Saturday, December 17, 2016

நினைத்தது ஒன்று நடந்தது வேறொன்று!

‘‘நாட்டில் 45 கோடி மக்கள் தினக்கூலிகள். பால்காரர், மீனவர்கள் மற்றும் விவசாயிகள் (ஒரு நீண்ட பட்டியலே உண்டு) மத்திய அரசின் பண மதிப்பிழப்பு உத்தரவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
‘‘பண மதிப்பிழப்பு என்பது தொலைநோக்கு யோச னையே இன்றி எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கை. உலகின் அனைத்துப் பெரிய பொருளாதார வல்லுநர்களும், பெரிய செய்தித்தாள்களும், இந்த நடவடிக்கையை விமர்சனம் செய்துள்ளன. பண மதிப்பிழப்பு உத்தரவைத் தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி தனது உரையில், கருப்புப் பணத்தை ஒழிக்கப்போவதாக முழங்கினார். தற்போது  பணமற்ற பொருளாதாரம் என்ற வார்த்தை அவர் பேச்சில் இடம் பிடித்துள்ளது. கருப்புப் பணத்தை இந்த அறிவிப்பு ஒழிக்கவில்லை என்பதை அறிந்து கொண்ட மோடி, தனது பேச்சை பணமற்ற பொருளாதாரம் என்பதை நோக்கி நகர்த்தி விட்டார்.
பணமற்ற டிஜிட்டல் பொருளாதாரம் என்பது நல்லதே. ஆனால், அதை அவசர கதியில் செய்யக் கூடாது - முடியாது. இதற்கு உரிய கால அவகாசம் தர வேண்டும். பெரும்பாலான நகரங்களிலுள்ள அங்காடிப் பகுதிகள் தற்போது மூடப்பட்டு கிடக்கின்றன. வாரத்திற்கு ரூ.24,000 அளவுக்கு ரொக்கப் பணத்தை பொதுமக்கள் பெற்றுக்கொள்ள முடியும் என்பது மத்திய அரசின் அறிவிப்பு. ஆனால், மக்களால் அந்த அளவுக்குப் பணத்தைப் பெற முடியவில்லை. எனக்கே கூட அந்த பணம் இன்னும் கிடைக்கவில்லை. எனவே கேள்வி எழுப்ப முழு சுதந்திரம் எனக்கு உள்ளது. ஏடிஎம் மய்யங்களுக்கு மோடி நேரில் சென்று மக்கள் படும் கஷ்டத்தை பார்க்க வேண்டும்‘’ என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் (13.12.2016) தெரிவித்துள்ளார்.
‘‘மத்திய அரசின் ரூபாய் நோட்டு ரத்து விவகாரம் என்பது ஒரு பொருளாதார அவசர நிலையை உரு வாக்குவது போன்ற சூழ்நிலையை ஏற்படுத்தி விட்டது. 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை ஒழித்துவிட்டு 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடுவது ஊழல்வாதிகளுக்கு வசதியாகப் போய்விடும். அவர்கள் குறுக்கு வழியில் தங்களின் ஊழல் பணத்தை பதுக்கி வைப்பதற்கு மோடி வசதி செய்து கொடுக்கிறார்.
இந்தியாவில் 83 விழுக்காடு புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளை ரத்து செய்யும் முன்பு இதனால் ஏற்படும் பின்விளைவுகள் பற்றி சிந்திக்காமல் இப்படி ஒரு மோசமான நடவடிக்கையால் ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள் தங்களின் சிறிய சேமிப்பைக்கூட வங்கிகளிடம் கொடுத்துவிட்டு, செலவிற்குப் பணம் வாங்க வங்கி வாசலில் காத்துக் கிடக்கின்றனர்.  மோடி அரசியல் செய் வதற்காக நாட்டின் முக்கிய விவகாரங்களில் தலையிட்டு நாட்டின் பொருளாதாரத்தையே சீர்குலைக்கும் நடவடிக் கையில் ஈடுபட்டு வருகிறார்’’ என்கிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சரத்பவார் (4.12.2016).
‘‘பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் ஒட்டுமொத்த நாடும் தற்போது வங்கிகளின் முன் நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை ஒரு சாராருக்கு மட்டுமே நன்மை விளைவிப்பதாக உள்ளது. இதன்மூலம் யாரோ ஆதாயம் பெறுகிறார்கள்’’ என்கிறார் ஜனதா தள தலைவர் சரத்யாதவ் (30.11.2016).
‘‘பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என, அறி விக்கப்பட்டதில் பெரிய ஊழல் நடந்துள்ளது. மக்கள் பணம், 10 லட்சம் கோடி ரூபாய் வலுக்கட்டாயமாக, வங்கிகளில், ‘டெபாசிட்’ செய்ய வைக்கப்பட்டுள்ளது; அதேசமயம், கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன், தள்ளு படி செய்யப்படுகிறது. பிரதமர் மோடி, பணம் எடுக்க வரிசையில் நின்று, தேசபக்தியை காட்டும்படி கூறுகிறார்; ஆனால் வரிசையில் நின்று இறந்த, நூற்றுக்கும் மேற்பட் டோரின் உயிருக்கு யார் பொறுப்பு?’’ என்கிறார் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் (17.11.2016).
இவர்கள் எல்லாம்கூட  ‘அரசியல்வாதிகள்’ என்று சொல்லலாம். ஆங்கில நாளேடான ‘எக்னாமிக்’ என்ன கூறுகிறது?
‘‘உலகின் ஊழலுக்கெல்லாம் முதன்மை ஊழல் மோடி கொண்டு வந்த ரூபாய் நோட்டின் ஒழிப்பின் மூலம் நடக் கப் போகிறது,
பணமில்லாப் பரிமாற்றம் என்பது இலவசமாக கொடுக்க முடியாது; பணமில்லா பரிமாற்றத்திற்கான மின்னணு கருவிகள், அதற்கான பராமரிப்பு சேவை கள், இணையதளம், மின்சாரம் போன்றவற்றை பயன்படுத்தினால் மட்டுமே பணமற்ற பரிமாற்றம் சாத்தி யமாகும். இது கூடுதல் சுமையாகி விடுகிறது. மேலும் இதை இலவசமாகக் கொடுக்க இயலாது.
உதாரணத்திற்கு 100 ரூபாய் நோட்டு 1,00,000 முறை கைமாறினாலும் அதன் மதிப்பு ரூ.100 ஆக மட்டுமே இருக்கும்.
இதே நேரத்தில் பணமில்லா பரிமாற்றத்தின்மூலம் ஒரு முறை 100 ரூபாய் நாம் செலுத்தினால் அதற்கான வரியாக 2.5 விழுக்காடு பெறப்படும். அதாவது 1.00,000 முறை 100 ரூபாய் பணமற்ற பரிமாற்றத்தின் மூலம் 2,50,000 ரூபாய் பரிமாற்றம் சேவைக் கட்டணமாக ஜியோ மணி, பேடைம் போன்ற பல்வேறு தனியார் நிறுவனங்களுக்குப் போகிறது,
அப்படி என்றால் நாடு முழுவதும் நடைபெறும் கோடிக் கணக்கான பணமில்லாப் பரிமாற்றம்மூலம் லட்சம் கோடிகள் தனியார் நிறுவனங்களால் கொள்ளையடிக்கப்படும். மோடியின் மிகவும் நவீன நுட்பமான இந்த ஊழல்தான் உலகின் ஊழலுக்கு எல்லாம் முதன்மையாக இருக்கப் போகிறது.’’ (‘எக்னாமிக்‘, 7.12.2016).
கருப்புப் பணத்தை ஒழிப்போம் என்று கூறி இப்பொழுது ரொக்கமற்ற பரிவர்த்தனை என்று ஏதேதோ நாளுக்கொன்று கூறி மிடறு விழுங்கித் தத்தளிக்கிறார் பிரதமர் மோடி.
இவ்வளவு சீக்கிரத்தில் இவ்வாட்சியின் சாயம் வெளுத்துப் போகும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.
உப்புத் தின்றுள்ளார் பிரதமர் - அந்தளவுக்குத் தண்ணீர் குடித்துத் தானே தீரவேண்டும்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...