Total Pageviews

Thursday, November 24, 2016

விவசாய வீக்கமும் - பணமுடக்கமும்!

19.11.2016 அன்று அரக்கோணத்தில் நடைபெற்ற காஞ்சி மண்டல திராவிடர் கழக இளைஞரணி, மாணவரணி மாநாட்டில் நவமணியாக (ஒன்பது) தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
சமூகநீதி தொடர்பான தீர்மானங்கள், வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு குறித்த தீர்மானம்; மத்திய பி.ஜே.பி. அரசின் இந்துத்துவா போக்கைக் கண்டிக்கும் தீர்மானம், கள்ளப் பணத்தை ஒழிப்பதாகக் கூறி மத்திய அரசு அறிவிப்பினைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள பொது மக்கள் மிகப்பெரிய அளவுக்குப் பாதிப்புக்கு ஆளான போக்கு - இவற்றை மய்யப்படுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
காவிரி நீர்ப் பிரச்சினையில் தமிழ்நாடு மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது என்பதைவிட மிகவும் கொடூர மாக வஞ்சிக்கப்படுகிறது என்றுதான் கூறவேண்டும்.
சட்டத்திற்கு விரோதமாகவும், நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகவும் ஒரு மாநில அரசு செயல்படுகிறது என்பதைவிட மிகப்பெரிய கொடுமை - மத்திய அரசே, அந்த சட்ட விரோத செயலுக்குத் துணை போவதுதான். மத்திய அரசின் இந்த சட்ட விரோதப் போக்கு - இளைஞர்களை சட்ட மீறலுக்கு ஆவேசப்படுத்தும் என்பதை அறியாமல் ஓர் ஆபத்தான அரசியல் விளையாட்டை ஆடிப் பார்க்கிறது.
சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்க மத்திய அரசே தூபம் போடுகிறது. பச்சைக் கொடியைக் காட்டுகிறது என்று சொன்னால், அது தவறாகாது.
நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளி யானால், உடனடியாக அதனைச் செயல்படுத்த வேண்டும் என்கிற சாதாரண சட்ட நடைமுறையைக்கூட அறியாமலா ஒரு மத்திய அரசு இயங்கும்? இதற்குமுன் குஜராத் மாநில நதிநீர்ப் பிரச்சினையில் கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறையைக்கூட அறியாதவரா இந்தியப் பிரதமர்?
கருநாடக மாநில அரசும், மத்திய பி.ஜே.பி. அரசும் கைகோத்துக் கொண்டு சட்ட விரோதமாக செயல்படும் காரணத்தால், தமிழ்நாட்டு விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு மடிகிறார்கள். இந்த மரணத்துக்குக் கண்டிப்பாக மத்திய அரசுதான் பொறுப்பேற்கவேண்டும். அரக்கோணம் மாநாட்டில் தற்கொலை செய்துகொண்ட குடும்பத்தினருக்கு மாநில அரசு ரூ.10 லட்சம் அளிக்கவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இன்னும் சொல்லப்போனால், தமிழ்நாட்டில் விவசாயி களின் தற்கொலை மரணத்திற்கு மத்திய அரசு முக்கியப் பொறுப்பாளி என்பதால், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குக் கூடுதலாக நிதி உதவியை மத்திய அரசு செய்வதுதான் அறம் சார்ந்த கடமையாகும்.
தமிழ்நாட்டு அரசை நினைத்தால் அழுவதா, சிரிப்பதா என்றே தெரியவில்லை! அரசு என்று ஒன்று இருக்கிறதா என்பதும் தெரியவில்லை. முதலமைச்சர் நோய் வாய்ப்பட்டார் என்றால், அரசு கூடவா நோய்வாய்ப்பட வேண்டும்?
யார் தற்கொலை செய்துகொண்டால் நமக்கென்ன? யாருக்கோ வந்தது என்ற போக்கில் மாநில அரசு நடந்து கொள்வது கண்டிக்கத்தக்கதாகும்.
திருத்துறைப்பூண்டி பகுதியில் விவசாயியின் குடும்பத்தில் பட்டினி காரணமாக ஒரு குழந்தை இறந்துள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் சட்டப்பேரவை உறுப்பினர் தோழர் பழனிசாமி அவர்கள் சட்டப்பேரவையில் பிரச்சினையை எழுப்பியபோது, அப்படியென்றால், அந்த வீட்டில் இன்னும் குழந்தைகள் இருக்கின்றனவே - ஏன் சாகவில்லை என்று அ.தி.மு.க. முதலமைச்சர் சட்டப்பேரவையில் அன்று சொன்னதை முன்னுதாரணமாகக் கொண்டு தமிழக அரசு இருக்கிறதோ என்று நினைக்கத் தோன்றுகிறது.
ஒரு பக்கத்தில் விவசாயப் பாதிப்பு, இன்னொரு பக்கத் தில் மத்திய அரசின் ரூபாய் நோட்டு ஒழிப்பைத் தொடர்ந்து தவறான அணுகுமுறைகளால் பொதுமக்கள் அவதி! கடந்த ஆண்டு இதே காலத்தில் தமிழ்நாட்டு மக்கள் கடும் மழையால் பாதிக்கப்பட்டு பட்டினியின் எல்லையைத் தொட்டனர் என்றால், இவ்வாண்டு மத்திய பி.ஜே.பி. அரசின் பொருளாதாரக் கொள்கை என்னும் சுனாமியால் கொடூரமாகத் தாக்கப்பட்டுக் கிடக்கின்றனர்.
பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் அளித்து அதற்குரிய ரூபாய் நோட்டுகளை வாங்கிக் கொள்ளலாம் என்றுதானே மக்கள் நினைப்பார்கள். ஆனால், நடந்து கொண்டு இருப்பது என்ன? அரசாங்க உத்தரவாதமே நாணயமில்லாத வாக்குறுதி என்று ஆகிவிட்டதே!
கடந்த நான்கு நாள்களாக வங்கிகளில் பணம் இல்லை. ஏ.டி.எம்.கள் இயங்கவில்லை என்று சொன்னால், நாட்டு மக்கள் மத்திய அரசின்மீது நம்பிக்கை இல்லை என்ற நிலை உருவாகி விட்டது என்று கொள்ளலாமா?
நாடாளுமன்றத்தில்வாக்கெடுப்பின்மூலம்தான்நம் பிக்கை இல்லாத தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது ஒரு நிலை. ஆனால், இன்றைய தினம் நாட்டு மக்கள் மத்தியில் மத்திய அரசாங்கம் நம்பிக்கையை இழந்துவிட்டதே!
இதன் நிலை எங்கே கொண்டு போய்விடும்? உச்சநீதி மன்றமே எச்சரித்துவிட்டதே! நாட்டில் கலவரம் உருவாகும் என்று கூறிவிட்டதே!
இதற்குமேல் ஓர் ஆட்சிக்கு என்ன சூடு வேண்டும்? அதையும் தூசி போல் துடைத்துக் கொண்டு அரசு என்ற ஒன்று பெயரளவுக்கு இருக்கிறது அவ்வளவுதான்.
நாடும் முடங்கிக் கிடக்கிறது- நாடாளுமன்றமும் முடங்கிக் கிடக்கிறது! பிரதமர் நாடாளுமன்றத்திற்கு வந்து விளக்கம் சொல்லவேண்டும்என்றுஎதிர்க்கட்சிகள் வற்புறுத்தி வருகிறார்கள். ஆனால், பிரதமரோ நாடாளுமன்றத்திற்கு வெளியில்தான் 52 அங்குல மார்பைப் புடைத்துப் பேசுவாரே தவிர, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதிநிதிகள் அடங்கிய அவையில் பேசமாட்டாரா?
இவ்வளவு சீக்கிரத்தில் மோடியின் பிம்பம் சிதறும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்!

0 comments: