Total Pageviews

Wednesday, October 26, 2016

அனைத்துக்கட்சிக் கூட்டத்தை குறை கூறுவோர்கள் கருநாடகத்துக்குத் துணை போனவர்களே!

  • தமிழர்களின் வாழ்வாதாரக் காவிரிப் பிரச்சினை
  • அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ஆளும் கட்சி கூட்டாத காரணத்தால்
  • அரசமைப்புச் சட்டப்படியான ஜனநாயகக் கடமையை எதிர்க்கட்சித் தலைவர் செய்துள்ளார்
குறை கூறுவோர்கள் கருநாடகத்துக்குத் துணை போனவர்களே -
குறையைத் திருத்திக்கொண்டு அடுத்த கூட்டங்களிலாவது கலந்துகொள்ளட்டும்!

தமிழர் தலைவர் ஆசிரியர் வெளியிட்டுள்ள அறிக்கை

காவிரி: அனைத்துக் கட்சிக் கூட்டம் தமிழகத் தலைவர்களுக்கு வேண்டுகோள்!

தமிழர்களின் வாழ்வாதாரப் பிரச்சினையான காவிரி நீர் குறித்து விவசாய சங்கங்கள், பல்வேறு அரசியல் கட்சிகள் வைத்த வேண்டுகோளை ஏற்று எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நேற்று (25.10.2016) கூட்டினார்.

ஆளும் கட்சி தரப்பில் அத்தகைய கூட்டத் தைக் கூட்டாத நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் மு.க.ஸ்டாலின் தனது சட்ட ரீதியான ஜனநாயகக் கடமையைத்தான் செய்துள்ளார். கூட்டத்தில் கலந்துகொள்ளாவிட்டாலும், அந்த முயற்சியைக் குறை கூறுவது - கருநாடகத்துக்கு உதவி செய்வதாகவே ஆகும் - அத்தகையவர்கள்  திருந்தவேண்டும்; அடுத்தடுத்த கூட்டங்களில் பங்கேற்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டிற்கு உள்ள காவிரி நீர்ப் பங்கீட்டு உரிமையை அறவே மறுக்கும் கருநாடக அரசு, அரசமைப்புச் சட்டப்படி உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கும்கூட கட்டுப்பட மறுத்து குறுக்குச்சால் ஓட்டுகிறது.

இரு மாநிலங்களுக்கும் பொதுவாக இருந்து, அரசமைப் புச் சட்டப்படி தனது கடமையாற்ற வேண்டிய பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு - நடு நிலை பிறழ்ந்து - சட்டக் கடமையைச் செய்யாமல், உச்சநீதிமன்றத்தில் முதல் இரண்டு நாள் காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைக்க ஒப்புக்கொண்டு விட்டு, அடுத்த மூன்றாவது, நான்காவது நாளில் - கரு நாடகாவில் 2017 ஆம் ஆண்டு (நடைபெறவிருக்கும் தேர்தலில் தாங்கள் ஆட்சியைப் பிடிக்கவேண்டும் என்ற எண்ணத்திலோ என்னமோ,) ‘‘அந்தர் பல்டி’’ அடித்து, தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, நாடாளுமன்றம்தான் இதுபற்றிக் கூற முடியும் - உச்சநீதிமன்றம் விசாரித்து ஆணையிட முடியாது என்ற பொருந்தா வாதத்தை முன் வைத்தனர்.
மூன்று நீதிபதிகள், நிலுவையில் உள்ள வழக்கைத்தான் விசாரிக்க முடியும் என்று ஒன்றைத் தேடிக் கண்டுபிடித்து, தனது ஒரு சார்பு நிலையை மறைக்க, இப்படி ஒரு போர்வையைப் போர்த்திக் கொண்டுள்ளது!

சுய முரண்பாடு!

நாடாளுமன்றம்தான் முடிவெடுக்கவேண்டும் என்ற அதன் நிலைப்பாடு சரியென்றால், மூன்று நீதிபதிகள், அய்ந்து நீதிபதிகள் விசாரித்தால் மட்டும் சட்டப்படி இது சரியாகுமா? இதைவிட சுய முரண்பாடு வேறு உண்டா?

இவ்வளவு சட்ட வலிமை, உச்சநீதிமன்றத்தின் ஆணை அடிப்படையில், தமிழ்நாட்டின் சம்பா பயிரைக் காக்க, குறிப்பிடும் அளவுக்காவது தண்ணீரைத் திறந்துவிடவேண்டும் என்பதையும் ஏற்காத கருநாடக அரசும், அதன் அனைத்துக் கட்சித் தலைவர்களும், முன்னாள் பிரதமர், முன்னாள், இன்னாள் முதல்வர்கள் எல்லோரும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை, சட்ட மன்றத்தை, இரு அவைகளை - அடிக்கடிக் கூட்டி - ஒருமித்துள்ளோம் தமிழ்நாட்டு உரிமைகளை மதிக் கத் தயாரில்லை; உச்சநீதிமன்ற ஆணையையும் ஏற்க மாட்டோம் என்று கூறும் நிலை கருநாடகத்தில்!

கருநாடகமும் - தமிழ்நாடும்!

ஆனால், நமது தமிழ்நாட்டில்...........? மகா வெட்கக்கேடு!

அத்தனைக் கட்சிகளும் ஓங்கி ஒலித்து, மீண்டும் மீண்டும் கூவினாலும், ஆளுங்கட்சி (அ.தி.மு.க.) அனைத் துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட மறுப்பதில் திட்டமிட்ட பிடிவாதம் காட்டுகிறது!
எதிர்க்கட்சித் தலைவர் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்

தமிழக சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் மாண்பமை மு.க.ஸ்டாலின் அவர்கள் அனைத்து விவசாய சங்கங்கள், பல்வேறு அரசியல் கட்சிகள் வற்புறுத்திய நிலையில், தமிழக முதலமைச்சர் உடல்நலம் குன்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது பொறுப்புகளை சட்டப்படி கவனிக்கும் மூத்த அமைச்சரான ஓ.பன்னீர்செல்வம் அவர்களை நேரில் சந்தித்து, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டி தமிழ்நாட்டின் ஒட்டுமொத்தக் குரலை ஓரணியில் திரண்டு ஓர் குரலாக ஒலிக்கலாம் என்று கேட்டதற்குப் பதில் வரவேயில்லை.

டெல்டா மாவட்டங்களில் சம்பா பயிருக்கான நீர் வரத்து கேள்விக்குறியாகிவிடும் அபாய நிலையில், தனக்கு முழு விருப்பமில்லாவிட்டாலும், விவசாயிகளின் வேதனையைத் தீர்க்க, தனது கட்சித் தலைவர் கலைஞரின் அனுமதியோடு, அனைத்துக் கட்சிக் கூட்டத்தினைக் கூட்டினார் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் (25.10.2016).

அதில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க. கலந்துகொள்ள வில்லை. புரிகிறது - நியாயப்படுத்த முடியாவிட்டாலும்கூட!

கலந்துகொள்ளாவிட்டாலும் தேவையற்ற விமர்சனங்கள் தேவையா?

எதிர்க்கட்சிகளாக (சட்டமன்றத்தில் உள்ளே இல்லா விட்டாலும்) வெளியே உள்ள பா.ஜ.க. மற்றும் மக்கள் நலக் கூட்டணி (அது இப்போது சுருங்கிய கூட்டணி) நான்கு கட்சிகளும் ஏனைய பா.ம.க., தே.மு.தி.க. போன்ற சில கட்சிகளும் அக்கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

இவர்கள் கலந்துகொள்ளாவிட்டாலும்கூட பரவா யில்லை; தேவையற்ற விமர்சனங்களைச் செய்து, தங்களது நிலைப்பாட்டின் முரண்பாட்டினை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டனர் என்பது வேதனைக்குரியது! (வி.சி.க. தலைவரின் நிலை இதில் விலக்கு)

தீப்பிடித்து எரியும்போது தீயை அணைக்க முன்வர வேண்டிய நிலையில், வாதப் பிரதிவாதங்களில் ஈடுபடுவது என்பது எந்த அளவுக்கு நியாயம் - நேர்மை?

விவசாயிகளைக் கொண்ட அத்தனை  அமைப்புகளும் நேற்றைய கூட்டத்தில் கலந்துகொண்டு ஓர் குரலில் கூட்ட முயற்சியை வரவேற்றார்களே - அதிலிருந்தாவது தங்களது கலந்துகொள்ளாத முடிவு சரியானதல்ல என்பதை கூட்டத்தில் கலந்துகொள்ளாத கட்சிகள் உணர வேண்டாமா?

தமிழ்நாட்டு பா.ஜ.க.வின் புதிய கண்டுபிடிப்பு

இதில் ஒரு விசித்திரம் வழியும் வேடிக்கை என்ன வென்றால், ‘எதிர்க்கட்சித் தலைவருக்கு, தி.மு.க.வுக்கு இக்கூட்டம் கூட்ட எந்த தார்மீக உரிமையும் இல்லை!’
தமிழ்நாட்டு பா.ஜ.க. தலைவர்களின் புதிய கண்டுபிடிப்பு இது.
அவர்கள் சிந்தனைக்குச் சில ஜனநாயக மரபுப்படியான கருத்துகளை முன்வைக்க விரும்புகிறோம்.

எதிர்க்கட்சித் தலைவருக்குரிய
சட்டப்படியான நிலை!

1. எதிர்க்கட்சித் தலைவர், ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளின் குரலைப் பிரதிபலிப்பவர் என்பதும், ஆளுங்கட்சிக்கு மாற்று - ‘நிழல் அமைச்சரவை அமைத்துச் செயல்படும்‘ உரிமை படைத்தவர் என்பதும், சட்டப்படியான அமைச்சர் தகுதியுள்ள ஜனநாயகப்படி உரிமை படைத்தவர் ஆயிற்றே - மறுக்க முடியுமா?

ஆளுங்கட்சி - இதுபோன்ற முக்கிய நெருக்கடியான தருணத்தில், தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத் தைக் காப்பாற்ற - அவர்கள் வேண்டுகோளை ஏற்று கூட்டம் கூட்டுவது தார்மீக நெறிப்படியும், அரசமைப்புச் சட்டப்படியான கடமைப்படியும்கூட தேவையும், நியாய மும் அல்லவா?

2. அதுமட்டுமா? சபாநாயகர் தேர்வுக்குப் பின்னர் சட்டமன்ற ஆளுங்கட்சித் தலைவர் ஒரு பக்கமும், மறுபக்கம் எதிர்க்கட்சித் தலைவரும்  அவரை அழைத்து நாற்காலியில் அமர வைக்கும் மரபு எதைக் காட்டுகிறது?

இதைப் புரியாதவர்களா இத்தலைவர்கள்?
இன்னொருவர்,இந்தக்கூட்டம்அரசியல்ஆதாயத் திற்காகக் கூட்டப்படுகிறது என்று கூறி, மேலும் இக் கூட்டத்திற்குச் சம்பந்தமில்லாத கட்சிப் பிரச்சினைகளை எல்லாம் கூறினார்!

பா.ஜ.க. நிலையையே எடுத்த அரசியல் கட்சிகள்!

முந்தைய நிலை தி.மு.க. - காங்கிரஸ் என்றெல்லாம் ஏதோ கூறுவது, அவரின் அரசியல் தடுமாற்றத்தைத்தான், காழ்ப்புணர்வைத்தான் காட்டுகிறதே தவிர, இன்றைய நிலையில் அவருக்குப் பெருமை சேர்க்க உதவாது!

‘கலந்துகொள்ளமாட்டோம்‘ என்று பா.ஜ.க.வினர் எடுத்த நிலையும், இவர்கள் எடுத்த நிலையும் ஒன்று என்கிறபோது, இவர்கள் மத்திய அரசின், கருநாடக அரசின் நிலைப்பாட்டிற்குத் தெரிந்தோ, தெரியாமலோ, புரிந்தோ புரியாமலோ துணை போகிறார்கள் என்றுதானே பொருள்?

தமிழ்நாட்டு பா.ஜ.க.வினர் பேசுவது, அவர்களது தலைமை எடுத்த முடிவிற்கு ஏற்பத்தானே தவிர வேறில்லை. அதுபற்றி மேலும் விளக்கத் தேவையும் இல்லை.
இனியாவது முடிவை மாற்றிக் கொள்ளட்டும்!

நடந்தவைகள் நடந்தவைகளாகட்டும்; இனி தமிழ் நாட்டு உரிமை, வாழ்வாதாரம் என்ற ஒன்றை மட்டும் பிரதானப்படுத்தி, தங்களின் முடிவை மாற்றி, அடுத்த அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டும்போது வந்து கலந்துகொண்டு, தங்கள்மீதான அரசியல் பழியைத் துடைத்துக் கொள்வார்களாக!

இப்படி எதிர்க்கட்சித் தலைவரால் கூட்டப் பெற்ற கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட நான்கு தீர்மானங்களில், முதல் தீர்மானமே இக்கூட்டத்தின் பெருநோக்கையும், பெருந்தன்மையையும், ஜனநாயகத்தின் மாண்புகளையும் நினைவூட்டுவதாக அமைந்தது.

1. தமிழ்நாடு சட்டமன்றத்தைக் கூட்டுக!

2. அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்ட தமிழக அரசுக்கு மீண்டும் வேண்டு கோள் விடுத்துள்ள பாங்கே; இது அரசியல் ஆதாயம் தேட எதிர்க்கட்சிகளால் கூட்டப் பெற்ற கூட்டமல்ல; மறந்துவிட்ட கடமைகளை மீண்டும் ஆளுங்கட்சிக்கும், இக்கூட்டத்திற்கு வர வாய்ப்பற்றுப் போனவர்களின் மறுசிந்தனைக்கும் உரியதாக அமைந்த பாங்கு, இவர்களின்  அரசியலுக்கு அப்பாற்பட்ட நனி நாகரிகம் காட்டுவதாகும்!

அரசியல் பிழைத்தோருக்கு அறம் ஒரு கூற்றம் என்பதை யாரும் மறக்கக்கூடாது.


கி.வீரமணி              
தலைவர்,   திராவிடர் கழகம்

சென்னை
26.10.2016 

0 comments: