Tuesday, October 4, 2016

கோட்சே சிலையை அகற்றாவிட்டால் கோட்சே உருவ எரிப்புப் போராட்டம்!

காந்தியார் பிறந்த நாளில் மீரத் நகரில் கோட்சேவுக்கு சிலையா?
கோட்சே சிலையை அகற்றாவிட்டால் கோட்சே உருவ எரிப்புப் போராட்டம்!

தமிழர் தலைவர் ஆசிரியர் வெளியிட்டுள்ள  முக்கிய அறிக்கை



காந்தியார் பிறந்த நாளில், குடியரசுத் தலைவர், பிரதமர் முதலியோர் காந்தியார் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் அதே நாளில், மீரத் நகரில் காந்தியாரைப் படுகொலை செய்த நாதுராம் கோட்சே என்ற சித்பவன் பார்ப்பனருக்குச் சிலை திறப்பதா? அந்தச் சிலையை அகற்றாவிட்டால் நாதுராம் கோட்சே உருவ எரிப்புப் போராட்டம் நடத்திட தேதி அறிவிக்கப்படும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  வெளியிட்ட அறிக்கை வருமாறு.
மீரத் (உ.பி.) நகரில், கோட்சே சிலை திறப்பு விழாவை காந்தியார் பிறந்த நாளில் அகில பாரதீய ஹிந்து மஹா சபா - ‘‘திக்கர் திவாஸ்’’ என்ற பெயரில் கொண்டாடி மகிழ்கிறது. ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’’ ஏட்டின் செய்தி இது.

இதை எப்படி மத்திய - மாநில அரசுகள் அனு மதித்தன என்பது புரியாத புதிராக உள்ளது.

2014 இல் திறக்கப்பட முடியாத கோட்சே சிலை
2016 இல் அனுமதி பெற்றது எப்படி?


அதுமட்டுமா? காந்தியாரைக் கொன்ற மராத்திய சித்பவன் பார்ப்பனரான நாதுராம் விநாயக் கோட்சே யின் மார்பளவு (BUST) சிலையை உருவாக்கி 2014 இல் திறக்க முடியாததை, எவ்விதத் தங்கு தடையுமின்றி இப்போது ஆர்.எஸ்.எஸ். கூட்டுப் பரிவாரமான அகில பாரதீய ஹிந்து மகாசபா, ‘ஜாம் ஜாம்‘ என்று மேளதாளத்துடன் இப்போது செய்கிறது!
அதன் ‘‘தேசிய’’  உதவித் தலைவரான பண்டிட் அசோக் சர்மா என்ற பார்ப்பனர், மிக்க மகிழ்ச்சியுடன், ‘‘இந்தியர்கள் இனி காந்தி வழியில் நடக்கக்கூடாது; கோட்சேவைத்தான் வணங்கவேண்டும்‘’ என்று பிரகடனப்படுத்திக் கொண்டுள்ளார்!

அதுமட்டுமா? இந்த அமைப்பின் உத்தரப்பிரதேச மாநிலத்தின் மாநிலத் தலைவரான யோகேந்திரவர்மா என்பவர், ‘‘இந்தச் சிலைக்கான செலவு  45,000 ரூபாயை, நானே கொடுத்துவிட்டேன்; இம்மாதிரி நல்ல காரியங்களைச் செய்ய, மற்றவர்களிடம் பணம் வசூலிப்பது முறையல்ல’’ என்றும் இதோபதேசம் செய்துள்ளார்!

பச்சையான இந்துத்துவா ஆட்சியா?


பச்சையான இந்துத்துவா ஆட்சி நாட்டில் நடைபெறுகிறது என்பதற்கும், இந்து மதவெறி எந்த அளவிற்குக் கொடி கட்டிப் பறக்கும் கொடுமையின் உச்சத்திற்குச் சென்றுள்ளது என்பதற்கும் இதைவிட வேறு எடுத்துக்காட்டு தேவையா?
அதுவும் காந்தியாரின் 148 ஆம் ஆண்டு பிறந்த நாளை நாடே கொண்டாடும் நிலையில், மத்திய - மாநில அமைச்சர்கள் காந்தியாரின் படத்திற்கும், அவரது சிலைகளுக்கும் மாலை போட்டு மரியாதை செய்யும் தருணத்தில், கோட்சே சிலையைத் திறக்க அனுமதித்து இருப்பது, எவ்வித தங்கு தடையும் செய்யாமல் அகமகிழ்வுடன் நடந்திருப்பது பச்சையான இரட்டை வேடம் அல்லவா?

நாட்டின் மதச் சார்பின்மை கொள்கைக்கு - வன்முறை இந்துப் பயங்கரவாதப் போக்கு நேர்மாறானது அல்லவா - இந்த கோட்சே சிலை திறப்பு - அரசமைப்புச் சட்டத்துக்கே அறைகூவல் அல்லவா!

ஒரு பக்கம் காந்தியார் சிலைக்கு மாலை - இன்னொரு பக்கம் கோட்சேவுக்குச் சிலையா?

பிரதமரும், மற்றவர்களும் காந்தியார் புகழ் பஜனையும் பாடுவது, இப்படி காந்தியாரைச் சுட்டுக் கொன்ற கோட்சேவுக்கு சிலையெடுப்பவர்களையும் அனுமதித்து மகிழ்ச்சியில் திளைப்பது இரட்டை வேடம் அல்லவா!

நாடு எங்கே போகிறது?


நாட்டில் உள்ள அத்துணை முற்போக்காளர்களும், மதச்சார்பின்மையில் நம்பிக்கை உள்ளவர்களும் வெகுண்டெழுந்து உரத்த குரலில் இதைக் கண்டிக்க உடனடியாக முன்வரவேண்டாமா?
கோட்சே உருவ எரிப்புப் போராட்டம்!

இப்போக்குக்கு திராவிடர் கழகம் தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவிப்பதோடு, அச்சிலை அகற்றப்படாவிட்டால், தமிழ்நாடு முழு வதிலும் கோட்சே உருவ எரிப்பு அறப்போராட்டம் நடத்தி, மதவெறி ஒழிப்புப் போராட்டமாக அதனை நடத்திட வெகுவிரைவில் ஒரு தேதி குறிப்பிட வேண்டி வரும்.

அதைத் தவிர்க்க, மத்திய - மாநில அரசுகள் உடனடியாக அச்சிலையை அகற்றிட ஆணை பிறப்பித்துச் செயல்பட வைக்கவேண்டும்.

திருவள்ளுவர் சிலைக்கு எதிர்ப்பு!
கோட்சே சிலைக்கு அனுமதியா?


திருவள்ளுவருக்கு உத்தரகாண்டில், அரித்துவாரில் சிலை திறக்க எதிர்ப்பு -கோட்சே சிலை - அதுவும் காந்தியார் பிறந்த நாளில் திறப்பு என்றால், என்ன பொருள்?

அந்தோ, மதச்சார்பின்மையே உன் கதி இப்படியா?


கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்.

சென்னை
3.10.2016 

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...