Wednesday, May 24, 2017

பெண்களைப் "பாவ யோனி"யில் பிறந்தவர்கள் என்று கூறும் பகவத் கீதையை பள்ளிகளில் கட்டாயமாக்குவதா?

எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து நாடாளுமன்றத்தில் எதிர்த்து முறியடிப்பீர்!
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை

பெண்களை 'பாவ யோனியில்' பிறந்தவர்கள் என்றும், நான்கு வருணங்களையும் நானே படைத்தேன் என்றும், பகவான் கிருஷ்ணன் சொன்னான் என்றும் கூறும் கீதையைப் பள்ளிகளில் பாடநூலாகக் கட்டாயமாக வைக்க வேண்டும் என்ற பி.ஜே.பி.யின் முயற்சியை எதிர்த்தும், இந்த மசோதாவை எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்த்துக் குப்பைக் கூடையில் போட வேண்டும் என்று வலியுறுத்தியும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
மத்தியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் நடத்தப்பெறும் மோடி தலைமையிலான பா.ஜ.க. சில கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டு, என்.டி.ஏ. என்ற தேசிய ஜனநாயக கூட்டணி அரசு என்ற பெயருடனே கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
வளர்ச்சி, வேலைவாய்ப்புகளைப் பெருக்குதல், விவசாயிகளின் வாழ்வைப் பன்மடங்கு வளப்படுத்துவோம் என்றெல்லாம் தேர்தலில் கூறிவிட்டு, ஆட்சிக்குப் பெரும் பலத்தோடு வந்துவிட்ட பிறகு ‘மதச் சார்பற்ற’ என்ற அரசமைப்புச்சட்டம் விதித்துள்ள ஆட்சிமுறையையே தூக்கி எறியும் வண்ணம் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமும் செயல்கள் நடைபெற்று வருகின்றன.
கூட்டாட்சித் தத்துவத்துக்கு வேட்டு
கூட்டாட்சித் தத்துவத்திற்கு வேட்டு வைத்து ஒற்றை ஆட்சிமுறை (Unitary System) யைக் கொண்டு வரும் வகையில், மாநிலங்களின் உரிமைகளை மத்திய அரசே எடுத்துக்கொள்ளும் பணியையும் அடக்கமாகவும், அதேநேரத்தில் உறுதியாகவும் திட்டமிட்டே நடத்துகின்றது.
பன்மதங்கள், பல மொழிகள், பல கலாச்சாரங்கள் உள்ள ஜனநாயகக் குடியரசினை மாற்றி `ஹிந்து ராஷ்டிரமாக்கிட’ அவ்வப்போது தொடர்முயற்சிகளை பல்வேறு ரூபத்தில் நடத்திட முயலுகின்றது.
ஜாதி, வர்ணாஸ்ரமம், அந்நிலைக்கு கர்ம வினைப்பயனே காரணம்; ஆத்மா அழியாதது ஆகையால் நாட்டில் கொலைகள் உடலை மட்டும்தான் அழிக்கின்றன என்ற  ஜாதி தர்மம் நிலைக்கப்பாடுபட வேண்டும்.
பகவத் கீதை பள்ளிகளில் கட்டாயமாம்!
மக்கள் தொகையில் சரிபகுதியாக உள்ள பெண்களும், சூத்திரர்களும் பாவ யோனியில் பிறந்தவர்கள் என்பது போன்ற அறிவுக்கு ஒவ்வாத கருத்துகளை உள்ளடக்கிய `பகவத் கீதை’ என்ற நூலை கல்வித் திட்டத்தில் பள்ளிகளில் கட்டாயமாக்கிட வேண்டும் என்று பா.ஜ.க.வின் எம்.பி. ரமேஷ் பிடாரி என்ற ஒருவர் தனி நபர் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மசோதா நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் பகவத் கீதை வாசிப்பதைக் கட்டாயமாக்க வேண்டும், இதை அமலாக்காத பள்ளிகளின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் என்று அம்மசோதா கூறுகிறது.
அரசின் மதச்சார்பின்மை பலி!
அரசின் மதச்சார்பின்மை எப்படியெல்லாம் சின்னாபின்னப்படுத் தப்படுகிறது என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு அல்லவா?
சதுர்வர்ணம் மயா ஸ்ருஷ்டம் என்று கடவுள் அவதாரமான கண்ணன் கூறுகிறான் என்று எழுதி, ஜாதியைப் பாதுகாக்கிறது!
பெண்களை அசிங்கமாக அருவருக்கத்தக்க வகையில் பாவயோனியில் பிறந்தவர்கள் என்று  கீதை கூறுகிறது!
கொலையை நியாயப்படுத்தும் நூல் இந்நூல் - காந்தியாரைக் கொன்ற கோட்சே, `நான் கீதையைப் படித்தபிறகே இந்த முடிவுக்கு வந்தேன்’ என்று நீதிமன்றத்திலேயே வாக்குமூலம் தந்துள்ளான்.
இந்த வன்முறையைத் தூண்டும் நூலை- மாணவர்களின் பிஞ்சு உள்ளத்தில் புகுத்தினால் அது நஞ்சைப் புகுத்துவது அல்லவா?
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து
எதிர்க்க வேண்டும்
இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் உள்ள அத்தனை எதிர்க்கட்சிகளும் கடுமையாக எதிர்த்து தோற்கடித்து, குப்பைக் கூடைக்கு அனுப்ப வேண்டும்.
கல்வி எப்படி காவிமயமாக்கப்படுகிறது பார்த்தீர்களா? வன்மையான கண்டனங்கள் குவியட்டும்.
பகவத் கீதையை தேசிய நூலாக்க அரசு பிரகடனப்படுத்த வேண்டும் என்று முன்பு குரல் எழுப்பியவுடன் எதிர்ப்பு - கண்டனம் புயல்போல் கிளம்பியதால் அது பின்வாங்கப்பட்டது.
மீண்டும் ஆழம் பார்க்கவே இம்முயற்சி; எல்லோரும் ஒன்று திரண்டு இம்முயற்சியை முறியடிக்க வேண்டும்.
கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை 

23-5-2017
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
        



No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...