Monday, August 20, 2007

மாட்டு மூத்திரம் வாங்கலியோ, மாட்டு மூத்திரம்

நகர்ப்புறங்களைவிட கிராமப்புறங்களில் சில பொருள்களைக் கூவி விற்பதுண்டு - நாகரிகம் வளர்ந்து வரும் காலத்தில் இதுபோன்ற கூவும் குரல்களைக் கேட்பது அரிதாகி விட்டது.உத்தரப்பிரதேசத்தை இரு மாநிலங்களாகப் பிரித்து உத்தரகண்ட் என்று தனி மாநிலம் உருவாக்கப்பட்டது. இங்கு பார்ப்பனர்கள் கணிசமான எண்ணிக்கையில் இருக்கின்றனர். பா.ஜ.க., ஆட்சி நடந்துகொண்டு இருக்கிறது. கந்தூரி முதலமைச்சராக இருக்கிறார் (இவர் ஆட்சியும் இப்பொழுது ஆட்டம் கண்டுவிட்டது. பா.ஜ.க., தலைவர் ராஜ்நாத் சிங் அங்கு விரைந்துள்ளார் என்பது வேறு செய்தி!).இந்தப் பா.ஜ.க., ஆட்சியில் பசு மாட்டு மூத்திரத்துக்கு ரொம்பவும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. ஒரு லிட்டர் மூத்திரம் ஆறு ரூபாய்க்கு விலை போகிறதாம்.யோகா குரு ராம்தேவ் தயாரிக்கும் ஆயுர்வேத மருந்துக்கு இந்த மாட்டு மூத்திரம் மிகவும் தேவைப்படுகிறதாம்.அந்த மாநிலத்தில் இருக்கும் கால்நடை வளர்ப்புத் துறையும், நாட்டு மக்கள் மத்தியிலே மாட்டு மூத்திரத்தைப்பற்றி விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை நடத்தப் போகிறதாம்.ரத்த வங்கி போல மாட்டு மூத்திர வங்கிகளை கூட்டுறவு சங்கங்களை அமைத்து மக்களுக்கு வழங்கப் போகிறார்களாம்!சபாஷ்! பி.ஜே.பி., என்கிற இந்துத்துவா ஆட்சி வந்தால் தண்ணீ ருக்குப் பதிலாக மாட்டு மூத்திரத்தைக் குடிக்க உத்தரவு போட்டு விடுவார்கள். இதன்மூலம் தண்ணீர்ப் பஞ்சத்துக்கும் தீர்வு கிடைக்கக் கூடும் அல்லவா?

மாட்டு மூத்திரம் என்றால் அதுவும் பசுமாட்டு மூத்திரம் மட்டும்தான் - எருமை மாட்டு மூத்திரமோ, காளை மாட்டு மூத்திரமோ அல்ல! பசுதானே அவர்களின் கோமாதா! ஏற்கெனவே பசுவை உணவுக் காக வெட்டக் கூடாது என்று ஒரு சட்டத்தையும், அந்த மாநிலத்தில் பிறப்பித்து நடைமுறைப்படுத்தி விட்டனர். மீறி வெட்டினால் சிறைத் தண்டனையோடு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் வேறு கட்டவேண்டும்.மாட்டு மூத்திரத்தை எடுத்து இரசாயன பரிசோதனை செய்து பார்த்தார்களா என்று தெரியவில்லை. அது ஒரு கழிவுப் பொருள்தான். கழிவுப் பொருளைச் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது என்று இதுவரை எந்த மருத்துவத் துறை விஞ்ஞானமும் தெரிவிக்கவில்லை.பஞ்சகவ்யம் என்று சொல்லி மாட்டு மூத்திரம், சாணி, பால், தயிர், வெண்ணெய் அய்ந்தையும் ஒன்றாகக் கலக்கி, `சூத்திரன் வீட்டில் நடக்கும் திதி முதலிய காரியங்களில், வீட்டுப் பெரியவர்களைக் குடிக்கச் செய்வார்கள். அதற்குத் தட்சணையும் கொடுத்து பயபக்தியோடு குடிப்பார்கள் சூத்திரர்கள்.இதனை திருமண நிகழ்ச்சிகளிலும், புதுமனை புகுவிழா நிகழ்ச்சிகளிலும், நீத்தார் நினைவு போற்றும் நிகழ்ச்சிகளிலும் தந்தை பெரியார் எடுத்துக்காட்டி மானங்கெடப் பேசுவார்கள்.பஞ்சகவ்யத்தை முகம் சுளிக்காமல் குடிக்கிறானா என்று பார்ப்பான் பார்ப்பானாம். அப்படி முகம் சுளிக்காமல் குடித்தால் பார்ப்பான் கணக்குப் போடுவானாம்! `பரவாயில்லை இன்னும் நூறு வருஷங்களுக்கு இவாளைச் சுரண்டலாம்! என்று கணக்குப் போடுவானாம் - தந்தை பெரியார் கூறுவார்.இன்னும் ஓர் அளவுகோலையும் தந்தை பெரியார் கூறுவதுண்டு.பஞ்சகவ்யம் குடிப்பது என்பது நமது முட்டாள்தனத்தைப் பார்ப்பான் அளக்கும் தர்மா மீட்டர் என்றும் சொல்லுவார்.தமிழ்நாட்டில் தந்தை பெரியார் தோன்றினார்; பிரச்சாரம் செய்தார். திராவிடர் கழகம் இருக்கிறது; தொடர் பிரச்சாரம் நடந்துகொண்டு இருக்கிறது. இத்தகு காரணங்களால் இந்தப் பஞ்சகவ்யம் எல்லாம் அனேகமாகக் குறைந்து போய்விட்டது.அதேநேரத்தில், பா.ஜ.க., - சங் பரிவார்க் கும்பல் பசுமாட்டு மூத்திரத்துக்கு ஒரு மகத்துவத்தை உண்டாக்கும் வேலையில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறது என்பதை நம் மக்கள் தெரிந்துகொள்ளுவது நல்லது.தன் மலத்தையே தின்ன பரமஹம்சர்கள் எல்லாம் கூட இந்த நாட்டில் உண்டு.கேட்டால் அவர்கள் `மும்மலத்தையும் அறுத்த மலந்தின்னிகள் என்று பட்டம் கொடுத்தாலும் கொடுப்பார்கள்.வெட்கக்கேடு. இந்த 2007-லும் இப்படி ஒரு கூட்டம்!இந்துத்துவா என்றால், ஓகோ என்று பேசுகிறார்களே - ஒரு வெங் காயமும் இல்லை - மாட்டு மூத்திரத்தைக் குடிக்கச் சொல்லுவதுதான் - ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போதாதா?

- மயிலாடன்


13 comments:

kiddy ppl said...

பெரியார் சொல்வார் "மற்ற நாட்டுக்காரன் முயற்சி எல்லாம் சந்திர மண்டலத்துக்குப் பிரயாணம் செய்கிறான். இவன் என்னடா என்றால் சாமி என்கிறான், அவனுக்கு வைப்பாட்டி என்கிறான், திதி என்கிறான். பார்ப்பான் பஞ்சகவ்யம் என்று கொடுக்கிற மாட்டு மூத்திரத்தையும் சாணியையும் கைநீட்டி வாங்கிக் குடிக்கிறான். பக்தியின் பேரில் மாட்டுச் சாணி என்ன, மனித மலத்தைக் கூடக் குடிக்கத் தயாராக இருக்கிறான்"என்று. பக்தி முத்திவிட்டால் மலத்தைக் கரைத்து பார்ப்பான் கொடுத்தாலும் தமிழன் குடிப்பான்.

வவ்வால் said...

மனிதர்களை குடிக்க சொல்வதை பற்றி எல்லாம் நான் எதுவும் சொல்வதற்கில்லை, மடத்தனம் தான், ஆனால் பஞ்சகவ்யம் விவசாயத்தில் பூச்சிக்கொல்லியாக பயன்படுத்தலாம் என இயற்கை விவசாயிகள் சொல்கிறார்கள் நானும் அது குறித்து ஒரு பதிவிட்டுள்ளேன்!

அதனால் பயன் உண்டா இல்லையா என்பதை ஒரு வேளாண் அறிஞர் உதவிகொண்டு ஆராய்ந்து சொல்லுங்கள், உபயோகமாக இருக்கும்!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

என்னப்பா இது பஞ்சகவ்வியம் என்ன என அறிய பல விதத்திலும் இணையத்தில் ஆராய்ந்து விட்டு, தமிழ் மணம் வந்தால் விடை கிடைச்சு விட்டுதே!!
ஆகா தமிழ் மண ஆற்றலே ,சிலிற்கிறது.

