Total Pageviews

Thursday, November 10, 2016

மாதவிடாய் காரணங்காட்டி அய்யப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்க மறுப்பதா?

மாதவிடாய் காரணங்காட்டி அய்யப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்க மறுப்பதா?
கேரளாவில் பகவதியம்மன் கோவிலில் மாதவிடாய்க் கடவுளுக்கு விழா நடைபெறுகிறதே!
பெண்களை அனுமதிக்கலாம் என்ற
கேரள இடதுசாரி அரசைப் பாராட்டுகிறோம்
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் பிரச்சினையிலும் தீர்வு விரைவில் கிட்டும்
தமிழர் தலைவர் ஆசிரியர் முக்கிய அறிக்கை

500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற பிரதமரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கதே!
கேரளா - அய்யப்பன் கோவிலுக்குச் செல்ல பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், பெண்களை அனுமதிக்கலாம் என்று கூறிய கேரள இடதுசாரி அரசைப் (சி.பி.எம்.)பாராட்டுகிறோம். அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பதற்கும், செயல்பாடு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கிறோம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் 10  வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு அனுமதியில்லை என்ற அக்கோவிலின் நடைமுறைச் சம்பிரதாயங்களை வலியுறுத்திடும் திருவாங்கூர் தேவசம் போர்டுக்கு எதிராக, மனித உரிமையிலும், பாலியல் நீதியிலும் அக்கறையும், கவலையும் கொண்ட கேரளவாழ் பெண்கள், அண்மையில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர்.
இவ்வழக்கு ஜஸ்டீஸ் தீபக் மிஸ்ரா அவர்கள் தலை மையில் உள்ள அமர்வின் முன் நடைபெற்று வருகிறது!
மகாராட்டிரத்தைப் பாரீர்!
இதுபோன்றே மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பிரபல கோவில்களில்  (சிங்கணாப்பூர் சனிக்கோவில், நாசிக் திரிசம்பேஷ்வர் கோவில்களில்) பெண்கள் உள்ளே நுழையும், வழிபடும் உரிமைப் போராட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளனர். தொடக்கத்தில் கடும் எதிர்ப்பு - மகாராஷ்டிர பா.ஜ.க. - சிவசேனா கூட்டணி அரசு தயக்கம் காட்டியும், மும்பை உயர்நீதிமன்றத்தில் அவர்களது உரிமைக் குரலுக்குக் கிடைத்த ஆதரவு காரணமாக, அக்கோவில்களில் பெண்கள் உள்ளே சென்று வழிபடும் உரிமையைப் பெற்று, பாலியல் நீதி நிலைநாட்டப் பெற்றுள்ளது.
கேரள அரசின் நிலைப்பாட்டைத் தெரிவிக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம், சபரிமலை அய்யப்பன் கோவிலில் இளம்பெண்கள் உள்ளே சென்று வழிபடும் உரிமை கோரும் வழக்கில் ஆணையிட்டது. முந்தைய அரசு  பழைய சம்பிரதாயங்களை மீறக்கூடாது என்று கூறி, பெண்களைக் கோவிலுக்குள் அனுமதிப்பதை  மறுதலித்துக் கூறியது; ஆனால், திடீர் திருப்பமாக, தோழர் பினராய் விஜயன் அவர்கள் தலைமையில் புதிதாய் ஆறு மாதங்களுக்குமுன் பதவியேற்ற  இடதுசாரி அரசு (சி.பி.எம்.), இந்து சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் பெண்கள் உள்ளே சென்று வழிபடும் உரிமையை - மறுக்கக்கூடாது; என்ற நிலைப்பாட்டை 7.11.2016 ஆம் தேதி  தனது வழக்குரைஞர் மூலம் உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளதை, நீதிபதிகள் வரவேற்கும் முறையில், இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமையை, அவர்கள் பெண்கள் என்பதால், புறக்கணித்துவிட முடியாது; பெண்ணாகப் பிறந்த ஒரே காரணத்தால் வழிபாட்டு உரிமையை அவர்களுக்கு மறுப்பது நியாயமல்ல என்ற கருத்தைக் கூறி, பிப்ரவரி 20 ஆம் தேதிக்கு வழக்கைத் தள்ளி வைத்துள்ளனர்.
தோழர் பினராய் விஜயன் அவர்களது தலைமையிலான கேரள அரசின், முற்போக்கு நிலைப்பாடும், மகளிருக்குப் பாலியல் நீதி வழங்குவதில் பாரபட்சம் காட்டக் கூடாது என்பதும் மிகவும் முக்கியமானவை.
இங்கு பல ஊர்களில் அய்யப்பன் கோவில் சிலை, பெண் பக்கத்தில்  உள்ளதாகவே இருக்கும்பொழுது, பெண்கள் போகக்கூடாது என்பது முரண்பாடு அல்லவா?
கேரளாவில் பகவதியம்மன் கோவில் திருவிழா என்பது என்ன?
10 வயதுக்கு மேற்பட்டு, 50 வயதுக்குட்பட்ட பெண்கள் - மாதவிடாய் காரணமாக -  உள்ளே நுழைந்தால் தீட்டு -  என்று ஒரு பொருந்தாக் காரணம் கூறப்படுகிறது! சிவன் தலையில் உள்ள கங்கையின் மாதவிடாய் தான் சிவப்புப் பொட்டு (Ritu) என்று புராணக் கதை கூறுகிறது. (ஆதாரம்:  ‹:  encyclopedia of Hindu world by Benjamin Walkar) பெஞ்சமின் வாக்கர் தொகுத்த - ஹிந்து உலகக் களஞ்சியம்.
கேரளத்தில்  உள்ள பகவதி அம்மன் கோவிலில் இந்த ‘ரிட்டு’வை வணங்கப்படும் திருவிழா (குருதித் தர்ப்பணம் - (Kurithi Tharpanam) 10 நாள் விழா) நடைபெறுகிறதே!(மாதா மாதம் அம்மனுக்கு மாதவிடாய் வருகிறதாம்!)
‘அசாம் காமாயாக்னி' கோவில் விழாவும் இந்த அடிப்படையிலேதானே!
எனவே, பழைய பத்தாம் பசலித்தனத்தை சனாதனப் போர்வை போர்த்தி மூடி மறைத்து ‘அய்தீகம்‘ பேசுவதில் அர்த்தம் இல்லை. மின்சார விளக்கு உள்ளே வந்துவிட்ட பிறகு, ‘அய்தீகம்‘ - சம்பிரதாயம் பேசுவதில் அர்த்தமுண்டா?
எனவே, பாலியல் நீதி - இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைப்படி மறுக்கப்படக் கூடாது. மக்கள் தொகையில் சரி பகுதியான பெண் மக்களுக்கு ஆதரவளித்த கேரள அரசைப் பாராட்டுகிறோம்.
உச்சநீதிமன்றம் விரைந்து தீர்ப்பு அளித்தால் ஒரு புது யுகம் பிறக்கும்; அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் உரிமையும் இதே தத்துவ அடிப்படையில்தான் நிறைவேற்றப்படவேண்டிய ஒன்றே!

கி.வீரமணி    
தலைவர்,    திராவிடர் கழகம்

.
சென்னை
10.11.2016

0 comments: