Total Pageviews

Thursday, March 22, 2007

பெரியார் - அண்ணா வழி ஆட்சியில் அமைச்சராக இருக்கும்
துரைமுருகன் கட்சிக்கரை வேட்டியை மாற்றி
மேலாடையின்றி கோயிலுக்குச் செல்வதா?
தி.மு.க.வுக்கும் கலைஞருக்கும் இழைத்த
தீரா களங்கம் கறை வேறு உண்டா?
துரைமுருகன் அவர்களை அமைச்சராக்கியது
கட்சியும் கலைஞருமா -
ஆதிகேசவப் பெருமாளா?

தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை

தமிழ்நாடு பொதுப் பணித்துறை அமைச்சர் துரை முருகன் குமரி மாவட்டம் ஆதிகேசவப்பெருமாள் கோயிலுக்கு கட்சிக்கரை வேட்டியை மாற்றிக் கொண்டு மேலாடையின்றி சென்றது குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
பொதுப்பணித்துறை அமைச்சர் திரு. துரைமுருகன் அவர்களைப் பற்றி எழுத அவர் நமக்கு ஓர் அவசியத்தை உண்டாக்கித் தந்தமைக்காக வெட்கமும் வேதனையும் அடைவதோடு கூனிக்குறுகி நிற்கும் பகுத்தறிவுச் சுயமரியாதைக் கொள்கை யாளர்களின் குமுறலை முறைப்படி வெளியிட்டுநகுதல் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்மேற்சென்று இடித்தற் பொருட்டு (குறள் 784)என்பதற்கொப்ப நமது வன்மையான கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டியுள்ளது குறித்து நாம் மகிழவில்லை; மிகுந்த துன்பத்துடன் தான் எழுதுகிறோம்.
கரை வேட்டியை மாற்றுவதா?
அவர் ஒரு சாதாரண துரைமுருகனாக இருந்து எந்தக் கோயிலுக்குள்ளும் சட்டையைக் கழற்றிவிட்டுச் சென்றால் அதுபற்றி பத்தோடு பதினொன்று சம்பவம் என்று நாம் அலட்சியப்படுத்தி விடலாம் கவலைப்படத் தேவையில்லை.
அவர் மானமிகு முதல்வர் கலைஞர் அவர்களது அமைச்சரவையில் உள்ள ஒரு மூத்த அமைச்சர். தி.மு.க.வின் தலைமைப் பொறுப்பாளர்களில் ஒருவர். அவர் தனது குமரி மாவட்ட கேசவப் பெருமாளிடம் உள்ள பயபக்தியைக் காட்ட சட்டையைக் கழற்றியதோடு தி.மு.க. கரை போட்ட தனது வேட்டியையும் கூட மாற்றிவிட்டு வேறு வேட்டி அணிந்து ``பகவானைத் தரிசித்துப் பரவசமானார் என்றால் இதைவிட தி.மு.க.வுக்கு அதன் ஒப்பற்றத் தலைவருக்கு தன்னை அமைச்சராக்கிய முதல்வருக்குத் தீரா களங்கம் - கறை வேறு உண்டா? `குமுதம் ரிப்போர்ட்டரின் அட்டைப் படத்தையும் செய்தி யையும் படிக்கும் கலைஞர் மனது எவ்வளவு காயப்பட்டு உள்ளம் ரத்தக் கண்ணீர் வடித்திருக்கும் என்பதை நாம் நன்கு உணர்வோம்.
தம்முடைய தோழர்கள் தொண்டர்கள் பெரியார் - அண்ணா வகுத்த கொள்கை நெறியில் நிற்கவேண்டும் என்பதற்காக வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் வலியுறுத்தி எழுதியும் பேசியும் வருபவர் நம் முதல்வர் கலைஞர் அவர்கள்.
83 வயதிலும் `சதாவதானம் செய்யும் கலைஞர்`குடிசெய்வார்க்கில்லை பருவம் என நேரங் காலம் பார்க்காது தனது 83 ஆம் வயதிலும் கூட அத்துணைப் பிரச்சினைகளையும் சந்தித்து - அஷ்டாவதானம் கூட அல்ல - ``சதாவதானம் செய்து கடுமையாக உழைக்கும் அவருக்கு சக அமைச்சர்கள் மகிழ்ச்சியைத் தருவதா அல்லது மாறாக நடப்பதா?
`மாண்புமிகு வரும் போகும் - `மானமிகு அப்படியல்லவே!
`மாண்புமிகு என்பது வரும் போகும்; ஆனால் `மானமிகு என்பது ஒருமுறை ஏற்றுக்கொண்டால் அது கொள்கையாளர்களை விட்டு இறுதி மூச்சடங்கும் வரை விலகாது!25.3.2007 `குமுதம் ரிப்போர்ட்டரில் அட்டையிலேயே ``பக்திப் பழமான அமைச்சர் துரைமுருகன் என்று அவரின் சட்டை அணியாத படம் போட்டு உள்ளே எழுதியுள்ள கட்டுரையில் உள்ள முக்கிய பகுதிகள் இதோ:
``...திருவட்டாரில் அமைச்சரின் கார் நேராகப் போய் நின்ற இடம் பிரசித்திப் பெற்ற ஆதிகேசவப் பெருமாள் ஆலயம். சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மிகப் பழைமையான ஆலயம் இது. திருவிதாங்கூர் மகாராஜா வம்சத்தினர் இன்றும் தங்கள் குல தெய்வமாகக் கொண்டாடும் திருவனந்தபுரம் அனந்த பத்மநாபசுவாமி கோயிலுக்கு முன் மாதிரியே இந்த ஆலயம்தான் என்கிறார்கள். ஒரே வித்தியாசம் அங்கு மூலஸ்தானத்திலுள்ள விஷ்ணுவின் சிலை சயன (படுத்த) நிலையில் பதினெட்டு அடி நீளம் இருக்கும். இங்கோ சிலையின் நீளம் இருபத்திரண்டு அடி.தமிழக அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலில் வருகிற 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது. கோயிலின் கும்பாபிசேகமும் நடைபெற இருப்பதால் திருப்பணி வேலைகளும் நடந்து கொண்டிருக் கின்றன. இந்தச் சூழலில்தான் கட்சிக் கரை வேட்டி சகிதமாக அமைச்சர் கோயில் வளாகத்திற்குள் வந்தார்.

