Friday, April 29, 2016

பொதுத்துறை தனியார் துறைக்கு மாறும்போது இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து ஏற்படுகிறது

பீகாரில் சவால்களை சமாளித்து வெற்றி பெற்றவர் நிதீஷ்குமார்
பொதுத்துறை தனியார் துறைக்கு மாறும்போது இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து ஏற்படுகிறது

தனியார் துறைகளில் இடஒதுக்கீட்டுக்காகப் போராடுவோம்!

பீகார் முதல்வருக்கு தமிழ்நாட்டில் சிறப்பான வரவேற்பு காத்திருக்கிறது
பாட்னாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கருத்துரை
சென்னை, ஏப். 28- பொதுத்துறை தனியார்த்துறைக்கு மாறுவதால் இடஒதுக்கீடு பாதிக்கப்படுகிறது என்று குறிப்பிட்ட திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், தனியார்த் துறைகளிலும் இடஒதுக்கீட்டுக்காகப் போராடுவோம் என்றார்.

பீகார் மாநிலம் பாட்னாவில் அம்மாநில முதல் அமைச்சர் நிதீஷ் குமாருக்கு சமூக நீதிக்கான வீரமணி விருது வழங்கும் விழா 9.4.2016 அன்று சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

பெரியார் மண்ணிலிருந்து வந்திருக்கும் நாங்கள் மாண்புமிகு நிதிஷ்குமார், பெரியோர்கள் - ஜெயபிரகாஷ் நாராயண்,  கர்பூரி தாக்கூர், லாலுபிரசாத் ஆகியோர் மட்டு மின்றி அசோகரும், புத்தரும் வாழ்ந்த இம்ண்ணிற்கு எங்கள் உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். பீகாரைச்சார்ந்த எனது உடன் பிறப்புகளைப் பார்ப்பதிலும், பழகுவதிலும் மகிழ்வதோடு இந்தியாவின் தலைமகனாகிய நிதிஷ்குமார் அவர்களைப் பாராட்டுவதிலும் பெருமைப்படுகி றோம். வடக்கு, தெற்கு என்கிற வேறுபாடு இங்கு இல்லை. நிதிஷ்குமார் ஒரு இணைப்புப்பாலமாக விளங்குகிறார். அதனாலேயே இந்த விழாவில் நான் கலந்து கொள்கிறேன். வழங்கப்படுகிற விருது எனது பெயரில் இருப்பதனால்,  இத்தகைய விழாக்களில் கலந்து கொள்ள நான் தயங்குவது உண்டு. பெரியார் பெயரில் விருது இருந்தால், தயக்கம் இன்றி நான் கலந்து கொள்வேன். இருப்பினும் நான் இந்த அழைப்பினை ஏற்றுக் கொண்டதற்குக் காரணமே, விருது பெறும் தலைமகனார் ஒரு மாநிலத்தின் முதல் அமைச்சர் மட்டுமல்ல. இந்திய நாடே போற்றும் சமூக நீதியாளர்.

பெரியாரும் - அம்பேத்கரும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்


நாங்கள் பெரியாரின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டவர் கள். பெரியாரும் அம்பேத்கரும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் ஆவர். ஜோதிபா பூலே கூறியனவும், சாகுசத்ரபதி செய்தனவும், சிறீ நாராயண குரு ஏற்படுத்தியனவும் அண் மைக்காலத்தில் விமர்சனம் செய்யப்பெற்றன. எமது கருத்துப் படி பீகாரில் அண்மையில் நிகழ்ந்த - சட்டமன்றத்திற்கான தேர்தல் அரசியல் போராட்டம் அல்ல. அதற்கும் மேலாக அது சமூகப் போராட்டம் ஆகும். அதிலே நீங்கள் வெற்றி மாலை சூடி வெளி வந்துள்ளீர்கள். எனவே இந்த நிகழ்ச்சியில் மிகுந்த மன மகிழ்ச்சியோடு நாங்கள் கலந்து கொள்கிறோம். ஏறத்தாழ சட்டமன்றமே இங்கு இருக்கிறது. மதிப்பிற்குரிய சட்டமன்றத் தலைவர் மற்றும், மாநிலத்தைப் பிரதிபலிக்கின்ற இருபாலாரும் இங்கு நிறைந்துள்ளனர். எங்களது திராவிடர் கழக வரலாற்றில் இந்த நிகழ்ச்சி குறிப்பிடத் தக்க ஒன்றாகும்.

மதிப்பிற்குரிய நிதிஷ்குமார் அவர்களே! 1929-ஆம் ஆண்டிலேயே தந்தை பெரியார் அவர்கள் தந்த திட்டங்களை தீர்மானங்களை செயலாக்கி நீங்களும் செய்து வருகிறீர்கள். நிதிஷ்குமார் அவர்களும் நீங்களும் நானும் பிறந்திராத 1929-ஆம் ஆண்டிலேயே தமிழ்நாடு - செங்கல்பட்டில் நிகழ்ந்த முதலாவது சென்னை மாகாண சுயமரியாதை மாநாட்டிலேயே சமூகநீதி பற்றிய பல தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளார்கள். துணிச்சல் மிகுந்த புரட்சிகரமான தீர்மானங்கள் அந்த மாநாட்டில் வெளிவந்தன. அன்றைய சென்னை மாகாண முதலமைச்சர் சுப்பராயன் போன்றோர் அந்த மாநாட்டில் பார்வையாளராக பங்கேற்றுள்ளனர். சமூக நீதிக்குத் தலையாய முக்கியத்துவம் கொடுத்துள்ளனர்.

இராணுவத் துறையிலும் பெண்கள்

மகளிரைக் காவல் துறையிலும், இராணுவத்திலும் பணி அமர்த்தவேண்டும் என்கிற புரட்சிகரமான தீர்மானங்களும் நிறைவேறி உள்ளன. தி.மு.க ஆட்சியில் தமிழ் நாட்டில் இந்த வேண்டுகோள் செயல்படுத்தப் பெற்றது என்பது கூட வியப்புக்குப் உரியதல்ல, இங்கு பீகாரிலும் நமது மதிப்பிற்குரிய முதலமைச்சர் நிதிஷ்குமார் அதனை நிறைவேற்றி உள்ளார். முப்பத்தைந்து விழுக்காடு அளவில் மகளிர் காவல் துறையில் இருக்க வேண்டும் என்பது ஒரு நியதி. தந்தை பெரியார் இதனைப் பற்றிய தீர்மானம் போட்டபோது காவல் துறையில்  பெண்கள் எப்படிப் பணிபுரிவர் என்றெல்லாம் கேட்டார்கள். பெண்கள் தத்தமது கணவன்களையே கண்காணிக்கும்போது சமூகத்தையும் ஏன் கண்காணிக்கமுடியாது என்று எதிர் கேள்வி கேட்டார் பெரியார். பெரியாரின் அத்தகைய சிந்தனையை நீங்கள் இங்கே (பீகாரில்) செயலாக்கி உள்ளீர்கள். நீங்களும், லாலு அவர்களும் காங்கிரஸ் கட்சியோடு சேர்ந்த நிகழ்ச்சியினை ஒர்அரசியல் கூட்டு என்று நாங்கள் கருதுவதை விட, நீங்கள் ஒரு மாபெரும் சமூக விழிப்புணர்ச்சியை எற்படுத்தி உள்ளீர்கள் என்றே கருதுகிறோம். உங்களுக்குப் பீகார் மக்கள் அளித்த பெருத்த ஆதரவினை பெரிதும் பாராட்டுகிறோம். நமக்கென்று அரசமைப்புச் சட்டம் ஒன்று உள்ளது. பஞ்சாயத்து ஆட்சியிலிருந்து நாடாளுமன்றம் வரை நாம் அனைவரும் அந்த அரசமைப்புச் சட்டப்படிஉறுதிமொழி  எடுத்துக்கொண்டு பணிசெய்கிறோம். அந்த அரசமைப்புச் சட்டத்தின் முன்னுரையில் சட்டவல்லுநர்களின் கருத்துப்படி நாம் என்ன விரும்புகிறோம் என்பது, நாம் எதற்காகக் கிளர்ச்சி செய்ய வேண்டும் என்பது சட்டத்துக்குப் புறம்பானதோ   அல்லது எதிப்பானதோ அல்ல; அது சட்டத்துக்கு உட்பட்டது தான்; அதன்படி நாம் இப்போது விரும்புவது எல்லாம் அரசமைப்புச் சட்டவிதிகளை நடைமுறைப்படுத்தவேண்டும் என்பதுதான். அந்த வேண்டுகோளுக்கு எந்த பதிலும் இல்லை.

பீகாரில் எதிர்கொள்ளப்பட்ட மதச்சார்பின்மை

அரசமைப்புச் சட்டம் என்பதில் மதச்சார்பின்மை வலி யுறுத்தப்பட்டுள்ளது. அதன் முன்னுரையில் குறிப்பிட்டபடி அனைத்து மக்களுக்கும் சமூக நீதி, பொருளாதார நீதி, அரசியல் நீதி, ஆகிய மூன்று தளங்களில் நீதி வழங்கப்பட வேண்டும். சிலர் சமுகநீதியையும் பொருளாதாரநீதியையும் போட்டு குழப்பிப்கொண்டு இருக்கிறார்கள். நாங்கள் பெரியார் தந்த கொள்கைவழியில் தெளிவாக இருக்கிறோம். எங்களது இயக்கம் தெளிவாக உள்ளது. எனவே தான் சமூகநீதி தளத்தில் போராடவேண்டியுள்ளது. நம் அரசு ஒரு மதச் சார்பற்ற அரசு. அரசின் மதச்சார்பற்ற தன்மை பாதுகாக்கப்பட வேண்டும். அண்மையில் பீகார் மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத்திற் கான தேர்தலின் பொழுது மதச்சார்பின்மைக்கு சவால் விடுக் கப்பட்டது. சவால் விட்டவர்களுக்கு பீகார் மக்கள் சரியான தீர்ப்பினை தங்களது வாக்களிப்பின் மூலம் நிரூபித்துள்ளனர். நீங்கள் கொடுத்த தீர்ப்பினால் சமூகநீதி - இடஒதுக்கீடு பற்றிய தங்களது நிலைப்பாட்டினை பூசி மெழுகிடும் நிலையில் சவால் விட்டவர்கள் உள்ளனர். இடஒதுக்கீடு முறை பரிசீலிக்கப் படவேண்டும் என தொடக்கத்தில் சொன்னார்கள். இல்லை, இல்லை, இடஒதுக்கீடு தொடர்ந்திடவேண்டும்  என இப் பொழுது கூறிவருகிறார்கள். அண்ணல் அம்பேத்கரையே அபகரித்துவிடுவார்கள் போல இருக்கிறது. அம்பேத்கரிடம் நிழல் தேடி வருகிறார்கள். ஆனால் நிழல் தேடி வரும்போர் வையில் சமூகநீதியினை அமைதியாகத் தகர்த்து விடும் செயலிலும் உள்ளார்கள். இத்தகைய போலியாளர்களை புறந் தள்ளிட  நிதிஷ் குமார் போன்றவர்கள் - பல நிதிஷ் குமார்கள் தேவைப்படுகின்றனர். இந்த அடிப்படையில்தான் பெரியார் பன்னாட்டகத்தினர் சமூகநீதி விருதிற்கு நிதிஷ் குமாரை தெரிவு செய்துள்ளார்கள். பெரியார் பன்னாட்டமைப்பிற்கு நமது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். மூன்று விசயங் களை நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும்.  சவாலாகவும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இம் மாநிலம் மண்டல் பிறந்த மண்.
 மண்டல் அவர்கள் தமிழ்நாட்டிற்கு வருகைதந்த பொழுது கூறினார்கள்: பிற்படுத்தப்பட்டவர் நலனுக்கான காகா கலேல்கர் குழு அளித்த அறிக்கை என்ன ஆனது? அந்நிலை  எனது குழு அறிக்கைக்கு நேர்ந்துவிடக்கூடாது. எனது தலைமையிலான பிற்படுத்தப்பட்டவர் குழு அறிக்கையினை அளிப்பதுடன் எனது பணி முடிந்து விடும். திராவிடர் கழகம் - பெரியார் இயக்கம் எமது அறிக்கைக்கு  உயிர் கொடுக்க வேண்டும்.   மண்டலின் கூற்றினை கருத்தில் கொண்டு சந்திர ஜித் யாதவ், டி.பி. யாதவ், கர்பூரிதாக்கூர், மற்றும் பலரை அனைத்திந்திய அளவில் ஒருங்கிணைத்து பல்வேறு போராட் டங்கள் மற்றும் மாநாடுகளை மண்டல்குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்திட நடத்தினோம். இந்த சமூகநீதி விருது முதன்முதலில் வழங்கப்பெற்ற மதிப்பிற்குரிய முன்னாள் பிரதமர் விபி சிங் மண்டல்குழு பரிந்துரை நடைமுறைக்கு  வழி அமைத்தார். கமண்டலுக்கு விடை கொடுத்தார் அத்த கைய போராட்டத்தினை தொடர்ந்து நடத்திட வேண்டிய நிலையில் உள்ளோம். பிற்படுத்தப்பட்டோருக்கான 27 விழுக் காடு இட ஒதுக்கீடு உரிய நிலையில் உரியஅளவில் கிடைப்ப தற்கு போராட வேண்டியுள்ளது.

மண்டல் குழு பரிந்துரைக்காக திராவிடர் கழகத்தின் போராட்டங்கள்


மண்டல்குழு பரிந்துரை நடைமுறைக்கு திராவிடர் கழகம் 42 மாநாடுகளை கூட்டி வலியுறுத்தியது. 16 போராட்டங்களை (தலைநகர் புதுடில்லி உட்பட) பல்வேறு இடங்களில் நடத்தி ஆக்கம் கூட்டியது. இத்தகைய முயற்சிகள்  பலன் அளித்தன. ஆம், 1992-ஆம் ஆண்டில் பெருமதிப்பிற்குரிய வி.பி.சிங், மண்டல்குழு பரிந்துரையில் ஒரு பகுதியான பிற்படுத்தப்பட் டோருக்கு மத்திய அரசின் வேலைவாய்ப்பில் 27 விழுக்காடு இட ஒதுக்கீடு கொண்டு வந்தார்.

இன்று தமிழ் நாட்டில் மொத்தஇடஒதுக்கீடு 69 விழுக்காடு நடைமுறையில் உள்ளது. தமிழ் நாட்டில் எந்த அரசியல் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டில் கைவை க்கும் துணிச்சல் வராது. ஏனென்றால் சமூகநீதி தமிழ் நாட்டின் உயிர் நாடி. இந்நிலை இந்திய நாடு முழுமைக்குமான உயிர் நாடியாக மாறவேண்டும்.

இப்பொழுது சமூகநீதி - இடஒதுக்கீட்டின் நிலை எந்த அளவில் உள்ளது? நிதிஷ் - லாலு இருவரும் சேர்ந்து நடத்தி வரும் சமூகநீதிப் போர், மீண்டும் 1992 இல் நிலவிய விழிப்புணர்வினை கொண்டுவரவேண்டும். இந்த அறிவார்ந்த அவையினரிடம் சமூகநீதி வழங்கலின் ஒரு பரிதாபகரமான நிலையினை எடுத்துச் சொல்ல விரும்புகிறேன். மய்ய அரசின் வேலை வாய்ப்பில் 27 விழுக்காடு பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடாக 1992 ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்டது. ஆனால் இன்று வரை மய்ய அரசு பதவிகளில் பிற்படுத்தப் பட்டோர்  எண்ணிக்கை 7 முதல் 12 விழுக்காடு என்ற அள வில் தான் உள்ளது. மண்டல் குழு பரிந்துரை நடைமுறைகண்ட பிறகும் உயர்ஜாதிப் பிரிவினர் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டினை அபகரித்துவந்துள்ளனர் பிற்படுத்தப்பட்ட மக்கள் உண்மை நிலை அறியாமல் உறங்கிக்கொண்டு இருக்கிறார்கள் இதுவே சரியான தருணம். அனைத்திந்திய அளவில் ஒதுக்கப்பட்ட மக்கள் அனைவரும் சமூகநீதியினைக் காக்க,  மதசார்பின்மையினை காக்க ஒன்றுபட்டு நிற்கவேண் டிய சூழல் உருவாகிவிட்டது. மதிப்பிற்குரிய நிதிஷ்குமார் அவர்களே, ஒடுக்கபட்ட மக்களின் ஒன்றுபட்ட எழுச்சியினை உங்களால்தான் ஏற்படுத்த முடியும்; உங்களது சீரிய தலை மையில் தான் அந்த எழுச்சி உருவாக முடியும். சரியான நேரம் இது. மறுபடியும் சமூகநீதிப் போரினை துவக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

நீதித்துறையில் சமூகநீதியின் நிலை என்ன?


நீதித்துறையில் சமூகநீதியின் நிலை என்ன? கடந்த சில ஆண்டுகளாகவே உச்சநீதிமன்ற நீதிபதிகளில் ஒரு நீதிபதிகூட தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவராக இல்லை. மொத் தம் உள்ள 31 நீதிபதிகளில் இருவர் மட்டுமே பிற்படுத்தப்பட்ட வகுப்பினைச் சார்ந்தவர்கள். அதில் ஒருவர் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் பணிநிறைவு பெறுகிறார். மற்றொருவர் பெண் நீதிபதி - தமிழ்நாட்டைச் சார்ந்தவர்; சற்றுகாலம் தொடருவார். மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்ற சட்ட மன்ற அவைகளாகட்டும், நாடாளுமன்ற அவைகளாகட்டும் அவை எடுக்கும் எந்த ஒரு சட்ட திட்டத்தினையும் உச்சநீதிமன்றம் ஒரே வரியில் தடுத்துவிட முடியும். அப்படிப்பட்ட நிலையில் உள்ள நீதித்துறையில் சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினரையும், குறிப்பாக ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற வகையில் நீதிபதிகள் அங்கம் வகிக்கவில்லை. சமூகநீதி நிலைநாட்டப்பட வில்லை. இந்த பரிதாபகரமான நிலை, நீக்கப்பட வேண்டும். யாருடைய உரிமையையும் நாம் அபகரிக்கவில்லை. அதே நேரத்தில் பாத்திரம் ஏந்தி பிச்சை எடுக்கவும் தேவையில்லை. நமக்கான உரிமையினை நிலைநாட்டிட வேண்டும்.

இந்த உரிமையினை ஏற்பதற்கு நமக்கு முழு பாத்தியதை உண்டு; ஏனென்றால் நாம் இந்த மண்ணின் மைந்தர்கள் தண்ணீரை ஆக்க ரீதியாக இறைத்துப் பயன்படுத்துபவர்கள். நல்லதைச் செய்திடுபவர்கள் ஆகையினால்தான், நிதிஷ் குமார் அவர்களே நீங்கள் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்துபவராக இருக்கிறீர்கள்! மேலாதிக்கப் பிரிவினர் நமக்கான உரிமைகளை மறுப்பது மட்டுமில்லை. 27 விழுக்காடு இடஒதுக்கீட்டினை அபகரிப்பது மட்டுமல்ல - இந்த சமூகநீதி வாய்ப்பு நடைமுறையில் உள்ள பொதுத்துறையினை தனியார் துறைக்கு மாற்றி சமூகநீதியினைக் குழி தோண்டி புதைத்தும் வருகிறார்கள்.

பொதுத்துறை தனியார்த்துறைக்கு மாற்றப்படும்பொழுது - இடஒதுக்கீடு கேள்விக்குறி


சமூகநீதி வழங்குவதில் பொருளாதார அடிப்படையினை வலியுறுத்திடும் அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பான செயலைச் செய்வதோடு, மட்டுமல்லாமல், பொதுத்துறை நிறுவனங்களை சமூகநீதி கடைப்பிடிக்கப்படாத தனியார் துறைக்கு மாற்றி அனைத்து ஒடுக்கப்பட்டோருக்கான வேலை வாய்ப்புகளையும்; இல்லாமல் செய்து வருகின்றனர். தனியார் துறையிலும் சமூகநீதித் தத்துவம் நடைமுறை காண வேண்டும். இடஒதுக்கீடு அமலாக்கப்பட வேண்டும் என தமிழ்நாட்டில் இயக்கமாக போராட்டத்தினை தொடங்கியுள்ளோம். இந்த சமூகநீதிப் போராட்டம் நாடு முழுவதும் பற்றிக் கொண்டு விட்டது. தனியார் துறையில் சமூகநீதி நடைமுறைக்கு சரியான தருணம் இது. நாமெல்லாம் சேர்ந்து நிறைய பணிகளை ஒருங்கிணைந்து ஆற்றிட வேண்டியுள்ளது நம் ஒவ்வொரு வரின் கரங்களும் இணைந்து போராட முன்வர வேண்டும். இது வெறும் அரசியல் முன்னணி அல்ல; சமூக முன்னணி ஆகும். மதச்சார்பு அற்ற முன்னணி. அந்த வகையில் உங்கள் அனைவருடனும் இணைந்து போராடுவதில் பெருமிதம் கொள்கிறோம்.

இப்பொழுது நான் மூன்றாவது முறையாக பீகார் மாநிலத் திற்கு வந்துள்ளேன். முன்பு கர்பூரி தாக்கூர் மற்றும் ராம்விலாஸ் பஸ்வான் ஆகியோருடன் சேர்ந்து காந்தி மைதானத்தில் சமூகநீதிப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளேன். அதற்குப் பின்னர்  ஒரு முறை வந்துள்ளேன்; இங்குள்ள சில மூத்தவர்களுக்கு நினைவிருக்கும்; ராம் லக்கன் பாபு, சந்திரஜித் யாதவ் ஆகியோருடன் வந்து கூட்டத்தில் பேசியிருக்கிறேன். இப்பொழுது வந்திருப்பது மூன்றாவது தடவை. நேற்று புத்தகயாவிற்கு செல்லுகின்ற வாய்ப்பு  கிட்டியது. போகும் வழியெல்லாம் மக்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதை பார்க்க முடிந்தது. மகளிர் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். சிறார்கள், மாணவர்கள் சீருடை அணிந்து பள்ளிக்கு மகிழ்ச்சியுடன் செல்லுகின்ற காட்சியினை பார்த்திட முடிந்தது.

பீகாரில் கூட்டாட்சியா?

இந்த முறை வந்த பொழுது முற்றிலும் மாறுபட்ட பீகாரைப் பார்க்க முடிகிறது. அண்மையில் நடந்த தேர்தலின் பொழுது பீகாரில் நடப்பது காட்டாட்சி (Juungle Raj) என எதிர்தரப்பினர் பிரச்சாரம் செய்தனர். நான் புத்தகயாவிற்குச் செல்லும் பொழுது காட்டாட்சி நடக்கிறதா என தேடிக் கொண்டே சென்றேன். காட்டாட்சி எங்கே? காடு எங்கோ இருந்தது; ஆட்சி இங்கே இருந்தது. ஆனால் காட்டாட்சியைக் காண முடியவில்லை. (அவையோரின் கரவொலி பலமாக இருந்தது) இதுதான் நிதிஷ்குமார் அவர்களே! உங்களது மகத்தான வெற்றி! வாழ்த்துகள்! உங்களுக்கு நன்றி கூறுகிறோம் அன்பின் அடிப்படையில்.

அதுமட்டுமல்ல, தேர்தல் நேரத்தில் நீங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறீர்கள். அது மகத்தான பெருமையாகும். மதுவிலக்கினை நடைமுறைப்படுத்தியுள் ளீர்கள். தமிழ்நாடே உங்களது செயலை வாழ்த்திப் பாராட்டு கிறது. மதுவிலக்குபற்றி வெறும் அறிக்கைகள் மட்டும் அந்தந்த மாநிலங்களில் வந்து கொண்டிருக்கும் நிலையில், நீங்கள் மதுவிலக்கு நடைமுறைக்கு காத்திருக்கவில்லை.‘இப்பொழுது இல்லை என்றால் எப்போதும் இல்லை’ என காரியம் உணர்ந்து கடமை ஆற்றி வருகிறீர்கள். மதுப்பழக்கம் விளைவின் கொடு மையிலிருந்து பல்லாயிரக்கணக்கான குடும்பங்களைக் காப்பாற்றியிருக்கிறீர்கள். மகளிருக்கு - சகோதரிகளுக்கு, பெண்பிள்ளைகளுக்கு நிவாரணம் அளித்துள்ளீர்கள். இலக்கு வன் தமிழ் உரையாற்றுகையில் அனைத்து பெண் பிள்ளை களின் கூக்குரல் உங்களுக்கும் கேட்டிருக்கிறது எனக் குறிப் பிட்டார்.
இம் மாநிலத்து பெண் பிள்ளைகள் அனைவரையும் உங்களது பிள்ளைகளாக கருதி, கடமை ஆற்றி வருகிறீர்கள். அடக்கப்பட்ட மனித சமுதாயத்தினரின் அதிகாரமய்யத்திற்கு ஆக்கம் கூட்டி வருகிறீர்கள், மக்களுக்கு கல்வி, அமைதியான மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கையினை ஒரு ஒடுக்கப்பட்ட சமுதாயத்திலிருந்து வந்த முதலமைச்சர் தான் தந்திட முடியும். தகுதி திறமைக்கு இடமில்லை; செயல்திறன் காரணம் காட்டி நம்மை புறந்தள்ள முயற்சிக்கிறார்கள். இவை எல்லாவற்றையும் தவிடுபொடியாக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக மாண்பமை நிதிஷ்குமார் விளங்குகிறார். முன்மாதிரி முதல்வராக விளங்குகிறார்.

பீகார் முதல்வரை தமிழ்நாட்டுக்கு அழைக்கிறோம்

சகோதர, சகோதரிகளே! நிதிஷ்குமார் அவர்களுக்கு சிறப் பானதொரு வரவேற்பு வழங்கிட தமிழகத்திற்கு அழைக்கி றோம், பீகார் மாநில உடன் பிறப்பினை தமிழ்நாட்டுக்கு அழைக்கிறோம். சமூகநீதிக்காவலர் வி.பி.சிங் அவர்கள் தமிழகத்தினை தமது இரண்டாம் சொந்த வீடாகக் கருதினார். அதைப்போல நீங்களும் கருதி தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்திட வேண்டும். நாங்கள் உங்களை பாராட்ட, பின்பற்றிட விரும்புகிறோம். இந்த நல்ல வாய்ப்பினை நல்கிய உங்களுக்கு எங்களது நன்றியினைத் தெரிவித்து கொள்கிறோம். சமூகநீதி விருது பெற்றமைக்கு எமது வாழ்த்தினை தெரிவித்துக் கொள்றோம்.

பெரிய விருதுகளும் உங்களை வந்து சேரும். ஆனால் இந்த விருதுகளுக்கு எல்லாம் மேலாக மக்கள் உங்களிடம் அளித்திருக்கும் தேர்தல் வெற்றி விருது மிகவும் பெருமை வாய்ந்தது. உறுதிமொழிகளை நடைமுறையாக்கிடும் உங்களது செயல்களைத் தொடர்ந்திடுக! டெல்லி தழுவிய நிலையில் உங்களது பணி மேலும் பரவிட வேண்டும். அந்தச் சூழலை எதிர்நோக்கி காத்திருக்கிறோம். சந்திப்போம். நன்றி வணக்கம்!

இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:


No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...