Sunday, December 11, 2016

இந்து மதம் எங்கே சென்றாலும் துரத்தும் ஜாதி பிரிட்டனில் ஜாதி பாகுபாடு தடைச் சட்டம்!

லண்டன், டிச.11 இந்து மதம் எங்கே சென் றாலும் ஜாதியையும் பத்திரமாக எடுத்துச் செல்லும் நிலையில், இங்கிலாந்தில் ஜாதி பாகுபாட்டைத் தடுக்கும் தடைச் சட்டம் கொண்டுவரப்படுகிறது.
பிரிட்டனில் ஜாதி பாகுபாடு தடைச் சட்டம் கொண்டு வரப்படுகிறது. என்ன வியப்பாக இருக்கிறதா? பிரிட்டனில் ஜாதி இருக்கிறதா என்று கேள்வி கேட்டால், பிரிட்டனில் இந்தியர்கள் இருக்கிறார்களே என்பது பதிலாக வருகிறது. ஏற்கெனவே, வெள்ளையர், கருப்பர், இஸ்லாமியர் என இனப்பாகுபாடு நிலவும் பிரிட்டிஷ் சமூகத்தில் இன்று ஜாதியும் சேர்ந்து நிற்கிறது.
ஏற்கெனவே,அய்.நா.சபையின்வழி காட்டலின்படி, 2010 ஆம் ஆண்டில் பிரிட்டன் சமத்துவச் சட்டம் (Equality Act) இயற்றப்பட்டது. ஆனால், இச்சட்டம் மதங் களுக்கிடையிலான பாகுபாட்டினை தடை செய்வதற்கு போதுமானதாக இருந்தாலும், மதங்களில் உள்ளுறைந்து நிற்கும் ஜாதி களுக்கிடையிலான பாகுபாட்டினைத் தடை செய்வதற்கும், மீறல்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கும் போதுமானதாக இல்லை.
இத்தகைய நிலையிலிருந்தே இன்று அதற்கான ஒரு துணைச் சட்டம் தேவைப் படுகிறது என விவாதம் தொடங்கியிருக்கிறது. இது இந்தியர்களை மய்யப்படுத்தி வர விருக்கும் சட்டம் எனக் கூறப்படுகிறது. சிறுபான்மையினராக இருப்பினும், இந்திய தலித் வம்சாவளியினர் இந்து, கிறிஸ்தவ, சீக்கிய மதங்களில் ஒரு கணிசமான பகுதி யினர் பிரிட்டனில் இருக்கின்றனர்.
அய்.நா. கூறியும்...
இவர்களுக்கு எதிரான பாகுபாடுகள் சமூக அளவில் பரவிக் கிடக்கின்றன. எனவேதான் இச்சட்டம் அங்கே தேவைப்படுகிறது. கல்வி யில், வேலைவாய்ப்பில், மருத்துவ சேவை பெறுவதில் என பல வகையிலும் அரசு அதிகாரிகள் மட்டத்தில், பல பாகுபாடுகள் உள்ளன. அரசுத் துறையில், ஓரளவில் சட்டம் இல்லாமலேயே சமாளிக்க முடியும். எனினும், தனியார்த் துறையினை இவ்விஷயத்தில் கட்டுப்படுத்த சட்டம் தேவை என்பது அரசுத் தரப்பு வாதம். அய்.நா. சபையின் வழிகாட்டலுக்குப் பின்னரும் நீண்ட நாள் அதைக் கண்டு கொள்ளாதிருந்த பிரிட்டிஷ் அரசு, இப்போது அது குறித்த வாதத்தினைத் தொடங்கி இருக்கிறது.
இயல்பாகவே, அத்தகைய சட்டம் தேவை இல்லை என்ற குரலும் அங்கு இப்போது எழும்பியிருக்கிறது. சிவில் உரிமை பாதுகாப்புச் சட்டம், (Protection of Civil Rights) எஸ்.சி / எஸ்.டி மக்கள் மீதான வன்கொடுமை தடைச் சட்டம் போன்ற சட்டங்கள் இந்தியாவில் வந்த போது, அவற்றிற்கெதிராக, இங்கு என்ன வாதங்கள் எல்லாம் முன்வைக்கப்பட்டனவோ, ஏறக் குறைய அதே போன்ற வாதங்கள் அங்கேயும் முன் வைக்கப்படுகின்றன.
அத்தகைய பாகுபாடுகள் எதுவும் இல்லை என சிலர் அடித்துக் கூறி வருகின்றனர். இந்தச் சட்டத்திற்கு ஆதரவாகப் பேசியிருக்கும் லண்டனைச் சேர்ந்த நடிகரும், சமூக ஆர்வலருமான சவுந்தேவன் அபராந்தி என்ன கூறுகிறார்:
‘இந்தியர்களில், ஒரு குறிப்பிட்ட கீழ் நிலை ஜாதியைச் சேர்ந்தவர் என்பதால், அவருடைய இல்ல நிகழ்ச்சிகளுக்கு அரங்கங்கள் மறுக்கப்படுகின்றன;  இதே போன்று ஒரு மூதாட்டிக்கு இதே ஜாதி பாகுபாடு அடிப்படையில் மருத்துவ சேவை மறுக்கப்பட்டிருக்கிறது. இந்தியர்களின் பூர் வீகத்தை எப்பாடுபட்டாவது கண்டுபிடித்து விடுகிறார்களாம்.’
இந்தியாவைப் போலவே....
இந்தியாவில், சில கீழ்நிலை வேலை களில் சில குறிப்பிட்ட ஜாதியினர் ஈடுபடுத் தப்படுவதால், உருவான மேல்-கீழ் ஜாதி மனநிலை பிரிட்டன் போன்ற நவீன சமூகத்திற்குள் நுழைந்த பின்னரும் சில இந்தியர்களிடம் தொடர்வது குறித்து பிரிட்டிஷ் சமூக ஆர்வலர்கள்  தங்களது  அதிர்ச்சியைத்  தெரிவித்திருக்கின்றனர்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் ஜார்ஜ் குன்னத் கூறும் போது,
‘‘பிரிட்டனில் ஜாதி பாகுபாடு நிச்சயம் இருக்கிறது. அது பல வடிவங்களில் இருக் கிறது. இந்தச் சட்டத்திற்கு ஆதரவான பிரச்சாரம், மதங்களுக்கு எதிரானது அல்ல.
மாறாக அது, சுதந்திரம் மற்றும் கவுரவமான வாழ்க்கைக்கான தலித் மக்களின் போராட்டம் குறித்தது’’ என குறிப்பிட்டிருக்கிறார்.
ஜாதி என்பதை இனம் குறித்த அம்ச மாகவே பார்க்க வேண்டும் என்பது அய்.நா. சபை விவாதங்களில் வெளிப்பட்ட கருத்து. ஜாதிப் பாகுபாடு என்பது. மனித உரிமை மீறல். இதுவே, பிரிட்டனில் உள்ள சமூக ஆர்வலர்களின் நிலைப்பாடும் கூட. உலகமயம் என்றெல்லாம் நவீனம் பேசினாலும், தங்களது பொருளியல் வாழ்க் கையில் முன்னேறிச் செல்ல வேண்டும் என விழைந்தாலும், சமூக வாழ்க்கையில் என்னவோ சிலருக்கு மனது பின்னோக்கிச் செல்லவே விரும்புகிறது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...