கேரளா ஆகம விதிமுறைகள் இங்கு கண்டிப்பாக அமல்படுத் தப்படுவதால் மேல்சட்டை அணிந்து உள் பிரகாரத்தினுள் செல்ல யாருக்கும் அனுமதி இல்லை. எனவே அமைச்சரை கோயில் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்ற அதிகாரிகள் அவருக்கு ஜரிகை போட்ட பட்டு வேஷ்டி மற்றும் மேலே போர்த்திக் கொள்ள மெல்லிய அங்கவஸ்திரம் ஆகியவற்றை வழங்கினர். அமைச்சரும் பவ்யமாக அவற்றை வாங்கிக் கொண்டு கட்சிக் கரை போட்ட வேஷ்டிக்கும் தனது சட்டைக்கும் விடை கொடுத்தார். சந்தன மாலை மரியாதைகளையெல்லாம் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட அமைச்சர் அடுத்து கோயில் உள் பிரகாரத்தினுள் செல்ல ஆயத்தமானார்.உடனே பூஜைக்கான பழங்கள் உள்ளிட்ட பொருள்கள் ஒரு தாம்பாளத்தில் கொண்டு வரப்பட்டன. உதவியாளர் ஒருவர் அதனை ஏந்திக் கொண்டுவர அமைச்சர் உள்ளே போனார்.கோயிலில் பூஜை செய்யும் நம்பூதிரி முதலில் அமைச்சரின் பெயரைக் கேட்டிருக்கிறார். அமைச்சர் தனது பெயரைச் சொன்னதும் நட்சத்திரத்தைக் கேட்டாராம் நம்பூதிரி. சற்று நிதானித்து `கார்த்திகை என்று சொன்னாராம் அமைச்சர். பின்னர் அமைச்சரின் பெயரில் சிறப்புப் பூஜை நடந்திருக்கிறது. பூஜை முடிந்ததும் நம்பூதிரி கொண்டு வந்த பழங்கள் உள்ளிட்ட பிரசாதங்களைத் தொட்டு ஆசீர்வாதம் பெற்றுக்கொண்ட அமைச்சர் சந்தனத்தை எடுத்துத் தனது மார்பில் லேசாகத் தேய்த்துக் கொண்டாராம்.அதன் பிறகு அங்கவஸ்திரம் சகிதமாகவே கோயிலை வலம் வந்து அங்குள்ள சிற்பங்களை வெகுவாக ரசித்தார் அமைச்சர். உத்தேசமாக முக்கால் மணிநேரம் அங்கு செலவழித்த அமைச்சர் பின்னர் கரைவேஷ்டி - சட்டைக்கு மாறி நாகர்கோயிலுக்குப் பயணமானார்.மாணவப் பருவம் தொட்டு திராவிட இயக்கத்தில் ஊறியவரான துரைமுருகன் இந்த அளவுக்கு பக்தி மானாக மாறிப் போனதை தங்களாலேயே நம்ப முடியவில்லை என் கிறார்கள் உடன்பிறப்புகள். அதே சமயம் தி.மு.க.வின் மேல்மட்டப் பிரமுகர் ஒருவர் நம்மிடம் கூறுகையில் ``மிக மோசமான உடல்நலப் பாதிப்பு இருதய அறுவை சிகிச்சை ஆகிய பிரச்சினைகளுக்குப் பிறகுதான் அமைச்சரின் போக்கில் இந்த மாற்றம் என்றார்
என்று `குமுதம் ரிப்போர்ட்டர் எழுதுகிறது!
அன்று சாய்பாபா சிக்கல்!
முன்பு முதல்வர் கலைஞர் இல்லத்திற்கு சாய்பாபா வந்தபோதே அவரை வரவேற்று மேலே அழைத்துப் போக கலைஞரின் தூதுவராக வந்த சகோதரர் துரை முருகன் சாய்பாபாவிடம் மோதிரம் பெற்றதோடு எதையும் முன்கூட்டியே அறியும் சக்தியை சாய்பாபா பெற்றிருக்கிறார் என்று பேசிய போதும் மோதிரம் வரவழைக்கும் சாய்பாபாவின் மோடி மஸ்தான் வேலை பி.பி.சி. தொலைக்காட்சி மூலம் சந்தி சிரித்ததும் உலகம் முழுவதும் அறிந்த செய்தி என்றே அவருக்குச் சுட்டினோம்.
நீங்கா அவமானம்!
இப்போதும் அதுபற்றிக் கவலைப்படாமல் இப்படி நடந்துகொள்வ தனால் தி.மு.க.வுக்கும் கலைஞர் அரசுக்கும் நீங்கா அவமானத்தை அல்லவா தேடி வைத்துவிட்டார்! நாம் எங்கு போய் முட்டிக் கொள்வது?
இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறைக்கென்றே ஓர் அமைச்சர் உள்ளார். கோயிலுக்குச் செல்வதும் அவருடைய பல பணிகளில் ஒரு பகுதி என்றாலும்கூட அவர் கூட தி.மு.க. கரை வேட்டியை மாற்றிக் கொண்டு சென்றார் என்று செய்தி வந்ததில்லையே!
அ.தி.மு.க.வும் - பகுத்தறிவும்
முந்தைய அ.தி.மு.க. அமைச்சர்கள் மண் சோறு கல் சோறு தின்று வீதியில் புரண்டனர் என்றால் அவர்கள் தலைமையும் சரி அவர்களும் சரி தங்களை பகுத்தறிவுவாதிகள் என்று என்றும் அழைத்துக் கொண்டதில்லை.
ஆனால் கலைஞர் அரசில் பதவிப் பிரமாணம் எடுக்கும்போது முதல்வரிலிருந்து எந்த அமைச்சரும் கடவுள் பெயரால் பிரமாணம் எடுக்கவில்லை என்பதற்கு என்ன காரணம்? ஒரே காரணம் இது பெரியார் - அண்ணா வழி நடக்கும் பகுத்தறிவாளர் அரசு என்று உலகுக்குப் பிரகடனப்படுத்தத்தானே!அப்படி உறுதிமொழி எடுத்த பிறகு இப்படி ஒரு அலங்கோலமா? அவலமா?
முதலமைச்சருக்கு மன உளைச்சல்!
முதல்வர் கலைஞருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தாவிட்டாலும் மன உளைச்சலையாவது ஏற்படுத்தாமல் உதவ வேண்டிய பொறுப்பு நம்மைப் போன்றோரின் ஆதரவுகளைவிட அவருடைய அமைச்சரவையில் அங்கம் வகிப்பவர்களின் ஆதரவு அன்றாடக் கடமை அல்லவா?அமைச்சராக ஆக்கியது கேசவப் பெருமாளா?தி.மு.க. கரை போட்ட வேட்டிதான் அவரை மந்திரியாக்கியது - கலைஞரின் சகோதரப் பாசமும் கொள்கைக் குடும்பம் இது என்று காட்டுகின்ற வற்றாத அன்பும்தான் அவரை அமைச்சராக்கியது!

கேசவப் பெருமாளோ அல்லது பட்டுத் துண்டு பட்டு வேட்டியோ அல்ல. வேலிகள் பயிரை மேய்ந்தால் நாம் வன்மையாகக் கண்டிப்பது நம்முடைய கடமையாகிறது!இந்த அரசின் சாதனைகளைப் பாராட்ட வேண்டியவற்றை பாராட்டும் அதே நேரத்தில் கண்டித்து உரிமையுடன் சுட்டிக் காட்டவேண்டியவற்றை உடனடியாகச் சுட்டிக்காட்ட திராவிடர் கழகம் ஒருபோதும் தயங்காது!

கி.வீரமணி,
தலைவர், திராவிடர் கழகம்.
சென்னை 22.3.2007