Saturday, January 28, 2017

ஆளுநர் மாளிகையில் ‘கிருஷ்ண லீலா’ நடத்திய ஆர்.எஸ்.எஸ். ஆளுநர் வெளியேறினார்!

மேகாலாயா ஆளுநர் மாளிகையில்
‘கிருஷ்ண லீலா’ நடத்திய
ஆர்.எஸ்.எஸ். ஆளுநர் வெளியேறினார்!
- ஊசி மிளகாய்
தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் பணியாற்றிய ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகராக இருந்தவர் வி.சண்முகநாதன் என்பவர்.
இவர் பிறகு டில்லி ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் பணியாற்றி வந்தார். மோடி அரசு ஆட்சிக்கு வந்தவுடன், வடகிழக்குப் பகுதி யில் உள்ள மேகாலாயா மாநில ஆளுநராக நியமனம் செய்யப் பெற்றார்.
தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த இவர் ஆளுநராகி, தமிழ்நாட்டின் மதுரை, பழனி போன்ற பல ‘திவ்ய சேத்திரங்களுக்கெல்லாம் சென்று (அரசு செலவிலேயே) ‘க்ஷேத்திராடனம்' எல்லாம் செய்து முடித்ததோடு, தமிழ் நாட்டிலுள்ள பல பள்ளி, கல்வி நிலையங்களுக்கு வந்து ஒழுக்க உபதேசம் செய்யத் தவறாதவர்!
2015 ஆம் ஆண்டு மே மாதம் மேகாலாய ஆளுநராக நியமிக்கப்பட்டவர், 2016 ஆம் ஆண்டு அருணாசலப் பிரதேச ஆளுநர் பதவி காலியானபோது, அதையும் கூடுதலாக கவனித்து வரும் பொறுப்பை மோடி அரசு  அவருக்கு வழங்கியது!
அவர்மீது மேகாலாயா ஆளுநர் மாளிகை ஊழியர்கள், ஆளுநர் மாளிகையின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படும் வகையில் நடந்துகொண்டதாக புகார் கூறி, 98 ஊழியர்கள் கையெழுத்திட்டு, குடியரசுத் தலைவருக்கும், பிரதமருக்கும் புகார் கடிதம் அனுப்பினர்.
ஊழியர்கள் அனுப்பிய அந்தப் புகார் கடிதத்தில் கூறப்பட்டுள்ள செய்திகள் இதோ:  (‘தினத்தந்தி’, 27.1.2017).
‘‘ஆளுநர் சண்முகநாதன், ஆளுநர் மாளிகையின் கண்ணியத்தைக் காக்கத் தவறிவிட்டார். ஆளுநர் மாளி கையை, ‘இளம் பெண் கிளப்’பாக அவர் மாற்றி விட்டார். அவரது நேரடி உத்தரவின் பேரில், பெண்கள் இஷ்டம்போல் வந்து செல்லும் இடமாக ஆளுநர் மாளிகை ஆகிவிட்டது. பல பெண்கள் அவரது படுக்கை அறைக்கே செல்லும் உரிமை பெற்றுள்ளனர்.
ஆளுநர் மாளிகையின் பாதுகாப்பு விஷயத்திலும் சண்முகநாதன் சமரசம் செய்துகொண்டுள்ளார்.
இரண்டு மக்கள் தொடர்பு அதிகாரிகள், ஒரு சமையல் காரர், ஒரு நர்ஸ் எனப் பெண்களாக நியமித்து, அவர்களை இரவுப் பணியில் நியமித்துள்ளார்.
தனக்குப் பணியாற்ற பெண்களை மட்டுமே நியமிக் கிறார்; ஆண் தனி உதவியாளரை தனது செயலகத்திற்கு மாற்றிவிட்டார்.
நேர்முகத் தேர்வுக்கு வந்த ஒரு பெண்ணிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றார்.
ஆகவே, பிரதமர் உடனே தலையிட்டு, ஆளுநர் மாளிகையின் கண்ணியத்தைக் காக்க, ஆளுநர் சண்முக நாதனை நீக்கவேண்டும்‘’ என்று அந்தக் கடிதத்தில் தெரிவித்திருந்தனர்.
விஷயம் நாறிப்போனவுடன், ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் சண்முகநாதன் தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டாராம்! நியாயமாக வழக்குத் தொடரவேண்டும்.
என்னே தேசிய அவமானம்! அதுவும் 68 ஆவது இந்தியக் குடியரசு விழாவின்போதா இப்படி ஒரு செய்தி!
அது எப்படி தவறு? அவர் பகவான் கிருஷ்ணனின் லீலைகள்பற்றி ஆளுநர் மாளிகையில் பாடம் படித்துள்ளார்!
இந்துக் கடவுள்களில் இப்படி நடக்காத ஒரு யோக்கியமான கடவுளையாவது காட்ட முடியுமா?
அவர்கள் கும்பிடும் கடவுள்களின் லீலைகளை இவர்கள் பின்பற்றினால், தவறு ஆகாது என்பது அவர்களின் வாத மாக இருந்தால், யார்தான் அவர்களுக்குப் பதில் அளிக்க முடியும்?
இந்த ஒழுக்க சீலர்கள்தான் உலகத்திற்கே ஒழுக்கப் பாடப் போதகர்களாம்! அட வெட்கங்கெட்டவர்களே!
அர்த்தமுள்ள இந்து மதம் - அதனைக் காப்பாற்றும் ஆர்.எஸ்.எஸ். - அதன் புடம்போட்ட தங்கங்களின் நிலை இப்படியா?

ஜக்கி வாசுதேவ் என்ற கார்ப்பரேட் சாமியாருக்கு பத்ம விபூஷன் விருது எவ்வகையில் அவர் விருதுக்கு தகுதியானவர்? ....

ஜக்கிவாசுதேவ் என்ற கார்ப்பரேட் சாமியாருக்கு பத்ம விபூஷன் விருது மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது - எவ்வகையில் அவர் அந்த விருதுக்குத் தகுதியானவர் என்று தமிழர் தலைவர் வினா எழுப்பி விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
ஒவ்வொரு ஆண்டும், குடியரசு நாளில் மத்திய அரசு பத்ம விருதுகளை வழங்கி வருகிறது.

அதனைப் பெரிதும் செல்வாக்கு, பரிந்துரை அழுத்தம் காரணமாகவே பலர் பெறுகிறார்கள் - தகுதி என்பதோ தேடிப் பார்க்க வேண்டிய ஒன்றாகும்!
மிகப் பிரபலமான நோபல் பரிசு தேர்வு முறை - குழுகூட இந்த விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவை அல்ல என்பதற்குப் பிரபல அமெரிக்கப் புதின எழுத்தாளரான இர்விங் வேலஸ் அவர்கள் எழுதிய The Prize என்ற புதினம் இதன் மர்ம முடிச்சுகளை அவிழ்த்து, துலாக்கோலைப் பிடித்து, சல்லடை போட்டு ஆராய்ந்து வழங்கப்படுவதில்லை என்பதை அம்பலப்படுத்தியுள்ளது.
இவ்வாண்டு பத்ம விருதுக்குத் தேர்வாகியுள்ள - ஒரு விந்தையாளரான ஜக்கி வாசுதேவ் என்ற கார்ப்பரேட் சாமியார் ஒருவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அதுவும் உயரிய விருதான பத்ம விபூஷன் எவ்வகையில் அவர் அதற்குத் தகுதி?

இவரது ஆன்மீகத் தொண்டுபற்றி கோவையில் சில மாதங்களுக்குமுன் பெற்றோர்கள் விட்ட கண்ணீர் கொஞ்ச நஞ்சமல்ல.
பிரபல நக்கீரன் வார ஏட்டில் பல்வேறு செய்திகள் ஆதாரங்களுடன் வெளிவந்தனவே!
இதுதான் பத்ம விபூஷன் விருதுக்குத் தகுதியா?

அதுபோல, தஞ்சை மாவட்டம் பாபநாசம் பார்ப்பனர் கோடி கோடியாக சம்பாதித்து, டில்லியில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தியதற்காக, உச்சநீதிமன்றம் 5 கோடி ரூபாய் அபராதம் விதித்த சிறீசிறீ ரவிசங்கர் கார்ப்பரேட் சாமியார் - இவ்வாட்சிக்கு வேண்டியவர். அபராதம் கட்டினாரா என்று தெரியவில்லை! பிறருக்கு அவர் அறிவுரை வழங்கும் நிலை சரியா?
இவ்வாண்டு என்.எல்.சி. நெய்வேலி நிறுவனத்தில் 26 ஆம் தேதி நடைபெற்ற விழாவில் சுற்றுச்சூழல் மாசு குற்றவாளிக்கு சிறப்பு விருந்தினராக சிவப்பு கம்பள வரவேற்பு என்பது வெட்ககரமானது; கண்டனத்திற்குரியது.
நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது?

இதுதான் நம் சுதந்திரத்தின் லட்சணமா? என்று வறட்சியால் தற்கொலை செய்துகொள்ளும் ஏழை - விவசாயிகளின் குரலை எப்படி கேட்க முடியும் - அமிழ்ந்திப் போகிறதோ?
மத்திய அரசு இப்படி நடந்துகொள்வதுதான் தேசியம் போலும்!

- கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்

சென்னை,27.1.2017 .
 

Thursday, January 12, 2017

தமிழ்நாட்டை வறட்சி மாநிலமாக அறிவித்தது வரவேற்கத்தக்கது - பாராட்டத்தக்கதே!

தமிழ்நாட்டை வறட்சி மாநிலமாக அறிவித்தது வரவேற்கத்தக்கது - பாராட்டத்தக்கதே!
மேலும் போதிய அளவுக்கு இன்னும் நிதியுதவி அளித்திட
மத்திய அரசை வலியுறுத்தி நிதி பெறவேண்டும்!
அனைத்துக் கட்சிக் குழுக்களை ஆங்காங்கே அமைத்து
நிவாரணப் பணிகளையும், உதவிகளையும் மேற்கொள்க!
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை
தமிழர்களின் நாகரிகத்தை உலகுக்கு உணர்த்தும் கீழடியில் தொல்பொருள் ஆய்வை நிறுத்துவதா?
தமிழ்நாட்டை வறட்சி மாநிலமாக அறிவித்த தமிழ்நாடு அரசின் அறிவிப்பை வரவேற்று, அதேநேரத்தில் இன்னும் கூடுதலான அளவுக்கு நிதி உதவி செய்ய மத்திய அரசிடமிருந்து நிதி உதவியைப் பெற்றிட போதிய முயற்சியில் தமிழ்நாடு அரசு முனைப்பாக செயல்படவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள  அறிக்கை வருமாறு:
தமிழ்நாடு அரசு வறட்சி மாநிலமாக தமிழ்நாட்டை அறிவித்திருப்பது - வரவேற்கத்தக்கதே! திருவாரூரில் கடந்த 17.12.2016 அன்று நடைபெற்ற திராவிடர் மகளிர் எழுச்சி மாநாட்டில் இதனை வலியுறுத்தித் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. அறிக்கைகள் வாயிலாகவும் திராவிடர் கழகம் வற்புறுத்தி வந்துள்ளது - பல்வேறு அரசியல் கட்சிகளும், விவசாய சங்கங்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளன. முதலமைச்சரை நேரில் சந்தித்தும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இத்தகு சூழ்நிலையில் மக்கள் குரலை ஏற்று தமிழ்நாடு அரசு இத்தகைய அறிவிப்பை வெளியிட்டதற்காக, கட்சிகளை மறந்து பாராட்டலாம் - வரவேற்கலாம்.
முக்கிய அறிவிப்புகள்
முதலமைச்சரின் முக்கிய அறிவிப்புகள் வருமாறு:
தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வடகிழக்கு பருவமழை மிகக்குறைவாக பெய்துள்ளதால், அனைத்து  மாவட்டங்களும் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவிக்கப்படும்
அனைத்துமாவட்டங்களிலும்விவசாயிகள் செலுத்த வேண்டிய நிலவரி முழுவதும் தள்ளுபடி செய்யப்படும்.
வறட்சி காரணமாக விவசாயிகள் தங்கள் கடனை திரும்பச் செலுத்த இயலாது. எனவே, கூட்டுறவு வங்கிகள் மற்றும் வணிக வங்கிகள் ஆகியவற்றில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க் கடன் மத்தியகாலக் கடனாக மாற்றியமைக்க வழிவகை செய்யப்படும்.
இவ்வாறு மாற்றியமைப்பதற்கு தேவையான அன்னவாரி சான்றிதழ்கள் விரைந்து வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டுறவு வங்கிகள் மூலம் 3,028 கோடி ரூபாய் பயிர்க் கடனாக இந்த ஆண்டு வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கடன் மத்தியகாலக் கடனாக மாற்றியமைக்கப்படும்.
பேரிடர் நிவாரண வரையறையின்படி பயிர் சேதங்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை உயர்த்தப்பட்டு 27.10.2015 அன்று அரசாணை வெளி யிடப்பட்டுள்ளது. இந்த அரசாணையின்படி 33 சத வீதத்திற்கும் மேல் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ள விவசா யிகளுக்கு,நிவாரண உதவித் தொகை வழங்கப்படும்.
நெல் பயிருக்கு ஏக்கர் ஒன்றுக்கு, 5,465 ரூபாய்; நெல் தவிர, இதர நீர்ப் பாய்ச்சப்பட்ட பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 5,465 ரூபாய்; மானாவாரி பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 3,000 ரூபாய்; நீண்ட கால பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 7,287 ரூபாய்; முசுக்கட்டை பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 3,000 ரூபாய் என்ற வீதத்தில் நிவாரணத் தொகை வழங்கப்படும்.
பயிர்க் காப்பீடு செய்த விவசாயிகள் காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து பயிர் இழப்புக்கான இழப்பீட்டுத் தொகையை பெற இயலும். அதற்கான பயிர் அறுவடை பரிசோதனை விரைந்து மேற்கொள்ளப்படும்.
பேரிடர் நிவாரண வரையறைப்படி, நிவாரணம் மட்டுமே பெற இயலும் என்பதால், பயிர்க் காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் பயிர்க் காப்பீடு செய்ய தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. புதிய பயிர்க் காப்பீட்டு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு அதிக பயன் கிடைக்கும் என்பதால், அரசுக்கு செலவு அதிகம் என்றாலும், இந்த திட்டம் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுகளில் சராசரியாக பயிர்க் காப் பீட்டிற்கு அரசின் பங்களிப்பு பிரீமியம் தொகையாக 40 கோடி ரூபாய் மட்டுமே செலுத்தப்பட்ட நிலையில், இந்த ஆண்டு மாநில அரசின் பங்காக 410 கோடி ரூபாய் செலுத்தப்படுகிறது.
இதன்மூலம் நெல் சாகுபடி செய்த விவசாயிகள், முழு பயிரிழப்பு அதாவது 100 சதவீத பயிரிழப்பு ஏற்பட்டிருந்தால் மாவட்டத்தைப் பொறுத்து, ஏக்கர் ஒன்றுக்கு 21,500 முதல் 26,000 ரூபாய் வரை காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து இழப்பீடு பெற இயலும். டெல்டா மாவட்டங்களைப் பொறுத்தவரை, இழப்பீட்டுத் தொகை 25,000 ரூபாய் ஆகும்.
டெல்டா மாவட்டங்களில் 80 சதவீத மகசூல் இழப்பு ஏற்பட்டிருந்தால், ஏக்கர் ஒன்றுக்கு 20,000 ரூபாய்; 60 சதவீத மகசூல் இழப்பு ஏற்பட்டிருந்தால், ஏக்கர் ஒன்றுக்கு 15,000 ரூபாய்; 33 சதவீத மகசூல் இழப்பு ஏற்பட்டிருந்தால் ஏக்கர் ஒன்றுக்கு 8,250 ரூபாய் பெற இயலும்.
இதர மாவட்டங்களைப் பொறுத்தவரை 33 சதவீதத்திற்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ள விவசாயிகள் மகசூல் இழப்பிற்கு ஏற்றபடி இழப்பீடு பெற இயலும். இதே போன்று, மற்ற பயிர்கள் பயிரிட்டு பயிரிழப்பு ஏற்பட்டுள்ள விவசாயிகளும், அந்தந்த மாவட்டங்களுக்கு குறிப்பிடப்பட்டுள்ள தொகையை இழப்பீடாக பெற இயலும். சோளப் பயிருக்கு ஏக்கர் ஒன்றுக்கு 20,000 ரூபாய் வரையிலும், பயறு வகைகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 12,000 ரூபாய் வரையிலும், கரும்புக்கு ஏக்கர் ஒன்றுக்கு 45,000 ரூபாய் வரையிலும், மஞ்சள் பயிருக்கு ஏக்கர் ஒன்றுக்கு 50,000 ரூபாய் வரையிலும் பயிரிழப்புக்கு ஏற்ப இழப்பீட்டுத் தொகை பெற இயலும்.
வறட்சி காரணமாக வேலை வாய்ப்பின்றி பாதிக்கப்பட்டுள்ள விவசாய தொழிலாளர்களுக்கு, போதிய வேலை வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், 100 நாட்கள் பணி வரம்பு என்பது 150 நாட்களாக உயர்த்தப்படும்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் ஏரிகள் தூர் வாருதல், குளங்கள் சீரமைத்தல் மற்றும் பாசன வாய்க்கால்கள் தூர்வாருதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். இந்தப் பணிகள், 3400 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும். இதன்மூலம் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள கிராமப்புற விவசாயத் தொழிலாளர்கள் வேலைவாய்ப்புப்பெறுவர்.
வறட்சி காரணமாக ஏற்படும் கால்நடை தீவனப் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை வாயிலாக பசுந்தீவனம், அடர்தீவனம் மற்றும் உலர் தீவனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கென 78 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் மேற்கொள்ளப்படும்.
வறட்சி காரணமாக கிராமப்புறங்களில் ஏற்பட்டுள்ள குடிநீர்ப் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் நீர் ஆதாரங்கள் மற்றும் குடிநீர் விநியோகத்தை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும். இதற்கென 350 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
வறட்சி காரணமாக வன உயிரினங்கள் பாதிக்கப் படாமல் இருக்க, அவற்றுக்குத் தேவையான தீவனம் மற்றும் குடிநீர் ஆதாரத்தைப் பெருக்க 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
பொதுப்பணித் துறை மூலமாக நிலத்தடி நீர்த்தேக்கும் அமைப்பு, நிலத்தடி நீர் செரிவூட்டும் அமைப்பு போன்ற நீராதாரங்கள் மேம்படுத்தும் பணிகள் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
கடந்த இரண்டு மாதங்களில் 17 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். விவசாயிகளின் இந்த தற்கொலைகள் பல்வேறு காரணங்களுக்காக ஏற்பட்டிருந்தாலும், இறந்தவர்களின் குடும்ப நலன் கருதி அவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்பார்த்த அளவுக்கு இந்த உதவிகள் போதுமானதல்ல என்று அரசியல் கட்சிகளும், விவசாய சங்கங்களும் கூறியிருப்பதைக் குறை யாகக் கூற முடியாது. அதேநேரத்தில், ஒரு மாநில அரசு - தன் நிதிநிலையின் அடிப்படையில்தான் செயல்பட முடியும் என்பதும் புரிந்துகொள்ளப்பட வேண்டும். மத்திய அரசை வலியுறுத்தி, போதுமான அழுத்தம் கொடுத்து, முழு அளவுக்கு நமது விவசாயிகளுக்கு உதவி புரிந்திட தேவையான நிதியைப் பெற்றிடவேண்டும்.
தமிழக நாடாளுமன்ற
உறுப்பினர்களின் கடமை
கட்சிகளுக்குஅப்பாற்பட்டமுறையில்கூடதமிழ் நாட்டைச் சேர்ந்த அனைத்துக் கட்சி 39 நாடாளு மன்ற உறுப்பினர்களும், மாநிலங்களவை உறுப்பினர் களும்கூட, நாட்டைப் பிடித்து உலுக்கும் வறட்சியைக் கவனத்தில் கொண்டு, பிரதமரையும், மத்திய நிதியமைச்சரையும் சந்தித்து அழுத்தம் கொடுத்து நமக்குத் தேவையான நிதியைப் பெற்றிட வேண்டும்.
அனைத்துக் கட்சி குழுக்கள் தேவை!
நிவாரண உதவிகளையோ, மராமத்துப் பணி களையோ செய்யும்போது அனைத்துக் கட்சியைச் சேர்ந்தவர்கள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டு அவர்களின் மேற்பார்வையில் செயல்படுத்தப்பட்டால் முறைகேடுகளும், பாரபட்சமும் தவிர்க்கப்பட்டு விடும்.
மரணமடைந்தோர் எண்ணிக்கை
விவசாயம் பாதிக்கப்பட்டதால் அதிர்ச்சிக்கு ஆளாகியும், தற்கொலை செய்துகொண்டும் மரண மடைந்தோர் எண்ணிக்கை வெறும் 17 என்பது சரியானதாக இருக்க முடியாது. எண்ணிக்கை நிச்சயமாக இதைவிட அதிகம் என்பது உண்மையாகும். பாதிப்புக்கு ஆளான குடும்பங்கள் இந்த அறிவிப்பால் மேலும் துயரம் அடையக் கூடிய நிலைதான். அதனைச் சரியாகக் கணக்கிட்டு பாதிப்புக்கு ஆளான அனைத்துக் குடும்பங்களுக்கும் நிதி உதவி செய்யவேண்டும் என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறோம்.
மத்திய அரசிடமிருந்து அதிக நிதியுதவி தேவை
வறட்சி மாநிலமாக அறிவித்தது எப்படி சரியா னதோ, அதேபோல நிவாரணங்களும் சரியாக நடை பெறுவதுதான் அதைவிட சிறப்பாகும். முக்கியமாக மத்திய அரசின் நிதி உதவியை அதிகமான அளவில் பெறுவதற்கு அனைத்து முயற்சிகளும் மேற் கொள்ளப்படவேண்டும்.
இது மிக மிக முக்கியமும், அவசியமுமாகும்.

கி.வீரமணி
தலைவர்,   திராவிடர் கழகம்.
சென்னை
11.1.2017

Monday, January 9, 2017

சுயமரியாதையே பெண் விடுதலையின் முதல்படி! ஷெரிஃபா கானம் பேட்டி


என் சுய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக ஆண்களைச் சார்ந்து நிற்க ஒருபோதும் நான் தயாரில்லை. பெண்களைச் சிறுமைப்படுத்தும் காரியம் எங்கே நிகழ்ந்தாலும் நான் குரல் எழுப்புவேன்.
பெண்கள் முகத்தை மூடி, முக்காடிட்டுக் கொண்டுதான் வெளியே போகவேண்டும். வீட்டுக்கு வெளியே ஆண்கள் வரும்போது, அவர்கள் பார்வையில் படுவது மாதிரி நடமாடக் கூடாது. வாசலில் நிற்கக் கூடாது... இப்படிப் பல கட்டுப்பாடுகள் உள்ள, ஒரு பாரம்பரிய முஸ்லீம் குடும்பம்தான் எங்களுடையதும். அய்ந்து சகோதரர்கள், நான்கு சகோதரிகளுக்குப் பிறகு பத்தாவதாக நான் பிறந்தேன். அம்மா மணப்பாறைப் பள்ளியில் ஆசிரியை. அப்பா, நான் பிறந்ததும் அம்மாவைப் பிரிந்து சென்றுவிட்டார். பத்து குழந்தை களுடன் தனி மனுஷியாக அம்மா நின்றார்கள். அவர்கள் முன்னால், எந்த நம்பிக்கைக் கீற்றுகளுமற்று வாழ்க்கை தொலை தூரத்துக்கு நீண்டு கிடந்தது. வறுமை வாசல் படியில் சம்மணமிட்டு உட்கார்ந்திருந்தது. பல்வேறு சிரமங்களும் அவமானங்களும் பட்டுதான் அம்மா எங்களை வளர்த்தார்கள். படிக்க வைத்தார்கள்.
எனக்கு எங்கம்மா முன்மாதிரி
அம்மா, மிகவும் உறுதியானவர்கள், முற்போக்கானவர், அந்தக் காலத்திலேயே அவர்கள் தாலி அணிந்தது இல்லை.
மணப்பாறையில் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த பிறகு, டில்லி பக்கத்திலுள்ள அலிகான் முஸ்லீம் பெண்கள் பல்கலைக்கழகம் சென்று ஆபீஸ் மேனேஜ்மென்ட் படித்தேன். நான் சென்று பதினைந்தாவது நாள்... அம்மாவிடம் இருந்து ஒரு கடிதம்... ‘எப்படியிருக்கிறாய்? பத்திரமாகப் போய்ச் சேர்ந்தாயா? அடிக்கடி கடிதம் எழுது...’ இப்படியே சென்று கொண்டிருந்த கடிதத்தில் பத்தோடு பதினொன்றாக... ‘உன் அப்பா இறந்துவிட்டார். பதினைந்து நாட்கள் ஆகிவிட்டது. நீ வரவேண்டாம்’ என ஒரு வரி. அம்மா, மிகவும் உறுதியானவர்கள். சமூக அவலங்களுக்கு எதிராகக் கோபம்கொண்டு எழும் என் இயல்பில் அம்மாவின் பங்களிப்பு நிறைய உண்டு.
படிப்பை முடித்துவிட்டு மணப்பாறை திரும்பினேன். ஏதாவது ஒரு நல்ல வேலையில் சேரவேண்டும் என்பதுதான் அப்போதைய என் ஒரே எண்ணமாக இருந்தது. மணப்பாறையில் குழந்தைகளுக்கு டியூசன் எடுத்துக்கொண்டு, பேப்பர் பார்த்து வேலைகளுக்கு விண்ணப் பங்கள் அனுப்பிக்கொண்டே இருந்தேன். அப்போது, ‘பாட்னாவில் நடைபெறும் பெண்கள் மாநாட்டுக்கு தமிழ்நாட்டில் இருந்து செல்பவர்களுக்கு இந்தி மொழிபெயர்ப்பாளராய்  பாட்னா போனேன். என் வாழ்க்கைப் பாதையையே மாற்றும் பயணமாக அது இருந்தது.
மாநாட்டில் பெண்கள் தங்களது பிரச்சினைகளை எல்லாம் சொல்லச் சொல்ல எனக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. முதலில், ஒரு பொது இடத்தில் பெண்களால் இவ்வளவு தைரியமாக, வெளிப்படையாகப் பேச முடியும் என்பதே எனக்கு வியப்பைத் தந்தது. பாட்னாவில் இருந்து திரும்பும்போது, பெண்களுக்கு சமூக அங்கீகாரம் வேண்டும்; பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக நாமும் ஏதாவது செய்தாக வேண்டும் என்ற எண்ணம் தோன்றிக்கொண்டே இருந்தது. புதுக்கோட்டைக்குத் திரும்பினேன்.
ஒரு பெண், அவளது உடல் முழுக்க இருந்த சிகரெட் தீயால் சுட்ட தழும்புகளைக் காட்டினாள். வெளிநாட்டில் இருந்து வந்த கணவன்... ‘நான் அங்கே இருக்கிறேன். நீ இங்கே எவன்கூட சந்தோஷமா இருக்க’ எனக் கேட்டு சுட்டிருக்கிறான். இதுமாதிரி பல கதைகள்... வரதட்சணைக் கொடுமைகள், விவாகரத்து வழக்குகள்.
யாரிடம் சொல்லி அழுவது, யாரிடம் நியாயம் கேட்பது... என மனம் புழுங்கி, தங்களுக்குள்ளேயே அந்த ரகசியங்களைப் புதைத்திருக்கிறார்கள் அவர்கள். பெண்ணாகப் பிறந்தாலே கஷ்டம்தான் என்று ஏற்று வாழ்பவர்கள்தான் அதிகம் பேர். இது மாறவேண்டும். இவர்களுக்காக நாம் ஏன் போராடக் கூடாது? ஒரு உதவி, இடம் கிடைத்தால் அவர்கள் வெளியே வருவார்கள் எனத் தோன்றியது.
ஒவ்வொரு பிரச்சினையையும் எடுத்துக் கொண்டு, சட்டரீதியாக அதற்கான நியாயங் களைத் தேடி என் பயணத்தைத் தொடங்கினேன்.
வேலைகளைச் செய்யத் தொடங்கிய பிறகு ஏகப்பட்ட அனுபவங்கள். தடைகள், வலிகள், அவமானங்கள், அதிகாரிகளின் அருவருக்கத் தக்கப் பார்வைகள்... சில நேரங்களில் அவசர வேலையாக ராத்திரி புறப்பட்டுப் போகவேண்டி இருக்கும். வெளியூர்களில் கடைசிப் பேருந்தை தவறவிட்டு நள்ளிரவில் தனி ஆளாக பஸ் ஸ்டாண்டில் நின்றிருக்கிறேன். அப்போது, பலமுனைகளில் இருந்தும் ஊடுறுவிப் பார்க்கும் கண்கள் உடலைக் கூசச்செய்யும். இதற்காக லாட்ஜில் ரூம் எடுக்கச் சென்றால் அங்கே நூறு கேள்விகள்.
இதனால், பக்கத்து கிராமங்களில் இருந்து புதுக்கோட்டை வந்து, கடைசிப் பேருந்தை தவறவிட்டு பஸ் ஸ்டாண்டில் காத்துக் கிடக்கும் பெண்கள் தங்க ஒரு இடத்தை உருவாக்க வேண்டும் என விரும்பினேன். அப்போது, ஷீலாராணி சுங்கத் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்தார். அவரிடம் சென்று இதற்காக இடம்தர முடியுமா எனக் கேட்டோம். ‘தனி மனிதர்களுக்குத் தர முடியாது; நீங்கள் ஒரு நிறுவனத்தைத் தொடங்கி அதிலிருந்து கடிதம் எழுதுங்கள், கட்டாயம் ஆவன செய்கிறேன் என்றார். அப்படித்தான் 1991இல் ‘ஸ்டெப்ஸ்’ பெண்கள் மேம்பாட்டு மய்யத்தைத் தொடங்கினோம்.
கனவு
மாநில அளவில் பெண்களை ஒருங் கிணைக்கும் பெண்கள் மய்யம் ஒன்றை அமைத்தல், வயதான காலத்தில் பெண்கள் தங்கள் சொந்தக் காலில் நிற்க ஒரு தொகை வைத்துக்கொள்ள பெண்கள் வங்கி அமைத்தல்.. எனப் பல கனவுகள்.
புதுக்கோட்டைப் பேருந்து நிலையம் பக்கத்தி லேயே ‘ஸ்டெப்ஸ்’ அமைப்புக்கு நிலம் ஒதுக்கினார் ஷீலாராணி. நிலம் கிடைத்து விட்டாலும் கட்டடம் கட்ட, எங்களிடம் எந்த பொருளாதாரப் பின்புலமும் இல்லை. எனவே நாங்களே மணல், செங்கல் சுமந்து கட்டிடத்தைக் கட்டினோம். அந்த இடத்தில் நாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்பதைவிட, பேருந்து நிலையம் பக்கத்து இடம் என்பதால் நிலத்தின் மதிப்புதான் பலரது கண்களையும் உறுத்தியது. அங்கே இருந்து எங்களை விரட்ட பல்வேறு வகையிலும் தொந்தரவுகளைத் தந்தார்கள். சாயங்காலம் வேலைகளை முடித்து, வீட்டுக்குச் சென்று, மறுநாள் காலையில் வந்து பார்த்தால்... அந்த இடம் முழுக்க மலம் கழித்து வைத்திருப் பார்கள். ஆணுறைகளைப் பரப்பிப் போட்டிருப் பார்கள். அதனை எல்லாம் சுத்தம் செய்துவிட்டு அன்றைய வேலைகளைத் தொடங்குவோம். மறுநாள் காலையிலும் இதேமாதிரி இருக்கும். அவர்களே போட்ட ஆணுறைகளைக் காட்டி அங்கே விபச்சாரம் நடக்கிறது எனப் பொய்ப் பிரச்சாரம் செய்தார்கள்.
ஒரு பெண்ணை செயல்படாமல் வைக்க, அவளது ஒழுக்கத்தின் மீது கைவைத்தால் போதும். வெளியே இருந்து இந்தப் பிரச்சினைகள் என்றால், வீட்டுக்குள் வேறு மாதிரியான பிரச்சினைகள்... வெளியே போகக்கூடாது எனக் கட்டுப்பாடுகள், அடி, உதை.
எல்லாவற்றையும் எதிர்கொண்டுதான் இவ்வளவு தூரம் வந்திருக்கிறோம். பிரேமானந்தா வழக்கில் பாதிக்கப்பட்ட 17 பெண்களுக்கு வழக்கு முடியும்வரை இரண்டு ஆண்டுகள் தங்க இடம் கொடுத்தோம். மனரீதியாக அவர்களைத் தயார்படுத்தி, தைரியம் ஊட்டினோம்.
தனக்கு உதவ ஆட்கள் இருக்கிறார்கள் எனத் தெரிந்தால் பல பெண்கள் தைரியத்துடன் வெளியே வருவார்கள் என்பதுதான் எங்கள் அனுபவம். இப்போது எங்களைப் பற்றிக் கேள்விப்பட்டு பாதிக்கப் பட்ட பெண்கள் அவர்களாகவே தேடி வருகிறார்கள். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு போராடுவதற்கான தன்னம்பிக்கையை ஊட்டுவதைத்தான் எங்களது முக்கிய செயல்பாடாக நான் நினைக்கிறேன்.
ஜெயித்தது எப்படி?
அடிபட்டு விழுந்தால் அதனைவிட வேகமாக எழுந்திருப்பேன். எந்தச் சூழ்நிலையிலும் பின்வாங்க மாட்டேன். சோர்ந்து போகமாட்டேன். அப்புறம் கமிட்மெண்ட். ஒரு சமூக சேவையாக இல்லை. என்னுடைய கடமையாகவே நினைத்து எல்லாவற்றையும் செய்கிறேன்.
ஏறத்தாழ 26 ஆண்டுகள்... 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குள். நாங்கள் பிரச்சினைகளுடன் செல்லும்போது சில அதிகாரிகள் உதவுவார்கள், சிலர் எதிர்ப்பார்கள். முஸ்லிம் பெண்கள் பிரச்சினை என்றால் உங்கள் ஜமாத் பார்த்துக்கொள்ளும் எனத் திருப்பி அனுப்பி விடுவார்கள். தங்கள் பிரச்சினைகளைப் பற்றி பேசும்போதுகூட ஜமாத்துக்குப் பெண்களால் போக முடியாது. அவர்கள் இல்லாமலே, அவர்களிடம் கேட்காமலே அவர்கள் மீது தீர்ப்பு கூறுவார்கள். இதனை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
எனவே, ஜமாத்தில் பெண்களைப் பற்றி பேசி முடிவு எடுக்கும்போது, நாங்களும் இருக்க வேண்டும் எனச் சொன்னோம். அதற்கு சம்மதிக்கவில்லை. அப்போது நாமே ஏன் ஒரு ஜமாத்தைத் தொடங்கக் கூடாது எனத் தோன்றியது. இப்படித்தான் ‘தமிழ்நாடு முஸ்லீம் பெண்கள் ஜமாத்’தைத் தொடங்கினோம். பெண்களால் பெண்களுக் காக நடத்தப்படுவதே பெண்கள் ஜமாத். அப்போது, ‘பெட்டைக் கோழி கூவி பொழுது விடியுமா’ என சிலர் ஊடகங்களில் வெளிப் படையாகவே எழுதினார்கள். அவர்கள் கணிப்பு எல்லாம் பொய்த்துப் போனதற்கு இன்று வரலாறு சாட்சியாக இருக்கிறது. இத்தனைக்கும் நாங்கள் எதையும் புதிதாகப் புகுத்தவில்லை. ஏற்கெனவே இருப்பதையே நடைமுறைப் படுத்துகிறோம்; அவ்வளவுதான்.
சையது அம்மாள் என்பவர், 10 வயதில் திருமணம் ஆனவர். புளியங்கொட்டை வியாபாரம் செய்கிறார். முதல் கூட்டத்தில் கடைசி வரிசையில் உட்கார்ந்திருந்தார். அடுத்த கூட்டத்தில் கடைசிக்கு முந்தின வரிசைக்கு வந்தார். இப்படி கொஞ்சம், கொஞ்சமாக முன்னேறி முதல் வரிசைக்கு வந்து உட்கார்ந்தார். அவரே முன்னின்று 70 வயது ஆணுக்கும் 30 வயது பெண்ணுக்கும் நடக்க இருந்த ஒரு திருமணத்தை நிறுத்தினார். இதுதான் எங்கள் வெற்றி.
தமிழ்நாடு முழுக்க 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் என் நேரடி கவனிப்பில் இருக்கிறார்கள். மறைமுகமாக, எங்கள் உறுப்பினர்களையும் சேர்த்தால் பல லட்சம் பேர். இப்போது ஆண்கள் ஜமாத்தில் இருந்தே சில பிரச்சினைகளை எங்களிடம் அனுப்புகிறார்கள்.
கடவுள் நம்பிக்கை?
மனிதம்தான் என்னுடைய மதம். பெண்களை சக மனுஷியாகப் பார்ப்பவர்கள், அவர்களது துக்கத்தில் பங்கெடுத்துக் கொள்பவர்கள் எல்லோருமே எனக்குக் கடவுள்தான். அவர்களை கையெடுத்துக் கும்பிடுகிறேன்.
பெண்களுக்கு எனத் தனி மசூதி கட்டும் பணியில் ஈடுபட்டோம். உடனே நேரிலும் போனிலும் பல கொலை மிரட்டல்கள், ‘ஷெரிஃபா வந்தால் செருப்பு எடுத்து அடியுங்கள்’ என திண்டுக்கல்லில் சொல்லியிருக்கிறார்கள். அடித்தார்கள், அடிபட்டிருக்கிறேன்.
அடிப்பதன் மூலமும், கொலை மிரட்டல் களாலும் ஷெரிஃபாவை பணிய வைக்க முடியாது. பெண்கள் நிறைய காலங்கள் பெருந்தன்மையோடு பொறுமையாக இருந்து விட்டோம். இனிமேலும் அப்படி இருக்க முடியாது.
‘பிரச்சினை என்றால் ஷெரிஃபாவிடம் போகலாம்’ என்ற நம்பிக்கையைப் பெண்கள் மத்தியில் விதைத்திருக்கிறேன். இதைத்தான் என் வெற்றியாகப் பார்க்கிறேன். பெண்களுக்கான உரிமைகளைப் பெற்றுத் தருதல், அதற்காகப் போராடுதல் என்பதை உணர்வுப்பூர்வமாகச் செய்கிறேன். இதை ஒரு வேலை என்றோ, சமூக சேவை என்றோ ஒருபோதும் நான் நினைத்ததில்லை. சுயமரியாதையே பெண் விடுதலையின் முதல்படி. அதை நோக்கியே என் பயணம்.


பார்ப்பனரின் புலம்பலா, பொய்யழுகையா? தமிழர் தலைவர் ஆசிரியரின் அறிக்கை


தமிழர்களின் நாகரிகத்தை உலகுக்கு உணர்த்தும் கீழடியில் தொல்பொருள் ஆய்வை நிறுத்துவதா?
துக்ளக் இதழில் (11.1.2017) வெளிவந்த பார்ப்பன அமைப்பின் விளம்பரத்துக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்
கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
துக்ளக்கின் விளம்பரம் இதோ:
அறிமுகம்:
Website: www.BrahminsforSociety.com
Great Contributors:
தன் தியாகத்தால் நம் நாட்டுக்கு
பெருமை சேர்த்தவர்கள் /
தன் திறமையால் தானும் உயர்ந்து
பிறரையும் உயர்த்தியவர்கள்;
இது அடுத்த தலைமுறைக்கான Electronic Database
இடஒதுக்கீடு: இன்றைய தமிழ் நாடு அரசு வேலையில் நம் பங்களிப்பு 0% சதவிகிதத்திற்கு அருகில் இருக்கிறது. கடந்த 15 ஆண்டுகளில் நீங்கள் அரசு வேலைக்கு முயற்சி செய்யும் நம் குல இளைஞனை கண்டதுண்டா? இல்லை! இல்லை!! இல்லவேயில்லை!!! நம் இளைஞர்கள் சமூக நிலவரம் புரிந்து, மறுக்கப்படும் அரசு வேலையில் இருந்து விலகி இருக்கிறார்கள். இடஒதுக்கீட்டில் இப்போதைய நம் நிலை என்னவாக இருக்க வேண்டும்? ஒரு பார்வை.
குருவிக் கூட்டம்: 5-ல் மூன்று தம்பதிகள் ஒரு குழந்தையுடன் நிறுத்துகிறார்கள். 5-ல் 2 இளைஞர் களுக்கு திருமணம் ஆவதில்லை. 10-ல் ஒரு குடும்பம் தமிழ்நாட்டை விட்டு வெளியேறி தன் அடையாளம் இழக்கிறது. திருமண வயது 30 தாண்டி போய் கொண்டிருக்கிறது. 50 வயதுக்கு கீழ் அரசு ஊழியர், எழுத்தாளர், ஆசிரியர், கல்வியாளர், பத்திரிகையாளர், வக்கீல்கள், நீதிபதிகள், சரித்திர ஆராய்ச்சியாளர்கள், தமிழ் அறிஞர்கள், பல துறைகளில் வல்லுநர்கள் என பொதுவாழ்வில் எவரும் இல்லை. தமிழ்நாட்டில் அனைத்து துறைகளிலும் மிகப் பெரிய பங்களிப்பை கொடுத்த சமூகம், இன்று  Tech  கூலிகளாக சுருங்கி விட்டோமா?
திருமணம்: லட்சம் இளைஞர்களுக்கு திருமணம் ஆகப் போவதில்லை. ஆண், பெண் விகிதாச்சாரம் மிக மிக மோசமான சரிவில் இருக்கிறது. இந்தப் பிரச்சினை அடுத்த 20 ஆண்டுகளில் நம் சமூகத்தை முழு அழிவில் நிறுத்தும். தமிழகத்தில் ஒரு குலத்தோர் மற்றும் கர்நாடக பிராமணர்கள், இதே பிரச்னைக்கு எப்படி தீர்வை நோக்கி செல்கிறார்கள் - E Book.
வெறுப்பின் நிழலில்: "My Code is My Craft"  என்று பெருமையாய் சொல்லும் Software நிறுவனத்தின் Management 
கூட்டத்தில் “இங்கு இருக்கும் பிராமணர்கள் கை தூக்குங்கள்" என்றார்கள். கைகள் தூக்கப்பட்டன. "எங்களுக்கு பிராமணர்கள் தேவை இல்லை. அடுத்த
6 மாதத்தில் நீங்கள் அனைவரும் விலகலாம்" (மீன்களின் கண்ணீர்?) - வெறுப்பை எதிர் கொண்டு அதை அன்பால் வென்றவர்கள் நிஜ கதைகள்.
வைதீகத்தில் இருப்பவர்களின் இன்றைய நிலை என்ன? "அனைவரும் அர்ச்சகர் ஆகலாம்" என்பதில் நம் நிலைப்பாடு என்னவாக இருக்க வேண்டும்.
About us  கண்ணாடியின் முன்னே, தமிழ் கல்வி (white space for next generation) நான் ஆரியனா? (ஒரு சாமானியன் பதில்) (பதில் என்ன?), நம் தேவைகள் மற்றும் கனவுகள் ஆகலாம் வாங்க (Business Networ...) etc...
We say "No" to Donations, "No" to membership "No" to politics, "No" to hatred against any one.
Email: contact@BrahminsForSociety.com Fb:Brahmins Tamilnadu.
(We are in the draft version;
Looking for change agents like you to complete (y) Our mission.)
- மேலே கண்ட ஒரு பக்க விளம்பரம் 'துக்ளக்' 11.1.2017 இதழில் வெளி வந்துள்ளது!
contact@BrahminsForSociety.com Fb:Brahmins Tamilnadu â¡ø e-mail - - மின்னஞ்சலிலிருந்து இந்த விளம்பரம்.
ஸ்ரீமான்களான பூதேவர்களே, உங்களின் இந்த அழுகை பொய் அழுகையா? அல்லது நிஜப்புலம்பலா?
இடஒதுக்கீட்டில் உங்களது மக்கள் தொகையான 3 சதவிகிதத்திற்கு மேல், 3 அல்லது 4,5 மடங்கினை இன்னமும் எல்லாத் துறைகளிலும் அனுபவித்துக் கொண்டே இப்படி ஒப்பாரியை வைத்து உங்களவா எல்லோரையும் கூட்டிடும் முயற்சியா?
குழந்தை பெற்றுக் கொள்ளவோ, கல்யாணம் செய்து கொள்ளவோ எந்த திராவிடன் - தமிழன் - பார்ப்பனரல்லாதான் உங்களைத் தடுத்தான்? தடுக்கிறான் இல்லையே!
குருவிக் கூட்டமாகவா உள்ளீர்கள்? நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்;  பருந்துக் கூட்டமாய், வல்லாதிக்க வல்லூறுக் கூட்டமாகவல்லவா இன்றும் எங்களை அடிமைப்படுத்துகிறீர்களே, அதற்கு என்ன பதில்?
ஒரு காலத்தில் பார்ப்பனர்கள் தவிர மற்றவர்கள் படிக்கவே கூடாது என்கிற மனு வேத தர்மத்தை எத்தனை ஆயிரம் ஆண்டு காலமாக சூத்திர, பஞ்சம சமுதாயத்தின்மீது சுமத்தி அவர்களை ஏர் கட்டி ஓட்டினீர்கள்?
'தெய்வாதீனம் ஜகத் சர்வம்
மந்த்திராதீனம் துதெய்வதம்
தன்மந்த்திரம் பிராமணாதீனம்
தஸ்மத், பிரபுஜெயத்'.
'இந்த உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது.
கடவுள் மந்திரத்திற்குக் கட்டுப்பட்டது.
மந்திரம் பிராமணனுக்குக் கட்டுப்பட்டது.
எனவே, பிராமணனை வணங்குவதே முதன்மை.'
- இப்படியெல்லாம் எழுதி வைத்து, மற்றவர்களை நம்ப வைத்து, இன்று வரை அவர்களது புத்தியை நீங்கள் சுவாதீனப்படுத்தி, பெரும்பான்மையான முட்டாள்தனத்தை, வெகு சிறுபான்மையான நீங்கள் ஆளுவது எந்த அளவு சரி - நியாயம்?
மற்றவர் நோய் வாய்ப்பட்டாலும் உங்களுக்கு வருமானம்; மரணமடைந்தாலும் தொடர் வசூலுக்குப் பஞ்சமில்லை - அதுவும் "முதல் போடா பக்தி வியாபாரம்", கன ஜோராக நடப்பதை ஏனோ வசதியாக மறந்தீர் அல்லது மறைத்தீர்? விதைக்காது விளையும் கழனி என்று அறிஞர் அண்ணா உங்களைப்பற்றி அழகாகச் சொல்லியுள்ளாரே!
இப்போது எம்மக்களுக்கு சிறிது மாறுதல் என்ற வுடன் இப்படி ஒரு பொய் அழுகையா? புலம்பலா? வெறுப்பின் நிழல் அல்ல; நெருப்பின் சூடு எங்கள் சமுதாய உழைக்கும் மக்கள் மீது எவ்வளவு காட்டமாக இருந்தது என்பதற்கு இதிகாச கால ஏகலைவனும், சம்பூகனும், பிற்கால நந்தன்களும் சாட்சியங்கள் அல்லவா? வெறுப்பின் நிழலில் இவாள் நிற்கிறார்களா? பொறுப்பின்மையால் புலம்புகின்றனர்! எங்கள் தாய் மார்களை "தேவடியாள்களாக" மானமிழக்கச் செய்து, எங்களை தாசி மக்கள் - வேசி மக்களாக இன்னமும் எழுதியுள்ள நீங்கள் வெறுப்பைப் பற்றி வேதாந்தப் பாடம் எடுப்பது என்னேகொடுமை! என்னே தலைகீழ் நிலைமை!!
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை பற்றியும் உங்கள் விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ளீர்களே - எங்களை சூத்திரன் பஞ்சமன் என்று சொல்லி, நாங்கள் நுழைந்தால் சாமி தீட்டுப்பட்டு விடும், செத்து விடும் என்கிறீர்களே, நீங்களா திருந்தி விட்டீர்கள் - மாற்றம் பெற்றுள்ளீர்கள்!
புத்தரை விழுங்கிய உங்களால் பெரியாரை விழுங்கிட முடியாமல் திணறித் திக்கு முக்காடி தெருவில் வந்து புலம்புகிறீர்கள் என்று தானே பொருள் கொள்ளப்படும்?
புத்தரை விரட்டினீர்! காந்தியைக் கொன்றீர்கள்!! பெரியார் தாக்கத்திடமும், தர்க்கத்திடமும் உங்கள் கதை எடுபடவில்லை.
காரணம் பெரியார் வெறும் தத்துவம் மட்டுமல்ல;
நடைமுறை - வாழ்க்கை நெறி! வீண் பழிக்கஞ்சாப் பாதை ஈரோட்டுப் பாதை; வரலாறு உண்மைகளைக் கூறும்போது அது கசப்பாக இருக்கும் - பிறகு உலகத் திற்கே வெளிச்சம் தரும்!
தொடருங்கள் உங்கள் மாய்மாலத்தை; நாங்கள் தொடர்ந்து கொடுக்கிறோம் - சொடுக்கிறோம்.

கி.வீரமணி
பெரியாரின் தொண்டர்களின் தொண்டன்

சென்னை
8-1-2017


.
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Thursday, January 5, 2017

பொறியியல் கல்லூரிக்கும் நுழைவுத் தேர்வா?

வரும் கல்வியாண்டு (2017-2018) முதல் இந்தியா முழுவதும் தேசிய தொழில் நுட்ப நிறுவனத்திற்கு உள்ளதைப் போல அனைத்துப் பொறியியல் கல்விகளுக்கும் ஒரேமாதிரியான பொதுநுழைவுத்தேர்வை நடத்தும் முடிவை மனித வளத் துறையால் மத்திய அமைச்சரவையின் பார்வைக்கு அனுப் பப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கல்விக் கொள்கையில் மத்திய அரசின் தலையீட்டால் கல்வி காவி மயமாகிக் கொண்டிருக்கிறது. அதே வேளையில் மருத்துவ கவுன்சிலின் விதிகளை எந்த ஒரு முன்னறிவிப்புமின்றி மாற்றியமைத்து மருத்துவக் கல்விக்கென்று நாடு முழுவதும் பொது நுழைவுத்தேர்வை வலிந்து திணித்துவிட்டது, இதற்கு தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக எதிர்த்து வருகிறார். பாஜக ஆளும் பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிராவில் பொது நுழைவுத்தேர்விற்கு எதிர்ப்புகள் கடுமையாக கிளம்பி வருகின்றன. மகாராஷ்டிரா மாநிலம் நுழைவுத் தேர்விற்கு எதிராக நீதிமன்றத்திற்கும் சென்றுள்ளது.
டில்லி சென்று மோடியைச் சந்தித்துத் திரும்பிய தமிழக முதல்வர் வலியுறுத்திய கோரிக்கைகளில் முக்கியமானது தமிழகத்திற்கு பொது நுழைவுத்தேர்விலிருந்து விலக்கு அளிக்கவேண்டும் என்பதே! ‘
நீட்’ விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் பொதுமக்களிடமிருந்து கல்வியாளர்களிடமிருந்து, கடுமையாக எதிர்ப்பு கிளம்பிக்கொண்டு இருக்கும்போது மனித வளத்துறை அமைச்சரகம் மீண்டும் ஒரு புயலைக் கிளப்பியுள்ளது.
தலைநகர் டில்லியில் மனிதவளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவேடகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது, ‘‘மருத்துவ கல்விக்காக நீட் எனப்படும் மருத்துவ பொது நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதே போன்று, பொறியியல் கல்விக்கும் பொது நுழைவுத்தேர்வு முறையை அமல்படுத்துவது குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதற்கான ஒரு ஆலோசனையை நாங்கள் நடத்தி முடித்துள்ளோம். பல்வேறு மட்டத்தில் இருந்து கருத்துகளை நாங்கள் கேட்டறிந்தோம். இதனை அடுத்து வரும் கல்வியாண்டு 2017-2018 முதல் இந்த முடிவை நடைமுறைக்குக் கொண்டுவர மத்திய அமைச்சரவைக் குழுவின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளோம்‘’ என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து பத்திரிகையாளர்களிடம் கருத்து தெரிவித்த பிரகாஷ் ஜவடேகர், “மோடி தலைமையினாலான அரசு எந்த ஒரு துறையிலும் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவர முயன்றுகொண்டிருக்கிறது, இதனடிப்படையில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நடக்கும் பேரங்களை ஒழிக்கும் வகையில் மத்திய அரசே பொதுவான நுழைவுத்தேர்வை நடத்தி முடிக்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் பொறி யியல் கல்லூரிகளில் நடக்கும் ஊழல்கள் குறையும். வெளிப் படையான மாணவர் சேர்க்கை மற்றும் தரமான மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் சேரும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது’’ என்று கூறினார்.
நுழைவுத் தேர்வு என்பதே தத்துவ அடிப்படையில் ஊழ லான ஒன்று; அது ஊழலை ஒழிக்கப்போவதாகக் கூறுவது கடைந்தெடுத்த நகைச்சுவைதான்.
இந்தியாவில் அரசு அனுமதிபெற்ற 3,300 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவை அனைத்தும், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்துடன்இணைக்கப்பட்டுள்ளன.இந்த கல்லூரிகளில் ஆண்டுக்கு 16 லட்சம் மாணவர்கள் பயின்று வருகின்றனர். தற்போதைய விதிகளின்படி மாநில அரசுக்கென்று இட ஒதுக்கீட்டின் மூலமும், சில மாநிலங்களில் நுழைவுத்தேர்வு மூலமும், சில மாநிலங்களில் பொது வரையறை மூலமும் மாணவர் சேர்க்கை நடந்துவருகிறது.
மத்திய அரசு கல்வித்துறை நடத்தும் பொறியியல் கல்வி நுழைவுத் தேர்வில் (யிணிணி) பல்வேறு மாநிலங்களில் இருந்து 12 லட்சம் மாணவர்கள் நுழைவுத் தேர்வில் பங்கேற்று வருகின்றனர்.  இந்த நுழைவுத்தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மத்திய அரசு நடத்தும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர்ந்து பயில்கின்றனர்.
இந்த நுழைவுத் தேர்வுகளில் சில நூறு மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெறுகின்றனர்.  இந்தப் பொது நுழைவுத் தேர்விற்காக தயார் செய்கிறோம் என்ற பெயரில் பல் வேறுநகரங்களில்சிலதனிநபர்கள்லட்சக்கணக்கில்பணம் பெற்றுக்கொண்டு நுழைவுத் தேர்வு பயிற்சி நடத்தி வரு கின்றனர். இன்றுவரை மத்திய அரசு நடத்தும் பொது பொறி யியல் கல்வி நுழைவுத்தேர்வு என்பது ஏழைகள் மற்றும் நடுத்தர குடும்பத்தின் மாணவர்களுக்கு எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது.
மத்திய அரசின் இந்த முடிவுப்படி இனி வரும் காலங்களில் செல்வந்தர்களின் பிள்ளைகள் மட்டுமே பொறியியல் கல் லூரியில் பயிலும் நிலை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.  மோடி கடந்த ஆண்டு ஜூன் மாதம் ‘மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சியில் பேசும்போது ‘‘இளையவர்கள் தங்களுக்கு தெரிந்த தொழிலைக் கற்றுக்கொண்டு அதிலேயே அவர்கள் ஈடுபடவேண்டும். அவர்களுக்கு தொடர்பில்லாதவற்றை கற்கப் போய் அதனால் ஏற்படும் கால விரயங்களால் பல இளைஞர்களின் எதிர்காலம் வீணாகிப் போகிறது’’ என்று கூறினார். இது ஒரு வகையான பழைய குலக் கல்வித் திட்டம்தானே! மேலும் மறைமுகமாக ஏழைகள் மற்றும் நடுத்தர குடும்பத்து இளைஞர்கள் யாரும் உயர்கல்வி பயில்வது அவசியமற்றது என்று கூறினார். அதையே மனிதவளத்துறை பொது நுழைவுத்தேர்வு என்ற பெயரில் தற்போது நடைமுறைப்படுத்தத் துடிக்கிறது.
பி.ஜே.பி. என்பது உயர்ஜாதி - பார்ப்பன ஆதிக்கத் தன் மையைக் கொண்டது என்பதால் - இட ஒதுக்கீடு கொள்கைக்கு எதிரானது என்பது வெளிப்படை.. நேரடியாக எதிர்க்க முடியாதபோது அவர்களுக்கே உரித்தான சூழ்ச்சி நுழைவுத் தேர்வு என்ற கண்ணிவெடியாக வருகிறது - எச்சரிக்கை!

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...