Wednesday, April 13, 2016

மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கு அகில இந்திய நுழைவுத் தேர்வா?

மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கு அகில இந்திய நுழைவுத் தேர்வா?
உச்சநீதிமன்றத்தில் முன்னுக்குப்பின் முரணானதீர்ப்பு
தந்தைபெரியார் பிறந்த சமூக நீதி மண் இதனைஅனுமதிக்காது
தேர்தலிலும் எதிரொலிக்கும் - எச்சரிக்கை! எச்சரிக்கை!!
தமிழர் தலைவர் ஆசிரியர் எச்சரிக்கை அறிக்கை
திமுகவின் தேர்தல் அறிக்கை ஒரு வரலாற்று ஆவணம்!  - கி. வீரமணி

மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கு இந்திய அளவில் ஒரே நுழைவுத் தேர்வை அனுமதிக்கும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு - ஏற்கனவே உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு முரணானது - சமூக நீதிக்கு எதிரான இந்தப் போக்கை தந்தை பெரியார் பிறந்த சமூக நீதி மண் கடுமையாக எதிர்க்கும் - திராவிடர் கழகம் களம் காணும் என்று எச்சரித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் - அறிக்கை வருமாறு:

மாநிலப் பட்டியலில் இருந்த கல்வி - 1976 நெருக்கடி நிலை காலத்தில் பொதுப் பட்டியலுக்கு எடுத்துச் சென்றாலும் சென்றனர். அன்று தொட்டுக் கல்வித் துறையில் பார்ப்பனீயம் தன் சித்து வேலைகளில் இறங்கி விட்டது. குறிப்பாக நுழைவுத் தேர்வு என்ற பாம்பு தலை தூக்குவதும், அதனை எதிர்த்து சமூக நீதியாளர்கள் தடியைத் தூக்கினால் பொந்தில் நுழைந்து கொள்வது என்பதும் வாடிக்கையாகி விட்டது.

எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் அறிமுகம்

மருத்துவக் கல்விக்கான நுழைவுத்தேர்வு 1984ஆம் ஆண்டு  எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் திணிக்கப்பட்டது.  அன்று முதல் திராவிடர் கழகம் தான் தொடர்ச்சியாக எதிர்த்து வந்துள்ளது. அதன்பிறகு நுழைவுத் தேர்வு மூலமே தொழிற் கல்வி படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடந்து வந்தது. இந்த நிலையில், 2006ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது நுழைவுத்தேர்வை நீக்க முயற்சி மேற்கொள்ளப் பட்டது. 2007ஆம் ஆண்டில் இருந்து நுழைவுத் தேர்வு ரத்துசெய்யப்பட்டு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மட்டும் மாணவர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.

மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வு, ஜிப்மர் நுழைவுத்தேர்வு, அகில இந்திய மருத்துவ நிறுவன (எய்ம்ஸ்) நுழைவுத் தேர்வு என்று ஒவ்வொரு மருத்துவ கல்லூரியிலும் சேர தனித்தனி நுழைவுத்தேர்வு எழுதுவது மாணவர்களுக்கு மிகவும் சிரமமாக இருப்பதால், மருத்துவப் படிப்புகளில் சேர நாடு முழுவதும் பொது நுழைவுத் தேர்வு நடத்தலாம் என்று இந்திய மருத்துவ கவுன்சில் (எம்.சி.அய்.) மத்திய சுகாதார அமைச்சகத்திற்குப் பரிந்துரை செய்தது. எம்.சி.அய். அளித்த பரிந்துரையை ஏற்றுக்கொண்டு இந்தியா முழுவதும் பொது நுழைவுத்தேர்வு நடத்த உத்தரவிட்டது மத்திய அரசு.

நுழைவுத் தேர்வை ரத்து செய்த உச்சநீதிமன்றம்

அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து 115 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் 2010இல் தாக்கல் செய்யப்பட்டன.   இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மருத்துவக் கல்வியில் நாடு தழுவிய பொது நுழைவுத்தேர்வு தேவையில்லை என்று  தீர்ப்பளித்தது.  மூவர் கொண்ட அமர்வில்  இரு நீதிபதிகள் நுழைவுத் தேர்வு தேவையில்லை என்று தீர்ப்பு வழங்கினர். (18.7.2013). இந்த தீர்ப்பை எதிர்த்து ஜூலை 2013-ஆம் ஆண்டு  எப்.சி.அய். சார்பில் மறு சீராய்வு மனு போடப்பட்டது. 2014-ஆம் ஆண்டு பாஜக ஆட்சியில் அமர்ந்ததும், நாடுமுழுவதும் பொது நுழைவுத்தேர்வு தேவை என்ற நிலையெடுத்து அரசின் சார்பில் 2013-ஆம் ஆண்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து வழக்கும் தொடரப்பபட்டது.

“மருத்துவக் கல்விக்கான நெறிமுறைகளை வகுப்பது தவிர நுழைவுத் தேர்வை நடத்திட உத்தரவிடும் சட்டப்படியான அதிகாரம் இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு (எம்.சி.அய்.) கிடையாது” என்று உச்சநீதிமன்றம் தன் தீர்ப்பில் அறுதியிட்டுக் கூறியது. (18.7.2013)

நீதிபதிகள் அல்டம்ஸ் கபீர், விக்கிர மஜித்சிங் ஆகிய இருவரும் அளித்த அந்த தீர்ப்பில் முக்கியமானதொரு கருத்தைத் தெளிவுபடுத்தியும் இருந்தனர். நுழைவுத் தேர்வு இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று ஆணி அடித்தது போல அறைந்திருந்தனர்.

உச்சநீதிமன்றத்தின் முன்னுக்குப் பின் முரணான தீர்ப்பு

இவ்வளவுக்குப் பிறகும் மறு சீராய்வு மனு மீதான தீர்ப்பு தலை கீழாக ஆனதுதான் ஆச்சரியம்!

அதே உச்சநீதிமன்றம் முந்தைய தீர்ப்புக்கு மாறாக நுழைவுத் தேர்வை அனுமதித்துள்ளது. வழக்கு முழுமையாக விசாரிக்கப்பட்டுத் தீர்ப்பு அளிக்கப்படும் வரை பொது நுழைவுத் தேர்வை நடத்திடத் தடையில்லை என்றும் உச்சநீதிமன்றம் நேற்று கூறி இருக்கிறது.

மருத்துவக் கல்விக்கான நெறிமுறைகளை வகுப்பதுதான் மருத்துவக் கவுன்சிலின் வேலையே தவிர நுழைவுத் தேர்வை நடத்தச் சொல்லுவதற்கான சட்டப்படியான அதிகாரம் அதற்குக் கிடையாது என்று எந்த உச்சநீதிமன்ற அமர்வு சொன்னதோ, அதற்கு முரண்பாடாக - மருத்துவக் கவுன்சிலின் மேல் முறையீட்டை ஏற்று நுழைவுத் தேர்வை நடத்திட  அதே உச்சநீதிமன்றம் அனுமதித்திருப்பது  - அசல் முரண்பாடல்லவா! இப்படியெல்லாம் தீர்ப்பு சொன்னால் உச்சநீதிமன்றத்தின் மீதான நம்பகத் தன்மை கேள்விக்குறியாகி விடாதா? இது கோடானு கோடி ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைப் பிரச்சினையல்லவா?

இந்தியா முழுமையும் ஒரே மாதிரியான கல்வி முறையா இருக்கிறது?


இந்தியா முழுமையும் ஒரே மாதிரியான கல்வித் திட்டம் நடைமுறையில் இருக்கிறதா?

சி.பி.எஸ்.இ., மெட்ரிக்குலேஷன், ஆங்கிலோ இந்தியன் கல்வி, மாநில அரசு என்று பல்வேறு வகையான பாடத் திட்டங்கள் உள்ளனவே! இந்த நிலையில் ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வு எப்படி சரியானதாக, நியாயமானதாக இருக்க முடியும்?

அகில இந்திய நுழைவுத் தேர்வு என்பது - சி.பி.எஸ்.இ. முறையில் படித்து வந்த  மாணவர்களுக்குத்தான் சாதகமாக இருக்கிறது என்ற கருத்து நிலவுகிறது. இதையெல்லாம் சீர்தூக்கிப் பார்க்காமல், ஒரு சார்பாக எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற முறையில் நுழைவுத் தேர்வைத் திணிக்கலாமா? இதனை அனுமதிக்கத்தான் முடியுமா?
புள்ளி விவரம் என்ன சொல்லுகிறது?

அ.தி.மு.க. ஆட்சியில் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. ஆனாலும் சரியான முறையில் பின்பற்றப்படாததால் (நாம் தெரிவித்த யோசனையை கேட்கவில்லை) சென்னை உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. பிறகு ஆட்சிக்கு வந்த திமுக அரசு நிபுணர் குழுவை அமைத்து, அது தந்த பரிந்துரையின் அடிப்படையில் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, வழக்கிலும் வென்றது. தி.மு.க. ஆட்சியில் தனி சட்டமே இயற்றப்பட்டு குடியரசு தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டது. (15.3.2007).

நுழைவுத் தேர்வை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் உயர்நீதிமன்றத்திற்கு அளிக்கப்பட்ட மனுவில் கொடுக்கப் பட்டுள்ள புள்ளி விவரம் அனைத்துத் தரப்பு மக்களின் கண்களையும் திறக்கக் கூடியதாகும். (உச்சநீதிமன்றம் உட்பட).

2004-2005ஆம் ஆண்டில் 5 லட்சத்திற்கும் - அதிகமான மாணவர்கள் பிளஸ் டூ தேர்வை எழுதினார்கள். அதில் 2 லட்சத்து  10 ஆயிரம் மாணவர்கள் கிராமப்புறத்தைச் சேர்ந்த வர்கள். இவர்களில் பெரும்பாலோர் அதிக மதிப்பெண்களை எடுத்திருந்தனர். நிறைய மாணவர்கள் மருத்துவக் கல்லூரியிலும் நுழைந்தனர். பிளஸ் டூ தேர்வும் நுழைவுத் தேர்வைப் போன்றது தான். ஆனால், புதிய  நுழைவுத் தேர்வு காரணமாக கடந்த ஆண்டில் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் உள்ள 1195 இடங்களில் கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்களுக்குக் கிடைத்த இடங்கள் வெறும் 227தான்; அதனால் தான் நுழைவுத் தேர்வை ரத்து செய்தோம் என்று தி.மு.க. ஆட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதனை ஏற்றுக் கொண்டுதான் சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசின் சட்டத்துக்கு அனுமதி வழங்கியது.

10.1..2010 முதல் 13.1.2010 வரை அய்தராபாத்தில் மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்கள் மாநாட்டில் மருத்துவப் படிப்புக்கு அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு கொண்டு வரப்பட மாட்டாது என்று முடிவு எடுக்கப்பட்டதையும் இந்த நேரத்தில் நினைவூட்டுகிறோம்.

பொருத்தமில்லாத காரணம்

அகில இந்திய நுழைவுத் தேர்வுக்கு இன்னொரு காரணம் முன் வைக்கப்படுகிறது. இப்பொழுதுள்ள நடைமுறையில் மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கு பல நுழைவுத் தேர்வுகளை மாணவர்கள் எழுத வேண்டியிருப்பதாகவும் அது அவர்களுக்குப் பெரும் சுமையாக இருப்பதாகவும் ஒரு கதையை அளக்கிறார்கள். அதாவது உண்மையா? தேசிய அளவில் ஒரு நுழைவுத் தேர்வை எழுதினாலும், டில்லியில் உள்ள எய்ம்ஸ், சண்டிகரில் உள்ள பி.ஜி.அய்., புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மற்றும் இராணுவ மருத்துவக் கல்லூரிகளுக்குத் தனித் தனியாகத்தான் நுழைவுத் தேர்வை எழுத வேண்டிய நிலை இன்னும் இருக்கிறதே - இதற்கு என்ன பதில்? எந்த வகையில் பார்த்தாலும் தேசிய நுழைவுத் தேர்வு கிராமப்புற, ஏழை, எளிய முதல் தலைமுறையாகப் படிக்க முன்வரும்  மாணவர்களின் தலையில் விழுந்த இடிதான் என்பதில் அய்யமில்லை. பார்ப்பனீய  சூழ்ச்சி இதன் பின்னணியில் பதுங்கி இருக்கிறது என்பதில் அய்யமில்லை.

கிராமப்புற மாணவர்கள் பாதிப்பு!

நுழைவுத் தேர்வை எழுதுவதற்குத் தேவையான பயிற்சிக்கூடங்கள் கிராமப்புறங்களில் உண்டா? நகரப்புறங் களில் வந்து படிக்க வேண்டுமானால், அதற்காக ஆகும் செலவை சுமக்கும் சக்தி ஏழை, எளிய மக்களுக்கு உண்டா?

அப்படியே பார்த்தாலும் நுழைவுத் தேர்வு தான் தகுதியின் அளவுகோலா? நுழைவுத் தேர்வு தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பி.கே. மிஸ்ரா, சம்பத்குமார் ஆகியோர் வழங்கிய தீர்ப்பில் (27.4.2007) அழகாக ஒன்றைச் சென்னார்களே!

நுழைவுத் தேர்வு தகுதியின் அளவுகோலா?

“நுழைவுத் தேர்வை நடத்தினாலும் முழு சமநிலை என்பது கட்டுக்கதைதான். ஏனென்றால், சரியான விடையைத் தேர்ந்தெடுப்பதைவிட ‘கோன்பனேகா குரோர்பதி’ தொலைக்காட்சி நிகழ்ச்சி போல அனுமானத்தின் அடிப்படையில் விடைகளை ‘டிக்‘ செய்யும் வாய்ப்புள்ளது” என்று தீர்ப்பிலேயே சுட்டிக் காட்டியுள்ளார்களே - இடித்துச் சொன்னார்களே!
தமிழ்நாட்டுக்குப் பொருந்தாது!

தமிழ்நாட்டைப் பொருத்தவரை இடஒதுக்கீட்டில் முக்கியமான நிலைப்பாடு உறுதியாக உள்ளது. தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு சட்டப்படி ஒழிக்கப்பட்டு விட்டது. 69 சதவிகித அடிப்படையில் கல்வி வேலை வாய்ப்பில் இடங்கள் அளிக்கப்படுகின்றன. இதற்கு எதிராக மத்திய அரசு செயல்படும் நிலையை, தற்போதைய உச்சநீதிமன்ற தீர்ப்பு தூண்டி விடவில்லையா?

மாநில அரசின் உரிமைகளில் அத்துமீறி நுழைய மத்திய அரசை அனுமதிக்கலாமா? தந்தை பெரியார் பிறந்த தமிழ் மண்ணில் சமூகநீதிக்கு எதிராக ஒரு சிறு துரும்பை அசைத்தாலும், அது கொந்தளிக்கும் பெருங்கடலாக, சீறி எழும் எரிமலையாகப் பேருரு எடுக்கும் என்பதை மறந்து விடலாமா?
மத்திய தொகுப்பில் இடஒதுக்கீட கிடையாது

மாநிலங்களில் உள்ள எம்.பி.பி.எஸ். இடங்களில் 15 சதவீதத்தையும் மருத்துவ முதுநிலை பட்டப் பிரிவில் 50 சதவீதத்தையும் பொதுத் தொகுப்புக்கு மத்திய அரசு எடுத்துச் செல்லுகிறது. அப்படி எடுத்துச் செல்லப்படும் இடங்களில் இடஒதுக்கீடுக்கு இடம் இல்லை.

தமிழ்நாட்டின் 69 சதவீதத்தை விழுங்கிடத் திட்டமா?
இந்தக் கொடுமை போதாது என்று ஒட்டு மொத்தமாகவே தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்து வரும் 69 சதவீத இடஒதுக்கீட்டை முழுவதுமாக விழுங்கிக் கபளீகரம் செய்யும் சதி நடக்கிறது! நடக்கிறது!! இதன் பின்னணியை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது - முடியாது. மக்களின் கவனமெல்லாம் தேர்தல் அரசியல் பக்கம் திசை திரும்பி இருக்கும் நேரம் பார்த்து இப்படிப்பட்ட ஒரு தீர்ப்பு வெளியாகியுள்ளது.

எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தருணம்!

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தருணம் இது. சமூக நீதியாளர்கள் விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் இது. தமிழ்நாடு அரசு உடனடியாக மத்திய அரசை வலியுறுத்தி நீதிமன்றம் வழியாக தமிழ்நாட்டின் 69 சதவீத இடஒதுக்கீட்டைக் (9ஆவது அட்டவணையில் பாதுகாப்புச் செய்யப்பட்டிருக்கிறது) காப்பாற்றிட தேவையான சட்ட ரீதியான முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

திராவிடர் கழகம் களத்தில் இறங்கும்

மற்றவர்களுக்குத் தேர்தல் களம் என்றாலும் திராவிடர் கழகத்தைப் பொருத்தவரை சமூக நீதிக் களத்தில் இறங்கிச் செயல்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். திமுகவைப் பொருத்தவரை எந்த வடிவத்தில் வந்தாலும் நுழைவுத் தேர்வை எதிர்ப்போம் என்று மானமிகு கலைஞர் அவர்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளார் (‘முரசொலி’ 8.2.2016)

மத்திய பிஜேபி ஆட்சி சமூகநீதிக்கு  எதிரானது என்பதை இப்பொழுதும் மெய்ப்பித்துக் கொண்டு விட்டது;  தமிழக அரசு என்ன செய்யப் போகிறது?  தமிழ்நாட்டில் நுழைவு தேர்வுக்கு  இடமில்லை என்ற நிலையை உறுதிப்படுத்த வேண்டும்; அதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும் - மத்திய அரசுக்குக் கடும் அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும்.

இப்பிரச்சினை தமிழகத் தேர்தலில் எதிரொலிக்கும் என்பதில் அய்யமில்லை. இடஒதுக்கீட்டில் வருமான வரம்பைக் கொண்டு வந்த எம்.ஜி.ஆர். 1980 மக்களவைத் தேர்தலில் பெரும் தோல்வியைச் சந்தித்தாரே நினைவிருக்கிறதா?

எச்சரிக்கை! எச்சரிக்கை!!

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்


.
 2

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...