Saturday, December 10, 2016

யோக்கியப் பொறுப்புடன் சிந்திக்கட்டும்!

வரும் 12 ஆம் தேதியன்று திருவண்ணாமலையில் மகாதீபமாம். அன்று அண்ணாமலையார் கோவிலில் தீபத் திருவிழாவாம். அப்படியென்றால் என்ன?
2668 அடி உயரம் உள்ள மலை உச்சியில் 200 கிலோ செப்புத் தகட்டில் தயார் செய்யப்பட்ட ஒரு கொப்பரையில் 3,500 கிலோ நெய் ஊற்றப்பட்டு தீபம் ஏற்றப்படும் - இதுதான் மகாதீபம் என்று சொல்லப்படுவது.
இது ஓர் இந்து மதப் பண்டிகை. அந்தப் பண்டிகையின் தாத்பரியம் என்ன?
இந்த மூடப்பண்டிகைக்கு 2 கதைகள் உள்ளன.
ஒரு சமயம் அக்னிதேவன் என்னும் கடவுள் சப்த ரிஷி களின் மனைவிமார்களைப் பார்த்து மோகங்கொண்டானாம். அதனை அறிந்து அவனது மனைவி சுவாகாதேவி  என்பவள், அவர்களுடன் தன் கணவன் மோகங்கொண்டதால், சப்த ரிஷிகள் சபித்துவிடுவார்கள் என்று எண்ணிப் பயந்து, அதனால் தானே வசிஷ்டரின் மனைவி அருந்ததியை விட்டு விட்டு, மற்ற ஆறு ரிஷிகளின் மனைவிமார்களைப் போல் உருவம் கொண்டு, தன் கணவன் ஆவலை நிறைவேற்றினாளாம். இவ்வாறு சுவாகாதேவி கொண்ட ஆறு உருவத்திற்கும் கார்த்திகை என்று பெயராம். இவைகள் தாம் கார்த்திகை நட்சத்திரமாகக் காணப்படுபவையாம். இந்த நட்சத்திரப் பெண்கள்தான் சுப்பிரமணியன் என்ற கடவுள் குழந்தையாக இருந்த போது அதை எடுத்து வளர்த்தார்களாம்!
அடுத்து, இதன்மூலம் அறிவது, பிறர் மனைவிமேல் ஆசைப் படுவது, விபச்சாரம் செய்வது குற்றம் இல்லை. தன் கணவன் எந்தக் காரியத்தை விரும்பினாலும் அதைப் பூர்த்தி செய்து கொடுக்கும் அடிமைகளாக மனைவி இருக்க வேண்டும் என்பது!
இவ்வாறு நம் மக்களுக்கு கற்பிக்கும் மூடநம்பிக்கையைப் பாருங்கள்.
அடுத்த கதை.
ஒரு சமயம் பிரம்மா , விஷ்ணு ஆகிய இரண்டு கடவுள்கள் ஒவ்வெருவரும் முழுமுதற்கடவுள் தாம், தாமே என்று கூறிக் கொண்டதனால், இருவருக்கும் வாய்ச்சண்டை ஏற்பட்டு பிறகு அடிபிடிச்சண்டை ஆகிவிட்டதாம் . இதைக் கண்ட பரமசிவன் எனும் கடவுள், வானத்திற்கும், பூமிக்குமாக ஒரு பெரிய ஜோதி உருவில் அவர்கள் இருவருக்கும் இடையில் நின்றானாம். சண்டை போட்டுக்கொண்டு இருந்த இருவரும் திகைத்து நிற்க உடனே பரமசிவன் தோன்றி இந்த ஜோதியின் அடிமுடிகளை யார் முதலில் கண்டு வருகின்றார்களோ அவர் தான் ‘பெரியவர்’ என்றானாம்.
உடனே விஷ்ணு பன்றி உருவம் கொண்டு பூமிக்குள் துளைத்துக் கொண்டு வெகுதூரம் சென்று காணமுடியாமல் திரும்பிவிட்டானாம்.
பிரம்மன் அன்னப்பறவை வடிவம் கொண்டு ஜோதியின் முடியைக் காண மேலே பறந்து சென்று கொண்டு இருக்கையில், கீழ் நோக்கி ஒரு தாழம்பூ வந்துகொண்டு இருந்ததாம். அதைக் கண்டு பிரம்மன், ‘தாழம்பூவே எங்கிருந்து, எவ்வளவு காலமாய் வருகின்றாய்;’ என்று கேட்கவும், ‘நான் பரமசிவன் முடியில் இருந்து கோடிக்கணக்கான வருஷங்களாக வந்து கொண்டு இருக்கின்றேன்’ என்றதாம். உடனே பிரம்மன், ‘நான் சிவன் முடியைப் பார்த்துவிட்டதாக சாட்சி கூறுகின்றாயா?’ என்று கெஞ்சினானாம். அதற்குத் தாழம்பூ சம்மதித்ததாம். இதைக் கண்ட சிவன் கோபங்கொண்டு ‘‘பொய் சொன்னதற்காக பிரம்மனுக்கு இவ்வுலகில் கோவில் இல்லாமல் போகக் கடவது’’ என்றும், ‘‘தாழம்பூ இனிமேல் பூஜைக்கு உதவாமல் போகக்கடவது’’ என்றும் சாபமிட்டாராம்.
