Total Pageviews

Friday, June 2, 2017

‘சாமர்த்தியம்' இனி எடுபடாது!

மாட்டிறைச்சித் தொடர்பான சிக்கலில் வசமாக சிக்கிக் கொண்டு விட்டது மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு. எதிர்ப்புகள் கடும் புயலாகச் சுழன்றடிக்க ஆரம் பித்தவுடன் இப்பொழுது என்ன சொல்லுகிறார்கள் தெரியுமா?
மாட்டிறைச்சியை உண்ணக்கூடாது என்று யார் சொன்னது. இறைச்சிக்காக மாடுகளை சந்தைக்குக் கொண்டு செல்லக்கூடாது என்பதுதான் அரசின் நிலைப்பாடு என்று முட்டாள்தனமாக விளக்கத்தைச் சொல்ல ஆரம்பித்துவிட்டனர்.
அவர்கள் சொல்லுவதை வைத்துப் பார்த்தாலும்கூட இறைச்சிக்காக மாடுகளை சந்தைக்குக் கொண்டு செல்லக்கூடாது என்றால், அதன் பொருள் என்ன?
இறைச்சிக்காக அனுப்பினால்தானே இறைச்சியைச் சாப்பிட முடியும்? மீனைப் பிடித்தால்தானே மீனைச் சாப்பிட முடியும்? ரொம்பவும் சாமர்த்தியமாகப் பதில் சொல்லுவதாக நினைத்துக் கொண்டு, தங்களின் அறியாமை இருட்டை வெளிச்சமாகக் காட்டிக் கொள்கின்றனர்.
பசு மாட்டு விடயத்தில் தொடர்ந்து இவர்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதைப் பின்னோக்கிப் பயணித்தால் இவர்களின் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறிவிடும்.
பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் சங் பரிவாரைச் சேர்ந்த வர்கள் ஆங்காங்கே எத்தகைய வன்முறைகளில் ஈடுபடுகிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்டால், இப்பொழுது அவர்கள் சொல்ல முயற்சிக்கும் சமாதானம் என்பது வேரற்றது என்பது விளங்கி விடுமே!
அரியானா மாநிலத்தில் செத்த மாட்டின் தோலை உரித்த தாழ்த் தப்பட்ட தோழர்கள் அய்வரை அடித்தே கொலை செய்தவர்கள் யார்? உத்தரப்பிரதேசத்தின் தாத்ரி நகரில் அக்லாக் எனும் முசுலிம் சமுதாயப் பெரியவர் அடித்துக் கொல்லப்பட்டது எந்த அடிப் படையில்? அவர் வீட்டில் மாட்டுக்கறி வைத்திருந்தார் என்று ஒரு புரளியைக் கிளப்பிவிட்டு, கோவில் மணியை அடித்து மக்களைத் திரட்டி அடித்துக் கொல்லவில்லையா?
குஜராத் மாநிலத்தில் பசுவைத் தோலுரித்ததாகக் கூறி தலித் துகள்மீது தாக்குதலைத் தொடுத்தவர்கள் யார்? மத்தியப் பிரதேசம் மந்த்சோர் ரயில் நிலையத்தில் மாட்டிறைச்சிக் கொண்டு சென்றதாக இரு முஸ்லிம் பெண்மணிகளை பஜ்ரங்தள் காலிகள் தாக்கியது எந்த அடிப்படையில்?
பி.ஜே.பி. ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் அல்வர் மாவட்டத் தில் பசுக்களை வாகனத்தில் ஏற்றிச் சென்றதாகக் கூறி, பெலுகான் எனும் முதியவர் நெடுஞ்சாலையில் மக்கள் நடமாட்டம் உள்ள ஒரு பகுதியில் அடித்துக் கொல்லப்படவில்லையா? அப்படிக் கொன்ற கொடியவர்களை புரட்சிவீரன் பகத்சிங்கோடு ஒப்பிட்டு சங் பரிவார்க் கும்பல் புகழவில்லையா?
அந்த முஸ்லிம் முதியவர் அடித்துக் கொல்லப்படும் காட்சியை சமூக வலைதளங்களில் பார்த்தவர்களின் குருதி உறைந்து விடுமே!
இதில் என்ன கொடுமை தெரியுமா? அடித்துக் கொல்லப்பட்ட பெலுகானின் மகன்கள் இருவர் மாடு திருடர்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டதுதான். இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தவர் யாரோ அனாமதேயம் அல்ல - ராஜஸ்தான் மாநிலத்தின் உள்துறை அமைச்சர் குலாப்சந்த் கடாரியாதான் இப்படி ஒரு குற்றச்சாட்டைப் பட்டவர்த்தனமாக முன்வைத்தார். விசாரணையில் அவர்கள் குற்றவாளிகள் அல்ல என்பது நிரூபணமாகி விட்டது. (அப்படி யானால், அந்த அமைச்சரை என்ன சொல்லுவது - என்ன செய்வது?) பி.ஜே.பி. அமைச்சர்கள் எந்தத் தரத்தில் இருக்கின்றனர் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு அல்லவா!
மகாராட்டிரம், அரியானா பகுதிகளில் மாடுகளை வாகனங் களில் ஏற்றிச் சென்றால் அவ்வளவுதான் - பசு பாதுகாவலர்கள் எனும் பெயரில் காவிக் காலிகள் சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு கடும் தாக்குதலைத் தொடுக்கிறார்கள். லாரியில் மாடுகளோடு வந்தவர்களின் காலில் லாடம் அடித்த நிகழ்வுகளும் உண்டே!
உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்தியநாத் முதலமைச்சராக வந்தாலும் வந்தார், சங் பரிவார்க் கும்பலுக்குக் கொம்பு முளைத்து விட்டது.  அவர்களுக்கு “யுவவாகினி’’ என்ற பட்டப் பெயர் வேறு; காவல்துறை வாகனங்களில் கையில் தடியோடு வலம் வந்து கொண்டிருக்கிறார்களே!
சமூக வலைதளங்களில் ஒரு காட்சி. உ.பி.யில் கால்நடைகளை ஏற்றிச் செல்லும் வாகனத்தில் ஏறிக்கொண்டு, ஓட்டுநரின் அருகில் அமர்ந்து கொண்டு, ‘பசு எங்கள் தாய் என்று சொல்லு’ என்று கூறி, ஓட்டுநரின் கன்னத்தில் அடித்துக்கொண்டே செல்லுகிறார்கள் ஆர்.எஸ்.எஸ். தடியர்கள்.
அந்தக் காணொலிக் காட்சியின் கீழே எழுதப்பட்டுள்ள வாசகங்கள் என்ன தெரியுமா?  ‘‘ஆம் - அப்படித்தான் அடிப்போம், உதைப்போம், எரிப்போம்‘’ என்று எழுதப்பட்டுள்ளது.
21 ஆம் நூற்றாண்டில் தான் நாம் வாழ்ந்துகொண்டு இருக் கிறோமா? பி.ஜே.பி. அதிகாரத்திற்கு வந்தாலும் வந்தது - நாடு காட்டுவிலங்காண்டிக் காலத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டு விட்டதே!
சங் பரிவார்களின் இந்தப் பின்னணியைப் புரிந்துகொண்டால், இப்பொழுது மத்திய பி.ஜே.பி. மாட்டிறைச்சி தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிக்கை எந்த அடிப்படையில் என்பது எளிதில் விளங்கி விளங்கிடுமே.
பி.ஜே.பி. ஆளும் சில மாநிலங்களில் பசுவதைத் தடுப்புச் சட்டம் செயல்பாட்டுக்கு வந்துவிட்டது. மூன்றாண்டு தண்டனை, பத்தாயிரம் ரூபாய் அபராதம் என்று சட்டம் செய்துவிட்டார்கள்.
பி.ஜே.பி. ஆட்சி செய்யும் இரண்டொரு மாநிலங்களில் நடைமுறைப்படுத்தியதை இந்தியா முழுவதும் செயல்பாட்டுக்குக் கொண்டுவரவேண்டும் என்று ஆர்.எஸ்.எஸின் கட்டளைப்படி மத்திய பி.ஜே.பி. ஆட்சி இப்படியொரு முடிவை எடுத்துள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பி.ஜே.பி.யைத் தவிர அனைத்துக் கட்சிகளும் களத்தில் இறங்கிவிட்டன. சென்னையில் அய்.அய்.டி.யில் மாட்டுக்கறி சாப்பிட்ட மாணவனை ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாணவர் பிரிவான ஏபிவிபியைச் சேர்ந்தவர்கள் தாக்கியுள்ளனர்.
இது மாணவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பைக் கிளப்பி விட்டது; எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றிய நிலை ஏற்பட்டு விட்டது. மாணவர்கள், இளைஞர்கள் களத்தில் இறங்கினால், பி.ஜே.பி.யின் ஆட்சி அதிகாரச் செருக்கெல்லாம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். அந்த நிலை வருவதற்கு வேறு யாரும் காரணமல்ல - பி.ஜே.பி.தான் - அதன் சங் பரிவார்க் கும்பல்தான்.
மரியாதையாக மாட்டிறைச்சி தொடர்பான மத்திய அரசின் அறிவிக்கை பின்வாங்கப்படவேண்டும்; முரண்டு பிடித்தால், வட்டியும் முதலுமாக சேர்ந்து சுமக்க நேரிடும் எச்சரிக்கை! எச்சரிக்கை!!
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

0 comments: