Thursday, July 25, 2019

பாலியல் கொடுமைகள் களைய அமைக்கப்பட்ட அமைச்சர் குழு கலைக்கப்பட்டது ஏன்?

பணியிடங்களில் பெண்களுக்கு நேரும் பாலியல் தொந் தரவுகளை களையும் வகையில் சட்டக் கட்டமைப்பை உருவாக்குவதற்கான மாற்றங்களை ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட மத்திய அமைச்சர்களின் குழுவானது வெளியில் அறிவிக்கப்படாமலேயே கலைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவின் சந்திப்புகளில் எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து, தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் வினவப்பட்டபோதுதான் இது தெரியவந்துள்ளது.
இந்தக் குழுவின் செயல்பாடு தொடர்பாக எந்தவொரு விவரத்தையும் தெரிவிக்க முடியாது என்று அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி தகவல்களை தெரிவிப்பதானது. நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது என்றும் கூறப்பட்டுள்ளது.
முந்தைய மோடி அரசில் மத்திய வெளியுறவு இணையமைச்சராக இருந்த எம்.ஜே.அக்பர் மீது பல பெண்கள் பாலியல் முறைகேட்டுப் புகார்களை அளித்த நிலையில், இந்தக் குழு அமைப்பது பற்றிய அறிவிப்பு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் குழுவில் இடம் பெற்றிருந்தவர்கள், ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன் மற்றும் மேனகா காந்தி ஆகிய 4 மூத்த அமைச்சர்கள். இவர்கள் மிக முக்கியப் பொறுப்புகளை வைத்திருந்தவர்கள்.
மக்கள் தொகையில் சரி பகுதி இருக்கக் கூடிய பெண்கள் அன்றாடம் அனுபவிக்கும், அல்லல்களும், தாக்குதல்களும், வன்புணர்வுகளும் சொல்லி மாளாது.
பெண்கள் மீது நடத்தப்படும் தாக்குதலில் முதல் இடத்தில் பா.ஜ.க. ஆட்சி செய்யும் உத்தரப் பிரதேச மாநிலம் உள்ளது. இந்தத் தகவலை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியே நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற கூட்டத்தில் பேசிய ஸ்மிருதி இரானி - பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான போக்சோ சட்டம் - 2012இல் திருத்தம் கொண்டுவர மத்திய அமைச்சரவை, கடந்த ஜூலை 10ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. ஏற்கெனவே, நிர்பயா உள்ளிட்ட சட்டங்களும் பெண்கள் பாதுகாப்பிற்காக இருக்கின்றன. எனினும், இந்தியாவில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்களும், பாலியல் வல்லுறவுக் குற்றங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், மாநில வாரியாக 2014 முதல் 2019 வரை, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் வழக்குகள் குறித்த புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், இதில், உத்தரப்பிரதேசம், டில்லி, அரியானா, ராஜஸ்தான், பீகார் ஆகிய மாநிலங்களில்தான் பாலியல் குற்றங்கள் அதிகமாக நடைபெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 2014 முதல் 2019 வரை 6,906 பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் நடப்பு ஆண்டில் இதுவரையிலான காலத்தில் மட்டும் பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்குகள் 550 பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார். இதன்மூலம், பா.ஜ.க ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பற்ற சூழலில் வாழும் அவல நிலையில் உள்ளார்கள் என்பதை பா.ஜ.க அமைச்சரே ஒப்புக்கொண்டுள்ளார்.
முன்னதாக பெண்களின் பாதுகாப்பிற்காக கொண்டு வரப்பட்ட நிர்பயா நிதி ஒதுக்கீட்டிலிருந்து, வெறும் 20 சதவிகித அளவிலான தொகை மட்டுமே தற்போதுவரை செலவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அரசே தனது அறிக்கையில் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. பா.ஜ.க ஆட்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாகியுள்ளது என பெண்கள் அமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
2018-ஆம் ஆண்டு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் பெற்றது, இது குறித்து அய்.நா. மனித உரிமைகள் அமைப்பு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டதன் மூலம் இந்தியாவின் மானம் கப்பலேறி விட்டது!
உண்மைகள் இவ்வாறு இருக்க, பெண்களுக்கான பாலியல் கொடுமைகளைக் களைய அமைக்கப்பட்ட அமைச்சரவைக் குழு ஓசையின்றிக் கலைக்கப்பட்டது எந்த வகையில் நியாயம்? எல்லாம் மோடிக்குத்தான் வெளிச்சம்!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...