Thursday, February 28, 2013

பெண் எனும் ஓர் ஆற்றல் அச்சமூட்டும் ஒரு செய்தி


- முனைவர் பேரா. ந.க. மங்களமுருகேசன்
தமிழகத்தையும், இந்தியாவையும் மட்டுமல்லாது சீனா, நேபாளம், இலங்கை உள்ளிட்ட பெரும்பாலான தெற்காசிய நாடுகளையும் அச்ச மூட்டும் ஒரு விஷயம் இது பாலியல் வன்கொடுமை என்று இப்போது அதிகம் பேசப்படும் விஷயமா? இல்லை அதைவிட மிக மிக முக்கியமான அடிப்படை விஷயம் இது. அது -_- இது. விகிதாச்சார வேறுபாடு
பெண் குழந்தைகளின் பிறப்பு வீதத்தில் படிப்படியாக ஏற்பட்டுக் கொண்டிருக்கும் வீழ்ச்சி குறித்த தகவல்கள் இவை. ஆண் குழந்தை களுக்குச் சமமான பெண் குழந்தை களின் இந்த விகிதாச்சார வேறுபாடு உலகின் பெண் குழந்தைகள் அதாவது பெண்கள் அரிதாகும் ஒரு சூழலை ஏற்படுத்திவிடக் கூடிய ஆபத்துதான் அது.
பெரியாரும், திரு.வி.க.வும்
பெண்ணிய சிந்தனாவாதிகளான தந்தை பெரியாரும், தமிழ்த் தென்றல் திரு.வி.க.வும் போற்றி வளர்த்த பெண்மைக்கு மட்டுமல்ல, பெண்ணி யத்துக்கு மட்டுமல்ல, பெண் குழந்தை களின் எண்ணிக்கைக்கே ஏற்படும் குறைவுச் சிக்கல் இது. பெண்களின் முன்னேற்றத்திற்கான தலையாய விஷயங்கள், பெண்களின் இடஒதுக் கீடு, பெண்களின் நலனுக்கான சட்டப் பாதுகாப்புகள், ஆண்களுக்கு இணையான வாய்ப்பு ஆகியன குறித்தெல்லாம் பேசப்பட்டாலும் கூடப் பெண் குழந்தை களின் பிறப்பு பெரிய சோதனைக்கு, வேத னைக்கு ஆளாகிவிடும் உண்மை இது.
ஒன்றே போதும்
நாமிருவர் நமக் கிருவர் என்பதெல்லாம் போய், நாமிருவர் நமக்கொருவர் என்று ஆனபின், குடும்பம் ஒன்றுக்குக் குழந்தை ஒன்று எனும் குழந்தைகளின் எண்ணிக்கை விகிதாச்சார அடிப்படையினை அடைந்தபோது பெண் குழந்தையின் எண்ணிக்கை மிகவும் சரிந்தது. ஒரே ஒரு குழந்தை மட்டுமே போதும் எனும் எண்ணம் கொண்ட பெற்றோர், அந்த ஒன்றும் ஆண் குழந்தையாக இருக்கையில் அத்தோடு போதும் பிள்ளைகள் என்று நிறுத்தி விடுகின்றனர். இது பிறப்பு விகிதக் கணக்கீட்டில் பலத்த வேறுபாட்டை ஏற்படுத்தி விட்டது. இன்னும் பிறக்கும் முதல் மகவு ஆண் மகவு வேண்டும் என எண்ணும் பெற்றோரே பெரும்பான்மை.
முதல் குழந்தை ஆணாக இருந்தால் அடுத்த குழந்தை பெற்றுக் கொள்ளும் ஆர்வமுடையவர்கள் தயங்காமல் அடுத்த குழந்தையைப் பெற விழைகின்றனர். அடுத்துப் பெண் பிறந்தால், ஆஸ்திக்கு ஓர் ஆண், ஆசைக்கு ஒரு பெண் எனப் பழமொழியைப் பகிர்ந்து கொண்டு நிறைவு அடைகின்றனர். முதல் குழந்தை பெண் எனில் அடுத்து ஆண்தான் பிறக்க வேண்டும் எனும் மனப்போக்குப் பெரும்பான்மை இந்தியப் பெற்றோர்களிடம் உண்டு என்று தெற்காசிய நாடுகளின் குழந்தைப் பிறப்பு விகிதாச்சாரத்தின் அடிப்படையிலான அய்.நா.வின் புள்ளி விவரங்கள் துள்ளி வரு கின்றன.
பெற்றோர்களின் இத்தகு மனப் போக்கே பெண் சிசுக்களின் பிறப்பு வீதத்தில் மாபெரும் வீழ்ச்சியை உண்டாக்கியது.
பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தைக் குறைப்பன 1. பெண் சிசுக் கொலைகள் 2. செலக்டிவ் அபார்ஷன் (கருச்சிதைவு) 3. வறுமை 4. உளவியல் மூடநம்பிக்கைகள், 5. விலைவாசி உயர்வு என ஆய்வில கண்டறிந்துள்ளனர்.
பெண் சிசுக் கொலை: பெண் சிசுக்கொலை புரியும் பேய்கள், மாபாவிகள், இரக்கமில்லா அரக்கமன நிலையாளர் இந்தியாவில் தமிழகத்தில் மட்டுமல்ல எல்லா மாநிலங்களிலும் பரவிக் கிடக்கின்றனர். நம் தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், தர்மபுரி, ஈரோடு மாவட்டங்களில் எத்தனை கருத்தம்மாக்கள் வந்தாலும், தொட்டில் குழந்தைகள் திட்டம் வந்தாலும், வலிமையான சட்டங்கள், வாதங்கள் வைத்த போதும், கடுமையான தண்டனை விதித்தபோதிலும் அங்கொன்றும் இங்கொன்றும் கமுக்கமாக நடைபெற்றுக் கொண்டுள்ளன என்பது வேதனைக்குரியதே.
பெண் சிசுக்கொலைக்கு வறுமை, ஆண் வாரிசு வேண்டும் எனும் அவா, பெண் சிசுக் கொலை என்பது கொடூரச் செயல் என்ற உணர் வின்மை, அதிக வரதட்சணை கொடுக்க வேண்டிய சமூகச் சூழல், பெண் குழந்தைகளுக்கு மரபு வழியே செய்யப்படும் செலவினம், கல்விச் செலவு என்று முதன்மைக் காரணங் களை அடுக்கினால் இதனை எவரும் ஏற்க மாட்டார்கள்.
தொட்டில் குழந்தை
2001-இல் அரசுக் கட்டில் எறிய அம்மையார் அறிவித்த தொட்டில் குழந்தைத் திட்டம் இந்தியாவில் மட்டுமல்லாது உலக நாடுகளிலும் அனேக கவனம் பெற்ற திட்டம் என்று அரசு கூறுகிற 3200--_க்கும் அதிகமான பெண் குழந்தைகளும், 520 ஆண் குழந்தைகளும் காப்பாற் றப்பட்டதோடு, 2088 பெண் குழந் தைகளும் 372 ஆண் குழந்தைகளும்,  ஆக மொத்தம் 2460 குழந்தைகள் உள் நாட்டிலும், 197 குழந்தைகள் வெளி நாட்டிலுமாகத் தத்தெடுப்புத் திட்டத்தின் கீழ் தத்தெடுக்கப் பட்டுள்ளன என்று அரசின் புள்ளி விவரம் கொட்டினாலும், பிறப்பு விகிதத்தில் பெண் குழந்தைகளின் சரிவைச் சரிக்கட்ட இத்திட்டம் உதவி யுள்ளது என்று கூறத்தான் முடியும். பெண் சிசுக்கள் கொலையைத் தடுக்கும் நல்ல செயல் என்று பாராட்டி விட்டுப் போகலாம்.
செலக்டிவ் அபார்ஷன்
ஆண் - பெண் வீதத்தில் ஏற்பட் டுள்ள கவலை தரும் சரிவு இருபது ஆண்டுகளாகத்தான் வேகமடைந்து வருகிறது. அல்ட்ராசோனோகிராபி எனும் கருவில் இருக்கும் சிசு ஆணா, பெண்ணா என ஸ்கேன் செய்து பார்க்கும் முறை நகர்ப்புற மய்ய நிலைக் குடும்பங்களிலே நன்கு அறிமுகமானதிலிருந்து இச்சரிவு அளவுக்கு மிஞ்சி வேகம் காணத் தலைப்பட்டிருக்கிறது. இந்திய அரசு கருவிலிருக்கும் சிசுவை ஸ்கேன் செய்து பார்க்கும் வழக்கத்தைத் தடை செய்துள்ளது.
இரண்டு கடுமையான சட்டங் களை Pre-Natal Diagnotic Technique gululation Act 1974, Medical Termination of Pragnation Act 1971 என்பதை நிறை வேற்றியது. ஆனாலும் நிலையில் மாற்றம் ஏற்பட்டு விடவில்லை. படித்த நடுத்தரப் பிரிவு அறிவியல் வளர்ச்சியை - அறிவியல் கண்டு பிடிப்பான தொலைக்காட்சியை, ஜாதகம், ஜோதிடம், வாஸ்து, கர்த்தரின் சுவிசேஷப் பிரசங்கம் என்று செல வழிக்கிறதோ அது போல் சுயநலனை முன்னிட்டு இயல்பு வாழ்க்கைக்கு முர ணாக, எவ்வித வெட்கமும் இல்லாமல் பயன்படுத்தத் தயங்குவதில்லை என்பதற்கு இதுஒரு கோடிப் பெண் சிசுக்கொலைகள் ஓர் எடுத்துக்காட்டு.
பாதகமான வழிமுறைதான் ஸ்கேன் வாயிலாகப் பிறக்கும் முன்பே சிசுக்கள், ஆணா, பெண்ணா எனக் கண்டறிந்து அழிக்கப்படும் முறை என அறிவியல்மீது குறை காணப்பட்டது. ஸ்கேன் வாயிலாகக் கண்டறிந்துபெண் குழந்தை எனில் செலக்டிவ் அபார்ஷன் எனும் முறையில் சிசுக்கள் கருவிலேயே கொல்லப்படுவதைத் தடுக்கவே 1994-ல் இயற்றப்பட்ட சட்டம் வந்தது. அச்சட்டப்படி அனைத்து அலட்ரா சோனோகிராபி கருவிகளும் பதிவு செய்யப்பட வேண்டும். கருவுற்றி ருக்கும் பெண்ணின் வயிற்றில் இருக்கும் சிசுவின் பாலினம் குறித் துத் தெரிவிக்கக் கூடாது. மீறுபவர் களுக்கு அபராதம் மட்டுமின்றிச் சிறைத் தண்டனையும் உண்டு.
ஆனால் மக்கள் இதைப் பொருட் படுத்தாமல் பணம் வாயிலாக நினைத்ததைச் சாதித்துக் கொள்வ தாகக் கூறப்படுகிறது.
உண்மைதான்
கீழ்க்கண்ட தகவல் அது உண்மை தான் என்று காட்டும் அரியானாவில் பணக்காரக் குடும்பங்களில் 1000 ஆண் குழந்தைகளுக்கு நிகரான பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 541. ஆனால் ஏழைக் குடும்பங்களில் 1000 ஆண் குழந்தைகளுக்கு 1567 எனும் அளவில் பெண் குழந்தைகள் உள்ளனர். இந்தியாவில் 1000 ஆண் குழந்தைகளுக்கு நிகர் பெண் குழந்தைகளின் வீதம் 957.
வறுமை
அய்.நா.வின் பன்னாட்டு ஆய்வறிக்கையின் அடிப்படையில், பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைவாக இருக்கவும், ஆணுக்கு நிகரான எண்ணிக்கையில் இருந்து பெரிதும் வேறுபடவும் வறுமையும் காரணம் என மக்கள் நலம், பெண்கள் குழந்தைகள் நலனுக்கான செய்தி ஏடுகள் கூறுகின்றன. குழந்தைகளில் ஆண் குழந்தை பெண் குழந்தை எனும் பாகுபாடு காட்டப்படும் வேறுபாட்டு நிலை, ஏழைக் குடும்பங்களில் உணவில் முன்னுரிமை ஆண் குழந்தைக்கே என்றாகிறது. இது பெண் குழந்தை கள் பலவீனமடைந்து டைபாய்டு, மஞ்சள் காமாலை, மூளைக் காய்ச்சல் பரவும் போது சரி விகித உணவோ, மருத்துவ உதவியோ கிட்டாமல் வாழ்வு மறுக்கப்பட்டவை ஆகின்றன.
உளவியல் அடிப்படையான விளிம்பு நிலை, மத்திய தர, மேல் மத்திய தரக் குடும்பங்களிலும் பெண் குழந்தையைக் காட்டிலும் ஆண் குழந்தைக்கான வரவேற்பு என்றுமே அதிகமாகத் தானிருக்கிறது. ஏனென் றால் பெண்ணை மணம் செய்து கொள்ள மணமகள் வீட்டில் இன்னும் பேராசையோடு எதிர்பார்க் கப்படும் நாகரிகப் பிச்சை எனும் உணர்வு இல்லாமல் எதிர்பார்க்கும், வரதட்சணை, தலைத் தீபாவளி, தலை ஆடி, தலைப்பொங்கல் சீர் வரிசை கள், தலைப்பிரசவம், காதணி விழா தாய்மாமன் சீர் ஆகியன பொரு ளாதார நிர்ப்பந்தங்கள் எந்தக் கட்டத்திலும் பெண் வீட்டாருக்கு முடிவடைவதில்லை.
சுயமரியாதைத் திருமணங்கள், காதல் திருமணங்கள் மேற்கொள்ளும் குடும்பங்களில் சமூகப் பழிக்கு அஞ்சியோ, அல்லது தந்தை பெரியார் காட்டிய, திராவிட இயக்கம் காட் டிய வழிமுறைகள், வலியுறுத்தலின் பயனாலோ இதுமுற்றிலும் மறை யாவிடினும் மறைந்து விடுவது ஓர் ஆறுதல் பெண்ணைப் பாதுகாத்து வளர்த்து, படிப்பு அளித்து, உரிய வயதில் புகுந்த வீட்டிற்கு அனுப்பி வைப்பதோடு திருமணத்திற்குப் பின்னரும் அதன் வாழ்வு கவலை படர்ந்ததாக இல்லாமல் நிம்மதியாய், நிறைவுடன் இருக்க வேண்டுமே எனும் கவலை எப்போதும் பெண்ணைப் பெற்றவர்களைப் பிடித்து ஆட்டிக் கொண்டே, அரித்துக் கொண்டே இருக்கும்.
செலக்டிவ் அபார்ஷன் ஏன்? மூடநம்பிக்கை ஊட்டும் ஊடகங்கள்
தினசரிகளில் காணும் வரதட் சணைக் கொலைகள், தொலைக் காட்சிகள் பளிச்சிடும் நிஜம், சொல்வதெல்லாம் உண்மை  ஆகியன பார்த்து எவ்வளவு உயர் பதவியில் இருந்தாலும் பெண் என்பதாலேயே கீழாக மதிக்கப்பட்டு, அடக்கி வைக்கப்பட்டு இழிவுபடுத் தப்படும் பெண்களைப் பற்றிய செய்திகள், கணவன் மனைவி கருத்து வேறுபாடுகளை, பிரிந்து வாழும் பெற்றோரால் பேதலித்து விடப்பட்டு நிற்கும் குழந்தைகள் ஆகிய செய்திகளை வெளிச்சப்படுத்தும் மட்டமான ரசனைக்குத் தீனி போடும் சில மட்டமான ஊட கங்கள் ஆகியன, படிப்பறிவு குறை வான பெண்டிரையே மட்டுமல்லாது, ஆட வரிடையேயும் உள வியல் அடிப்படை யில் பெண் குழந்தை யென்றாலே பெற்ற வயிற்றில் பெரு நெருப்பைக் கட்டிக் கொண்ட நிலை எனும் மூடத் தனத்தை வளர்க் கிறது. இதன் விளைவுதான் தென் மாவட்டங்களில் கருக்கலைப்பு முயற்சிகள்.
விளிம்பு நிலை மக்கள் இடையே, முதலாவதாக, தான் பட்ட துன்பம், அனு பவித்த அல்லல்கள் அத்தனையும் தன்செல்லமகள் அனுபவிக்கக்கூடாது எனும் விரக்தியே பெரும்பாலான சிசுக் கொலைகளுக்குக் காரணமா கின்றன.
ஆண் பிள்ளைகளை வரிசையாகப் பெறுவது மட்டும் தான் காரண மில்லை இறைவன் கொடுத்தது என்று பெற்றுத் தள்ளுபவர்கள், பெண் குழந்தை எனில் மட்டும் அதுவும் இறைவன் கொடுத்தது என்று எண்ண வேண்டியதுதானே. இது மட்டும் என்ன கடவுள் நம் பிக்கையோ, செலக்டிவ் அபார்ஷ னுக்கு இரண்டாவதாக முதன்மைக் காரணங்களாக இருப்பவை, தாம் பெற்ற குழந்தையை வளர்க்கும் பொறுப்பில் இன்றைய மாடர்ன் ஏஜ் பெற்றோர்களுக்கு இருக்கும் நடைமுறைச் சிக்கல்களையும் கூற வேண்டும்.
கணவன், - மனைவி இருவரும் மிக இளம் வயதில் உயர் பதவியில் இருப்பவர்களாயின் ஆண் அல்லது பெண் என ஒரே குழந்தையோடு  குழந்தை பேற்றை முடித்துக் கொள்கின்றனர். அடுத்த முறை தாய்மையடையும் நிலைவரின் ஆண் குழந்தையா, பெண் குழந்தையா எனும் நிகழ்வின் அடிப்படையில் அது செலக்டிவ் அபார்ஷன் செய்யத் தூண்டுகிறது.
ஒன்றாயின், இரண்டாயின்
ஒரே குழந்தை எனில் அதன் தேவைகளை முழுமையாக நிறை வேற்றிக் குழந்தையின் விருப்பங்களை நிறைவடையச் செய்வது என்பது பெற்றோர்களுக்கு எளிதாக தோன்றுகிறது. இதே இரண்டு குழந்தைகள் எனில் செலவுகளும் இரண்டு மடங்காகுமே என விண்ணைத் தொடும் விலைவாசி, உயர்வினால் யோசிக்கத் தொடங்கி அதன் விளைவால் செலக்டிவ் அபார் ஷன் முறையில் இரண்டாம் குழந்தை பெண் எனில் அதைக் கருவிலேயே கொலை செய்து விடுகின்றனர்.
பெண் குழந்தைகள் பாதுகாப்பு
பெண் சிசுக் கொலை குழந்தைகள கடத்தல் உள்ளிட்டவை தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் உலகிலேயே பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடாகத் திகழ்வது ஆப்கானித்தான். 2ஆவது இடத்தில் காங்கோவும், 3ஆவது இடத்தில் பாகிஸ்தானும், நான்காவது இடத்தில் இந்தியாவும் உள்ளன. இதனைப் பெண் உரிமைக்காக சட்டபூர்வ தகவல், சட்ட ஆதரவு ஆகியவற்றின் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது.
தமிழக நிலை
தமிழக மக்கள் தொகையில் பெண் குழந்தைகளின் விகிதாச்சாரம் தமிழகத்தில் மக்கள் தொகை 7,21,38,958. இதில் ஆண்களின் எண்ணிக்கை 3,71,89,229. பெண்களின் எண்ணிக்கை 3,49,49,729.
குறைந்து வரும் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தால் 2030-இல் பெண் குழந்தைகளைவிட ஆண்கள் 20 விழுக்காடு அதிகமாக இருப்பார்கள் என லண்டனில் பன்னாட்டு மக்கள் நல, வளர்ச்சிக் கான ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதனால் சமூகத்தில் ஆண்கள் திருமணம் செய்யத் தேவையான பெண்கள் கிடைக்காமல் பற்றாக் குறை நிலவும். உரிய வயதில் திரு மணத்திற்கும் பெண் கிடைப்பது தாமதமாவதால் திருமணத் தடை ஏற்பட்டு மனச்சிதறல் அடையும். பலவீனமான வக்கிரபுத்தி ஆண் களால் சிறுமிகள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகலாம்.
வரதட்சணை வாங்கிய காலம் போய், பொருத்தமான பெண் கிடைக்காமல் மகன்களின் திரு மணம் தாமதமாகி விடும் எனும் பயத்தினால், மாப்பிள்ளை வீட் டாரே கல்யாணச் செலவுகளை, ஏற்றுக் கொண்டு பெண்ணுக்கு இத்தனை சவரன் நகை போடுகிறோம் என்று பெண் வீட்டடாரிடம் பேசி மணம் செய்து கொள்ளும் நிலை- நல்லதுதான் - என்றாலும்  மணப் பெண்கள் டிமாண்ட் என்பது வதந்தி இல்லை என்பது உண்மை யாகலாம். எழுத்தாளர் சுஜாதா ஒரு கதை ஒன்றில் எழுதியது போல் பெண்கள் உலகின் அதிசயங்களில் அரிதான விஷயங்களில் ஒன்றென வும் ஆகலாம்.
எந்த நாட்டின் வளர்ச்சிக்கும் மனித வளம் இன்றியமையாதது.
பெண் கடவுள்களை வணங்கு கிறான். சக்தி என்று போற்றுகிறான். ஆணுக்குப் பெண் இளைப்பில்லை மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் என்று பாரதி பாடலை முழுமையாக முழங்குகிறான். ஆனால் பெண் குழந்தைகளைச் சுமையாகக் கருது கிறான். இந்த நிலை மாற வேண்டும். ஆணுக்கும் பெண்தான் மிகச் சிறந்த துணையாக அமைய இயலும் ஆதலால், ஆண் குழந்தைகளுக்குச் சமமாகப் பெண் குழந்தை பிறப்பைப் போற்ற வேண்டும். எங்கள் வீட்டு மகாலட்சுமி என்று போலித்தனமாகக் கூறுவது மறைய வேண்டும்.


Wednesday, February 27, 2013

இதுதான் மதச் சார்பின்மையா? அறிவியல் மனப்பாங்கா? வெட்கக் கேடு - மானக் கேடு!


- ஊசி மிளகாய்


இந்திய அரசியல் சட்டத்தின்மீது உண்மை யான நம்பிக்கை கொண்டு அதன்படி, கடமையாற்றுவேன் என்றுதான் பிரதமர், முதல் - பஞ்சாயத்துத் தலைவர் வரை உறுதி மொழி கூறி பிறகு பதவியேற்கிறார்கள்!
ஆனால் நம்முடைய நாட்டில் மதச் சார்பின்மை எப்படி கேலிக் கூத்தாக்கப்படு கிறது என்ற செய்தி அன்றாடம் ஏடுகளில் ஏராளமாக வந்து கொண்டுள்ளது. இதைவிட வெட்கக்கேடு, உறுதிமொழி மீறல் என்ற குற்றம் வேறுண்டா?
முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குப் பிறந்த நாளை அவருடைய கட்சிக்காரர்கள் கொண் டாடுவது அவர்களுடைய உரிமை.
அதற்காக தமிழக அரசின் வீட்டுவசதி வாரிய அலுவலகத்தையே யாக சாலையாக மாற்றியா கொண்டாடி, மதச் சார்பின்மை - Secular State - என்பதை கொச்சைப்படுத் துவது?
இதுபற்றி பேச, எழுத, கண்டிக்க, ஜன நாயக வாதிகள் - இடதுசாரிகள் என்ற முற் போக்கு அக்மார்க் முத்திரையாளர்கள் முன்வர வேண்டாமா?
ஒரு நாளேடு - அதுவும் அம்மாவின் ஆட்சிக்கு முழு ஆதரவு தரும் அக்கிரகார பூணூல் நாளேடு இன்று காலை வெளி யிட்டுள்ள செய்தி இதோ:
யாக சாலையாக மாறிய வீட்டுவசதி வாரிய அலுவலகம்
சென்னை நந்தனத்தில் உள்ள, வீட்டு வசதி வாரிய தலைமை அலுவலக வர வேற்பறை, நேற்று திடீரென, யாக சாலை யாக மாறியதால், ஊழியர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின், தலைமை அலுவலகம் நந்த னத்தில் உள்ளது.
வாரியத்தின் தலைவர், நிர்வாக இயக்குநர், செயலர் ஆகி யோரின் அலுவலகங்கள் இங்கு செயல்படு கின்றன. இந்நிலையில், நேற்று காலை, வாரிய பணியாளர்களும், அதிகாரிகளும் வழக்கம் போல், வாரிய அலுவலகத்துக்கு வந்தனர். ஆனால், வாரிய அலுவலக கட்டடத்தின் தரைத் தளத்தில், வரவேற்பறை அமைந்துள்ள பகுதியில், புரோகிதர்கள் புடைசூழ, அக்னி வளர்க்கப்பட்டு, யாகம் நடந்து கொண்டிருந்தது.
வாழை, மாவிலை தோரணம் என்று, வழக்கமான அரசு அலுவலகத்துக்கான நிலையில் இருந்து, முற்றிலும் மாறுபட்டு, ஒரு யாக சாலையாகவே மாறியிருந்தது. இதைப் பார்த்த ஊழியர்கள், நம் அலுவலகத்துக்கு தான் வந்திருக்கிறோமா அல்லது ஏதாவது யாக சாலைக்குள் சென்று விட்டோமா என்று குழப்பத்தில் ஆழ்ந்தனர்.
காரணம் என்ன? இதுகுறித்து விசாரித்த போது, அண்ணா தொழிற்சங்கம் சார்பில், முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு, இந்த யாகம், பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப் பட்டதாக, வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு, விளையாட்டுப் போட்டிகள், மருத்துவ முகாம்கள், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் என, ஏராளமான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், வீட்டுவசதி வாரிய தொழிற் சங்கத்தினர், வாரிய தலைமை அலுவலகத்தை, யாக சாலையாக மாற்றி யிருப்பது குறிப் பிடத்தக்கது. - (தினமலர் பக்கம் 12)
யாகசாலை நடத்தலாமா? வீட்டு வசதி வாரியம் கட்சி அலுவலகமாக மாற்றப்பட லாமா? யாகக் குண்டம் அங்கேதான் நடத்த வேண்டுமா? எளிமையாகக் கொண்டாடுதல் என்பது இதுதானா?
மதச்சார்பின்மைபற்றி எழுத்தில், பேச்சில் பீற்றிக் கொள்ளும் முற்போக்காளர்கள் எல்லாம் இதைக் கண்டும் காணாததுபோல் முக்காடு போட்டுக் கொண்டு சீட்டுப் பிச்சைக் காக திருவோடு ஏந்தி நிற்கலாமா?
இது ஒருபுறம், இன்னொருபுறம்  செயற் கைக்கோள்களுடன் சிறீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி விஞ்ஞானிகள் மிகச் சிறப்பாகத் தயாரித்த பி.எஸ்.எல்.வி.20 ராக்கெட் வெற்றி கரமாக பறந்தது என்பது நமக்கெல்லாம் மகிழ்ச்சியே! விரைவில் செவ்வாய்க் கிரகத் தினை நோக்கி நம் செயற்கைக் கோள் செலுத் தப்படும் என்று பெருமிதத்துடன் நமது குடிய ரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்!
ஆனால் அந்த இஸ்ரோ நிறுவனத்தின் தலைவராக உள்ள ராதாகிருஷ்ணன் நாயர், இதை விண்வெளிக்கு அனுப்புமுன், திருப்பதி சென்று வெங்கடாஜலபதியிடம் வைத்து (Miniature
-  சிறிய மாடல்) அர்ச்சனை செய்து பிறகே திரும்பி, இந்த ராக்கெட்டைச் செலுத் தியுள்ளார். இவ்வளவு விஞ்ஞானிகளின் மூளையை - ஆராய்ச்சியை - அறிவை - வெறும் சூன்யப்பிரதேசமாக ஆக்கிக் காட்டியிருக் கிறார்! விஞ்ஞானிகளே இப்படி மூடநம்பிக்கை பரப்பும் முகவர்களாக இருக்கலாமா? நல்ல வேளை கோவிந்தா கோவிந்தா கோஷம் கொடுக்கச் செய்யவில்லை!
அவருக்குப் பக்தி இருந்தால், அது அவரது சொந்த விஷயம்; வீட்டுக்குள் பூஜை புனஸ்காரம் என்று புரண்டு புரண்டு எழட்டும் நமக்குக் கவலை இல்லை; இப்படி பொதுவான ஒரு அறிவியல் சாதனையை - விஞ்ஞான வளர்ச் சிக்கு விரோதமாகச் செய்து காட்டுவது எவ் வகையில் நியாயம்? மதச் சார்பின்மைக் கொள்கைக்கு விரோதமல்லவா?
நாளைக்கு கிறிஸ்துவர் அதிகாரி வந்தால்  சர்ச்சுக்குப் போவார் - இஸ்லாமி யர் மசூதிக்குப் போவார் என்றால் அதை விடக் கேலிக் கூத்து வேறுண்டா?
அரசியல் சட்டத்தின் 51A(h) பிரிவின் கீழ் உள்ள, குடிமகனின் அடிப்படைக் கடமை அறிவியல் மனப்பான்மை வளர்ப்பது என்ப தற்கு நேர்மாறானதல்லவா - ராதாகிருஷ் ணன்களின்  பக்திப் பரவசம்?
இவர் முன்பும் இதேபோல ஏழுமலையான் தரிசனம் செய்துவிட்ட ராக்கெட் ஏன் பாதி துரத் திலேயே வீழ்ந்தது? வெட்கமாக இல்லையா? வெளிநாட்டவர்கள் இதனைப் பார்த்து மகிழ்வார்களா? காரித் துப்ப மாட்டார்களா? பூசாரிகளாக இருந்து செய்வது, இஸ்ரோ தலைவரே செய்வது வெட்கக் கேடு மட்டுமல்ல, இந்தியாவுக்கே மானக்கேடும் ஆகும்!

Monday, February 25, 2013

எல்லைதாண்டி இழிவைத் தேடும் இளையராஜா!! - (2)


தெரியாததைப் பேசலாமா?
விஞ்ஞானம்பற்றிக் கருத்துக்கூறி அறியாமையைக் காட்டிக் கொண்ட இளையராஜா, 05.12.2012 தேதியிட்ட குமுதம் இதழில் மருத்துவம் பற்றிக் கருத்துக்கூறி தன் மேதா விலாசத்தைக் காட்டிக் கொண்டுள்ளார்.
எல்லாத் துறைகளிலும் முன்னேற்றம் இருப்பதைப் போல், மருத்துவத்திலும் ஏற்பட்டுள்ள வளர்ச்சியில் _ நீங்கள் _ பயன் அடைந்திருக்கிறீர்களா?
என்று வியாசர்பாடி எம். மோகன் வினா எழுப்ப, நம் அதிமேதாவி இளையராஜா அவர்கள் வழக்கம்போல் தத்துப்பித்தென்று பேத்து வைத்துள்ளார்.

இளையராஜா பதில்: பயன் இருக்கலாம் என்றாலும், மருத்துவ வளர்ச்சி இல்லாத காலத்தில் ஆரோக்கியமாக வாழ்ந்துவிட்டு, (மருத்துவ) வசதி வந்த நேரத்தில், நோயாளியாக வாழ்வதைப் பார்த்து என்ன சொல்வது? இதுதான் பயனா?
நம் உடம்பில் ஓடும் இரத்தம் முழுவதும் மூன்று மாதத்திற்கு ஒருமுறை புதிய இரத்தமாக மாறிவிடுகிறது. அது இயற்கையின் நியதி. 12 மாதங்களில் நான்கு முறை இந்த மாற்றம் வரும். காரணம், இயற்கையில் 4 பருவங்கள் மாறுவது நம் உடம்பும் இயற்கையோடு ஒட்டி, இந்த மாற்றத்தை தானாகவே ஏற்படுத்திக் கொள்கிறது! இதன்படி பார்த்தால், நம் உடம்பில் நோய் என்ற பேச்சுக்கே இடம் இருக்கக் கூடாது. ஏனெனில் பழைய இரத்தம் மாறிவிடுகிறதே? ஒவ்வொரு பருவத்திலும் இயற்கையாக என்ன உணவு விளைகிறதோ அதை நாம் உட்கொண்டால் போதும். நோய் வராது. மாறாக நாம் உரம் என்ற பெயரில் _ கெமிக்கல் _ மருந்துகளால் விளைந்த தானியங்களையும் காய்கறி பழங்களையும் உண்கிறோம். அத்தோடு நாம் எடுக்கும் எல்லா மருந்து மாத்திரைகளுக்கும் ஒரு _ பக்க விளைவு (side-Effect) இருப்பதை உணராது அதையும் போட்டுக் கொள்கிறோம்.
அதற்கே பழகிப் போன நம் ரத்த அணுக்களுடைய பக்க விளைவுகளுக்குப் பழக்கப்பட்டு நோயை நிரந்தரமாக ஆக்கிவிடுகிறது. இதுதான் முன்னேற்றமா?
நம்முடைய மாற்றம் முக்கியமா? நமக்கு வெளியில் இருக்கும் மாற்றம்தான் முக்கியமா?
என்று கேள்வி கேட்டு தன் பதிலை முடிக்கிறார்.
நம் உடலில் ஓடும் இரத்தம் முழுவதும் மூன்று மாதத்திற்கு ஒருமுறை புதிய இரத்தமாக மாறிவிடுகிறது. அது இயற்கையின் நியதி என்கிறார் இளையராஜா.
எங்கோ அரைகுறையாகக் கேள்விப்பட்ட செய்தியை, மருத்துவ மாமேதையைப் போல தன்னை எண்ணிக் கொண்டு பிதற்றியுள்ளார். தனக்குத் தொடர்பில்லாத, தான் அறியாத துறைகளில் அதிமேதாவியைப் போல கருத்துக் கூறுவது இழிவையே தரும் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.
இரத்தம் என்றால் என்ன? அது எவற்றால் ஆனது? அவற்றை சுத்தம் செய்யும் உறுப்புகள் எவை? என்று எதையும் அறியாது கருத்துக் கூறியுள்ளார்.
இரத்தத்தில் 1. வெள்ளை அணுக்கள், 2. சிவப்பு அணுக்கள், 3. பிளாட்லெட்ஸ் என்ற மூன்று முதன்மை அணுக்கள் உள்ளன. அங்ககம், அனங்ககம் என்ற இருவகை பொருள்கள் உள்ளன.
புரோட்டீன், ஹார்போஹைட்ரேட், கொழுப்பு போன்ற அங்ககப் பொருட்களும் (Organic); சோடியம், பொட்டாசியம், கால்சியம், மெக்னிசியம் போன்ற அனங்ககப் (Inorganic) பொருட்களும் உள்ளன.
இரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்களில் 1. நியூட்டோபில் 2லு நாட்களுக்கு ஒருமுறையும், 2. ஈஸ்னோபில் 7 முதல் 12 நாள்களுக்கு ஒருமுறையும், 3. பாஸோபில்ஸ் 12 முதல் 15 நாள்களுக்கு ஒரு முறையும், 4. மோனோசைட்ஸ் 2 முதல் 5 நாள்களுக்கு ஒரு முறையும், 5. லிம்போசைட்ஸ் லு முதல் 1 நாளுக்கு ஒரு முறையும் (அதாவது ஒவ்வொரு நாளும்), தங்களைப் புதுப்பித்துக் கொள்கின்றன.
சிவப்பு அணுக்கள் 120 நாள்களுக்கு (நான்கு மாதங்களுக்கு) ஒரு முறையும், பிளாட்லெட்ஸ் 8 முதல் 10 நாள்களுக்கு ஒரு முறையும் தங்களைப் புதுப்பித்துக் கொள்கின்றன.
ஆக, இரத்தத்தில் உள்ள மூன்று முக்கிய பொருட்களும் ஒவ்வொரு நாளும், 2 முதல் 120 நாள்களுக்கு ஒருமுறையும் புதுப்பித்துக் கொள்கின்றன. அதாவது இது ஒவ்வொரு நாளும் நடைபெறும். இது ஒரு தொடர் நிகழ்வாக நடந்து கொண்டிருக்கையில், ஏதோ தண்ணீர் தொட்டியில் தொட்டியைக் கழுவி புதுத் தண்ணீர் விடுவது போல புது இரத்தம் மூன்று மாதத்திற்கு ஒருமுறை நிகழ்வதாக பிதற்றியுள்ளார்.
மேலும் இரத்த சுத்தம் என்பது உயிர்வளி (ஆக்ஸிஜன்) உதவியால் ஒவ்வொரு நொடியும் நடந்துகொண்டுள்ளது.
எலும்பு மஞ்சையில் உற்பத்தியாகும் இரத்த செல்கள் மற்றும் உணவிலிருந்து கிடைக்கும் சர்க்கரை, கொழுப்பு போன்ற பொருட்கள் கணையம் போன்ற உறுப்புகளால் பராமரிக்கப்படுகின்றன. கணையம் கெட்டுப் போனால், அல்லது இன்சுலின் சுரப்பு பாதிக்கப்பட்டால், இரத்தத்தில் சர்க்கரை மிகும். இப்படி பல உறுப்புகளின் பங்கு இரத்த சுத்தத்திற்கு ஒவ்வொரு நொடியும் கட்டாயம். அப்படியிருக்க, இரத்தம் 3 மாதத்திற்கு ஒரு முறை உடலில் புதிதாய் வருவதால் நோய்வர வாய்ப்பே இல்லை; இரசாயனப் பொருள் கலந்த காய்கறி, உணவுப் பண்டங்களாலேதான் நோய் வருகிறது என்கிறார்.
நோய் வருவதற்கு இரசாயனப் பொருட்களும் காரணம் என்றாலும் அவையே அனைத்து நோய்களுக்கும் காரணம் அல்ல. இரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லிகள் வருவதற்கு முன்னும் எல்லா நோய்களும் இருந்தன. எனவே, இரசாயனம் மட்டும் காரணம் அல்ல. இரசாயனங்கள் தவிர்க்கப்பட்டு இயற்கை உரங்கள் பயன்படுத்த வேண்டும் என்பதும், மரபணு மாற்று உணவுப் பண்டங்கள் உடலுக்குக் கேடு என்பதிலும் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை. அதற்காக அவையே காரணம், மருத்துவத் துறையே தேவையில்லை என்பது அறியாமையின் விளைவு அல்லவா?
இயற்கையாய் விளையும் உணவுகளையே உட்கொண்டால் நோய் வராது என்பதும் தவறான கருத்து. செயற்கை உணவால் வரும் நோயின் அளவு குறையும் என்பதே உண்மை.
இரத்தத்தில் உள்ள பொருள்கள் ஒவ்வொரு நாளும் அல்லது வாரம் ஒருமுறை அல்லது 4 மாதத்திற்கு ஒருமுறை புதுப்பித்துக் கொள்வதால், நோய் வராமல் இருக்காது. நோய் வருவதற்கான காரணங்கள் வேறு.
நாம் சரியாக இருந்தாலும் கொசுவாலும், புகையாலும், கழிவுகளாலும், தொற்றாலும் நோய் வருவதை எப்படித் தடுக்க இயலும்? இயற்கையிலே இதயத்தில் ஓட்டை போன்ற நோய்கள் வருவதை என்ன செய்ய இயலும்?
பக்க விளைவுகள் மாத்திரைகளால் வருவதால் மருந்தும், மருத்துவமும் வேண்டாம் என்பது அறியாமையல்லவா?
மின்சாரம் தாக்குகிறது. அதற்காக மின்சாரத்தைப் பயன்படுத்தாமல் இருக்க முடியுமா? நோய் குணமாக வேண்டுமா? உயிர் காக்கப்பட வேண்டுமா? என்று வரும்போது பக்க விளைவுகளை பார்த்தால், ஆளே போய்விடுவானே!
பக்க விளைவுகளை குறைக்க முயலவேண்டும்; செயற்கை உணவுகளை தவிர்க்க வேண்டும், இயற்கை உரங்களைப் பயன்படுத்த வேண்டும், புகை, மது, போதை போன்றவற்றைத் தொடக்கூடாது, ஒழுக்கமும், கட்டுப்பாடும் அவசியம், உடற்பயிற்சியும், உடலுழைப்பு கட்டாயம் என்று கருத்துக் கூறினால் அது அர்த்தமுள்ள அறிவுரை. அதை விடுத்து மருத்துவமே வேண்டாம். மருத்துவம் வராத காலத்தில் நன்றாக இருந்தோம், மருத்துவம் வந்த பின்தான் எல்லா நோயும் வருகிறது என்பது புரியாமை; அறியாமை; அறைகுறைச் சிந்தனை.
மருத்துவமும், மருத்துவமனைகளும், மருத்துவர்களும் இல்லையென்றால் எப்படியிருக்கும்? கற்பனை செய்தால் அப்போது புரியும். புதுமையாய் பேசுகிறோம் என்ற எண்ணத்தில் பிதற்றக் கூடாது; தெரியாத துறைகளைப்பற்றி தெரிந்தவர்போல் பேசி இழிவைத் தேடக்கூடாது. இளையராஜாக்கள் இசைப்பற்றி, சாதிப்பதுபற்றி பேசினால் நன்று.
- மஞ்சை வசந்தன்

Saturday, February 23, 2013

விஸ்வரூபம் மதம் - ஊடகம் - அரசியல்


விஸ்வரூபம் விமர்சனம் எழுத வேண்டுமென்றால், படத்தை மட்டும் எழுத முடியாவண்ணம் திரையரங்குக்கு வெளியில் படத்தை விட முக்கியமான பல விசயங்கள் நடந்திருக்கின்றன. அவற்றைக் கருத்தில் கொள்ளாமல் வெறும் படம் என்ற அளவில் விஸ்வரூபத்தை நம்மால் கண்டுவிட முடியாது. இன்னும் சொல்லப்போனால், அவற்றை கடந்த மாதம் நடந்த நிகழ்வுகளோடு மட்டும் சுருக்கிவிட முடியாது. அதற்கு ஒரு நீண்ட வரலாற்றுத் தொடர்ச்சி இருக்கிறது.
(விஸ்வரூபம் தொடர்பான திரையரங்கம் - டி.டிஹெச் உள்ளிட்ட வியாபாரப் பிரச்சினைகளெல்லாம் நமக்கு முக்கியமில்லை.) இந்தப் படம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்ற எண்ணம் உருவானதால் மட்டும் தான் விஸ்வரூபம் எதிர்க்கப்பட்டதா என்றால், இல்லை என்பதே பதிலாக இருக்க முடியும்.

கடந்த 20 ஆண்டுகளாக தீவிரவாதிகள் என்றால் இஸ்லாமியர்கள் தான் என்பதைப் போன்றதொரு பிம்பத்தை தமிழ் சினிமாவும், இந்திய சினிமாவும் இன்ன பிற ஊடகங்களும் உருவாக்கியிருக்கின்றன. இதற்குப் பின் உள்ள பார்ப்பனிய இந்துத்துவ சதி, வெகு மக்கள் மத்தியில் இச்சிந்தனையை விதைத்துள்ளது.  மணிரத்னத்தின் ரோஜா, பம்பாய் உள்ளிட்ட படங்கள் தொடங்கி, விஜயகாந்த், அர்ஜூன் வகையறாக்களின் படங்களிலிருந்து ஏகப்பட்ட சில்லுண்டிகளின் படங்கள் வரை சிவந்த, உயரமான, பெரிய மூக்கு கொண்ட, ஷாருக்கான், சல்மான்கான் தவிர்த்த பிற அத்தனை கான்களின் பெயர்களிலும் பாகிஸ்தான் தீவிரவாத வில்லன்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்தியாவில் அநியாயம் செய்ய வரும் அவர்களை நமது ஹீரோக்கள் சென்று அழித்தோ, திருத்தியோ, மிரட்டியோ இந்தியாவைக் காப்பார்கள்.
இது மெல்ல மெல்ல தீவிரவாதிகள் என்றாலே முஸ்லீம்கள் தான் என்ற எண்ணத்தை விதைத்துவிட்டது.
அந்த எண்ணம் சினிமாக்களால் மட்டும் உருவானதல்ல. இந்திய உளவுத் துறையும், ஊடகங்களும், காவல்துறையினரும் சேர்ந்து உருவாக்கிய பிம்பம். பாகிஸ்தானுடனான கிரிக்கெட் போட்டிகள் என்றால் மட்டும் அதனைப் போராக உருவகப்படுத்திய தொலைக்காட்சிகளின் பணி! குண்டு வெடித்ததும், லஸ்கர் ஈ தொய்பாவுக்கும், அல்ஹொய்தாவுக்கும் தொடர்பு _ இரண்டு முஸ்லிம்கள் கைது என்று எந்த ஆதாரமும் இல்லாமலே பேட்டி கொடுத்த காவல்துறையினரின் இஸ்லாமிய வெறுப்பு சார்ந்த அலட்சியம். இவ்வளவு காரணிகளும் சேர்ந்து அத்தகையதொரு பிம்பத்தை உருவாக்கியிருக்கின்றன.
இவற்றை எதிர்க்க வேண்டிய அவசியம் சமூக அக்கறை கொண்டவர்களுக்கு இருக்கிறது. சமூகத்தின் ஒரு பிரிவு மக்களை மட்டும் குற்றப் பரம்பரையினரைப் போல, இதர பெரும்பாலானோரைப் பார்க்க வைப்பது எத்தனை குரூரமானது! இந்துத்துவத்தின் இந்தச் சதி சாதாரணமானதல்ல. குறிப்பாகத் தமிழ்ச் சமூகத்தில் சகோதரத்துவ உணர்வோடு பழகிவரும் இஸ்லாமியர்களைத் தீவிரவாதிகளாகவும், இந்தியாவிற்கு எதிரான பாகிஸ்தான் ஆதரவாளர்களாகவும், சந்தேகத்திற்குரியவர்களாகவும் பார்க்க வைக்க ஊடகங்களின் வாயிலாக மிக நுட்பமானதொரு வேலையை கடந்த 20 ஆண்டுகளில் வெளிப்படையாகவே செய்திருக்கிறது பார்ப்பனியம்.
பாபர் மசூதி இடிப்பின் பின்னான இந்துத்துவ அரசியலுக்கு ஊடகங்களின் பங்களிப்பு மிகப்பெரியது. ஆனால் அதே ஊடகங்கள் தாங்கள் இஸ்லாமியரைக் குற்றம் சாட்டிய பெரும்பாலான வழக்குகளின் பின்னணியில் இருக்கும் காவித் தீவரவாதத்தை வெளிச்சமிட்டுக் காட்டவேயில்லை. இப்படிப்பட்ட ஊடகங்களை, திரைப்படங்களை இந்திய அளவில் முற்போக்கு சக்திகள் தொடர்ந்து அம்பலப்படுத்தியே வருகின்றன. தமிழகத்தைப் பொறுத்த அளவில், திராவிடர் கழகமும், கம்யூனிஸ்ட் இயக்கங்களும், இதர முற்போக்கு இயக்கங்களும் இந்துத்துவத்தின் இந்தச் சதியை எழுத்தின் மூலமாகவும், பேச்சின் மூலமாகவும் தொடர்ந்து மக்கள் மத்தியில் வெளிப்படுத்தி வருகிறார்கள்.
இந்தப் பின்புலத்தில் தான் விஸ்வரூபம் படப் பிரச்சினையை நாம் அணுக வேண்டியிருக்கிறது; இஸ்லாமிய இயக்கங்களின் அணுகுமுறை சரியானது தானா? என்பதையே நாம் ஆராய வேண்டியிருக்கிறது. ரோஜா முதலான இஸ்லாமிய எதிர்ப்புப் படங்களுக்கு எதிராக எழுதிய பேசிய இந்த முற்போக்கு இயக்கங்கள் இப்போது எதுவும் செய்வதில்லையா? அவர்களுக்கு அக்கறை இல்லாததால் இஸ்லாமிய அமைப்புகள் நேரடியாகக் களமிறங்கியிருக்கின்றனவா? என்ற கேள்வி எழுகிறது. ஒட்டுமொத்த சமூகத்தில் அக்கறை கொண்டவர்கள் குரல் எழுப்பாவிடில் பாதிக்கப்படுபவர்கள் எழுப்பத்தானே செய்வார்கள் என்றொரு கருத்தும் எழுகிறது. ஆனால் இக்கருத்து குறித்து ஆராய்வதற்கு முன் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளிவந்த இன்னொசன்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ் படத்திற்கு எழுந்த எதிர்ப்பை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இன்னொசன்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ் குறும்படத்தை எடுத்த அமெரிக்காவைச் சேர்ந்த இருவர், அதனை யூ டியூப் இணையதளத்தில் வெளியிட்டார்கள். அப்படத்தைத் தடை செய்யவேண்டும் என்று உலக அளவில் இஸ்லாமியர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். அதன் தொடர்ச்சி சென்னையில் மிகப்பெரிய ஊர்வலமாகவும், அதனைத் தொடர்ந்து அமெரிக்கத் தூதரக வாயிலில் ஏற்பட்ட பிரச்சினையுமாக வெளிப்பட்டது. இதனை முன்னெடுத்தவை இஸ்லாமிய இயக்கங்கள்.
சொன்ன காரணம் மத உணர்வுகளைப் புண்படுத்துகிறது என்பது! இஸ்லாமியர்கள் மீதான மதவாத, அரசியல் காழ்ப்புணர்வில் அரசியல், சமூக ரீதியாக அவர்கள் பாதிக்கப்பட்டபோதும், திட்டமிட்டு ஒடுக்கப்பட்ட போதும், இஸ்லாமியர்கள் மீதான ஊடகப் போர் பற்றியும், இந்துத்துவத்திலிருந்து காக்கும் கேடயமாகக் குரல் கொடுத்த முற்போக்கு சக்திகள் இன்னொசன்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ் படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எதிர்ப்புத் தெரிவிக்கவும் முடியாது. காரணம் - மத உணர்வுகள் புண்படுகிறது என்பது பகுத்தறிவு, முற்போக்குக் கருத்துகள் எல்லாவற்றிற்கும் எதிராகச் சொல்லப்படும் சாக்கு! தலையில் ஏன் தேங்காய் உடைக்கிறீர்கள் என்றாலும், பர்தா ஏன் அணிய வேண்டும் என்று கேள்விகேட்டாலும் எங்கள் மத உணர்வு அது என்று தான் பதில் வரும். எனவே மத உணர்வுகள் புண்படுகிறது என்ற வாதம் எந்த மதத்திலிருந்து வந்தாலும் அது குறித்து பகுத்தறிவாளர்கள், முற்போக்காளர்கள் கவலை கொள்ள முடியாது. மனித உரிமைகள் தான் நமக்குக் கவலை.
எனவே, அதுவரையில் இஸ்லாமியர் மீதான கடந்த 20 ஆண்டுகள் நடந்த மறைமுக திரைப்பட யுத்தத்தின் போதெல்லாம் பெரும் குரல் எழுப்பாத இஸ்லாமிய இயக்கங்கள் (இதற்கிடையில் உன்னைப் போல் ஒருவன் படம் குறித்து நேரடியாகக் கமலையே சந்தித்து தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தார்கள்),  இன்னொசன்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ்க்கு எதிரான போராட்டத்தின் வெற்றியால், இத்தகைய போராட்டத்தைத் (துப்பாக்கிக்கான எதிர்ப்பு உள்பட) தாங்களே கையில் எடுத்துக் கொண்டார்கள் என்றே கணிக்க முடிகிறது. ரிஸானா மரணதண்டனைக்கு எதிரான மனிதநேயக் கருத்துகளைத் தெரிவித்தவர்கள் மீதும், மோசமான தாக்குதலை செய்தவர்கள் தான் இப்பிரச்சினை குறித்தும் வேகமாகத் தங்களைக் காட்டிக் கொண்டார்கள். ஒரு சிலரின் வேகம் பிற இயக்கங்களையும் இழுத்து வந்தது. படம் வெளிவரும் முன்பே, படத்தைப் பார்க்காமலேயே இது குறித்த கருத்துகளை ஊடகங்களில் தெரிவிக்கவும், காவல்துறையிடம் மனு கொடுக்கவும் தொடங்கிவிட்டார்கள். படம் பார்த்த பின்னும் அப்படியே நடந்து கொண்டார்கள்.
இதனைச் சாக்காகப் பயன்படுத்திக் கொண்ட தமிழக அரசும், அதன் தலைமையும் படத்திற்குத் தடை விதித்தது. இந்தச் சூழலில் தான் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள், நடிகர் கமல்ஹாசனும் இஸ்லாமிய சகோதரர்களும் அமர்ந்து பேசி, இப்பிரச்சினைக்கொரு சுமுகத் தீர்வு காண வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தினார். அதனைத் தொடர்ந்து தி.மு.க தலைவர் கலைஞர் உள்ளிட்ட பல்வேறு இயக்கத்தவர்களிடமிருந்தும், தடை விதித்தது தவறு என்ற கருத்து வெளிப்பட்டது. மத உணர்வுகள் என்ற அடிப்படையில் ஒரு படத்தைத் தடை செய்வது எத்தகைய பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்ததனாலேயே படத்திற்கான தடையை முற்போக்கு சக்திகள் அனைவரும் எதிர்த்தார்கள். ஆசிரியர் வீரமணி அவர்களின் கருத்து வெளிவந்த சூழலைக் கவனமாக ஆராய வேண்டும். இஸ்லாமிய இயக்கங்களின் பேரைச் சொல்லி, அவர்களால் வன்முறை உருவாகக் கூடும்; சட்டம் ஒழுங்கு கெடக் கூடும் என்று சொல்லி (இதை விட இஸ்லாமியர்களை இழிவு செய்துவிட முடியாது) தமிழக அரசு விதித்த தடை மக்களிடம் எத்தகைய உணர்வுகளை உருவாக்கியிருந்தது என்பதை வெகுமக்களோடு பழகுகிற எவரும் உணர்வார்கள். இஸ்லாமிய இயக்கங்கள் மிரட்டலுக்குப் பயந்துபோய் தமிழக அரசு ஒரு மகத்தான கலைஞனின் படத்துக்குத் தடை விதித்திருக்கிறது. மதத்தின் பேரால் கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் மோசமான நிலை இது என்று தான் ஊடகங்கள் எல்லாம் அலறின; மக்களை எண்ண வைத்தன. தமிழில் அளவுக்கதிகமாகப் பெருகிவிட்ட தொலைக்காட்சி ஊடகங்கள் ஏதேனும் சிறிய பிரச்சினை கிடைத்தாலே ஊதிப் பெரிதாக்கிவிட முனையும் வேளையில், பார்ப்பனியத்திற்குத் தோதாக முஸ்லிம்கள் கருத்துச் சுதந்திர எதிரிகள்; அரசையே மிரட்டுகிறார்கள். ஒரு மிகப்பெரிய கலைஞனையே முடக்கிவிட்டார்கள் என்ற கருத்தைப் பரப்பும் வாய்ப்புக் கிடைத்தால் சும்மா விடுவார்களா?
இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், காவித் தீவிரவாதம் குறித்து மத்திய அமைச்சர் ஷிண்டே கருத்துக் கூறி, அது தொடர்பான விவாதங்கள் ஊடகங்களிலும், மக்கள் மனங்களிலும் இடம்பிடித்துக் கொண்டிருந்த சமயம். இந்தியாவில் நடந்த குண்டு வெடிப்புகளில், அதிலும் இஸ்லாமியர்கள் மீதும், இஸ்லாமிய இயக்கங்கள் மீதும் குற்றம்சாட்டப்பட்டு, பல அப்பாவிகள் கைது செய்யப்பட்டிருந்த வழக்குகளில் இந்துத்துவத்தின் சதி ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டு வெட்ட வெளிச்சமாகியிருந்த நேரம். அது மட்டுமல்ல, ஆனா ஊனான்னா தீவிரவாதின்னா அல்ஹொய்தா, லஸ்க்கர் ஈ தொய்பா என்று முஸ்லிம்கள் தான் கிடைத்தார்களா? இந்தப் படங்களுக்கு வேறு வேலையே இல்லையா? விஜயகாந்துக்கும், அர்ஜுனுக்கும் வேறு வில்லன்களே கிடையாதா? தீவிரவாதின்னா முஸ்லீம். தேசபக்தின்னா பாகிஸ்தான் எதிர்ப்பு தானா? என்ற கிண்டல் பரவலாக மக்களிடம் பரவியிருக்கிறது அண்மைக் காலத்தில். தனது தசாவதாரம் படத்தில் கமல்ஹாசனே ஒரு வசனத்தில் இதனைக் கிண்டல் செய்திருப்பார். முஸ்லிம் தீவிரவாதிகள் என்ற சொல்லை ஊடகங்கள் பரப்புகிற தேவையற்ற பில்ட்-அப் என்ற எண்ணம் மெல்ல மெல்ல வரத் தொடங்கியிருந்ததை நம்மால் தெளிவாக உணரமுடிந்தது.
விஸ்வரூபம் படம் முஸ்லிம் தீவிரவாதம் என்று பேசுகிறதென்றால், அதனையும் மக்கள் வெகு எளிதாக இப்படித் தான் தட்டிக் கழித்திருப்பார்கள். அதிலும் நல்வாய்ப்பாக காவித் தீவரவாதம் குறித்த உண்மை வெளித் தெரியத் தொடங்கியிருந்த இந்த சமயத்தைப் பயன்படுத்தி, ஆக்கப்பூர்வமாக இந்தப் பிரச்சினையை அணுகி, நல்ல வண்ணம் பிரச்சாரம் செய்திருந்தால் இஸ்லாமிய எதிர்ப்புப் படங்களைத் தோலுரித்திருக்க முடியும். ஆனால், ஊடகங்களில் தோன்றிய இஸ்லாமிய இயக்கத்தினர் முதல், அவர்கள் சொன்னதாகக் கருத்துச் சொன்ன ஊடகங்கள் வரை, இஸ்லாமியர்களுக்கெதிரான படங்கள் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட வரலாற்றைப் பேசாமல், மத உணர்வுகள் புண்படுகின்றன, குர்ஆன் ஓதிய படி கொலை செய்வதாகக் காட்டுவதால் புனிதம் கெடுகிறது என்றெல்லாம் இதை மதம் சார்ந்த பிரச்சினையாகவே எடுத்துச் சென்றார்கள். இப்படங்களின் அரசியல் குறித்துப் பேசத் தவறிவிட்டார்கள். அதைப் பயன்படுத்தி ஒட்டுமொத்தமாக இஸ்லாமிய இயக்கங்கள் மீது வெறுப்புணர்வை ஊடகங்கள் உருவாக்கிவிட்டன. இஸ்லாமிய இயக்கங்கள் மீதான வெறுப்பு, வெகு எளிதில் சாதாரண இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பாக மாறிவிடக்கூடியது என்பதை நாம் உணர்ந்திருக்கிறோம். இந்தப் பிரச்சினையில் குளிர்காய நினைத்த இந்துத்துவ இயக்கங்கள் காமெடிப் பீசுகளாயின. தான் ஒரு மதச்சார்பற்றவன் - பெரியாரை வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டவன் என்று பறைசாற்றினார் கமல்ஹாசன். ஆனால், தமிழகத்தைத் தவிர்த்த மதச் சார்பற்ற மாநிலம், அல்லது மதச்சார்பற்ற மாநிலம் தேடப் போவதாகச் சொன்னது இதர மாநிலங்கள் மீது கமல் வைத்திருக்கும் பார்வை பற்றிய பரிதாபத்தைத் தோற்றுவித்தது. ஹாலிவுட்டில் குடியேற யோசித்துவிட்ட கமல்ஹாசன் அவர்களுக்கு இது கொஞ்சம் வசதியானதாகவும் இருந்திருக்கக் கூடும்.
இப்படித் தொடர்ச்சியான அணுகுமுறைத் தவறினால் ஒருவித இஸ்லாமிய வெறுப்பு தமிழக மக்களிடம் உருவாகிவிட்டதை சமூக அக்கறை கொண்ட நம்மால் கவலையோடு உணர முடிந்தது. அப்படிப்பட்ட சூழலில் தான் ஆசிரியரின் அறிக்கையும், அதனைத் தொடர்ந்த பிறர் முயற்சிகளும், ஒரு சில இஸ்லாமியத் தலைவர்கள் செய்த நல் முயற்சிகளும் அத்தகைய பதற்றத்தைக் குறைத்தன. இந்த இக்கட்டான சிக்கலை சமாளிக்க செய்வதறியாது திகைத்த சமயத்தில் ஆபத்பாந்தவனாக தன் சுயரூபத்தை வெளிக்காட்டிக் கொண்டது ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு.
படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை அமல்படுத்த தமிழக அரசு எடுத்த முழுமையான முயற்சிகளும், அதற்குப் பின்னான நீதிமன்ற வழக்குகளும், வாதங்களும் தமிழக அரசும் முதலமைச்சரும் இந்தப் பிரச்சினையில் இவ்வளவு அக்கறையுடன் செயல்படுவது ஏன் என்ற கேள்வியை மக்களிடம் எழுப்பியது. வழக்கு மன்றத்தில் தமிழக அரசின் சார்பில் எடுத்துவைக்கப்பட்ட வாதங்கள் தான் (குறிப்பாக, தலைமை வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணனின் வாதங்கள்) தனிப்பட்ட காழ்ப்போ, அக்கறையோ தமிழக அரசின் தலைமைக்கு இருப்பதால் தான் இப்படி நடக்கிறது என்பதையும், தடை செய்யுங்கள் என்று கோரிக்கை மனு கொடுத்த இஸ்லாமிய இயக்கங்களைப் பகடைகளாகப் பயன்படுத்திக் கொண்டு, ஊடகங்களையும், உளவுத்துறையையும் பயன்படுத்தி அவர்களைக் கொம்பு சீவிவிட்டு கேப்பில் கிடா வெட்டப் பார்க்கிறது தமிழக அரசு என்ற உண்மை அன்றே மக்களுக்குப் புரிந்தது. அடுத்தடுத்த நாட்களில் பிரச்சினை தங்களை நோக்கித் திரும்புவதை உணர்ந்த முதலமைச்சர் ஜெயலலிதாவும், உயிர்போகும் பிரச்சினைக்குக் கூட ஊடகங்களைச் சந்திப்பதைத் தவிர்த்து வந்த நிலையை மாற்றி, தன்னிலை விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியத்துக்கு ஆளானார். இதன் பின்னரே, பேச்சுவார்த்தை மூலம் அவர்களே தீர்த்துக் கொள்ளட்டும் என்று முதலில் செய்ய வேண்டியதைக் கடைசியில் செய்தது தமிழக அரசு. அந்த வகையில் தாங்கள் குதிருக்குள் இல்லை என்பதைக் காட்டிக் கொண்ட தமிழக அரசுக்கும், முதலமைச்சருக்கும், தலைமை வழக்கறிஞருக்கும், சமூகப் பதற்றத்தைத் தணித்ததற்காக நாமும், தங்கள் மீதான அவதூறைத் துடைத்ததற்காக இஸ்லாமிய இயக்கங்களும், படத்துக்கு பெரும் விளம்பரம் தேடித் தந்ததற்காக நடிகர் கமல்ஹாசனும் ஊரெங்கும் நன்றி அறிவிப்புப் போஸ்டர்களை ஒட்டலாம். (விஸ்வரூபம் ஓடாது என்று அவசர அவசரமாக போஸ்டர் அடித்து எதிர்பிம்பத்தை வாங்கிக் கட்டிக் கொண்ட இயக்கங்கள், இதைச் செய்தாலாவது உபயோகமாக இருக்கும்.)
ஆனால் இவ்வளவு களேபரமும் எதற்காக நடந்ததோ, அது நடந்தேவிட்டது. விஸ்வரூபம் படம் இந்த எதிர்ப்புகளெல்லாம் இல்லாமல் வெளியாகியிருந்தால் என்ன விளைவு வந்திருக்குமோ, அதை விட நூறு மடங்கு விளைவு இப்படப் பிரச்சினையில் ஏற்பட்ட அணுகுமுறைக் கோளாறால் இஸ்லாமியர்கள் மீது வந்துவிட்டது என்பதை நம்மால் சுட்டிக் காட்டாமல் இருக்க முடியவில்லை. அத்தனை இஸ்லாமிய இயக்கங்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதில் நம்மை விட யாரும் அக்கறை கொண்டவர்கள் இருக்க முடியாது. அதற்கு முஸ்லிம் இயக்க முன்னோடிகள் லத்தீப்_-சமது இணைப்பில் திராவிடர் கழகத்தின் அக்கறையை விட வேறு சான்று அவசியமில்லை. அதே அக்கறையோடு சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம். ஒருங்கிணைந்த உணர்வோடு காண வேண்டிய களங்கள் சமூக நீதித் தளத்தில் ஏராளம் உண்டு. அவற்றில் அக்கறை செலுத்த வேண்டும். ஊடகங்களைக் குறை சொல்லிக் கொண்டு மட்டுமே இருக்காமல், பொதுவான ஊடகங்களை நோக்கிய பயணம் மேற்கொள்ளப்பட வேண்டும். கார்ட்டூன் வரைந்ததற்கும், குறும்படம் வெளியிட்டதற்கும் மத ரீதியாகப் புண்பட்டது என்று காட்டிய உணர்வை விட அதிகமாக, சமூக ரீதியாக இஸ்லாமியர்கள் ஒடுக்கப்படும் பிரச்சினையில் காட்ட வேண்டும். மதவாதத்துக்கெதிரான, சமூக நீதிக்கும் மனித உரிமைக்கும் செய்ய வேண்டிய பணிகளில் முற்போக்கு சக்திகளும் உங்களுடன் இணைந்து களம் காணுவோம். இனி, பேச்சுவார்த்தையெல்லாம் நடந்து, மனதைப் புண்படுத்துவதாகச் சொல்லப்பட்ட வசனங்களின் ஒலியை மறைத்துவிட்டு வெளிவந்துவிட்ட விஸ்வரூபம் படம் குறித்துப் பார்ப்போம்.
படத்தில் அப்படி வெட்டப்பட்டதாகச் சொல்லப்பட்ட காட்சிகளுக்காகத் தான் அவ்வளவு பில்ட்-அப்பை ஊடகங்கள் கொடுத்தனவா? அவை தான் மனதைப் புண்படுத்துகின்றன என்று இயக்கங்கள் சொன்னவையா? அல்லது கிளப்பிவிட்ட உளவுத் துறையின்/ அரசின்  நெருக்கடியோ, என்னவோ? அப்படி வெட்டப்பட்டதால் பலன் ஒன்றும் இல்லாவிட்டாலும் கூட, ஏதோ தெரிவித்த எதிர்ப்புக்குக் கிடைத்த வெற்றியாக வேண்டுமானால் இதை சொல்லிக் கொள்ளலாம். விஸ்வநாதன் என்னும் பெண் தன்மை அதிகம் கொண்ட கதக் பயிற்றுநராகக் கமலும், அதனாலேயே அவருடன் பெரும் ஒட்டுதல் இல்லாமலிருக்கும் அவரது மனைவியும் அணுத் தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர் தங்கள் மொழியின் மூலமாக பார்ப்பனர்களாக அறிமுகம் ஆகிறார்கள். பிரிவதற்கான சூழல் தேடி மனைவி அனுப்பிய ஒற்றர் கொல்லப்பட, அவர் யாரென்ற தேடலில் பயங்கரவாதிகள் கைகளில் சிக்குகிறார்கள் விஸ்வநாதனும், அவர் மனைவியும். அப்போது விஸ்வநாதன்(கமல்) பார்ப்பனரல்ல; தவ்பீக் என்ற பெயர் கொண்ட இஸ்லாமியர் என்று தெரிகிறது. அடுத்தடுத்த காட்சிகளில், பயங்கரவாதிகளின் பின்புலமும், அவர்களின் தலைவராக ஓமர் என்பவரும் அறிமுகமாக, கதக் பயிற்சியாளராக மென்மையாக இருந்த கமல், அதிரடி நடவடிக்கைகளில் இறங்க படமும் விறுவிறுப்பாகிறது. (இப்படியெல்லாம் விமர்சனம் எழுத நமக்கும் ஆசை தான். ஆனால் அது அல்ல இங்கு வேலை!)
யாரென்று தெரிகிறதா? என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் நாம் விழிக்க, அவர் இந்திய அரசுக்காகப் பணியாற்றும் உளவாளி என்பதும், ஆப்கானில் தாலிபானின் கோட்டைக்குள்ளேயே போய் குத்துவெட்டுகளை உருவாக்கியவர் என்பதும் நமக்குத் தெரிய, கமல் தான் அமெரிக்காவைக் காப்பாற்றவும் வந்திருக்கிறார் என்பது ஓமருக்குத் தெரிய, ஆப்கானில் நடந்ததும், அமெரிக்காவில் நடப்பதும் மாறிமாறி வந்து நமக்குக் கதையைச் சொல்கின்றன. உயர் தொழில்நுட்பம், ஹாலிவுட் படங்களுக்கிணையான ஒளிப்பதிவு, திரைக்கதை, உருவாக்கம் என்று படத்தில் கமல் செய்ய நினைத்ததைச் சாதித்திருக்கிறார். அனைத்துத் தொழில்நுட்ப வாய்ப்புகளையும் சாத்தியப்படுத்தி, தனது கலைத் திறமையை உலகறிய எடுத்துச் செல்லவேண்டும் என்ற நோக்கம் வெல்லட்டும் என்று வாழ்த்துவோம். படத்தில் அதைத் தாண்டிய நல்ல விசயங்களும் உண்டு. கடவுள் தான் காப்பாத்தணும் என்று சொல்லும் மனைவியிடம் எந்தக் கடவுள்? என்று கேட்கும் போதும், பிறகு விசாரணை அதிகாரிக்கும் கமல் மனைவிக்கும் இடையிலான உரையாடலில்
எங்கள் கடவுளுக்கு நாலு கை
அப்போ எப்படி சிலுவையில் அறைவீர்கள்?
நாங்கள் சிலுவையில் அறைய மாட்டோம்.
கடல்ல தூக்கிப் போட்டுருவோம் என்ற வசனத்திலும் பகுத்தறிவாளர் கமல் பளிச்சிடுகிறார். இந்திய முஸ்லீமாக வந்து, மத நம்பிக்கை இருந்தாலும் கூட, தாலிபான் தீவிரவாதிகளுக்கெதிரான நடவடிக்கை மேற்கொள்பவராகவும், மதம் கடந்து நேசிப்பவராகவும், ஆப்கானிலேயே தாலிபான்களைத் தவிர மற்றவர்களை மனிதர்களாக நேசிப்பவராகவும் வருகிறார் கமல். பெண்களையும் குழந்தைகளையும் அமெரிக்கர்கள் கொல்ல மாட்டார்கள் என்று ஓமரே அமெரிக்காவுக்கு சான்றிதழ் வழங்க, அடுத்த நொடியே குழந்தைகள், பெண்கள் தஞ்சம் புகுந்த வீட்டை அமெரிக்காவின் குண்டு தகர்க்கிறது. (இந்தக் காட்சியில் வசனத்தைக் கவனித்து விமர்சித்த பலரும், அடுத்த காட்சியில் அந்த நல்லவன் அமெரிக்கன் பிம்பம் சிதறுவதைக் கவனிக்கவில்லை போலும்.) அதே மாதிரி படத்தில் முல்லா ஓமரைக் காட்டுவதாகப் பலரும் புரிந்து வைத்திருக்கிறார்கள். கதாபாத்திரத்தின் பெயரும், அவரது ஒற்றைக் கண்ணும் முல்லா ஓமரை நினைவூட்டுகிறதே தவிர, அது ஓமர் கதாபாத்திரம் அல்ல- தாலிபானில் ஒரு முக்கியத் தலைவர் என்பதைப் போலத் தான் கதை இருக்கிறது.  படத்தில் சிக்கன் சாப்பிடும் (அவர் வசனத்தின்படியே)  பாப்பாத்தியான கமலின் மனைவி தான் அமெரிக்கர்களுக்கும் கற்றுக் கொடுக்கிற அறிவாளியா? (பார்ப்பனப் பெண் சிக்கன் சாப்பிடுவதாகக் காட்டுவது தங்களைப் புண்படுத்துவதாக பார்ப்பனர் சங்கம் புகார் சொன்னது இதற்கிடையில் ஒரு காமெடி) ஒசாமாவைக் கொன்றதற்காக இவ்வளவா சந்தோசப்படுவது என்று பேசும்போது, அசுரனைக் கொன்றால் சந்தோசப்படத் தான் வேண்டும் என்று சொல்வதும் பார்ப்பனக் கதாபாத்திரத்திற்கானது மட்டும் தானா?
படத்தை மேலோட்டமாகப் பார்க்கும் யாருக்கும், ஆப்கானிலும் அமெரிக்காவிலும் மட்டுமே நடக்கும் இப்படம் இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்று தோன்றியிருக்காது. நிறைய ஹாலிவுட் படங்களை (அதுவும் தமிழ் டப்பிங்கிலேயே) இதே போல பார்த்துப் பழகிவிட்ட தமிழ் ரசிகர்களுக்கு விஸ்வரூபம் - கமல் நடித்த ஹாலிவுட் படமாகத் தான் தோன்றியிருக்கும். ஆனால், எப்போதும் பிரச்சினையை பகுத்தறிவுப் பார்வையில் நோக்கும் கமல், ஹேராமில் இந்துத் தீவிரவாதத்தை, ஆர்.எஸ்.எஸ்-.சைத் தோலுரித்த கமல், அவ்வை சண்முகியில் மாடு வெட்டுற முஸ்லிம் என் வீட்டில் சமைப்பதா? என்று கவலைப்படும் பார்ப்பனரிடத்தில், நீங்கள் மட்டும் மாட்டுத் தோலை செருப்பாக்கி விற்கலாமா? என்று கேட்ட கமல், அன்பே சிவத்தில் அமெரிக்க வணிக வெறியை எதிர்த்த கமல், தன்னால் முடிந்தவரை பார்ப்பனர்களையும் கடவுள் சிந்தனையையும் தன் படங்கள் எல்லாவற்றிலும் கேள்விக்குள்ளாக்கும் கமல், பாபர் மசூதி இடிப்புக்கெதிரான குரலை உரிய வகையில் பதிவு செய்த கமல் _ உன்னைப் போல் ஒருவனில் சறுக்கியதும், விஸ்வரூபத்தில் மேலோட்டமாகப் பொதுப் புத்தியில் அணுகியிருப்பதும் வரவேற்கத்தக்கதல்ல.
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலான பல்வேறு போர்களால் கடுமையான பாதிப்புக்குள்ளாகியிருப்பவர்கள் ஆப்கான் மக்கள். அவர்களின் குரலை ஓர் இடத்தில் பாட்டி ஒருவர் முதலில் ரஷ்யர்கள், பிறகு தலிபான்கள், அமெரிக்கர்கள், இப்போ நீங்களா? என்று வெறுத்துப் போய் ஒலிக்கும் வசனத்தில் கேட்க முடிகிறது. அங்கே உள்ள பிஞ்சுகளும், பெரியவர்களும் ஒருவருக்கொருவர் துப்பாக்கி போன்ற பாவனையைக் காட்டி சுட்டு விளையாடுவது மேலோட்டமாகப் பார்க்கும் போது, அவர்கள் ஏதோ பொழுதுபோக்காகவே துப்பாக்கியைத் தூக்கியிருக்கிறார்கள் என்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறதே! உண்மை அதுவா? ஆப்கான் மட்டுமல்லாமல், பாலஸ்தீனம், வியட்நாம், ஈழம், ஆப்பிரிக்க நாடுகள் என்று பல நாட்டுக் குழந்தைகளும் தாங்கள் பிறந்ததிலிருந்து கேட்டுவரும் குண்டுச் சத்தத்தை வாழ்க்கையின் ஒரு பகுதியாக ஏற்கப் பழகிவிட்டார்கள். நமக்கு விபத்துச் செய்திகள் எப்படி பழகிப்போன ஒன்றோ, அப்படி குண்டு வெடிப்பில் கொத்துக் கொத்தாக உயிர்கள் பலியாவதைக் கண்டு பழகிப்போய்விட்டது அவர்களுக்கு! மண்டையோட்டை வைத்து விளையாடும் சுடுகாட்டோரக் குழந்தையின் மனதில் கொலைவெறியும், சாடிசமும் இருக்கும் என்றா நாம் கருதுவோம்.
அதை ஒரு பாத்திரம் போன்ற விளையாட்டுப் பொருள் என்று நினைக்க வைத்த சமூகத்தின் சூழலைத் தானே நாம் புரிந்து கொள்கிறோம். குருதிப் புனலில் திருடனைப் புடிக்கும் போது 303 புல்லட் என்று சொல்லும் போலீஸ்காரர் மகனை 303 சொல்லக் கூடாது. 0.32 சொல்லணும் என்று ஒரு அய்.ஜி சொல்லிக் கொடுப்பதற்கு என்ன காரணம் இருக்குமோ, அதை விட நூறு மடங்குக் காரணம் நாம் மேற்சொன்ன நாடுகளில் உள்ள குழந்தைகள் ஆயுதங்களோடு புழங்குவதற்கு இருக்கிறது.
ஏகாதிபத்திய நாடுகளின் புதிய துப்பாக்கிகளுக்கும், குண்டுகளுக்கும் பயிற்சிக் களமாகவும், அவர்களின் ஆயுத விற்பனைக்கான சந்தையாகவும் இந்த நாடுகள் ஆக்கப்பட்டிருக்கின்றன. இன்னும் ஏகப்பட்ட நாடுகள் ஆக்கப்பட்டு வருகின்றன. மத்திய கிழக்கு நாடுகளின் எண்ணெய் வளத்தைக் கொள்ளையடிக்க, அந்நாடுகளில் உள்நாட்டுப் பிரச்சினையைத் திட்டமிட்டு உருவாக்கி, இன மோதலை உருவாக்கி, அதை அடக்க ஆட்சியாளர்களைப் பயிற்றுவித்து, அவர்களைக் கொடுங்கோலர்களாக மாற்றி, அதையே காரணம் காட்டி ஜனநாயகத்தை நிறுவுவதற்கான போர் என்று தனது திட்டத்தை பல பத்தாண்டுகளுக்கு உருவாக்கி, பொறுமையாகச் செயலாற்றிவரும் அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளைப் பற்றிக் கோடிட்டுக் கூடக் காட்டாமல், கதையை நகர்த்திச் செல்வதை முழுமையான ஒன்றாக எப்படிப் பார்க்க முடியும்? கதைக்கு அவை அவசியம் இல்லையென்று ஒரு வேளை சொன்னாலும், படம் முழுக்க ஆயுதம் தூக்கவும், குண்டு செய்யவுமே தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்களாகக் காட்டுவதற்குக் குறைந்தபட்ச காரணம் என்று ஒன்றையாவது காட்ட வேண்டாமா?
அமெரிக்காவில் உள்ள முஸ்லிம்களெல்லாம் எந்தப் பிரச்சினையும் இல்லாமல், சவுகரியமாக இருந்துகொண்டு குண்டு வைப்பதற்கு உதவுகிறார்கள் என்பதைப் போன்ற பிம்பத்தைத் தருகிறதே படம். இது உண்மை தானா? இந்தித் திரைப்பட நடிகர் ஷாரூக் கான் முதல் இந்தியக் குடியரசின் மேனாள் தலைவர் அப்துல்கலாம் வரைக்கும் தடுத்து நிறுத்தப்பட்டு சோதனைக்குள்ளானார்களே! அவ்வளவு ஏன் நடிகர் கமல்ஹாசனே அமெரிக்காவில் பாதிக்கப்படவில்லையா? ஹாசன் என்ற பெயர் இருப்பதால் அவரை விமானநிலையத்திலேயே தடுத்து நிறுத்திடவில்லையா? ஷாரூக்கான் அமெரிக்காவில் பட்ட அனுபவத்தின் உண்மையை எடுத்துச் சொல்ல, ஆழமாக மனதைத் தைக்கும் வண்ணம் என் பெயர் கான்;
ஆனால் நான் தீவிரவாதியில்லை (My name is Khan”. But i am not a terrorist) என்றொரு படம் எடுத்தார். ஹாலிவுட்டில் கால் பதிக்கும் எண்ணத்தில் தான், கமல் விஸ்வரூபம் எடுத்திருக்கிறார் என்பதைப் பெருமையாகச் சொல்கிறார்கள்; உண்மை தான். உலக அளவில் புகழ்பெற்ற வணிகப்படங்களுக்கான களமாக விளங்கும் ஹாலிவுட்டில் கமல் செய்ய நினைக்கும் சினிமாவின் அத்தனை சாத்தியங்களும் உண்டு. ஆனால் அதே ஹாலிவுட்டில் கால் பதிக்கும் எண்ணத்தில் தான், கமல் விஸ்வரூபம் எடுத்திருக்கிறார் என்பதில் உள்ள, அதற்காகத் தான் இந்த அமெரிக்கச் சார்பான படம் என்ற குற்றச்சாட்டை அவ்வளவு எளிதில் மறுதலித்துவிட முடியாது! குர்ஆன் ஓதியபடி கொலை செய்வதாகக் காட்டுவது தவறு என்று சொல்கின்றார்கள் எதிர்ப்பு தெரிவிப்போர். ஆனால், அரபி மொழியில் எதையோ உச்சரித்தபடி கடத்தப்பட்டவர்களைக் கொலை செய்வதை வீடியோ காட்சியாக்கி ஊடகங்களுக்கு அனுப்பிய பயங்கரவாதிகளை ஏன் அப்போது கண்டிக்கவில்லை. பாட்டுப் பாடும் பெண்களுக்கே பத்வா அறிவிக்கும் மதத் தலைவர்கள், ஏன் அத்தகைய பயங்கரவாதிகளுக்கு அப்போது அறிவிக்கவில்லை.
மதத்தை விட்டு விலக்கவில்லை என்று கேள்வி எழவில்லையா?அப்போதே மத உணர்வுகள் புண்படுவதாக எதிர்ப்பைத் தெரிவித்திருந்தால் இன்று சொல்வதில் முழுமையான நியாயம் இருந்திருக்குமே! படத்தின் இரண்டாம் பாகம் இந்தியாவில் நடப்பதாகச் சொல்கிறார்கள். இன்னும் கூர்ந்து கவனிப்போம். பொய்யுரையெனில் பிரச்சாரத்தின் மூலம் அதனை நிர்மூலமாக்குவோம். ஆப்கான் தீவிரவாதிகளைக் குறித்து எடுக்கப்பட்ட படத்துக்கு ஏன் இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் கவலைப்பட வேண்டும் என்ற கேள்வியில் இருக்கும் அதே நியாயம், ஆப்கான் _- அமெரிக்கா என்று மட்டுமே சுற்றும் கதையில், வரக்கூடிய சிலர் தமிழ் பேசுகிறார்கள் என்ற காரணத்தைத் தவிர இப்படத்தைத் தமிழில் எடுக்க வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வியிலும் இருக்கவே செய்கிறது. ஏனெனில், ஓமருக்குத் தமிழ் தெரியும் என்பதற்குக் காரணம் சொல்ல, அவர் மதுரைக்கும், கோவைக்கும் வந்து மறைந்திருந்ததாகச் சொல்ல வேண்டிய அவசியம் என்ன? ஹேராமில் ஸ்ரீ ராம் அபியங்கருக்குத் தமிழ் தெரியும் என்று சொன்ன அதே காரணம் போன்றதா? ஏற்கெனவே பாக் தீவிரவாதிகளோடு இங்குள்ள முஸ்லிம்களுக்குத் தொடர்பு என்று மக்கள் மனதில் ஏற்றப்பட்டிருக்கும் எண்ணம் இதனால் வலுப்படாதா? இப்படத்தின் கருத்தில் கமல்ஹாசனுடனும், அதை சரியாக எதிர்கொள்ளாததில் இஸ்லாமிய இயக்கங்களுடனும் நமக்கு மாற்றுக் கருத்து உண்டு.
எந்தக் கருத்தைப் பற்றி ஆதரித்தும், விமர்சித்தும் பேச, எழுத, படமெடுக்க எவருக்கும் உரிமை உண்டு. கருத்துத் தவறென்றால் மறுக்க நமக்கும் உரிமை உண்டு. யாரையும் இதைச் செய்யக்கூடாது என்று சொல்லும் போக்கும், மத உணர்வுகள் என்று சொல்லி தடை கோரும் போக்கும்  ஆபத்தானது. இதனை அனுமதித்த, ஆதரித்த ஜெயலலிதாவும், சோவும் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக இந்த நிலைப்பாட்டை எடுத்துவிட மாட்டார்கள். இதனை முன்னுதாரணமாகக் காட்டி அவர்கள் சாதிக்க நினைப்பது பெரிது. அந்தப் பொறியில் பார்ப்பனரல்லாதாரும், சிறுபான்மையோரும் சிக்கித் தவிக்க வேண்டுமா? குஜராத் கலவரம் பற்றியோ, பாபர் மசூதி இடிப்பைப் பற்றியோ, தருமபுரி எரிப்பைப் பற்றியோ தப்பித் தவறி நாளை நாமே ஒரு படம் எடுத்தாலும், எங்கள் உணர்வுகள் புண்படுகிறது என்று சொல்லி தடை கோரினால் அப்போது நாம் என்ன சொல்வது?  இதோ இப்போதே ஆரம்பித்துவிட்டார்களே, இது எங்களின் மனதைப் புண்படுத்துகிறது; புண்படுத்தும் என்று எதிர்பார்க்கிறோம் என்று பல படங்களுக்கும், படைப்புகளுக்கும் எதிராக கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுக்க படையெடுத்துவிட்டார்களே!
அதற்கான தொடக்கப் புள்ளியை உருவாக்கியவர்கள் என்ற வரலாற்றுப் பழியை இஸ்லாமியச் சமூகம் சுமக்க வேண்டுமா? பகுத்தறிவாளர்களைப் பொறுத்தவரை, எல்லா மதங்களும் ஒரே தரம்தான். அதைத் தாண்டி சிறுபான்மையினர் வாழ்வுரிமை என்பதிலும், அனைவரும் இனத்தால் ஒருவரே என்பதிலும் திராவிட இயக்கங்கள் உறுதியாக இருக்கின்றன. மத உணர்வைத் தூண்டி பலனடையலாம் என்ற போக்கு யாருக்கேனும் இருக்குமானால், அது அவர்களுக்கே கேட்டினை உருவாக்கும் என்பதையும் வருத்தத்துடன் நினைவூட்ட வேண்டியிருக்கிறது.
சமூகத்தில் சுமுகமான சூழல் நிலவ, முற்போக்காளர்களுடன், திராவிட இயக்கத்தினருடன் கைகோர்த்து, இந்துத்துவ வெறியர்களைத் தனிமைப்படுத்த வேண்டுமே தவிர, தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளக் கூடாது. அதுமட்டுமல்லாமல், ஊடகங்களை, திரைப்படங்களைத் தொலைவிலேயே வைத்துக் கொண்டு ஹராமாகப் பார்க்கும் பிற்போக்குத் தனமான போக்கை இஸ்லாமிய இயக்கங்கள் எப்போது மாற்றிக் கொள்ளும்?
ஊடகங்களில் மதத்தைப் பரப்புவதற்கு எடுத்துக் கொண்ட முயற்சியைவிட இத்தகைய சமூகப் பிரச்சினைகளை எதிர்கொள்ள என்ன செய்திருக்கிறோம் என்பதை இவ்வியக்கங்கள் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நேரமிது. எந்தக் கருத்துக்கும் பதில் சொல்ல கருத்து வலிமையிருக்குமேயானால், இத்தகைய தடை கோரும் போக்கு அவசியப்படாது. கருத்துரிமையின் பேரால் அவதூறு பரப்புவதை ஏற்க முடியாது தான்.
அதற்காக எதிர்க்கருத்து சொல்லவே கூடாது என்பதையும் ஏற்க முடியாது. அது சாத்தியமற்றது; ஜனநாயக பூர்வமானதன்று. கருத்தைக் கருத்தால் எதிர்கொள்வோம் என்பதே சரியான அணுகுமுறை.
ஊடகங்கள் அனுமதிக்காவிட்டால், நேரடியாக மக்களைச் சந்திப்போம் என்ற துணிச்சல் முற்போக்காளர்களுக்கு, பகுத்தறிவாளர்களுக்கு, மனித உரிமைப் போராளிகளுக்கு உண்டு.
இதுவரை எண்ணற்ற அவதூறுகளை அப்படித் தான் முறியடித்தோம்.
இனியும் முறியடிப்போம்.
- சமா.இளவரசன்

செய்திகளை பகிர்ந்து கொள்ள

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...