கடந்த 20ஆம் தேதி கூடலூரிலும், 21ஆம் தேதி திண்டுக் கல்லிலும் நடைபெற்ற தந்தை பெரியார் 138ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாக்கள் வெகு சிறப்பாக நடைபெற்றன. கட்சி களையும் கடந்த ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.
அவ்விரு நாட்களில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
அவ்விரு கூட்டங்களிலும் முக்கியமாக நாட்டை ஆளும் இந்துத்வா சக்திகளினால் ஏற்படும் அபாயங்கள் குறித்தும் சமூக நீதிக்கு ஏதிரான அவற்றின் நடப்புக் குறித்தும் மதச் சார்பின்மைக்கு விரோதமான நடவடிக்கைகள் குறித் தும் குறிப்பாக மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்குத் திணிக் கப்பட்ட ‘நீட்’ எனும் நுழைவுத் தேர்வு குறித்தும் விளக்கமாக எடுத்துரைத்தார். மாலை நேர வகுப்பு போல அவ்வுரைகள் அமைந்திருந்தன என்றே கூறவேண்டும்.
அரசியல் நோக்கமின்றி சமூக பொறுப்புடன் பொது நிலையிலிருந்து திராவிடர் கழகம் நாட்டு நலனில் அக்கறை கொண்டு பாடு படக் கூடிய சமூகப் புரட்சி இயக்கம். அத்தகு இயக்கத்திற்கு உள் நோக்கம் கற்பிக்க முடியாது என்ற விதமாக, தம் உரையைத் தொடங்கினார்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் அறவாணன் அவர் களின் ஆய்வு நூலிலிருந்து ஒரு முக்கிய தகவலைத் தெரி வித்து, பின்னால் தாம் கூறும் கருத்துக்கு வலு சேர்த்தார்.
ஒரு நூற்றாண்டுக்கு முன் தமிழர்களில் படித்தவர்கள் ஒரு சதவீதத்துக்கும் குறைவு; அரசிளங்குமரன் கூடப் படித்திருக்கவில்லை என்று அந்நூலிலிருந்து எடுத்துக் காட் டிய தமிழர் தலைவர் அவர்கள் நமது அரசர்கள் பள்ளிகள் கண்டதெல்லாம் பார்ப்பனர்கள் சமஸ்கிருதம் படிப்பதற்கே என்று கூறியது வரலாற்றுப் பேருண்மையே!
எடுத்துக்காட்டாக பலவற்றைக் கூறமுடியும். 11ஆம் நூற்றாண்டில் தென் ஆற்காடு மாவட்டத்தில் எண்ணாயிரம் என்னும் கிராமத்தில் சோழ அரசர் கல்விக் கூடம் ஒன்றை உருவாக்கினார். 140 மாணவர்கள் படித்தனர். 14 ஆசிரியர்கள், 45 வேலி நிலம் அதற்காக ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், அங்கு சொல்லிக் கொடுக்கப்பட்டது என்ன?
மீமாம்ச வேதாந்தத் தத்துவம், சமஸ்கிருத இலக்கணங்கள் கற்பிக்கப்பட்டன. திருபுவனம், திருவாவடுதுறை போன்ற இடங் களிலும் இதே நிலைதான்.
இராபர்ட் டி. நொபுலி என்ற இத்தாலிய பாதிரியார் எழுதிய ஒரு கடிதத்தில் அதிர்ச்சியூட்டக்கூடிய ஒரு தகவல் என்ன தெரியுமா?
1610ஆம் ஆண்டில் விஜயநகர மன்னர்கள் ஆட்சியில் மதுரை யில் 10 ஆயிரம் மாணவர்கள் பயின்றனர். அவர்கள் அத்தனைப் பேரும் பார்ப்பனர்களே என்று எழுதியுள்ளார் என்றால் நம் நாட்டின் நிலையைத் தெரிந்துகொள்ளலாமே!
நூற்றாண்டு காணும் திராவிடர் இயக்கம்தான் நம் மக்களுக்கு கல்வி உரிமை வேண்டும் என்று குரல் கொடுத்து - போராடியது - அதில் வெற்றியும் கண்டுள்ளது.
உலகத்திலேயே தங்களைத் தவிர மற்றவர்களுக்கு அதா வது சூத்திர, பஞ்சம மக்களுக்கு கல்வியைக் கொடுக்காதே என்று சொன்ன ஒரே ஒரு மதம் ஹிந்து மதம்தான். அந்தப் பார்ப்பன மேல்ஜாதி ஆதிக்க மதத்தை எதிர்த்துப் போராடிப் போராடித்தான் கல்வி உரிமை கிடைத்தது. இந்தியத் துணைக் கண்டத்திலேயே 69 சதவீத இடஒதுக்கீடு சட்டப்படி கிடைக்கச் பெற்றுள்ள ஒரே மாநிலம் தமிழ்நாடுதானே!
96 சதவீதம் அளவுக்கு பத்தாம் வகுப்புத் தேர்வில் மாணவர்கள் வெற்றி பெறுகிறார்கள் என்றால் இது கல்வி வளச்சியைக் காட்டுவதல்லவா?
இந்தக் கல்வி வளர்ச்சிக்கு இடை இடையே முட்டுக்கட் டைகள் வரும்பொழுதெல்லாம் அவற்றைத் தகர்த்தெறிந்து நம் மக்கள் கல்வியின் பயனைத் துய்ப்பதற்கான பணியில் முழு மூச்சாக ஒப்படைத்துக் கொண்டு பாடுபடுவது - போரா டிப் பாதுகாத்துத் தருவது திராவிடர் கழகம் அல்லவா?
குறிப்பாக எம்.ஜி.ஆர். அவர்கள் ஆட்சிக் காலத்தில் நுழைவுத் தேர்வு கொண்டு வரப்பட்டது. அதனையும் தொடக்கம் முதலே எதிர்த்து வந்தது திராவிடர் கழகமே! (2007)
கலைஞர் அவர்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபோது அந்த நுழைவுத் தேர்வு முற்றிலுமாக சட்டரீதியாகவே ஒழிக்கப்பட்டது. இந்த சட்டத்திற்கான உருவாக்கத்திற்குத் தேவையான யோசனை களைச் சொன்னதும் திராவிடர் கழகமே.
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ஆண்டு வருமானம் ரூபாய் ஒன்பதாயிரம் என்றால் அவர்களுக்கு இடஒதுக்கீடு கிடையாது என்று எம்.ஜி.ஆர். ஆட்சி கொண்டுவந்த நிலை யில் அதனையும் முறியடித்தது திராவிடர் கழகமே.
இப்பொழுது மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு ‘நீட்’ என்னும் நுழைவுத் தேர்வை மத்திய பி.ஜே.பி. ஆட் சியால் திணிக்கப்பட்டுள்ளது. +2 தேர்வில் எவ்வளவு மதிப் பெண் பெற்றிருந் தாலும் அதனைக் குப்பைக் கூடையில் தூக்கி எரிந்துவிட்டு, ‘நீட்’ என்னும் நுழைவுத் தேர்வில் பெறும் மதிப்பெண்தான் மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கான தகுதியாக நிர்ணயிப்பது என்றால் இது என்ன அநியாயம் என்ற வினாவை எழுப்பினார் திராவிடர் கழகத் தலைவர்.
இந்தியா முழுதும் ஒரே மாதிரியான கல்வி இல்லாதபோது - குறிப்பாக சி.பி.எஸ்.இ. கல்வித் திட்டத்தின் கீழ் பொதுத் தேர்வு நடத்துவது என்பது பொதுவான (Uniformity) அளவு கோலாக இருக்க முடியுமா என்ற வினாவைத் தொடக்கம் முதலே எழுப்பி வருவது திராவிடர் கழகமே!
அது மாத்திரமல்ல. ஒவ்வொரு மாநிலத்திற்கும் வெவ் வேறு கேள்விகள் அடங்கிய வினாத்தாள் என்றால் அது எப்படி சமமான முறையில் மதிப்பீடு செய்வதாக இருக்க முடியும்? என்று திராவிடர் கழகத் தலைவர் அவர்கள் எழுப் பிய வினாவின் நியாயத்தை நன்கு உணர்ந்தனர் என்பதற்கு அடையாளம் பொதுமக்களின் மிக நீண்ட கரஒலியே!
ஒரு மாநிலத்திற்குள் நடத்தப்பட்ட தேர்வில்கூட தமிழில் கேட்கப்பட்ட கேள்விகள் வேறு, ஆங்கிலத்தில் கேட்கப்பட்ட கேள்விகள் வேறு என்பது பார்ப்பனியத்திற்கே உரித்தான பிரித்தாளும் சூழ்ச்சிதானே!
இதில் இன்னொரு சதிப் பின்னணியும் இருக்கிறது என்பதைப் கவனிக்கத் தவறக் கூடாது. சி.பி.எஸ்.இ. முறை யில்தான் ‘நீட்’ தேர்வு என்பதால் மாணவர்கள் பெரும்பாலும் சி.பி.எஸ்.இ. பள்ளிக் கூடங்களில் சேரும் ஆர்வம்தானே சிறகடித்துப் பறக்கும். அப்படி சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் மாணவர்கள் சேர்வார்களேயானால் அங்கே சமஸ்கிருதம் அல்லது இந்தியைக் கட்டாயமாகப் படித்திட வேண்டும் அல்லவா? எப்பொழுதும் திரைமறைவு சூழ்ச்சி என்பது பார்ப்பனியத்திற்கே உரித்தான கைவந்த கலையாயிற்றே! இத்தகைய கருத்துகளையெல்லாம் திராவிடர் கழகத்தைத் தவிர வேறு எந்த முகாமிலிருந்து கேட்க முடியும்?
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- சபாஷ்; சரியான தண்டனை!
- கங்கை என்னும் சாக்கடை!
- ‘கல்கி’யாலேயே பொறுக்க முடியவில்லை
- ஆற்றில் வீசப்பட்ட இந்துக் கடவுள்கள்
- ‘நீட்’ தேர்வும் - மேற்கு வங்கமும்!
No comments:
Post a Comment