Wednesday, September 30, 2015

நேபாளத்திற்கு ஒரு அளவுகோல் - இலங்கைக்கு ஒரு அளவுகோலா?





கோவை வட்டார மாநாட்டில் மத்திய அரசுக்கு தமிழர் தலைவர் கேள்வி

கோவை, செப். 29_ நேபாளத்திற்கு ஒரு அளவு கோல்_ இலங்கைக்கு ஒரு அளவுகோலா? என்று கோவையில் நடைபெற்ற திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாட்டில் தமிழர் தலைவர் அவர்கள் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பினார்.
தந்தை பெரியார் பிறந்த நாள் விழா
கோவை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் தந்தை பெரியாரின் 137ஆவது பிறந்த நாள் விழா _ திராவடர் விழிப்புணர்வு வட்டார மாநாடு 28.9.2015 அன்று மாலை 6 மணியளவில் கோவை, செல்வபுரம், சிவாலயா திரையரங்கு எதிர்புறம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கோவை மாவட்டத் தலைவர் பா.மோகன் தலைமை தாங்கினார்.
தமிழர் தலைவர் உரை
மாநாட்டில் சிறப்புரையாற்றிய திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பேசியதாவது:_
மிகுந்த எதிர்ப்பார்ப்புடனும், எதிர்ப்புடனும், சிறப்போடும் அடாத மழை பெய்தாலும் விடாது நடத்துவார்கள் என்பதற்கிணங்கவும் இக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எதிர்ப்பு, சலசலப்பு என்று சொல்லி இந்து முன்னணி, விஸ்வ இந்து பரிஷத் போன்ற மதவாத அமைப்புகள் இக்கூட் டத்தை நல்ல முறையில் விளம்பரப்படுத்தியதற்கு நன்றி! இதை தவறாமல் செய்யுங்கள். எங்களை எதிர்க்கும் நண்பர்களை நாங்கள் எதிரிகளாகக் கருதுவதில்லை. இன எதிரிகளைத் தவிர யாரையும் நாங்கள் எதிரியாகக் கருதுவதில்லை! பூனை எலியை பிடிக்க வேண்டுமே தவிர எங்களைப் பிடிக்கக்கூடாது.
பெரியார் கேட்டார்
தந்தை பெரியார் அவர்கள் 29 பதவிகளை ராஜி னாமா செய்துவிட்டு பொதுமக்களுக்கு தொண்டாற்ற வந்தார். நமக்காக 95 ஆண்டு காலம் வாழ்ந்தார். அவர் பதவி வேண்டும் என்று கேட்டாரா? வாக்கு வேண்டும் என்று கேட்டாரா? படிப்பு ஏன் எங்களுக்கு இல்லை? என்று கேட்டார்! எங்களுக்கு ஏன் தகுதி இல்லை? என்று கேட்டார்! எங்களை நாலாம்ஜாதி அய்ந்தாம்ஜாதி என்று எழுதி வைத்துள்ளார்களே! பெண்களை கீழானவர்களாக்கி வைத்துள்ளார்களே! மலத்தை மிதித்தவன் அது பட்ட இடத்தை கழுவி நிம்மதியடைகிறான். என்னுடைய பாட்டாளி சமுதாயத்தை தொட்டால் தீட்டு என்கிறாயே என்று கேட்டவர் பெரியார்! 1000 ஆண்டுகால அடிமைத் தனத்தை ஒழித்த பெருமை பெரியார் கைத்தடிக்கே உண்டு! நாங்கள் இல்லையென்றால் இடஒதுக்கீடு வருமா-?
ஆர்.எஸ்.எஸ். தூண்டுதலால் பி.ஜே.பி ஒத்திகை பார்க்கிறது. சமூகநீதிக்கு எதிராக யார், எந்த பிற் போக்கு சக்திகள் படமெடுத்து ஆடினாலும் பெரியார் கைத்தடி தடுக்கும், ஒடுக்கும் மத்திய, மாநில ஆட்சியின் அவலம் மின் மிகை மாநிலமா? மின் புகை மாநிலமா? என்கிற வகையில் கரண்ட் கட் கோவை போன்ற இடங்களில் அதிகமாக உள்ளது. மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு வெளிமாநிலங்களிலிருந்து மின் சாரத்தை அதிக விலை கொடுத்து வாங்குகிறது. காவிரி நீர் மேலாண்மை கண்காணிப்பு ஆணையம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியதே! மத்திய, மாநில அரசுகள் இதை ஏன் நடைமுறைப் படுத்தவில்லை. எல்லா மாநிலங்களிலும் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது. தமிழ்நாட்டிலோ எல்லா தலைவர்களும் தனித்தனிதான்!
நேபாளம் கலாச்சார உறவு கொண்ட நாடு. அங்கு இந்து நாடு என்பது போய் மதச்சார்பற்ற நாடாக அறிவிக்கப்பட்டுள்ளதே; நினைத்துப் பார்க்க வேண்டும். நேபாளம் மதச்சார்பற்ற நாடாக அமையக் கூடாது என்று மத்திய அரசு தலையிடுகிறதே இலங்கைப் பிரச்சினையில் ஏன் தலையிடவில்லை! இலங்கையில் மத்திய அரசு என்ன செய்தது? நேபாளத்திற்கு ஒரு அளவுகோல் _ இலங்கைக்கு ஒரு அளவுகோலா?
மீனவர் பிரச்சினையிலும் தமிழக அரசு கடிதம் மேல் கடிதம் என்ற நிலைதான்! நடவடிக்கை இல்லை. முதல்வர் போட்ட தீர்மானமும் ஏட்டுச் சுரைக்காய் கதைதான்!
மனுதர்மம் வந்தால் ஜாதித்தொழில் வரும்! மதவாதிகள் சொல்வது போல் மனுதர்மம் அரசியல் சட்டமாக வந்தால் என்ன ஆகும்? என்பதையும் குலக் கல்வித் திட்டத்தை அன்றே ஒழித்தவர் பெரியார் என்பதையும் இளைஞர்கள் சிந்திக்க வேண்டும்.
பெரியார் தேவைப்படுகிறார், தேவைப்படுவார், எப் போதும் தேவைப்படுவார்! பெரியார் கருத்து எப் போதும் தேவை! மக்களின் மூச்சுக்காற்று திராவிடர் கழகம்!
இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு பன்னாட்டு விசாரணை வேண்டும் என்று வருகின்ற இந்நேரத்தில் அனைவரும் ஓரணியில் சேரவேண்டும். எங்களுக்கு கட்சி, ஜாதி, மதம் என்பது இல்லை. கொள்கை, இனஉணர்வு, மனிதாபிமானம் உண்டு. பெண்ணுரிமை பேண, கல்வி உரிமை பெற மூடநம்பிக்கையை எதிர்க்க பெரியார் தேவை! என்று தமிழர் தலைவர் உரையாற்றினார்.
செயலவைத் தலைவர் உரை

மோடி என்ற பெயரால் என்ன மோசடி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது? அந்த மோசடியை எடுத்துக்காட்ட இந்தக்கூட்ட வாய்ப்பைப் பயன் படுத்திக் கொள்கிறோம். ஏமாற்று என்பது தான் மத்தியில் ஆளும் ஆட்சியின் லட்சணம். பகவத் கீதையை தேசிய புனித நூலாக்க வேண்டும் என்ப வர்கள் திருக்குறளைப் பற்றி எப்படி பேச முடியும்? இந்து மதம் என்கிற பேரில் இந்தியாவை கீழ்த்தர மாக்கிக் கொண்டிருக்கிறார்கள். ராமனைக் கடவுளாக ஏற்காவிட்டால் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்கிறார்கள். இவர்கள் யார்? முதலாளி வர்க்கத்திற்கு வக்காலத்து வாங்குபவர்கள். மோடி ஏழைகளின் பிரதமரா? இல்லை, ஏழைகளுக்கு மோடியால் எந்தப் பயனும் இல்லை!
காகிதம் பொறுக்கியும், பிச்சை எடுத்தும் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அட்சய திருதி யாருக்கு பார்ப்பன பனியாக்களுக்கு! ஏழைகளுக்கா? மதம் ஒழிக்கப்பட்டு மக்கள் மக்களாக வாழ வேண்டும்! மதத்தை வைத்து பிஜேபி குளிர்காய்ந்து கொண்டிருக்கிறது. அதற்கு தமிழக ஆளும் கட்சி ஆதரவு அளித்து வருகிறது. ஆகவே, மக்கள் விழிப்போடு இருக்கவேண்டும்! சிந்திக்கவேண்டும்! தத்துவத்தை எடுத்துச் சொல்ல ஒரு வாய்ப்பாகத்தான் தந்தை பெரியாரின் 137ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்! ஒரு ஆண்டு முழுவதும் மக்களி டையே தந்தை பெரியாரின் தத்துவங்களை எடுத்துச் செல்வோம்! பெரியாரைப் பேசாத நாட்கள் நாங்கள் பிறவா நாட்களே!
இவ்வாறு அவர் உரையாற்றினார்.
கழகப் பொருளாளர் உரை
கூட்டத்தில் கழகப்பொருளாளர் சு.பிறைநுதல் செல்வி அவர்கள் குறிப்பிட்டதாவது:_
மதவெறி ஒழிக்க, மனித தர்மம் காக்க, அறிவியல் சிந்தனை நிலைக்கப் போராடியவர் பெரியார்! பெண்கள் கல்வி கற்க முடியாது! பிள்ளை பெறும் இயந்திரமாகத்தான் இருக்கவேண்டும் என்ற நிலைமாறி பெண்கள் கல்வி, சொத்துரிமை, வாரிசுரிமை, மணவிலக்கு, மறுமணம், இடஒதுக்கீடு ஆகிய உரிமைகளைப் பெறவும் தற்போது 33 சதவீதம் மகளிருக்காக இடஒதுக்கீடு வேண்டி போராட்டம் நடத்த பெண்கள் அணியமாகிறார்கள் என்றால் அதற்கு காரணம் தந்தை பெரியார்!
மதவெறி, ஜாதிவெறி, பழைய பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை ஒழிக்க தந்தை பெரியாரின் 137ஆவது பிறந்த நாளில் உறுதி எடுத்துக்கொள்வோம்! ஒவ் வொரு வீட்டிற்கும் பெரியாரை கொண்டு செல்வோம்! புதிய உலகின் தொலைநோக்காளர், தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ், சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை, அர்த்தமற்ற சடங்குகள், மூடநம்பிக்கைகள் ஆகியவற்றின் கடும் எதிரி என்று பெரியாரை பரவலாக எடுத்துச் செல்லவேண்டும்! திருக்குறளை யும், தமிழில் குழந்தைகளுக்குப் பெயர் வைக்கும் பழக்கத்தையும், அறிவியல் மனப்பான்மையையும் ஒவ்வொரு மனிதனுக்கு எடுத்துச்சொல்லவும், சமூக நீதியைக்காப்பற்றவும் தந்தை பெரியாரின் 137ஆவது ஆண்டு பிறந்த நாளில் சூளுரைப்போம்! அதற்குத் தான் இம்மாநாடு! இவ்வாறு அவர் பேசினார்-.
தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவிப்பு
கூட்டத்தில் கோவை மாநகர 78ஆவது திமுக வட்ட கழகம் சார்பில் புருசோத்தமன், 77ஆவது திமுக வட்ட கழகம் சார்பில் மதியழகன், ஏ.எம்.உசேன், 77 ஆவது வட்ட மாவட்ட திமுக பிரதிநிதி மற்றும் 77 ஆவது வட்ட திமுக சார்பில் பால்ராஜ், பழனி சக்திவேல் (தி.க)  ஆகியோர் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து சிறப்பு செய்தனர்.
கூட்டத்தில் பங்கேற்றோர்
முன்னதாக இந்நிகழ்வில் கோவை மாநகர கழகத் தலைவர் சிற்றரசு அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். கழக பொதுக்குழு உறுப்பினர்கள் தி.பரமசிவம், சிங்கை ஆறுமுகம், பழ.அன்பரசு, தி.க.செந்தில்நாதன், சி.மாரிமுத்து, திலகமணி, இராசாமணி அம்மையார், ப.கலைச்செல்வி (மண்டல மகளிரணி) அக்ரி.நாகராஜ் (ப.க) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், கழக மருத்துவ அணியைச் சார்ந்த மருத்துவர் இரா.கவுத மன், கோவை மண்டலத் தலைவர் வேலுசாமி, கோவை மாவட்டச் செயலாளர் ம.சந்திரசேகர், மாநில ப.க.துணை தலைவர் அ.முனியன், மாவட்ட ப.க. தலைவர் மரு. துரை.நாச்சியப்பன், மாநகர கழகச்  செயலாளர் ஆடிட்டர் ஆனந்தராஜ், மாவட்ட அமைப் பாளர் தமிழ்ச்செல்வன், தமிழ்முரசு, ஆட்டோ சக்தி (திதொச), பகுதி செயலாளர்கள் கவி. கிருட்டிணன், புண்ணியமூர்த்தி, கிருட்டிணமூர்த்தி, கதிரவன், பொன்குமார், கோவை மண்டல இ.அ.செயலாளர், ச.மணிகண்டன், மாணவரணி செயலாளர் ஆ.பிர பாகரன், கு.வெ.கி.செந்தில், தலைமை கழக பேச்சாளர் புலியகுளம் வீரமணி, நீலமலை மாவட்டச் செயலாளர் நாகேந்திரன், தலைவர் கருணாகரன் உள்ளிட்ட திராவிடர் கழகம் மற்றும் பகுத்தறிவாளர் கழகத்தைச் சார்ந்த அனைத்து அணியினரும் பொதுமக்கள் பலரும் பெருந்திரளாக கூட்டத்தில் பங்கேற்றுச் சிறப்பித்தனர். கூட்ட முடிவில் மே.பா.ரங்கசாமி நன்றி கூறினார்.
மந்திரமா! தந்திரமா!! நிகழ்ச்சி
பொதுக்கூட்டத்தின் துவக்கத்தில் திண்டுக்கல் ஈட்டி கணேசனின் ‘‘மந்திரமா’’, ‘‘தந்திரமா’’ எனும் பகுத்தறிவு நிகழ்ச்சி நடைபெற்றது. பல்வேறு வகையில் மனித குலத்தைச் சுரண்டும் மூடநம்பிக்கைகளை இந்நிகழ்ச்சி தோலுரித்துக் காட்டியது. இதைக் கண்ணுற்ற வெகு மக்கள் அறிவியல் மனப்பான்மை பெற்றார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.

கோவை, செல்வபுரத்தில் நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்த நாள் விழா - திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாட்டில் கழகத் தலைவர் உரையாற்றினார் (கோவை, 28.9.2015)


20.8.2015 அன்று மறைவுற்ற திராவிடர் கழகத்தின் முன்னாள் பொதுக் குழு உறுப்பினரும், தணிக்கையாளருமான மானமிகு எஸ்.எம்.ராஜா அவர்களின் உருவப்படத்தை நேற்று கோவை, செல்வபுரத்தில் நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்த நாள் விழா - திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாட்டு மேடையில் கழகத் தலைவர் அவர்கள் திறந்து வைத்து, கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை எஸ்.எம்.ராஜா குடும்பத்தாரிடம் தெரிவித்துக்கொண்டார். உடன் எஸ்.எம்.ராஜா குடும்பத்தினர் மற்றும் கழகத் தோழர்கள் (கோவை, 28.9.2015).

கோவை மாநாட்டு மேடையில் ஈட்டி கணேசனின் ‘‘மந்திரமா? தந்திரமா?’’ நிகழ்ச்சி
கோவையில் நடைபெற்ற திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாட்டில் தமிழர் தலைவர் உரை கேட்கத் திரண்டிருந்தோர் (கோவை, 28.9.2015)

ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி மாணவர் விடுதி நுழைவு வாயிலில் ஒரு பெரிய மருத்துவமனையை அமைத்துக் கொடுக்கவிருக்கும் தொண்டறச் செம்மல் அகர்சந்த் சோர்டியாவுக்கு நன்றி! பள்ளி விடுதி திறப்பு விழாவில் தமிழர் தலைவர் உரை





ஜெயங்கொண்டம், செப். 29-
 மாணவர் விடுதிக்கு முன் பாக இருக்கின்ற பகுதியில் வெகுவிரைவில் ஒரு பெரிய மருத்துவமனையை  அமைத்துக் கொடுக்க  சிறீ ஜெயின் ஜூவல்லரியின் உரிமையாளர்  தொண்டறச் செம்மல் அகர் சந்த் சோர்டியா அவர்கள் பெருந்தன்மையோடு ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். மனமார்ந்த நன்றியை அவர்களுக் குத் தெரியப்படுத்திக் கொள்கிறோம் என்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார்.
22.9.2015 அன்று ஜெயங்கொண்டம் கல்விக் கிராமத்தில் உள்ள பெரியார் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியின் மாண வர் விடுதி திறப்பு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
அவரது உரை வருமாறு:
மிகுந்த மகிழ்ச்சியோடு நடைபெறக்கூடிய மாணவர் விடுதி திறப்பு விழா நிகழ்ச்சியில், தொண்டறச் செம்மல் ம.அகர்சந்த் சோர்டியா அவர்கள் நம்முடைய அன்பான அழைப்பை ஏற்று வந்து, இங்கு சிறப்பாக உரையாற்றிய - நான் கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை, அவர் இவ்வளவு நன்றாக உரையாற்றுவார் என்று. அவர் மேடையில் உரை யாற்றியதை நான் இப்பொழுதுதான் முதன்முதலாகக் கேட் கிறேன். ஒரு நல்ல பெரு வணிகர் அவர். ஆனால்,  அதை விட மிகத் திறமையான பேச்சாளர் என்பதை இன்றைக்குக் காட்டக்கூடிய அளவிற்கு, அவருடைய உரையை மிக அழகாக முடித்தார், அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் என்று.
அந்த அளவிற்கு அவருடைய பற்று, அவருடைய பாசம், பெருமை, ஆற்றல் இவற்றையெல்லாம் உள்ளடக்கிய  விடுதி திறப்பாளராக வந்த தொண்டறச் செம்மல் அகர்சந்த் சோர்டியா அவர்களே,
50 ஆண்டுகாலத்திற்கும்மேல் விடுதலை வாசகர்
இந்த மிகப்பெரிய பள்ளிக்கூடத்திற்காக, நாங்கள் எல்லாம் வங்கியில் கடன் வாங்கிக் கொண்டிருந்த நேரத்தில், ஒரு பெரிய தொகையை அவர்கள் கொடுத்து, பள்ளிக்கூடத் திற்குப் பயன்படுத்துங்கள் என்று, தன்னுடைய வாழ்நாளில், எளிமை - சிக்கனம் - அவர் ஒன்றும் பெரிய பணக்காரர் அல்ல. அவருடைய ஓய்வூதியத்தில்தான் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார். அவரே சமைத்துக் கொள்வார்; எளிமையான வாழ்வு வாழ்பவர். அய்ம்பது ஆண்டு காலத் திற்கும்மேல் விடுதலை வாசகர் ஆவார்.
இப்படிப்பட்ட ஒரு எளிமையை வாழ்க்கையாக வைத் துக் கொண்டிருக்கும் அய்யா அவர்கள், இன்றைக்குக்கூட நம்மை ஒரு அதிர்ச்சியிலே ஆழ்த்தினார்கள். இந்தப் பள்ளிக்கூடத்தினுடைய, இந்த அமைப்பினுடைய வளர்ச்சிக்கு நீங்கள் எப்படி வேண்டுமானாலும் இந்த ஒரு லட்சம் ரூபாயைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று இன்றைக்கும் நன்கொடை கொடுக்கக்கூடிய பெருங் கொடையாளர் என்கிற பெருமைக்குப் பெருமை சேர்த் துள்ள ஹார்விபட்டி அய்யா மானமிகு கோ.ராமசாமி அவர்களே,இந்தப் பள்ளியில் இவ்வளவு சிறப்பான கட்டடங்கள் மற்றவை எல்லாம் வருவதற்குக் காரணமாக இருக்கக் கூடிய ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சுப்பிரமணியம் அவர்களே,அதேபோன்று, இந்தப் பள்ளியே வருவதற்குக் காரணமாக இருந்த - ஏனென்றால், இந்தப் பள்ளிக்கூடம் பழைய கட்டடமாக இருந்தது - பிறகு எல்லாவற்றிற்கும் காரணமாக இருந்த நம்முடைய இயக்கத்தினுடய சீரிய செம்மல் காமராசர் அவர்களே,மாநிலத்திலேயே சிறப்பான பள்ளிக்கூடம் என்ற சிறப்பை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது
இவ்வளவு பெரிய சிறப்பான பள்ளி; கட்டடம் இருப்பது பெருமையல்ல; கட்டடங்களை யார் வேண்டுமானாலும் கட்டலாம், கஷ்டப்பட்டு. ஆனால், இந்த மாணவச் செல்வங் கள் அத்துணை பேரும் படிப்பிலும், மற்ற எல்லாத் துறை களிலும் பார்த்தீர்களேயானால்,  மிக நன்றாக உள்ளனர். நம் பள்ளிக்கூடம் வருகின்ற ஆண்டு மாநிலத்திலேயே சிறப் பான பள்ளிக்கூடம் என்ற சிறப்பைப் பெறக்கூடிய அள விற்கு - அதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்கிற அளவிற்கு உழைக்கக்கூடிய ஆசிரியப் பெருமக்கள். அந்த ஆசிரியர்களையெல்லாம் இயக்கக்கூடிய தலைமை ஆசிரியர். இந்தப் பள்ளியின் முதல்வர் மிகவும் திறமையா னவர். அவர் உங்களையெல்லாம் நன்றாக ஊக்கப்படுத்து கிறார். நாம் ஒரு குடும்பமாக இருக்கக்கூடிய அந்த வாய்ப் பைப் பெற்றிருக்கிறோம்.
கைதட்டுவதால், 32 நரம்புகளுக்குப்  புத்துணர்ச்சி ஏற்படுகிறது
உங்களை நீண்ட நேரம் காக்க வைத்திருந்தாலும், நீங்கள் உற்சாகமாகக் கைதட்டிக் கொண்டிருக்கிறீர்கள். மற்ற பிள்ளைகளுக்கு கைதட்டுவதே என்னவென்று தெரியாது. நான் எழுதிய வாழ்வியல் சிந்தனையில் படித்திருப்பீர்கள்; கைதட்டுவதால், 32 நரம்புகளுக்குப் புத்துணர்ச்சி ஏற்படு கிறது. உடலுக்கு அதுவே ஒரு பயிற்சியாகும்.
ஆகவே, எங்களுடைய பிள்ளைகள் புத்திசாலிப் பிள் ளைகள் என்பதற்கு அடையாளமாக, கைதட்டி அவர்களை யும் வரவேற்றுக் கொள்கிறார்கள். மற்றவர்களையும் வரவேற்பதற்காக முயற்சி செய்கிறார்கள் என்று சொல்கின்ற அளவில், இந்த அருமையான நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இங்கே உரையாற்றிய பள்ளியின் தலைமை ஆசிரியர் அவர்கள் மிக நன்றாகச் சொன்னார். இந்தப் பள்ளியில் சேர்த்துக் கொள்ளச் சொல்லுங்கள் என்று எனக்குப் பரிந்துரை கடிதங்கள் வருகின்றன.  பல இடங்களில் உள்ள பள்ளிகளில் மாணவ, மாணவிகள்  சேரவில்லை என்று தேடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இந்தப் பள்ளிக் கூடத்திலோ, இடம் இல்லை என்று சொல்கின்ற நிலை வரும் பொழுது, இந்தப் பள்ளியை விரிவுபடுத்தி எல்லா மாணவர் களுக்கும் வாய்ப்பு கொடுக்கவேண்டும் என்று நினைத்தோம்.
பெரியார் அறக்கட்டளை, பெரியார் மணியம்மை அறப் பணிக் கழகம், திராவிடர் கழக அறக்கட்டளை இவை எல்லாம் சேர்ந்து நாடெங்கும் பல கல்வி நிறுவனங்களை நாம் நடத்துகின்றோம்.
ஆனால், உள்ளபடியே என்னைப் போன்ற பெரியார் தொண்டர்களுக்கு எதில் பெரிய மகிழ்ச்சி என்றால், தஞ்சா வூரில் பல்கலைக் கழகம் உருவாகியிருக்கிறது பாருங்கள், அந்தப் பல்கலைக் கழகத்தில், இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் எல்லாம் எதிர்காலத்தில் படிப்பீர்கள் என்பதில் சந்தேகமேயில்லை.
அதைவிட மிகவும் மகிழ்ச்சியான செய்தி என்ன வென்றால், இந்த ஜெயங்கொண்டம் பகுதியில் இப்படி ஒரு பள்ளி வளருகிறது பாருங்கள், அதில்தான் எங்களுக்கு முழு மனநிறைவு ஏற்படுகிறது. அதற்குக் காரணமான தலைமை ஆசிரியர், ஆசிரியைகள், ஆசிரியர்கள் எல்லோருக்கும் என்னு டைய நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பள்ளியில் விடுதி வேண்டும் என்றார்கள் ஏனென்றால், இந்தப் பள்ளியைச் சுற்றி 157 கிராமங்கள் உள்ளன. இந்தப் பள்ளிக்கு 33 வாகனங்கள் உள்ளன; இன்னும் வாகனங்கள் தேவை என்று சொல்கிறார்கள். நிதித் தட்டுப்பாடு - வங்கியில் கடன் வாங்கித்தான் வாகனங்களை வாங்குகிறோம். இருந்தாலும், பிள்ளைகள் சுற்று வட்டாரப் பகுதியில் இருந்து வருகிறீர்கள். அடுத்த கட்டமாக இப் பொழுது என்ன கேட்டார்கள் என்றால், பிள்ளைகளுடைய பெற்றோர்களே எங்களிடம் வந்து, பள்ளியில் விடுதி வேண்டும் என்றார்கள்.
விடுதியில் தங்கி படித்தால், மாணவர்களுக்கு நல் வாய்ப்பாக இருக்கும் என்று நினைத்தோம். திருச்சி தங்காத் தாள் போன்று இருக்கக்கூடியவர்கள், மற்றவர்கள் எல்லாம் உதவி செய்து, இந்த விடுதி மிக அற்புதமாக அமைந்திருக் கிறது. நான் விடுதியைச் சுற்றிப்  பார்த்தேன். அந்த விடுதியில் நல்ல அளவிற்குத் தரமான உணவு, சுகாதாரம், உடற்பயிற்சி இவை அத்தனையும் தரக்கூடிய அந்த வாய்ப்புகளைப் பெற்று, நல்ல விடுதியாக இது அமையக்கூடிய வாய்ப்பு.
விடுதி வாழ்க்கையில் இன்னொரு விஷயம் என்ன வென்றால், அங்கேதான் ஜாதியில்லை; மதம் இல்லை. யார் என்ன ஜாதி என்று தெரியாது; மாணவர்கள் ஒருவருக் கொருவர் மிகவும் நட்பாகப் பழகிக் கொண்டிருப்பார்கள். இந்த விடுதி வாழ்க்கை மிக நன்றாக அமையவேண்டும். நீங்கள் சிறப்பாகப் படியுங்கள். உங்களுள் பல அய்சக் நியூட் டன், பல அப்துல்கலாம், பல விஞ்ஞானிகள், பல ஆட்சியா ளர்கள், பல மேடம் க்யூரிகள் இருக்கிறார்கள். நல்ல மலர்ந்த முகத்தோடு இருக்கக்கூடிய பிள்ளைகள் இங்கே இருக்கிறீர்கள்.
எங்களை அவருடைய உறவினராகத்தான் கருதியிருக்கிறார்கள்
இப்படிப்பட்ட அருமையான ஒரு வாய்ப்பில், நம்முடைய அகர்சந்த் சோர்டியா அவர்களை அழைத்தோம். அவர் ஒரு பிரபல வணிகர் மட்டுமல்ல, பெருங்கொடை யாளரும்கூட. சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து மருத்துவர்களை அழைத்து வந்து, இங்கே மருத்துவ முகாம் நடத்தவிருக்கிறார். அவருடைய இல்லத்தில் நடை பெறுகின்ற மணவிழாக்களுக்கெல்லாம் அவர் தவறாமல் என்னை அழைப்பார்; நானும் தவறாமல் செல்வேன். அதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், அவருடைய திருமண நாள் அன்றைக்கு நான் வெளியூரில் இருப்பேன். மூன்று நாள்கள் கழித்துதான் நான் சென்னையில் இருக்கும்படியான சூழ்நிலை இருக்கும். நான் சென்னையில் இல்லை; மூன்று நாள் கழித்துதான் வருவேன் என்று சொன்னால், அன் றைக்கே வந்தால் போதும் என்பார்.
இந்த முறை அவருடைய திருமண நாள் முடிந்து மூன்றா வது நாள் நான் சென்றேன். அப்படி நான் செல்லும்பொழுது, அவருடைய உறவினர்கள் எல்லோரும் இருந்தார்கள். அவர் சொன்னார், மூன்றாவது நாளும் நிகழ்ச்சியை நடத்து வோம். அந்த நிகழ்ச்சிக்கு எங்களுடைய உறவினர்களை மட்டும்தான் அழைப்போம் என்றார். எங்களை அவருடைய உறவினராகத்தான் கருதியிருக்கிறார்கள்.
ஈதல் இசைபட வாழ்தல்!
அவர் சார்ந்த சமூகம் இருக்கிறதே, மிகப்பெரிய ஒரு சீர்திருத்தத்திற்கு முன்னோடி. மகாவீர் அவர்கள் புத்தருக்கும் முன்னோடி. தந்தை பெரியார் அவர்கள் எவ்வளவு பெரிய பகுத்தறிவுக் கருத்தைச் சொன்னாரே - அதே அளவிற்கு அந்தப் பகுத்தறிவுக் கருத்தை புத்தருக்கும் முன்பு சொன்ன ஒரு பெரிய மாவீரன் இந்திய வரலாற்றில் இருக்கிறார் என்று சொன்னால், அது மகாவீர் அவர்கள்தான். அந்த சமண அமைப்பு இருக்கிறது பாருங்கள், அது மிகப்பெரிய வரலாற்றை உள்ளடக்கியதாகும். அதனுடைய தத்துவத்தை இவர்கள் சிறப்பாக தன்னுடைய வாழ்நாளில் கடைபிடிக் கிறார்கள். ஈதல் இசைபட வாழ்தல் முறையில்.
அதேபோன்று அவர்கள் நிறைய சம்பாதித்து, அதை தனக்கு மட்டும் வைத்துக் கொள்ளாமல், தன்னுடைய குடும்பத்தோடு நிறுத்திக் கொள்ளாமல், சமுதாயத்திற்கும் பயன்படும் வகையில் அவர்கள் எத்தனையோ அறப்பணி களையெல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள். அப்படிப் பட்டவர்களை நாம் அழைத்த உடன், அவர்கள் இங்கே வந்து சிறப்பாக உரையாற்றினார்கள். இங்கே வருவதற்கு முன்பு, நம்முடைய இளந்திரையன் போன்ற நண்பர்கள்மூலம் கேட்டு, மாணவர் விடுதியைத் திறக்க வைத்திருக்கிறீர்கள், நான் இந்த விடுதிக்கு என்ன செய்யவேண்டும் என்று சொல் லுங்கள், நான் அதனைச் செய்கிறேன் என்று சொன்னதாகத் தோழர்கள் என்னிடம் சொன்னார்கள்.
வெகு விரைவில் ஒரு பெரிய மருத்துவமனை உருவாக இருக்கிறது
ஏற்கெனவே விடுதியைப் பொறுத்தவரையில் எல் லாமே செய்திருக்கின்ற நிலையில், அடுத்து உங்களுக் கெல்லாம் மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால், உங்க ளுக்கும் பயன்படும், பொதுமக்களுக்கும் பயன்படும்; நம் முடைய எல்லா நிறுவனங்களுக்கும் முன்பாக, பெரியார் மணியம்மை மருத்துவமனை ஒன்று இருக்கும். அதே போன்று, இந்த விடுதிக்கு முன்பாக இருக்கின்ற பகுதியில் வெகுவிரைவில் ஒரு பெரிய மருத்துவமனை உருவாக இருக் கிறது. அந்த மருத்துவமனையில் நம்முடைய பிள்ளைகளுக் கும், ஆசிரியர்களுக்கும், மற்றவர்களுக்கும் உடல்நலப் பிரச்சினை என்றால், அங்கே பார்த்துக் கொள்ளலாம்; பொதுமக்களும், உள்ளூர் மக்களும் அந்த மருத்துவ மனையைப் பயன்படுத்திக் கொள்வார்கள்.
அந்த மருத்துவமனையை அமைத்துக் கொடுக்க அய்யா அகர்சந்த் சோர்டியா அவர்கள் பெருந்தன்மை யோடு ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். ஆகவே, அதற்காக நம் முடைய மனமார்ந்த நன்றியை அவர்களுக்குத் தெரியப் படுத்திக் கொள்கிறோம்.
எனவே, அடுத்த கட்ட வளர்ச்சி இது. கொஞ்ச காலத்தி லேயே அந்த மருத்துவமனை அமையவிருக்கிறது. மிகச் செறிவாக, அழகாக நல்ல மருத்துவர்கள் காலையிலும், மாலை யிலும் இருக்கக்கூடிய வாய்ப்புகளை உருவாக்குவார்கள். பெரியார் மருத்துவ அணியினுடைய இயக்குநர் கவுதமன் போன்றோர் அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவார்கள்.
ஆகவே, உங்களுக்கு விடுதி மட்டும் வரவில்லை. அடுத்து ஒரு மருத்துவமனையும் வரவிருக்கிறது என்கிற மகிழ்ச்சியான தகவலைக் கூறி, உங்களை நீண்ட நேரம் காக்க வைத்தமைக்காக பொறுத்தருளவேண்டும் என்று கேட்டு, ஆசிரியப் பெருமக்களுடைய உழைப்புதான் மாணவர்களை  சாதனை படைக்க வைத்திருக்கிறது. தங்கப்பதக்கம், வெள்ளிப்பதக்கம் போன்றவற்றை மாணவர்களாகிய நீங்கள் வாங்கிக் கொண்டிருக்கிறீர்கள்.
எடை போட முடியாத தலைவர் தந்தை பெரியார் அவர்கள்
பிள்ளைகளின் எடைகூட  அவ்வளவு இல்லை; ஆனால், அவர்கள் வாங்குகின்ற பதக்கங்களின் எடை அதைவிட அதிகமாக இருக்கிறது என்று சொன்னால், எடை போட முடியாத தலைவர் தந்தை பெரியார் அவர்கள், அவருக்கும் எடை போட்டார்கள்; அதுபோல  சிறப்பான வகையில் பெரி யாரின் பேரப் பிள்ளைகளாக, பெரியார் பிஞ்சுகளாக சிறப் பாக வந்து, எதிர்காலத்தில் விஞ்ஞானிகளாக, மிகப்பெரிய அளவிற்கு நோபல் பரிசு பெறக்கூடியவர்களாக நீங்கள் வரவேண்டும் என்று கேட்டு, வாழ்த்தி விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்!
நம்முடைய பெருங்கொடையாளர்களுக்கு எங்களு டைய இதயமார்ந்த நன்றியையும் அனைவரின் சார்பாகவும் தெரிவித்து அமைகிறேன்.
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார்.

பெரியாருடைய சிக்கனத்தையும், சேமிப்பையும் என்னுடைய கொள்கையாகக் கொண்டேன்!

பெரியாருடைய சிக்கனத்தையும், சேமிப்பையும் என்னுடைய கொள்கையாகக் கொண்டேன்!
ஜெயங்கொண்டம் மேல்நிலைப்பள்ளி மாணவர் விடுதி திறப்பு விழாவில் ஹார்விபட்டி கோ.ராமசாமி உரை
ஜெயங்கொண்டம், செப். 29- தந்தை பெரியாருடைய சிக்கனத்தையும், சேமிப்பையும் என்னுடைய கொள்கையாகக் கொண்டேன் என்று மதுரை ஹார்விபட்டியைச் சேர்ந்த கோ.ராமசாமி உரையாற்றினார்.
22.9.2015 அன்று ஜெயங்கொண்டம் கல்விக் கிராமத்தில் உள்ள  பெரியார் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியின் மாணவர் விடுதி திறப்பு விழாவில் மதுரை ஹார்விபட்டியைச் சேர்ந்த கோ.ராமசாமி அவர்கள் உரையாற்றினார். அவரது உரை வருமாறு:
கடுகளவு செய்த என்னை மலையளவு புகழும்படி செய்துவிட்டார்கள்
சில ஆண்டுகளுக்கு முன்பு வல்லத்திற்குச் சென்று நான் பார்த்தபொழுது, ஆசிரியர் அவர்கள் தனி மனிதராக இருந்து அவ்வளவு பெரிய காரியத்தைச் செய்திருந்ததை சுற்றிப் பார்த்து, மகிழ்ச்சியடைந்து, ஏதாவது இந்த அமைப்புக்குச் செய்யவேண்டும் என்கிற நோக்கத்தோடு, அங்கே நடந்த ஒரு சிறப்புக் கூட்டத்தில், அய்யா அவர்களுடைய கையில் ஒரு தொகையைக் கொடுத்தேன். ஆனால், இங்கே எனக்கு இவ்வளவு பெரிய ஒரு சிறப்பை செய்து, கடுகளவு செய்த என்னை மலையளவு புகழும்படி செய்துவிட்டார்கள். அதற்கு நான் எப்பொழுதும் நன்றியுடையவனாவேன்.
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்
என்பது வள்ளுவப் பெருந்தகையின் வாக்கு. பெரியாருடைய சிக்கனத்தையும், சேமிப்பையும் என்னுடைய கொள்கையாகக் கொண்டேன்
நான் கொடுத்தது தொகையாக இருந்தாலும், அது நீங்கள் எல்லாம் பாராட்டும்படியாக, பல தலைமுறைகளுக்குப் பயன்படக் கூடிய அளவிற்குப் பணிகளைச் செய்திருக்கிறார்கள். நான் எழுதப் படிக்கத் தெரியாத பெற்றோருக்குப் பிறந்தவன்.  ஒரு சாதாரண தொழிலாளியின் வீட்டுப் பிள்ளை. மதுரை மில்லில் பணியாற்றி, எங்கள் தாயாருடைய பராமரிப்பில் வளர்ந்து, ஓரளவிற்குப் படித்து, பெரியாருடைய சிக்கனத் தையும், சேமிப்பையும் என்னுடைய கொள்கையாகக் கொண்டு, சேமித்த பணத்தை அய்யா ஆசிரியர் அவர்களிடம் கொடுத்தேன். அவர் இவ்வளவு பெரிய மகத்தான காரியத்தை செய்துவிட்டார்கள். அதனை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
என்னுடைய வாழ்நாள் முழுவதும் நன்றிக் கடன்பட்டுள்ளேன்
எனக்கும், இயக்கத்திற்கும் நேரடியான தொடர்பு இல்லாவிட்டாலும்கூட, நான் பல ஆண்டுகளாக இயக்க வெளி யீடுகளைப் படித்துக் கொண்டிருக்கக் கூடியவன்; அண்மையில் சு.அறிவுக்கரசு அவர்களுடைய நூல்களைக் கேட்டு வாங்கி, திருச்சி நண்பர் அண்ணா ராமச்சந்திரா மூலமாகப் பெற்று, அந்த நூல்களைப் படித்தேன்.  மிகச் சிறந்த அறிவாளிகள் எல்லாம் இந்த இயக்கத்தில் இருக்கின்றார்கள்.
அவர்களையெல்லாம் பின்பற்றி, நான் நல்ல காரியத்தைச் செய்யவேண்டும் என்கிற நோக்கத்தில்தான் இந்தக் காரியத்தைச் செய்தேன். அதற்காக அய்யா ஆசிரியர் அவர்களுக்கு என்னுடைய வாழ்நாள் முழுவதும் நன்றிக் கடன்பட்டுள்ளேன்.
ஆசிரியர் அவர்கள் நீண்ட காலம் வாழ்ந்து, தமிழ்நாட் டையும், தமிழ் மக்களையும் இன்னும் மிக உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்லவேண்டும் என்று நான் உங்கள் சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.
உங்களுடைய பாராட்டு என்னை திக்குமுக்காடச் செய்து விட்டது
பல ஆண்டுகளுக்கு முன்பு,  அனுமந்தபட்டியில் உள்ள கந்தசாமி பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றது.  அந் விழாவில், தந்தை பெரியார் அவர்கள் பங்கேற்றார். அந்தப் பள்ளியில் என்னுடைய நண்பர் பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்பொழுது, அய்யா தந்தை பெரியார் அவர்கள் எங்களுடைய பள்ளிக்கு வருகிறார்கள். நீங்கள் அவருடைய கொள்கையை விரும்பக்கூடியவர். ஆகவே, நாடகம் ஒன்றை எழுதிக் கொடுங்கள் என்று சொன்னார்கள். இப்பொழுது எனக்கு அவையெல்லாம் நினைவிற்கு வருகிறது. சென்ற முறை வந்தபொழுது, நான் எதையும் பேச முடியவில்லை. உங்களுடைய பாராட்டு என்னை திக்குமுக்காடச் செய்து விட்டது.  ஆகவே, நான் மெய்மறந்த நிலையில், நான் ஒன்றும் சொல்ல முடியாமல் போய்விட்டது. அதற்காக மீண்டும் உங்களுக்கு நன்றியைச் சொல்லிக் கொள்கிறேன், ஆசிரியர் பெருமக்கள் உள்பட.
வாழ்நாளில் நீங்கள் உயரும்போது இதுபோன்ற உதவிகளைச் செய்யுங்கள்!
அந்த நாடகத்திற்குப் பெயர், மூன்று சபதங்கள். நான் அவசரத்தில் கிளம்பி வந்ததினால், அது எங்கே இருக்கிறது என்று தேட முடியவில்லை. அப்படி ஒரு சூழ்நிலையில் நான் வளர்ந்து வந்ததினால்தான், இந்தக் காரியத்தைச் செய்தேன். இப்பொழுதும் இந்தப் பள்ளியினுடைய வளர்ச்சிக்கு அய்யா அவர்களிடம் ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையைக் கொடுத்துவிட்டுச் செல்கிறேன். அதை நீங்கள் எல்லோரும் பயன்படுத்தி, தமிழ்நாட்டையும், தமிழக மக்களையும், என்னைப் போன்று நீங்களும் உங்களுடைய வாழ்நாளில் உயர்ந்திருக் கின்ற காலத்தில், இதுபோன்ற உதவிகளை முடிந்தளவு செய்யும்படி கேட்டுக்கொண்டு என்னுடைய உரையை முடித்துக் கொள்கிறேன். நன்றி, வணக்கம்!
- இவ்வாறு அய்யா ராமசாமி அவர்கள் உரையாற்றினார்.

மகாபாரதத்தின் யோக்கியதை என்ன?


கல்வித் திட்டத்தில் இராமாயணம், மகாபாரதம், கீதை முதலிய நூல்கள் இடம் பெறச் செய்யப்படும் என்று மத்திய பிஜேபி அரசு அறிவித்துள்ளது.
இந்நூல்கள் இந்து மதத்தைச் சேர்ந்தவை என்பது எல்லோருக்கும் தெரியும். ஒரு மதச் சார்பற்ற அரசு - இப்படி ஒரு குறிப்பிட்ட மதத்தின் நூல்களைக் கற்பிக்கத் திட்ட மிடுவது சரியா? என்பது நியாயமான கேள்வி.
பிற மதத்தவர்கள் மத்தியிலும் மத நம்பிக்கையற்ற வர்கள் மத்தியிலும் இத்தகு செயல்பாடுகள் எந்த அளவு மனப் புண்ணை ஏற்படுத்தும்? வாஜ்பேயி பிரதமராக இருந்த காலத்தில் இப்படித்தான் ஆரம்பித்தார்கள். கடவுள் வாழ்த்துப் பாடலாக சரஸ்வதி வந்தனா என்ற இந்துத்துவா பாடலை அறிமுகப்படுத்தி னார்கள்; பிஜேபி அரசு கூட்டிய மாநிலக் கல்வி அமைச் சர்கள் மாநாட்டிலேயே அதற்கு எதிர்ப்புக் கிளம்பியது; அம்மாநாட்டில் பங்கேற்ற  தமிழ்நாடு கல்வி அமைச்சர் மாண்புமிகு பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள் அதனை எதிர்த்து மாநாட்டை விட்டே வெளியேறினார். பெரும் பாலான மாநிலக் கல்வி அமைச்சர்களும், எதிர்ப்புகளைப் பதிவு செய்தனர்.
காலம் கடந்து விட்டதால் மக்கள் மறந்து இருப்பார்கள் என்ற நினைப்போ என்று தெரியவில்லை. இப்பொழுது ஒருபடி மேலே சென்று இந்து மத இதிகாசங்களை கல்வித் திட்டத்தில் புகுத்த உள்ளனர்.
இராமாயணத்தின் தன்மைபற்றி நேற்றைய தலையங் கத்தில் குறிப்பிட்டு இருந்தோம். இன்று மகாபாரதத்தைப் பற்றி ஒரு வரைபடத்தைக் கொடுப்பது நமது கடமை.
ஏகலைவன் என்ற வேட்டுவக் குலத்தைச் சேர்ந்தவன் வில் வித்தையில் திறமை உள்ளவனாக இருந்தான். நாய் குரைக்கும் ஒலியைக் கணித்து அம்பு எய்துக் கொன்றான் அந்த வேட்டுவக் குல ஏகலைவன். துரோணாச்சாரிக்கு மிகப் பெரிய ஆச்சரியம். தன் சீடன் அர்ச்சுனனால் தானே இது இயலக் கூடியது. இதனை எய்தவன் யார் என்று அவன் யோசித்தபோது அம்பை எய்த அந்த ஏகலைவன் துரோணாச்சாரியின் முன் வருகிறான்.
உனது குரு யார் என்ற கேள்வியைத் தொடுக்கிறான்? சுவாமி நான் உங்களிடம் வில் வித்தை கற்றுக் கொள்ள வந்தபோது, நான் தாழ்ந்த ஜாதி குலத்தில் பிறந்தவன் என்று கூறி வில் வித்தையைக் கற்றுக் கொடுக்க மறுத்தீர்கள்.
மனம் நொந்து போனேன்; ஆனால், முயற்சியைக் கைவிடவில்லை; உங்களைப் போல உருவம் செய்து தங்களையே என் குருவாகக் கருதி இந்த வில்வித்தையைக் கற்றுத் தேர்ந்தேன்! என்றான் பவ்யமாக.
அப்படியா சீடா? உன் குரு பக்தியை மெச்சினோம் என்று முதுகைத் தட்டிக் கொடுத்தாரா?
எப்படிப் பாராட்டுவார்? அவர்தான் உயர் குலத்தோர் ஆயிற்றே! - வருணாசிரமத்தைக் கட்டிக் காக்கும் காகப்பட்டராயிற்றே!
அவர் திருவாய் மலர்ந்தது என்ன? நீ என்னை குருவாக வரித்துக் கொண்டுதானே வில் வித்தை கற்றாய்?
ஆமாம் என்று அடி பணிந்து நின்றான் அந்த வேட்டுவக் குல ஏகலைவன்.
அப்படியானால் எனக்குக் குரு தட்சணை கொடுக்க வேண்டாமா? கொடுப்பாயா? என்று கேட்டார்.
எது கேட்டாலும் கொடுப்பேன் என்றான் அந்த ஏதுமறியாத அப்பாவி.
உன் கட்டை விரலை குருதட்சணையாகக் கொடு! என்றான் இரக்கம் என்னும் ஒரு பொருளில்லா அந்தக் குரூரனான துரோணாச்சாரி.
அக்கணமே வெட்டிக் கட்டை விரலைக் காணிக்கை யாகத் தந்தான். கட்டை விரலைக் காணிக்கையாகப் பெற்றால், அவன் வில்லை வளைத்து அம்பை எய்ய முடி யுமா? சூழ்ச்சியிலே பிறந்த கூட்டத்தின் தலைவனல்லவா - அந்தத் துரோணாச்சாரி பார்ப்பான்.
ஒரு குலத்துக்கொரு நீதி சொல்லும் இந்த மகாபார தத்தைத்தான் பள்ளிகளில் பாடத் திட்டத்தில் சேர்க்க  வேண்டுமாம்.
இதுபோல எத்தனை எத்தனையோ எடுத்துக்காட்டு களைக் கொண்டு வந்து முன்னிறுத்தலாம். இதனையும் தாண்டி மகாபாரதம் போதிக்கும் நீதிதான் என்ன? பாண்டவர்கள் கிருஷ்ணன் துணையோடு உறவினர் களுடன் போரிட நேரிட்டது பலன் கருதாப்பணியா? அவர் களைக் கொன்று வென்று நாட்டை ஆள வேண்டுமென விரும்பியது பலனை எதிர்பார்த்த பணிதானே?
துரோணரின் மகன் அசுவத்தாமன் இறந்து விட்டான் என்று தருமரை ஏவிப் பொய் சொல்ல வைத்தது ஏன்? கவுரவர்களுக்குப் போரில் பெருந் துணையாக இருக்கும் துரோணாச்சாரியாரைக் கொல்ல வேண்டுமென்ற சூழ்ச்சியால் தானே? தருமரைப் பொய் சொல்ல வைத்தது பலன் கருதாப் பணியா? கிருஷ்ணன் போரில் ஜயந்திரனை நோக்கி சூரியன் மறைந்து விட்டது என்று ஏன் பொய் சொல்ல வேண்டும்? பலன் கருதாப் பணியை வலி யுறுத்தும் கிருஷ்ணன், இதனைப் பலன் கருதாமலா சொன் னான்? மெய்க் காப்பாளர்கள் துணையின்றித் தனிமையி லிருந்த ஜயந்திரனை அம்பெய்து கொன்றது பலன் கருதாப் பணியா?
பெண்ணாகப் பிறந்தவரிடம் போர் செய்ய விரும்பாத பீஷ்மரை அவருக்கு எதிரேயிருந்த சிகண்டிக்குப்பின் நின்று கொண்டு அர்ச்சுனன் பீஷ்மரைக் கொன்றது பலன் கருதாப் பணியா? (நூல்: கீதையின் மறுபக்கம் ஆழமும் அகலமும் - பா. வீரமணி)
இத்தகு ஒழுக்கக் கேடான நூலை மாணவர்களுக்குப் போதிக்க வேண்டுமா?
தி இந்து இங்கிலீஷ் நாளேட்டின் ஆசிரியர் கடிதம் பகுதியில் ஒரு கடிதம் வெளி வந்தது. அதனை எழுதியவர் சென்னையைச் சேர்ந்த டி.ஆர். சுந்தரம். கடிதம் வெளிவந்த நாள்: 17.12.1988.
அந்தக் கடிதம் என்ன கூறுகிறது?
எமதர்மன்  வாயு பகவான்  ஆகியோரால் குந்திக்கு, தர்மர் முதலியோர் பிறக்கிறார்கள். தொலைக்காட்சியில் வாயுவைக் காட்டும்போது உடனே குழந்தைகள், அந்தப் பிறப்புப் பற்றி சில கேள்விகளைக் கேட்கத் துவங்கு கிறார்கள். பெற்றோர்களால் பிள்ளைகளின் அத்தகைய கேள்விகளுக்கு பதில் சொல்ல முடிவதில்லை; அது தெய்வ சம்பந்தப்பட்டது; எனவே அதுபற்றி எல்லாம் கேள்வி கேட்கக் கூடாது என்று பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. பாண்டவர்களும், கவுரவர்களும் சூதாடுவது பாண்ட வர்கள் தோற்பது, மனைவியை வைத்தே சூதாடுவது, திரவுபதையைத் துகில் உரிவது ஆகிய காட்சிகள் எல்லாம் வர இருக்கின்றன. இவைகளைக் குழந்தைகளை வைத்துக் கொண்டு எப்படிப் பார்க்க முடியும்?
எனவே, தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் மகாபாரதம் தொடரை வீட்டில் குழந்தைகளை வைத்துக் கொண்டு பார்க்க முடியவில்லை. வயது வந்தவர்களுக்கு மட்டும்  என்று அறிவித்து நள்ளிரவு நேரத்தில் மகாபாரதத் தொடரை ஒளிபரப்ப வேண்டும் என்று இந்து ஏட்டில் கடிதம் எழுதப்படவில்லையா? அந்த மகாபாரதத்தை பள்ளியில் சொல்லிக் கொடுக்கப் போகிறதாம் பாரதிய ஜனதா அரசு; பெற்றோர்களே எச்சரிக்கை! எச்சரிக்கை!!

வெளிநாட்டுப் பயணத்திலும், தேர்தல் பிரச்சார மன நிலையிலேயே மோடி இருக்கிறார் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு


மும்பை,  செப்.29_ வெளிநாட்டுப் பயணத்தில் இருக்கும் இந்தியப் பிரதமர் மோடி பேசும் பேச்சுகளைக் கவனித்தால் இன்னும் அவர் தேர்தல் பிரச்சார மன நிலையிலேயே இருக் கிறார் என்பதைத்தான் காட்டுகிறது என்று எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
காங்கிரஸ் கட்சியை அமெரிக்கா வில் பிரதமர் மோடி மறைமுகமாக விமர்சித்ததற்குப் பதிலடியாக, அவரது வெளிநாட்டு நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அக் கட்சி வலியுறுத்தியுள்ளது. அமெரிக்காவின் சான் ஜோஸ் நகரில் அந்நாட்டில் வாழும் இந்தியர் களிடையே பேசிய மோடி, ""நம் நாட்டில் சில அரசியல்வாதிகளும் அவர்களது மகள், மருமகன் உள்ளிட்ட குடும்பத்தினரும் கோடிக்கணக்கில் சொத்து குவிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஆனால் எனது அரசு மீது எந்த ஊழல் புகாரும் இல்லை'' என்று குறிப்பிட்டார். 
அவரது இந்தக் கருத்து காங்கிரஸ் தலைவர் சோனியா குடும்பம் மற்றும் அவரது மருமகன் ராபர்ட் வதேரா மீதான பிரதமரின் மறைமுக விமர்சனமாக கருதப்படுகிறது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஆனந்த் சர்மா, டில்லியில் செய்தியாளர் களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: பிரதமர் மோடி வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை மேற்கொள்ளும் போது அங்கு நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் குறித்தும், அவற்றுக்குத் தேவைப்படும் கோடிக்கணக்கான டாலர் நிதி ஆதாரம் குறித்தும் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
 அமெரிக்காவில் மோடி பேசுகையில் தனது தாயாரைப் பற்றி குறிப்பிடும்போது உணர்ச்சிவசப் பட்டதைப் பொறுத்தவரை அவர் மீண்டும் ஒரு முறை ஒரு நாடகத்தை அரங்கேற்றி, அற்புதமாக நடித்துள்ளார் என்றே கூற வேண்டும். மோடி தன்னை மிக வலிமையான தலைவராக கருதிக் கொள்கிறார். ஆனால், தன்னுடன் தனது தாயாரை அவர் ஏன் தங்க வைத்துக் கொள்ள வில்லை? தாம் சிறுவனாக இருந்தபோது தேநீர் விற்றதாக மோடி கூறிக் கொள் கிறார். 
ஆனால் அது உண்மையல்ல. அவர் தனது குழந்தைப் பருவத்தில் தனது உறவினரின் உணவகத்தில் வாடிக்கையாளர்களிடம் பணம் பெற் றுக் கொள்ளும் பணியையே கவனித்து வந்தார். ஊழல் விவகாரத்தைப் பொறுத்த வரை மோடி இரட்டை வேடம் போடு கிறார். 
லலித் மோடி விவகாரத்தில் தொடர்புடைய தனது அமைச்சரவை சகாக்கள் மீதும், ஊழல் குற்றச்சாட் டுக்கு ஆளான தன் கட்சி முதல்வர்கள் மீதும் மோடி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார் ஆனந்த் சர்மா. மராட்டிய மாநில காங்கிரஸ்... மோடியின் விமர்சனம் தொடர்பாக, மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அனந்த் காட்கில், மும்பையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அமெரிக்கா சென்றுள்ள மோடி அங்கு காங்கிரஸ் கட்சியை விமர்சித்துள்ளார். 
வெளியுறவுக் கொள்கை குறித்த நம் நாட்டின் கருத்துகளைப் பேசாமல் தனது நாட்டு எதிர்க்கட்சி (காங்கிரஸ்) குறித்து அங்கு குறைகூறியுள்ளார். இது காங்கிரஸ் கட்சியைக் காட்டிலும் நாட்டின் நற்பெயருக்கே பாதிப்பை ஏற்படுத்துகிறது.
மக்கள வைத் தேர்தல் முடிந்து ஓராண்டு கடந்துவிட்டநிலையில், மோடி இன்ன மும் தேர்தல் பிரச்சார மனநிலை யிலேயே இருப்பதாகத் தோன்றுகிறது என்றார் அனந்த் காட்கில். இந்திய கம்யூனிஸ்ட் விமர்சனம் இதனிடையே, மோடியின் கருத்து தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா கூறியதாவது: மோடி தனது வெளிநாட்டுப் பயணங்களின்போது பிரதமரைப் போல் நடந்து கொள்வதில்லை. 
அவர் இன்னமும் தேர்தல் பிரச்சார மனநிலை யிலேயே இருப்பது போல் தோன்று கிறது. வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் போது அவர் ஆர்.எஸ்.எஸ்.காரர் போலவோ பாஜக நிர்வாகி போலவோ நடந்து கொள்ளாமல் இந்தியப் பிரதம ராக நடந்து கொள்ள வேண்டும் என்றார் அவர்.

ஜாதி பாகுபாடு மாற்றம் பெற்றதற்கும், தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு செயல்படுவதற்கும் காரணம் தந்தை பெரியாரே!

ஜாதி பாகுபாடு மாற்றம் பெற்றதற்கும், தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு செயல்படுவதற்கும் காரணம் தந்தை பெரியாரே!
தந்தை பெரியாருக்கும், அண்ணாவுக்கும் பாரத ரத்னா பட்டம் அளிக்காதது ஏன்?

சென்னைப் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் காந்தியார் - ராஜாஜி பேரன் கோபாலகிருஷ்ண காந்தி கருத்துரை

சென்னை, செப்.29 ஜாதி ஒழிப்பு - இடஒதுக்கீடு தமிழ்நாட்டில் மலர்ந்திருப்பதற்குக் காரணம் தந்தை பெரியாரே! தந்தை பெரியா ருக்கும், அண்ணாவுக்கும் பாரத ரத்னா பட்டம் கொடுக்கப்பட்டு இருக்க வேண்டும்; கொடுக்கப் படாதது ஒரு குறைபாடே என்று சென்னைப் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாவில் கோபாலகிருஷ்ண காந்தி உரையாற்றியபோது தந்தை பெரியாரைப் பற்றி அவர் குறிப்பிட்ட போதெல்லாம் அரங்கமே அதிரும் அளவுக்கு நீண்ட கை தட்டல் கிடைத்தது. (28.9.2015)
சென்னை பல்கலைக் கழகத்தின் 158ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா செப்டம்பர் 28ஆம் நாள் பல்கலைக் கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெற்றது. பட்டமளிப்பு விழாவில் காந்தியார் - இராஜாஜி ஆகியோரது பேரனும், பல்லாண்டு காலம் இந்திய வெளியுறவுத் துறையில் உயர் அதிகாரியாகப் பணியாற்றி பின்னர் மேற்கு வங்க ஆளுநராக பொறுப்பு வகித்த கோபாலகிருஷ்ண காந்தி பட்டமளிப்பு பேருரை ஆற்றினார். நூற்றுக்கும் மேற்பட்டோர்  முனைவர் பட்டம் மற்றும் பிற பட்டங்களில் விருது மற்றும் பரிசுகளைப் பெற்றனர்.
பட்டமளிப்புப் பேருரை யானது சென்னை, தமிழ் நாட்டின் சிறப்பு, நாட்டு நிலைமை, பட்டம் பெறுவோர் ஆற்ற வேண்டிய கடமை பற்றிய கருத்துச் செறிவுடன், இலக்கிய நயத்துடன் இருந் தது. கோபாலகிருஷ்ண காந்தி தமது உரையின் பொழுது பல கட்டங்களில் தந்தை பெரியாரைக் குறிப்பிட்டு அவர் ஆற்றிய மிகப் பெரிய சமுதாயப் பணி மற்றும் அதன் தாக்கம் ஏற்படுத்திய மேம்பாட்டு விளைவு பற்றிக் குறிப்பிட்டார்.
தந்தை பெரியாரின் பங்களிப்பு
சென்னையின் சிறப்புக்கு பெருமை சேர்ந்தவர்கள் வரிசையில் சமூக தத்துவ விளக்கம் பற்றிய பங்களிப்பில் தந்தை பெரியாரைக் குறிப்பிட்டார். நாட்டில் நிலவிடும்  சமூகப் பொருளாதார ஏற்றத் தாழ்விற்கு அடிப்படைக் காரணம், ஜாதி அமைப்பு முறை மற்றும் ஜாதியால் மனிதரில்  ஏற்றத் தாழ்வு கற்பிக்கப்பட்டு வருவதே ஆகும். ஜாதி  பாகுபாடு ஒழிப்பில் பிற மாநிலங்களைவிட தமிழ்நாட்டின் முற்போக்குக்குக் காரணம் தந்தை பெரியாரும் அவர் தொடங்கிய சுயமரியாதை இயக்கமும் தான் அடிப்படைக் காரணம். தந்தை பெரியாரின் சமுதாய மேம்பாட்டுப் பணி போற்றுதலுக்குரியது;
ஒடுக்கப்பட்ட மக்களை தூக்கிவிடும் வகையில் உள்ள இடஒதுக்கீடு முறை தமிழகத்தில் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இடஒதுக்கீடு முறை தொடர்ந்திட தந்தை பெரியார் ஆற்றிய பணி மகத்தானது. இதிலும் தமிழ்நாடு முன் மாதிரியாக உள்ளது. மற்ற மாநிலங்களைவிட மத நல்லிணக் கங்களும், சமய சார்பின்மையும் தமிழ்நாட்டில் அதிகமாக நிலவுகிறது. இதற்குக் காரணமான அரசியல், சமூக சீர்திருத்த தலைவர்கள் அனைவருக்கும் நன்றி.
பாரத ரத்னா பட்டம் பெரியாருக்கும் அண்ணாவுக்கும் அளிக்காதது குறைபாடே!
மேலும் தமிழ்நாட்டைச் சார்ந்த பெரு மக்களுக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதினை வழங்கி பெருமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் வரிசையில் இரு பெரும் தலைவர்கள் பெயர் விடுபட்டுப் போய் விட்டது. அவர்தாம் பெருமைக்கு உரிய தலைவர்கள் தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் ஆவார். இது வரை பாரத ரத்னா விருது  இரு  பெரும் தலைவர்களுக்கு வழங்கப் படாதது ஒரு பெரும் குறையே என ஆதங்கத்தோடு தமது பட்டமளிப்பு விழா பேருரையில் கோபாலகிருஷ்ண காந்தி குறிப்பிட்டார்.

Monday, September 28, 2015

சமுக சீர்திருத்தமும் - சமயக் கொள்கையும்

- தந்தை பெரியார்

தலைவர் அவர்களே! இளைஞர் களே!! சகோதரர்களே!!!  2 மணி நேரத் திற்கு முன்தான் இந்த இடத்தில் இந்த விஷயத்தைப்பற்றி நான் பேச வேண்டும் என்பதாக ஒரு மாணவ நண்பர் கேட் டார்.  இன்றைய விஷயம் இன்னது என்று இப்போதுதான் தெரிந்து இதைப் பற்றி என்ன சொல்லுவது என்றும், இது மிகவும் விவாதத்திற்கிடமான சங்கதி. ஆதலால் திடீரென்று என்ன பேசுவ தெனவும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
யோசனை முடிவதற்கு முன்னமேயே மேடைக்கு அழைக்கப்பட்டு விட்டேன்.  ஆனாலும் இதைப் பற்றிய என்னுடைய பழைய சங்கதிகளையே இந்தத் தலைப் பின் கீழ் சொல்லப்போகின்றேன். நீங்கள் பெரும்பாலும் மாணவர்களும், இளைஞர் களுமாய் இருப்பதால் நான் சொல்லு வதை திடீரென்று நம்பி விடாதீர்கள்.  நிதானமாய் யோசனை செய்து பிறகு ஒருமுடிவிற்கு  வாருங்கள் என்பதை முதலில் உங்களுக்கு எச்சரிக்கை முறையில் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.
நண்பர்களே சமுக சீர்திருத்தம் என்றால் எந்த சமுகம் என்பதும், சமயக் கொள்கை என்றால் எந்த சமயம் என் பதையும் முதலில் முடிவு கட்டிக் கொள் வது இங்கு  அவசியமாகும். நான் இப் போது பொதுவாக மனித சமுகம் என் பதையும் பொதுவாக மனித சமுகத்திற்கு ஏற்ற சமயம் என்னும் பேரால் உலகில் வழங்குவதாக நமக்குத் தெரிந்த சமயங் களையும் எடுத்துக் கொள்ளுகிறேன்.  பிறகு அவசியமிருந்தால் தனிச் சமுகம், தனிச் சமயம் என்பதில் பிரவேசிக்கலாம் என்று இருக்கிறேன்.  பொதுவாக சம யங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்ப வைகள் எல்லாம் நல்ல அர்த்தத்தில் எடுத்துக் கொண்டாலும் அவை மனித சமுகத்தின் வாழ்க்கை நலத்திற்கே ஏற் படுத்தப்பட்டவையாகும். மனித வாழ்க் கைக்கேற்ற திட்டங்களே தான் சமயம் அல்லது மார்க்கம் என்று சொல்லப்படு வதுமாகும்.
ஒரு வாசக சாலையிலேயோ, உல் லாசக் கூட்ட சாலையிலேயோ, ஒரு சங்கத்திலேயோ சேர்ந்திருக்க வேண் டிய அங்கத்தினர்கள் அச்சங்கத்தின் நிர்வாகத்தின் அவசியத்திற்காக என்று தங்களுக்குள் விதிகளை நிர்ணயித்துக் கொள்வதுபோலவே ஒரு பிராந்தியத் தில் வாழும் ஜனங்கள் தாங்கள் சேர்ந் திருப்பதற்காகவும், தங்கள் வாழ்க்கை தடையின்றி முறையாய் மற்றவர்களுக்கு இடையூறு இல்லாமல் நடைபெறுவதற் காகவும் ஏற்படுத்திக்கொண்ட அல்லது யாராவது ஒரு தலைவனால் அல்லது அறிஞனால் ஏற்படுத்தப்பட்ட விதிகளே சமயக் கொள்கைகளாகும்.
இதுவும் அந்தந்த காலதேச வர்த்தமானத்திற்கும், மக்கள் அறிவு நிலைமைக்கும், வளர்ச்சிக் கும் தக்கபடி செய்யப்படுவதேயாகும்.  ஆனால், அக்கொள்கைகள் மக்கள் தங்களது நன்மை தீமைகளைக்கூட சரிவர உணர்ந்து நடந்துகொள்ள முடியாத அறிவு  இல்லாத காலத்தில் மக்களைப் பயப்படுத்தி இணங்கச் செய்ய என்று பல கற்பனைகளை உண்டாக்கி பயப்படுத்தி வைத்து அப்பயத்தின் மூலமாவது நடக்கும்படி செய்யக் கருதி ஏற்படுத்திய கொள்கைக்கும் சேர்ந்ததே யாகும். அதாவது, 
எப்படி ஒரு குழந்தை யானது தன்னைக் காப்பாற்றிக் கொள்ளக் கூடிய சக்தியில்லாத தென்றும் அதைப் பற்றிய விபரங்களை எடுத்துச் சொன் னால் அதை அறிந்து கொள்ளமுடியா தென்றும் அதன் பெற்றோர்களோ, பாதுகாப்பாளர்களோ கருதினால் அக்குழந்தை வெளியில்போய் நடமாடி ஆபத்தில் பட்டுக் கஷ்டப் படாதிருக்கச் செய்ய வேறுவிதமாக அதாவது ஒரு வித பயம் உண்டாகும்படியான பூச்சாண்டி பிடித்துக் கொள்வான் என்றும்,  பேய், பூதம்  பிடித்துக் கொள்ளும்  என்றும், துண்டித்தக்காரன் பிடித்துக் கொண்டு போய் அடைத்து விடுவான் என்றும், இன்னும் பலவகையாய்  சொல்லுவ தோடு கையையும், 
முகத்தையும் ஒருவித மாக ஆக்கிக்காட்டி அக்குழந்தைக்கு ஒன்றும் புரியாதபடி மிரட்டி பயப்படுத்தி வைத்து அதை எப்படி வெளியில் போகாமல் செய்கின்றோமோ அப்படிப் போலவே மக்கள் வாழ்க்கை நலத்திற் கென்று ஏற்படுத்தப்பட்ட கொள்கை களை உணர்ந்து அதன்படி ஒழுக முடியாத நிலையில் மனிதர்கள் இருக் கிறார்கள் என்று கருதப்பட்ட காலத்தில் அப்போதுள்ள அறிஞர் என்பவர்கள் அம்மக்களை பயப்படும்படியாக ஏதோ அம்மக்களுக்குப் புரியாத ஒன்றைச் சொல்லி வேறுவித பயத்தை உண்டாக்கி அக்கொள்கைகளுக்கும், மதக் கட்டுப் பாட்டிற்கும் இணங்கி நடக்கும்படி செய் திருக்கிறார்கள். 
 அந்த நிபந்தனை மிரட் டல்களும், கட்டுப்பாடுகளும்தான் இன் றைய மோட்சம், நரகம், எமன், அடுத்த ஜென்மம், கர்மம், விதி, செக்கில் போட்டு ஆட்டுவது முதலாகியவைகளாகும்.  மற்றும் இவற்றை வலியுறுத்தி எழுதிய சாஸ்திரம், புராணம், இதிகாசம் முதலியவைகளில் சொல்லப் பட்டவைகளுமாகும்.  அது மாத்திரமல் லாமல் மேற்கண்ட முறையில் சொல்லு பவைகளெல்லாம் சொல்லிவிட்டும் எழுதி விட்டும் ஆனபிறகு இவைகளை மனிதன் சொன்னான் மனிதன் எழுதினான் என்றால் நம்பமாட்டார்கள் என்று கருதி (ஏனெனில் அவை நம்பமுடியாததும், அறி வுக்குப் பொருந்தாததுமாய் இருப்பதால்) அவை களையெல்லாம் கடவுள் சொன்னார்.  பகவான் சொன்னார், முனிவர் சொன் னார், 
ரிஷி சொன்னார் என்று அதாவது மனிதத்தன்மைக்கு மீறினவர்களால் சொல் லப்பட்டது என்று சொல்லி கட்டாயப்படுத்தி எப்படியெனில் நம்பினவனுக்கு மோட்சம், நம்பாதவனுக்கு நரகம், கழுதை ஜன்மமாய் பிறக்கவேண்டும் என்று சொல்லி நம்பச் செய்வதுமான காரியத்தின் மீதேதான் சமயக் கொள்கைகளை மக்களுக்குள் புகுத்தி இருக்கிறார்கள்.  இவற்றையெல்லாம் உண்மை என்று நம்பிய பாமர ஜனங்களும், இவற்றினால் பிழைக்க வசதி செய்து கொண்ட சில பண்டித ஜனங்களும் இந்த மாதிரிக் கொள்கைகள் கொண்ட சமயங் களை முரட்டுப் பிடிவாதம், 
குரங்குப் பிடியாய் பிடித்து சிறிது கூட காலத்திற்கும், அறிவின் நிலைமைக்கும் ஏற்றமாதிரி திருந்துவதற்கு விடாமல் முட்டுக்கட்டை போட்டு வந்ததாலேயே அறிவுக்குத் தகுந்த படியும் காலத்திற்கு ஏற்றபடியும் பலபல சமயங்கள் தோன்ற வேண்டியதாயிற்று. அன்றியும் திருந்த இடம் கொடுத்துக் கொண்டு வந்த சமயமெல்லாம் பெருகவும்,
 பிடிவாதமாய் இருந்ததெல்லாம் கருகவுமாய் இருந்து கொண்டு வரவேண்டியதுமாயிற்று.  ஆகவே, இன்றைய தினமும் மக்கள் எந்தச் சமயமானலும் இந்த தத்துவத்தின் மேல் ஏற்பட்ட தென்பதையும் ஒத்துக்கொண்டு கால தேசவர்த்தமானத்திற்கும், அறிவு வளர்ச்சிக்கும் தகுந்தபடி திருத்தமடைய உரிமையும் சௌகரியமுமுடையது என்று சொல்லப்படுவதாயின் அது எந்த மதமா யினும் சமயமாயினும் (கொள்கையாயினும்) அறிவுள்ள மனிதன் ஒப்புக்கொள்ள வேண்டியதேயாகும்.
அப்படிக்கில்லாமல், அதாவது மனித னின் உலக வாழ்க்கை நலத்திற்கு மதம் ஏற்பட்டது என்பதாக இல்லாமல் அதுவும் காலத்திற்கும், அறிவுக்கும் ஏற்ற மாறுதலுக் குக் கட்டுப்பட்டது என்பதாக இல்லாமல் மதத்திற்காக மனிதன் ஏற்பட்டான் என்றும், அந்த மதத்தைக் காப்பாற்ற வேண்டியதே மனிதனின் கடமையென்றும், அது எப்படிப் பட்டதானாலும் அதைப்பற்றிக் குற்றம் சொல்லவோ திருத்தவோ யாருக்கும் உரிமை இல்லை என்றும் சொல்லும்படியான மதம் எதுவாய் இருந்தாலும் அதை அழித்துத் தீரவேண்டியது மனித சமுக சீர்திருத்தத் தைக் கோருகிற ஒவ்வொருவருடையவும் முக்கியமான கடமையாகும்.
ஆகவே, அக்கடமைக்கு கட்டுப்பட்ட வைகள்தான் சமயக் கொள்கைகளாகும். இனி இந்திய சமுகத்தையும், இந்து சமயத் தையும் எடுத்துக் கொண்டோமானால் அது சுருக்கத்தில் முடிக்கக் கூடியவோ, விளக்கக் கூடியவோ, முடியும்படியான விஷயமல்ல. இந்திய மனித சமுகம் பெரிதும் சமயத்தைக் காப்பாற்றப் பிறந்ததாகக் கருதிக் கொண்டி ருக்கின்றன. அப்படிக் கருதிக் கொண்டிருப் பதிலும் மற்றொரு சிரிப்புக்கு இடமான விஷயம் என்னவென்றால், மனித சமுக நன்மைக்கென்று ஏற்படுத்தப்பட்ட கொள் கைகளையெல்லாம் விட்டுவிட்டு அக் கொள்கைகளை நிறைவேற்றவென்று பொய்யாகவும், கற்பனையாகவும், பயத்திற் காகவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த அர்த்தமற்ற போலி நிபந்தனைக் கொள்கை களைக் கெட்டியாய் பிடித்துக்கொண்டு கட்டி அழுவதாய் இருக்கின்றது.
காரணம் என்னவென்றால், மனிதனை அறிவு பெறுவதற்கு விடாமலும் விஷயங் களைப் பகுத்தறிந்து நடப்பதற்கு சுதந்திரம் கொடாமலும் கட்டிப்போட்டு வைத்திருந் தால் இந்திய மனித சமுகம் இன்றும் சுய அறிவற்று சமயத் தின் கருத்தென்ன? சமயக் கொள்கைகள் எதற்கு ஏற்பட்டது?  என்ப வைகளைக் கவனிக்காமல் கீழ் நிலை யிலேயே இருந்து கொண்டு சீர்திருத்த மடையவோ, முன்னேற் றமடையவோ முடியாமல் தவிக்கின்றன. 
 உதாரணம் வேண்டுமானால் பாருங்கள் எல்லா சமயக் காரர்களின் மனோபாவமும், குணமும் மற்றவனிடம் நடந்து கொள்ளும் பான்மை யும் ஒரே மாதிரியாக இருப்பதைக் காண் கின்றோம்.  ஆனால், ஆண்களைப் பார்த் தால் இன்ன இன்ன சமயம் தான் என்று கண்டுபிடிக்கும்படியாய் வேஷத்தை மாத்திரம் போட்டுக்கொண்டு இருக் கிறார்கள்.  
இவன் இஸ்லாமானவன், இவன் கிறிஸ்துவன், இவன் பௌத்தன், இவன்  இந்து, இவன் சைவன், இவன் வைண வன், இவன் ஸ்மார்த்தன் என்று சுலபத்தில் கண்டுபிடித்துவிடலாம்.  ஆனால், இவர்கள் இத்தனை பேர்களுடைய ஒழுக்கங்களைப் பார்த்தால் மாற்றமில்லாதபடி ஒரே மாதிரி யாகத்தான் இருக்கும். ஆகவே, மதம் என்ப தும் சமயம் என்பதும் யாருக்கும் அநேக மாய் வேஷ மாத்திரத்தில் இருக்கின்றதே யொழிய, கொள்கை மாத்திரத்தில் இல்லை என்பதும், மக்கள் வேஷத்தைக்  கெட்டி யாகப் பிடித்துக் கொண்டு கொள்கைகளை அடி யோடு நழுவவிட்டு விட்டார்கள் என்பதும் நன்றாய் விளங்கும்.
இதற்குக் காரணம் என்னவென்றால், இன்றைய உலகில் சமய போதனை என்பதே வேஷத்தை சொல்லிக் கொடுத்து அதைக் கிரமமாய் அந்தந்த சமயத்தார்கள்  பின்பற்றுகிறார்களா? இல்லையா என்று பார்ப்பதல்லாமல் கொள்கையை  வற்புறுத்தாததேயாகும்.  எந்த சமயத்திற்கும் இந்த மாதிரி வேஷந்தான்  பிரதானமான கொள்கை என்று ஆகிவிட்டதால் தான்,
 எந்த சமய மக்களிடம் சமய உண்மைக் கொள்கை களைப் பார்க்க முடியாமால்  போனதோடு, சமயத்தின் பேரால் எப்படிப்பட்ட கொள் கையைச் சொன்னாலும்  லட்சியம் செய் யாமல் போய் விட வேண்டியதாகிவிட்டது அன்றியும் மக்களுக்கு இவ்வளவு சுலபத் திலேயே அதாவது வேஷமாத்திரத் திலேயே சமயப் பிரதானம் கிடைத்து விடுகின்றதாலும் உண்மையான அதாவது மனிதனிடம்  நடந்து கொள்ள வேண்டிய கொள்கை நிறைவேற பலவித மாக பயங்களுக்காக கற்பிக்கப்பட்ட மோட்சம், 
கடவுள் அருள் அடுத்த ஜென்மத்தில் மேன்மையான பதவி  ஆகியவைகள் என்பவைகள்  எல்லாம் மேல்கண்ட வேஷ மாத்திரத்தாலே  கிடைத்து விடுவதாய் அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டப்பட்டு விட்டதாலும் வெறும்  வேஷத்தை போடுகின்றதாலேயே மோட்சமடையக் கருதி அதிலேயே ஈடுபட்டு பிரதான  சமயக் கொள்கையை அலட்சிப்படுத்தி விடுகிறார்கள். 
ஆகையால், இன்றைய தினம் மக்களுக்கு சமயம் பயன்பட வேண்டுமானால், அதன் மிரட்டல் நிபந்தனைகளான போலிக் கற்பனை களையெல்லாம் முதலில் அழித்தாக வேண்டும். அதாவது மோட்சம், நரகம். தலை விதி, கடவுளின்  பக்கத்தில் இருக்கலாம். அடுத்த ஜன்மத்தில் ராஜாவாய்ப்  பிறக்கலாம்  என்பவைகளையும்,  சமய வேஷங் களையும் அடியோடு அழித்தாக வேண் டும்.  அப்படிக்கில்லாத பட்சம் எப்படிப் பட்ட நல்ல கொள்கையுள்ள சமயம் என் றாலும் ஒரு நாளும் பயன் கொடுக்கவே கொடுக்காது. மேலும் கொள்கையையும், அறிவையும்,  பிரத்தியட்ச அனுபவத் தையும்   பொருத்திவிட வேண்டும் அதைக் கொண்டு அவரவர்களையே நடந்து  கொள்ளும்படி விட்டு விடவும் வேண்டும். அப்படிக்கில்லாத வெறும்  பாட்டிக்கதைச் சமயங்கள்  இன்றைய சமுக முன்னேற்றத்திற்குப் பயன்படவே படாது  என்பது எனது உறுதியான அபிப்பிராயமாகும். 
உதாரணமாக, முன் காலத்தில் படிப்பு வாசனை உலகக்கல்வி  அறிவு சௌகரிய மில்லாத காலத்தில் ஒரு மனிதன் வெளியூர்  பிரயாணம் போய் வரட்டு மென்று கருதி அந்த ஊருக்குப போனால் புண்ணியம்,  இந்த சாமியை தரிசித்தால்  மோட்சம், இந்தத் தண்ணீரில் குளித்தால் பாவம் நீங்கும், அடுத்த ஜன்மத்தில் ராஜாவாய்  பிறப்பான் என்றெல்லாம்   சொல்லி அதற்குத் தகுந்த கற்பனைக்  கதைகள் எழுதி  வைத்ததுடன் ஜீவ காருண்யம் என்பதையும்  உத்தேசித்து மனிதன், மாடு, 
குதிரை, மனிதன் ஆகிய வைகள் மீது சவாரி செய்து அவற்றிற்கு தொந்தரவு கொடுக் காமல் இருக்கட்டும் என்று  கருதி காலால் நடந்து போனால் அதிக மோட்சம் அவசியம்  கிடைக்கு மென்று  எழுதி வைத்து இருந்தால் இன்று வர்த்தமான பத்திரிகை ரயில், மோட்டார்,  ஆகாயக்  கப்பல் ஆகி யவைகள் ஏற்படுத்தப்பட்டு  மலிந்த பிறகுகூட நடந்து யாத்திரை போக  வேண்டுமா? என்று யோசித்துப் பாருங்கள். இதுபோலவேதான் அநேக  விஷ யங்களை சமயத்தின்  பேரால் அர்த்தம் புரியாமல் பின்பற்றி, மூடர்களாகவும், தரித்திரர் களாகவுமாகி  அடிமைகளாய்  கஷ்டப் படுகின்றனர். இக் கஷ்டத் தில் இருந்து மக்களை விடுவிக்க வேண்டு மானால் சமயத்தின் உண்மை தத்து வத்தைத் தைரியமாய் எடுத்து ஓத வேண்டும்.  அதன் போலித் தத்துவங் களை தைரியமாக அழிக்க வேண்டும்,
அதோடு போலிக்கற்பனை  நிபந்தனை களுக்கு  ஆதாரமாய் இருக்கின்ற கோவில், குளம், சாமிதரிசனம் , புண் ணியம், மோட்சம், அடுத்த ஜன்மம் என் கின்ற உபத்திர வங்கள் எல்லாவற்றையும் அடியோடு ஒழித்தாகவேண்டும். இல்லா விட்டால் மக்களுக்கு விடுதலையோ, சுதந்திரமோ, திருப்தியோ, மோட்சமோ இல்லவே இல்லை என்றுதான் சொல் லுவேன்.
  இந்த உபத்திரவங்களும்  மடத் தனங்களும் இங்கு உலகில் உள்ள எல்லா சமயங்களிலும் இருக்கின்ற தென்று ஒரு சமயம் சொல்லலாம் ஆனாலும், இந்து  சமயம் என்பதிலும் இந்திய மக்கள் என்பவர்களிடமுமே அதிகமாக மிக்க கெடும்படியாக சிறிது கூட முன்றேற்றம் அடையமுடியாதபடி யாக சீர்திருத்தம் செய்ய சற்றும்  ஒன்று படாததாக இருந்து வருகின்றது. மற்ற நாட்டாரும் மற்ற சமயத்தாரும் துணிந்து தாங்கள் முன்னேற்றமடையத்தக்க மாதிரியில் சமயக் கொள்கைகளைத் திருத்தி தடைகளை அழித்து முன் னேற்றமும் விடுதலையும் அடைந்து வருகிறார்கள். ஆதலால், வாலிபர்களே! நீங்கள் சற்று நிதானமாய் விஷயங்களை யோசித்து ஏதாவது  ஒரு முடிவுக்கு வந்து உங் களால் சமுகம் முன்னேறும்படியும் சமயக் கொள்கைகள் அதற்குப் பயன் படும்படியான மார்க்கத்தை தேடுங்கள்.
(சென்னை - பச்சையப்பன் கலாசாலையில் சமுக சீர்திருத்தமும், சமயக் கொள்கையும் என்ற தலைப்பில் ஆற்றிய சொற்பொழிவு)
குடி அரசு -சொற்பொழிவு - 25.01.1931

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

27-09-2015 விடுதலை நாளிதழ் Readwhere-ல் படிக்க

ஏனிந்த இரட்டை அளவுகோல்? தோலுரித்தார் தமிழர் தலைவர்

ஏனிந்த இரட்டை அளவுகோல்? தோலுரித்தார் தமிழர் தலைவர்

- மின்சாரம்


கருத்துரிமை காயடிக்கப்பட்ட நெருக்கடி நிலை கால கட்டத்தில் கருத்தரித்த அமைப்புதான் சென்னை பெரியார் திடலில் வீறு நடைபோட்டு நடந்து கொண்டிருக்கும் பெரியார் நூலக வாசகர் வட்டம். நேற்று 2130ஆம் நிகழ்ச்சி நடத்தி கின்னஸ் சாதனை புரிந்துள்ளது.
நேற்று சென்னைப் பெரியார் திடலில் தந்தை பெரியார் அறிஞர் அண்ணா பிறந்த நாள் கலைவிழாப் பெரு விழாவை  வாசகர் வட்டம் நடத்தியது (39 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடத்தி வருகிறது)
இவ்விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் (விரிவான நிகழ்ச்சி 8ஆம் பக்கம் காண்க)
விழாவில் தமிழர் தலைவர் தெரிவித்த ஒரு கருத்து மிகவும் முக்கியமானது.
இந்திய அரசமைப்புச் சட்டத்திற்குச் சத்தியப் பிரமாணம் செய்து பிரதமர் முதல் அமைச்சர் வரை பதவி ஏற்கிறார்கள். ஆனால் மத்தியில் இப்பொழுது நடைபெற்று வரும் தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) பிஜேபி அரசு இந்திய அரசமைப்புச் சடடத்தின் உயிர் போன்ற அடிநாதமான மதச் சார்பின்மை என்ற உன்னதக் கொள்கையைத் தனது சகதிக் கவ்விய இந்துத்துவா காலால்  போட்டு மிதித்துத் துவம்சம் செய்து கொண்டு இருக்கிறது.
குடியரசு தின அரசு விளம்பரத்தில்கூட மதச் சார்பின்மை, சோசலிசம்(Secular and Socialist)
என்ற சொற்களை நீக்கியது மோடி தலைமையிலான அரசு என்றால் தெரிந்து கொள்ளலாமே!
இது ஒன்றும் விளையாட்டாக - மறதி காரணமாக விடுபட்ட வாசகம் அல்ல; அவர்கள் இதயத்தில் கெட்டியாகப் பதிய வைத்திருக்கும் -மதச் சார்பின்மைக்கு விரோதமான மதக் கோட்பாடான - இந்தியாவை இந்து நாடாக்குவோம் என்பதற்கு விசுவாசமாகத் தான் இந்த சட்ட விரோதமான காரியத்தை அரசு செலவில் செய்தனர்.
பிஜேபி அரசு செய்து வரும் ஓர் இரட்டை வேடத்தை திராவிடர் கழகத் தலைவர் அவர்கள் நேற்றைய நிகழ்ச்சி யில் நிரல்பட எடுத்துரைத்தார். உலகில் இருந்த ஒரே இந்து நாடு நேபாளம் என்று இந்தியாவில் உள்ள இந்துத்துவ வாதிகள் இறுமாப்புடன் கூறி வந்தனர்.
அங்கு ஏற்பட்ட ஜனநாயக வழி அரசியல் மாற்றத்தால், அதற்கும் ஆபத்து வந்து விட்டது; மாவோயிஸ்டுகளின் பிடியில் அரசு அமைந்து விட்ட நிலை; இந்து அரசர்கள் ஓய்வூதியம் (Pension)  வாங்கிக் கொள்ள  வேண்டிய வர்கள் ஆனார்கள். அங்குள்ள பேர் பெற்ற பசுபதிநாத னாலும் இந்து ராஜ்ஜியத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை)
புதிய அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டு விட்டது. மதச் சார்பற்ற அரசு என்று கம்பீரமாக அறிவித்தாகி விட்டது. இந்து ராஜ்ஜியம் என்ற பீடை தூக்கி எறியப்பட்டு விட்டது.
இந்தியாவில் இந்து ராஜ்ஜியத்தை உருவாக்க வேண்டும் என்ற இறுமாப்போடு செயல்பட்டுக் கொண்டிருக்கும் பா.ஜ.க.வுக்கு சங்பரிவார்களுக்கு இது மிகப் பெரிய அதிர்ச்சி! நேபாளத்துக்குள் தன் பாசிச மூக்கையும் நுழைத் துப் பார்த்தது. நேபாளம் இந்து ராஜ்ஜியமாகவே இருக்க வேண்டும் என்று பல வகைகளிலும் அழுத்தம் கொடுத்தது  கொடுத்தும் வருகிறது. இந்தியாவில் இப்போக்கால் நேபாளத்தில் கடும் எதிர்ப்பு வெடித்துக்  கிளம்பி விட்டது.
நேபாளம் இன்னொரு நாடு - அந்த உள்நட்டுப் பிரச் சினையில் பிஜேபி அரசு அத்துமீறி உள்ளே நுழைகிறது.
அதே நேரத்தில் இலங்கைப் பிரச்சினையை எடுத்துக் கொள்ளலாம். அங்கே இனப்படுகொலை நடைபெற்றதை உலகமே அறியும் - உலக வரலாறு கண்டிராத இட்லரின் பெருக்குத் தொகையான - இடிஅமீனின் பரிணாம வளர்ச்சியான ராஜபக்சே போர்க் குற்றவாளியாக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும் என்ற நெடுங்குரல் உலகின் பல நாடுகளிலும் ஓங்கி ஒலித்துக் கொண்டு இருக்கிறது. ஈழத்தில் பாதிக்கப்பட்டோர் - இந்தியாவின் தென் பகுதியில் உள்ள தமிழர்களின் தொப்புள் கொடி உறவுகள் - அந்த வகையிலே இந்திய அரசு - பாதிக்கப்பட்ட மக்கள் இந்தியாவின் குருதி உறவு என்ற உணர்வில் தலையிட வேண்டிய தார்மீக உணர்வு உறுதியாக உண்டு. இந்தியா தலையிட வேண்டும் என்று தமிழ்நாட்டுத் தமிழர்கள் மட்டுமல்ல; உலகத் தமிழர்களே உரத்த குரலில் இடிமுழக்கம் செய்து வருகின்றனர்.
தமிழர்கள் என்ற இவ்வுணர்வையும்தாண்டி, மனித உரிமையில் மனங் கொண்ட பன்னாட்டு மக்களும் இனப்படுகொலைஞன் ராஜபக்சேவைக் கூண்டில் ஏற்று! என்று குரல் கொடுக்கிறார்கள். குமுறும் எரிமலையாக வெடிக்கிறார்கள். மத்தியில் உள்ள பிஜேபி அரசும் சரி, அதற்கு வக்காலத்து வாங்கும் இந்தியப் பார்ப்பனர்களும் சரி, இவர்களின் தொங்கு சதைகளான பெரும்பாலான இந்திய ஊடகங்களும் சரி என்ன சொல்லுகின்றன?
இலங்கை இன்னொரு நாடு; அப்படி இருக்கும் போது அந்நாட்டின் உள்நாட்டுப் பிரச்சினையில் இந்தியா எப்படி தலையிட முடியும் - மூக்கை நுழைக்க முடியும் என்று இதோபதேசம் செய்கிறார்கள்.
இந்த இடத்தினை மய்யப்படுத்தித்தான் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் சட்ட நுணுக்கத்துடனும், நாட்டு நடப்பின் சகல அம்சங்களுடனும் மத்திய பிஜேபி அரசின் இரட்டை வேடத்தை மட்டை ஒன்று கீற்று இரண்டாகக் கிழித்துக் காட்டினார்.
நேபாளம் - இன்னொரு நாடுதான். அங்கே இருந்து வந்த இந்து ராஜ்ஜியம் என்ற மகுடம் கவிழ்ந்து மண்ணில் வீழ்ந்த நிலையில், மதச்சார்பற்ற அரசு என்ற ஜனநாயகக் கிரீடம்  கித்தாப்பாக ஒளி உமிழும் நிலையில் இன்னொரு நாடான நேபாளத்தில் தன் சக்தியைத் திரட்டி , பெரும் அழுத்தம் கொடுக்கிறது - நேபாளம் இந்து நாடாகவே சட்டப் படியாகவே தொடர வேண்டும் என்று தொல்லை கொடுக்கிறது - இந்திய அரசு!
இதன் பொருள் என்ன? இலங்கைப் பிரச்சினை தமிழர் பிரச்சினை என்று வரும்போது அதில் இந்தியா தலையிட முடியாது - காரணம் இலங்கை இன்னொரு நாடு - அதன் உள்நாட்டுப் பிரச்சினையில் தலையிட முடியாது என்று  வித்தாரம் பேசும் மோடியின் பிஜேபி அரசு - நேபாளம் இன்னொரு நாடு - அதன் உள்நாட்டுப் பிரச்சினையில்  தலையிட முடியாது என்று சொல்லவில்லையே! நேபாளம் எதிர்த்தும், நேபாள ஊடகங்கள் உக்கிரமாகக் கண்டித்தும் இந்தியா தன் மூக்கை உள்ளே இழுத்துக் கொள்ள வில்லையே!
உலகில் இருந்த ஒரே இந்து நாடும் கோவிந்தா என்ற கடுகடுப்பில் காய்களை நகர்த்துகிறதே மத்திய பிஜேபி.
இந்த இரட்டை வேடத்தைத்தான் தமிழர் தலைவர் மிகவும் நேர்த்தியாக மக்கள் மத்தியில் தோலுரித்துக் காட்டினார். இந்தக் கண்ணோட்டத்தில் இந்தப் பிரச்சினையை வெளிப்படுத்தி இருப்பவர் திராவிடர் கழகத் தலைவர் மட்டுமே!
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...