Thursday, March 15, 2012

இலங்கை இந்தியாவுக்கு நட்பு நாடா?

இலங்கையில் நடத்தப்பட்ட இனப்படுகொலை பற்றி அய்.நா. நியமித்த மூன்று பேர்களைக் கொண்ட நிபுணர் குழு தனது அறிக்கையில் இலங்கை இராணுவம் இழைத்த போர்க் குற்றங்களை விசாரித்தது. அதன்படி 40 ஆயிரம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட் டுள்ளனர். ஒரு லட்சத்து 40 ஆயிரம் தமிழர்கள் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. இந்தக் குழுவின் அறிக்கையை அய்.நா.வின்  பொதுச் செயலாளர் பான்-கி-மூன் அய்க்கிய நாடுகளின் மனித உரிமைக் குழுவுக்கு அனுப்பி வைத்தார். மனித உரிமைக் கண்காணிப்பு ஆணையம்(Human Rights Watch) அறிக்கை ஒன்றை வெளியிட்டது. 2012 ஆம் ஆண்டுக்கான அறிக்கை அது. இலங்கை அரசு நாட்டின் 26 ஆண்டுகால உள்நாட்டுச் சண்டையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கு வதைத் துரிதப்படுத்துவற்கும் பொறுப்பேற்பதற்கும் தவறியுள்ளது.

பாதுகாப்புப் படை மூலம் கொடுமைப் படுத்துதலுக்கும் ஊடகத்தையும் சிவில் சமூகக் குழுக்களையும் மிரட்டியதற்கும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாதுகாப்பின்மைக்கு அதிபர் மகிந்த ராஜபக்சேதான் பொறுப்பேற்கவேண்டும் என்று கூறியுள்ளது.

படைத்துறை சாராதோர் குண்டு வீசி கொல்லப் பட்டுள்ளனர். பொது மக்கள் வாழும் பகுதிகளிலும், மருத்துவ மனைகள் மீதும் குண்டு வீசுவது குறித்து இராணுவம் சிறிதும் பொருட்படுத்தவில்லை என்கிறது அந்தக் கண்காணிப்புக் குழு.

நார்வே அரசு 208 பக்கங்களைக் கொண்ட அறிக்கை ஒன்றை 2011 இல் தயாரித்து வெளியிட்டது. நார்வே தலைநகரமான அஸ்லோவில் அது வெளியிடப்பட்டது.  நார்வே அரசு மேற்கொண்ட சமாதான முயற்சி தோல் விக்கு இந்தியா எப்படி காரணமாக இருந்தது என்பதை அவ்வறிக்கை அப்பட்டமாக அம்பலப்படுத்துகிறது.
புலிகளின் நண்பன் நார்வே நாடு என்ற எண்ணம்தான் இந்தியாவுக்கு இருந்ததாக அவ்வறிக்கை கூறியது.

2007இல் சமாதான முயற்சியில் இந்தியா அக்கறை செலுத்த வேண்டும் என்ற நார்வே நாட்டின் கோரிக் கையை இந்தியா நிராகரித்துவிட்டதாக அவ்வறிக்கை தெரிவிக்கின்றது.

இந்த நிலையிலிருந்து இன்று வரை இந்தியா இம்மி அளவும் நகரவில்லை என்பது வெளிப்படை.

இலங்கையின் உச்சநீதிமன்ற நீதிபதி சரத் என்சில்வா முள்வேலி முகாமில் முடக்கப்பட்ட ஈழத் தமிழ் அகதிகளை பார்வையிட்டு என்ன சொன்னார்?
நமது நாட்டின் சட்டத்தின் மூலம் தமிழர்கள் நீதியை எதிர்பார்க்க முடியாது. தமிழர்களின் துயரங்கள் நீதிமன்றத்தின் முன் கொண்டு வரப்படவில்லை. இலங்கையில் சிறுபான்மையினர் பெரும்பான்மையினர் என்ற இரண்டு இனம் இல்லை. ஒரே இனம் என்று நாம் சொல்லிக் கொண்டிருப்ப ததெல்லாம் பச்சைப் பொய்கள்.  இவைகளை நான் பகிரங்கமாகவே வெளிப்படுத்துகிறேன். இந்த நிலை நீடித்தால் விடுதலைப் புலிகளின் போர் மீண்டும் வெடிக்கலாம். இப்படிச் சொல்வதன் மூலம் இலங்கை அதிகாரிகளால் நான் தண்டிக்கப்படலாம். கவலை இல்லை என்றார்.

உண்மையான நிலை என்ன என்று இந்தியாவுக்கு நன்கு தெரிந்திருந்தும் பிடிவாதமாக இந்தியா நியாயத்துக்கு விரோதமாக, மனித உரிமைகளுக்கு எதிராக நடந்து கொள்வது வெட்கப்படத்தக்கதே!

மாநிலங்களவையில் கவிஞர் கனிமொழி குறிப்பிட்டது போல தமிழ் உணர்வு என்பதையும் தாண்டி இதில் மனித உரிமை இருக்கிறதே - அது பற்றி இந்தியாவின் நிலைப்பாடு ஆரோக்கியமானதாக இருக்க வேண்டாமா?

ஈழத் தமிழர் குறித்து தமிழ்நாடு சட்டப் ப்ரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவின் தம்பியும், பாதுகாப்புத் துறை செயலாளருமான கோத்தபய ராஜபக்சே தரக்குறைவாக விமர்சனம் செய்தாரே - இந்திய அரசு கண்டு கொண்டதா?

சுருக்கமாகச் சொன்னால் இந்தப் பிரச்னையில் இந்தியாவின் சாயம் உலக நாடுகள் மத்தியில் வெளுத்துவிட்டது.

யுத்த நெறிமுறைகளை மீறி, மனித உரிமைகளைக் காலில் போட்டு மிதித்த ஒரு நாடு, 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்களைக் கொன்று குவித்த ஒரு நாடு, இந்தியாவின் நட்பு நாடு என்று இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருப்பது இந்தியாவைப் பற்றிய மரியாதையை வெகுவாகக் குறைப்பதோடு அல்லாமல் ஒட்டு மொத்தத் தமிழினத்தைத் துச்சமாக மதிக்கிறது இந்தியா என்றே எடுத்துக் கொள்ளப் படும். இந்தியா இலங்கையை நட்பு நாடாகக் கருதுவது இருக்கட்டும். இலங்கை இந்தியாவை நட்பு நாடாக மதிக்கிறதா என்பதுதான் முக்கியமான கேள்வி. பாகிஸ்தான், சீனா யுத்தத்தின் போது இலங்கை யாருக்கு நட்பாக இருந்தது? எந்த வகையிலும் இந்தியாவின் முடிவு விரும்பத்தக்கதாக இல்லை.

இதற்கான விலையை காங்கிரஸ் எதிர்காலத்தில் கொடுக்க நேரிடும் என்பதில் அய்யமில்லை.


.
 

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...