Thursday, June 22, 2017

கலவரத்தைத் தூண்டிவிடும் நிறைவேற்றாத உறுதிமொழிகள்

- பவன் கே.வர்மா -
(மத்திய பிரதேச மாநில விவசாயிகளிடையே வளர்ந்து வரும் ஆபத்தான, ஆதரவற்ற நிலையை அறிந்து கொள்ளாதவராக அம்மாநில முதல்வர் சவுகான் ஏன் இருக்கிறார்? மிகப் பெரிய அளவில் உருவாகி வரும் இந்த நெருக்கடியை முதல்வரும், அவரது நிர்வாகமும் அறிந்து கொள்வதற்காக, ஆறு விவசாயிகள் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட வேண்டுமா?)
மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் என்னவோ நல்லவர்தான். வியாபம் ஊழலின் களங்கம் அவர் மீது ஆழப் படிந்திருந்த போதிலும், ஒரு நல்ல நிர்வாகி அவர் என்றே கருதப்பட்டார். நர்மதை நதிக் கரையின் மீது நடந்து சென்று, அங்கிருக்கும் பல கோயில்களிலும் வழிபாடு நடத்துவதில் அவர் கணிசமான நேரத்தை செலவிடுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அவரது ஆட்சியில் ஆறு விவசாயிகள் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதற்காக உண்மையிலேயே அவர் வேதனையும், கவலையும் பட்டிருக்கவும் கூடும். அமைதியும், சகஜ நிலையும் திரும்புவதற்காக அவர் மேற்கொண்ட ஒரு நாள் பட்டினிப் போர் ஒரு பெருந்தன்மையான செயல் என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். 144 ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டு இருந்தபடியால் அது பயனற்றதாகவே போய்விட்டது.
ஆனால், ஓர் அடிப்படையான கேள்விக்கு பதில் அளிக்கப்படாமலேயே உள்ளது. மத்திய பிரதேச விவசாயிகளிடையே வளர்ந்து வரும் ஆபத்தான, ஆதரவற்ற நிலையை அவர் ஏன் அறியாமல் இருந்தார்? மிகப் பெரிய அளவில் உருவாகி வரும் இந்த நெருக்கடியை முதல்வரும், அவரது நிர்வாகமும் அறிந்து கொள்வதற்காக, ஆறு விவசாயிகள் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட வேண்டுமா?
விவசாயிகளின் நலன்களை புறக்கணிப்பதே பா.ஜ.க.வின் கொள்கை
உண்மை என்னவென்றால், விவசாயத்துக்கும், விவசாயிகளின் தேவைகளுக்கும் சிவராஜ் சவுகான் போதிய கவனம் செலுத்தவில்லை என்பதுதான். இது முற்றிலுமாக, பா.ஜ.க.வின் தலைமையிடமிருந்து அவருக்குக் கிடைத்த அறிவுரைகள், சமிக்ஞைகளின் அடிப்படையில் பின்பற்றப்பட்ட ஒரு கொள்கைதான். புல்லட் ரயில்கள் மற்றும் ஸ்மார்ட் நகரங்களைப் பற்றி ஆடம்பரமான மிகப் பெரிய கனவைக் கண்டு கொண்டிருக்கும் பா.ஜ.கட்சியைப் பொருத்தவரை,  இந்திய விவசாயிகள் அனுபவித்து வரும் கொடுந்துன்பங்கள் எந்த வித முக்கியத்துவமும் அற்றதாகவே விளங்குவது ஆகும். அப்படி இல்லாமல் இருந்திருந்தால், விவசாய உற்பத்திப் பொருள்களுக்கு உற்பத்தி செலவை விட 50 சதவிகித அளவு அதிக வருவாய் அளிக்கும் குறைந்த பட்ச விலை நிர்ணயம் செய்வோம் என்று  வாய்மொழி வாயிலாகவும், பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில் எழுத்து மூலமாகவும், பொதுமக்கள் அனைவரும் அறிய அளித்த உறுதிமொழியை பிரதமர் மோடி நிறைவேற்றாமல் இருந்திருக்க மாட்டார்.
தேர்தல்களின் போது மோடி அளித்த எண்ணற்ற வாக்குறுதிகளில், விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட இந்த உறுதிமொழிதான் மிகமிக முக்கியமானது என்று கருதப்படுகிறது. தொடர்ச்சியாக இரண்டு ஆண்டு காலம் வறட்சி நிலவிய நிலையில், தங்களது விவசாய உற்பத்திப் பொருள்களுக்கு நியாயமான விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையையும்,  புதிய பா.ஜ.க. மத்திய அரசு பொதுவாக விவசாயிகளின் தேவைகளைப் பற்றி அதிக கவலை எடுத்துக் கொள்ளும் என்ற நம்பிக்கையையும் அந்த உறுதி மொழி விவசாயிகளுக்கு அளித்தது. ஆனால், அவ்வாறு நடைபெறவில்லை. வியக்கத்தக்க சிடுமூஞ்சித் தனத்துடன் விவசாயிகளின் இந்த நம்பிக்கையைக் குலைத்த பா.ஜ.க. அரசு, விவசாய உற்பத்திப் பொருள்களுக்கு ஆதரவு விலை நிர்ணயம் செய்யப்போவதில்லை என்று 2015  பிப்ரவரி மாதத்தில், உச்சநீதிமன்றத்துக்கு தெரிவித்தது.
பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநில முதல்வரான சிவராஜ் சவுகானுக்கு இச்செய்தி தெளிவாகவும், பலமாகவும் கேட்டது. 2014 மக்களவைத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் பா.ஜ.க. வெற்றி பெற்று இருக்கும் நிலையில்,  விவசாயிகளின் நலன்கள் புறந்தள்ளப்படலாம் என்பதை இப்போது அவர் நன்றாகவே அறிந்து கொண்டிருக்க வேண்டும். இதன் விளைவாக, மத்திய பிரதேசத்தில் விவசாயப் பொருள்களின் உற்பத்தி 20 சதவிகித அளவு உயர்ந்து இருந்த போதிலும், அவற்றைக் கொள்முதல் செய்யவோ அல்லது அவற்றிற்கு ஒரு நியாயமான விலை கிடைக்கச் செய்யவோ தவறிவிட்டதால், வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு போன்ற தங்களது விவசாய உற்பத்திப் பொருள்களை மிகமிகக் குறைந்த விலைக்கு விற்கவேண்டிய கட்டாயத்திற்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர். தனது  கிரிஷி கர்மான் (விவசாய உற்பத்திக்கான) விருதுகளைப் பற்றி பெருமைப்பட்டுக் கொள்ளும் சவுகான், நவம்பர் 2016- க்கும் பிப்ரவரி 2017-க்கும் இடையில் தனது மாநிலத்தில் 287 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர் என்பதைப் பற்றி அதிக கவலை கொண்டவராக இருக்கவில்லை.
இந்த அலட்சியம், பா.ஜ.க. தலைமையிலான தே.ஜ.கூ. அரசின் அணுகுமுறையை பிரதிபலிப்பதாகவே இருக்கிறது. மோடி அரசு ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை நடைமுறைப்படுத்தும் முடிவை அறிவித்த பிறகும், 2014, 2015 ஆம் ஆண்டுகளில் விவசாயிகளின் தற்கொலை 42 சதவிகிதம் அதிகரித்துள்ளது.  2015 இல் மத்திய பிரதேசத்தில் மட்டுமே 581 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். தான் எப்போதுமே விவசாயிகளின் பரிதவிப்புக்காக கவலைப்படுபவன் என்று சவுகான் பிரபு   இப்போது கூறுவது உண்மையாக இருந்தால், விவாசய உற்பத்திப் பொருள்களுக்கான குறைந்த அளவு ஆதரவு விலையை நிர்ணயிப்போம் என்று அளித்த வாக்குறுதியை பா.ஜ.க. நிறைவேற்றத் தவறிய அக்கணத்திலேயே பட்டினிப் போராட்டம் மேற்கொண்டு இருந்திருக்க வேண்டும். அவ்வாறு செய்திருந்தால், பா.ஜ.க.வில் உள்ள அவரது எஜமானர் களை அது மகிழ்ச்சி அடையச் செய்திருக்காது. என்றாலும் அது ஒரு துணிவான செயலாக இருந் திருக்கும். விவசாயிகளுக்கு மாநில அரசுகள் எந்த போனசும் அளிக்கக்கூடாது என்றும், அவ்வாறு அளித்தால், அதற்கான முழு நிதிச் சுமையையும் மாநில அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும், அதிகமாகக் கொள்முதல் செய்யப்பட்ட விவசாய உற்பத்திப் பொருள்களைப் பாதுகாத்து வைத்துக்கொள்ள இந்திய உணவு கார்ப்பரேஷனுக்கு சொந்தமான கிடங்குகளில் இடம் அளிக்கப்படமாட்டாது என்றும் மத்திய அரசு அறிவித்தபோது, ஒரு சில மணி நேரமாவது உண்ணாமல் இருப்பதைப் பற்றி அவர் பரிசீலித்திருக்க வேண்டும்.
விவசாயக் கடன்களின் ஒரு பகுதியைத் தள்ளுபடி செய்ததும்,  விவசாயிகள் விவசாயக் கடன்களுக்காக செலுத்தவேண்டிய வட்டிக்கான மான்யத்தை உயர்த்தியதும், விவசாயிகளுக்கு காட்டப்பட்ட மிகமிகச் சிறிய அளவிலானதும்,  காலம் கடந்தும் அளிக்கப்பட்ட நிவாரணமாகும். கடன் தள்ளுபடி ஒரு குறுகிய கால உதவியாக இருக்கக்கூடும் என் றாலும், அவை வெறும் வலி நிவாரணிகளே ஆகும். அவர்களுக்குத் தேவையானதெல்லாம்,  கொள்கை அளவில் மேற்கொள்ளப்படும்  பலமான நோய் எதிர்ப்பு நடவடிக்கைகள்தான்.
இத்தகைய நடவடிக்கைகளில், விவசாய முதலீடு களில் கூடுதலான உணவுப் பொருள் பதனக் கிடங்குகள், பாதுகாத்து வைக்கும் கிடங்குகள், போக்குவரத்து வசதிகள், விதைகள் பூச்சி மருந்துகள், நீர்ப்பாசன வசதிகள், சந்தை உத்திகள், விவசாயிகளைச் சுரண்டும் தரகர்களை ஒழிப்பது போன்றவற்றுக்கான   ஒரு பெரிய அளவிலான உயர்வும் அடங்கியதாக இருக்க வேண்டும். மிக ஆழ்ந்த கவலை அளிக்கும் வேறு சில கேள்விகளும் உள்ளன. இந்தியாவில் துவரம்பருப்பு உற்பத்தி கணிசமாக உயர்ந்திருந்த காலத்திலும்கூட, மியான்மா, தான்சானியா, மொசாம் பிக், மாலாவி போன்ற நாடுகளிலிருந்து பருப்பு வகைகள் ஏன் இறக்குமதி செய்யப்பட்டன? இதன் விளைவாக, உள்நாட்டில் பருப்பின் விலை 2015 டிசம்பரில் குவிண்டாலுக்கு 11000  ரூபாயாக இருந்தது, 2016 டிசம்பரில் 4000-க்கும் கீழாகக் குறைந்து போனது. இது உண்மையானதாக இருந்தால்,  அதற்கான பொறுப்பு யார் என்பதை நிர்ணயம் செய்து, இதனால் யாரெல்லாம் பயனடைந்தார்கள் என்பதைப் பற்றிய விசாரணை ஒன்று மேற்கொள்ளப்படவேண்டும்.
இறந்துபோன விவசாயிகளின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிக்க எதிர்கட்சித் தலைவர்கள் விரும்பியபோது, பா.ஜ. கட்சியும், அதன் ஆதரவு ஊடகத்தினரும், அதனை அரசியல் சுற்றுலா என்று கூறி இழிவு படுத்தினர். பாதுகாப்பற்ற விவசாயிகள் காவல்துறையினரால்சுட்டுக்கொல்லப்பட்டது எவ்வாறு, ஏன் நிகழ்ந்தது என்பதைக் கண்டறிய   மண்டாசாருக்கு எதிர்கட்சித் தலைவர்கள் செல்ல முயன்றபோது, தடுத்து நிறுத்தப்பட்டது மட்டுமன்றி அவர்கள் தேசவிரோதிகள் என்றும் குற்றம் சாட்டப்பட்டனர்.
2008 ஆம் ஆண்டில் மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் மேற்கொண்டிருந்தபோது, பாதுகாப்பு அமைப்புகளின் ஆலோசனையையும் புறந்தள்ளி விட்டு,  குஜராத் முதல்வராக அப்போது இருந்த மோடி மும்பைக்கு ஓடிவந்து மன்மோகன் சிங் அரசு எவ்வளவு திறமையற்றது என்று பேசியதை அவர்கள் சவுகரியமாக மறந்து போய்விட்டனர். அது ஒன்றும் அரசியல் சுற்றுலாவாகக் கருதப்படவில்லை. அதற்கு மாறாக அது தேசபக்திச் செயலாகவே கருதப்பட்டது.  இதுதான் முன்னுக்குப் பின் முரணாகப் பேசும் இரட்டை நாக்குப் பேச்சா?
விவசாயிகளின் துன்பங்களின் தீவிரத்தை கவ னத்தில் எடுத்துக் கொண்டு, அதனைப் போக்குவதற்கு இந்தியாவுக்குத் தேவையானது, ஒரு புதிய விவ சாய ஆதரவுக் கொள்கையே ஆகும். ஆனால் விவசாயிகளுக்கு இதுவரை கிடைத்து வருவதெல்லாம் விவசாயிகளுக்கான ஆதரவு மறுப்பும், புறக்கணிப்பும் மட்டுமே.
நன்றி: ‘தி டெக்கான் கிரானிகிள்’, 18.06.207
தமிழில்: த.க.பாலகிருட்டிணன்.
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...