Total Pageviews

Wednesday, July 31, 2013

முதல் அமைச்சரை மட்டம் தட்டும் அண்ணா திமுக ஏடு

அண்ணா திமுகவின் அதிகாரப்பூர்வ ஏடு டாக்டர் நமது எம்.ஜி.ஆர்., புராணம், ஆன்மீகம் பற்றி அரைகுறையாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் அந்தப் பத்திரிகையைப் படிக்கலாம் (வாழ்க அண்ணா நாமம்!)
திராவிடர் கழகம் தமிழ்நாடு முழுவதும் நாளை நடத்த விருக்கும் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தை தமிழ்நாடு தழுவிய அளவில் நடத்த உள்ளது. தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, திரா விட இயக்கத் தமிழர் பேரவை மற்றும் பல்வேறு தமிழின உணர் வுள்ள  அமைப்புகள் ஆர்வமுடன் பங்கேற்க இருக்கின்றனர்.
இதில் நமது எம்.ஜி.ஆருக்கு என்ன வந்ததாம்?
ஆலயங்களில் சமத்துவம் வேண்டும் என்று கோருவதற்கு முன் அறிவாலயத்திலும், பெரியார் திடலிலும் அதனை நிறை வேற்றுங்கள் என்று அக்கிரகார (அ) திமுக எழுதுகிறது? (இந்த இடங்களில் சமத்துவத்துக்கு என்ன குறைவாம்? விளக்குவார்களா?). மொட்டைத் தலைக்கும் விளக்கெண் ணெய்த் தடவிய முழங்காலுக்கும் முடிச்சு போடப் பார்க் கிறார்களே! முதலில் இந்தப் பிரச்சினையில் எம்.ஜி.ஆர். அவர்களின் நிலைப்பாடு என்ன என்று தெரியுமா? முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் செயல்பாடு என்ன என்று தெரியுமா?
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமையைச் செயல்படுத்த வேண்டி நீதியரசர்கள் மகாராஜன், கிருஷ்ணசாமி ரெட்டியார் தலைமையில் குழுக்களை அமைத்துப் பரிந்துரை களைப் பெற்றவர் முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். என்பது தெரியுமா? 69 சதவீத அடிப்படையில் தாழ்த்தப்பட்டவர் உட்பட அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் பயிற்சி அளிக்கப் படும்; அதற்கு திருச்சியையடுத்த கம்பரசம்பேடடையில் பயிற்சி நடப்பதற்கு இடம் தேர்வு செய்யப்படுவது என்று அறிவித்தவர் அந்நாளைய முதல் அமைச்சர் மாண்புமிகு செல்வி ஜெய லலிதா என்ற தகவலாவது புரியுமா?
திராவிடர் கழகம் நடத்தும் ஆர்ப்பாட்டத்தை கொச்சைப் படுத்துவதாக நினைத்துக் கொண்டு எம்.ஜி.ஆரையும், ஜெயலலிதாவையும் மட்டம் தட்டும், இழிவுபடுத்தும் வேளையில் அண்ணா தி.மு.க.வின் நமது எம்.ஜி.ஆர். ஏடு ஈடுபடலாமா?
அடிப்படைகளையே அறிந்திராதவர்கள் தான் அந்த ஏட்டின் எழுத்தாளர்களா? அல்லது முதல் அமைச்சர் ஜெய லலிதாவை வம்புக்கு இழுக்க வேண்டும் என்ற குழிபறிப்பு வேலையில் ஈடு படுவோர் அந்த ஏட்டில் ஊடுருவி இருக்கிறார்களா? முதல் அமைச்சர் ஜெயலலிதா எதற்கும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

Tuesday, July 30, 2013

69 சதவீதத்தில் குளறுபடி நடந்தால் நாடு அமைதியாக இருக்காது! - கி. வீரமணி

தமிழ்நாட்டில் 69 சதவீத இடஒதுக்கீடுக்கு 9ஆவது அட்டவணை பாதுகாப்புள்ளது
50 சதவீதத்திற்கு மேல் இடஒதுக்கீடு செய்யலாம் என்று தீர்ப்பிலேயே உண்டு
உச்சநீதிமன்றத்தில் தவறான தகவல் தருவது கண்டிக்கத்தக்கது
69 சதவீதத்தில் குளறுபடி நடந்தால் நாடு அமைதியாக இருக்காது!
திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அறிக்கை

தமிழ்நாட்டில் 69 சதவீத இடஒதுக்கீடு என்பது - இந்திய அரசமைப்புச் சட்டம் 9ஆவது அட்டவணைப் பாதுகாப்புப் பெற்றது.  ஏற்கெனவே 50 சதவீதத்திற்கு மேல் இடஒதுக்கீடு உள்ள மாநிலங்களில் அது தொடரலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் தவறான தகவலைத் தந்து குழப்புவது குற்றமான செயலாகும். தமிழ்நாட்டில் 69 சதவீதத்தில் குளறுபடி நடந்தால், தமிழ்நாடு அமைதியாக இருக்காது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டில் கடந்த 33 ஆண்டுகளாக 69 சதவீத இடஒதுக்கீடு (50+18+1 = 69) தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்கள் (SC & ST) பிற்படுத்தப்பட்டவர்கள் (BC) மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் (M.BC) என்று சமூக நீதி அடிப்படையில், அவர்களது மக்கள் தொகை விகிதச்சாரத்திற்கு மிகவும் குறைவாகவே கொடுக்கப்படுகிறது.
முன்னேறிய ஜாதியினர்  எத்தனை சதவீதம்?
முன்னேறிய ஜாதிக்காரர்கள் (Forward Communities) என்பவர்கள் மொத்தத் தொகை மிகவும் தாராளமாகவே கணக்கிட்டால்கூட, 10  சதவிகிதத்திற்கு மேல் தமிழ்நாட்டில் கிடையாது.
மண்டல் கமிஷன் பரிந்துரை என்பது (1980-க்கு முந்தைய கணக்குப்படியேகூட) பிற்படுத்தப்பட்டவர்கள் 52 சதவிகிதம்; வடநாட்டில் மற்ற க்ஷத்திரிய, வைசியப் பிரிவுகள் உண்டு; தெற்கே அது கிடையாது என்பது உயர்நீதிமன்ற தீர்ப்புகளாகும்.
இத்துடன்  சமூகநீதி பெற வேண்டிய 23 சதவிகித  தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்கள், இஸ்லாமிய, கிறிஸ்துவர் சிறுபான்மையினர் சேர்ந்தால் 85 முதல் 90 விழுக்காடு ஆகிவிடும்!
திராவிடர் கழகத்தின்  அரிய முயற்சியால்...
இந்நிலையில் பெரியாரின் சமூகநீதிப் பூமியாகிய இத்தமிழ்நாடு - திராவிடர் கழகத்தின் தனிப்  பெரும் அரிய பெரிய முயற்சியால் - 69 சதவிகித இடஒதுக்கீடு, இந்திய அரசின் சட்டத்தின் 9ஆவது அட்டவணைப் பாதுகாப்புடன் உள்ளது. (இதன் கீழ் உள்ள 69 விழுக்காடு தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்காட அனுமதிப்பதே எவ்வளவு தூரம் நியாயமானது என்ற கேள்வி ஒருபுறம் இருக்கட்டும்!)
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக ஜஸ்டீஸ் கபாடியா அவர்கள் இருந்தபோது  இறுதித் தீர்ப்பு வந்து விட்ட பிறகும்கூட, இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்புக் காட்டும் ஒரு தமிழ்நாட்டுப் பார்ப்பனரின் முகமூடி அமைப்பும், அதன் முக்கிய வல்லடி வழக்குரைஞரும் மறுஆய்வு மனு போட்டு; அதுவும் தள்ளப்பட்டு விட்டது.
என்றாலும் ஏதாவது அட்மிஷன் சீசனில் - இடம் கிடைக்காத, சிலரைப் பிடித்து வழக்குப் போட்டு, கூடுதல் இடங்கள் பெற்றே வருகின்றனர்!
கூடுதல் இடங்கள் மூலம் அதிகமான பிள்ளைகளுக்கு - மாணவர்களுக்கு இடம் கிடைப்பது நமக்கு மகிழ்ச்சிதான் என்றாலும், கொள்கை அளவில் 69 சதவிகிதத்தை ஏற்காதது போன்ற ஒரு புறத்தோற்றம் உருவாக்கப்படுவது எவ்வகையில் நியாயம்?
நீதிமன்றத்தில் தவறான தகவலா?
நேற்று உச்சநீதிமன்றத்தில் கூடுதல் இடங்களைப் பொதுப் பிரிவுக்கு உருவாக்கச் சொல்லி, ஆணையிட்டுள்ள நீதிபதிகள் விசாரித்தபோது, மனுதாரர்களுக்காக வாதாடிய வழக்குரைஞர் ஒரு தவறான தகவலை நீதிமன்றத்தில் கூறியுள்ளார். (பொதுப் பிரிவு முன்னேறிய ஜாதிக்காரர்களுக்கு மட்டுமல்ல)
மண்டல் கமிஷன் அறிக்கையில் மண்டலேகூட, 50 விழுக்காட்டுக்கு  மேல் இடஒதுக்கீடு கூடாது என்று கூறியுள்ளார்; அதை மீறி தமிழ்நாட்டில் 69 சதவிகிதம் இடஒதுக்கீடு உள்ளது என்று கூறியுள்ளார்!
இது மிகவும் தவறான தகவல்!
உச்சநீதிமன்றத்திற்குத் தவறான சட்ட நிலையை எடுத்துக் கூறுவது சரியானதுதானா?
ஏற்கெனவே சில தீர்ப்புகளில் உள்ள கருத்துக்கள் காரணமாக 52 சதவிகிதம் உள்ள பிற்படுத்தப்பட்டவர் களுக்கு 52 சதவிகித இடஒதுக்கீட்டுக்குப் பரிந்துரை செய்கிறோம்.
உச்சநீதிமன்றம் கூறியது என்ன?
ஆனால் உச்சநீதிமன்றத்தின் பழைய சில வழக்குகள் தீர்ப்பின்படி (அதுகூட மூலத் தீர்ப்பு அல்ல (Obiter dictum) 50க்கு மேல் போகக் கூடாது என்று கூறப்பட்டதால், தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்களுக்குத் தரப்பட்டுள்ள (15+75 = 22.5) சதவீதம் - அதாவது 23 விழுக்காட்டினை அப்படியே அவர்களுக்கு பாதகம் ஏற்படாமல் பாதுகாத்து 50இல், 23அய் கழித்து மீதி 27 விழுக்காடு பிற்படுத்தப்பட்டவர்களுக்குப் பரிந்துரை செய்கிறோம் என்று கூறியுள்ளதோடு, அதே சமயத்தில் எந்தெந்த மாநிலங்களில் ஏற்கெனவே பல ஆண்டுகளாக 50 சதவிகிதத்திற்கு மேல் இடஒதுக்கீடு அமலில் உள்ளதோ, அது அப்படியே பின்பற்றப்படல் வேண்டும் என்று மண்டல் கமிஷன் பரிந்துரை கூறியுள்ளது.
இதை மறைக்கலாமா? வாதத்தில் இந்த சமூகநீதிக்கு எதிரான வழக்காடிகள்?
அது மட்டுமல்ல. மண்டல் ஆணையம் சம்பந்தமான இந்திரா சகானி வழக்கில் தீர்ப்புக் கொடுத்த நீதிபதிகள், 50 விழுக்காட்டிற்குமேல் இடஒதுக்கீடுக்கு தரும் மாநிலங்கள் அதற்குரிய தேவை ஏற்படின் அந்த மாநிலங்கள் தாராளமாக இடஒதுக்கீடு 50 சதவிகிதத்திற்கு மேல் தொடரலாம் என்றும் கூறப்பட்டிருக்கிறதே! அதை அந்த வழக்குரைஞர்கள் அறிய மாட்டார்களா? அறிந்தவர்களாக இருப்பின் இதை ஏனோ வசதியாக மறைக்க வேண்டும்?
சுதந்திரத்திற்கு நாம் தரும் விலை எப்போதும் விழிப்புணர்வுடன் இருப்பதுதான் என்பது ஒரு ஆங்கிலப் பழமொழி!
69 சதவீதத்திற்கு ஊறு ஏற்பட்டால்...
நம் நாட்டில் சுதந்திரத்திற்கு மட்டுமல்ல; சமத்துவத்திற்கும், சமூக நீதிக்கும் நாம் தரும் விலை எப்போதும் நம் கண்களை அகல விரித்துக் கொண்டு பார்த்துக் கொண்டே இருப்பதுதான் போலும்!
69 சதவிகிதத்தில் ஏதாவது குளறுபடி நடந்தால் நாடு அமைதியாக இருக்காது; இதை இடஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்கள் உணரட்டும்!
கி.வீரமணிதலைவர், திராவிடர் கழகம்
சென்னை  
30.7.2013


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Friday, July 26, 2013

ஜெயேந்திரர் ஆர்.எஸ்.எஸ். ஆசாமி - சந்தேகம் வேண்டாம்!

கொலைக் குற்ற வழக்கில் சிக்கிப் பிணையில் நடமாடிக் கொண்டிருக்கும் திருவாளர் ஜெயேந்திர சரசுவதி - ஓர் ஆர்.எஸ்.எஸ்.காரர் என்று எத்தனையோ முறை ஆதாரங்களுடன் விடுதலை எடுத்துக்காட்டிய துண்டு; திராவிடர் கழகம் அடையாளம் காட்டியதுண்டு. அவற்றை நம்பாதவர்கள் எவரேனும் இருந்தால் நேற்று ஏடுகளில் அவர் வெளியிட்ட கருத்துகளைப் படித்த வர்களுக்குச் சந்தேகம் தீர்ந்திருக்கும்
அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியை பிரதமர் பதவிக்காக பாரதீய ஜனதா முன் நிறுத்தினால் அது வர வேற்கத்தக்கது. நரேந்திரமோடி தகுதியான வேட்பாளர். நிர்வாகத் திறமை மிக்கவர். அவருக்கு கடவுள் அருளாசி உண்டு. எனது வாழ்த்துக்கள்!
ஆனால் சோனியாகாந்தி வெளிநாட்டுக்காரர் என்பதால் அவரது மகன் ராகுல் காந்திக்கு இந்தியா வுக்குத் தலைமை தாங்கும் தகுதி கிடையாது என்றே கருத வேண்டியுள்ளது.
நரேந்திரமோடி -  ராகுல்காந்தி இருவரையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது நரேந்திர மோடிக்குத்தான் முதலிடம் கிடைக்கும். நிர்வாகத் திறமை ஆற்றல் படைத்த மனிதர். மிகப்பெரிய சாதனையாளர். குஜராத் மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு சென்றவர். மதச்சார்பற்ற ஆட்சியை அவர் தருவது நிச்சயம். - இவ்வாறு காஞ்சி சங்கராச்சரியார்(?) ஜெயேந்திரர்  கூறியுள்ளார்.
மேற்கண்டதைப் படிப்போர் தெளிவாகவே ஒன்றைத் தெரிந்துகொள்ளலாம். மோடியை பி.ஜே.பி. சார்பில் பிரதமராக நிறுத்துவதற்கு ஆர்.எஸ்.எஸ்ஸே முக்கிய காரணமாகும்.
மோடி, தன்னை ஒரு இந்துத் தேசியவாதி என்று சில நாள்களுக்கு முன்புதான் வெளிப்படையாகப் பேட்டி ஒன்றில் கூறினார்.
நரேந்திர மோடி மதச் சார்பற்ற கொள்கைக்கு எதிரானவர் என்று பி.ஜே.பி.யைத் தவிர அனேகமாக எல்லாத் தரப்பினரும் எடுத்துக் கூறிவிட்டனர். மதச் சார்பற்ற தன்மைக்கு தம் வசதிக்கு விளக்கம் கூறித் தப்பிக்கப் பார்க்கிறார்.
குஜராத்தில் நடந்த இனப்படுகொலையை இன் றளவும் நியாயப்படுத்திக் கொண்டு இருக்கிறார். அதற்காக நான் வருத்தம் தெரிவிக்கவேண்டிய அவசியம் இல்லை என்றும் அடித்துக் கூறுகிறார்.
பாபர் மசூதி இடிக்கப்பட்டபோதுகூட இதே மோடி என்ன சொன்னார்? இந்துக்கள் ஆண் மக்கள், பேடிகள் அல்லர் என்பதை நிரூபித்துவிட்டனர்! என்று கருத்துக் கூறிய பேர்வழிதான் இந்த மோடி.
அத்தகைய ஒருவர்தான் இந்தியாவின் பிரதமராக வரவேண்டும் என்று ஒருவர் சொல்லுகிறார் என்றால், அவர் இன்னொரு மோடியாகத்தானிருக்க முடியும்.
மோடியை ஆதரிப்பதோடு அவர் நிற்கவில்லை. மிகவும் பச்சையாக காங்கிரஸ் சார்பில் பிரதமருக்கு முன்னிறுத்தப்படுபவரைப்பற்றியும் விமர்சனம் செய்கிறார் என்பதையும் கவனிக்கவேண்டும்.
பி.ஜே.பி.யின் தேர்தல் பிரச்சாரக் குழுவின் தலைவராக நரேந்திர மோடி நியமிக்கப்பட்டுள்ளார்; மோடி பிரதமராக வரவேண்டும் என்பதற்குத் தனிப் பிரிவை ஏற்படுத்தி அதற்கு இந்த ஜெயேந்திரரை பிரச் சாரக் குழுத் தலைவராக அறிவிப்பதுபற்றி பி.ஜே.பி.யோ, சங் பரிவாரமோ ஆழமாகவே யோசிக்கலாம்.
நெருக்கடிநிலை காலத்தில் தலைமறைவான ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கு இவர் உதவி புரிந்ததை நெருக்கடி நிலையை எதிர்த்துப் போராட்டம் எனும் நூலில் இந்து முன்னணியின் மாநில அமைப்பாளர் திருவாளர் இராம.கோபாலன் 222 ஆவது பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கருநாடகத்தில் ஸ்ரீபேஜாவார் சுவாமிகள், நெருக்கடி வந்த முதல் வாரத்திலேயே ரூ.1001 கொடுத்ததுடன், செல்லும் இடமெல்லாம் ஆர்.எஸ்.எஸ்ஸுக்காகப் பிரச்சாரம் செய்து வந்தார்; காஞ்சி காமகோடிப் பீடம் ஸ்ரீஜெயேந்திர சரசுவதி சுவாமிகள் தலைமறைவு இயக்கத்திற்குப் பல விதங்களில் உதவியுள்ளார். தலைமறைவு இயக்கத்தவர்கள் அவரை அடிக்கடி சந்தித்து வந்துள்ளனர் என்று திருவாளர் இராம. கோபாலன் குறிப்பிட்டுள்ளார் என்றால், ஜெயேந்திரர் காவி உடையில் திரியும் ஆர்.எஸ்.எஸ்.காரர் என்பது விளங்கவில்லையா?
அயோத்தியில் கட்டடத்தை இடித்தது கிரிமினல் நடவடிக்கை எனக் கூற முடியாது. இதற்காக மத்திய அமைச்சர் அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, உமாபாரதி ஆகியோர் பதவி விலகத் தேவையில்லை (தினமணி, 27.11.2000) என்று சொன்னவரும்  இந்த சாட்சாத் சங்கராச்சாரியார் ஜெயேந்திரர்தான்.
ஒரு வகையில் ஜெயேந்திர சரசுவதி, நரேந்திர மோடியை வெளிப்படையாக ஆதரித்ததும் நல்லதாகவே போய்விட்டது.
கொஞ்ச நஞ்சம் அரசல்புரசலாக இருப்பவர்கள்கூட, நாட்டை மதத்தின் பெயரால் அமளிக்காடாக மாற்றத் துடிக்கும் ஒரு கூட்டம் கிளம்பிவிட்டது என்பதை வெகுமக்கள் தெரிந்துகொள்ள, புரிந்துகொண்டு செயல்படப் பெரும் உதவியாகவே போய்விட்டது - அந்த வகையில் வரவேற்கவும் செய்யலாம்.

சங்கராச்சாரியாரா அரசியல்வாதியா?

அயோத்திப் பிரச்சினையில் அரசியல்வாதிகள் தலையிடக் கூடாது என்று சொன்ன காஞ்சி சங்கராச்சாரியார் அரசியலில் ஈடுபடத் தகுதி உடையவர்தானா?
பி.ஜே.பி.க்குச் சார்பாக அவர் கருத்துத் தெரிவிக்கிறார் என்றால் இவர் பிஜேபியில் இருக்கும் இந்துக்களுக்கு மட்டும்தான் தலைவரா?
காங்கிரசில் உள்ள இந்துக்களுக்கு இவர் தலைவர் இல்லை என்பதை ஒப்புக் கொள்கிறார் என்று கருதலாமா?
2004இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், சென்னை தியாகராயர் நகரில், பிஜேபி தேர்தல் அலுவலகத்தைத் திறந்து வைத்தவர்தான் இந்த ஜெயேந்திரர். அதுபற்றி பிரச்சினை எழுந்தபோது, அதில் என்ன தப்பு? என்று எதிர் கேள்வி கேட்டவரும் அவரே!
ரஜினியுடன் சேர்ந்து விஜயகாந்து ஓர் அரசியல் கட்சியை ஆரம்பிக்கலாம் என்று சொன்னவரும் இவரே! (குமுதம் 18.1.2001).
தன்னை நாடி வரும் பக்தர்களுக்குச் சாமியார்கள் ஆசி வழங்குவது வழமைதான். ஆனால் இந்த ஜெயேந்திரரோ வித்தியாசமான மனிதர்; தம்மை நாடிவந்த நடிகரைப் பார்த்து அரசியல் கட்சியை ஆரம்பிக்கச் சொல்லுகிறார் என்றால் இதன் பொருள் என்ன? சாமியார் வேடத்தில் ஓர் அரசியல்வாதி பதுங்கி இருக்கிறார் என்றுதானே பொருள்?
திருவானைக்காவல் கோயில் திருப்பணிகளைத் துவக்கி வைத்த இவர் செய்தியாளர்களையும் சந்தித்தார். (இவருக்கு ஏன் பத்திரிகையாளர்களைச் சந்திக்கும் வேலை?).
அந்தப் பேட்டியில் என்ன சொன்னார்? பிஜேபி என்றால் வெறுக்காமல் ஸ்திரமான அரசு ஒன்று அமைக்க அனைத்து அரசியல் கட்சிகளும் முன்வர வேண்டும் (தினமலர் 19.3.1998) என்று சொன்னவர் தானே!
மண்டைக் காட்டிலே இந்து முன்னணிக்காரர் களும், ஆர்.எஸ்.எஸ்.காரர்களும் மதக்கலவரத்தைத் தூண்டி படுகொலைகளைச் செய்து கொண்டிருந்த கால கட்டத்தில், இந்த ஜெயேந்திரர் என்ன செய்தார் தெரியுமா?
ராஜபாளையத்தில் தொழிலதிபர்கள் அடங்கிய கூட்டத்தில் காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி பேசி யதைக் கேளுங்கள்.
தொழிலதிபர்களே! கொஞ்சமும் தயக்கம் இல்லாமல் ஆர்.எஸ்.எஸை ஆதரியுங்கள். நீங்கள் இப்பொழுது ஆர்.எஸ்.எஸை ஆதரிக்காமல், பின் எப்பொழுது ஆதரிக்கப் போகிறீர்கள்? மற்ற மதக் காரர்களும், நாத்திகர்களும் உங்களை ஆதிக்கம் செய்த பிறகுதான் ஆர்.எஸ்.எஸை ஆதரிக்க போகிறீர்களா? என்று பேசியதை ஆர்.எஸ்.எஸின் அதிகாரப்பூர்வமான ஆர்கனைசர் (28.3.1982) வெளியிட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
இவ்வளவுக்கும் ஆர்.எஸ்.எஸ். ஒரு முறை அல்ல; இரு முறையல்ல; மூன்று முறை தடை செய்யப்பட்ட கட்சி.
1987 அக்டோபரில் அவாள் நம்பும் விஜயதசமி நாளில் ஜெயேந்திர சரஸ்வதி ஜன கல்யாண் - ஜன ஜாக்ரண் (மக்கள் நலன் - மக்கள் விழிப்புணர்வு) என்ற ஓர் அமைப்பை மடத்தைவிட்டு ஓடிய பிறகு தொடங்கினார்.
அந்த அமைப்பினுடைய கொள்கைகள் என்ன? விடுதலை சொல்லுவதைவிட தினமணி (தலை யங்கம் 5.10.1987) சொல்லுவதுதானே பொருத்த மானது.
ஹிந்து சமுதாயத்தினரிடையே இன உணர் வையும், ஒற்றுமையையும் மேலும் வளர்க்க இத்திட்டம் உதவும் என்றாலும், இதிலுள்ள சில அம்சங்கள் சர்ச்சைகளுக்குரியனவாகவும்  அரசியல் நோக்கம் கொண்டனவாகவும் அமைந்து மக்களிடையே ஓரளவு வியப்பையும், திகைப்பையும் ஏற்படுத்தியுள்ளன என்று தினமணி எழுதியதே!
சங்கரமடம் என்பதும் சங்கராச்சாரியார் என்பதும் ஜெயேந்திரரை பொறுத்தவரை ஒரு வேடம்; மக்களை ஏமாற்றிட வசதியான இடம்; மற்றபடி ஒரு கடைந் தெடுத்த அரசியல்வாதி - காந்தியாரைக் கொன்ற ஆர்.எஸ்.எஸின் கூரிய வாள் முனைதான் ஜெயேந்திரர்
வன்முறையில் நாட்டம் கொண்டவர் - அதனால் தான் வழக்குகளில் சிக்குண்டு மூச்சுத் திணறிக் கொண்டுள்ளார்.
இவ்வளவுக்குப் பிறகும் பார்ப்பனர்கள் இவரை ஜெகத்குரு என்று உச்சி மோந்து பாராட்டுகின்றனர் என்றால், இதற்குப் பெயர்தான் பார்ப்பனர்களின் இனப்பற்று என்பது! நம் மக்களுக்குச் சுட்டுப் போட்டாலும் வருமா?