Friday, July 12, 2019

பல்கலைக் கழகப் பாடத் திட்டத்தில் ஆர்.எஸ்.எஸா?

"புதிய தேசத்தை சிறந்த ஒன்றாக உருவாக்குவதில் ஆர்.எஸ்.எஸ். பங்கு" என்ற தலைப்பில் நாக்பூர் பல்கலைக் கழகத்தில் பாடம் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது. முக்கியமாக அந்த இடத்தில் இருந்த "பொதுவுடைமை அமைப்பின் வளர்ச்சியும் எழுச்சியும்" என்ற தலைப்பில் இருந்த பாடம் நீக்கப்பட்டுத்தான் ஆர்.எஸ்.எஸ். பாடம் சேர்க்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு பள்ளிப் பாடத்திட்டங்களில் இருந்து கல்லூரி பாடங்கள் வரை காவிமயமாக மாறிக் கொண்டு வருகிறது.  இதற்கு முன்பு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு குறித்து அரசு மற்றும் அரசு சாரா கல்வி நிறுவனங்கள் பாடமாக சேர்க்கவில்லை. சேர்க்கவும் அவசியமில்லை. ஆர்.எஸ்.எஸ். அதன் தோற்றம், வளர்ச்சி, அதன் செயல் பாடுகள் எப்போதுமே சர்ச்சைக்குரியவைகளாக இருந்தன.

1909-ஆம் ஆண்டிலேயே ஆங்கிலேய அரசால் இந்தியாவிற்கு சுயாட்சி உரிமை கொடுக்கவேண்டும் என்ற பேச்சு மற்றும் அதற்கான அடித்தளம் அமைக்கப்பட்டுவிட்டது. முக்கியமாக மிண்டோ-மார்லே சீர்திருத்தங்கள் எதிர் காலத்தில் இந்தியா இந்தியர்களின் ஆளுமைக்கு வரும் என்ற ஒரு சமிக்கையை காட்டியது. இதனை அடுத்து இந்தியாவில் ஆங்கிலேயரின் வருகைக்குப் பிறகு குறைந்து போன பார்ப்பன அதிகாரம் மீண்டும் கோலோச்ச தீவிர இந்துத்துவ அமைப்பினர்கள் ஒன்றுசேர்ந்து உருவாக்கியதே ஆர்.எஸ்.எஸ். அமைப்பு.

இது 1925 செப்டம்பர் 27ஆம் தேதி விஜயதசமி அன்று கேசவ பலிராம் ஹெட்கேவரால்  நிறுவப்பட்டது. சங்கமானது ஆரம்பிக்கப்பட்டு மக்களிடையே பிரிவினைவாதத்தை மிகவும் தீவிரமாக விதைத்த காரணத்தால் மதவாத அமைப்பாக விரைவிலேயே அடையாளம் கண்டுகொள்ளப் பட்டது. இதன் முக்கியக் கொள்கை இந்து தேசியவாதம் - இந்துக்களுக்கான நாடு என்பது தான்; உண்மையில் இந்துக்களுக்கான நாடு என்பது அவர்களைப் பொறுத்தவரை பார்ப்பனர்களுக்கான நாடு என்பதாகும்.
ஆர்.எஸ்.எஸ். நேரடியாக தேர்தலில் பங்கு கொள்வதில்லை.அது தனது அமைப்பில் பல்வேறு பிரிவுகளை உருவாக்கி அனைத்து அரசியல் கட்சிகளிலும் அந்தப்பிரிவில் உள்ளவர்களை ஊடுருவ விட்டு தனது ஆளுமையை நிலைநிறுத்திவருகிறது, 1930 முதல் காங்கிரஸ் கட்சி வலுவாக இருந்த போது, அதன் தலைமை மதச்சார்பின்மைக் கொள்கையை கடைப்பிடித்த நேரத்தில் அதன் இரண்டாம் மட்ட தலைவர்களாக தங்கள் அமைப்பைச்சேர்ந்தவர்களை ஊடுருவச்செய்தனர்.

இந்திரா காந்தி அவசரநிலைக் காலத்தில் அரசமைப்பு முகப்பில் இந்தியா மதச்சார்பாற்ற நாடு என்பதைச் சேர்த்தார். ஆர்.எஸ்.எஸின் உறுப்பினராக சேர எவ்வித நடை முறையும் இல்லை. உறுப்பினர் கட்டணம், அடையாள அட்டை வழங்கப்படுவதில்லை. மதவெறிகொண்டவர்களை தேடிப்பிடித்து  கிளைக்கு அழைத்துச்சென்று அவர்களை மூளைச்சலவை செய்து  இணைத்துக் கொள்வதுதான் ஆர்.எஸ்.எஸின் நடைமுறை.

இந்த அமைப்பின் தலைவராக சித்பவன் பார்ப்பனர்கள் மட்டுமே இருந்து வருகின்றனர். காந்தியைக் கொன்ற நாதுராம் கேட்சேவும் சித்பவன் பார்ப்பனர் என்பதும், அவரும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் முக்கிய நபராக இருந்தவர் என்பதும் அவர் நாக்பூரில் கோல்வால்கர், சாவர்கர் போன்ற வர்களை அடிக்கடி சந்தித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட அமைப்பிற்கு - மாணவர்கள் கற்றுக் கொள்ளும் அளவிற்கு எந்த ஒரு நன்னெறி அல்லது எதிர்கால தொலைநோக்கு திட்டங்கள் எதுவுமே இல்லை. ராட்டிரசந்த் துகடோஜி மகாராஜ் பல்கலைக் கழகமானது பி.ஏ. இரண்டாம் ஆண்டு பாடப் புத்தகத்தில் தேசத்தை "கட்டமைப்பதில் ஆர்.எஸ்.எஸ். பங்கு" என்ற தலைப்பிலான பாடத்தை சேர்த்துள்ளது.

அதுவும் அந்தப் பகுதியில் இருந்த "பொதுவுடமை அமைப்புகளின் வளர்ச்சியும் எழுச்சியும்" என்ற பாடத்தை நீக்கிவிட்டு சேர்த்துள்ளது.  அப்பல்கலைக் கழகத்தின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆனால் நாக்பூர் பல்கலைக் கழகமோ வரலாற்றின் போக்கு களை மாணவர்கள் அறிந்து கொள்ளத்தான் இந்த பாடம் என்கிறது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த மகாராட்டிரா காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் கூறியுள்ளதாவது: "தேசத்தின் விடுதலைக்காக ஆர்.எஸ்.எஸ். என்ன பங்களிப்பு செய்தது? ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை திணிக்கும் முயற்சிதான் இது. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை மாணவர்கள் படிக்க வேண்டும் என விரும்புகிற அந்த பல்கலைக் கழகம் அதே ஆர்.எஸ்.எஸ். இயக்கம் 3 முறை ஏன் தடை செய்யப் பட்டது என்பதையும் மாணவர்களுக்கு கற்றுத் தருமா?" என வினவியுள்ளார்.

நாட்டை ஆர்.எஸ்.எஸ். என்ற வன்முறைக் குடையின் கீழ் கொண்டு வரத் துடிக்கிறார்கள் - எச்சரிக்கை!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...