உடனே பிரம்மாவும், விஷ்ணுவும் வருந்தி - திருந்தி சிவன்தான் பெரியவன் என்பதை உணர்ந்து, மன்னிப்புக் கேட்டுக்கொண்டு,  தங்கள் வழக்கைத் தீர்த்து வைத்ததற்கு அடையாளமாக, ‘‘இம் மலையின் மேல் ஒரு ஜோதி உருவாகி இருக்கவேண்டும்‘’ என்று கேட்க, அதற்குச் சிவனும் சம்மதம் தெரிவித்து, ‘‘ஒவ்வொரு வருடமும் கார்த்திகைப் பண்டிகையில் இந்த மலையில் ஜோதி யாய்க் காணப்படுவேன்’’ என்று சொன்னானாம். இதுதான் திரு வண்ணாமலைப் புராணமாகிய அருணாசலப் புராணத்தில் கூறப்படும் கார்த்திகைத் தீபப் பண்டிகையாம்.
இதுதான் இந்த தீபப் பண்டிகையின் புராணக் கதையாகும்.
இதில் அறிவுக்குப் பொருந்தக்கூடியது ஏதாவது இருக்கிறதா? ஒழுக்கத்துக்கு உகந்ததாகத்தான் இருக்கிறதா?
முதல் கதையில் அக்னி தேவன் என்னும் கடவுள் ரிஷி களின் மனைவிகள்மீது மோகங்கொண்டான் என்பது எத்தகைய கேவலம்! அக்னி தேவனின் மனைவி சுவாகாதேவி தன் கணவனின் மோகத்தைத் தீர்க்க எவ்வளவுக் கேவலமாக நடந்து கொண்டுள்ளாள்? இப்பொழுது ஒரு பெண் இப்படி நடந்துகொண்டால் அறிவும், ஒழுக்கமும் உள்ளவர்கள் ஏற்றுக்கொள்வார்களா?
தன் கணவனின் காமவெறியைத் தீர்க்க ரிஷிப் பத்தினிகள் ஆறு பேர் உருவங்கொண்டாள் என்று கூறப்படுகிறது அல்லவா - அந்த உருவத்தில் உள்ளவர்களுக்குக் கார்த்திகை  என்று பெயராம்.
இவைதான் கார்த்திகை நட்சத்திரங்களாக வானில் இருக்கின்ற னவாம். (இந்த விஞ்ஞான யுகத்தில் கடுகளவு புத்தி யுள்ளவர்கள்கூட இதனை ஏற்றுக்கொள்வார்களா?
இந்தக் கார்த்திகைப் பெண்களுக்காகத்தான் இந்தக் கார்த்திகை தீபமாம்!
இரண்டாவது கதை - இதைவிட வெகு கேவலமானது. படைத்தல் கடவுள் என்று சொல்லப்படும் பிரம்மா பொய் சொன்ன தற்காக ஒரு பண்டிகை கொண்டாடப்பட வேண்டுமா?
இந்தக் கதையை சைவர்கள் ஏற்றுக்கொள்வார்களே தவிர, வைணவர்கள் ஏற்றுக்கொள்வார்களா?
பிரம்மா, விஷ்ணுவைவிட சிவன்தான் பெரிய கடவுள், சக்தியுள்ள கடவுள் என்பதை வைணவர்கள் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளவே மாட்டார்களே!
மூடத்தனமும், ஒழுக்கக்கேடும் நிறைந்த கதைகளைக் கற்பித்து புராணக் குப்பைகளாக ஏதோ ஒரு காலத்தில் எழுதினார்கள் என்றால், விஞ்ஞானம் வளர்ந்த இந்தக் காலகட்டத்திலும் அவற்றையெல்லாம் கட்டிக்கொண்டு மாரடிக்கவேண்டுமா?
இந்தக் கேவலத்துக்காக 3,500 கிலோ நெய்யை நெருப்பில் கொட்டி எரித்துத் தீபம் என்று கூறி மக்களைக் கூட்டி, அவர் களின் காலத்தையும், பொருளையும், புத்தியையும் நாசப்படுத்தவேண்டுமா?
இந்தியா முழுமையும் 14.5 மில்லியன் குழந்தைகள் ஊட்டச் சத்துக் குறைவால் வளர்ச்சி அடையாமலும், உயரமாக வளர முடியாமலும் உள்ளனர். ஆறு மாதங்களுக்கும் குறைவாக தாய்ப்பால் அருந்தும் குழந்தைகள் 46 விழுக்காட்டிலிருந்து 72 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
2025 ஆம் ஆண்டு பன்னாட்டு சுகாதார அமைப்பின் இலக்கை எட்டுவதில் பெரும் அறைகூவல் காத்திருக்கிறது என்று உலக வங்கி அறிக்கை கூறுகிறது!
இத்தகு நாட்டில் 3,500 கிலோ நெய் நெருப்பில் ஊற்றப்படுவது ஒரு பக்கம்; இன்னொரு பக்கம் ஒழுக்கக்கேடுகளை பக்தியின் பெயரால் மக்களிடம் ஊட்டுகிறது.
யோக்கியப் பொறுப்புடன் யாரும்  இதை சிந்திக்கட்டும்!
அறிவார்ந்த நல்ல முடிவுக்கு வரட்டும் - வரட்டும்!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...