கேரளாவில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை என்று கூறி அம்மாநில அரசைக் கலைக்கும் வேலையில் மோடி அரசு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
கேரளாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி
நடந்துகொண்டிருக்கிறது. அதில் பார்ப்பனர்களால் தீண்டத்தகாத வகுப்பு என்று
பிரித்துவைக்கப்பட்ட ஈழவ சமூகத்தைச்சேர்ந்த பினராயி விஜயன் முதல்வராக
இருக்கிறார். கேரளா மக்கள் பாஜகவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
ஆனால் சட்டம் - ஒழுங்கைக் காரணம் காட்டி ஆட்சியைக் கலைத்து மறைமுகமாக பாஜக
ஆட்சிசெய்வதற்கான செயல்திட்டங்களை அங்கு செய்துவருகிறது.
மாநிலத்தில் இளைஞர்களைக் குறிவைத்து
மூளைச்சலவை செய்து அவர்களுக்கு மதவெறி ஊட்டும் வேலையை பாஜக - ஆர்.எஸ்.எஸ்.,
அதன் இதர அமைப்புகள் முனைப்போடு செயல்பட்டு வருகின்றன. இதனால் அங்கு
கம்யூனிஸ்ட் தோழர்களுக்கும், மதவெறி அமைப்புகளுக்கும் இடையே அவ்வப்போது
கடும் மோதல் நிகழ்கிறது. இந்த மோதல் சமயங்களில் கொலையில் முடிகிறது.
இருதரப்பிலும் பொருட்சேதமும், உயிர்ச் சேதமும் சர்வசாதாரணமாக
நிகழ்ந்துவருகின்றன.
இந்நிலையில் கேரள மாநிலம் கண்ணூரில்
ஆர்.எஸ்.எஸ். தொண்டர் ராஜேஷ் என்பவர் கடந்த வாரம் அடையாளம் தெரியாத
நபர்களால் கொலை செய்யப்பட்டார். இவர் கேரளாவில் படுகொலையான சி.பி.எம்.
பிரமுகர் தன்ராஜ் என்பவரின் கொலை வழக்கின் குற்றவாளிகளில் ஒருவர் என்று
கூறப்படுகிறது. இது கேரளாவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களுக்கு எதிரான இந்த வன்முறை மூலம் சட்டம் -
ஒழுங்கு கெட்டுவிட்டதாக ஒரு மாயையை உருவாக்கி கேரள ஆட்சி மீது கைவைக்க
அமித்ஷா - மோடி கூட்டணி முயற்சி செய்து கொண்டிருப்பதாக உள்துறை
வட்டாரத்தில் இருந்து தகவல்கள் கசிந்து வருகின்றன.
உள்துறை அறிக்கையின்படி கேரளாவில்
நடைபெறும் வன்முறைகளை இனியும் பொறுத்துக் கொள்ளமுடியாது என்று கூறி
சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப் போவதாக மிரட்டுகிறது அந்த அறிக்கை. அதாவது
கேரளாவில் இப்படியான படுகொலைகளால் அங்கு சட்டம் - ஒழுங்கு கெட்டிருப்பதாக
ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி அரசைக் கலைப்பதே மத்திய அரசின் திட்டம்
என்கிறார்கள்.
இதற்கு முன்பே பல சம்பவங்களில் இந்தக்
குற்றச்சாட்டை பாஜக கேரள அரசின் மீது முன்வைத்தது என்றாலும் இந்த முறை அதை
ஒரு திட்டத்துடன் தீவிரமாக்கியுள்ளது. கொலை செய்யப்பட்ட. ராஜேஷின்
பெற்றோருக்கு ஆறுதல் சொல்ல கேரளா வந்த மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, "கேரள
மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு முறையாகப் பராமரிக்கப்படவில்லை" என்று குறை
கூறிச் சென்றுள்ளார்!
கேரளாவில் இடதுசாரி முன்னணி எப்போதெல்லாம்
ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் அரசியல் வன்முறைச் சம்பவங்கள்
அதிகரித்துவிடுவதாகவும் நேரடியாக கம்யூனிஸ்ட் கட்சியையும் அரசையும்
வசைபாடியுள்ளார். சமீபத்தில் அமித்ஷா கேரள சுற்றுப்பயணம் செய்து
டில்லிக்குச் சென்ற பிறகு அங்கு வன்முறைகள் அதிகரித்துள்ளது
குறிப்பிடத்தக்கது, மேலும் டில்லி தலைமையிலிருந்தும் ஒருங்கிணைப்பாளர்
ஒருவரை கேரளாவில் நடக்கும் வன்முறைகளைக் கணக்கிடுமாறும் நியமனம்
செய்துள்ளார் அமித்ஷா.
இந்த நிலையில் சமீபத்தில் நடந்த
வன்முறைகள் அடங்கிய பட்டியல் ஒன்றை தயாரித்து அதை நேரடியாக
குடியரசுத்தலைவர் பார்வைக்குக் கொண்டு செல்ல மோடி தயாராகிவருகிறார். இதன்
மூலம் கேரள அரசுக்கு சட்டச் சிக்கல் எழலாம் என்று கருதப்படுகிறது.
மேலும் எப்போதுமில்லாத அளவு கேரள
இளைஞர்கள் அய்.எஸ். பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக வட இந்திய பாஜக
ஆதரவு ஊடகங்கள் பெரும் அளவில் திட்டமிட்டுப் பிரச்சாரம் செய்து வருகின்றன,
உண்மையில் ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் இருந்து தான்
பாஜகவினரே பயங்கரவாதிகளுக்கு உதவியதாக தக்க சான்றுகளோடு
கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தீவிரவாதிகளுக்கு உதவுவது, வன்முறைகளை
கட்டவிழ்ப்பது போன்ற நிகழ்வுகளை பெரிதாக்கி அதன் மூலம் சட்டம் - ஒழுங்குப்
பிரச்சினை மாநில அரசின் கைமீறிச் சென்றுவிட்டது என்று கூறி ஆட்சியைக்
கலைக்கும் வேலையில் மோடி அரசு முனைப்பாக இருந்துவருகிறது.
பொதுவாக ஆட்சியைக் கலைப்பதில்
சட்டச்சிக்கல் எதுவும் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே தனது கட்சியைச்
சேர்ந்தவர்களை குடியரசுத் தலைவராகவும், துணைக்குடியரசுத்தலைவராகவும்
பதவியில் அமரவைத்துள்ளனர். ஆகவே தமிழகத்திற்கு முன்பாகவே கேரளாவில் ஒரு
ஜனநாயகப் படுகொலை செய்ய காவிக்கூட்டம் கத்தி தீட்டுகிறது.
மோடியின் ஏதேச்சதிகார ஆட்சியை விரைவில்
முடிவுக்குக் கொண்டுவர அனைத்து ஜனநாயக சக்திகளும், மதச் சார்பின்மை, சமூக
நீதி சக்திகளும் ஒன்று திரண்டு தோள் உயர்த்த வேண்டிய காலகட்டம் - இது.
No comments:
Post a Comment