அரியானா மாநிலத்தில் உள்ள மாநிலப்பள்ளிகளில் உருது மொழி கற்பிக்கும் ஆசிரியர்களுக்குக் கட்டாய சமஸ்கிருதப் பயிற்சியளித்து உருது மொழி பயிலும் மாணவர்களுக்கு சமஸ்கிருதம் கற்பிக்குமாறு அரியானா மாநில அரசு வற்புறுத்துவதாக ஆசிரியர்கள் புகார் அளித்துள்ளனர்.
2014-ஆம் ஆண்டு அரியானா மாநிலத்தில் பாஜக பெரும்பான்மை பெற்று ஆட்சிக்கு வந்ததில் இருந்து அங்கு காவிகளின் கொள்கைகள் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டு வருகின்றன. முக்கியமாக அங்கு வாழும் இஸ்லாமியர்கள் அரியானாவைவிட்டு வெளியேறிக்கொண்டு இருக்கின்றனர். கடந்த ஆண்டு பரிதாபாத் நகருக்கு அருகில் உள்ள அட்டாலி என்ற சிற்றூரில் அய்ந்தாயிரத்திற்கும் மேற்பட்ட காவிஅமைப்பினர் வாகனங்களில் ஆயுதங்களுடன் வந்து ஊரை சின்னாபின்னமாக்கினர். ஊரில் உள்ள இஸ்லாமியர்களை அடித்து விரட்டியதுடன் அங்கிருந்த ஒரு கிராமத்தையும் தீக்கிரையாக்கினர்.
இதனைத் தொடர்ந்து அரியானாவில் உள்ள அனைத்து இஸ்லாமியர்களுக்கும் இதே நிலைதான் என்று மிரட்டல் விடுத்தனர். இதன் காரணமாக அதிக அளவில் சிறுபான்மையினர் அம்மாநிலத்தை விட்டு வெளியேறி உபி, பீகார், டில்லி மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் அகதிகளாக குடியேறினர்.
இந்நிலையில் மாநிலத்தில் உள்ள சிறுபான்மை யினருக்கான சில பள்ளிகளில் உருதுமொழி கற்பிக்கப்பட்டு வந்தது, இஸ்லாமிய மாணவர்களின் எண்ணிக்கை குறைந்ததை அடுத்து அரியானா மாநில அரசு இந்த ஆண்டிலிருந்து உருது மொழி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு சமஸ்கிருத வகுப்பை நடத்தி வருகிறது. மேலும் துவக்கப்பள்ளி முதல் உருது மொழி பயிலவரும் மாணவர்களுக்கு சமஸ்கிருதம் கற்றுத்தர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
வட இந்தியாவில் மத்திய அரசின் நிதியைப் பெறும் பள்ளிகளில் உருது மொழிக்குப் பதிலாக சமஸ்கிருதமே கற்றுத்தர வற்புறுத்தப்படுவதாக துவக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு புகார் தெரிவித்துள்ளது.
இது குறித்து துவக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின்(ஏபிஎஸ்ஏ) சார்பில் தான்சிங் என்பவர் அளித்த பேட்டியில் ஆக்ராவில் 2800 துவக்கப்பள்ளி மற்றும் மேல் நிலைப்பள்ளிகள் உள்ளன. இதில் பல பள்ளிகளில் உருது மொழி ஒரு பாடமாக கற்பிக்கப்பட்டு வருகிறது, 150 ஆசிரியர்கள் உருது மொழி பயிற்றுவிக்க நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் 75 உருது மொழி ஆசிரியர்களுக்கு ஆக்ரா நிர்வாகம் சமஸ்கிருத பயிற்சி அளித்து வருகிறது, இவர்கள் பள்ளிகளில் சமஸ்கிருத விளக்கத்துடன் பாடங்களை நடத்த வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளது.
இந்த கல்வியாண்டு முதல் சமஸ்கிருத பயிற்சி மற்றும் வகுப்புகளில் கட்டாயம் சமஸ்கிருத உரையாடல் நடத்தவேண்டும் என்று ரகசிய உத்தரவு வந்துள்ளதாக தான்சிங் தெரிவித்தார்.
இது குறித்து பெயர் குறிப்பிடவிரும்பாத ஆசிரியர் ஒருவர் கூறும் போது இந்த ஆண்டு எப்போதும் போல் எங்களுக்கு தரவேண்டிய உருது மொழிப் பாடப் புத்தகங்கள் தரவில்லை, மேலும் உருது மொழிப் பாடங்களை நடத்த தேவையான நூல்களும் மத்திய அரசு எங்களுக்குத் தரவில்லை, அதே நேரத்தில் சமஸ்கிருத கையேடுகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. இதை பள்ளி மாணவர்களுக்குக் கொடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, எங்கள் பள்ளிகளில் படிக்கும் இஸ்லாமிய மாணவர்கள் ஆரம்பத்தில் இருந்தே உருது மொழி பயின்று வந்துள்ளனர். இவர்களுக்குத் திடீரென சமஸ்கிருத கையேடுகள் கொடுக்கப்படும் போது அவர்கள் குழப்பத்திற்கு ஆளாகி உள்ளனர், இது குறித்து மாநில கல்வித்துறையிடம் புகார் அளித்துள்ளோம் என்று கூறினார்.
மத்தியில் உள்ள பிஜேபி அரசு எந்த மன நிலையில் இருக்கிறது என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு. சமஸ்கிருதத் திணிப்பு என்பதைக் கண் மூடித்தனமாகக் கையில் எடுத்துக் கொண்டு விட்டனர். எந்த எல்லைக்கும் போகத் தயார் என்று தோள் தட்டி துடை தட்டிக் கிளம்பி விட்டனர்.
இது ஆரியத்தின் எழுச்சி என்பதைவிட, ஆரியத்தின் வீழ்ச்சிக்கு ஆரம்பத்தைக் கொடுத்து விட்டனர். பார்ப்பனர் அல்லாதார் அனைவரும் ஒன்று திரண்டு, ஓங்கி எழுந்து ஆரியர் -ஆரியர் அல்லாதார் யுத்தத்தை நிகழ்த்திக் காட்டுவர் என்பதில் அய்யமில்லை. ஆரியத்தின் எழுச்சித் தோற்றமே வீழ்ச்சிக்கும் அடிகோலப் போகிறது என்பதில் அய்யமில்லை. ஜூலை முதல் தேதி ஆர்ப்பாட்டத்திற்கான அர்த்தம் அதிகரித்து விட்டது. தோழர்களே கிளர்ந்தெழுவீர்! கிளர்ந்தெழுவீர்!!
No comments:
Post a Comment