Total Pageviews

Wednesday, September 30, 2015

மகாபாரதத்தின் யோக்கியதை என்ன?


கல்வித் திட்டத்தில் இராமாயணம், மகாபாரதம், கீதை முதலிய நூல்கள் இடம் பெறச் செய்யப்படும் என்று மத்திய பிஜேபி அரசு அறிவித்துள்ளது.
இந்நூல்கள் இந்து மதத்தைச் சேர்ந்தவை என்பது எல்லோருக்கும் தெரியும். ஒரு மதச் சார்பற்ற அரசு - இப்படி ஒரு குறிப்பிட்ட மதத்தின் நூல்களைக் கற்பிக்கத் திட்ட மிடுவது சரியா? என்பது நியாயமான கேள்வி.
பிற மதத்தவர்கள் மத்தியிலும் மத நம்பிக்கையற்ற வர்கள் மத்தியிலும் இத்தகு செயல்பாடுகள் எந்த அளவு மனப் புண்ணை ஏற்படுத்தும்? வாஜ்பேயி பிரதமராக இருந்த காலத்தில் இப்படித்தான் ஆரம்பித்தார்கள். கடவுள் வாழ்த்துப் பாடலாக சரஸ்வதி வந்தனா என்ற இந்துத்துவா பாடலை அறிமுகப்படுத்தி னார்கள்; பிஜேபி அரசு கூட்டிய மாநிலக் கல்வி அமைச் சர்கள் மாநாட்டிலேயே அதற்கு எதிர்ப்புக் கிளம்பியது; அம்மாநாட்டில் பங்கேற்ற  தமிழ்நாடு கல்வி அமைச்சர் மாண்புமிகு பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள் அதனை எதிர்த்து மாநாட்டை விட்டே வெளியேறினார். பெரும் பாலான மாநிலக் கல்வி அமைச்சர்களும், எதிர்ப்புகளைப் பதிவு செய்தனர்.
காலம் கடந்து விட்டதால் மக்கள் மறந்து இருப்பார்கள் என்ற நினைப்போ என்று தெரியவில்லை. இப்பொழுது ஒருபடி மேலே சென்று இந்து மத இதிகாசங்களை கல்வித் திட்டத்தில் புகுத்த உள்ளனர்.
இராமாயணத்தின் தன்மைபற்றி நேற்றைய தலையங் கத்தில் குறிப்பிட்டு இருந்தோம். இன்று மகாபாரதத்தைப் பற்றி ஒரு வரைபடத்தைக் கொடுப்பது நமது கடமை.
ஏகலைவன் என்ற வேட்டுவக் குலத்தைச் சேர்ந்தவன் வில் வித்தையில் திறமை உள்ளவனாக இருந்தான். நாய் குரைக்கும் ஒலியைக் கணித்து அம்பு எய்துக் கொன்றான் அந்த வேட்டுவக் குல ஏகலைவன். துரோணாச்சாரிக்கு மிகப் பெரிய ஆச்சரியம். தன் சீடன் அர்ச்சுனனால் தானே இது இயலக் கூடியது. இதனை எய்தவன் யார் என்று அவன் யோசித்தபோது அம்பை எய்த அந்த ஏகலைவன் துரோணாச்சாரியின் முன் வருகிறான்.
உனது குரு யார் என்ற கேள்வியைத் தொடுக்கிறான்? சுவாமி நான் உங்களிடம் வில் வித்தை கற்றுக் கொள்ள வந்தபோது, நான் தாழ்ந்த ஜாதி குலத்தில் பிறந்தவன் என்று கூறி வில் வித்தையைக் கற்றுக் கொடுக்க மறுத்தீர்கள்.
மனம் நொந்து போனேன்; ஆனால், முயற்சியைக் கைவிடவில்லை; உங்களைப் போல உருவம் செய்து தங்களையே என் குருவாகக் கருதி இந்த வில்வித்தையைக் கற்றுத் தேர்ந்தேன்! என்றான் பவ்யமாக.
அப்படியா சீடா? உன் குரு பக்தியை மெச்சினோம் என்று முதுகைத் தட்டிக் கொடுத்தாரா?
எப்படிப் பாராட்டுவார்? அவர்தான் உயர் குலத்தோர் ஆயிற்றே! - வருணாசிரமத்தைக் கட்டிக் காக்கும் காகப்பட்டராயிற்றே!
அவர் திருவாய் மலர்ந்தது என்ன? நீ என்னை குருவாக வரித்துக் கொண்டுதானே வில் வித்தை கற்றாய்?
ஆமாம் என்று அடி பணிந்து நின்றான் அந்த வேட்டுவக் குல ஏகலைவன்.
அப்படியானால் எனக்குக் குரு தட்சணை கொடுக்க வேண்டாமா? கொடுப்பாயா? என்று கேட்டார்.
எது கேட்டாலும் கொடுப்பேன் என்றான் அந்த ஏதுமறியாத அப்பாவி.
உன் கட்டை விரலை குருதட்சணையாகக் கொடு! என்றான் இரக்கம் என்னும் ஒரு பொருளில்லா அந்தக் குரூரனான துரோணாச்சாரி.
அக்கணமே வெட்டிக் கட்டை விரலைக் காணிக்கை யாகத் தந்தான். கட்டை விரலைக் காணிக்கையாகப் பெற்றால், அவன் வில்லை வளைத்து அம்பை எய்ய முடி யுமா? சூழ்ச்சியிலே பிறந்த கூட்டத்தின் தலைவனல்லவா - அந்தத் துரோணாச்சாரி பார்ப்பான்.
ஒரு குலத்துக்கொரு நீதி சொல்லும் இந்த மகாபார தத்தைத்தான் பள்ளிகளில் பாடத் திட்டத்தில் சேர்க்க  வேண்டுமாம்.
இதுபோல எத்தனை எத்தனையோ எடுத்துக்காட்டு களைக் கொண்டு வந்து முன்னிறுத்தலாம். இதனையும் தாண்டி மகாபாரதம் போதிக்கும் நீதிதான் என்ன? பாண்டவர்கள் கிருஷ்ணன் துணையோடு உறவினர் களுடன் போரிட நேரிட்டது பலன் கருதாப்பணியா? அவர் களைக் கொன்று வென்று நாட்டை ஆள வேண்டுமென விரும்பியது பலனை எதிர்பார்த்த பணிதானே?
துரோணரின் மகன் அசுவத்தாமன் இறந்து விட்டான் என்று தருமரை ஏவிப் பொய் சொல்ல வைத்தது ஏன்? கவுரவர்களுக்குப் போரில் பெருந் துணையாக இருக்கும் துரோணாச்சாரியாரைக் கொல்ல வேண்டுமென்ற சூழ்ச்சியால் தானே? தருமரைப் பொய் சொல்ல வைத்தது பலன் கருதாப் பணியா? கிருஷ்ணன் போரில் ஜயந்திரனை நோக்கி சூரியன் மறைந்து விட்டது என்று ஏன் பொய் சொல்ல வேண்டும்? பலன் கருதாப் பணியை வலி யுறுத்தும் கிருஷ்ணன், இதனைப் பலன் கருதாமலா சொன் னான்? மெய்க் காப்பாளர்கள் துணையின்றித் தனிமையி லிருந்த ஜயந்திரனை அம்பெய்து கொன்றது பலன் கருதாப் பணியா?
பெண்ணாகப் பிறந்தவரிடம் போர் செய்ய விரும்பாத பீஷ்மரை அவருக்கு எதிரேயிருந்த சிகண்டிக்குப்பின் நின்று கொண்டு அர்ச்சுனன் பீஷ்மரைக் கொன்றது பலன் கருதாப் பணியா? (நூல்: கீதையின் மறுபக்கம் ஆழமும் அகலமும் - பா. வீரமணி)
இத்தகு ஒழுக்கக் கேடான நூலை மாணவர்களுக்குப் போதிக்க வேண்டுமா?
தி இந்து இங்கிலீஷ் நாளேட்டின் ஆசிரியர் கடிதம் பகுதியில் ஒரு கடிதம் வெளி வந்தது. அதனை எழுதியவர் சென்னையைச் சேர்ந்த டி.ஆர். சுந்தரம். கடிதம் வெளிவந்த நாள்: 17.12.1988.
அந்தக் கடிதம் என்ன கூறுகிறது?
எமதர்மன்  வாயு பகவான்  ஆகியோரால் குந்திக்கு, தர்மர் முதலியோர் பிறக்கிறார்கள். தொலைக்காட்சியில் வாயுவைக் காட்டும்போது உடனே குழந்தைகள், அந்தப் பிறப்புப் பற்றி சில கேள்விகளைக் கேட்கத் துவங்கு கிறார்கள். பெற்றோர்களால் பிள்ளைகளின் அத்தகைய கேள்விகளுக்கு பதில் சொல்ல முடிவதில்லை; அது தெய்வ சம்பந்தப்பட்டது; எனவே அதுபற்றி எல்லாம் கேள்வி கேட்கக் கூடாது என்று பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. பாண்டவர்களும், கவுரவர்களும் சூதாடுவது பாண்ட வர்கள் தோற்பது, மனைவியை வைத்தே சூதாடுவது, திரவுபதையைத் துகில் உரிவது ஆகிய காட்சிகள் எல்லாம் வர இருக்கின்றன. இவைகளைக் குழந்தைகளை வைத்துக் கொண்டு எப்படிப் பார்க்க முடியும்?
எனவே, தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் மகாபாரதம் தொடரை வீட்டில் குழந்தைகளை வைத்துக் கொண்டு பார்க்க முடியவில்லை. வயது வந்தவர்களுக்கு மட்டும்  என்று அறிவித்து நள்ளிரவு நேரத்தில் மகாபாரதத் தொடரை ஒளிபரப்ப வேண்டும் என்று இந்து ஏட்டில் கடிதம் எழுதப்படவில்லையா? அந்த மகாபாரதத்தை பள்ளியில் சொல்லிக் கொடுக்கப் போகிறதாம் பாரதிய ஜனதா அரசு; பெற்றோர்களே எச்சரிக்கை! எச்சரிக்கை!!

0 comments: