Total Pageviews

Monday, December 31, 2012

நெத்தியடி யாருக்கு?


அடேயப்பா அண்ணா திமுக ஏடான நமது எம்.ஜி. ஆர். ஏட்டுக்குக் கோபத்தைப் பாரு! மீசை துடிப்பதைப் பாரு!
தமிழகத்தில் பெண் களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது என்று திராவிடர் கழகத் தலைவர் கருத்துக் கூறி விட்டாராம்.
அதற்குப் பதில் என்ன தெரியுமா? கலைஞர் ஆட்சி யில் சரிகாஷா, பால்மலர் என்பவர்களுக்கெல்லாம் அநியாயம் நடக்கவில் லையா என்ற கேள்வியைக் கேட்கிறது.
பெண்களுக்குக் கொடுமை நடந்த போதெல் லாம் தன் கண்டனத்தைத் தெரிவிக்கத் தவறியதில்லை திராவிடர் கழகமும் - அதன் போர்வாளான விடுதலையும்.
எந்த ஆட்சிக் காலத் திலும் அங்கொன்றும், இங்கொன்றுமாக அவலங் கள் நடப்பது இயல்புதான்.
(கலைஞர் ஆட்சியில் கூட இரண்டு நிகழ்ச்சி களைத் தானே சுட்டிக் காட்ட முடிந்திருக்கிறது நமது எம்.ஜி.ஆர். ஏட்டால்?)
ஆனால் பெண் முதலமைச்சராக இருக்கக் கூடிய தமிழ்நாட்டில் பெண் களுக்கான வன்கொடு மைகள் தொடர் கதையாக இருக்கிறதே - அதைச் சுட்டிக் காட்டினால் ஆத்தி ரப்படுவது ஏன்? அலறுவது ஏன்?
திருவைகுண்டம், விருத்தாசலம், நாகை (புத்தகரம்) சிதம்பரம் மஞ்சக்குப்பம், திருப்பத்தூர் என்று அடுத்தடுத்து ஒரு வார காலத்திற்குள் பெண்ணொருவர் முதல் அமைச்சராக இருக்கும் மாநிலத்தில் பெண்கள் சூறையாடப்படுகிறார்களே என்று கேட்டால் பொறுப் போடு சிந்திக்காமல், இந்த அவலம் இனியும் தொடரக் கூடாது என்று எண்ணிப் பார்க்காமல், பூனை கண் மூடினால் பூலோகமே இருண்டு விடும் என்று நினைக்குமாம்; அதுபோல அலமருகிறதே அண்ணா திமுக ஏடு!
அந்த ஏடு கூறுவதை விவாதத்துக்காகவே ஏற்றுக் கொள்வதாக எடுத்துக் கொண்டாலும் அது எப்படி நியாயமாக இருக்க முடியும்?
இன்னொரு ஆட்சியில் நடந்தது; எனவே எங்கள் ஆட்சியிலும் நடக்கும் தான் என்று சொல்லுவது ஆட் சிக்கு அழகா?
டில்லியில் ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான செய்தியை அறிந்து அதிர்ச்சி அடைகிறேன் என்று சொல்லும் தமிழக முதல் அமைச்சர், தன் மாநிலத்தில் அதைவிட அதிக எண்ணிக்கையில் பாலியல் வன்கொடுமை நடக்கும் பொழுது அதை விடப் பல மடங்கு அல்லவா அதிர்ச்சி அடைந்திருக்க வேண்டும்?
பொழுது விடிந்து பொழுதுபோனால், கொலை, கொள்ளை, பூட்டு உடைப்பு, பாலியல் வன் முறை இதுதானே அதிமுக ஆட்சியின் அன்றாட சாதனை! ஒன்றைக் கொடுத்து ஒன்பதை வாங்கிக் கட்டிக் கொள்ள ஆசைப்பட  வேண்டாம் நமது எம்.ஜி.ஆர். ஏடு. -   மயிலாடன்

தமிழின் தலையெழுத்து!


இன்றைய தினமலரில் இப்படியொரு தலைப்பு கொடுத்து மானமிகு கலைஞர் அவர்களை வசை பாடித் தீர்த்திருக்கிறது.
இந்தியை யாரும் படிக்க வேண்டாம் என்று எந்தத் தலைவரும் சொல்லவில்லை. அப்படி சொல்லி இருந்தால் சென்னையில் இந்தி பிரச்சார சபை இருந் திருக்குமா?
கட்டாயமாக்கக் கூடாது என்பதுதான் திராவிடர் இயக்கத்தின் நிலைப் பாடு - அரைவேக்காடுத் தனமாக எழுதலாமா?
கலைஞருக்குத் திறந்த மடல் எழுதலாம். அந்த யோக்கியதை இருக் கிறதோ இல்லையோ யாரும் எழுதலாம்தான்.  பைத்தியக்காரன் ஒருவன்கூட கிறுக்க உரிமை உண்டுதான் அதில் உள்நோக்கம் இல் லாமல் எழுத வேண்டும் என்பது அடிப்படை அறிவு நாணயம்.
சமர்ச்சீர் கல்வி தர மற்றதாம். அதனை எல் லோரையும் படிக்க வைத்து நல்ல அம்சங் களையும் கெடுத்துக் குட் டிச் சுவர் ஆக்கிவிட்டா ராம் கலைஞர்.
சமச்சீர் கல்வி ஏதோ கலைஞராகப் பார்த்து முடிவு செய்ததல்ல; கல்வி யாளர்களின் கருத்துக் களையெல்லாம் கேட்டு, அதன் அடிப்படையில் தான் பாடங்கள் தயார் செய்யப்பட்டன.
இந்தச் சிண்டர் களுக்குக் கோபம் ஏன் தெரியுமா? எல்லாருக்கும் சமமான கல்வி திட் டத்தை அளித்ததுதான்.
எல்லாரும் சமம் என் பதை ஏற்றுக் கொள்ளாத கூட்டம் அல்லவா? அத னால்தான் எல்லார்க்கும் சமமான கல்வியைக் கொடுத்தால் குமட்டிக் கொண்டு வருகிறது அவாளுக்கு! இப்படி எல்லாம் மானமிகு கலைஞர்மீது மானாவாரியாக புழுதி வாரி தூற்றும் இந்த நடு நிலையாளர்கள் கொலைக் குற்றத்தைத் தலையில் சுமந்து இன் னும் காஞ்சி மடத்தின் அதிபராக, சங்கராச்சாரி யாராக லோகக் குருவாக திரிந்து கொண்டு இருக்கிறாரே ஒரு காம - கோடி - அதை பற்றி ஒரே ஒரு வரி எழுதச் சொல்லுங்கள் பார்க்கலாம்.
திராவிடர் இயக்கம் என்ற போர்வையிலே அண்ணா பெயரையும் இணைத்துக் கொண்டு சொர்க்கவாசல் சென்று வரும், அம்மையாரைப் பற்றி வீசம் வரி  எழுதச் சொல்லுங்கள் பார்க்க லாம். (சொர்க்கவாசல் என்று அண்ணா எழுதி யது படமாகக் கூட வந்துள்ளது).
தினமலரில் எழுதி யவர் முன்னாள் காவல் துறை அதிகாரியாம். அப்படியென்றால் காவல் துறையில் பணியாற்றிக் கொண்டு இருந்தபோது எவ்வளவுப் பூணூல் தன மெல்லாம் செய்திருப்பார் நினைத்துப் பாருங்கள்!
-   மயிலாடன்

அரசுக்குப் பொறுப்பில்லையா?


