Total Pageviews

Tuesday, March 29, 2016

ஜாதி தீண்டாமை ஒழிப்பு திராவிடர் கழகத்திற்கு மட்டும் தானா?


கரூர் அருகே உள்ள ராமா கவுண்டன்புதூரை சேர்ந்த சுரேஷ் ஆரோக்கிய சாமி என்பவரை (வயது 28). கரூர் - ஈரோடு சாலையில், ஆத்தூர் பிரிவு என்னு மிடத்தில் கையில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த நான்கு பேர் அவரை சரமாரியாக வெட்டினர். அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அவரை, பொதுமக்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சுரேஷ் ஆரோக்கியசாமி இறந்தார்.

இந்த கொலை நடந்த சில மணி நேரங்களில் ஒருவர், காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர், சுரேஷ் ஆரோக்கியசாமியை நான் தான் கொலை செய்தேன் என தெரிவித்துள்ளார்.

அவர் கூறும்போது, கொலை செய்யப்பட்ட சுரேஷ் ஆரோக்கியசாமி எனது தங்கையை கடந்த ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டார்.

அவர் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் எனது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அதையும் மீறி சுரேஷ் ஆரோக்கியசாமி எனது தங்கையை திருமணம் செய்து கொண்டார். அவர் மீதுள்ள ஆத்திரத்தில் கொலை செய்தேன் என்றும் கூறியுள்ளார்.

சுரேஷ் ஆரோக்கியசாமிக்கும், அந்த பெண்ணுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. அதன்பிறகு அந்த பெண்ணை சுரேஷ் ஆரோக்கிய சாமியிடம் இருந்து வலுக் கட்டாயமாகப் பிரித்து வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட்டனர்.

இதனால் சுரேஷ் ஆரோக்கியசாமி மனைவியை கண்டுபிடித்து ஒப்படைக்கக் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது ஆஜரான அந்த பெண்ணிடம், சுரேஷ் ஆரோக்கிய சாமி தன்னுடன் சேர்ந்து வாழ வரும்படி கூறினார். ஆனால் அந்த பெண் சுரேஷ் ஆரோக்கியசாமியிடம் செல்ல மறுத்து தனது பெற்றோருடன் வாழ விரும்புவதாக கூறிவிட்டார். (இப்படிதான் தருமபுரி இளவரசன் விடயத்திலும் நடந்தது)

ஆனாலும் சுரேஷ் ஆரோக்கியசாமி காதல் மனைவியை வீட்டிற்கு அழைத்து செல்வதில் குறியாக இருந்தார். இந்த நிலையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

சுரேஷ் ஆரோக்கிய சாமியை கொலை செய்த கொலையாளிகளின் உருவம் அங்குள்ள கடைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருக்கலாம் என தெரிகிறது.

இதையடுத்து கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக பெண்ணின் சகோதரர் சிவநேசன் உள்பட 4 பேர் மீது கரூர் நகரக் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

உடுமலைப்பேட்டையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாதி மறுப்பு திருமணம் செய்த பொறியியல் கல்லூரி மாணவர் சங்கர், அவரது காதல் மனைவி கவுசல்யா கண் எதிரிலேயே கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தின் சோகம் மறைவதற்குள் கரூரில் சுரேஷ் ஆரோக்கியசாமி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்பவர் கொலை என்ற பட்டியலில் இது 82 ஆவது என்று சொல்ல வேண்டும்.

இதுவரை இந்தக் கொலைக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படவில்லை என்பது தமிழகக் காவல்துறை எந்த இலட்சணத்தில் செயல்படுகிறது என்பதற்கான எடுத்துக்காட்டாகும்.

ஜாதி வெறிக் கண்ணோட்டத்தில் நடக்கும் இந்தக் படுகொலைக்கு ‘கவுரவக் கொலை’ என்று பெயர் சூட்டுவது வெட்கக் கேடாகும்.

இதுதான் சந்தர்ப்பம் என்று திராவிட இயக்கம் தோற்றுவிட்டது. பெரியார் கொள்கை தோற்றுவிட்டது என்பது போல பிரச்சாரம் செய்வது ஒரு வாடிக்கையாகி விட்டது.

திராவிடர் கழகம் தன் பணியை முழு வீச்சில் செயல்படுத்திக் கொண்டுதான் உள்ளது. ஜாதி தீண்டாமை ஒழிப்பு மாநாடுகளையும், பிரச்சாரத்தையும் முழு வேகத்தில் செய்து கொண்டுதானிருக்கிறது.

தருமபுரி மாவட்டத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் வாழும் பகுதிகள் கொளுத்தப்பட்டபோதுகூட, அந்த இடத்திற்கு உடனடியாக திராவிடர் கழகத் தலைவர் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்ததோடு அல்லாமல் உடனடியாக தருமபுரியில் ஜாதி ஒழிப்பில் நம்பிக்கையுள்ள அனைவரையும் கூட்டி ஜாதி ஒழிப்பு மாநாடு நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

ஜாதி ஒழிப்புப் பணியில் மற்றவர்கள் எந்தளவுக்கு ஒத்துழைப்பைக் கொடுக்கிறார்கள் என்பது முக்கியமானதாகும். வீணாக அபவாதம் பேச வேண்டாம். திராவிடர் கழகத்தின் சமூக புரட்சிப் பணிகளுக்கு ஒத்துழைப்புக்கொடுக்க முன் வரட்டும்!

ஜாதி கட்சிகளை ஒன்று சேர்த்து தலித் அல்லாதார் அமைப்பு உருவாக்கப்பட்ட போது இந்த ஊடகத்தார்களும் ‘மேதாவிகளும்‘ அதனை ஏன் கண்டிக்கவில்லை என்ற கேள்வி முக்கியமானதாகும். அப்பொழுதே அதனைக் கடுமையாகக் கண்டித்ததும் விமர்சனம் செய்ததும் திராவிடர் கழகமே

- தலையங்கம் 28-03-2016

0 comments: