Saturday, April 9, 2016

பீகார் முதல்வர் நிதிஷ்குமாருடன் தமிழர் தலைவர் கி.வீரமணி சந்திப்பு

பீகார் முதல்வர் நிதிஷ்குமாருடன் தமிழர் தலைவர் சந்திப்பு

தந்தை பெரியார் பிறந்தநாள் விழாவுக்கு
தமிழகம் வருவதாக முதல்வர் ஒப்புதல்
பாட்னா, ஏப்.8- பீகார் தலைநகர் பாட்னாவில் ‘சமூகநீதிக்கான கி. வீரமணி விருது’ பெற உள்ள பீகார் முதல் அமைச்சர் நிதிஷ்குமார் அவர்களை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் சந்தித்து அளவளாவினார்.
அப்போது தமிழ்நாட்டில் செப்டம்பரில் நடைபெற உள்ள தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவில் பங்கேற்பதாக மகிழ்ச்சியுடன் ஒப்புதல் அளித்தார்.
பெரியார் பன்னாட்டமைப்பின் சார்பில் 2015-ஆம் ஆண்டுக்கான “சமூக நீதிக்கான கி.வீரமணி விருது’’ பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு, பாட்னாவில் நாளை (9.4.2016) வழங்கப்பட உள்ளது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் பொருட்டு பாட்னாவிற்கு 7-ஆம் தேதி வருகை தந்த தமிழர் தலைவருக்கு, பாட்னா விமான நிலையத்தில், அய்க்கிய ஜனதா தள மாநில நிர்வாகிகளும், ரவீந்திரராம் தலைமையில் பீகார் பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் நிர்வாகிகளும் சிறப்பான வரவேற்பை அளித்தனர்.
தமிழர் தலைவருடன், மானமிகு மோகனா வீரமணி, பெரியார் பன்னாட்டமைப்பின் இயக்குநரும், விருது வழங்கும் குழுவின் தலைவருமான டாக்டர் இலக்குவன் தமிழ், (அமெரிக்கா) திராவிடர் கழக வெளியுறவு செயலர் வீ.குமரேசன், அகில இந்திய பிற்படுத்தப்பட்ட பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர்
கோ.கருணாநிதி ஆகியோரும் வருகை தந்தனர்.
முதல்வருடன் சந்திப்பு!
மாலை 7 மணிக்கு பீகார் முதல்வர் நிதிஷ்குமாரை மரியாதை நிமித்தமாக அவரது இல்லத்தில் தமிழர் தலைவர் சந்தித்து, பொன்னாடை அணிவித்தார். பீகாரில் முழு மதுவிலக்கை நிறைவேற்றியதற்கு வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்தார். உலக நல்வாழ்வு தினத்தை ஒட்டி, பழக்கூடையும் மானமிகு மோகனா வீரமணியால் அளிக்கப்பட்டது. பெரியார் பன்னாட்டமைப்பின் சார்பில் சமூக நீதிக்கான கி.வீரமணி விருதினை பெற்றிட ஒப்புதல் தந்தமைக்கு டாக்டர் இலக்குவன்தமிழ் மகிழ்ச்சியும் நன்றியும் தெரிவித்தார்.
ஏறக்குறைய ஒரு மணி நேரம் தமிழர் தலைவருடன், பெரியார் பற்றியும், பெரியார் டிரஸ்டு நடத்திடும் கல்விக் கூடங்கள் பற்றியும் மற்றும் சமூக, அரசியல் நிலவரங்கள் குறித்தும் விரிவாக பீகார் முதல்வர் நிதிஷ் குமாருடன் அளவளாவப்பட்டது.
தமிழர் தலைவருடன், பெரியார் பன்னாட்டமைப்பின் இயக்குநரும், விருது வழங்கும் குழுவின் தலைவருமான டாக்டர் இலக்குவன் தமிழ், திராவிடர் கழக வெளியுறவு செயலர் வீ.குமரேசன், அகில இந்திய பிற்படுத்தப்பட்ட பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கோ.கருணாநிதி, பீகார் பிற்படுத்தப்பட்டோர் அமைப்பின் பொதுச் செயலாளர் ரவீந்திர ராம், பீகார் மேலவை உறுப்பினர் சஞ்சய்குமார் சிங் ஆகியோரும் உடன் இருந்தனர்.
தமிழ்நாட்டிற்கு செப்டம்பர் மாதத்தில் வருகை தந்து தந்தை பெரியார் பிறந்த நாள் நிகழ்வுகளில் கலந்து கொள்ள வேண்டும் என தமிழர் தலைவர் விடுத்த வேண்டுகோளையும் பீகார் முதல்வர்
நிதிஷ்குமார் மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டார். பின்னர் முதல்வர் இல்லத்தில் நிதிஷ்குமாரால் நிறுவப்பட்ட போதி மரத்தினை தமிழர் தலைவர் உள்ளிட்ட விருந்தினர்களைப் பார்வையிட அழைத்துச் சென்றார்.அனைவருக்கும் தேனீர் அளித்து மகிழ்வித்தார் முதல்வர் நிதிஷ்குமார். தமிழர் தலைவர் உள்ளிட்ட அனைத்து விருந்தினர்களையும் வாயில்வரை வந்து வழியனுப்பி வைத்தார்.


.
 

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...