 8,9 ஆகிய இரு நாட்களில் அணு அணுவாகச் சிதைத்து உண்மை நிலையை உறுதிபடுத்தினார்.
அந்தவுரை உடையும் இந்தியாவா? உடையும் ஆரியமா? எனும் தலைப்பில் நூலாகவும் வெளியிடப்பட்டுள்ளது. மிக வேகமாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.
சில முக்கியமான அடிப்படையான அவதூறுகள் மறுக்கப்பட்டுள்ளன. வேரறுக்கப்பட வேண்டிய வேறு சிலவும் உள்ளன.
அதில் குறிப்பாக திருக்குறளை மனுதர்மத்தின் பதிப்பாகக் காட்ட முயலும் அயோக்கியத்தனம் _ புராணம் என்னும் புதைச் சேற்றில் திணிக்க முயலும் திரிநூல்தனம் - கண்டிப்பாக தீ வைத்துக் கொளுத்தப்பட வேண்டிய தாகும்.
ஒரு தமிழனிடம் எந்த இலக்கி யத்தை 2000 ஆண்டு தமிழ் இலக்கிய வரலாற்றில் சிறந்த ஒன்றாகக் கூறுவாய் என்று கேட்டால் உடனடியாகத் தயக்கமின்றி வரும் பதில் திருக்குறள் என்பதாக இருக்கும். குறள் ஹிந்துப் பண்பாட்டுப் புலத்திலிருந்து வெட்டி எடுக்கப்பட்டு ஏதோ தமிழரின் தனித்தன்மை கொண்ட ஒழுக்கவியல் நூலாகக் கருதப்பட்டதும் போல் தனது மிஷனரி செயல் திட்டத்தை மேலும் விரிவுபடுத்தினார்
இந்த வரிகளில் உள்ள பார்ப்பனர் களுக்கே உரித்தான விஷமத்தனத்தைக் காணத் தவறக் கூடாது.
ஒரு தமிழனிடம் கேட்டால்.. என்று தொடக்கத்திலேயே ஒரு இடக்கு முடக்கு! அப்படி என்றால் இவர்கள் யார்?... வாசகர்களின் முடிவுக்கே விட்டு விடலாம்.
அடுத்தது.. ஏதோ தமிழரின் தனித் தன்மை கொண்ட ஒழுக்க நூலாகக் கருதப்பட்டதும்! என்று தெனாவெட் டான எழுத்துகள் தமிழர்களின் ஒழுக்க வியல் நூலாகக் கருதப்பட்டதாம் இதன் பொருள் என்ன? தமிழர்களின் ஒழுக்கவியல் நூலாக இவர்கள் கருதவில்லை என்பது இந்த வரிக்குள் இருக்கும் பூனைப் பதுங்கல்!
மூன்றாவதாக குறள் ஹிந்துப் பண்பாட்டுப் புலத்திலிருந்து வெட்டி எடுக்கப்பட்டதாம்...
இங்கேதான் கோணிப்பைக்குள் இருக்கும் பூனை வெளியில் வந்து மியாவ் மியாவ் என்று கத்துகிறது.
ஹிந்துப் பண்பாட்டிலிருந்து திருக்குறள் வெட்டி எடுக்கப்பட்டதே தவிர, தமிழர்களின் ஒழுக்கவியலாகக் கருத முடியாது என்று சொல்ல வருவது - அவர்களுக்கே உரித்தான தமிழ், தமிழன் என்று சொன்னால் அவற்றின் மீது விழுந்து கடிக்கும் துவேஷ நச்சுப் பற்கள்!
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற குறளின் கோட்பாடு எங்கே? அந்தப் பிரம்மாவானவர், இந்த உலகத்தைக் காப்பாற்றுவதற்காக தன் முகம், தோள், தொடை, பாதம் இவைகளினின்று உண்டான பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர வருணத் தார்க்கு இம்மைக்கும் மறுமைக்கும் உரிய உபயோகமான கருமங்களைத் தனித் தனியாகப் பகுத்தார் (மனுதர்மம் - அத்தியாயம் 1 சுலோகம் 87).
