Wednesday, September 30, 2015

ஜாதி பாகுபாடு மாற்றம் பெற்றதற்கும், தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு செயல்படுவதற்கும் காரணம் தந்தை பெரியாரே!

ஜாதி பாகுபாடு மாற்றம் பெற்றதற்கும், தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு செயல்படுவதற்கும் காரணம் தந்தை பெரியாரே!
தந்தை பெரியாருக்கும், அண்ணாவுக்கும் பாரத ரத்னா பட்டம் அளிக்காதது ஏன்?

சென்னைப் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் காந்தியார் - ராஜாஜி பேரன் கோபாலகிருஷ்ண காந்தி கருத்துரை

சென்னை, செப்.29 ஜாதி ஒழிப்பு - இடஒதுக்கீடு தமிழ்நாட்டில் மலர்ந்திருப்பதற்குக் காரணம் தந்தை பெரியாரே! தந்தை பெரியா ருக்கும், அண்ணாவுக்கும் பாரத ரத்னா பட்டம் கொடுக்கப்பட்டு இருக்க வேண்டும்; கொடுக்கப் படாதது ஒரு குறைபாடே என்று சென்னைப் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாவில் கோபாலகிருஷ்ண காந்தி உரையாற்றியபோது தந்தை பெரியாரைப் பற்றி அவர் குறிப்பிட்ட போதெல்லாம் அரங்கமே அதிரும் அளவுக்கு நீண்ட கை தட்டல் கிடைத்தது. (28.9.2015)
சென்னை பல்கலைக் கழகத்தின் 158ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா செப்டம்பர் 28ஆம் நாள் பல்கலைக் கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெற்றது. பட்டமளிப்பு விழாவில் காந்தியார் - இராஜாஜி ஆகியோரது பேரனும், பல்லாண்டு காலம் இந்திய வெளியுறவுத் துறையில் உயர் அதிகாரியாகப் பணியாற்றி பின்னர் மேற்கு வங்க ஆளுநராக பொறுப்பு வகித்த கோபாலகிருஷ்ண காந்தி பட்டமளிப்பு பேருரை ஆற்றினார். நூற்றுக்கும் மேற்பட்டோர்  முனைவர் பட்டம் மற்றும் பிற பட்டங்களில் விருது மற்றும் பரிசுகளைப் பெற்றனர்.
பட்டமளிப்புப் பேருரை யானது சென்னை, தமிழ் நாட்டின் சிறப்பு, நாட்டு நிலைமை, பட்டம் பெறுவோர் ஆற்ற வேண்டிய கடமை பற்றிய கருத்துச் செறிவுடன், இலக்கிய நயத்துடன் இருந் தது. கோபாலகிருஷ்ண காந்தி தமது உரையின் பொழுது பல கட்டங்களில் தந்தை பெரியாரைக் குறிப்பிட்டு அவர் ஆற்றிய மிகப் பெரிய சமுதாயப் பணி மற்றும் அதன் தாக்கம் ஏற்படுத்திய மேம்பாட்டு விளைவு பற்றிக் குறிப்பிட்டார்.
தந்தை பெரியாரின் பங்களிப்பு
சென்னையின் சிறப்புக்கு பெருமை சேர்ந்தவர்கள் வரிசையில் சமூக தத்துவ விளக்கம் பற்றிய பங்களிப்பில் தந்தை பெரியாரைக் குறிப்பிட்டார். நாட்டில் நிலவிடும்  சமூகப் பொருளாதார ஏற்றத் தாழ்விற்கு அடிப்படைக் காரணம், ஜாதி அமைப்பு முறை மற்றும் ஜாதியால் மனிதரில்  ஏற்றத் தாழ்வு கற்பிக்கப்பட்டு வருவதே ஆகும். ஜாதி  பாகுபாடு ஒழிப்பில் பிற மாநிலங்களைவிட தமிழ்நாட்டின் முற்போக்குக்குக் காரணம் தந்தை பெரியாரும் அவர் தொடங்கிய சுயமரியாதை இயக்கமும் தான் அடிப்படைக் காரணம். தந்தை பெரியாரின் சமுதாய மேம்பாட்டுப் பணி போற்றுதலுக்குரியது;
ஒடுக்கப்பட்ட மக்களை தூக்கிவிடும் வகையில் உள்ள இடஒதுக்கீடு முறை தமிழகத்தில் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இடஒதுக்கீடு முறை தொடர்ந்திட தந்தை பெரியார் ஆற்றிய பணி மகத்தானது. இதிலும் தமிழ்நாடு முன் மாதிரியாக உள்ளது. மற்ற மாநிலங்களைவிட மத நல்லிணக் கங்களும், சமய சார்பின்மையும் தமிழ்நாட்டில் அதிகமாக நிலவுகிறது. இதற்குக் காரணமான அரசியல், சமூக சீர்திருத்த தலைவர்கள் அனைவருக்கும் நன்றி.
பாரத ரத்னா பட்டம் பெரியாருக்கும் அண்ணாவுக்கும் அளிக்காதது குறைபாடே!
மேலும் தமிழ்நாட்டைச் சார்ந்த பெரு மக்களுக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதினை வழங்கி பெருமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் வரிசையில் இரு பெரும் தலைவர்கள் பெயர் விடுபட்டுப் போய் விட்டது. அவர்தாம் பெருமைக்கு உரிய தலைவர்கள் தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் ஆவார். இது வரை பாரத ரத்னா விருது  இரு  பெரும் தலைவர்களுக்கு வழங்கப் படாதது ஒரு பெரும் குறையே என ஆதங்கத்தோடு தமது பட்டமளிப்பு விழா பேருரையில் கோபாலகிருஷ்ண காந்தி குறிப்பிட்டார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...