Friday, June 2, 2017

மாட்டிறைச்சி தடை அறிவிக்கை சட்டப்படி சரியானது தானா? இது ஒரு பண்பாட்டுப் படையெடுப்பு கூட்டாட்சித் தத்துவத்தின் மீதான தாக்குதல் தொடுப்பு.

மாட்டிறைச்சி தடை அறிவிக்கை சட்டப்படி சரியானது தானா?
இது ஒரு பண்பாட்டுப் படையெடுப்பு
கூட்டாட்சித் தத்துவத்தின் மீதான தாக்குதல் தொடுப்பு
சென்னை சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் சங்கநாதம்
சென்னை, ஜூன் 1- மிருகவதைத் தடுப்பு என்ற பெயரால் மத்திய பிஜேபி அரசு வெளியிட்டுள்ள அறிவிக்கை கூட்டாட்சித் தத்துவத்தின் மீதான தாக்குதல் என்றும், இது ஒரு பண்பாட்டுப் படையெடுப்பு என்றும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் குறிப்பிட்டார்.
30.5.2017 அன்று மாலை சென்னை பெரியார் திடலிலுள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் ‘‘மாட்டுக்கறி உணவை தடை செய்யும் மத்திய பா.ஜ.க. மதவாத அரசைக் கண்டித்து’’ மாபெரும் சிறப்புப் பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார். அவரது உரை வருமாறு:
மிகுந்த எழுச்சியோடும், எதிர்பார்ப்போடும் எத்தகைய முயற்சிகள் வந்தாலும் இந்தத் தமிழ் மண் எப்போதும் பெரியாரின் மண்ணாகவே, புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களுடைய கொள்கை மண்ணாகவே சிறப்பாகத் தொடரும். 
எத்தனை சூழ்ச்சிகளை நீங்கள் கொண்டு வந்தாலும், அதனை முறியடிப் பதற்கு, தீயை அணைப்பதற்கு எப்படி வேறுபாடு பாராமல் எல்லோரும் ஒன்று சேர்வார்களோ - அதுபோல, இந்த மதவெறியைத் தீயை - பார்ப்பனத் தீயை தெளிவாக அணைப் பதற்கு நாங்கள் தயாராகிவிட்டோம் என்று காட்டுவதற்காக இந்த மேடையில், அரசியல் கண்ணோட்டம் இல்லாமல், முழுக்க முழுக்க ஒரு இலட்சியக் கண்ணோட்டத்தோடு நீண்ட காலமாக நாம் எதைப் பாதுகாக்கவேண்டும் என்று நினைக்கிறோமோ, அதனை அழிக்கவேண்டும் என்ற ஒரு கூட்டம் - வெளிப்படையாகவே தங்கள் கைகளில் ஆட்சி சிக்கிவிட்டது என்கிற ஒரே காரணத்திற்காக - இந்த வாய்ப் பைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்ற நிலையில், பல்வேறு நிலைகளில், அவ்வப்பொழுது புற்றிலிருந்து பாம்பு வெளியில் வருவது - சீறுவது - அடி கொடுத்தவுடன், மறுபடியும் புற்றுக் குள் போய் நுழைந்து கொள்வது என்பது போன்ற பல வகை யான நிகழ்வுகள் கடந்த மூன்றாண்டுகளாக அவ்வப்பொழுது எட்டி எட்டிப் பார்த்து உள்ளே போகிறது.
தமிழ்நாட்டில் இருக்கின்ற ஒரு ஆட்சியை நாங்கள் குத்தகைக்கு எடுத்துவிட்டோம் என்ற ஒரு ஆணவத்தினாலே  நீங்கள் வெற்றி பெற்றுவிடலாம் என்று நினைத்தால், நடக்காது என்று சொல்லுவதற்குத்தான் எச்சரிக்கை மணி அடிக்கின்ற கூட்டம் இந்தக் கூட்டம்.
அப்படிப்பட்ட இந்தக் கூட்டத்திற்கு வரவேற்புரையாற்றிய கழகத் துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே, மேனாள் சட்டப்பேரவை உறுப்பினரும், காங் கிரஸ் பேரியக்கத்தைச் சார்ந்தவருமான பகுத்தறிவாளர் தோழர் பலராமன் அவர்களே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பாக இங்கு சிறப்பாக கருத்துகளை எடுத்து வைத்த மேனாள் சட்டமன்ற உறுப்பினர் அருமைத் தோழர் பீமராவ் அவர்களே, சிறப்பான வகையில் கருத்துகளை புதிய கோணத் தில் எடுத்து வைத்து, ஆதாரப்பூர்வமாக குறிப்பிட்ட த.மு.மு.க. வின் நிறுவனத் தலைவர்களில் ஒருவரான பேராசிரியர் ஜவா ஹிருல்லா அவர்களே, திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினரும், செய்தித் தொடர்பாளருமான சீரிய உணர்வாளர் அன்பு சகோதரர் தோழர் டி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களே,
திராவிடர் கழகமும் - விடுதலை சிறுத்தைகளும் நாணயத்தின் இரண்டு பக்கங்களாக...
எப்பொழுதும் நம்மோடு இருந்து, என்றைக்கும் தந்தை பெரியாரும், பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கரும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்பது எப்படி உண் மையோ - அதேபோலத்தான் திராவிடர் கழகமும் - விடுதலை சிறுத்தைகளும் எப்பொழுதும் ஒன்றாக, நாணயத்தின் இரண்டு பக்கங்களாக இருப்போம் என்பதை எந்த இடத்திலும் கூறத் தயங்காத எனது பாசத்திற்குரிய அன்பு சகோதரர் எழுச்சித் தமிழர் என்று எல்லோரும் பெருமைக்கொள்ளக் கூடிய அளவிற்கு, எப்பொழுதும் எழுச்சி குறையாமல், எழுச்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்ற எழுச்சித் தமிழர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவன தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களே,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், என்றைக்கும் தன் கொள்கை முழக்கத்திலிருந்து கொஞ்சமும் பின்வாங்காதவருமாக இருக்கக்கூடிய அன்பிற்குரிய அரு மைத் தோழர் தா.பாண்டியன் அவர்களே,
வெள்ளம்போல் திரண்டிருக்கக்கூடிய போராளிகளாக மாறக்கூடிய எனது அருமைத் தோழர்களே, தோழியர்களே, நண்பர்களே, தாய்மார்களே, செய்தியாளர்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் பிரச்சினை வெறும் மாட்டுக் கறிக்காக அல்ல - அது ஆழமான உள்நோக்கம் கொண்டது
இந்தக் கூட்டத்தில் தொடக்கத்திலிருந்து ஒரு சிறப்பு - நாம் பெருமையடையவேண்டிய சிறப்பு என்னவென்றால், ஒரு வகுப்பறை - அரசியல் அறிவை, கல்வியை பல கோணத்தில் சொல்லக்கூடிய ஆசிரியர்கள் பலரும் வந்து - இங்கே சொல்வதைப்போல, ஒருவர் சொன்ன கருத்தை இன்னொரு வர் சொல்ல முடியாத அளவிற்கு, இந்தப் பிரச்சினை வெறும் மாட்டுக் கறிக்காக அல்ல - அது ஆழமான உள்நோக்கம் கொண்டது - இந்துத்துவாவை உள்நோக்கம் கொண்டது - பார்ப்பனியத்தை புதுப்பிக்கின்ற உள்நோக்கம் கொண்டது என்பதை - அதேபோல, முதலாளித்துவத்தின் இன்னொரு பாகமாக இருக்கக்கூடிய கார்ப்பரேட் ஆதிக்கத்தினுடைய - முதலாளித் தத்துவத்தினுடைய சக்தியை இன்னொரு பக்கத்தில் புகுத்துவது என்று - என்னென்ன கோணத்தில் அதனை ஆய்வு செய்ய முடியுமோ அத்தனைக் கோணத் திலும் இங்கே சொல்லியிருக்கிறார்கள்.
ஒரு கோடி பேருக்கு வேலை கொடுப்பது என்னாயிற்று?
கூடுதலாக, நம்முடைய சகோதரர் திருமா அவர்கள் இன்னொன்றை சொன்னார்கள். மூன்றாண்டுகளில் எப்படி யெல்லாம் மிகப்பெரிய தோல்விகளைக் கண்டிருக்கிறோம் - நாம் அதனை லாவகமாக சமாளித்துவிட்டோம் -ஊடகங்கள் நாங்கள் வெற்றி பெற்றதாகவே அவர்கள் பரப்பிக் கொண்டி ருக்கிறார்கள். காரணம், அவர்களுடைய முதலாளிகள் - கார்ப்பரேட் முதலாளிகள் - பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் வைத்திருக்கிறார்கள் என்பது ஒருபக்கத்தில் இருந்தாலும், அதனை விவாதிக்கக்கூடாது என்பதற்காகத்தான் - மாட்டுக் கறி தடை என்கிற ஒரு செய்தியை உள்ளே விட்டால், எல்லோ ரும் அதைப்பற்றியே பேசிக் கொண்டிருப்பார்கள். ஒரு கோடி பேருக்கு வேலை கொடுப்பது என்னாயிற்று? என்பதைப்பற்றி எல்லோரும் மறந்துவிடுவார்கள் என்ற திசை திருப்பலும் இருக்கிறது என்பதை மிக அழகாக எடுத்துச் சொல்லியிருக் கிறார்.
அவர்கள் சொன்ன கருத்தைத் திரும்பவும் சொல்ல வேண்டிய அவசியமில்லை. எல்லாவற்றையும் ஒருங்கி ணைத்து, நீங்கள் ஒவ்வொருவரும் இந்தச் செய்திகளை திண்ணைப் பிரச்சாரம்போல, தெருப் பிரச்சாரம்போல கொண்டு செல்லுங்கள்.
முதுகெலும்பற்று, குத்தகைக்குப் போய்விட்ட தமிழக அரசு
ஏனென்றால், தமிழ்நாட்டில், நம்மைத் தவிர வேறு யாரும் இதனைச் செய்ய முடியாது. நாம் வெட்கப்படவேண்டிய அளவில், ஒரு திராவிட இயக்கத்திலிருந்த வந்த ஒரு அரசு என்பது இன்றைக்கு முழுக்க முழுக்க முதுகெலும்பற்று, குத்தகைக்குப் போய்விட்ட மோடி அரசினுடைய சாதனை களை இவர்கள் விளம்பரப்படுத்துகின்ற வெட்கக்கேடு தமிழ் நாட்டிலே தலைகுனிவை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது.
நாம் மட்டுமல்ல, சில ஏடுகளே அதனைச் சொல்லக்கூடிய அளவிற்கு ஆக்கியிருக்கிறார்கள். விளக்கம் தேவையில்லை. இதோ பாருங்கள், அவர்களுக்கேக்கூட பொறுக்க முடியாத அளவிற்குப் போயிருக்கிறது.
இந்த வாரம் வெளிவந்த ‘கல்கி’ அட்டைப் படத்தைப் பாருங்கள் - இதோ இரண்டு பொம்மைகள் - இந்த பொம்மை களால், மாட்டுக்கறி என்ன? ஆட்டுக்கறி என்ன? அவர்களுக் குத் தங்களுடைய பதவி வெறி மிக முக்கியமாகக் காப்பாற்ற ப்படவேண்டும் என்பதற்காக - தமிழ்நாட்டை அடகு வைப்பதற்குத் தயாராகி விட்ட நிலையில்,
எது நம்மை இணைக்கிறது - எது தமிழ்நாட்டைக் காப்பாற்றப்போகிறது
மக்களைத் திரட்டவேண்டியதுதான் நமது கடமை. மக்கள்தான் தமிழ்நாட்டைக் காப்பாற்றவேண்டிய பொறுப்பில் இருக்கிறார்கள். நமக்குள் இந்த முற்போக்குச் சிந்தனை உள்ளவர்கள் மத்தியில், கட்டப்படவேண்டியது ஒற்றுமையே தவிர - எது நம்மைப் பிரிக்கிறது என்பதைப்பற்றி நாம் கவலைப்படவேண்டிய நேரமில்லை இது. எது நம்மை இணைக்கிறது - எது தமிழ்நாட்டைக் காப்பாற்றப்போகிறது - தமிழ்நாட்டை மட்டுமல்ல - இந்தியாவைவே காப்பாற்றப் போகிறது என்கிற உணர்விற்கு நாம் ஆளாகவேண்டும்.
ஒரு நூற்றாண்டு காலம் பாடுபட்டது இப்படிப்பட்ட அவமானத்தை சுமப்பதற்காகவா?
அதேபோல, ஜூனியர் விகடன் பத்திரிகையைப் பாருங் கள் - அவர்கள் யாரைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக் கிறார்கள். மோடியை - இதற்காகவா இந்த இயக்கம் பாடு பட்டது? ஒரு நூற்றாண்டு காலம் பாடுபட்டது இப்படிப்பட்ட அவமானத்தை சுமப்பதற்காகவா?
இன்னும் சில நாள்களில் 94 ஆம் ஆண்டு பிறந்த நாளைக் காணக்கூடிய  கலைஞர் அவர்கள், அண்ணா வழி வந்தவர் என்று பெருமையாக அரசியலில் கொண்டு சென்றவர்.
உறவுக்குக் கைகொடுப்போம்;
உரிமைக்குக் குரல் கொடுப்போம் என்று சொன்னார்.
உறவும் உங்களுக்குத் தெரியவில்லை- உரிமையும் உங்களுக்குப் புரியவில்லை.
அந்த அளவிற்கு இன்றைக்கு ஆக்கப்பட்டிருக்கிறீர்கள் என்று சொன்னால், இது ஒரு பக்கம்.
கற்பனைகளில் மிதந்த வாட்ஸ் அப் இளைஞர்கள்
இன்னொரு பக்கத்தில் நண்பர்களே, இப்பொழுது அதிக மாக அவர்கள் தொலைக்காட்சிகளைவிட, இளைஞர்களை வயப்படுத்தவேண்டும் - ஏனென்றால், 18 வயது நிரம்பிய இளைஞர்கள் முகநூல் இளைஞர்கள், டுவிட்டர் இளைஞர்கள், வாட்ஸ் அப் இளைஞர்கள் - வளர்ச்சி, வளர்ச்சி என்றவுடன், ஏதோ புதிதாக வளர்ச்சியைக் கொண்டு வரப்போகிறார் என்று நினைத்தனர்.
எங்கே பார்த்தாலும் என்ஜினியரிங் கல்லூரிகள் வந்துவிட் டன - நாமெல்லாம் அமெரிக்காவில், சுவிட்சர்லாந்தில், ஆஸ்திரேலியாவில் எல்லோரும் கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்து பணி செய்யலாம் என்று கற்பனைகளில் மிதந்தனர் இளைஞர்கள்.
கல்லூரிகளில் பாதி கல்லூரிகளை மூடுவதற்குத் தயாராகி விட்டனர்
இன்றைக்கு என்ன நிலை? தமிழ்நாட்டில் உள்ள கல்லூரி ளில் பாதி கல்லூரிகளை மூடுவதற்குத் தயாராகி விட்டனர்.  யாரும் என்ஜினியரிங் படிப்பு படிப்பதற்குக்கூட செல்வதற்குத் தயாராக இல்லை. இதுதான் மோடியினுடைய மூன்றாண்டுகால சாதனையாகும்.
காரணம், அமெரிக்காவில் ஒரு மோடி இருக்கிறார்; அந்த மோடிக்கும் - இந்த மோடிக்கும் மிகப்பெரிய அளவிற்கு ஒற்றுமை உண்டு.
சரி, சிங்கப்பூருக்காவது போகலாமா என்றால், அங்கேயும் கதவை சாத்திவிடக்கூடிய நிலையில், உங்களுக்கு விசா அவ்வளவு சுலபத்தில் இல்லை என்கிறார்கள்.
இதுதான் மோடி ஆட்சியினுடைய மூன்றாண்டு கால சாதனையா?
இந்து நாளிதழில்
கபில்சிபலின் கட்டுரை! நேற்று கபில்சிபல் ‘இந்து’ நாளிதழில் ஒரு கட்டுரை எழுதி யிருக்கிறார்:
அதில், எந்தெந்தத் தேதியில், என்னென்ன வாக்குறுதி களை சொன்னார் மோடி. அதற்கெல்லாம் பதில் என்ன? என்று கேட்டிருக்கிறார்.
சில தகவல்களை உங்களுக்குச் சொன்னால், அதிசயமாக இருக்கும். கோயபல்சு தோற்றத்தைக் கண்டு, கோயபல்சே கண்டு பயப்படக்கூடிய அளவிற்கு, தோற்கடிக்கப்படக் கூடிய அளவிற்கு -அவர்களுடைய பிரச்சாரம் இன்றைக்கு எவ் வளவு வேகமாக இருக்கிறது என்பதற்கு  ஒரே ஒரு உதார ணத்தை உங்களுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
அண்மையில் ஒரு பெரிய பாலத்தை திறந்தார் மோடி. சிலர் திறந்துவிட்டுப் போய்விடுவார்கள். இவர் திறந்துவிட்டு கொஞ்ச தூரம் நடந்து காட்டினார். அப்படி நடந்து செல்லும் போது ஒரு செய்தியை சொல்லுகிறார் -
இங்கே இத்தனை தொலைக்காட்சி நண்பர்கள் இருக் கிறார்கள் - அவர்கள் இந்நிகழ்வினை பதிவு செய்கிறார்கள். இது வெளியில் வருமா? என்று தெரியாது. காரணம், இவர்கள் மீது குற்றமல்ல - இவர்கள் நம் தோழர்கள், உணர்வாளர்கள். அவர்கள் என்ன செய்வார்கள்? இவர்கள் முதலாளிகள் எதைச் சொல்கிறார்களோ, யாரை விளம்பரப்படுத்தச் சொல்லுகிறார்களோ, எதை மறைக்கச் சொல்லுகிறார்களோ, அதனை செய்து தீரவேண்டும். இல்லையென்றால், இவர்க ளும் கம்யூட்டர் இன்ஜினியர்கள்போல் வேலை இழந்து விடுவார்கள்.
ஆதாரப்பூர்வமாக சொல்கிறோம்; யாராவது மறுத்து சொல்லட்டும்
மத்திய பா.ஜ.க. ஆட்சியின் மூன்றாண்டு நிறைவு விழா வினையொட்டி, அசாமில் மிக நீளமான பாலமாக அமைந் துள்ள தோலா சாத்வியா பாலத்தை 26.5.2017 ஆம் தேதியன்று திறந்து வைத்து, பெருமைப்பட தன்னுடைய அரசின் சாதனையாகப் பேசினார் பிரதமர் மோடி.
வாஜ்பேயி அவர்கள் உடல்நலம் குன்றியிருக்கிறார். அவர் உடல்நலம் பெறவேண்டும்; யாருடைய உடல்நலத் தைப்பற்றியும் நாம் குறைவாக மதிப்பிடக்கூடாது. எவ்வளவு கருத்து மாறுபாடுகள் இருந்தாலும். உடல்நலம் குறைவு ஏற்படுவது என்பது, மனித வாழ்வில் இயல்பு. அந்த வகையில், வாஜ்பேயி அவர்கள் நல்ல உடல்நலத்தைப் பெறவேண்டும் என்றுதான் நாம் விரும்புகிறோம். ஆயிரம் கருத்து மாறு பாடுகள், வேறுபாடுகள் இருந்தாலும்.
மோடியின் பொய்யுரை!
அந்த வாஜ்பேயிக்கு செலுத்தும் நன்றிக் கடன் என்று சொன்னார் பிரதமர் மோடி. அதற்கு என்ன அர்த்தம்? நிறைய பேர் எப்படி புரிந்துகொண்டார்கள். வாஜ்பேயி காலத்தில்தான் அந்தப் பாலம் திட்டமிடப்பட்டது என்றுதான்.
ஆனால் நண்பர்களே, உண்மை என்ன என்பதை நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும். ஏனென்றால், உண்மையை வெளியில் கொண்டுவருவதுதான் திராவிடர் கழகத்தினுடைய பணி. ஆதாரப்பூர்வமாக சொல்கிறோம். யாராவது மறுத்து சொல்லட்டும். உண்மை நிலவரம் என்னவென்றால், 2009 இல் அன்றைய பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான, அய்க்கிய முற் போக்குக் கூட்டணி அரசு, இப்பாலம் கட்டுவது தொடர்பாக, மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்ச கமும், நவயுகா என்ற தனியார் இணைந்து கட்டுவது என்று முடிவெடுத்தார்கள்.
மன்மோகன்சிங் அவர்கள் பிரதமராக இருந்த காலத்தில். நம்முடைய காங்கிரசு நண்பர்கள் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படமாட்டார்கள். அவர்களுக்குப் பல வேலைகள் இருக்கிறது. இதையும்கூட நாங்கள்தான் சொல்லியாக வேண்டும். எங்களுக்கு இதுபோன்ற வேலைகள் நிறைய இருக்கின்றன. மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச் கமும், நவயுகா என்ற தனியார் நிறுவனமும் இணைந்து கட்டுவது என்று முடிவெடுத்தார்கள். அப்பொழுது அய்க்கிய முற்போக்குக் கூட்டணியினுடைய அமைச்சராக இருந்தவர் யார் தெரியுமா? டி.ஆர்.பாலு அவர்கள்.
மோடியால் நாணயத்தோடு பதில் சொல்ல முடியவில்லை
2011 இல் பாலம் கட்டும் பணி தொடங்கியது. அப்பொழுது பிரதமர் மன்மோகன்சிங். 2015 ஆம் ஆண்டு இப்பாலம் கட்டி முடிக்கப்படவேண்டும். ஆனால், முடிக்கப்படவில்லை. இரண்டாண்டுகள் கழித்து தாமதமாகப் பாலம் திறக்கப் பட்டுள்ளது. இதற்கான காரணத்தை, வளர்ச்சி, முன்னேற்றம் என்கிற முழக்கத்தை முன்வைத்து, ஆட்சிக்கு வந்த மோடியால், நாணயமாக சொல்ல முடியவில்லை.
எந்த இடத்திலும் இந்தப் பாலம் தொடங்கப்பட்டது? அசாமிலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பிரதமராக இருந்த மன்மோகன்சிங் தலைமையிலான அரசு என்று சொல்லும் நிலையிலும், மோடியில்லை. மாறாக, இதற்கு முன்னர் 2000 ஆம் ஆண்டில் இருந்த வாஜ்பேயிக்கு நன்றி செலுத்துகிறார்கள் என்றால், இவர்களுடைய அரசியல் நேர்மையை நீங்கள் எல்லோரும் புரிந்துகொள்ளவேண்டும்.
இதுபோலத்தான், சில மாதங்களுக்குமுன், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், இதேபோன்று மன்மோகன்சிங் அரசி னால் தொடங்கப்பட்ட பாலம் ஒன்று, இப்பொழுது கட்டி முடிக்கப்பட்ட நிலையில், மோடி அதனைத் திறந்து வைத்து விட்டு, தன்னுடைய அரசின் சாதனையாக அதனை விளம் பரப்படுத்திக் கொண்டார். இது இவர்களுக்கு சர்வசாதாரணம்.
ஆதார் அட்டையே கூடாது என்று பேசியவர்கள் யார்?
பசுமாட்டிற்கு ஆதார் அட்டையைத் தேடிக் கொண்டிருக் கிறார்கள் அல்லவா - அதுதான் மிக முக்கியம். இதே ஆதார் அட்டையை, பா.ஜ.க., அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோது, கடுமையாக எதிர்த்தவர்கள். ஆதார் அட்டையே கூடாது என்று பேசியவர்கள் யார்? இதே மோடியல்லவா! இது எத்தனை பேருக்கு நினைவில் இருக்கிறது. பப்ளிக் மெமரி இஸ் வெரி ஷாட்.
எதையெல்லாம் அன்றைக்கு எதிர்த்தார்களோ, அதை யெல்லாம் இன்றைக்கு செய்கிறார்கள். மக்களுக்கு மறதி அதிகம். நேற்று நடந்ததைப்பற்றி இன்றைக்கு அவர்கள் கவலைப்படவில்லையே. அதனால்தான், மிகத் தீவிரமாக என்ன செய்திருக்கிறார்கள் என்றால், மாட்டுக்கறி, மாட்டுக்கறி என்பதைப்பற்றி இன்றைக்குப்பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
மாட்டுக்கறி பிரச்சினை வந்த நேரத்தில்....
பெரியார் சொல்கிறார்,
இந்தப் பார்ப்பனர்களின் முன்னோர்கள், ஆடு, மாடு மாத் திரமல்லாமல், பன்றி, கழுதை, குதிரை, எருமை, மனிதன்வரை சாப்பிட்டதாக இவர்களே உண்டாக்கி வைத்திருக்கும் வேத, சாஸ்திர, மத ஆதாரங்களை மறந்துவிட்டு வக்கணை பேசுகிறார்கள் என்று 1964 ஆம் ஆண்டு தந்தை பெரியார் பேசினார் - மாட்டுக்கறி பிரச்சினை வந்த நேரத்தில்.
மனுதர்ம சாஸ்திரம் சொல்வது என்ன இதோ என் கையில் உள்ளது மனுதர்ம சாஸ்திரம்.
இதில் இருப்பதை படித்தால் வேடிக்கையாக இருக்கும். அவன் சாப்பிடுவதற்கு எவ்வளவு காரணம் சொல்லியிருக் கிறான். ஒரு அத்தியாயமே இருக்கிறது. 5 ஆவது அத்தியாயம் முழுவதும். இன்றைக்கு மிகப்பெரிய அளவிற்கு இந்தக் குற்றத்திற்கு உள்ளாகவேண்டியவன் யாரென்றால்,
புசிக்கும்படி சொல்லியிருக்கின்ற மிருகம் பட்சி, இவைகள் பிராமணர் யக்ஞத்திற்காகவும் அல்லது தன் மாதா, பிதா முதலிய போஷிக்கவேண்டியவர்களை காப்பாற்றுவதற்கா கவும் கொல்லலாம். இந்த மனுதர்மத்தைத்தான் அவர்கள் இந்திய அரசியல் சட்டமாக்கவேண்டும் என்று நினைக் கிறார்கள். பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் எழுதிய அரசியல் சட்டத்தை எடுத்துவிட்டு, நாங்கள் அடுத்தபடியாக செய்யப்போகின்ற அரசியல் சட்டம் என்னவென்றால், மனு தர்ம சாஸ்திரம்தான் என்று டில்லியில் தீர்மானம் போட்டார்கள். அதற்கு முன்பு, மதுரையில் நடைபெற்ற விஸ்வ இந்து பரிசத் மாநாட்டில் சொன்னார்கள். அதனை நாம் எதிர்த்தோம் மிகப்பெரிய அளவிற்கு.
யாகம் செய்து அதன் மாமிசத்தைப் புசித்தால், தேவ காரியம் என்றும், மற்ற வேளைகளில் ஜந்துக்களைக் கொன் றால், அது ராட்சச காரியம் என்கிறார்கள்.
வாட்ஸ் அப், முகநூலில் பார்ப்பனர்கள் பரப்பும் ஒரு தகவல்!
இதுபோன்ற முயற்சிகளை அவர்கள் செய்துகொண்டி ருக்கின்ற காலகட்டத்தில், மிக முக்கியமான ஒரு தகவல் என்னவென்றால், வாட்ஸ் அப், முகநூலில் ஒரு நண்பர் எனக்கு அனுப்பி வைத்திருந்தார்.
அது என்னவென்றால், பார்ப்பனர்கள் எல்லாம் இப் பொழுது மிகவும் உற்சாகமாகக் கூடி, ஒவ்வொரு மாநிலத் திலும் பார்ப்பனர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்கிற தகவல்களை வெளியிட்டிருக்கிறார்கள். ஜம்மு காஷ்மீரில் 2 லட்சம் பேர்; 4 லட்சம் அந்த மாநிலத்தைவிட்டு வெளியில் வந்துவிட்டார்கள்.
இங்கே ஈழத் தமிழர்களைக் காப்பாற்றமாட்டோம் என் கிறார்கள்; ஆனால், அங்கே இருக்கின்ற காஷ்மீர் பண்டிட்டு களுக்கு மட்டும் பாதுகாப்பு கொடுப்போம் என்கிறார்கள். ஏனென்றால், ஈழத் தமிழன் வெறும் முதுகு உள்ளவன்; காஷ்மீர் பண்டிட்டுகள் பூணூல் போட்டிருப்பவர்கள்.
எனவேதான், அதில் வித்தியாசம். நாமெல்லாம் சூத்திரப் பசங்கள்; இவர்கள் எல்லாம் பஞ்சமன்; இவர்கள் தொடக் கூடாதவர்கள்; இவர்கள் எல்லாம் மாட்டுக் கறி சாப்பிடுகிற வர்கள் - ஆகவே அவர்களைப்பற்றி கவலையில்லை என்பதுதான் அவர்களுடைய கணக்கு.
பார்ப்பனர்கள் குறித்த புள்ளிவிவரங்கள்
கடந்த 2 மாதங்களாக அனைத்து மாநிலங்களிலும் பார்ப் பனர்களின் நிலைகுறித்து தகவல் திரட்டப்பட்டது.
நாட்டில் பார்ப்பனர்கள் நிலையையும், அவர்களின் அதிகாரத்தையும் தெரிந்து கொள்ளவேண்டும்.
மாநிலங்களில் பார்ப்பனர்கள் எண்ணிக்கை
ஜம்மு காஷ்மீர் 2 லட்சம் மற்றும் 4 லட்சம் பேர் மாநிலத்தை விட்டு வெளியேறிவிட்டார்கள்
பஞ்சாப்            9 லட்சம்
அரியானா     14 லட்சம்
ராஜஸ்தான்                78 லட்சம்
குஜராத்           60 லட்சம்
மகாராட்டிரா               45 லட்சம்
கோவா            5 லட்சம்
கருநாடகா    45 லட்சம்
கேரளா             12 லட்சம்
தமிழ்நாடு     30 லட்சம்
ஆந்திரப்பிரதேசம் 24 லட்சம்
சத்தீஸ்கர்     24 லட்சம்
ஒடிசா               37 லட்சம்
ஜார்க்கண்ட் 12 லட்சம்
பீகார்  98 லட்சம்
மேற்கு வங்கம்        18 லட்சம்
மத்தியப்பிரதேசம்                42 லட்சம்
உத்தரப்பிரதேசம்  2 கோடி
உத்தர்காண்ட்            20 லட்சம்
இமாச்சலப்பிரதேசம்         45 லட்சம்
சிக்கிம்             1 லட்சம்
அசாம்               10 லட்சம்
மிசோரம்       1.5 லட்சம்
அருணாசலப்பிரதேசம்    1 லட்சம்
நாகாலாந்து 2 லட்சம்
மணிப்பூர்       7 லட்சம்
மேகாலயா  9 லட்சம்
திரிபுரா             2 லட்சம்
மேற்கண்ட தகவலின்படி, பார்ப்பனர்கள் மிக அதிக அளவில் உள்ள மாநிலமாக உத்தரப்பிரதேசமும், மிகக் குறைந்த அளவில் உள்ள மாநிலமாக சிக்கிமும் உள்ளது.
பார்ப்பனர்கள்
அரசுப்பணிகளில் அதிக எண்ணிக்கையில் உள்ள மாநிலம் மேற்கு வங்கம்.
மக்கள் தொகையில் அதிக விழுக்காட்டில் 20 விழுக்காட்டளவில் உத்தரகாண்டில் உள்ளனர்.
அதிக அளவில் கல்வி பெற்றவர்களாக கேரளா மற்றும் இமாச்சலப்பிரதேச மாநிலங்களில் உள்ளனர்.
அதிக எண்ணிக்கையில் நல்ல நிலையில் உள்ள மாநிலம் அசாம்
அதிக எண்ணிக்கையில் முதல்வர்களைத் தந்த மாநிலம் ராஜஸ்தான்
அதிக எண்ணிக்கையில் படித்தவர்கள் உள்ள மாநிலம் உத்தரப்பிரதேசம்
பார்ப்பனர்கள்
மக்களவையில்      48 விழுக்காடு
மாநிலங்களவையில்       36 விழுக்காடு
இந்தியாவில் உள்ள ஆளுநர்கள்             50 விழுக்காடு
அமைச்சரவை செயலாளர்கள் 33 விழுக்காடு
கூடுதல் செயலாளர்கள்  62 விழுக்காடு
தனி செயலாளர்கள்            70 விழுக்காடு
பல்கலைக்கழக துணைவேந்தர்கள்    51 விழுக்காடு
உச்சநீதிமன்ற நீதிபதிகள்              56 விழுக்காடு
உயர்நீதிமன்ற நீதிபதிகள்              40 விழுக்காடு
இந்திய தூதரக அலுவலர்கள்     41 விழுக்காடு
பொதுத்துறை நிறுவனங்கள்
மத்திய அரசின் நிறுவனங்கள்  57 விழுக்காடு
மாநில அரசின் நிறுவனங்கள்   82 விழுக்காடு
வங்கிப் பணிகளில்              57 விழுக்காடு
விமானத் துறையில்          61 விழுக்காடு
அய்.ஏ.எஸ். அலுவலர்கள்             72 விழுக்காடு
அய்.பி.எஸ். அலுவலர்கள்            61 விழுக்காடு
தொலைக்காட்சி கலைஞர்கள்,
பாலிவுட் (மும்பை திரையுலகு)              83 விழுக்காடு
சிபிஅய்/சுங்கவரித்துறை பணிகளில்                72 விழுக்காடு
வாட்ஸ்அப் குழுக்கள்
நிர்வகிப்பவர்கள்                59 விழுக்காடு
முகநூல் நிர்வகிப்பவர்கள்            50 விழுக்காடு
பார்ப்பனர்கள் என்பதில்
பெருமை கொள்வோம்!
இதுதான் பார்ப்பனர்களின் சக்தி!!
இவ்வாறு வாட்ஸ்-அப் மூலம் பார்ப்பனர்கள் தகவலை உலவ விடுகிறார்கள்.
பார்ப்பனர் அல்லாத நண்பர்களே, ஒடுக்கப்பட்டு காலங்காலமாக அழுத்தப்பட்டு இருக்கக்கூடிய நண்பர்களே, நீங்கள் தயவு செய்து எண்ணிப் பார்க்கவேண்டும்.
இந்த நிலையில், அய்.அய்.டி.யில் தாக்கப்பட்ட மாணவருக்கு கண்ணில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருக்கிறது என்கிற கவலைமிகுந்த செய்தி இப்பொழுது கிடைத்திருக்கிறது. சங்கரநேத்ராலயாவிற்கு அனுப்பப்பட்ட அந்த மாணவருக்கு சிகிச்சை அளிக்கப்படாமல் அவர் திருப்பி அனுப்பப்பட்டு இருக்கிறார். இப்பொழுது அவர் அய்.அய்.டி. வளாகத்திலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உரிய சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், கண்பார்வை இழக்கும் அபாயம் இருக்கிறது.
ஆகவே, திருமா அவர்கள் சொன்னாரே, சிவில் யுத்தம் என்று. ஒரு மதக்கலவரம், ஒரு உள்நாட்டுப் போர் உண்டாக்கக்கூடிய அளவிற்கு, மாட்டைப் பயன்படுத்திக் கொண்டு வருகிறார்கள்.
இன்னொரு கோணத்தில் பார்க்கப்படவேண்டிய செய்தி ஒன்று இருக்கிறது- அதனை உங்களுக்குச் சொல்லி, நீங்கள் தெளிவடையவேண்டும் என்பதற்காக சொல்கிறேன்.
முதுகெலும்போடு இருக்கக்கூடிய கேரள அரசு!
இது இந்திய அரசியல் சட்டம் - நம்முடைய மாநில அரசுகள் - முதுகெலும்போடு இருக்கக்கூடிய கேரள அரசு தெளிவாகச் சொன்னது -
நேற்று நான் கோழிக்கோட்டில் இருந்தபொழுது, அங்கே இந்து பத்திரிகையில் வெளிவந்த படத்தினை எடுத்துக்கொண்டு வந்திருக்கிறேன்.
Curbs on cattle slaughter meat stiff resistance
என்ற தலைப்பில் ஒரு செய்தியை வெளியிட்டு ஒரு படத்தையும் வெளியிட்டுள்ளனர்.
Minister for Tourism Kadakampally Surendran and CPI(M) Ernakulam district secretary P. Rajeev savouring beef at a beef fest organised by the SFI in Kochi on Saturday
மந்திரிகள் அங்கே மாட்டுக்கறி சாப்பிட்டு, நாங்கள் எதிர்க்கிறோம், இங்கு அனுமதிக்கமாட்டோம் என்று அந்த அரசு தெளிவாகச் சொன்னது.
மம்தாவின் எதிர்ப்பு
மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி அரசு, எங்களுடைய மாநில உரிமைகளில் கை வைப்பதற்கு உங்களுக்கு உரிமையில்லை. நீங்கள் மாநில உரிமைகளைப் பறிக்கிறீர்கள். கூட்டாட்சித் தத்துவத்தையே நீங்கள் வேரறுக்கிறீர்கள் என்று தெளிவாகச் சுட்டியிருக்கிறார்கள்.
புதுவை மாநில முதலமைச்சர் நமது நாராயணசாமி அவர்களும் தெளிவாக இதனை எதிர்த்திருக்கிறார்.
அருமை நண்பர்களே, கருநாடகத்தில் அவர்கள் சொன்னார்கள், ஆனால், இன்னமும் சற்று அவர்கள் சொன்னபடி, அவர்களுடைய காங்கிரஸ் உதவித் தலைவர் சொன்ன பிறகு, கொஞ்சம் தயக்கம் காட்டக்கூடிய அளவில் இருக்கிறார்கள் என்கிற ஒரு செய்தி இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளிவந்திருக்கிறது.
மனிதத்தைக் காப்பாற்றவேண்டும்;  மாநிலங்களின் உரிமைகளையும் காப்பாற்றவேண்டும்
எதற்காக இதனைச் சொல்கிறோம் என்றால் நண்பர்களே, இந்த நேரம் அரசியல் பார்க்கவேண்டிய அவசியமில்லை. மனிதர்களைக் காப்பாற்றவேண்டும் - மனிதத்தைக் காப்பாற்றவேண்டும். அதைவிட, மாநிலங்களின் உரிமைகளையும் காப்பாற்றவேண்டும்.
மாட்டைக் காப்பாற்றுவது முக்கியமல்ல நண்பர்களே, மாட்டை சாக்காக வைத்து, ஒடுக்கப்பட்ட சிறுபான்மை சமுதாய மக்களை -  இவர்கள் அத்தனை பேரையும் வைத்து ஒரு கலாச்சாரத்தையே அழிப்பதற்கான முயற்சிகள்.
ஒரு பண்பாட்டுப் படையெடுப்பு - ஒரு பக்கத்தில் அரசியல் ரீதியாக ஆர்.எஸ்.எஸினுடைய கொள்கை என்ன? மாநிலங்களே இருக்கக்கூடாது. ஒற்றை ஆட்சிமுறைதான். இதில் யாருக்காவது சந்தேகம் இருந்தால், ஞானகங்கை புத்தகத்தில், கோல்வால்கர் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.
இந்திய அரசியல் சட்டம் முதல் பிரிவே எதில் ஆரம்பிக்கிறது.
பல மாநிலங்களுடைய கூட்டாட்சிதான் இந்தியா.
நான் பல மேடைகளில் சொல்லியிருக்கிறேன். இருந்தாலும் இங்கேயும் நினைவூட்டவேண்டும் என்பதற்காக திரும்பவும் சொல்கிறேன்.
என்.டி.ராமராவ்
தெலுங்கு தேசத்தை நிறுவிய என்.டி.ராமராவ் அவர்கள் துணிச்சலோடு ஒன்றை சொன்னார் மத்திய அரசைப் பார்த்து.
மாநிலங்களுக்குத்தான் ஆளுவதற்கு மக்கள் இருக்கிறார்களே தவிர, மத்திய அரசுக்கு ஆளுவதற்கு மக்கள் கிடையாது என்றார்.
அது ஒரு சட்டக் கற்பனை.
எந்த மத்தியத் திட்டமாக இருந்தாலும், அதனை மாநில அரசுகளிடம் கொடுத்துதானே செய்தாகவேண்டும். அது மகாத்மா காந்தி திட்டமாக இருக்கட்டும்; அல்லது தேசிய நெடுஞ்சாலை திட்டமாக இருக்கட்டும் - அதனை மாநில அரசின்மூலமாகத்தானே செய்தாகவேண்டும். ஏனென்றால், உருப்படியானது - அடையாளம் தெரிந்தது - உண்மையானது மாநில அரசு.
மூன்று பட்டியல்கள்
ஆனால், அந்த மாநில அரசினுடைய அடிப்படையையே நொறுக்கக்கூடிய அளவிற்கு நண்பர்களே இன்றைக்கு ஆக்கியிருக்கிறார்கள் என்றால், மூன்று பட்டியல்கள் இருக்கின்றன.
மீண்டும் சொல்கிறேன், மற்றவர்கள் சொல்லாத கோணம் - இந்த செய்திகளை நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும்.
முதலில் யூனியன் லிஸ்ட்
மத்திய அரசாங்கத்திற்குரிய சட்டங்கள் செய்யக்கூடிய அதிகாரப் பட்டியல்.
இரண்டாவது மாநிலப் பட்டியல்.
மூன்றாவது பொதுப் பட்டியல் என்று தமிழில் மொழி பெயர்க்கப்பட்டாலும், ஆங்கிலத்தில் கன்கரண்ட் லிஸ்ட் என்று பெயர்.
கன்கரண்ட் லிஸ்ட் என்றால் என்ன தெரியுமா?
கன்கரண்ட் லிஸ்ட் என்றால் என்ன தெரியுமா? பொதுப்பட்டியல் என்றால், இரண்டு பேருக்கும் பொதுவானது என்று நீங்கள் நினைக்கவேண்டும். தமிழில் மொழி பெயர்ப்பு அதற்கு சரியானது என்று சொல்ல முடியாது.
கன்கரண்ட் என்றால் என்ன அர்த்தம்? அய் கன்கர் வித் யூ - நான் உங்களோடு உடன்படுகிறேன் - உங்களோடு இசைகிறேன் என்று அதற்குப் பொருள்.
கன்கரண்ட் என்பதற்கு என்ன அர்த்தம் என்றால், பட்டியலில் இருக்கின்ற விஷயம் மாநில அரசின் உரிமை - அடிப்படையானது.
அதில் சட்டம் செய்யவேண்டும் என்று மத்திய அரசு விரும்பினால், மாநிலங்களைக் கலந்து ஆலோசித்து பிறகு செய்யவேண்டும் என்பதுதான் அதனுடைய அடிப்படை. அந்த அடிப்படையை புரிந்துகொள்ளவேண்டாமா?
இந்த அடிப்படையையே தகர்க்கிறார்கள். எந்த அரசியல் சட்டத்தின்மீது அவர்கள் பிரமாணம் எடுத்துக்கொண்டார்களோ, அந்த அரசியல் சட்டத்தையே தவிர்க்கிறார்கள் - அதையே அவர்கள் பறிக்கிறார்கள். அதுதான் 243, 246 மூன்றாவது பிரிவுக்கு விரோதம் என்றெல்லாம் எடுத்துச் சொல்லி,
ஜனநாயக ரீதியாக வந்துவிட்டு, எந்த அரசியல் சட்டத்தின் பேரால் அவர்கள் பதவி ஏற்கிறார்களோ, பிரமாணம் செய்கிறார்களோ, அதையே உடைக்கக்கூடிய அளவிற்கு செய்திருக்கிறார்கள்.
அரசியல் அடிப்படைக் கட்டுமானத்தை மாற்ற எந்த அரசிற்கும் உரிமை கிடையாது
இறுதியாக ஒன்றை உங்களுக்குச் சொல்லவிழைகிறேன்.
அடிப்படை உரிமைகள் என்பது இருக்கிறதே -  அடிப்படை கட்டுமானம். அந்த அடிப்படைக் கட்டுமானத்தை மாற்ற எந்த அரசிற்கும் உரிமை கிடையாது.
ஒரு அரசியல் சட்டத் திருத்தம் வந்தால்கூட, அந்த அரசியல் சட்டத் திருத்தம்கூட, அடிப்படைக் கட்டுமானத்திற்கு உட்பட்டதாக இருந்தால்தான் அது செல்லுபடியாகுமே தவிர, அதற்கு அப்பாற்பட்டதாக இருந்தால், அது செல்லுபடியாகாது.
அந்த வகையில், அடிப்படை உரிமை என்பது, அதிலே 32 பிரிவுகள் இருக்கின்றன என்று சொன்னால், அதில் 29 ஆவது பிரிவு என்ன சொல்லுகிறது?
அடிப்படை உரிமை - உண்ணுவது நம் கலாச்சாரத்தின் ஒரு பகுதி.
இவர் மாட்டுக்கறி சாப்பிடுகிறாரா? ஆட்டுக்கறி சாப்பிடுகிறாரா? கோழி சாப்பிடுகிறாரா? என்பதல்ல.
அதுமட்டுமல்ல, இன்றைக்கு ஏழை பாட்டாளி மக்கள் வாங்கக்கூடிய அளவிற்கு இருப்பது மாட்டுக்கறிதான். சென்னையில் ஆட்டுக்கறி ஒரு கிலோ 540 ரூபாய்க்குமேல். அடுத்ததாக ஆட்டுக்கறி வேண்டாம் என்கிறவர்கள் கோழிக்கறி - அது ஒரு கிலோ 200 ரூபாய்.
மூன்றாவதாக மாட்டுக்கறி, ஏழை எளியவர்களுக்கு - சத்தும் அதில் அதிகம்.
உண்ணும் உரிமையும், எண்ணும் உரிமையும் நமக்கு உண்டு
மொழி எப்படி எங்களுடைய கலாச்சாரமோ, மொழியினுடைய உரிமையை எப்படி நீ பறிக்க முடியாதோ - அதேபோல, உண்ணும் உரிமையும், எண்ணும் உரிமையும் நமக்கு உண்டு.
Article 29 in The Constitution Of India 1949
29. Protection of interests of minorities
(1) Any section of the citizens residing in the territory of India or any part thereof having a distinct language, script or culture of its own shall have the right to conserve the same
(2) No citizen shall be denied admission into any educational institution maintained by the State or receiving aid out of State funds on grounds only of religion, race, caste, language or any of them
இதன் தமிழாக்கம் வருமாறு:
இந்தியாவின் எல்லைக்குள் வாழும் அல்லது எந்த பகுதியில் வாழும் ஒரு பிரிவு மக்கள் - அவர்களுக்கென உரிமையான தனித்த மொழி எழுத்து, கலாச்சாரம் உடையோர், அவற்றினைப் பாதுகாக்கும் அடிப்படை உரிமை உடையவர்கள் ஆவார்கள்.
மொழி, எழுத்து, கலாச்சாரம் ஆகியவைகளைப் பாதுகாக்கும் உரிமை ஒவ்வொரு குடிமகனின் பறிக்கப்படமுடியாத ஜீவாதார உரிமையாகும் என்பதே அதன் விளக்கம் ஆகும்.
அதனைக் காப்பாற்றக்கூடிய நமக்கு அடிப்படை உரிமை. அதில் கைவைக்கக்கூடிய உரிமை அரசுகளுக்குக் கிடையாது என்பதுதான் முக்கியம்.
எனவே, எண்ணும் சிந்தனையாக இருந்தாலும், உண்ணும் கலாச்சாரமாக இருந்தாலும் அது பாதுகாக்கப்படவேண்டும். அதில் கைவைக்கக்கூடிய அளவிற்கு இன்றைக்கு வந்திருக்கிறார்கள். அவர்கள் மகிழ்ச்சியோடு அதனை செய்துகொண்டிருக்கிறோம் என்று சொல்லுகிறார்கள்.
‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’
அதேநேரத்தில், பொருளாதார கண்ணோட்டத்தோடு பார்க்கின்றபொழுது, இதோ என்னுடைய கைகளில் இருக்கும் பத்திரிகை, ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நேற்றைய நாளிதழ்.
அதில் இந்த சட்டம் எவ்வளவு தவறான பிற்போக்கான சட்டம் என்று எழுதிவிட்டு,
இன்னொரு பக்கத்தில் எழுதுகிறார்கள், எருமை மாட்டு இறைச்சி 2015-2016 இல் மிகப்பெரிய அளவிற்கு 26,684 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதியாகி இருக்கிறது. இன்றைக்கு அது பாதிக்கப்படும் என்றெல்லாம் எழுதியிருக்கிறார்கள்.
அதுகூட நமக்கு முக்கியமல்ல நண்பர்களே, அதைவிட மிக முக்கியம். இங்கே நண்பர்கள் சுட்டிக்காட்டினார் பாருங்கள், தலைவர்கள் இங்கே சுட்டிக்காட்டினார்கள்.
மாடுகள் போன்ற உருவத்தோடு வந்து போராட்டங்கள்
ஒரு ஏழை விவசாயி, பால் கறக்காத மரத்துப் போன ஒரு மாடாக இருந்தால், அந்த மாட்டை அவன் விற்றுவிட்டுத்தான், புதிதாக பசுமாட்டை வாங்கக்கூடிய வாய்ப்புகள் வரும். அதனால்தான், இன்றைக்கு விவசாயிகள் தலையில் அடித்துக் கொள்கிறார்கள். மாடுகள் போன்ற உருவத்தோடு வந்து போராட்டங்கள் நடத்துகிறார்கள்.
அத்தனை பேரும் சேர்ந்து முறியடிப்போம்! முறியடிப்போம்!! முறியடிப்போம்!!!
எனவே, இது ஏழை, எளியவர்கள் மீது திணிக்கப்பட்டு இருக்கிற ஒரு கலாச்சாரப் படையெடுப்பு. கூட்டாட்சியின்மீது தாக்கப்பட்டு இருக்கிற ஒரு மூர்த்தண்யமான உரிமை பறிப்பு. அதேபோல, ஒரு ஆரிய கலாச்சாரத்தை, இந்துத்துவ அரசியல் கலாச்சாரத்தை நம்மீது திணிக்கக்கூடிய முயற்சி - இதை அத்தனை பேரும் சேர்ந்து முறியடிப்போம்! முறியடிப்போம்!! முறியடிப்போம்!!! என்று கூறி, முடிக்கிறேன்.
ஒன்றுபடுவோம், வெற்றி பெறுவோம்!!
ஒன்றுபடுவோம், வெற்றி பெறுவோம்!!
நன்றி, வணக்கம்!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...