நிற்க மாட்டுச்சலம் நல்ல இயற்கையுரம்
என அறிந்துள்ளேன்.
வவ்வால் கூறுவது போல் இதைச் சில மூலிகையுடன் கலக்கும்போது
இதற்கு கிருமிகொல்லும் தன்மையுண்டெனவும் படித்துள்ளேன்.
இவற்றை தகுந்த முறையில் ஆய்வு செய்து, ஆய்வறிக்கை கூறினால், மனிதன் குடிப்பதில் தவறில்லை.சாராயத்தைக் குடிக்கும் மனிதன் இதைக் குடிப்பதால் ஒன்றுமாகான். இதுக்குள் சமயத்தைப் புகுத்த வேண்டாம்.
சமயவாதிகள் சொல்வதால் எதையும் தட்டிக் கழிக்க வேண்டாம். 'மெய்ப்பொருள் காண்போம். இல்லையோ அமெரிக்கன் போத்திலில்லடைத்துத் தர வாங்கிக் குடிப்போம்.
இத் தருணத்தில் எனக்கு ஏதோ மொராஜி தேசாய் நினைவுக்கு வருகிறார்.

G.Ragavan said...

மாட்டு மூத்திரத்தை வீட்டிற்குள் தெளிப்பது என்பதும் அதை அதோடும் இதோடும் கலந்து குடிப்பது என்பதும் அருவெறுப்பாகத்தான் உள்ளது.

சாணியும் மலம்தான். ஆனால் அது ஈரமாக இருக்கையில் புழு கூட வருகிறது. ஆனால் தண்ணீரில் குழைத்து தரையிலோ அடுப்பிலோ மெழுகி விட்டால் சிறப்பாகிறதே. பொதுவில் கழிவுகள் நல்ல உரம் என்ற அளவில் தெரியும். ஆனால் மருந்து என்றால் அதை ஆராய்ச்சி செய்து சொல்லட்டுமே. ஆராய்ச்சி இல்லாமல்...ஒரு நிரூபணம் இல்லாமல் கோமியம் சிறந்தது என்று சொல்வது சரியாகத் தெரியவில்லை. ஒருவேளை ஆராய்ச்சி செய்து அது உண்மையாகிவிட்டால் அதைக் கிண்டல் செய்கிறவர்களும் வாயடைத்துப் போவார்களே.

ஜீவி said...

சூத்திரர்களைக் குடிக்கச் சொல்வார்கள் என்பது தவறு. பிராமணர்கள் வீட்டு-
குறிப்பிட்ட சில விசேஷங்களில்,
அவர்களும் குடிப்பார்கள் என்பதே சரி.
யோகன் பாரீஸ் என்பவர் அருமையாகச் சொன்னார் "இவற்றை தகுந்த முறையில் ஆய்வு செய்து, ஆய்வறிக்கை கூறினால், மனிதன் குடிப்பதில் தவறில்லை.சாராயத்தைக் குடிக்கும் மனிதன் இதைக் குடிப்பதால் ஒன்றுமாகான்."--இதைப்படித்து
விட்டு சிரித்து விட்டேன்.
இந்தக் கட்டுரையை எழுதுவதற்கு முன்னால், கிண்டி பரிசோதனைக்
கூடத்தில் பசு மாட்டு மூத்திரத்தைக்
கொடுத்து பரிசோதிதிருந்தால்,
அந்த ஆய்வறிக்கையையும் கூடப்
பிரசுரித்திருக்கலாமே?.. இதெல்லாம்
நம் வேலையில்லை என்றால்,இந்தக்
கட்டுரை வெளியிட்டதின் நோக்கத்தையும்
நம்மால் புரிந்து கொள்ள முடியும்

மாசிலா said...

ஏய் இந்தியாவே!
எனக்கும் மாட்டுக்கும் ஒரே மாதிரியான சட்டம் போடு!

காவல்துறையே! உன் கண்களை திற!

அதென்ன அது?

மனிதன் வெளியில் மூத்திரம் பேய்ந்தால் அவன் மூத்திரத்தை விட்டுவிட்டு அவனை மட்டும் பிடித்துக் கொண்டு போகிறாய்!

மாடு மூத்திரம் பேய்ந்தால் மாட்டை விட்டுவிட்டு அதன் மூத்திரத்தை மட்டும் பிடித்துக்கொண்டு போகிறாய்!

மாட்டுக்கும் மனிதனுக்கும் சமதர்மம் வேண்டும். போராடுவோம் கடைசி மூச்சு உள்ளவரை!

தமிழா, எழுந்திரி! மாடு போலவே நீ ஒண்ணுக்கு போகும்போது, உன்னை விட்டுவிட்டு உன் ஒண்ணுக்கை மட்டும் பிடித்துக்கொண்டு போக உரிமை குரல் கொடு!

துளசி கோபால் said...

//சாராயத்தைக் குடிக்கும் மனிதன் இதைக் குடிப்பதால் ஒன்றுமாகான்//

:-)))))))))))

இது இன்றைக்கான சிரிப்பு

யோகன்.....நல்லா ரசிச்சேன்.

ENNAR said...

சந்திர மண்டலத்துக்கு செல்பவன் சர்ச்சுக்குப் போய்விட்டு தான் செல்கிறானுங்கோ?

குழலி / Kuzhali said...
This comment has been removed by the author.
குழலி / Kuzhali said...

வவ்வால் said...
//பஞ்சகவ்யம் விவசாயத்தில் பூச்சிக்கொல்லியாக பயன்படுத்தலாம் என இயற்கை விவசாயிகள் சொல்கிறார்கள் நானும் அது குறித்து ஒரு பதிவிட்டுள்ளேன்!//
வவ்வால் உங்கள் பதிவிலிருந்து தான் இந்த பஞ்சகவ்யம் செய்யும் முறையை எடுத்தேன்
மேம்படுத்தப்பட்ட பஞ்சகவ்யம் செய்யும்முறை:

மூலப்பொருள்:

*4 கிலோ சாண எரிவாயு கலனில் இருந்து பெறப்பட்ட சாணக்கூழ்
*1 கிலோ புதிய சாணம்
*3 லிட்டர் கோமியம்
*2 லிட்டர் பசும்பால்
*2 லிட்டர் பசு தயிர்
*1 லிட்டர் பசு நெய்
*3 லிட்டர் கரும்பு சாறு!
*12 பழுத்த வாழைப்பழம்
*3 லிட்டர் இளநீர்
*2 லிட்டர் தென்னம் கள்

மூலப்பொருளில் பாருங்க, 2 லிட்டர் பசும்பால்
*2 லிட்டர் பசு தயிர், *1 லிட்டர் பசு நெய், *3 லிட்டர் கரும்பு சாறு!, *12 பழுத்த வாழைப்பழம்,*3 லிட்டர் இளநீர் இதெல்லாம் போட்டு பூச்சி மருந்து கொல்லி செய்யும் நிலையிலா இருக்கான் விவசாயி.... ஏனய்யா காமெடி செய்கின்றீர், இந்த மூலப்பொருளுக்கு ஆகும் செலவை யோசித்து பாருங்க....

Thamizhan said...

கோவில்களின் தீர்த்தத் தொட்டிகள்!
கும்பகோணம் ம்கா மகக்குளம்!
பஞ்ச கெளமியம்!
படித்த அறிவாளிகளும் மூளையில் விலங்குடன் அலையும் பக்தி மயம்!
எல்லா வசதிகளையும் அனுபவிக்கும் சாமியார்கள்!அவர்களிடம் ஏமாறும் வேடிக்கை!
இந்தியாவிலிருந்து நிலவுக்குப் பயணம் போகும்போதும் பஞ்ச கெளமியம் அவசியம் போகும்!

வவ்வால் said...

குழலி ,

ரொம்ப வேகமா குழலை ஊதுறிங்களே!

முழுதாக படிக்காமல் சொன்னால் எப்படி , அது 20 ஏக்கருக்கானது ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் இதில் போதும் அதையும் 3 சதம் என நீர்த்து பயன்படுத்த வேண்டும். அது அந்த ரேஷியோ வர வேண்டும் என்பதற்காக அப்படி சொன்னது. இது எல்லாம் சேர்ந்து ஒரு லிட்டர் வேண்டும் என்றால் அது போல கலந்து கொள்ளவேண்டும்.

டெமக்கிரான் 35 சதம் 200 மில்லி என்ன விலை சொல்லுங்க பார்ப்போம்! அதை விட இது விலை குறைவு தான்.

Unknown said...

கோமயதிலிருந்து தயாராகும் மருந்துகளுக்கு அமெரிக்க பேடண்ட் அலுவலகத்தில் (USPO) பேடண்ட் வழங்கப்பட்டுள்ளது.

பேடண்ட் எண்:6410059

தலைப்பு:"Pharmaceutical Compositions containing Cow urine Distillate and An Antibiotic"

சுட்டி:http://www.hindu.com/thehindu/seta/2002/09/19/stories/2002091900150300.htm

விரைவில் கோமயத்திலிருந்து தயாராகும் மருந்துகளை ஆயிரக்கணக்க்கில் கொட்டி வாங்க தயாராகுங்கள்.

உள்நாட்டு மருத்துவத்தை ஏகடியம் பேசி,பேசி அதை இழக்கும் திறமை நம்மை அன்றி வேறு யாருக்கு வரும்?

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...