Friday, April 29, 2016

மருத்துவப் படிப்புக்கு தேசிய அளவில் பொது நுழைவுத் தேர்வு: தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு கடும் பாதிப்பு

கோப்பு படம்

 மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு தேசிய அளவில் பொது நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டால் தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

தமிழகத்தில் 20 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் எம்பிபிஎஸ் படிப்பில் மொத்தம் 2,655 இடங்கள் இருக்கின்றன. இதில் 15 சதவீத இடங்கள் அதாவது, 398 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்குச் சென்றுவிடும். (அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்கள் அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வு மூலமாக நிரப்பப்படுகின்றன). எஞ்சிய 2,257 இடங்கள், மாநில ஒதுக்கீட்டுக்கு கிடைக்கும். இந்த இடங்கள் பிளஸ் 2 கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்படும்.

தமிழகத்தில் கடந்த 2007-ம் ஆண்டு வரை மருத்துவ படிப்புக்கான இடங்கள் நுழைவுத்தேர்வு மூலமாக நிரப்பப்பட்டு வந்தன. நுழைவுத்தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவதாக கருதிய தமிழக அரசு கடந்த 2007-ம் ஆண்டு நுழைவுத்தேர்வை ரத்து செய்தது. அதுமுதல் பிளஸ் 2 கட் ஆப் மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவப் படிப்புக்கு மாணவர்கள் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். தமிழகத்தில் சென்னையில் மட்டும் ஒரேயொரு அரசு பல்மருத்துவக் கல்லூரி உள்ளது. இங்கு பிடிஎஸ் படிப்புக்கு மொத்தம் 100 இடங்கள் இருக்கின்றன. இதில் 15 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுப் போய்விடும். எஞ்சிய 85 இடங்களை தமிழக அரசு நிரப்புகிறது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் சேர ஆண்டுதோறும் ஏறத்தாழ 35 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பிக்கிறார்கள்.

இந்நிலையில் தற்போது மருத்துவ படிப்புக்கு தேசிய அளவில் பொது நுழைவுத்தேர்வு நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே இந்த ஆண்டு மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் மே 9-ம் தேதி முதல் வழங்கப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் விண்ணப்பம் வழங்கப்படும் நாளை எதிர்நோக்கி காத்திருக்கும் நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அவர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அகில இந்திய அளவிலான நுழைவுத்தேர்வு என்பது சிபிஎஸ்இ பாடத்திட்ட தரத்தில் இருக்கும். இதனால், மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் தேசிய அளவிலான பொது நுழைவுத்தேர்வில் வெற்றி பெறுவது மிகவும் கடினம். ஒரு விஷயத்தை பயன்பாடு சார்ந்த அடிப்படையில் படித்துவந்த சிபிஎஸ்இ மாணவர்களுடன் தேர்வுக்கு நேரடி வினா-விடை அடிப்படையில் படித்துவந்த மாநிலப் பாடத்திட்ட மாணவர்கள் போட்டிபோடுவது என்பது இயலாத காரியம்.

இதுகுறித்து தமிழக பள்ளிக்கல்வித் துறையின் முன்னாள் துணை இயக்குநரான சிவா தமிழ்மணி கூறும்போது, “இந்தியாவில் பள்ளி மாணவர்கள் வெவ்வேறு பாடத்திட்டத்தில் படிக்கிறார்கள். எனவே, கல்வியின் தரம் நிச்சயம் ஒரே மாதிரியாக இருக்காது. இந்த சூழலில் மருத்துவப் படிப்புக்கு தேசிய அளவில் பொது நுழைவுத்தேர்வு நடத்தினால் அதை எப்படி ஏற்க முடியும்?. இந்த நுழைவுத்தேர்வால் சிபிஎஸ்இ மாணவர்களும், நகர்ப்புற மாணவர்களும்தான் பயன்பெறுவார்களே தவிர மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களும், கிராமப்புற மாணவர்களும் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்” என்றார்.

தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவரான கே.பி.ஓ. சுரேஷ் கூறும்போது, “மருத்துவப் படிப்புக்கு அகில இந்திய அளவில் பொது நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டால் சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ பாடத்திட்டத்தில் படிக்கின்ற மாணவர்களுக்குத்தான் வெற்றி வாய்ப்பு அதிகம். மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு வாய்ப்புகள் கண்டிப்பாக குறையும்” என்றார்.


திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தேர்வெழுதிவிட்டு எம்பிபிஎஸ் சேரும் ஆசையில் இருக்கும் மாணவி மு.வெ.கவின்மொழி கூறும்போது, “சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கும், மாநிலப் பாடத்திட்டத்துக்கும் அதிக வேறுபாடுகள் உண்டு. தேசிய அளவிலான பொது நுழைவுத்தேர்வு என்றால் நிச்சயம் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்படிதான் அமைந்திருக்கும். அகில இந்திய மருத்துவக் கல்வி நிறுவனத்தின் (எய்ம்ஸ்) நுழைவுத்தேர்வுக்கான மாதிரி விடைகளுக்கு விடையளிக்க முயன்றேன். மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த என்னால் 10 கேள்விகளில் வெறும் 2 கேள்விக்கு மட்டுமே சரியாக விடையளிக்க முடிந்தது. தற்போது திடீரென நுழைவுத்தேர்வு என்று அறிவித்தால் என்னைப் போன்ற மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவ, மாணவிகளால் எப்படி தயாராக முடியும்?. 

தனியார் பள்ளிகளில் அகில இந்திய நுழைவுத்தேர்வுக்காக 11-ம் வகுப்பிலிருந்தே பயிற்சி அளிக்கத் தொடங்கிவிடுகிறார்கள். அதுபோன்ற மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு எளிதாக இருக்கும் பிளஸ் 2 தேர்வில் அதிக கட் ஆப் மதிப்பெண் பெற்று எம்பிபிஎஸ் சேர்ந்துவிடலாம் என்ற கனவில் நிறைய மாணவ, மாணவிகள் உள்ளனர்.

 இந்நிலையில், மருத்துவப் படிப்புக்கு தேசிய அளவில் பொது நுழைவுத்தேர்வு என்ற அறிவிப்பு என்னைப் போன்ற கிராமப்புற மாணவ, மாணவிகளுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்” என்றார். 

பொதுத்துறை தனியார் துறைக்கு மாறும்போது இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து ஏற்படுகிறது

பீகாரில் சவால்களை சமாளித்து வெற்றி பெற்றவர் நிதீஷ்குமார்
பொதுத்துறை தனியார் துறைக்கு மாறும்போது இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து ஏற்படுகிறது

தனியார் துறைகளில் இடஒதுக்கீட்டுக்காகப் போராடுவோம்!

பீகார் முதல்வருக்கு தமிழ்நாட்டில் சிறப்பான வரவேற்பு காத்திருக்கிறது
பாட்னாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கருத்துரை
சென்னை, ஏப். 28- பொதுத்துறை தனியார்த்துறைக்கு மாறுவதால் இடஒதுக்கீடு பாதிக்கப்படுகிறது என்று குறிப்பிட்ட திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், தனியார்த் துறைகளிலும் இடஒதுக்கீட்டுக்காகப் போராடுவோம் என்றார்.

பீகார் மாநிலம் பாட்னாவில் அம்மாநில முதல் அமைச்சர் நிதீஷ் குமாருக்கு சமூக நீதிக்கான வீரமணி விருது வழங்கும் விழா 9.4.2016 அன்று சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

பெரியார் மண்ணிலிருந்து வந்திருக்கும் நாங்கள் மாண்புமிகு நிதிஷ்குமார், பெரியோர்கள் - ஜெயபிரகாஷ் நாராயண்,  கர்பூரி தாக்கூர், லாலுபிரசாத் ஆகியோர் மட்டு மின்றி அசோகரும், புத்தரும் வாழ்ந்த இம்ண்ணிற்கு எங்கள் உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். பீகாரைச்சார்ந்த எனது உடன் பிறப்புகளைப் பார்ப்பதிலும், பழகுவதிலும் மகிழ்வதோடு இந்தியாவின் தலைமகனாகிய நிதிஷ்குமார் அவர்களைப் பாராட்டுவதிலும் பெருமைப்படுகி றோம். வடக்கு, தெற்கு என்கிற வேறுபாடு இங்கு இல்லை. நிதிஷ்குமார் ஒரு இணைப்புப்பாலமாக விளங்குகிறார். அதனாலேயே இந்த விழாவில் நான் கலந்து கொள்கிறேன். வழங்கப்படுகிற விருது எனது பெயரில் இருப்பதனால்,  இத்தகைய விழாக்களில் கலந்து கொள்ள நான் தயங்குவது உண்டு. பெரியார் பெயரில் விருது இருந்தால், தயக்கம் இன்றி நான் கலந்து கொள்வேன். இருப்பினும் நான் இந்த அழைப்பினை ஏற்றுக் கொண்டதற்குக் காரணமே, விருது பெறும் தலைமகனார் ஒரு மாநிலத்தின் முதல் அமைச்சர் மட்டுமல்ல. இந்திய நாடே போற்றும் சமூக நீதியாளர்.

பெரியாரும் - அம்பேத்கரும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்


நாங்கள் பெரியாரின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டவர் கள். பெரியாரும் அம்பேத்கரும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் ஆவர். ஜோதிபா பூலே கூறியனவும், சாகுசத்ரபதி செய்தனவும், சிறீ நாராயண குரு ஏற்படுத்தியனவும் அண் மைக்காலத்தில் விமர்சனம் செய்யப்பெற்றன. எமது கருத்துப் படி பீகாரில் அண்மையில் நிகழ்ந்த - சட்டமன்றத்திற்கான தேர்தல் அரசியல் போராட்டம் அல்ல. அதற்கும் மேலாக அது சமூகப் போராட்டம் ஆகும். அதிலே நீங்கள் வெற்றி மாலை சூடி வெளி வந்துள்ளீர்கள். எனவே இந்த நிகழ்ச்சியில் மிகுந்த மன மகிழ்ச்சியோடு நாங்கள் கலந்து கொள்கிறோம். ஏறத்தாழ சட்டமன்றமே இங்கு இருக்கிறது. மதிப்பிற்குரிய சட்டமன்றத் தலைவர் மற்றும், மாநிலத்தைப் பிரதிபலிக்கின்ற இருபாலாரும் இங்கு நிறைந்துள்ளனர். எங்களது திராவிடர் கழக வரலாற்றில் இந்த நிகழ்ச்சி குறிப்பிடத் தக்க ஒன்றாகும்.

மதிப்பிற்குரிய நிதிஷ்குமார் அவர்களே! 1929-ஆம் ஆண்டிலேயே தந்தை பெரியார் அவர்கள் தந்த திட்டங்களை தீர்மானங்களை செயலாக்கி நீங்களும் செய்து வருகிறீர்கள். நிதிஷ்குமார் அவர்களும் நீங்களும் நானும் பிறந்திராத 1929-ஆம் ஆண்டிலேயே தமிழ்நாடு - செங்கல்பட்டில் நிகழ்ந்த முதலாவது சென்னை மாகாண சுயமரியாதை மாநாட்டிலேயே சமூகநீதி பற்றிய பல தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளார்கள். துணிச்சல் மிகுந்த புரட்சிகரமான தீர்மானங்கள் அந்த மாநாட்டில் வெளிவந்தன. அன்றைய சென்னை மாகாண முதலமைச்சர் சுப்பராயன் போன்றோர் அந்த மாநாட்டில் பார்வையாளராக பங்கேற்றுள்ளனர். சமூக நீதிக்குத் தலையாய முக்கியத்துவம் கொடுத்துள்ளனர்.

இராணுவத் துறையிலும் பெண்கள்

மகளிரைக் காவல் துறையிலும், இராணுவத்திலும் பணி அமர்த்தவேண்டும் என்கிற புரட்சிகரமான தீர்மானங்களும் நிறைவேறி உள்ளன. தி.மு.க ஆட்சியில் தமிழ் நாட்டில் இந்த வேண்டுகோள் செயல்படுத்தப் பெற்றது என்பது கூட வியப்புக்குப் உரியதல்ல, இங்கு பீகாரிலும் நமது மதிப்பிற்குரிய முதலமைச்சர் நிதிஷ்குமார் அதனை நிறைவேற்றி உள்ளார். முப்பத்தைந்து விழுக்காடு அளவில் மகளிர் காவல் துறையில் இருக்க வேண்டும் என்பது ஒரு நியதி. தந்தை பெரியார் இதனைப் பற்றிய தீர்மானம் போட்டபோது காவல் துறையில்  பெண்கள் எப்படிப் பணிபுரிவர் என்றெல்லாம் கேட்டார்கள். பெண்கள் தத்தமது கணவன்களையே கண்காணிக்கும்போது சமூகத்தையும் ஏன் கண்காணிக்கமுடியாது என்று எதிர் கேள்வி கேட்டார் பெரியார். பெரியாரின் அத்தகைய சிந்தனையை நீங்கள் இங்கே (பீகாரில்) செயலாக்கி உள்ளீர்கள். நீங்களும், லாலு அவர்களும் காங்கிரஸ் கட்சியோடு சேர்ந்த நிகழ்ச்சியினை ஒர்அரசியல் கூட்டு என்று நாங்கள் கருதுவதை விட, நீங்கள் ஒரு மாபெரும் சமூக விழிப்புணர்ச்சியை எற்படுத்தி உள்ளீர்கள் என்றே கருதுகிறோம். உங்களுக்குப் பீகார் மக்கள் அளித்த பெருத்த ஆதரவினை பெரிதும் பாராட்டுகிறோம். நமக்கென்று அரசமைப்புச் சட்டம் ஒன்று உள்ளது. பஞ்சாயத்து ஆட்சியிலிருந்து நாடாளுமன்றம் வரை நாம் அனைவரும் அந்த அரசமைப்புச் சட்டப்படிஉறுதிமொழி  எடுத்துக்கொண்டு பணிசெய்கிறோம். அந்த அரசமைப்புச் சட்டத்தின் முன்னுரையில் சட்டவல்லுநர்களின் கருத்துப்படி நாம் என்ன விரும்புகிறோம் என்பது, நாம் எதற்காகக் கிளர்ச்சி செய்ய வேண்டும் என்பது சட்டத்துக்குப் புறம்பானதோ   அல்லது எதிப்பானதோ அல்ல; அது சட்டத்துக்கு உட்பட்டது தான்; அதன்படி நாம் இப்போது விரும்புவது எல்லாம் அரசமைப்புச் சட்டவிதிகளை நடைமுறைப்படுத்தவேண்டும் என்பதுதான். அந்த வேண்டுகோளுக்கு எந்த பதிலும் இல்லை.

பீகாரில் எதிர்கொள்ளப்பட்ட மதச்சார்பின்மை

அரசமைப்புச் சட்டம் என்பதில் மதச்சார்பின்மை வலி யுறுத்தப்பட்டுள்ளது. அதன் முன்னுரையில் குறிப்பிட்டபடி அனைத்து மக்களுக்கும் சமூக நீதி, பொருளாதார நீதி, அரசியல் நீதி, ஆகிய மூன்று தளங்களில் நீதி வழங்கப்பட வேண்டும். சிலர் சமுகநீதியையும் பொருளாதாரநீதியையும் போட்டு குழப்பிப்கொண்டு இருக்கிறார்கள். நாங்கள் பெரியார் தந்த கொள்கைவழியில் தெளிவாக இருக்கிறோம். எங்களது இயக்கம் தெளிவாக உள்ளது. எனவே தான் சமூகநீதி தளத்தில் போராடவேண்டியுள்ளது. நம் அரசு ஒரு மதச் சார்பற்ற அரசு. அரசின் மதச்சார்பற்ற தன்மை பாதுகாக்கப்பட வேண்டும். அண்மையில் பீகார் மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத்திற் கான தேர்தலின் பொழுது மதச்சார்பின்மைக்கு சவால் விடுக் கப்பட்டது. சவால் விட்டவர்களுக்கு பீகார் மக்கள் சரியான தீர்ப்பினை தங்களது வாக்களிப்பின் மூலம் நிரூபித்துள்ளனர். நீங்கள் கொடுத்த தீர்ப்பினால் சமூகநீதி - இடஒதுக்கீடு பற்றிய தங்களது நிலைப்பாட்டினை பூசி மெழுகிடும் நிலையில் சவால் விட்டவர்கள் உள்ளனர். இடஒதுக்கீடு முறை பரிசீலிக்கப் படவேண்டும் என தொடக்கத்தில் சொன்னார்கள். இல்லை, இல்லை, இடஒதுக்கீடு தொடர்ந்திடவேண்டும்  என இப் பொழுது கூறிவருகிறார்கள். அண்ணல் அம்பேத்கரையே அபகரித்துவிடுவார்கள் போல இருக்கிறது. அம்பேத்கரிடம் நிழல் தேடி வருகிறார்கள். ஆனால் நிழல் தேடி வரும்போர் வையில் சமூகநீதியினை அமைதியாகத் தகர்த்து விடும் செயலிலும் உள்ளார்கள். இத்தகைய போலியாளர்களை புறந் தள்ளிட  நிதிஷ் குமார் போன்றவர்கள் - பல நிதிஷ் குமார்கள் தேவைப்படுகின்றனர். இந்த அடிப்படையில்தான் பெரியார் பன்னாட்டகத்தினர் சமூகநீதி விருதிற்கு நிதிஷ் குமாரை தெரிவு செய்துள்ளார்கள். பெரியார் பன்னாட்டமைப்பிற்கு நமது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். மூன்று விசயங் களை நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும்.  சவாலாகவும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இம் மாநிலம் மண்டல் பிறந்த மண்.
 மண்டல் அவர்கள் தமிழ்நாட்டிற்கு வருகைதந்த பொழுது கூறினார்கள்: பிற்படுத்தப்பட்டவர் நலனுக்கான காகா கலேல்கர் குழு அளித்த அறிக்கை என்ன ஆனது? அந்நிலை  எனது குழு அறிக்கைக்கு நேர்ந்துவிடக்கூடாது. எனது தலைமையிலான பிற்படுத்தப்பட்டவர் குழு அறிக்கையினை அளிப்பதுடன் எனது பணி முடிந்து விடும். திராவிடர் கழகம் - பெரியார் இயக்கம் எமது அறிக்கைக்கு  உயிர் கொடுக்க வேண்டும்.   மண்டலின் கூற்றினை கருத்தில் கொண்டு சந்திர ஜித் யாதவ், டி.பி. யாதவ், கர்பூரிதாக்கூர், மற்றும் பலரை அனைத்திந்திய அளவில் ஒருங்கிணைத்து பல்வேறு போராட் டங்கள் மற்றும் மாநாடுகளை மண்டல்குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்திட நடத்தினோம். இந்த சமூகநீதி விருது முதன்முதலில் வழங்கப்பெற்ற மதிப்பிற்குரிய முன்னாள் பிரதமர் விபி சிங் மண்டல்குழு பரிந்துரை நடைமுறைக்கு  வழி அமைத்தார். கமண்டலுக்கு விடை கொடுத்தார் அத்த கைய போராட்டத்தினை தொடர்ந்து நடத்திட வேண்டிய நிலையில் உள்ளோம். பிற்படுத்தப்பட்டோருக்கான 27 விழுக் காடு இட ஒதுக்கீடு உரிய நிலையில் உரியஅளவில் கிடைப்ப தற்கு போராட வேண்டியுள்ளது.

மண்டல் குழு பரிந்துரைக்காக திராவிடர் கழகத்தின் போராட்டங்கள்


மண்டல்குழு பரிந்துரை நடைமுறைக்கு திராவிடர் கழகம் 42 மாநாடுகளை கூட்டி வலியுறுத்தியது. 16 போராட்டங்களை (தலைநகர் புதுடில்லி உட்பட) பல்வேறு இடங்களில் நடத்தி ஆக்கம் கூட்டியது. இத்தகைய முயற்சிகள்  பலன் அளித்தன. ஆம், 1992-ஆம் ஆண்டில் பெருமதிப்பிற்குரிய வி.பி.சிங், மண்டல்குழு பரிந்துரையில் ஒரு பகுதியான பிற்படுத்தப்பட் டோருக்கு மத்திய அரசின் வேலைவாய்ப்பில் 27 விழுக்காடு இட ஒதுக்கீடு கொண்டு வந்தார்.

இன்று தமிழ் நாட்டில் மொத்தஇடஒதுக்கீடு 69 விழுக்காடு நடைமுறையில் உள்ளது. தமிழ் நாட்டில் எந்த அரசியல் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டில் கைவை க்கும் துணிச்சல் வராது. ஏனென்றால் சமூகநீதி தமிழ் நாட்டின் உயிர் நாடி. இந்நிலை இந்திய நாடு முழுமைக்குமான உயிர் நாடியாக மாறவேண்டும்.

இப்பொழுது சமூகநீதி - இடஒதுக்கீட்டின் நிலை எந்த அளவில் உள்ளது? நிதிஷ் - லாலு இருவரும் சேர்ந்து நடத்தி வரும் சமூகநீதிப் போர், மீண்டும் 1992 இல் நிலவிய விழிப்புணர்வினை கொண்டுவரவேண்டும். இந்த அறிவார்ந்த அவையினரிடம் சமூகநீதி வழங்கலின் ஒரு பரிதாபகரமான நிலையினை எடுத்துச் சொல்ல விரும்புகிறேன். மய்ய அரசின் வேலை வாய்ப்பில் 27 விழுக்காடு பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடாக 1992 ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்டது. ஆனால் இன்று வரை மய்ய அரசு பதவிகளில் பிற்படுத்தப் பட்டோர்  எண்ணிக்கை 7 முதல் 12 விழுக்காடு என்ற அள வில் தான் உள்ளது. மண்டல் குழு பரிந்துரை நடைமுறைகண்ட பிறகும் உயர்ஜாதிப் பிரிவினர் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டினை அபகரித்துவந்துள்ளனர் பிற்படுத்தப்பட்ட மக்கள் உண்மை நிலை அறியாமல் உறங்கிக்கொண்டு இருக்கிறார்கள் இதுவே சரியான தருணம். அனைத்திந்திய அளவில் ஒதுக்கப்பட்ட மக்கள் அனைவரும் சமூகநீதியினைக் காக்க,  மதசார்பின்மையினை காக்க ஒன்றுபட்டு நிற்கவேண் டிய சூழல் உருவாகிவிட்டது. மதிப்பிற்குரிய நிதிஷ்குமார் அவர்களே, ஒடுக்கபட்ட மக்களின் ஒன்றுபட்ட எழுச்சியினை உங்களால்தான் ஏற்படுத்த முடியும்; உங்களது சீரிய தலை மையில் தான் அந்த எழுச்சி உருவாக முடியும். சரியான நேரம் இது. மறுபடியும் சமூகநீதிப் போரினை துவக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

நீதித்துறையில் சமூகநீதியின் நிலை என்ன?


நீதித்துறையில் சமூகநீதியின் நிலை என்ன? கடந்த சில ஆண்டுகளாகவே உச்சநீதிமன்ற நீதிபதிகளில் ஒரு நீதிபதிகூட தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவராக இல்லை. மொத் தம் உள்ள 31 நீதிபதிகளில் இருவர் மட்டுமே பிற்படுத்தப்பட்ட வகுப்பினைச் சார்ந்தவர்கள். அதில் ஒருவர் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் பணிநிறைவு பெறுகிறார். மற்றொருவர் பெண் நீதிபதி - தமிழ்நாட்டைச் சார்ந்தவர்; சற்றுகாலம் தொடருவார். மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்ற சட்ட மன்ற அவைகளாகட்டும், நாடாளுமன்ற அவைகளாகட்டும் அவை எடுக்கும் எந்த ஒரு சட்ட திட்டத்தினையும் உச்சநீதிமன்றம் ஒரே வரியில் தடுத்துவிட முடியும். அப்படிப்பட்ட நிலையில் உள்ள நீதித்துறையில் சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினரையும், குறிப்பாக ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற வகையில் நீதிபதிகள் அங்கம் வகிக்கவில்லை. சமூகநீதி நிலைநாட்டப்பட வில்லை. இந்த பரிதாபகரமான நிலை, நீக்கப்பட வேண்டும். யாருடைய உரிமையையும் நாம் அபகரிக்கவில்லை. அதே நேரத்தில் பாத்திரம் ஏந்தி பிச்சை எடுக்கவும் தேவையில்லை. நமக்கான உரிமையினை நிலைநாட்டிட வேண்டும்.

இந்த உரிமையினை ஏற்பதற்கு நமக்கு முழு பாத்தியதை உண்டு; ஏனென்றால் நாம் இந்த மண்ணின் மைந்தர்கள் தண்ணீரை ஆக்க ரீதியாக இறைத்துப் பயன்படுத்துபவர்கள். நல்லதைச் செய்திடுபவர்கள் ஆகையினால்தான், நிதிஷ் குமார் அவர்களே நீங்கள் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்துபவராக இருக்கிறீர்கள்! மேலாதிக்கப் பிரிவினர் நமக்கான உரிமைகளை மறுப்பது மட்டுமில்லை. 27 விழுக்காடு இடஒதுக்கீட்டினை அபகரிப்பது மட்டுமல்ல - இந்த சமூகநீதி வாய்ப்பு நடைமுறையில் உள்ள பொதுத்துறையினை தனியார் துறைக்கு மாற்றி சமூகநீதியினைக் குழி தோண்டி புதைத்தும் வருகிறார்கள்.

பொதுத்துறை தனியார்த்துறைக்கு மாற்றப்படும்பொழுது - இடஒதுக்கீடு கேள்விக்குறி


சமூகநீதி வழங்குவதில் பொருளாதார அடிப்படையினை வலியுறுத்திடும் அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பான செயலைச் செய்வதோடு, மட்டுமல்லாமல், பொதுத்துறை நிறுவனங்களை சமூகநீதி கடைப்பிடிக்கப்படாத தனியார் துறைக்கு மாற்றி அனைத்து ஒடுக்கப்பட்டோருக்கான வேலை வாய்ப்புகளையும்; இல்லாமல் செய்து வருகின்றனர். தனியார் துறையிலும் சமூகநீதித் தத்துவம் நடைமுறை காண வேண்டும். இடஒதுக்கீடு அமலாக்கப்பட வேண்டும் என தமிழ்நாட்டில் இயக்கமாக போராட்டத்தினை தொடங்கியுள்ளோம். இந்த சமூகநீதிப் போராட்டம் நாடு முழுவதும் பற்றிக் கொண்டு விட்டது. தனியார் துறையில் சமூகநீதி நடைமுறைக்கு சரியான தருணம் இது. நாமெல்லாம் சேர்ந்து நிறைய பணிகளை ஒருங்கிணைந்து ஆற்றிட வேண்டியுள்ளது நம் ஒவ்வொரு வரின் கரங்களும் இணைந்து போராட முன்வர வேண்டும். இது வெறும் அரசியல் முன்னணி அல்ல; சமூக முன்னணி ஆகும். மதச்சார்பு அற்ற முன்னணி. அந்த வகையில் உங்கள் அனைவருடனும் இணைந்து போராடுவதில் பெருமிதம் கொள்கிறோம்.

இப்பொழுது நான் மூன்றாவது முறையாக பீகார் மாநிலத் திற்கு வந்துள்ளேன். முன்பு கர்பூரி தாக்கூர் மற்றும் ராம்விலாஸ் பஸ்வான் ஆகியோருடன் சேர்ந்து காந்தி மைதானத்தில் சமூகநீதிப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளேன். அதற்குப் பின்னர்  ஒரு முறை வந்துள்ளேன்; இங்குள்ள சில மூத்தவர்களுக்கு நினைவிருக்கும்; ராம் லக்கன் பாபு, சந்திரஜித் யாதவ் ஆகியோருடன் வந்து கூட்டத்தில் பேசியிருக்கிறேன். இப்பொழுது வந்திருப்பது மூன்றாவது தடவை. நேற்று புத்தகயாவிற்கு செல்லுகின்ற வாய்ப்பு  கிட்டியது. போகும் வழியெல்லாம் மக்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதை பார்க்க முடிந்தது. மகளிர் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். சிறார்கள், மாணவர்கள் சீருடை அணிந்து பள்ளிக்கு மகிழ்ச்சியுடன் செல்லுகின்ற காட்சியினை பார்த்திட முடிந்தது.

பீகாரில் கூட்டாட்சியா?

இந்த முறை வந்த பொழுது முற்றிலும் மாறுபட்ட பீகாரைப் பார்க்க முடிகிறது. அண்மையில் நடந்த தேர்தலின் பொழுது பீகாரில் நடப்பது காட்டாட்சி (Juungle Raj) என எதிர்தரப்பினர் பிரச்சாரம் செய்தனர். நான் புத்தகயாவிற்குச் செல்லும் பொழுது காட்டாட்சி நடக்கிறதா என தேடிக் கொண்டே சென்றேன். காட்டாட்சி எங்கே? காடு எங்கோ இருந்தது; ஆட்சி இங்கே இருந்தது. ஆனால் காட்டாட்சியைக் காண முடியவில்லை. (அவையோரின் கரவொலி பலமாக இருந்தது) இதுதான் நிதிஷ்குமார் அவர்களே! உங்களது மகத்தான வெற்றி! வாழ்த்துகள்! உங்களுக்கு நன்றி கூறுகிறோம் அன்பின் அடிப்படையில்.

அதுமட்டுமல்ல, தேர்தல் நேரத்தில் நீங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறீர்கள். அது மகத்தான பெருமையாகும். மதுவிலக்கினை நடைமுறைப்படுத்தியுள் ளீர்கள். தமிழ்நாடே உங்களது செயலை வாழ்த்திப் பாராட்டு கிறது. மதுவிலக்குபற்றி வெறும் அறிக்கைகள் மட்டும் அந்தந்த மாநிலங்களில் வந்து கொண்டிருக்கும் நிலையில், நீங்கள் மதுவிலக்கு நடைமுறைக்கு காத்திருக்கவில்லை.‘இப்பொழுது இல்லை என்றால் எப்போதும் இல்லை’ என காரியம் உணர்ந்து கடமை ஆற்றி வருகிறீர்கள். மதுப்பழக்கம் விளைவின் கொடு மையிலிருந்து பல்லாயிரக்கணக்கான குடும்பங்களைக் காப்பாற்றியிருக்கிறீர்கள். மகளிருக்கு - சகோதரிகளுக்கு, பெண்பிள்ளைகளுக்கு நிவாரணம் அளித்துள்ளீர்கள். இலக்கு வன் தமிழ் உரையாற்றுகையில் அனைத்து பெண் பிள்ளை களின் கூக்குரல் உங்களுக்கும் கேட்டிருக்கிறது எனக் குறிப் பிட்டார்.
இம் மாநிலத்து பெண் பிள்ளைகள் அனைவரையும் உங்களது பிள்ளைகளாக கருதி, கடமை ஆற்றி வருகிறீர்கள். அடக்கப்பட்ட மனித சமுதாயத்தினரின் அதிகாரமய்யத்திற்கு ஆக்கம் கூட்டி வருகிறீர்கள், மக்களுக்கு கல்வி, அமைதியான மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கையினை ஒரு ஒடுக்கப்பட்ட சமுதாயத்திலிருந்து வந்த முதலமைச்சர் தான் தந்திட முடியும். தகுதி திறமைக்கு இடமில்லை; செயல்திறன் காரணம் காட்டி நம்மை புறந்தள்ள முயற்சிக்கிறார்கள். இவை எல்லாவற்றையும் தவிடுபொடியாக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக மாண்பமை நிதிஷ்குமார் விளங்குகிறார். முன்மாதிரி முதல்வராக விளங்குகிறார்.

பீகார் முதல்வரை தமிழ்நாட்டுக்கு அழைக்கிறோம்

சகோதர, சகோதரிகளே! நிதிஷ்குமார் அவர்களுக்கு சிறப் பானதொரு வரவேற்பு வழங்கிட தமிழகத்திற்கு அழைக்கி றோம், பீகார் மாநில உடன் பிறப்பினை தமிழ்நாட்டுக்கு அழைக்கிறோம். சமூகநீதிக்காவலர் வி.பி.சிங் அவர்கள் தமிழகத்தினை தமது இரண்டாம் சொந்த வீடாகக் கருதினார். அதைப்போல நீங்களும் கருதி தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்திட வேண்டும். நாங்கள் உங்களை பாராட்ட, பின்பற்றிட விரும்புகிறோம். இந்த நல்ல வாய்ப்பினை நல்கிய உங்களுக்கு எங்களது நன்றியினைத் தெரிவித்து கொள்கிறோம். சமூகநீதி விருது பெற்றமைக்கு எமது வாழ்த்தினை தெரிவித்துக் கொள்றோம்.

பெரிய விருதுகளும் உங்களை வந்து சேரும். ஆனால் இந்த விருதுகளுக்கு எல்லாம் மேலாக மக்கள் உங்களிடம் அளித்திருக்கும் தேர்தல் வெற்றி விருது மிகவும் பெருமை வாய்ந்தது. உறுதிமொழிகளை நடைமுறையாக்கிடும் உங்களது செயல்களைத் தொடர்ந்திடுக! டெல்லி தழுவிய நிலையில் உங்களது பணி மேலும் பரவிட வேண்டும். அந்தச் சூழலை எதிர்நோக்கி காத்திருக்கிறோம். சந்திப்போம். நன்றி வணக்கம்!

இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:


Wednesday, April 27, 2016

அப்பட்டமான ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பை ஒழித்திட ஒன்றிணைந்து போராடுவோம்!


தமிழர் தலைவர் ஆசிரியர் எச்சரிக்கை! எச்சரிக்கை!!
உயர்நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி அவசியம் தேவையே! - கி.வீரமணி
வேத புராண, இதிகாசங்களைக் கற்பிக்க அய்.அய்.டி.களில் சமஸ்கிருதத்தைத் திணிக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதானது - பச்சையான பார்ப்பனப்  பண்பாட்டுப் படையெடுப்பு தான்; தமிழ்நாட்டில் ஒன்றிணைந்து இந்த ஆரிய சூழ்ச்சியை முறியடிப்போம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
மத்திய அரசு அதிரடி உத்தரவு

நான்கு வேதங்களில் இடம்பெற்றுள்ள, அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கருத்துக்களை படிப்பதற்கு வசதியாக, அய்.அய்.டி.,களில், சமஸ்கிருத மொழியை அறிமுகப்படுத்தும்படி, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பண்டைய புராணங்கள் மற்றும் வேதங்களில் கூறப்பட்டுள்ள அறிவியல் கருத்துக்களை, மாணவர்களுக்கு பயிற்றுவிப்பது தொடர்பாகவும், சமஸ்கிருத மொழியை பாதுகாப்பது குறித்தும் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி தலைமையிலான குழுவை, மத்திய அரசு அமைத்தது. இக்குழு, ஆய்வு நடத்தி, அளித்த அறிக்கை விவரம்:

வேதங்களிலும், பல்வேறு ஹிந்து புராண நுல்களிலும் இடம்பெற்றுள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கருத்துக்களை படிக்க வசதியாக, நாடு முழுவதும், அய்.அய்.டி.,களில் சமஸ்கிருத மொழி பயிற்றுவிக்கப்பட வேண்டும். சமஸ்கிருத மொழி வாயிலாக, ஹிந்து புராண நூல்களில் உள்ள தொழில்நுட்ப, அறிவியல் விஷயங்களை மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில், வேதங்கள் மற்றும் புராண நூல்களில் இடம்பெற்றுள்ள விஷயங்களை, பாடவாரியாக போதிக்க வேண்டும்.
நவீனகால படிப்புகளாக விளங்கும், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், பொறியியல், தொழில்நுட்பம் ஆகியவை தொடர்பாக, வேதங்களில் கூறப்பட்டுள்ளவிஷயங்கள், பள்ளி, கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்பட வேண்டும். இதற்கு வசதியாக, அய்.அய்.டி., இந்திய அறிவியல் மய்யம், மத்திய பல்கலை.கள், அனைத்து பொறியியல் கல்லூரிகள் ஆகியவற்றில், சமஸ்கிருத பிரிவுகள் துவக்கப்பட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த பரிந்துரை அடிப்படையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம், நாடு முழுவதும் உள்ள அய்.அய்.டி., கல்வி மய்யங்களுக்கு அனுப்பிய உத்தரவில், ‘வேதங்களில் கூறப்பட்டுள்ள அறிவியலை, மாணவர்கள் படித்து தெரிந்து கொள்ளும் வகையில், சமஸ்கிருத மொழியை பயிற்றுவிக்க, தனி பிரிவு துவக்கப்பட வேண்டும்‘ எனக் கூறப்பட்டுள்ளது. லோக்சபாவில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி எழுத்து மூலம் அளித்த பதிலில், இத்தகவல் கூறப்பட்டுள்ளது.
தமிழில் ஏன் கூடாது?

அய்.அய்.டி.,களில், சமஸ்கிருத மொழியை போதிப்பதற்கு, ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆர்.எஸ்.எஸ்.,சின் கொள்கையை திணிக்கும் வகையில், மத்திய அரசின் நடவடிக்கை அமைந்துள்ளதாக, இடதுசாரி மற்றும் காங்., கட்சிகள் கூறியுள்ளன. டில்லி மாநில துணை முதல்வரும், ஆம் ஆத்மி ‘கட்சி மூத்த தலைவருமான மணீஷ் சிசோடியா, சமூக வலைதளமான, ‘டுவிட்டரில் மத்திய அரசின் முயற்சியை, கிண்டலடித்துள்ளார். ‘மத்திய அரசு, கம்ப்யூட்டர் மொழியை, தேசவிரோதமானது என அறிவித்து விடலாம்‘ என, தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ராஜ்யசபா எம்.பி., டி.ராஜா கூறுகையில், ‘’சமஸ்கிருதம் மட்டும் ஏன்? தமிழ் மொழியை ஏன் பயன்படுத்தக்கூடாது? ஆர்.எஸ்.எஸ்., கொள்கைப்படி, சமஸ்கிருதத்தை திணிக்க மத்திய அரசு முயல்கிறது. நாடாளுமன்றத்தில் இதுபற்றி விவாதிக்கப்பட வேண்டும்,’’ என்றார். காங்., மூத்த தலைவர் பிரமோத் திவாரி, ‘’அய்.அய்.டி., இன்ஜினியருக்கு, அவர் தொழிலில், சமஸ்கிருதம் அவசியமாக இருக்காது. இதுபோன்ற விஷயத்தை திணிப்பது சரியல்ல,’’ என்றார்.
மேலே கண்ட செய்தி இன்றைய நாளேடுகளில் குறிப்பாக (‘தினமலர்’  27.4.2016 பக்கம் - 12) வந்துள்ள செய்தியாகும்.

ஆர்.எஸ்.எஸின் ஆணை :

மத்தியில் ஆட்சியிலுள்ள ஆர்.எஸ்.எஸ். ஆணையை தலைமேல் தாங்கி, அவ்வமைப்பின் வழிகாட்டுதலின்படியே செயல்பட்டு வரும் மோடி தலைமையில் உள்ள பா.ஜ.க. அரசின், மத்திய மனித வளத் துறையின் கட்டாயத் திணிப்பாக, முதலில் தங்களின் நேரடி நிர்வாகத்தின்கீழ் இயங்கும் அய்.அய்.டி. என்ற (Indian Institutes of Technology) மத்திய என்ஜினியரிங் தொழில் நுட்ப கல்வி நிறுவனங்களில் (இவைகள் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் ஆகும்) “செத்த மொழியான” - ஆரிய மொழியான நாட்டு மக்களில் ஒரு சதவிகிதம்கூட பேசாத மொழியான சமஸ்கிருதத்தைப் பாடமாக வைக்க வேண்டுமென்று ஆணை பிறப்பித்துள்ளது!
ஒவ்வொரு அய்.அய்.டி. நிர்வாகக் கழகத்திற்கும் (பல்கலைக் கழகங்களில் உள்ளதுபோல) தனி ஆளுமைக் குழு, கல்விக் குழு உள்ளன.  எத்தகைய பாட திட்டங்களை அவர்கள் போதிப்பது என்பதை, மத்திய கல்வி அமைச்சகம் (மனித வளத் துறை) ஆணையிடுவது பல்கலைக் கழகங்களின் கல்விச் சுதந்திரத்தை அறவே பறிப்பதும், தன்னாட்சியைக் கேலிக் கூத்தாக்குவது ஆன செயலாகும்.

இதற்கு வேடிக்கையான காரணம் கூறப்படுகிறது. வேத விஞ்ஞானம் (Vedic Science) படிக்க இது உதவுமாம்! அப்படி ஒரு விஞ்ஞானம் உள்ளதா?
மலத்தில் அரிசி பொறுக்குவதா? :

புராண இதிகாசங்களில் புதைந்துள்ள தொழில் நுட்பங்களையெல்லாம் இந்த சமஸ்கிருத பாஷையை கற்றுக் கொள்வதன் மூலம் அய்.அய்.டி. மாணவர்கள் மிகவும் துல்லியமாகத் தெரிந்து கொள்ளுவார்களாம்!

புராணங்களில் விஞ்ஞானத் தத்துவங்கள் இருக்கின்றன என்று சிலர் கூறியபோது தந்தை பெரியார் நறுக்கென்று அரிசிக் கடையில் அரிசி விற்கிறது; அதை வாங்குவதைவிட்டு, மலத்தில் அரிசி பொறுக்கலாமா என்று கேட்டார்.

இது நமது அரசமைப்புச் சட்டம் கூறியுள்ள 51A(h) பிரிவுப்படி “விஞ்ஞான மனப்பான்மையைப் பெருக்குவது, சீர்திருத்தம் அடைவது, கேள்விகேட்டு அறிவை விசாலப்படுத்துதல், மனிதநேயம்“ - இவைகளுக்கு முற்றிலும் எதிரானது இது!

தங்களிடம் ஆட்சி, அதிகாரம் சிக்கிக் கொண்டது என்பதற்காக,  “தேவபாஷை” என்று பீற்றிக் கொண்டு இதனை அய்.அய்.டி.களில் வைப்பதன் மூலம், சமஸ்கிருத பண்டிதர்களான பார்ப்பனர்கள் - பலருக்கு வேலை வாய்ப்பை உண்டாக்கலாம்.

பழைய கள் - புதிய மொந்தை :
மேலும் புராணங்களை, பழைய கள், புதிய மொந்தை என்பது போல ஆய்வு என்ற பேரில் உயர் தொழில் நுட்பக் கல்லூரி - பல்கலைக் கழகங்களில் சமஸ்கிருதத்தைத் திணித்து, ஒரு ஆரியப் பண்பாட்டை நிகழ்த்தலாம் என்று திட்டமிட்டே இதனைச் செய்கின்றனர்!
ஓய்வு பெற்ற தலைமைத் தேர்தல்  ஆணையர் கோபால்சாமி அய்யங்கார், சமஸ்கிருத பரப்புக்குழுவின் தலைவர் (இவர் நீடாமங்கலத்தை சார்ந்த அய்யங்கார் பார்ப்பனர்) சில வாரங்களுக்கு முன்பு கட்டாயமாக திணிக்க மாட்டோம் என்று கூறியதற்கு நேர்மாறானது  இச்செயல்; இப்படித்தான் முன்பு டாக்டர் பட்டத்திற்கு சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை - மனு போடவே - இருந்தது; நீதிக்கட்சி ஆட்சியில், (சமஸ்கிருத எம்.ஏ. படித்த) முதல்வர் பனகல் அரசரே அதனை ஒழித்தார் - தந்தை பெரியார் போன்றவர்களது முயற்சியினால்!
இப்போது பாம்பு நுழைந்து விட்டது; முதலில் அய்.அய்.டி. மூலம்!

அடுத்து CBSE என்ற மத்திய பள்ளிகள் மூலம்; அதற்கடுத்து எல்லா பள்ளிகளிலும் கட்டாயம் என்று ஆணைகளையும் அனுப்பத் தயங்க மாட்டார்கள்.
ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பு! :

மிகப் பெரிய ஆபத்து இது; ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பின் முதல் தாக்குதல்; இதனை துவக்கத்திலேயே அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்த்து விரட்டி அடிக்க வேண்டும்!
பார்ப்பன உயர் ஜாதி மாணவர்களுக்கு மேலும் அய்.அய்.டி. கதவு திறக்கவும், அவர்களை வெற்றி பெற வைக்கவும், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்ற மாணவர்களை அழுத்தி மட்டம் தட்டவும்கூட இச்சமஸ்கிருத திணிப்பு மறைமுகமாகவும், உதவக் கூடும். இது பண்பாட்டுப் படையெடுப்பு மட்டுமல்ல; ஒரு சூழ்ச்சிப் பொறியும்கூட.

எதிர்த்துப் போராடி ஒழிப்போம்! :

இதனை மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் அனைவரும் அணி திரண்டு எழுந்து எதிர்த்து ஒழிக்க வேண்டும்.

‘சமஸ்கிருத நாள்’ கொண்டாடும்படி முன்பு தமிழ்நாட்டில் ஆழம் பார்த்து - எதிர்ப்புக் கிளம்பியவுடன் பின் வாங்கிக் கொண்டது மத்திய மனிதவளத் துறை - நினைவிருக்கிறதா?

மே 16 தேர்தல் முடிந்த பிறகு மிகப் பெரியதொரு எதிர்ப்பினை தமிழ்நாட்டில் ஒத்த கருத்துள்ள அனைவரையும் ஒருங்கிணைத்து திராவிட  மாணவர்களையும் திரட்டி, அற வழிக் கிளர்ச்சிகளை நடத்தும் என்பதையும் தெரிவிக்கிறோம்.

இந்தி எதிர்ப்பைவிட மிகவும் முன்னுரிமை கொடுத்து எதிர்க்க வேண்டியது இந்த சமஸ்கிருதத் திணிப்பு என்பதை தமிழ்நாட்டுக் கட்சித் தலைவர்கள், மொழிப் பற்றாளர்கள், இன உணர்வாளர்கள் மறந்து விடக் கூடாது!


கி.வீரமணி    
தலைவர்,     திராவிடர் கழகம்


சென்னை
27.4.2016



.
 

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Wednesday, April 13, 2016

பீகார் தலைநகர் பாட்னாவில்,முதல்அமைச்சர் நிதிஷ்குமாருக்கு “சமூகநீதிக்கான வீரமணி விருது”

கி. வீரமணி, டி. ராஜா, இலக்குவன்தமிழ் பங்கேற்பு

பீகார் தலைநகர் பாட்னாவில்,முதல்அமைச்சர்
நிதிஷ்குமாருக்கு “சமூகநீதிக்கான வீரமணி விருது”

அனைவரும் எழுந்து நின்று கைதட்டி வரவேற்பு

பெரியார் பன்னாட்டமைப்பின் சார்பில் பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு 2015-ஆம் ஆண்டுக்கான ‘சமூக நீதிக்கான கி.வீரமணி விருதினையும்’, ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையையும் வழங்கினார்  இயக்குநர் இலக்குவன் தமிழ். தனக்கு வழங்கப்பட்ட காசோலையை பீகார் மாநில  முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்குவதாக முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்தார். உடன் சிறப்பு விருந்தினர் தமிழர் தலைவர் கி. வீரமணி. (பாட்னா, 9.4.2016)
பாட்னா, ஏப்.9 பீகார் முதல் அமைச்சர்
நிதிஷ்குமார் அவர்களுக்கு பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பில் ‘சமூக நீதிக்கான வீரமணி விருது’ பலத்த ஆரவாரத்திற்கும், வாழ்த்துதலுக்குமிடையே வழங்கப்பட்டது. அனைவரும் எழுந்து நின்று கைதட்டி வரவேற்றனர்.
பெரியார் பன்னாட்டமைப்பின் சார்பில் சமூக நீதிக்கான கி.வீரமணி விருது வழங்கும்  சிறப்பான விழாவில் பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு அவ்விருது இன்று வழங்கப்பட்டது.
அமெரிக்காவை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் பெரியார் பன்னாட்டமைப்பு ஒவ்வொரு ஆண்டும் சமூக நீதிக்கான விருதினை சமூகத் தளத்தில் அரும்பணி ஆற்றும் சான்றோர்களுக்கு வழங்கி வருகிறது. இதற்கு முன்னர் சமூக நீதிக் காவலர் முன்னாள் பிரதமர் வி.பி.சிங், மத்திய அமைச்சர்கள் சீதாராம் கேசரி, சந்திரஜித் யாதவ், டாக்டர் கலைஞர், ஆந்திர உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் பி.எஸ்.ஏ.சாமி, நாடாளுமன்ற பிற்படுத்தப்பட்டோர் பேரவையின் அமைப்பாளர் வி.அனுமந்தராவ் மற்றும் குவைத், மியான்மர், சிங்கப்பூர் நாடுகளில் உள்ள சிறப்புப் பிரமுகர்கள் இவ்விருதினைப் பெற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.
அந்த வகையில் 2015-ஆம் ஆண்டுக்கான விருது, பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு இன்று பாட்னாவில் வழங்கப்பட்டது. விருது வழங்கும் விழா, பாட்னாவில், பீகார் மாநில மேலவைக்கான வளாகத்தில் உள்ள சிறப்புமிகு அரங்கத்தில் இன்று 9.4.2016 (சனிக்கிழமை) காலை 11 மணிக்கு துவங்கியது.
விழாவிற்கு வருகைதந்த அனைவரையும், விழாக் குழுவின் சார்பில் பாட்னாவில் விழா ஏற்பாடுகளைக் கவனித்துவரும் பீகார் பிற்படுத்தப்பட்டோர் அமைப்பின் பொதுச்செயலாளர் ரவீந்திர ராம் வரவேற்றுப் பேசினார்.
முனைவர் இலக்குவன் தமிழ்
அடுத்து, பெரியார் பன்னாட்டமைப்பின் இயக்குநரும், விழாக்குழுவின் தலைவருமான டாக்டர் இலக்குவன் தமிழ், அமைப்பின் நோக்கத்தையும், சமூக நீதிக்கான கி.வீரமணி விருதினைப் பற்றியும் விரிவாக எடுத்துக்கூறினார்.
பெரியார் பன்னாட்டமைப்பின் சார்பில் சமூக நீதிக்கான கி.வீரமணி விருதினை பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமாருக்கு வழங்குவதை அறிவித்தவுடன், அரங்கத்தில் இருந்த அனைவரும் எழுந்து நின்று பலத்த கரவொலி எழுப்பினர். பின்னர் முதல்வருக்கு பொன்னாடை அணிவித்து, 2015-ஆம் ஆண்டுக்கான சமூக நீதிக்கான கி.வீரமணி விருதினையும், ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையையும் வழங்கினார்  இயக்குநர் இலக்குவன் தமிழ். பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் மிக்க மகிழ்ச்சியுடன் விருதினையும், சிறப்பினையும் ஏற்றுக் கொண்டார். பீகார் சட்டப் பேரவைத் தலைவர் விஜய்குமார் சவுத்திரி விழாவிற்கு தலைமை வகித்து உரையாற்றினார்.
பிரமுகர்கள் வாழ்த்து
அடுத்து, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரை நிகழ்த்தினார். பின்னர், பீகார் சட்ட மேலவைத் தலைவர் அவதேஷ் நாராயண் சிங்,  இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ராஜா, ஜனதா தளத்தின் அகில இந்திய பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான கே.சி.தியாகி, சமாதானக் கட்சியின் தலைவரும் சட்டப் பேரவை உறுப்பினருமான டாக்டர் அய்யூப் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
முதல் அமைச்சர் நிதிஷ்குமார் ஏற்புரை
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் விருதினைப் பெற்றுக் கொண்டு சிறப்பான ஏற்புரை நிகழ்த்தினார். நன்றியுரையினை, பீகார் சட்டமன்ற மேனாள் தலைவர் உதய் நாராயண் சவுத்திரி மற்றும் திராவிடர் கழக வெளியுறவுச் செயலர் வீ.குமரேசன் நிகழ்த்தினார்கள்.
விழா நிகழ்ச்சியினை, அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கோ.கருணாநிதி தொகுத்து வழங்கினார். மதியம் ஒன்றரை மணி அளவில் விழா சிறப்பாக நிறைவு பெற்றது. வருகை தந்த அனை வருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

துவாரகா சங்கராச்சாரியாரின் “துன்மார்க்க” உபதேசம்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் சனி பகவான் கோயிலுக்குள் பெண்கள் நுழையக் கூடாது - கருவறைக்குள் போகக் கூடாது என்ற பிற்போக்குச் சம்பிரதாயம் கடந்த 400 ஆண்டு களாக இருந்து வந்தது; அதனை எதிர்த்துப் போடப்பட்ட வழக்கில் அம்மாநில உயர்நீதிமன்றம், அந்தக் கழிசடை சம்பிரதாயத்துக்குச் சவுக்கடி கொடுத்து, பெண்கள் தாராளமாக கருவறைக்குள் நுழையலாம் - பூஜை செய்யலாம் என்று தீர்ப்பளித்தது (1-4-2016).

அதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பெண்களும் ஆண்களுமாக அக்கோயிலுக்குள் நுழைந்து மூல விக்கிரகத்தின் தலையில் எண்ணெய் ஊற்றி சாத்துப்படியும் செய்தனர். இதனால் அந்தக் கடவுள் கோபித்துக் கொண்டு நடை கட்டவில்லை.

இதுகுறித்து துவாரகா சாரதா பீடத்தின் சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த் சரஸ்வதி தெரிவித்துள்ள கருத்து அருவருப்பானது - இந்து மதத்தின் குரூரப் புத்தி - பெண்களை இழிவுபடுத்தும் போக்கு இன்று வரை மாற்றம் பெறவில்லை என்பதை வெளிப்படையாகவே தெரிவிக்கிறது.

“மகாராட்டிர மாநிலத்தில் உள்ள சனி பகவான் கோவில் கருவறைக்குள் நுழைந்தது குறித்து பெண்கள் வெற்றிக் களிப்பில் மிதக்க வேண்டாம். இந்தச் செயலைச் செய்ததற்காக தம்பட்டம் அடித்துக் கொள்வதை அவர்கள் நிறுத்த வேண்டும்.

சனி வழிபாடு பெண்களுக்கு நல்லதல்ல. சனிபகவானை வழிபடுவது அவர்களுக்கு துரதிர்ஷ்டத்தையே கொண்டு வரும். சனி பகவான் கருவறைக்குள் நுழைந்தால் பெண்களுக்கு எதிரான கற்பழிப்புப் போன்ற குற்றங்கள் அதிகரிக்கும்“ என்று துவாரகா பீட சங்கராச்சாரியார் ஸ்வரூபானந்த சரஸ்வதி கூறியுள்ளார்.

இந்து மதம் என்றாலே பெண்களை உயிருள்ள - மனிதரில்  ஓர் அங்கம் என்று எப்பொழுதுமே ஏற்றுக் கொள்வதில்லை. மற்ற ஆண்களை சார்ந்துதான் எப்பொழுதும் பெண்கள் வாழ வேண்டியவர்கள் என்பதைத் தானே மனுதர்ம சாஸ்திரம் கூறுகிறது! (அத்தியாயம் 5 - சுலோகம் 148).

கணவன் இறந்தவுடன் தீக்குளித்துச் சாக வேண்டும் என்கிற சதியை இந்து மதம் வலியுறுத்துகிறது. இதுகுறித்து மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்ன கூறுகிறார்?

“ஆஞ்சநேயரின் வாலில் வைத்த நெருப்பு ஸீதையின் பதி வ்ரத்யத்தால் (கற்பு சக்தியால்) அவளைப் பாதிக்காமலேயே இருந்தது - குமாரிலட்டா உமிக்காந்தல் அக்னியில் கருகின போது எதிரே நின்ற (சங்கர) ஆசார்யானின் ஸாந்நித் யத்தால் அவருக்கு உஷ்ணமே தெரியாமல் ஜில்லென்று இருந்தது அனேக பதிவிரதைகளுக்கு அவர்களுடைய பக்தியினாலேயே சிதாக்னி சந்தனமாக இருந்திருக்கிறது. அவர்கள் கட்டியிருந்த புடவை அத்தனை அக்னியிலும் எரியாமலே இருக்குமாம். அதை எடுத்து வைத்துப் பூஜை பண்ணுவதுண்டு” (‘தெய்வத்தின் குரல்’ - இரண்டாம் தொகுதி - ‘உடன்கட்டை ஏறுதல்’ (பக்கம் 967, 968).

இவ்வாறு கூறியுள்ளாரே சங்கராச்சாரியார் - ஒரு சவாலை நாம் விடத் தயார். அக்கிரகாரத்தைச் சேர்ந்த இந்து மதத்திலும் சங்கர மடத்திலும் ஆழ்ந்த அனுதாபமும், வைராக்கியமும் கொண்ட ஒரே ஒரு பெண்ணை  அவர்கள் மொழியில் மிக உறுதியான பதிவிரதையை - தீயில் மூழ்கச் செய்து, உடுத்தியிருந்த உடை கருகாமல் வெளியில் வரச் சொல்லுங்கள் பார்க்கலாம்.

20ஆம் நூற்றாண்டிலும்கூட இப்படியெல்லாம் சொல்லக் கூடியவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இப்பொழுது உயிருடன் இருக்கக்கூடிய காஞ்சி சங்கராச்சாரியார் என்ன சொல்லுகிறார்?
“தர்ம சாஸ்திரங்களில் சதியைப்பற்றி (கணவன் இறந்தவுடன் தீக்குளித்துச் சாவும் கொடுமை) எதுவும் குறிப்பிடவில்லை. ஆனால் நமது சமூகங்களில் சிலவற்றில் இந்தப் பழக்கம் இருப்பதாகத் தெரிகிறது. எவ்வாறாயினும் இந்தப் பழக்கத்திற்கு நான் கண்டனம் தெரிவிக்க விரும்பவில்லை. இதுகுறித்து மக்கள் கவனித்துக் கொள்வார்கள்.”

- இப்படிக் கூறியிருப்பவர் யார் என்றால் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி (‘The Week’ 11.7.1987)

பெண்களுக்கு வேதம் ஓத உரிமை கிடையாது என்று கூறி கல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மேடையிலிருந்த ஒரு பெண்ணை கீழே இறங்கச் செய்தவர் பூரி சங்கராச்சாரியார். அதனை எதிர்த்து அவரின் கொடும்பாவியை எரிக்கும் போராட்டத்தை திராவிடர் கழகம் நடத்தியது (17.2.2001) அதன் காரணமாக திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் உட்படப் பலர் கைது செய்யப்பட்டனர்.

விதவைப் பெண்களை தரிசு நிலத்துக்கு ஒப்பிட்டு (‘தினமணி’ தீபாவளி மலர் - 1997) காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி கூறியதற்காக காஞ்சி மடத்தின் முன் திராவிடர் கழக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டத்தையும் நடத்தினார்கள் (9.3.1998).

இப்படி அடுக்கடுக்காக நிகழ்ச்சிகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இந்து மதமும், அதன் வழி காட்டித் தலைவர்களான சங்கராச்சாரியார்களும் பெண்களை இழிவுபடுத்துவதையே தம் பிழைப்பாக. ரத்த ஓட்டமாகக் கொண்டுள்ளனர்.

அந்த வகையில்தான் துவாரகாமட சங்கராச்சாரியார் சனி பகவான் கோயில் கர்ப்பக் கிரகத்துக்குள் பெண்கள் நுழைந்ததால் அவர்கள் கற்பழிக்கப்படுவார்கள் என்று தமது ஊத்தை வாயைத் திறந்து உபதேசித்துள்ளார்.

கோயில் என்பது விபச்சார விடுதி என்று காந்தியார் சொன்னதற்காகத் துள்ளிக் குதித்தவர்கள் சங்கராச்சாரியாரின் இந்தக் கருத்துக்கு என்ன சொல்லப் போகிறார்கள்?
காஞ்சிபுரம் மச்சேந்திர நாதன் கோயில் குருக்கள் தேவநாதன் என்பவன் கோயிலுக்கு வந்த பெண்களைப் பாலியல் ரீதியாக சிதைத்து இருக்கிறானே - அவனைப் பற்றி எல்லாம் அதே
காஞ்சியில் உள்ள சங்கராச்சாரியார் கருத்துக் கூறியதுண்டா?

தன் எதிரிலேயே பெண்களை சூறையாடிய குருக்கள் பார்ப்பானை மச்சேந்திர நாதனும் பார்த்துக் கொண்டுதானே இருந்திருக்கிறான்.

இவர்களில் கடவுள்களே கற்பழித்தார்கள் என்று புராணங்கள் இருக்கும் பொழுது, ‘கற்பழிப்பு’ என்பதெல்லாம் அவர்களுக்கு ஒரு பிரச்சினை இல்லைதான்.
துவாரகாபீட சங்கராச்சாரியாரின் கூற்றினை எதிர்த்துப் பெண்கள் பொங்கி எழ வேண்டாமா? எழுவார்களா?

எங்கே பார்ப்போம்!






மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கு அகில இந்திய நுழைவுத் தேர்வா?

மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கு அகில இந்திய நுழைவுத் தேர்வா?
உச்சநீதிமன்றத்தில் முன்னுக்குப்பின் முரணானதீர்ப்பு
தந்தைபெரியார் பிறந்த சமூக நீதி மண் இதனைஅனுமதிக்காது
தேர்தலிலும் எதிரொலிக்கும் - எச்சரிக்கை! எச்சரிக்கை!!
தமிழர் தலைவர் ஆசிரியர் எச்சரிக்கை அறிக்கை
திமுகவின் தேர்தல் அறிக்கை ஒரு வரலாற்று ஆவணம்!  - கி. வீரமணி

மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கு இந்திய அளவில் ஒரே நுழைவுத் தேர்வை அனுமதிக்கும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு - ஏற்கனவே உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு முரணானது - சமூக நீதிக்கு எதிரான இந்தப் போக்கை தந்தை பெரியார் பிறந்த சமூக நீதி மண் கடுமையாக எதிர்க்கும் - திராவிடர் கழகம் களம் காணும் என்று எச்சரித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் - அறிக்கை வருமாறு:

மாநிலப் பட்டியலில் இருந்த கல்வி - 1976 நெருக்கடி நிலை காலத்தில் பொதுப் பட்டியலுக்கு எடுத்துச் சென்றாலும் சென்றனர். அன்று தொட்டுக் கல்வித் துறையில் பார்ப்பனீயம் தன் சித்து வேலைகளில் இறங்கி விட்டது. குறிப்பாக நுழைவுத் தேர்வு என்ற பாம்பு தலை தூக்குவதும், அதனை எதிர்த்து சமூக நீதியாளர்கள் தடியைத் தூக்கினால் பொந்தில் நுழைந்து கொள்வது என்பதும் வாடிக்கையாகி விட்டது.

எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் அறிமுகம்

மருத்துவக் கல்விக்கான நுழைவுத்தேர்வு 1984ஆம் ஆண்டு  எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் திணிக்கப்பட்டது.  அன்று முதல் திராவிடர் கழகம் தான் தொடர்ச்சியாக எதிர்த்து வந்துள்ளது. அதன்பிறகு நுழைவுத் தேர்வு மூலமே தொழிற் கல்வி படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடந்து வந்தது. இந்த நிலையில், 2006ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது நுழைவுத்தேர்வை நீக்க முயற்சி மேற்கொள்ளப் பட்டது. 2007ஆம் ஆண்டில் இருந்து நுழைவுத் தேர்வு ரத்துசெய்யப்பட்டு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மட்டும் மாணவர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.

மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வு, ஜிப்மர் நுழைவுத்தேர்வு, அகில இந்திய மருத்துவ நிறுவன (எய்ம்ஸ்) நுழைவுத் தேர்வு என்று ஒவ்வொரு மருத்துவ கல்லூரியிலும் சேர தனித்தனி நுழைவுத்தேர்வு எழுதுவது மாணவர்களுக்கு மிகவும் சிரமமாக இருப்பதால், மருத்துவப் படிப்புகளில் சேர நாடு முழுவதும் பொது நுழைவுத் தேர்வு நடத்தலாம் என்று இந்திய மருத்துவ கவுன்சில் (எம்.சி.அய்.) மத்திய சுகாதார அமைச்சகத்திற்குப் பரிந்துரை செய்தது. எம்.சி.அய். அளித்த பரிந்துரையை ஏற்றுக்கொண்டு இந்தியா முழுவதும் பொது நுழைவுத்தேர்வு நடத்த உத்தரவிட்டது மத்திய அரசு.

நுழைவுத் தேர்வை ரத்து செய்த உச்சநீதிமன்றம்

அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து 115 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் 2010இல் தாக்கல் செய்யப்பட்டன.   இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மருத்துவக் கல்வியில் நாடு தழுவிய பொது நுழைவுத்தேர்வு தேவையில்லை என்று  தீர்ப்பளித்தது.  மூவர் கொண்ட அமர்வில்  இரு நீதிபதிகள் நுழைவுத் தேர்வு தேவையில்லை என்று தீர்ப்பு வழங்கினர். (18.7.2013). இந்த தீர்ப்பை எதிர்த்து ஜூலை 2013-ஆம் ஆண்டு  எப்.சி.அய். சார்பில் மறு சீராய்வு மனு போடப்பட்டது. 2014-ஆம் ஆண்டு பாஜக ஆட்சியில் அமர்ந்ததும், நாடுமுழுவதும் பொது நுழைவுத்தேர்வு தேவை என்ற நிலையெடுத்து அரசின் சார்பில் 2013-ஆம் ஆண்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து வழக்கும் தொடரப்பபட்டது.

“மருத்துவக் கல்விக்கான நெறிமுறைகளை வகுப்பது தவிர நுழைவுத் தேர்வை நடத்திட உத்தரவிடும் சட்டப்படியான அதிகாரம் இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு (எம்.சி.அய்.) கிடையாது” என்று உச்சநீதிமன்றம் தன் தீர்ப்பில் அறுதியிட்டுக் கூறியது. (18.7.2013)

நீதிபதிகள் அல்டம்ஸ் கபீர், விக்கிர மஜித்சிங் ஆகிய இருவரும் அளித்த அந்த தீர்ப்பில் முக்கியமானதொரு கருத்தைத் தெளிவுபடுத்தியும் இருந்தனர். நுழைவுத் தேர்வு இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று ஆணி அடித்தது போல அறைந்திருந்தனர்.

உச்சநீதிமன்றத்தின் முன்னுக்குப் பின் முரணான தீர்ப்பு

இவ்வளவுக்குப் பிறகும் மறு சீராய்வு மனு மீதான தீர்ப்பு தலை கீழாக ஆனதுதான் ஆச்சரியம்!

அதே உச்சநீதிமன்றம் முந்தைய தீர்ப்புக்கு மாறாக நுழைவுத் தேர்வை அனுமதித்துள்ளது. வழக்கு முழுமையாக விசாரிக்கப்பட்டுத் தீர்ப்பு அளிக்கப்படும் வரை பொது நுழைவுத் தேர்வை நடத்திடத் தடையில்லை என்றும் உச்சநீதிமன்றம் நேற்று கூறி இருக்கிறது.

மருத்துவக் கல்விக்கான நெறிமுறைகளை வகுப்பதுதான் மருத்துவக் கவுன்சிலின் வேலையே தவிர நுழைவுத் தேர்வை நடத்தச் சொல்லுவதற்கான சட்டப்படியான அதிகாரம் அதற்குக் கிடையாது என்று எந்த உச்சநீதிமன்ற அமர்வு சொன்னதோ, அதற்கு முரண்பாடாக - மருத்துவக் கவுன்சிலின் மேல் முறையீட்டை ஏற்று நுழைவுத் தேர்வை நடத்திட  அதே உச்சநீதிமன்றம் அனுமதித்திருப்பது  - அசல் முரண்பாடல்லவா! இப்படியெல்லாம் தீர்ப்பு சொன்னால் உச்சநீதிமன்றத்தின் மீதான நம்பகத் தன்மை கேள்விக்குறியாகி விடாதா? இது கோடானு கோடி ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைப் பிரச்சினையல்லவா?

இந்தியா முழுமையும் ஒரே மாதிரியான கல்வி முறையா இருக்கிறது?


இந்தியா முழுமையும் ஒரே மாதிரியான கல்வித் திட்டம் நடைமுறையில் இருக்கிறதா?

சி.பி.எஸ்.இ., மெட்ரிக்குலேஷன், ஆங்கிலோ இந்தியன் கல்வி, மாநில அரசு என்று பல்வேறு வகையான பாடத் திட்டங்கள் உள்ளனவே! இந்த நிலையில் ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வு எப்படி சரியானதாக, நியாயமானதாக இருக்க முடியும்?

அகில இந்திய நுழைவுத் தேர்வு என்பது - சி.பி.எஸ்.இ. முறையில் படித்து வந்த  மாணவர்களுக்குத்தான் சாதகமாக இருக்கிறது என்ற கருத்து நிலவுகிறது. இதையெல்லாம் சீர்தூக்கிப் பார்க்காமல், ஒரு சார்பாக எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற முறையில் நுழைவுத் தேர்வைத் திணிக்கலாமா? இதனை அனுமதிக்கத்தான் முடியுமா?
புள்ளி விவரம் என்ன சொல்லுகிறது?

அ.தி.மு.க. ஆட்சியில் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. ஆனாலும் சரியான முறையில் பின்பற்றப்படாததால் (நாம் தெரிவித்த யோசனையை கேட்கவில்லை) சென்னை உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. பிறகு ஆட்சிக்கு வந்த திமுக அரசு நிபுணர் குழுவை அமைத்து, அது தந்த பரிந்துரையின் அடிப்படையில் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, வழக்கிலும் வென்றது. தி.மு.க. ஆட்சியில் தனி சட்டமே இயற்றப்பட்டு குடியரசு தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டது. (15.3.2007).

நுழைவுத் தேர்வை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் உயர்நீதிமன்றத்திற்கு அளிக்கப்பட்ட மனுவில் கொடுக்கப் பட்டுள்ள புள்ளி விவரம் அனைத்துத் தரப்பு மக்களின் கண்களையும் திறக்கக் கூடியதாகும். (உச்சநீதிமன்றம் உட்பட).

2004-2005ஆம் ஆண்டில் 5 லட்சத்திற்கும் - அதிகமான மாணவர்கள் பிளஸ் டூ தேர்வை எழுதினார்கள். அதில் 2 லட்சத்து  10 ஆயிரம் மாணவர்கள் கிராமப்புறத்தைச் சேர்ந்த வர்கள். இவர்களில் பெரும்பாலோர் அதிக மதிப்பெண்களை எடுத்திருந்தனர். நிறைய மாணவர்கள் மருத்துவக் கல்லூரியிலும் நுழைந்தனர். பிளஸ் டூ தேர்வும் நுழைவுத் தேர்வைப் போன்றது தான். ஆனால், புதிய  நுழைவுத் தேர்வு காரணமாக கடந்த ஆண்டில் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் உள்ள 1195 இடங்களில் கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்களுக்குக் கிடைத்த இடங்கள் வெறும் 227தான்; அதனால் தான் நுழைவுத் தேர்வை ரத்து செய்தோம் என்று தி.மு.க. ஆட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதனை ஏற்றுக் கொண்டுதான் சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசின் சட்டத்துக்கு அனுமதி வழங்கியது.

10.1..2010 முதல் 13.1.2010 வரை அய்தராபாத்தில் மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்கள் மாநாட்டில் மருத்துவப் படிப்புக்கு அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு கொண்டு வரப்பட மாட்டாது என்று முடிவு எடுக்கப்பட்டதையும் இந்த நேரத்தில் நினைவூட்டுகிறோம்.

பொருத்தமில்லாத காரணம்

அகில இந்திய நுழைவுத் தேர்வுக்கு இன்னொரு காரணம் முன் வைக்கப்படுகிறது. இப்பொழுதுள்ள நடைமுறையில் மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கு பல நுழைவுத் தேர்வுகளை மாணவர்கள் எழுத வேண்டியிருப்பதாகவும் அது அவர்களுக்குப் பெரும் சுமையாக இருப்பதாகவும் ஒரு கதையை அளக்கிறார்கள். அதாவது உண்மையா? தேசிய அளவில் ஒரு நுழைவுத் தேர்வை எழுதினாலும், டில்லியில் உள்ள எய்ம்ஸ், சண்டிகரில் உள்ள பி.ஜி.அய்., புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மற்றும் இராணுவ மருத்துவக் கல்லூரிகளுக்குத் தனித் தனியாகத்தான் நுழைவுத் தேர்வை எழுத வேண்டிய நிலை இன்னும் இருக்கிறதே - இதற்கு என்ன பதில்? எந்த வகையில் பார்த்தாலும் தேசிய நுழைவுத் தேர்வு கிராமப்புற, ஏழை, எளிய முதல் தலைமுறையாகப் படிக்க முன்வரும்  மாணவர்களின் தலையில் விழுந்த இடிதான் என்பதில் அய்யமில்லை. பார்ப்பனீய  சூழ்ச்சி இதன் பின்னணியில் பதுங்கி இருக்கிறது என்பதில் அய்யமில்லை.

கிராமப்புற மாணவர்கள் பாதிப்பு!

நுழைவுத் தேர்வை எழுதுவதற்குத் தேவையான பயிற்சிக்கூடங்கள் கிராமப்புறங்களில் உண்டா? நகரப்புறங் களில் வந்து படிக்க வேண்டுமானால், அதற்காக ஆகும் செலவை சுமக்கும் சக்தி ஏழை, எளிய மக்களுக்கு உண்டா?

அப்படியே பார்த்தாலும் நுழைவுத் தேர்வு தான் தகுதியின் அளவுகோலா? நுழைவுத் தேர்வு தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பி.கே. மிஸ்ரா, சம்பத்குமார் ஆகியோர் வழங்கிய தீர்ப்பில் (27.4.2007) அழகாக ஒன்றைச் சென்னார்களே!

நுழைவுத் தேர்வு தகுதியின் அளவுகோலா?

“நுழைவுத் தேர்வை நடத்தினாலும் முழு சமநிலை என்பது கட்டுக்கதைதான். ஏனென்றால், சரியான விடையைத் தேர்ந்தெடுப்பதைவிட ‘கோன்பனேகா குரோர்பதி’ தொலைக்காட்சி நிகழ்ச்சி போல அனுமானத்தின் அடிப்படையில் விடைகளை ‘டிக்‘ செய்யும் வாய்ப்புள்ளது” என்று தீர்ப்பிலேயே சுட்டிக் காட்டியுள்ளார்களே - இடித்துச் சொன்னார்களே!
தமிழ்நாட்டுக்குப் பொருந்தாது!

தமிழ்நாட்டைப் பொருத்தவரை இடஒதுக்கீட்டில் முக்கியமான நிலைப்பாடு உறுதியாக உள்ளது. தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு சட்டப்படி ஒழிக்கப்பட்டு விட்டது. 69 சதவிகித அடிப்படையில் கல்வி வேலை வாய்ப்பில் இடங்கள் அளிக்கப்படுகின்றன. இதற்கு எதிராக மத்திய அரசு செயல்படும் நிலையை, தற்போதைய உச்சநீதிமன்ற தீர்ப்பு தூண்டி விடவில்லையா?

மாநில அரசின் உரிமைகளில் அத்துமீறி நுழைய மத்திய அரசை அனுமதிக்கலாமா? தந்தை பெரியார் பிறந்த தமிழ் மண்ணில் சமூகநீதிக்கு எதிராக ஒரு சிறு துரும்பை அசைத்தாலும், அது கொந்தளிக்கும் பெருங்கடலாக, சீறி எழும் எரிமலையாகப் பேருரு எடுக்கும் என்பதை மறந்து விடலாமா?
மத்திய தொகுப்பில் இடஒதுக்கீட கிடையாது

மாநிலங்களில் உள்ள எம்.பி.பி.எஸ். இடங்களில் 15 சதவீதத்தையும் மருத்துவ முதுநிலை பட்டப் பிரிவில் 50 சதவீதத்தையும் பொதுத் தொகுப்புக்கு மத்திய அரசு எடுத்துச் செல்லுகிறது. அப்படி எடுத்துச் செல்லப்படும் இடங்களில் இடஒதுக்கீடுக்கு இடம் இல்லை.

தமிழ்நாட்டின் 69 சதவீதத்தை விழுங்கிடத் திட்டமா?
இந்தக் கொடுமை போதாது என்று ஒட்டு மொத்தமாகவே தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்து வரும் 69 சதவீத இடஒதுக்கீட்டை முழுவதுமாக விழுங்கிக் கபளீகரம் செய்யும் சதி நடக்கிறது! நடக்கிறது!! இதன் பின்னணியை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது - முடியாது. மக்களின் கவனமெல்லாம் தேர்தல் அரசியல் பக்கம் திசை திரும்பி இருக்கும் நேரம் பார்த்து இப்படிப்பட்ட ஒரு தீர்ப்பு வெளியாகியுள்ளது.

எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தருணம்!

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தருணம் இது. சமூக நீதியாளர்கள் விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் இது. தமிழ்நாடு அரசு உடனடியாக மத்திய அரசை வலியுறுத்தி நீதிமன்றம் வழியாக தமிழ்நாட்டின் 69 சதவீத இடஒதுக்கீட்டைக் (9ஆவது அட்டவணையில் பாதுகாப்புச் செய்யப்பட்டிருக்கிறது) காப்பாற்றிட தேவையான சட்ட ரீதியான முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

திராவிடர் கழகம் களத்தில் இறங்கும்

மற்றவர்களுக்குத் தேர்தல் களம் என்றாலும் திராவிடர் கழகத்தைப் பொருத்தவரை சமூக நீதிக் களத்தில் இறங்கிச் செயல்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். திமுகவைப் பொருத்தவரை எந்த வடிவத்தில் வந்தாலும் நுழைவுத் தேர்வை எதிர்ப்போம் என்று மானமிகு கலைஞர் அவர்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளார் (‘முரசொலி’ 8.2.2016)

மத்திய பிஜேபி ஆட்சி சமூகநீதிக்கு  எதிரானது என்பதை இப்பொழுதும் மெய்ப்பித்துக் கொண்டு விட்டது;  தமிழக அரசு என்ன செய்யப் போகிறது?  தமிழ்நாட்டில் நுழைவு தேர்வுக்கு  இடமில்லை என்ற நிலையை உறுதிப்படுத்த வேண்டும்; அதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும் - மத்திய அரசுக்குக் கடும் அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும்.

இப்பிரச்சினை தமிழகத் தேர்தலில் எதிரொலிக்கும் என்பதில் அய்யமில்லை. இடஒதுக்கீட்டில் வருமான வரம்பைக் கொண்டு வந்த எம்.ஜி.ஆர். 1980 மக்களவைத் தேர்தலில் பெரும் தோல்வியைச் சந்தித்தாரே நினைவிருக்கிறதா?

எச்சரிக்கை! எச்சரிக்கை!!

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்


.
 2

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...