மாயன் காலண்டர் என்ற புழுதி அடித்து ஓய்ந்து விட்டது. நம் நாட்டு ஊடகங்கள் இப்பிரச்சினையில் நடந்துகொண்டமுறை வெட்கித் தலைகுனியத் தக்கது.
ஒரு பிரச்சினை ஓய்ந்து இன்னொரு பிரச்சினை அவர்களுக்குக் கண்டிப்பாக முதலீடு தேவைப்படு கிறது. அந்த வியாபார தந்திரத்துக்காகவே மக்களைக் குழப்புவதுபற்றிக் கவலைப்படாமல், முட்டாள்தனமான ஒன்றைக் காற்று ஊதி உயரே பறக்கச் செய்கிறார்கள்.
அறிவியலுக்கு விரோதமானது என்பதை நன்கு தெரிந்து வைத்திருந்தும், வேண்டுமென்றே மக் களிடத்தில் கண், காது, மூக்கு வைத்துப் பரப்புவது மோசடியில்லாமல் வேறு என்னவாம்?
இந்திய அரசமைப்புச் சட்டம் 51-ஏ(எச்) என்ற பகுதி ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்ன என்று கூறுகிறது!
விஞ்ஞான ரீதியான அணுகுமுறை, மனிதாபி மானம் மற்றும் ஆராய்ச்சி, ஊக்கம், சீர்திருத்தம் ஆகியவற்றை வளர்ப்பதும், காப்பதும் அவசியம் என்று ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று வலி யுறுத்தியுள்ள நிலையில், அந்த விஞ்ஞானத்துக்கு விரோதமாக மாயன் காலண்டர் என்பது போன்ற மூடத்தனங்களைப் பரப்பும் வேலையில் ஊடகங்கள் ஈடுபடலாமா? நாய் விற்ற காசு குரைக்காது என்ற மனப்பான்மைதான் அதற்குக் காரணம் என்றால், இதைவிட நாணயமற்ற, நேர்மையற்ற ஒன்று இருக்க முடியுமா?
எதை மன்னித்தாலும் மனிதனின் அறிவை நாசப்படுத்தும் எந்தக் காரியத்தையும் மன்னிக்கவே கூடாது என்று தந்தை பெரியார் கூறும் கருத்தில் ஒளிரும் சமூகப் பொறுப்புணர்ச்சியை சற்று நினைத்துப் பார்க்கட்டும்.
மக்களுடைய அறிவு, காலம், பொருள் இவற்றைப் பாழ்படுத்துவதற்கு, சீர்குலைப்பதற்கு யாருக்கும் உரிமை கிடையாது.
நியாயமாக மக்கள் நல அரசு (Welfare State) என்றால், இதுபோன்ற மூடத்தனமான - மோசடியான வற்றைப் பரப்பும் அல்லது அதற்கு ஊக்கம் கொடுக் கும் ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமே!
லண்டன் தொலைக்காட்சியில் ருத்திராட்சம் பற்றி ஒரு விளம்பரம் ஒளிபரப்பப்பட்டது. கெட்ட ஆவிகளை ருத்திராட்சம் விரட்டும் என்று கூறப்பட்டது. எதிர்ப்பு வெடித்துக் கிளம்பவே அந்த விளம்பரம் உடனே தடுத்து நிறுத்தப்பட்டது.
இங்கு என்னடா என்றால், பொழுது விடிந்தது முதல் ஊசிப் போன சரக்கு விநியோகம்தானே நடந்துகொண்டு இருக்கிறது.
திருவண்ணாமலை தீபம் என்று கூறி டன் டன்னாக நெய்யைக் கொட்டி, ஆயிரக்கணக்கான மீட்டர் துணிகளை எரிய விடும் ஒரு நிகழ்ச்சியை நேரிடையாக இங்குள்ள தொலைக்காட்சிகள் ஒளிபரப்புகின்றன என்பது எத்தகைய வெட்கக்கேடு!
ஒவ்வொரு வாரமும் ஆன்மீகச் சிறப்பிதழை நாளேடுகள் வெளியிடுகின்றன. புராணக் குப்பை களை அபத்தமானவற்றை அவற்றில் அள்ளிக் கொட்டுகின்றன.
எல்லா அக்கப்போர்களையும் எழுதிவிட்டு கடைசியில் எப்படி முடிப்பார்கள் தெரியுமா? .....என்பது அய்தீகம்..... என்பது நம்பிக்கை என்று முடிப்பார்கள்.
வெளியிடுகிறவர்கள் அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ளாமல் மக்களை மடையர்களாக்குவது கொலை குற்றத்தைவிட மோசமானது அல்லவா!
இராசி பலன்களை வெளியிடுவது யோக்கியமான செயலா? இப்பொழுது 2013 ஆம் ஆண்டுக்கான ஆன்மிகத் தகவல்கள் என்று சிறப்பிதழை வெளியிடு கிறார்கள்.
எத்தனை ஆயிரம் ஆண்டுகாலமாக ஆன்மிகம் இருந்து வருகிறது? காதொடிந்த ஊசி அளவுக் காவது பலன் உண்டா?
ஆன்மிகம் மக்களின் வளர்ச்சிக்குக் கண்டு பிடித்துக் கொடுத்தது என்ன? விரலை மடக்க முடியுமா?
நம்மை முட்டாளாக்கியது - சோம்பேறிகளாக் கியது - நமது பொருளையும் - பொழுதையும் பாழாக் கியது அல்லாமல் ஆன்மிகத்தால் ஏற்பட்ட நிகரப் பலன் என்ன?
மதங்களுக்கு உரிமை உண்டு, அதன் விடயங் களில் அரசு தலையிடாது என்பது பொறுப்பான நிலைப்பாடா?
இன்னும் பள்ளிப் பாடங்களில் புராணக் குப்பைகள் இடம்பெறுவது ஏன்? எதிர்காலம் நிகழ்கால இருபால் மாணவர்களின் கைகளில்தானே இருக்கிறது - அவர்களுக்கு அறிவைக் கொடுக்க வேண்டாமா?
அரசும், பொதுநல விரும்பிகளும், அறிவியல்வாதி களும் இந்த வகையில் சிந்திக்கட்டும்! செயல் படட்டும்!!

தமிழ்நாட்டில் கிளர்ச்சி வெடிக்கும்!

15 நாட்களுக்குள்  நடுவர்மன்றத் தீர்ப்பை வெளியிடாவிட்டால் தமிழ்நாட்டில் கிளர்ச்சி வெடிக்கும்!தஞ்சையில் தமிழர் தலைவர் எச்சரிக்கை!


தஞ்சாவூர், டிச.30- காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை 15 நாட்களுக்குள் அரசிதழில் (கெசட்) வெளியிடா விட்டால் தமிழ்நாட்டில் மாபெரும் கிளர்ச்சி வெடிக்கும் என தஞ்சையில் தமிழர் தலைவர் அரசுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். தஞ்சையில் இன்று (30.12.2012) காலை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்து உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது:
காவிரி நதிநீர் பிரச்சனையை பொறுத்த வரையில் நாம் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறோம். காவிரி நதிநீர் நடுவர் மன்றத்தை அமைக்க வேண்டுமென முதன் முதலாக வலியுறுத்திய இயக்கம் திராவிடர் கழகம். வி.பி.சிங் பிரதமராகவும், கலைஞர் முதல்வராகவும் இருந்த காலத்தில் 250 டி.எம்.சி. தண்ணீர் வழங்க உத்தரவிடப்பட்டது. ஆனால் இந்த தீர்ப்பை கர்நாடக அரசு பின்பற்றவில்லை. ஒவ்வொரு ஆண்டும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டே வந்துள்ளது.
1991-இல் கர்நாடகத்தில் 10 இலட்சத்து 20 ஆயிரம் ஏக்கராக இருந்த கர்நாடக விவசாய பரப்பு தற்போது 19 லட்சமாக உயர்ந்துள்ளது. அதை மேலும் 6.7 ஆயிரம் ஏக்கர் பரப்பை விரிவுபடுத்த 5,500 கோடி ஒதுக்கியுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் மேட்டூர் அணை உருவாக்கப்பட்ட போது 28 லட்சம் ஏக்கர் இருந்த விவசாயப் பரப்பு தற் போது 16 லட்சத்து 36 ஆயிரம் ஏக்கராக குறைந்துள்ளது. இந்நிலையில் குறுவை சாகுபடி அழிந்த நிலையில் சம்பா பயிரையாவது காப்பாற்ற வேண்டும்.
நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு
நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு 419 டி.எம்.சி. தண்ணீர் தர வேண்டும் என்ற ஆணையை கர்நாடகம் மதிக்கவில்லை. இந்நிலையில் 2007ஆம் ஆண்டு வழங்கிய இறுதித் தீர்ப்பை இதுவரை கெசட் செய்யவில்லை. காவிரி நதி நீர் ஆணைய தீர்ப்பை கெசட் செய்ய வேண்டும் என தொடர்ந்து எழுதி  வருகிற ஏடு; விடுதலை வலியுறுத்தி வருகிற இயக்கம் திராவிடர் கழகம்.
கிளர்ச்சி வெடிக்கும்!
நதிநீர் ஆணையத் தீர்ப்பை இன்னும் 10,15 நாட்களுக்குள் கெசட் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் நாடு ஸ்தம்பிக் கக் கூடிய கிளர்ச்சி வெடிக்கும் என்பதை தெரிவித்துக் கொண்டு தமிழக அரசு கட்சி வேறுபாடுகளைக் கடந்து அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும்.
உயிரிழந்த விவசாயிகளுக்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணமும், பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் எனவும் பேசினார்.
அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார் தமிழர் தலைவர்.


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Saturday, December 29, 2012

அதிர்ச்சி அடைகிறேன் என்று முதல்வர் சொன்னால்மட்டும் போதாது


அதிர்ச்சி அடைகிறேன் என்று முதல்வர் சொன்னால்மட்டும் போதாது
தமிழ்நாட்டிலும் பெண்கள்மீது ஏவுப்படும் வன்முறைக்கு முடிவு தேவை!
2012 ஆம் ஆண்டோடு இந்த அவலம் முடியவேண்டும்;
2013 இல் புதிய விடியல் பிறக்கட்டும்! பிறக்கட்டும்!!
சென்னை ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் முழக்கம்


சென்னை, டிச. 29- பெண்களுக்கு எதிரான வன் கொடுமைகள் 2012 ஆம் ஆண்டோடு முற்றுப்பெற வேண்டும்; 2013 இல் புதிய விடியல் பிறக்கவேண்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள்.
பெண்கள்மீது ஏவப்படும் பாலியல் கொடுமை களைக் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே இன்று (29.12.2012) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் உரை யாற்றினார். அவரது உரை வருமாறு:
தேசிய அவமானம்
என்னுடைய கண்டன உரைக்கு முன்னாலே இந்தியாவில் மட்டுமல்ல, உலக நாடுகளையே உலுக்கி, மிகுந்த வேதனைக்கும், துன்பத்திற்கும், துயரத்திற்கும், அவமானத்திற்கும் ஆளாக்கி இருக் கக்கூடிய நிகழ்வான, டில்லியிலே பாதிக்கப்பட்ட அந்த மருத்துவக் கல்லூரி மாணவி, சிங்கப்பூருக்கு எடுத்து செல்லப்பட்டு, அவர்கள் விடியற்காலை மரணமுற்றார் என்ற செய்தி, எவ்வளவு பெரிய முயற்சிகளை மருத்துவத் துறையிலே செய்தும்கூட, அந்த மிருகங்களுடைய அட்டகாசம் மருத்துவத் தையும் தாண்டி சென்றிருக்கிறது; மருத்துவத்தால் கூட, உலக மருத்துவ வல்லுநர்களாலும் காப்பாற்ற முடியாத அளவிற்கு, காட்டுமிராண்டித்தனத்தின் உச்சத்திற்கு சென்றிருக்கிறது என்பதை அறிய மிகுந்த வேதனை அடைவதோடு, இந்த அவமானம் ஒரு தேசிய அவமானம், நாட்டிற்கே அவமானம், பெண் குலத்தை இவ்வளவு இழிவாக நடத்தக்கூடிய ஆண் மக்கள் இந்த நாட்டில் வாழ்கிறார்களா? என்று வெளிநாட்டவர் காறித் துப்பக்கூடிய அளவிற்கு மிகப்பெரிய அளவிற்கு ஒரு தேசிய அவமானம் ஆகும்.
மறைவுற்ற மருத்துவக் கல்லூரி மாணவிக்கு இரங்கல்
இன்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் திராவிடர் கழக மகளிரணி சார்பில் பெண்கள்மீது ஏவப்படும் பாலியல் கொடுமைகளைக் கண்டித்து  நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்தில், டில்லியில் மருத் துவக் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமையின் காரணமாக பாதிக்கப்பட்ட நிகழ்வில், இன்று அதிகாலை சிங்கப்பூர் மருத்துவமனையில் மறைந் ததையொட்டி, ஒரு நிமிடம் அமைதி காக்கும்படி திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர்  கி.வீரமணி அவர்களின் வேண்டு கோளுக்கேற்ப தொடக்கத்தில் இரங்கல் தெரிவிக்கப் பட்டது.