இப்படி பிறப்பின் அடிப்படையில் பேதத்தைக் கற்பித்து அவர்களுக்குத் தனித்தனியாக கருமங்களையும் _ கடவுளே உண்டாக்கினார் என்கிற மனுதர்மம் எங்கே?
வள்ளுவர் செய்திருக்குறளை மறுவற
நன்குணர்ந்தோர்
உள்ளுவரோ மனுவாதி
ஒரு குலத்துக்கொரு நீதி?
என்று சாட்டை கொண்டு முகத்தில் சாத்தினார் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை. அதற்குப் பிறகாவது பார்ப் பனப் பன்னாடைகளுக்கு நற்புத்தி வரவில்லையே!
மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம். மானமற்ற ஒருவனுடன் போராடுவது கஷ்டமான காரியம் (குடிஅரசு 10.5.1936) என்றாரே - தந்தை பெரியார் - ஒவ்வொரு சொல்லும் கோடி பெறும்.
பல இந்திய வாழ்வியல் நூல்களில் உதாரணமாக அர்த்த சாஸ்திரம் போன்றவற்றில் மூன்று விழைவுகளில் (திரிவர்க்க) அதாவது தர்ம (அறம்) அர்த்த (பொருள்) காம (இன்பம்) ஒத்திசைவு இருக்க வேண்டும் எனச் சொல்லப்படுவதை பொருளாதார நிபுணர் ரத்தன்லால் போஸ் சுட்டிக் காட்டுகிறார். நீதியரசர் ராமா ஜோய்ஸ் பிரசித்தி பெற்ற ஹிந்து ஸ்மிருதியான மனுதர்ம சாஸ்திரத்தில் இதே திரி வர்க்கப் பாதையே இருப்பதைச் சுட்டிக் காட்டுகிறார்.
ஆக திருவள்ளுவர் மூன்று புரு ஷார்த்தங்களை மட்டும் குறிப்பிடுவதில் தனித் தன்மை ஏதுமில்லை. அவர் பாரதம் அளாவிய ஒரு பார்வையையே இதன் மூலம் முன் வைக்கிறார் என்று எழுதுகிறார்கள்.
திருக்குறள் அறம், பொருள், இன்பம் என்று சொல்லப்படுவது அவாளின் அர்த்த சாஸ்திரத்தில் சொல்லப்பட் டவையாம். இது உண்மைக்கு மாறானது என்பது ஒருபுறம் இருக்கட்டும் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட மனுதர்ம சாஸ்திரத்திற்கு உண்மைக்கு மாறாகப் புரட்டுத்தனமாக வக்காலத்து வாங்குவது மூலம் இவர்கள் யார்? இவர்களின் நிறம் என்ன என்பது எளிதில் விளங்கும்.
பரிமேலழகர் என்ற பார்ப்பனர் முதல் அவரின் பாதந்தாங்கிய மனிதர் கள் வரை குறளின்மீது ஆரிய முத் திரையைத் திணிப்பதிலேயே ஆர்வ வெறி கொண்டு திரிகின்றனர்.
திருக்குறளின் அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும், விலக்கியன ஒழிதலும் ஆம் என்று கூறுகிறார் என்றால் பரிமேலழ சருக்கு எவ்வளவு அசட்டுத் துணிச்சல் இருந்திருக்க வேண்டும் - அது பச்சையான பாசிசம் என்பதல்லாமல் வேறு என்னவாம்?
மக்கள் பேறு என்பதைப் புதல் வரைப் பெறுதல் என்று மாற்றியுள் ளார். பரிமேலழகருக்கு முன் உரை எழுதிய மணக்குடவர்கூட மக்கள் பேறு என்றுதான் குறிப்பிட்டுள்ளார்.
பரிமேலழகர் என்னும் மனுவின் மகாபுத்திரரோ அதனைப் புதல்வரைப் பெறுதல் என்று மாற்றியமைத்ததற்குக் காரணம் _ அவரின் மனுதர்மப் புத்தி.
