Saturday, November 19, 2016

பக்கவாதம் - மூளைத் தாக்குதல் நோய் அரிய விளக்கவுரை!

அமெரிக்காவில் மேற்படிப்புப் படித்து - பணியாற்றிய பின் நம் நாட்டிற்குப் பயன்பட வேண்டும், தம்முடைய அறிவு, ஆற்றல், அனுபவம் என்ற பெருநோக்கத்தில் தமிழ் நாட்டிற்கு வந்து, சென்னை அப்போலோ மருத்துவமனையில், நரம்பியல் டாக்டராக பணிபுரியும் நடுத்தர வயதுக்காரரான டாக்டர்
ப. சீனுவாசன் அவர்கள், தமிழக மூதறிஞர் குழுவின் சார்பில் கடந்த 12.11.2016 அன்று, "பக்கவாதமும் மூளைத் தாக்குதலும்" (Stroke & Brain Attack) என்ற தலைப்பில், எளியவர்களுக்கும் புரியக் கூடிய வகையில், "பவர் பாயிண்ட் சிலைடு"களைப் போட்டு விளக்கும் வகையில், அருமையானதொரு பயனுறு உரையைத் தந்தார். வந்திருந்து கேட்ட அனைவரும் பயன் பெற்றார்கள்.
உரைக்குப்பின் சுமார்  30 நிமிடங்களுக்கு மேலாக, அரங்கத்தில் குழுமியிருந்து, அந்தப் பேச்சைக் கேட்ட, கேட்பாளர்களான மக்களின் கேள்விகளுக்கு நன்கு விளக்கம் அளித்தார் - தெளிவு பெற்றோம் கேட்டவர்களாகிய நாங்கள்.
இத்தகைய உரைகள் மக்களுக்குப் பரவலான பரப்புரையாகக் கிடைத்தால், அந்நோய் பற்றிய விழிப்புணர்வு, காரணங்கள், தடுப்பு முறை, சிகிச் சைகள், செலவினங்கள் பற்றி எல்லா விவரங்களையும் தெரிந்து கொள்ள பெரிதும் உதவும்.
டாக்டர் உரையிலிருந்து கிடைத்த தகவல்கள் இம்மாதிரி பக்கவாதம், மூளைத் தாக்குதல் (Stroke & Brain Attack) ஏற்பட்டால்,
உடனடியாக தாமதிக்காமல் நல்ல மருத்துவ மனைகளுக்குச் சென்று சிகிச்சையைத் துவங்கினால் - 8 மணி நேரத்திற்குள் சென்று சிகிச்சையைத் துவக்கி விட்டால் முழுமையாக அத்தகைய நோயாளிகளைக் காப்பாற்றிவிட முடியும். 4½ மணி நேரத்திற்குள் மருந்து கொடுக்கப்பட்டு சிகிச்சை செய்தால் நிச்சயம் குணமாக்க வாய்ப்புகள் அதிகம்.
எனவேதான் இதற்கு முக்கியத்துவம் - Time is Brain.
கால தாமதிக்காமல் உரிய நேரத்துக்குள் மருத்து வரிடம் காட்டினால் நோயாளிகளைக் காப்பாற்றலாம்.
காரணம் மூளையின் செல்கள் துவக்கத்தில் பிறக்கும் போது எப்படி அமைந்திருக்கின்றனவோ - அது மற்ற உடல் உறுப்புகள்போல வளராது; மாறாக 'இம்' மாதிரி நோய் ஏற்படும்போது இந்த செல்கள் (முதுமையின் போதும்) குறையவே செய்யும்.
எனவே, இதன் பாதுகாப்புக்கு அவசரம், உரிய நேரத்துக்குள் சிகிச்சை, சரியான மருத்துவர், சரியான மருத்துவமனைகள் - இவைகளைத் தேர்வு செய்வதும், அத்தகைய நோயாளிகள் காப்பாற்றப்படப் பெரிதும் உதவிடும்.
பக்கவாதம் வந்து விட்டதா என்று எப்படிக் கண்டு பிடிப்பது?
மிக எளிதான வழி:
1.      கண்ணாடி முன் புன்சிரிப்பு சிரியுங்கள்; முகம் கோணலாகப் போகும்.
2.     கைகளை மேலே தூக்கிப் பாருங்கள்; தாராளமாக வழக்கம் போல் வருகிறதா என்று பார்த்தால், வராத நிலை என்றால் அலட்சியப்படுத்தாமல் உடனே டாக்டர் - மருத்துவமனைக்கு விரைந்து செல்லுங்கள்.
இந்த மூளைத் தாக்குதல், பக்கவாதம் பற்றிப் பேசுகையில் இதன் தொடர்பான நோய்களை வரிசைப்படுத்தினார் டாக்டர்.
1.      இதய நோய் (Heart diseases)  ரத்தக் குழாய் அடைப்பு
2.     இரத்தக்குழாய் நோய் (Blood vessel diseases)
3.     சிஸ்டமஸ் என்ற நீரிழிவு (Diabetes) அதிகமான ரத்த அழுத்த நோய் (Hypertension)
4.     ரத்த நோய்கள் - ரத்தப்புற்று முதலியன.
5.     அதிகமான அளவு கொலஸ்ட்ரால் (System diseases) காரணம்
6.     அதிகமான அளவு ரத்தத்தில் சர்க்கரை சேர்தல் (High Blood Sugar)
இவைகளைச் சரிப்படுத்திக் குணப்படுத்தலாம்!
மூளைக்குச் செல்லும் ரத்தம் - குழாய்களில் ரத்தக் கசிவு ஏற்பட்டால் (Ischemic Stroke)
நோய் தாக்கும். ரத்தக் குழாயில் வீக்கம் ஏற்பட்டு விடும். இம்மாதிரி நோய்க்கு முக்கியமாகும்.
கை, கால், விழுந்து போதல் என்பதினால் உயிருடன் வாழ்ந்தாலும், வாழ்நாள் முழுவதும் அத்தகைய  நிலை  - அடுத்தவர்களுக்குச் சுமையாகவும் அமையும் நிலைதான்.
எனவே முழுமையாக  குணமடைந்திட Time is Brain என்ற அடிப்படையில் உடனடி  4½ 
மணி நேரத்திற்குள் நோயாளியை சேர்த்து, உரிய சிகிச்சை தந்தால் காப்பாற்றலாம். அதற்குரிய மருந்து, ஊசிகளின் விலை 60 ஆயிரம். காரணம் அது வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாகிறது. இனிமேல் நம் நாட்டில் தயாராகி விலை வருங்காலத்தில் குறையும்!
சிறந்த மருத்துவமனைகள், அதற்குரிய அத்தனை மருந்துகள், அப்படியே நேரத்தைத் தேடுவதில் கழிக்காமல் அடுத்தடுத்து வழிமுறைகள் (Procedure) எல்லாம் தயார் நிலையில் வைத்திருப்பதால், சிகிச்சை தொடங்கி தடையின்றி செய்வார்கள்.
1960 முதல் 2016 வரை இந்நோய் அதிகமாகியுள்ளது.
காரணம் சர்க்கரை - நீரழிவு நோய், அலட்சியம் தான்! பல பெரிய மருத்துவமனைகளில் Package Deal என்று சேர்ந்து சிகிச்சை பெற ஒரு தொகையை மொத்தமாகவும் பெறுகின்றனர்.
நம் நாட்டு அரசு மருத்துவமனைகளில் சில சிறப்பான வகையில் இதைச் செய்தாலும், மருந்துகள் மற்றவைகளை வாங்குவதில், அரசு பல கட்ட ஒப்புதல்களைப் பெற கால தாமதமாகி, பயனுறு வகையில் இதனை இயக்க, நடைமுறை சாத்தியம் குறைவாக தற்போது உள்ளது என்றார் அம்மருத்துவர் நிபுணர்
அருமையான விழிப்பு உணர்வை இந்த உரை தந்தது.
இந்த விளக்கம் தந்த டாக்டர் (பரமசிவம்)
ப. சீனுவாசன் அவர்களுக்கு நமது மகிழ்ச்சி கலந்த பாராட்டுகள்!
- கி.வீரமணி

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...