ஒரு நிமிடம் அமைதி...
அந்தத் தோழியருக்கு, இவ்வளவு பெரிய கொடு மைக்கு  ஆளான அவருக்கு, கண்டன உரையைத் தொடங்குவதற்கு முன்னாலே, நம் அனைவருடைய ஆழ்ந்த இரங்கலை, ஒரு நிமிடம் அமைதி காத்து, பிறகு உரையைத் தொடரலாம்.
இதுபோன்ற நிகழ்வுகள் தமிழ்நாட்டிலும், சர்வசாதாரணமாக நடைபெறுகிறது. இதற்கு மத்திய அரசு - மாநில அரசு என்ற வேறுபாடில்லை. ஆணா திக்க சமுதாயம் - பெண்ணுரிமை பெறக்கூடிய ஒரு புதிய எழுச்சியுள்ள யுகம் இரண்டுக்குமிடையிலே ஒரு மிகப்பெரிய யுத்தம் நடைபெற்றுக் கொண்டி ருக்கின்ற தொடக்கம்தான் இப்போது நடை பெற்றுக் கொண்டிருக்கிறது.
டில்லியிலே அவ்வளவு பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது. அதேநேரத்திலே, அதைவிடக் கொடு மையாக, தமிழ்நாட்டிலே, நம்முடைய வழக்குரை ஞர் அருள்மொழி அவர்கள் சுட்டிக்காட்டியபடி, தூத்துக்குடியிலே மிகப்பெரிய கொடுமை! அதுவும் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த,  பள்ளிக்கூடத்திற்குச் சென்று திரும்பிய அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்க அந்த வன்கொடுமை நெஞ்சர்களுக்கு எப்படித்தான் மனம் வருகிறதோ அப்படி நடந்து கொள்வதற்கு என்று நமக்கே புரியவில்லை.
அதேபோல், சிதம்பரம் பகுதியிலே, விழுப்புரத் திலே, அதுபோலவே, இன்று காலையில் கூட வேலூர் திருப்பத்தூருக்குப் பக்கத்திலே நடைபெற்ற ஒரு நிகழ்வு என்று தொலைக்காட்சிகள் தொடர்ந்து செய்திகளைச் சொல்லிக் கொண்டிருக்கின்றன.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மிகச் சிறப்பாக இருக்கிறது என்று சொல்கிற முதலமைச்சர் அவர்கள், இதைத்தான் ஒழுங்கு என்று கருதுகிறரா? இதைத்தான் சட்டம் என்று கருதுகிறாரா? அவரே பெண்ணினத்தினுடைய பிரதிநிதியாக இருந்து, தாய்மார்கள் எல்லாம் அவருக்கு வாக்களித்து, அவரை முதலமைச்சராக அமர வைத்திருக்கின்ற ஒரு நிலையிலே,
அவர்கள் மற்ற இடங்களைப் பார்த்து அதிர்ச்சி யடைகிறேன் என்று சொல்வதைவிட, இங்கே நடைபெறுவதைப் பார்த்து, அதிர்ச்சி அடைந்தால் மட்டும் போதாது; அவர்கள் கையிலே சட்டம் இருக்கிறது; காவல்துறை இருக்கிறது; காவல்துறை யிலே மிகப்பெரிய அளவிலே பெண் அதிகாரிகள் இருக்கிறார்கள். இதையும் தாண்டி கொடுமைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இன்னும் சொல்லப்போனால், சில வாரங்களுக்கு முன்னாலே, காவல்துறை பெண் அதிகாரிகளுக்கே பாதுகாப்பு இல்லை என்று சொல்லக்கூடிய அளவிற்கு சில நிகழ்வுகள்; பெண்கள் வளர்ந்தால், முன்னேறினால், அதை சகிக்க முடியாத ஆணாதிக்கம் இன்றைக்கும் வளர்ந்து கொண்டிருக்கிறது.
சுயமரியாதை இயக்கத்தின் தத்துவம்!
பெரியாருடைய சுயமரியாதை இயக்கத்தின் தத்துவம், பிறவியினால் பேதம் இருக்கக் கூடாது என்பதாகும். அந்தப் பிறவியினால் பேதம் இருக்கக் கூடாது என்பது - ஒன்று சாதி, இன்னொரு ஆண் - பெண் என்ற பேதம்.
அந்த வகையிலே இப் பொழுது சட்டங்கள் மாறி வந்தாலும்கூட, மீண்டும் மீண்டும் இப்படியெல் லாம் ஒழுக்கக்கேடுகள், கலாச்சாரச் சீரழிவுகள் நடைபெறுகின்றன. உட னடியாக நடவடிக்கை எடுத்துவிடுவோம் என்ற உறுதிமொழி சொன்னால் மட்டும் போதாது.
நோய்நாடி நோய் முதல் நாடவேண்டும்; இப்படி ஒரு கலாச்சாரத்தைப் பரப் புகின்ற ஊடகங்களாக இருந்தாலும், தொலைக் காட்சியாக இருந்தாலும், அது பெரிய திரை, சின்னத் திரையாக இருந்தாலும் சரி அல்லது ஆட்சித் திரை யாக இருந்தாலும் சரி, எந்தத் திரையாக இருந்தாலும் மகளிருக்கு  பாது காப்புத் தேவை. தவறு யார் செய்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள், இதில் கட்சியில்லை, ஜாதியில்லை, மதம் இல்லை என்று சொல்லக்கூடிய ஒரு நல்ல போக்கு, நடுநிலைப் போக்கு, கடுமையான போக்கு நடைபெற்றாகவேண்டும்.
நம்முடைய நாட்டில் நடைபெற்ற இந்த அவலத் தைக் கண்டு சிங்கப்பூர் மக்கள் சிரிக்கிறார்கள்.
இப்படி ஒரு அவலம் இந்தியாவில் நடை பெறலாமா என்று பேட்டி கொடுக்கிறார்கள். இது தேசிய அவமானமாகும்.
எனவே, ஆட்சியாளர்களுக்குச் சொல்கிறோம், மத்திய - மாநில ஆட்சியாளர்களுக்குச் சொல் கிறோம், இதை வெறும் 144 உத்தரவு போட்டு அடக்கிவிட முடியாது. அல்லது சட்டங்களால் தடை செய்து அடக்கிவிட முடியாது. அல்லது ஊடகங்களை மிரட்டி நீங்கள் உண்மையைச் சொன்னால், உங்கள்மீது வழக்குபோடுவோம் என்று அடக்கிவிட முடியாது. மிகப்பெரிய புரட்சியாக வெடிக்கும்!
அப்படி அடக்க, அடக்க இது கொதிகலன்போல உள்வாங்கி இருக்கும். ஒரு நாள் மிகப்பெரிய புரட்சியாக வெடித்தால், அன்றைக்கு யாராலும் அதை சமாளிக்க முடியாத ஒரு காலகட்டம் வரும்.
எனவேதான், அந்த நிலைக்கு மக்களை விரட்டாமல், ஆத்திரத்தின் உச்சகட்டத்திற்குப் போகாமல், மத்திய - மாநில அரசுகள், குறிப்பாக ஆளுகின்றவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும். இதற்கு சமாதானத்தைத் தேடி அலையக்கூடாது. உண்மைக் குற்றவாளிகளைக் கண்டறியவேண்டும், அதுதான் மிக முக்கியம். ஏதோ, குற்றவாளிகளைக் கண்டுபிடித்துவிட்டோம் என்று சில சோளக் கொல்லை பொம்மைகளைக் கொண்டுவந்து நிறுத்தக்கூடாது.
முடிவல்ல, தொடக்கம் இது!
அந்த வகையிலே, இன்று நடைபெறக்கூடிய ஆர்ப்பாட்டம் இருக்கிறதே, இது முடிவல்ல; தமிழ்நாட்டைப் பொறுத்தவரையிலே இது ஒரு தொடக்கம். எல்லோருக்கும் இந்த உணர்வு இருக்கிறது; இதற்குக் கட்சியில்லை, ஜாதியில்லை, மதமில்லை. இன்னுங்கேட்டால், மேல்ஜாதிப் பெண்களாக இருந்தாலும் சரி, கீழ்ஜாதிப் பெண்களாக இருந் தாலும் சரி பெண்கள் பெண்கள்தான். அவர்க ளுடைய உரிமைகள் காப்பாற்றப்படவேண்டும். அவர்கள் மனிதர்கள். அதுதான் மிக முக்கியம். இந்த மனிதநேயப் பார்வைதான் நமக்கு மிக முக்கியம். அந்த அடிப்படையிலே, எந்த ஜாதி என்பது முக்கியமல்ல;  எந்தக் குலம் என்பது முக்கியமல்ல; எந்தக் கட்சி என்பது முக்கியமல்ல; எந்த மாநிலம் என்பதும் முக்கியமல்ல; மனிதர்களாக என்பதுதான் முக்கியம். அதுதான் தந்தை பெரியாருடைய தத்துவம். ஆகவே, அந்தத் தத்துவத்தை மய்யப் படுத்தி, இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தை முதற்கண் தொடங்குகிறோம்.
2013 இல் புதிய விடிவு பிறக்கட்டும்
2012 ஆம் ஆண்டோடு இது முடியட்டும்; 2013 ஆம் ஆண்டு புதிதாக தொடங்குகிறது என்று நினைக்காதீர்கள்; எங்கள் சிந்தனையிலே புதிய விடியல் பிறக்கிறது; பெண்களுக்குப் புதிய விடியல் பிறக்கவேண்டும்; பெண்ணுரிமைக்குப் பாதுகாப்பு இருக்கவேண்டும் என்ற உணர்வினைக் காட்டுங்கள் ஆட்சியாளர்களே!
அமைதியாகச் சொல்வதால், அவர்கள் ஏதோ சாந்தமாக விட்டார்கள்; சரி செய்துவிட்டோம் என்று தயவு செய்து தப்புக் கணக்குப் போடா தீர்கள். எரிமலைகள் வெடிப்பதற்கு முன்னால்கூட அமைதி யாகத்தான் இருக்கும்; கடல்கூட சீறுவதற்கு முன்னால்கூட அமை தியாகத்தான் இருக்கும். அதை நன்றாக உணர்ந்து நடந்து கொள்ளுங்கள், நடந்து கொள்ளுங்கள் என்று ஆட்சியாளர்களுக்குச் சொல்லுகிறோம்.
ஆண்களே, இது பெண்கள் பிரச்சினையல்ல;
மீண்டும் இதுபோன்ற நிகழ்வுகள் எங்கும் நடை பெறக்கூடாது; யாருக்கும் நடைபெறக்கூடாது. ஆண்களே, இது பெண்கள் பிரச்சினை என்று நினைக்காதீர்கள்; பெண்களைவிட அவமானப்பட வேண்டியவர்கள் ஆண்கள்தான் இதில்,  என்பது தான் மிக முக்கியமானது.
எனவே, இந்தத் தேசிய அவமானத்தை துடைக்க, அனைவரும் கைகோர்த்து நில்லுங்கள்; ஒத்த குரல் எழுப்புங்கள்; இதில் சுருதிபேதம் வேண்டாம்; கருத்து மாறுபாடுகள் வேண்டாம்; கொள்கை வேறுபாடுகள் குறுக்கிட வேண்டாம்.
முன்னேறிய நாடு என்றால்...
ஒரே நோக்கம் மனிதநேயம், சுயமரியாதை, மறுவாழ்வு, பொதுவாழ்வு, பெண்ணுரிமை எங்கே நிலைக்கிறதோ, அந்த நாடுதான் முன்னேறிய நாடு என்று அதற்குப் பொருள்.
ஏனென்றால், அவர்தான் தாய், அவர்தான் மகள், அவர்தான் நம் தங்கை, அவர்தான் நம் தமக்கை என்பதை மறந்துவிடாதீர்கள், மறந்துவிடாதீர்கள் என்று கூறி முடிக்கிறேன்.
வாழ்க பெரியார்!
வளர்க பகுத்தறிவு!
நன்றி வணக்கம்!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் உரையாற்றினார்.