Total Pageviews

Tuesday, March 29, 2016

பீம்சிங் இது என்ன குழப்பம்?.


ஒரு சினிமாவில் இப்படி ஒரு வசனத்தை எழுதினார்  கலைஞர், அது இன்றைய அரசியல் சூழலில் மிகவும் பொருத்தமாக உடையதாக இருக்கிறது.

நால்வர் அணி என்று பொதுவாகப் பேசப்பட்டபோது அது தவறு, எங்கள் அணியின் பெயர் மக்கள் நலக்கூட்டணி நாங்கள் கொள்கையின் அடிப்படையில் கூட்டணி வைத்துள்ளோம். பொதுத் திட்டத்தையும் வகுத்துக் கொண்டு இருக்கிறோம். இப்படி ஒரு தெளிவான, திட்டவட்டமான வரையறையோடு தேர்தலில் சந்திக்கக் கூடியவர்கள் எங்களைத் தவிர வேறு யார்? எந்தக் கூட்டணி? என்று சவால்விடுக்கும் வகையில் தோள் தட்டி, துடை தட்டி ஆர்ப்பரிப்போடு வலம் வந்தனர் அதன் முக்கிய தலைவர்கள். தமிழ்நாடு அளவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பொதுக்கூட்டங்களை நடத்தி தங்களின் வீர தீர பிரதாபங்களை கொட்டி தீர்த்தனர். இதோ இரண்டாவது சுற்று, மூன்றாவது சுற்று - அடுத்த சுற்றுக்கும் தயாராகிவிட்டோம் - எங்கள் கூட்டங்களில் மக்கள் திரள்கிறார்கள். மக்கள் கடல் போல் திரள்கிறார்கள். திமுக, அதிமுகவிற்கு மாற்று அணி என்று மனதில் எங்களை தேர்வு செய்து விட்டார்கள்; மக்கள் மனங்களில் நாங்கள் நங்கூரம் பாய்ச்சி விட்டோம் என்று போர்ப்பாட்டு பாடினார்கள்.

ஏதோ இவர்களுக்கு ஒரு முகம் கிடைத்துவிட்டது என்று கூட விமர்சகர்கள் கருத்து தெரிவித்தார்கள்.

அப்படியாகப்பட்ட ஒரு கால கட்டத்திலே நடந் தது - நடந்தது - என்ன நடந்தது? நந்தவனத்தில் ஓர் ஆண்டி அவன் அய்ந்தாறு மாதமாய் குயவனை வேண்டி கொண்டு வந்தான் ஒரு தோண்டி - அதனைக் கூத்தாடிக் கூத்தாடி போட்டுடைத்தான் ஓர் ஆண்டி என்று சொல்வார்கள் அல்லவா - அதனை அட்சரம் பிறழாமல் செய்து முடித்தவர்கள் என்ற பெருமைக்குரிய அணியாக அல்லவா ஆகிவிட்டது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வருவார் வருவார் என்று காத்துக் கிடந்தனர்; ஆனால் அவர் யார் யாருடனோவெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார் என்ற செய்தி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக நாளேடுகளில் வந்த வண்ணமாகவே இருந்தது.

காத்துக் காத்து பார்த்தார்கள் - கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் தேமுதிக வின் அலுவலகத்தை நோக்கி படையெடுக்கவில்லையா? அதுதான் இப் பொழுதும் நடந்தது.

கடைசியில் ஒருவழியாக மக்கள் நலக்கூட்டணி யோடு விஜயகாந்தின் தேமுதிகவும் இணையும் என்று அறிவித்தனர். நாள்தோறும் நடைபயணம் சென்று கொண்டிருந்த கிசுகிசு மத்தாப்பு எரிந்து முடிந்ததற்காக மக்களுக்கும் ஒரு வகையில் நிம்மதிதான்.
சரி, மக்கள் நலக்கூட்டணி என்னவாயிற்று? விஜய காந்த் கூட்டணி என்று திரு நாமம் பெற்றது. இந்த முடிவை யார் எடுத்தார்கள்? அந்த

தலைவர்கள் கூடிக் கலந்து விவாதித்து எடுத்தார்களா? அதுதான் இல்லை. அந்த அணியின் ஒருங்கிணைப்பாளராக இருந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தன்னிச்சையாக அறிவித்து விட்டார். ...

இன்றைய நிலவரம் என்ன? இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்கள் விஜயகாந்து கூட்டணி என்றெல்லாம் அழைக்க கூடாது. மக்கள் நலக்கூட்டணி என்பது தான் சரி என்று சொல்லிவிட்டார்கள்.

இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தோழர் ஜி.ராமகிருஷ்ணன் அதையே வழி மொழிந்து விட்டார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தோழர் திருமாவளவன் அவர்கள் மட்டும் விஜயகாந்த் கூட்டணி எனச் சொல்லுவதில் கவுரவக் குறைச்சல் இல்லை என்று ஒளிவு மறைவு இல்லாமல் கூறிவிட்டார்.

ஒருங்கிணைப்பாளர் வைகோ அவர்கள் உணர்ச்சி வசப் பட்டு, தான் கூறிவிட்டதாக கூறி இருப்பதாக ஓர் ஏடு கூறுகிறது. விஜயகாந்த் கூட்டணி என்றால் தான் மக்களுக்குத் தெரியும் என்று தேமுதிகவின் முதுகெலும்பாக இருக்கும் திருமதி பிரேமலதா அவர்கள் மக்கள் நலக்கூட்டணி என்னும் முதுகெலும்பை முறித்து கூடையில் அள்ளிவிட்டார்.

இதுவரை தேசிய முன்னணி, அய்க்கிய முற்போக்கு கூட்டணி, தேசிய ஜனநாயக கூட்டணி என்பது போன்ற பெயர்களை கேள்விப்பட்டுள்ளோம். தனி நபர் ஒருவரை முன்னிறுத்தி கூட்டணி பெயர் அறிவித்ததாக கேள்வி பட்டதில்லை. தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தான் இவர்களுக்குத் தலைவராகி விட்டார்.

பொது மக்களுக்கு சில சந்தேகங்கள் எழத்தான் செய்கின்றன. இந்த அணியில் உள்ள கட்சிகள், தலைவர்கள் தமிழ்நாட்டுக்கு இதற்குமுன் அறிமுகம் ஆகாதவர்களா, இந்த கட்சிகள், தலைவர்கள் ஆற்றியவைகளைவிட, பின்பற்றும் கொள்கைகளை தியாகங்களைவிட எந்த வகையில் விஜயகாந்த்தோ அவரின் தேமுதிகவோ மேம்பட்டது? இது வரை விஜயகாந்த் அவர்கள் தம் கொள்கை கோட்பாடுகள், இலட்சியங்கள் என்பவற்றை அறிவித்ததுண்டா? “நான் குழப்புவேன்” என்று சொன்னதை விட ஒன்றும் பெரிதாக தெரியவில்லையே!

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சென்று சொந்த கட்சியின் கொடியை ஏழுமலையான் பாதார விந்தங்களில் வைத்து வணங்கி பெற்றுக்கொண்டு வந்தார் என்பது தான் மற்ற நான்கு கட்சிகளுக்கும் இல்லாத தனித்தன்மையான சிறப்போ சிறப்பு!

இன்னொரு கேள்வியும் இருக்கிறது, மக்கள் நலக் கூட்டணி வகுத்துக் கொண்ட பொதுத்திட்டம் குறித்து விஜயகாந்திடம் விவாதிக்கப்பட்டதா? அவர் அதனை ஏற்றுக்கொண்டாரா? ஏற்றுக்கொண்டார் எனில் அவர் தனியாக அறிக்கை கொடுத்திருக்கிறாரே அது எப்படி? அப்படி என்றால் ஏற்கெனவே இருந்த மக்கள் நலக் கூட்டணியின் பொதுத்திட்ட.ம் காலாவதியாகி விட்டதா?
இன்னொரு முக்கிய கேள்வி உண்டு. முதலமைச்சர் யார் என்று முன்னமேயே அறிவிக்க மாட்டோம். அது ஜனநாயகப் பண்புக்கு விரோதமானது என்று நான்கு தலைவர்களும் சொன்னார்களே! அந்த ஜனநாயகப்பண்பு இப்பொழுது எந்த காற்றில் பறந்தது? ஒரு மாத காலத்துக்குள்ளாகவே தங்களை தாங்களே அம்பலப்படுத்திக்கொண்டுவிட்டனரே! அவலம் - பரிதாபம் - கேலி அல்லவா ஏற்பட்டுவிட்டது. எதிர்கட்சித் தலைவராக இருந்தே - அவர் ஆற்ற வேண்டிய அடிப்படைக் கடமையை ஆற்றவில்லை. முதலமைச்சர் ஆனால் அவ்வளவு தான் என்பது பாமர மக்களிடையே ஒரு நமட்டுச் சிரிப்பு!

விஜயகாந்த் அணி ஒரு உதவியைச் செய்து கொடுத்துவிட்டது. மக்களை நல்லமுறையில் சிந் திக்கவும் வைத்துவிட்டது. இப்பொழுது தமிழக முத லமைச்சர் யார்? கலைஞரா, செல்வி ஜெயலலிதாவா? விஜயகாந்தா? டாக்டர் அன்புமணி ராமதாஸா? இந்த கேள்விக்கான விடையாக தேர்தல் அமையப்போகிறது - விஷயம் சுருக்கப்பட்டு சுருக்கமான இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

மேலெழுந்த வாரியாக பார்த்தாலும் சரி, ஆழமாக பார்த்தாலும் சரி - கலைஞர் அவர்கள் தான் ஆறாவது முறையாக தமிழக முதலமைச்சராக எல்லா வகையிலும் தகுதியானவர் - அவர் முதலமைச்சர் ஆனால் தான் நாட்டிற்கு நன்மை கிடைக்கும், வளர்ச்சி ஓங்கும் என்பது எளிதாக கண்டுபிடிக்க - கணிக்க இப்பொழுது எளிதான வழி கிடைத்துவிட்டது. சுலபமாக தேர்வு செய்ய வசதி ஏற்பட்டுவிட்டது.

தேவையற்றவைகளையெல்லாம் மூளையில் கொட்டி கசக்கி பிழிந்து கொண்டிருக்க வேண்டியதில்லை!
இந்த நால்வரில், யார் ?

வாக்காளர்களே சிந்தியுங்கள் நீங்கள் அளிக்கும் வாக்கு- அய்ந்து ஆண்டுகள் நம்மை ஆட்சி செய்வோர் யார்? என்பது பற்றியது அல்லவா! அன்பளிப்பு, இலவசங்கள் என்றாலும் ஒரு சில நாட்களோடு அவை கரைந்து விடும்; 
நிரந்தரமான நலன்களுக்கு தீர்க்கமான சிந்தனை தேவை! தேவை!
- நோக்காளன்

0 comments: