Total Pageviews

Saturday, June 25, 2016

ஜூலை முதல் தேதி சமஸ்கிருத எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் கட்சிப் போராட்டமல்ல - இனப் பாதுகாப்புப் போராட்டம்

பண்பாட்டுப் படையெடுப்பைத் தடுக்கும் போராட்டம்
கிளர்ந்தெழுவீர் தோழர்களே - டில்லி வரை எட்டட்டும்! 
மத்தியில் உள்ள பிஜேபிஅரசு திணிக்கும் சமஸ்கிருதம் என்பது - பண்பாட்டுப் படையெடுப் பின் ஏற்பாடாகும் - ஜூலை முதல் தேதி அதனை எதிர்த்து எங்கெங்கும் ஆர்ப்பாட்டம் நடக்கட்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணிஅவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
அருமைத் தோழர்களே! ஜூலை முதல் தேதியன்று தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் சமஸ் கிருதத் திணிப்பு நடவடிக்கையை எதிர்த்து கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்திட உள்ளோம்.
இந்தகால கட்டத்தில் முக்கியமான போராட்டம்!
நமது இயக்க வரலாற்றில் இந்தக் கால கட்டத்தில் இது ஒரு தேவையான போராட்டமாகும்.
சமஸ்கிருதம் என்றால் அது ஏதோ வெறும் மொழியை எதிர்த்து மட்டும் நடைபெறும் போராட்டமல்ல; மக்களைப் பிறப்பின் அடிப்படையில் நால்வருணமாகப் பிரித்ததும் - நமது தமிழ்மொழியைப் பல கூறுகளாக ஊடுருவிப் பிளவுபடுத்தியதும் இந்தப் பாழாய்ப் போன சமஸ்கிருதம் தான்.
விவேகானந்தர் கூறியதை இங்கு கவனிக்க வேண்டும்
இந்து மதத்தை அமெரிக்கா வரை சென்று பரப்பிய விவேகானந்தர்கூட இந்த சமஸ்கிருதம் பற்றி தனிக் கருத்தினைக் கொண்டவர்தான்!
"மதச் சண்டைகளும் சாதி வேற்றுமைக் கலகங்களும் பல்குவதற்கு ஒரு பெருங் கருவியாய் இருந்ததும், இருப்பதும் சமஸ்கிருத மொழியேயாகும். சமஸ்கிருத மொழி நூல்கள் தொலைந்து போகுமானால் இப்போராட் டங்களும் தொலைந்துபோகும்" என்று கூறியுள்ளதைக் கவனிக்க வேண்டும்.
மதச் சண்டைகளையும், ஜாதி சண்டைகளையும் வளர்த்து வரும் பிஜேபி, ஆர்.எஸ்.எஸின் நடவடிக்கைகள் நாட்டில் நாளும் வளர்ந்து வருவதைக் கவனித்தால் விவேகானந்தர் தெரிவித்த கருத்தின் அருமையும், ஆழமும் நன்றாகவே புரியும்.
வாஜ்பேயி காலத்திலேயே
ஆரம்பமாகி விட்டது
வாஜ்பேயி அவர்கள் தலைமையில் ஆட்சி நடை பெற்ற காலத்திலேயே இதற்கான தொடக்கம் ஆரம்பமாகி விட்டது.
பல்கலைக் கழகங்களிலே சமஸ்கிருதம், வேத கணிதம் ஜோதிடம் இவைகள் எல்லாம் கொண்டு வரப்பட்டன.
இப்பொழுது பெரும் பலத்துடன் மத்தியில் ஆட்சியில் அமர்ந்து விட்ட துணிவில் வேக வேகமாக சமஸ்கிருதத் திணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதற்காகக் கோடி கோடி யாகக் கொட்டி அழுகின்றனர்.
1. 2014-ஆம் ஆண்டு சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்காக பல்கலைக்கழகங்களுக்கு ரூ.70 கோடி ஒதுக்கீடு.
2. அய்.நா.வின் அலுவல் மொழிகளில் ஒன்றாக இந்தியை அறிவித்தால் அதற்காகச் செலவாகும் சுமார் ரூ.270 கோடியை இந்திய அரசு ஏற்கத் தயாராக இருப்ப தாகவும்; இதில் செலவு ஒரு பொருட்டே அல்ல என்றும் சுஷ்மா அறிவித்தார்.
3. 23.7.2015 சமஸ்கிருத மொழிவளர்ச்சிக்காக சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரகம் ரூ 320-கோடி ஒதுக்கியது.
4. 2015-ஆம் ஆண்டு ஜூலை பாங்காக்கில் நடைபெற்ற சமஸ்கிருத மாநாட்டிற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு.
5. 2016-ஆம் ஆண்டு ரூ.70 கோடி ராஷ்டிரிய சமஸ்கிருத சன்ஸ்தான் என்ற சமஸ்கிருத மொழி வளர்ச்சித் துறைக்கு புதிய ஆய்வு மாணவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்ய ஒதுக்கியுள்ளது.
யார் வீட்டுப் பணத்தை யார் வீட்டு மொழிக்காகக் கொட்டுவது? இதனை அனுமதிக்கலாமா? இந்தியா முழுமையும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்கள் - பார்ப்பனர் அல்லாத மக்கள் சிந்திக்க வேண்டும்.
வழிபாட்டு மொழி இன்றும்
சமஸ்கிருதம் தானே!
தமிழன் கட்டிய கோயில்களுக்குள் இன்றும் சமஸ் கிருதத்தில் தான் வழிபாடு. கரூர் அருகில் உள்ள திருமலை முத்தீசுவரர் கோயிலில் தமிழில் குட முழுக்கு நடத்தப் பட்டதால் (9.9.2002) கோயிலை மூன்று நாள் இழுத்து மூடி, தோஷம் கழித்தனர் என்பது எதைக் காட்டுகிறது?
பூஜை வேளையில் இன்றைக்குக்கூட சங்கராச்சாரியார் தமிழில் பேச மாட்டார்; காரணம் தமிழ் "நீஷப்பாஷையாம்!"  அப்படிப் பேச வேண்டிய அவசியம் ஏற்பட்டால் 'ஸ்நானம்' செய்து விட்டு சமஸ்கிருதத்தில்தான் பேசுவார். (ஆதாரம்: ஆட்சி மொழிக் காவலர் கீ. இராமலிங்கனார் பேட்டி)
கோயிலில் தமிழில் வழிபாடுபற்றி திமுக ஆட்சியில் ஆணை பிறப்பித்தபோது, உச்சநீதிமன்றம் வரை சென்று வழக்குத் தொடுத்தவர்கள் இதே பார்ப்பனர்கள்தான்.
இந்து ராஜ்ஜியம் அமைக்க முன்னோடி!
இந்து ராஜ்ஜியத்தை அமைப்போம் என்று ஆட்சி நடத்துபவர்களுக்கு சமஸ்கிருதத் திணிப்பு என்பது அவசியமாகிறது.
1938இல் ராஜகோபாலாச்சாரியார் சென்னை மாநில பிரதம அமைச்சராக இருந்தபோது லயோலா கல்லூரியில் என்ன பேசினார்?
"சமஸ்கிருதத்தைப் படிப்படியாக புகுத்தவே இப்பொ ழுது இந்தியைப் புகுத்துகிறேன்" என்றாரே, அதனுடைய தொடர்ச்சியாகத் தான் இன்றைய பிஜேபி அரசின் சமஸ்கிருதத் திணிப்பை நோக்கிட வேண்டும்.
அலட்சியப்படுத்தக் கூடாது
இதனை அலட்சியப்படுத்தி விடக் கூடாது - மிக பெரிய ஆபத்து, அபாயம் நம்மைச் சூழ்ந்து  நிற்கிறது.
மீண்டும் ஆரியம் நம்மை அடிமைப்படுத்த தயாராகி விட்டது. தந்தை பெரியார் பிறந்த தமிழ் மண் தான் - திராவிடர் கழகம்தான் இதனை எதிர்த்து முறியடிக்கும் களத்தில் முதல் வரிசையில் நின்று போராட வேண்டும்.
கட்சிப் போராட்டமல்ல - இனவுணர்வுப் போராட்டம்! களம் காண்பீர்!
அந்தக் கடமையைத்தான் இப்பொழுது செய்கிறோம். ஜூலை முதல் தேதி ஆர்ப்பாட்டத்தை தமிழ் மண்ணின் உணர்வை மூண்டெழும் பெருந் தீயாகக் காட்டுவோம்!
இது ஒரு கட்சிப் போராட்டமல்ல! பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிக்கும் இனமான போராட்டம்!
கழகத் தோழர்களே! ஒத்த கருத்துள்ள தோழர்களை இணைத்துக் கொண்டு ஜூலை முதல் தேதி போராட் டத்தின் எழுச்சி, டில்லியை எட்டும் வரை நடக்கட்டும்! நடக்கட்டும்!!


கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

                                                                                                                                                                             

0 comments: