Friday, March 16, 2012

அன்னையார் நினைவு அலைகள்!


இன்று, நமது அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் என்ற தன்னேரிலாத, தன்மான, தன்னல மறுப்பின் இலக்கணமான தகைசான்ற தலைவரின் 33ஆவது நினைவு நாள்.
நாம் அடிக்கடி குறிப்பிடுவதுபோல, நமது திராவிடர் இயக்கத் தலைவர்கள், நினைவு நாள் என்பது சடங்கோ, சம்பிரதாயமோ அல்ல; சரித்திரக் குறிப்பு. அவ்வளவுதான்; எந்நாளும் அவர்தம் பாதையில் நடைபோட்டும் பெரியார் பணி முடிக்க எவ்வித சபலங்களுக்கும் ஆளாகாது லட்சியப் பயணத்தைத் தொடரும் நமக்கு அவர்தம் தொண்டறம் மறக்கப் படாதவை; மக்கள் மத்தியில் பரப்பப்பட வேண்டியவை!
எம்மைப் பொறுத்தவரை இந்த எளிய பெரியார் தொண்டனுக்கு - தந்தை பெரியார் வாழ்ந்த காலத்தில்  எதையும் சிந்திக்காது, கண்ணை மூடிக் கட்டுப் பாட்டுடன் கழகத்தில் செயல்பட்ட ஒரு இராணுவச் சிப்பாய் என்ற கடமை மட்டுமே; அது அய்யாவிற்குப் பின் அன்னையார் தலைமை ஏற்ற பின்பும் தொடர்ந்த நிலை!
சிந்திப்பது எம் பணி அல்ல; செயல்படுவதே எம் பணி!
எம் கடமை என்று தொடர்ந்து, கொடி தூக்கி, கொள்கையைக் காத்து, சிறையோ, போராட்டக் களமோ என்று தலைமையின் ஆணைவரும் போதெல்லாம் தட்டாமல் ஈடுபடும் பணிக்கு எம் பொறுப்பு முடிந்தது என்ற எளிதான நிலை!
ஆனால் 16.3.1978-க்குப் பின் தலைவர் அன்னையார் மறைந்த பின்பு, அய்யா, அன்னையார் அவர்தம் அரும் தொண்டர்கள் தோழர்கள் ஆணையை ஏற்று பொறுப்புக்கு வந்தபின், தனி மரமானோமோ  -நமக்கு வழிகாட்டும் ஒளியாம் அந்த கலங்கரை விளக்குகள் மரணம் என்ற சூறாவளியால் தகர்த்தெறி யப்பட்ட நிலையில் - அடுத்து நம் கழக நிலை என்ன  என்ற ஏக்கமும் கவலையும் வாட்டி வதைத்தன!
அன்னையாரின் தனி வாழ்வில்லா பொது வாழ்வில் சோதனைகளுக்கும், வேதனைகளுக்கும், துரோகங் களுக்கும் பஞ்சமில்லை.
இந்த அறைகூவல்களை நாம் எப்படி எதிர் கொள்ளப் போகிறோம் என்ற பெருங்கவலையும் திகைப்பும் உள்ளத்தை வாட்டியது;  உணர்வை அரித்தது. உடலை உலுக்கியது. நம்மை நம் வாழ்வை பலிபீடத்தில் நிறுத்தியாவது, நம்மை நம்பி பொறுப்பை ஒப்படைத்த நிலையில், லட்சியப் போர்க்களத்தில் மரணம் வரும் வரையில் போராடி வெற்றியைப் பறித்து, வைத்த நம்பிக்கையை நியாயப்படுத்துவோம் என்ற உறுதி உள்ளுக்குள் எழுந்தது. எமது உயரம் குறைவுதான்; ஆனால் எம்மைத் தாங்கும் தோள்களின் வலிமையும், உயரமும் பலங் குன்றாதவை மிக உயர்ந்தவை. பகையை வெல்லும் பராக்கிரமத் திற்குரியது என்ற தெம்பு கிட்டியது!
சொந்த புத்தி தேவையில்லை; பெரியார் தந்த புத்தியையே எங்கும், எதிலும் பயன்படுத்துவோம்; அதன் மூலமே காணாமற் போன கலங்கரை விளக்கு வெளிச்சம் கிட்டும் என்று எண்ணினோம்!
பின்பே பயணம் எளிதானது; பாதை தெளிவானது; கூட்டுத் தோழர்களின் ஒத்துழைப்பு மலிவானது, அய்யாவும், அன்னையாரும் மறையவில்லை வாழுகிறார்கள் தத்துவங்களாக என்ற எண்ணம் நம்பிக்கை ஒளியானது.
எத்தனை இடர்கள், இடுக்கண்கள் வந்தாலும் இலட்சியப் பாதையில் எம் பயணம் எமது கூட்டுத் தோழர், தோழியர்களுடன் இலக்கு மாறாப் பயணமாக நடந்து வாகையூருக்குச் சென்று, சுயமரியாதைக் கொடியேற்றி நிறைவு செய்ய மறைந்த அன்னையார் நினைவு நாளில், கறுப்பு மெழுகுவத்திகளின் சுடர்களைக் காத்து ஒரு மெழுகு உருகினால் அதிலிருந்தே ஆயிரமாயிரம் மெழுகுவத்திகளைக் கொளுத்தி அறியாமை, இல்லாமை, கல்லாமை, ஜாதி, பெண்ணடிமை, மூடநம்பிக்கை இருள் அகற்றும் பணியை இடையறாது செய்வோம் வெற்றி பெறுவோம்! சூளுரைத்து பயணம் தொடருவோம்!
வாழ்க தந்தை பெரியார்!
வாழ்க அன்னை மணியம்மையார்!!
வளர்க பகுத்தறிவு!!!
கி.வீரமணி 
தலைவர்
திராவிடர் கழகம்


.
 

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...