தந்தையை புத் என்னும் நரகத்திற் சாராமல் காக்கின்றபடியால் மைந் தனுக்கு புத்திரன் என்ற பெயராயிற்று இது பிரமனாலேயே கூறப்பட்டது என்கிறதே மனுதர்மம் (அத்தியாயம் 9 - சுலோகம் 138).
இதற்காகத்தான் அதிகாரத்தில் தலைப்பையே மாற்றிய தில்லுமுல்லுத் தனத்தை செய்துள்ளார்.
கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல் என்ற நான்கு அதிகாரங்களைப் பாயிரத்தில் அடக்கிக் காட்டுகிறார் பரிமேலழகர்; பாயிரத்தை வள்ளுவரே இயற்றவில்லை என்பது ஆய்வறிஞர் வ.உ.சி. அவர்களின் கருத்தாகும்.
இன்னும் சொல்லப் போனால் திருக்குறளில் கடவுள் என்ற சொல்லோ கோவில் என்ற சொல்லோ கிடையாது.
சமயக்கணக்கா மதிவழி கூறாது
உலகியல் கூறி பொருளிது வென்ற
வள்ளுவன் என்கிறது கல்லாடம்
திருவள்ளுவர் யார் தெரியுமா? பகவன் என்ற பிராமணனுக்கும், ஆதி என்ற பறைச்சிக்கும் பிறந்தவர் என்று கதை கட்டுவதும் பார்ப்பனரே!  ஏன் என்றால் அவாளின் அகராதிப்படி அறிவாளி பார்ப்பன விந்துக்குத் தவிர வேறு யாருக்கும் பிறக்க முடியாது என்பதாகும்.
இது தொடர்பாக பார்ப்பனப் பண்டிதருக்கு நேருக்கு நேர் சூடு கொடுத்தவர் அயோத்திதாசப்பண்டிதர் பெருமகனார் ஆவார்.
1892இல் சென்னையில் மகாஜன சபை கூட்டம் திரு. சிவநாமசாஸ்திரி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அவர் பேசும்போது வள்ளுவர் பார்ப்பன விந்துக்கு பிறந்ததனால்தான் சிறந்த திருக்குறளைப் பாடினார் சுக்கில-சுரோனிதம் கலப்பரியாது என்று குறிப்பிடும்போது கூட்டத்தில் கேட்டுக் கொண்டிருந்த அறிஞர் திரு.க அயோத்திதாச பண்டிதர் எழுந்து நீங்கள் சொல்லியதை நான் ஏற்றுக் கொள்வதென்றால், நான் சில கேள்விகள் கேட்க வேண்டும் என்றார்.
அதற்கு திரு. சிவநாமசாஸ்திரி சரி, கேளும் என்றார். நமது நாட்டில் தீண்டாதவர்கள் என்று இழிவு படுத்தப்படும் பறையர்கள், என்பவர்கள் கிறித்துவ சங்கத்தார்களின் கருணையால் எம்.ஏ, பி.ஏ, படித்துப் பட்டங்களைப் பெற்று உயர் பதவிகளில் அமர்ந் திருக்கிறார்களே? அவர்கள் யார் விந்துக்குப் பிறந்திருப்பார்களென்று எண்ணுகிறீர் என்றார். அதற்கு திரு. சிவநாமசாஸ்திரி ஒன்றும் பதில் கூறாமல் நின்று கொண்டிருந்தார்.
பிறகு அறிஞர் திரு.க. அயோத்திதாச பண்டிதர் தொடர்ந்து பெருங்குற்றங் களைச் செய்து சிறைச்சாலைகளில் அடைக்கப்டிருக்கும் பார்ப்பனர்கள் யார் விந்துக்குப் பிறந்திருப்பார் களென்று நீர் நினைக்கிறீர் என்று கேட்டார்.
திரு.சிவ.நாம சாஸ்திரி ஒன்றும் பதில் கூறாமல் திரு திரு என்று விழித்துக் கொண்டு நின்றார். அறிஞர் திரு.க.அயோத்திதாச பண்டிதர், ஏன்? பதில் சொல்லாமல் நிற்கிறீர், சொல்லும், என்று சினந்து கேட்டுக் கொண்டி ருக்கும் பொழுது, கூட்டத்திலிருந்த ஆனரபில், திரு.பி.அரங்கைய நாயுடும், திரு.எம். வீரராகவாச்சாரியாரும் அறிஞர் திரு.க.அயோத்திதாச பண்டிதரை அமைதிபடுத்தினார்கள்.
திரு.சிவ நாம சாஸ்திரியை கூட்டத் திலிருந்தவர்கள் இகழ்ந்து பேசினார்கள். திரு.சிவநாம சாஸ்திரி உட்கார்ந்து கொண்டார். பின்னர் மெல்ல கூட்டத் திலிருந்து நழுவி விட்டார்.
1796இல் சென்னைக்கு அரசுத் துறையில் பணியாற்ற வந்த எல்லீஸ் துரையவர்கள் தமிழ் படிக்க விரும் பினர்ர்.
அவருக்குத் திருக்குறள் ஏட்டுச் சுவடியொன்றைத் தாம் வேலை பார்த்து வந்த வெள்ளைக்காரர் வழி சேர்ப் பித்தவர் அயோத்திதாசரின் பாட்டனா ரான கந்தசாமி என்பவர்.
எல்லீஸ் தனக்கு தமிழ் கற்றுக் கொடுக்க வந்த பிராமணர்களிடம் கந்தசாமி திருக்குறள் கொடுத்தாரென் றார். அதற்கு அவர்கள், அவர் தீண்டத் தகாதவர், அவர் கொடுத்த திருக்குறள் தீண்டத்தகாதது என்றனர். காரணம் வள்ளுவர் புலச்சியின் மகன் என்பது அவர்கள் எண்ணம்.
ஏன் இப்படி பிராமணர்கள் கருகிறார்கள் என்று கந்த சாமியை அழைத்து எல்லீஸ்துரை கேட்க எங்களுக்கும் இவர்களுக்கும் விரோதம்.
எங்கள் வீதிக்குள் பிராமணர்கள் வந்தால் உங்கள் பாதம் பட்ட இடம் பழுதாகி விடும் என்று சொல்லிக் கொண்டு இவர்களைத் துரத்தி பிராமணர்கள் வந்த வழியிலும் சாணத்தைக் கரைத்துத் தெளித்து சாணச் சட்டியையும் உடைத்து வருகிறார்கள் என்று கூறினாராம்.
உண்மையான காரணத்தைப் புரிந்து கொண்ட எல்லீஸ் துரை திருக்குறளை ஆழமாகப் படித்து அதை ஆங்கிலத் திலும் மொழி பெயர்த்தார்.
1819இல் துரை திடுமென மறைய நேர்ந்ததால் நூல் முழுவதும் மொழி பெயர்க்காமல் போயிற்று.
(ஆதாரம்: குறளும் அயோத்திசாசரும் என்ற தலையங்கத்தில் செந்தமிழ்ச் செல்வி மார்ச் 2000)
இப்படியாக தொன்றுதொட்டுப் பார்ப்பனர்களுக்கு தமிழையும், திருககுறளையும் திட்டுவதில் இழிவுப் படுத்துவதில் ஆனந்தமோ ஆனந்தம்!
மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்பவர் ஆண்டாளின் திருப்பாவையில் இடம் பெற்ற தீக்குறளைச் சென்றோதோம் என்னும் வரிக்கு எப்படி பொருள் சொன்னார்?
தீய திருக்குறளை படிக்க மாட்டோம் என்று வீம்புக்கு வம்பு இழுத்துக் கூறினார்.
குறளை என்றால் குள்ளம், கோள் சொல்லல், குற்றம் என்று பொருள் (உ.வே. சாமிநாதய்யர் முன்னுரையுடன் கூடிய மதுரைத் தமிழ்ப் பேரகராதி).
காஞ்சி சங்கராச்சாரியாருக்கு எவ்வளவு குள்ள உணர்வும், கோள் சொல்லும் புத்தியும், குற்றவாளியாகவும் இருந்திருந்தால் ஆண்டாளின் பாடல் வரிக்கு இப்படிப் பாட பேதம் செய்வார்?
இப்படித்தான் கொலைக் குற்றத் துக்காக நீதிக் கூண்டில் நின்று வேலூர் சிறைச்சாலையில் 61 நாள்கள் கம்பி எண்ணிக் கொண்டிருந்த காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி உளறித் தொலைத்து நன்கு வாங்கிக் கட்டிக் கொண்டார்.
திருக்குறளில் உள்ள அறத்துப் பாலை அதிலும் முதல் பத்து குறட் பாக்களை மட்டும் மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுத்துவிட்டு, பொருட் பால், காமத்துப் பாலை சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்று காஞ்சிமடத் தலைவரான தவத்திரு ஜெயேந்திர சரஸ்வதி துறவியார் திருக்குறளைப் பற்றித் திரிபான முறையில் தம் கருத்தைச் கூறயிருப்பது அதிர்ச்சியையும் வருத்தத்தையும் தருகிறது. காஞ்சி மடத்தார் அடுத்தடுத்து திருக்குறளை பற்றிப் புறங்கூறுவதற்குக் கண்டனம் தெரிவிப்பதுடன், அக்கருத்துக்களைத் திரும்பப் பெற வேண்டுமென காஞ்சி மடத்தை ஈரோடு திருக்குறள் பேரவை கேட்டுக் கொள்கிறது. (திருக்குறள் முனுசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் -  தீர்மானம் 12.4.1982).
இந்திய அரசின் அட்டர்னி ஜென ரலாக இருந்த பராசுர அய்யங்காரின் தந்தையாரான கேசவ அய்யங்கார் என்பாரும் ஸ்ரீவள்ளுவர் உள்ளம் என்ற நூலில் சமஸ்கிருதத்திலிருந்து தொகுக்கப்பட்டதுதான் திருக்குறள் என்று எழுதியதற்காக _ சென்னைப் பெரியார் திடலில் அன்றைய பகுத்தறி வாளர் கழக மாநிலத் தலைவர், பெரியார் பேருரையாளர் பேராசிரியர் முனைவர் மா. நன்னன் அவர்கள் சிறப் பான மறுப்புரையை ஆதாரக் குவியல்களுடன் தந்தார் (4.3.1986 மற்றும் 5.3.1986).
பெரிய வாச்சான் என்பவர் ஒரு வைணவ அய்யங்கார் பார்ப்பனர்; அவர் பெரிய திருமடல் கண்ணிக்கு உரை எழுதினார்.
தென்னுரையில் கேட்டதுண்டு என்ற வரிக்கு அவர் எழுதிய உரை என்ன?
மிலேச்ச சாதி பிதற்றும் தமிழின் கண் கேட்டறிவதுண்டு என்று எழுதவில்லையா?
பார்ப்பனர் தமிழின் பால், தமிழன்பால் கொண்டிருக்கும் இந்தப் பிறவித் துவேஷ நஞ்சு என்பது அவர் கள் கூறும் ஆலகால விஷத்தைவிடக் கொடுமையானது.
உண்மையைச் சொல்லப் போனால் ஆரிய பண்பாட்டை, தர்மத்தை எதிர்த்து எழுதப்பட்டதுதான் திருக் குறள் என்பது தந்தை பெரியார் அவர்களின் கணிப்பு.
வள்ளுவர் குறளை எழுதிய காலம் தமிழ்நாடு ஆரிய ஆதிக்கத்தில் ஆழ்ந்து கிடந்த காலம்;
குறள் தோன்ற வேண் டிய அவசியம்கூட ஆரிய ஆதிக்கம் தோன்றி மக்களை அழித்து நமது கலாச்சாரத்தை ஒழித்துக் கொண்டிருந்த நிலையைத் தடுப்பதற்காகத்தான் வள்ளுவர் குறளை எழுதினார் என்கிறார்.
தந்தை பெரியார் (ஆதாரம்: திருக்குறளும் பெரியாரும் பக்கம் 46-47).
மனு மாண்டு விட்டார்; ஆனால் அவரின் கொள்ளுக் கொள்ளுப் பேரர்கள் இன்னும் பூணூலோடு திரிந்து கொண்டு இருக்கிறார்கள் - எச்சரிக்கை!