Saturday, July 14, 2012

சபாஷ், தோழர் திருமா!


கேள்வி: பெரியார் குறித்தும் திராவிடம் குறித்தும் அண்மைக் காலமாக எழுந்துள்ள சர்ச்சைகளில் உங்கள் நிலைப்பாடு என்ன?
பதில்: என்னைப் பொறுத்தவரை அம்பேத்கரை எப்படிப் பார்க்கிறேனோ, அப்படித்தான் பெரியாரையும் பார்க்கிறேன். பெரியார் வாழ்ந்த காலத்தின் நிலவியல், அரசியல் போன்றவற்றைப் புரிந்து கொள்ளாமல் எதுவும் பேசக்கூடாது. ஆந்திரா, கேரள கர்நாடகா ஆகியவற்றை உள்ளடக்கிய சென்னை மாகாணம் இருந்தது. தமிழ்நாடு அப்போது உருவாகவில்லை. அந்தச் சமயத்தில் திராவிடர் கழகத்தை உருவாக்கினார் பெரியார். திராவிடக் கருத்தியலைப் பேசினார். அது சரிதான். அதன் பின்னரே 1956ல் மொழிவழி மாகாணங்கள் உருவாகி தமிழ்நாடு உருவானது.
இன்றைக்கு தமிழ்த் தேசியத்தை முன்னெடுப்பது சரியானதே. ஆனால், இன்றைக்கு தமிழ்த் தேசியம் பேசவே, அன்றைக்கு பெரியார்தான் வித்திட்டார் என்பதை மறந்து, திராவிடத்தை முற்றிலுமாகப் புறந்தள்ளுவது நன்றியுணர்வு அற்ற செயல். பெரியாரிடம் கருத்து மாறுபட்டால் விமர்சனம் செய்யலாம். ஆனால் அவரையும் திராவிடக் கருத்தியலின் பங்களிப்பையும் கொச்சைப்படுத்துவதை ஒரு போதும் ஏற்கமுடியாது. அப்படிக் கொச்சைப் படுத்துபவர்கள் பேசும் தமிழ்த் தேசியம் எத்தகையது? தமிழ்த் தேசியம் என்பது இந்துத்துவ தேசியத்தை, இந்திய தேசியத்தை, இந்தி தேசியத்தை எதிர்ப்பதாக, சாதிகளை ஒழிப்பதாக இருக்க வேண்டும். வெறும் மொழி உணர்வு, இன உணர்வு என்கிற அடிப்படையில் எழும் தமிழ்த் தேசியம் சரியானது அல்ல. ஈழ மக்களை நான் ஆதரிக்கிறேன் என்றால், அங்கு வாழ்பவர்கள் தமிழர்கள் என்பதால் அல்ல. அங்கே அவர்கள் சிங்கள ஒடுக்குமுறையால் பாதிக்கப் படுகிறார்கள் என்பதால்தான். ஆனால் ஈழத்தை ஆதரிக்கிறவர்கள் அங்கே வாழ்பவர்கள் தமிழர்கள் என்கிற ஒரே காரணத்துக்காக ஆதரிக்கிறார்கள். இங்கே தமிழ் நாட்டில் பரமக்குடியில் உள்ள தலித் தமிழர்கள் கொல்லப் பட்டால் கேட்கத் துணிச்சல் இல்லாதவர்கள், ஈழத்தில் நடந்தால் மட்டும் கூக்குரல் இடுவேன் என்பது போலித்தனமானது!
(ஆனந்தவிகடன் 11.7.2012)
விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் மானமிகு தொல். திருமா வளவன் அவர்கள் ஆணித்தரமாகவே இவ்வாறு பதில் கூறியுள்ளார் என்றே கூற வேண்டும்.
இதில் இன்னொரு கருத்து முக்கிய மானது -முதன்மையானதும் கூட!
திராவிட கருத்தியலின் ஆணிவேர் என்பது பார்ப்பன எதிர்ப்பு என்பதை மறந்துவிடக்கூடாது.
அந்தப் பார்ப்பனீய - பார்ப்பன ஆதிபத்திய எதிர்ப்பும் - போராட்ட நடவடிக்கைகளும்தான் இன்றைய நம் மக்களுக்கு பார்ப்பனர் அல்லாத மக்களுக்குத் தன்மான உணர்வை ஊட்டியது. திராவிட இயக்கம் கொடுத்த அந்தப் பார்ப்பன எதிர்ப்பு உணர்வுதான் தமிழர்கள் மத்தியில் இன உணர்வை ஊட்டியது.
அந்தத் திராவிட இயக்கம் கொடுத்த ஜாதி ஒழிப்புக் குரலும் ஜாதி எதிர்ப்புப் போராட்ட நடவடிக்கை களும்தான் தமிழர்களிடையே ஓரினக் கோட்பாடு உணர்வை உற்பத்தி செய்தது. தன்னைத் தனித்தனி ஜாதி யாக அடையாளம் காட்டிக் கொள் பவன் எப்படி ஓரினக் கொள்கைக் கோட் பாட்டை நெஞ்சில் தரிப்பான்?
தோழர் தொல்.திருமாவளவன் அவர்கள் மிகச் சரியாக ஓரிடத்தை அடையாளம் காட்டிக் குத்திக் காட்டி யுள்ளாரே - ஜாதி ஒழிப்புக் கோட்பாடு இல்லாத வெறும் தமிழ்த் தேசிய உணர்வு எப்படித் தமிழ்த் தேசிய உணர்வை ஊட்டும் வல்லமை வாய்ந்தது?
தமிழ்த் தேசியவாதிகளுக்குப் பார்ப்பன எதிர்ப்பு உணர்வு இல்லாத நிலையில், நீண்டகால வருணாசிரம சமூக அமைப்பை எப்படி தகர்த்திட வழி கோலும்?
நீண்ட, ஆயிரம் ஆண்டு காலமாக நிலை பெற்று வந்துள்ள பார்ப்பன ஆதிக்க நிலையை ஆணிவேரோடு அழித்து முடிக்காமல் நம்மின மக்களுக்கான மீட்சி எங்கிருந்து குதிக்கப்போகிறது?
தமிழ்த் தேசிய வாதிகளுக்கு இந்த அடிப்படை அறிவு கூட இல்லாத நிலையில் நம் மக்களுக்குத் தொண்டு செய்யப் போவதாகத் தொடை தட்டுவது மறைமுகமாகப் பார்ப்பனக் கோட்டைக்குக் காவல் காக்கத் துடித்திடும் அடிமைச் சேவகமாகும்.
திராவிடர் என்பதில் உள்ள ஆரியர் எதிர்ப்பு உணர்வுப் பீரங்கி  வேறு எங்கு தேடினாலும் கிடைத் திடாதே!
தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும் இந்த வகையில் ஒரே இடத்தில் பயணித்த சகோதரப் பயணிகள் ஆவார்கள்.
அதைத்தான் மானமிகு திருமா அவர்கள் என்னைப் பொறுத்தவரை அம்பேத்கரை எப்படிப் பார்க்கிறேனோ, அப்படித்தான் பெரியாரையும் பார்க்கிறேன் என்ற வார்த்தைகளால் வெளிப்படுத்திக் கொண்டு இருக்கிறார்.
சந்தேகத்துக்கு இடம் இல்லாமல் தந்தை பெரியார் அவர்களும் அண்ணல் அம்பேத்கர்அவர்களும் பார்ப்பனர் அந்நியரே என்று வரையறுத்துக் கூறிவிட்டனரே!
ஒரு ஜெர்மானியனுக்கு ஒரு பிரெஞ்சுக்காரன் எப்படி அந்நியனோ, ஒரு வெள்ளைக்காரனுக்கு ஒரு நீக்ரேர் எப்படி அந்நியனோ, அது போலவே பார்ப்பான் அடிமை வகுப்பார்களான சூத்திரர்களுக்கும், தீண்டத்தகாகதவர் களுக்கும் அந்நியனாவான். இவர் களுக்கு அந்நியன் மட்டுமல்ல; அவர்களுக்கு விரோதியாகவும் இருக்கிறான். (காந்தியும், காங்கிரசும் தீண்டப்படாதவர்களுக்குச் செய்தது என்ன? என்ற அம்பேத்கர் அவர் களின் நூலிலிருந்து)
இதையே தந்தை பெரியார்எப்படிக் கூறுகிறார்? ஆங்கிலோ இந்தியர்கள்  அதே போலத்தான் இந்நாட்டுப் பார்ப்பனர்களுக்கும். ஆங்கில இந்தியர்களுக்கும் நம் தாய் நாட்டுத் தமிழர்கள் ஈன்றெடுத்தவர்கள்தானே. ஆனால் அவர்களுக்குச் சற்றாவது நம் நாட்டு உணர்வு இருக்கிறதா?
நமது மக்களைப் பார்த்து டேய் டமில் மனுஷா! என்று கேவலமாகத்தானே கூறுகின்றனர். அவர்கள் யார்? எந்த நாட்டில் பிறந்தவர்கள்? என்ற வரலாற்றை அறியாமல் தாம் ஏதோ அய்ரோப்பாவில் பிறந்து இங்கு வந்து குடியேறியது போல ஜாதி ஆண வத்துடன் அல்லவா நடக்கிறார்கள்?
அதே போலவே இந்நாட்டுப் பார்ப்பனர்களும் மேல் நாட்டில் இருந்து வந்து குடியேறிய ஆரியர் களுக்கும், நம் நாட்டவர்களுக்கும் பிறந்தவர்களாய் இருந்தும் கூட ஆரிய ஜாதி முறைகளையும், அதற்கான ஆணவத்தையும் கொண்டு நாட்டுக் குரிய நம்மைக் கீழ் ஜாதிகளாக அடி மைகளாக மதித்து நடத்துகிறார்கள். (குடிஅரசு 28-.5.-1949)
அய்யாவும் அண்ணல் அம்பேத் கரும் ஒரு நாணயத்தின் இரு பக்கம் என்பது இந்த அடிப்படையில்தான். விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் மானமிகு திருமா. அவர்களின்  சரியான புரிதலுடன் கூடிய இத்தகைய கருத்துகள் பெரிதும் வரவேற்கத் தக்கவை.
தமிழ்த் தேசிய வாதிகளிடம் சூத்திர மக்களும்  பஞ்சம மக்களும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
சூத்திர மக்களுக்காகப் பாடுபட்ட தலைவர்களை வேறு ஜாதியினர் என்றும் வேறு மாநிலத்தவர் என்றும் திரித்துக் கூறி, பார்ப்பன எதிர்ப்புக் கூர்மைகளை மழுங்க அடிக்க முயற்சிக்கின்றனர்.
பெரியார் கன்னடர் என்று பேசும் அளவுக்கு அவர்கள் பார்ப்பனர்களின் கைக்கூலிகளாகிவிட்டனர்.
அடுத்து இவர்கள் எங்கே போவார்கள் தெரியுமா? அம்பேத்கர் யார்? நம் இனத்தவரா? நம் மாநி லத்தைச் சேர்ந்தவரா? நம் மொழியைப் பேசுபவரா?
வேண்டுமானால் அயோத்தி தாசரையும், இரட்டைமலை சீனிவா சனையும் ஏற்றுக் கொள்ளட்டும் என்று அடுத்த கட்டத்திற்கு இவர்கள் தாவமாட்டார்கள் என்று சொல்ல முடியுமா?
ஆரியத்தின் பிரித்தாளும் சூழ்ச்சி இவர்களைத் தொற்று நோயாகத் தொற்றிக் கொண்டுவிட்டது.
எச்சரிக்கை!
எச்சரிக்கை!!

- கவிஞர் கலி. பூங்குன்றன்


தொடர்புடைய செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...