Friday, August 11, 2017

கலைஞரின் மூத்த பிள்ளையான ‘முரசொலி'யின் பவள விழா காட்சியரங்கம் திறப்பு விழா ஓர் இனத்தின் எழுச்சி - பகுத்தறிவின் வெற்றி-கொள்கையின் மாட்சி!



சென்னை, ஆக.10
முரசொலி ஏடு என்பது வெறும் ஓர் ஏடல்ல; அது பவள விழா காண்கிறது என்றால், இதற்குள் ஓர் இனத்தின் எழுச்சி - பகுத்தறிவின் வெற்றி - கொள்கையின் மாட்சி! - இதனையொட்டி உருவாக்கப்பட்டுள்ள காட்சி அரங் கம் நிரந்தரமாக்கப்படவேண்டும் - இளைஞர்கள் பார்க்க வேண்டும் - மனதில் பதிக்கவேண்டும் என்றார் ‘விடுதலை' ஆசிரியர் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.
சென்னை முரசொலி அலுவ லகத்தில், முரசொலியின் பவள விழாவினையொட்டி, இன்று (10.8.2017) ‘முரசொலி' காட்சி அரங்கத்தினை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில், இந்துக் குழுமத்தின் தலைவர் என்.ராம் திறந்து வைத்தார்.
அந்நிகழ்வில், செய்தியாளர்களிடம் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியதாவது:
நண்பர்களே, பெருமதிப்பிற்குரிய சிறப்புமிகுந்த கலைஞ ரின் மூத்த பிள்ளையான நம்முடைய பகுத்தறிவுச் செல்வம் திராவிடர் இன உணர்ச்சியினுடைய போர் முரசான முரசொலி யினுடைய  பவள விழா கண்காட்சி நிகழ்ச்சியை கருத்துக் காட்சியாக்கிய இந்நிகழ்ச்சியைத் திறந்து வைத்த இந்துக் குழுமத்தினுடைய தலைவர் பெருமதிப்பிற்குரிய இந்து என்.ராம் அவர்களே,
துண்டறிக்கையாகத் தொடங்கி...
ஒரு துண்டறிக்கையாக தொடங்கப் பெற்ற இந்த முரசொலி நாளேடு இன்றைக்கு வளர்ந்து எந்த அளவிற்கு அதனுடைய பவள விழாவில் ஓர் அற்புதமான வரலாற்று ஆவணத் தொகுப்பாக அதனை ஆக்கி, சுவைபட வருங் காலத் தலைமுறையினருக்கும், இன்றைய இளைய தலை முறையினருக்கும் தெரிவிக்கலாம் என்ற ஆற்றலோடு செய்திருக்கின்ற நம்முடைய அருமை திராவிட முன்னேற்றக் கழக செயல் தலைவர் அன்பு சகோதரர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களே, ஊடக நண்பர்களே, இயக்கத் தோழர்களே, முரசொலியின் வாசகப் பெருமக்களே, வரலாற்றில் ஒரு பொன் னேடு! முரசொலியினுடைய பவள விழா கொண்டாடப்படும் இன்றைய நாள் திராவிடர் இயக்கத்தினுடைய எழுச்சி நாள்!
இது ஒரு நாளேட்டின் பவள விழா என்பதல்ல - ஓர் இனத்தினுடைய வீழ்ச்சியிலிருந்து எழுச்சி எப்படியெல்லாம் துவங்க முடியும் - அதற்கு எப்படிப்பட்ட போர்க் கருவிகள் தேவை என்பதில் - அது சந்தித்த வேதனைகள் - கலைஞர் மொழியில் சொல்லவேண்டுமானால் - அது சந்தித்த வேத னைகள் - அது சந்தித்த சோதனைகள் - பிறகு அது சாதித்த சாதனைகள் அத்தனையும், சுருக்கமாக, விளக்கமாக, மிக அருமையாக இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. கண்காட்சி என்பதைவிட கருத்துக்காட்சி இது!
இதற்கு உழைத்த தோழர்கள் அத்துணைப் பேருக்கும் நம் நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள் கிறோம். இந்த முரசொலிக்கு ஒரு மிகப்பெரிய பாரம்பரியம் உண்டு. அதனுடைய நிறுவன ஆசிரியராக நம்முடைய முத்தமிழ் அறிஞர் கலைஞர், அதற்குப் பிறகு பெருமதிப்பிற் குரிய முரசொலி மாறன், இன்றைக்கும் அதைத் தோளில் சுமந்து கொண்டு சிறப்பாக, சிறைச்சாலைக்கும் சென்று சட்டசபையில், கூண்டிலே ஏற்றப்பட்ட நம்முடைய முரசொலி செல்வம்,
இவர்கள் எல்லோரையும் ஒருங்கிணைத்து, மிகச் சிறப் பாக தமிழ் இனத்தினுடைய தோள்கள்மீது ஏறி நிற்கக்கூடிய ஆற்றலை வழங்கியிருக்கக்கூடிய நம்முடைய தளபதி ஸ்டா லின் அவர்கள்  - இவர்கள் அத்துணைப் பேரும் இணைந்து ஒரு பெரிய வரலாற்று ஆவணத்தைக் காட்டியிருக்கிறார்கள்.
எனவே, இது ஒரு நாளேட்டினுடைய வரலாறு மட்டுமல்ல - ஓர் இனத்தின் எழுச்சி - பகுத்தறிவின் வெற்றி - கொள் கையின் மாட்சி! எனவே, அத்துணைப் பேரும் காணுவதற்கு  இந்தக் கருத்துக்காட்சியை நிரந்தரமாக்க வேண்டும் என்பது எங்களுடைய வேண்டுகோள். ஒவ்வொருவரும் இந்த வரலாற்று நிகழ்வினைப் பார்க்கவேண்டும்.
எனவேதான், குறிப்பாக, நெருக்கடி காலத்தில், இந்தப் பத்திரிகை சந்தித்த எதிர்ப்புகள், வேதனைகள் - அதேபோல, பிற்காலத்தில் இது எத்தனையோ சங்கடங்களை சந்தித்திருக் கிறது. பதவி மட்டுமே அரசியல் அல்ல. அதேநேரத்தில், பல் வேறு தியாகங்களுடைய தொகுப்பும் - நடந்து வந்த பாதை கள் கரடு முரடான பாதைகளானாலும், லட்சியப் பாதைகள் என்றைக்கும் வெற்றிப் பாதையாக அமையும் என்ற நம்பிக் கையை ஊட்டக்கூடிய இந்தக் கருத்துக்காட்சி தொடர்ந்து பல லட்சக்கணக்கான மக்களால், குறிப்பாக இளைய தலைமுறையினரால் பாதுகாக்கப்பட்டு பரப்பப்பட வேண் டும் - பார்க்கப்படவேண்டும் - மனதிலே பதிக்கப்பட வேண்டும்.
நன்றி,வணக்கம்!
வாழ்க பெரியார்! வாழ்க கலைஞர்! வாழ்க முரசொலி! வளர்க திராவிடத்தின் எழுச்சி!
- இவ்வாறு திராவிடர் கழகத்தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...