Monday, September 28, 2015

ஏனிந்த இரட்டை அளவுகோல்? தோலுரித்தார் தமிழர் தலைவர்

ஏனிந்த இரட்டை அளவுகோல்? தோலுரித்தார் தமிழர் தலைவர்

- மின்சாரம்


கருத்துரிமை காயடிக்கப்பட்ட நெருக்கடி நிலை கால கட்டத்தில் கருத்தரித்த அமைப்புதான் சென்னை பெரியார் திடலில் வீறு நடைபோட்டு நடந்து கொண்டிருக்கும் பெரியார் நூலக வாசகர் வட்டம். நேற்று 2130ஆம் நிகழ்ச்சி நடத்தி கின்னஸ் சாதனை புரிந்துள்ளது.
நேற்று சென்னைப் பெரியார் திடலில் தந்தை பெரியார் அறிஞர் அண்ணா பிறந்த நாள் கலைவிழாப் பெரு விழாவை  வாசகர் வட்டம் நடத்தியது (39 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடத்தி வருகிறது)
இவ்விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் (விரிவான நிகழ்ச்சி 8ஆம் பக்கம் காண்க)
விழாவில் தமிழர் தலைவர் தெரிவித்த ஒரு கருத்து மிகவும் முக்கியமானது.
இந்திய அரசமைப்புச் சட்டத்திற்குச் சத்தியப் பிரமாணம் செய்து பிரதமர் முதல் அமைச்சர் வரை பதவி ஏற்கிறார்கள். ஆனால் மத்தியில் இப்பொழுது நடைபெற்று வரும் தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) பிஜேபி அரசு இந்திய அரசமைப்புச் சடடத்தின் உயிர் போன்ற அடிநாதமான மதச் சார்பின்மை என்ற உன்னதக் கொள்கையைத் தனது சகதிக் கவ்விய இந்துத்துவா காலால்  போட்டு மிதித்துத் துவம்சம் செய்து கொண்டு இருக்கிறது.
குடியரசு தின அரசு விளம்பரத்தில்கூட மதச் சார்பின்மை, சோசலிசம்(Secular and Socialist)
என்ற சொற்களை நீக்கியது மோடி தலைமையிலான அரசு என்றால் தெரிந்து கொள்ளலாமே!
இது ஒன்றும் விளையாட்டாக - மறதி காரணமாக விடுபட்ட வாசகம் அல்ல; அவர்கள் இதயத்தில் கெட்டியாகப் பதிய வைத்திருக்கும் -மதச் சார்பின்மைக்கு விரோதமான மதக் கோட்பாடான - இந்தியாவை இந்து நாடாக்குவோம் என்பதற்கு விசுவாசமாகத் தான் இந்த சட்ட விரோதமான காரியத்தை அரசு செலவில் செய்தனர்.
பிஜேபி அரசு செய்து வரும் ஓர் இரட்டை வேடத்தை திராவிடர் கழகத் தலைவர் அவர்கள் நேற்றைய நிகழ்ச்சி யில் நிரல்பட எடுத்துரைத்தார். உலகில் இருந்த ஒரே இந்து நாடு நேபாளம் என்று இந்தியாவில் உள்ள இந்துத்துவ வாதிகள் இறுமாப்புடன் கூறி வந்தனர்.
அங்கு ஏற்பட்ட ஜனநாயக வழி அரசியல் மாற்றத்தால், அதற்கும் ஆபத்து வந்து விட்டது; மாவோயிஸ்டுகளின் பிடியில் அரசு அமைந்து விட்ட நிலை; இந்து அரசர்கள் ஓய்வூதியம் (Pension)  வாங்கிக் கொள்ள  வேண்டிய வர்கள் ஆனார்கள். அங்குள்ள பேர் பெற்ற பசுபதிநாத னாலும் இந்து ராஜ்ஜியத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை)
புதிய அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டு விட்டது. மதச் சார்பற்ற அரசு என்று கம்பீரமாக அறிவித்தாகி விட்டது. இந்து ராஜ்ஜியம் என்ற பீடை தூக்கி எறியப்பட்டு விட்டது.
இந்தியாவில் இந்து ராஜ்ஜியத்தை உருவாக்க வேண்டும் என்ற இறுமாப்போடு செயல்பட்டுக் கொண்டிருக்கும் பா.ஜ.க.வுக்கு சங்பரிவார்களுக்கு இது மிகப் பெரிய அதிர்ச்சி! நேபாளத்துக்குள் தன் பாசிச மூக்கையும் நுழைத் துப் பார்த்தது. நேபாளம் இந்து ராஜ்ஜியமாகவே இருக்க வேண்டும் என்று பல வகைகளிலும் அழுத்தம் கொடுத்தது  கொடுத்தும் வருகிறது. இந்தியாவில் இப்போக்கால் நேபாளத்தில் கடும் எதிர்ப்பு வெடித்துக்  கிளம்பி விட்டது.
நேபாளம் இன்னொரு நாடு - அந்த உள்நட்டுப் பிரச் சினையில் பிஜேபி அரசு அத்துமீறி உள்ளே நுழைகிறது.
அதே நேரத்தில் இலங்கைப் பிரச்சினையை எடுத்துக் கொள்ளலாம். அங்கே இனப்படுகொலை நடைபெற்றதை உலகமே அறியும் - உலக வரலாறு கண்டிராத இட்லரின் பெருக்குத் தொகையான - இடிஅமீனின் பரிணாம வளர்ச்சியான ராஜபக்சே போர்க் குற்றவாளியாக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும் என்ற நெடுங்குரல் உலகின் பல நாடுகளிலும் ஓங்கி ஒலித்துக் கொண்டு இருக்கிறது. ஈழத்தில் பாதிக்கப்பட்டோர் - இந்தியாவின் தென் பகுதியில் உள்ள தமிழர்களின் தொப்புள் கொடி உறவுகள் - அந்த வகையிலே இந்திய அரசு - பாதிக்கப்பட்ட மக்கள் இந்தியாவின் குருதி உறவு என்ற உணர்வில் தலையிட வேண்டிய தார்மீக உணர்வு உறுதியாக உண்டு. இந்தியா தலையிட வேண்டும் என்று தமிழ்நாட்டுத் தமிழர்கள் மட்டுமல்ல; உலகத் தமிழர்களே உரத்த குரலில் இடிமுழக்கம் செய்து வருகின்றனர்.
தமிழர்கள் என்ற இவ்வுணர்வையும்தாண்டி, மனித உரிமையில் மனங் கொண்ட பன்னாட்டு மக்களும் இனப்படுகொலைஞன் ராஜபக்சேவைக் கூண்டில் ஏற்று! என்று குரல் கொடுக்கிறார்கள். குமுறும் எரிமலையாக வெடிக்கிறார்கள். மத்தியில் உள்ள பிஜேபி அரசும் சரி, அதற்கு வக்காலத்து வாங்கும் இந்தியப் பார்ப்பனர்களும் சரி, இவர்களின் தொங்கு சதைகளான பெரும்பாலான இந்திய ஊடகங்களும் சரி என்ன சொல்லுகின்றன?
இலங்கை இன்னொரு நாடு; அப்படி இருக்கும் போது அந்நாட்டின் உள்நாட்டுப் பிரச்சினையில் இந்தியா எப்படி தலையிட முடியும் - மூக்கை நுழைக்க முடியும் என்று இதோபதேசம் செய்கிறார்கள்.
இந்த இடத்தினை மய்யப்படுத்தித்தான் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் சட்ட நுணுக்கத்துடனும், நாட்டு நடப்பின் சகல அம்சங்களுடனும் மத்திய பிஜேபி அரசின் இரட்டை வேடத்தை மட்டை ஒன்று கீற்று இரண்டாகக் கிழித்துக் காட்டினார்.
நேபாளம் - இன்னொரு நாடுதான். அங்கே இருந்து வந்த இந்து ராஜ்ஜியம் என்ற மகுடம் கவிழ்ந்து மண்ணில் வீழ்ந்த நிலையில், மதச்சார்பற்ற அரசு என்ற ஜனநாயகக் கிரீடம்  கித்தாப்பாக ஒளி உமிழும் நிலையில் இன்னொரு நாடான நேபாளத்தில் தன் சக்தியைத் திரட்டி , பெரும் அழுத்தம் கொடுக்கிறது - நேபாளம் இந்து நாடாகவே சட்டப் படியாகவே தொடர வேண்டும் என்று தொல்லை கொடுக்கிறது - இந்திய அரசு!
இதன் பொருள் என்ன? இலங்கைப் பிரச்சினை தமிழர் பிரச்சினை என்று வரும்போது அதில் இந்தியா தலையிட முடியாது - காரணம் இலங்கை இன்னொரு நாடு - அதன் உள்நாட்டுப் பிரச்சினையில் தலையிட முடியாது என்று  வித்தாரம் பேசும் மோடியின் பிஜேபி அரசு - நேபாளம் இன்னொரு நாடு - அதன் உள்நாட்டுப் பிரச்சினையில்  தலையிட முடியாது என்று சொல்லவில்லையே! நேபாளம் எதிர்த்தும், நேபாள ஊடகங்கள் உக்கிரமாகக் கண்டித்தும் இந்தியா தன் மூக்கை உள்ளே இழுத்துக் கொள்ள வில்லையே!
உலகில் இருந்த ஒரே இந்து நாடும் கோவிந்தா என்ற கடுகடுப்பில் காய்களை நகர்த்துகிறதே மத்திய பிஜேபி.
இந்த இரட்டை வேடத்தைத்தான் தமிழர் தலைவர் மிகவும் நேர்த்தியாக மக்கள் மத்தியில் தோலுரித்துக் காட்டினார். இந்தக் கண்ணோட்டத்தில் இந்தப் பிரச்சினையை வெளிப்படுத்தி இருப்பவர் திராவிடர் கழகத் தலைவர் மட்டுமே!
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...