Total Pageviews

Wednesday, March 30, 2016

சட்டத் தடை, நீதிமன்றத் தடையில்லாத நிலையில் தீட்சை பெற்ற 206 பேரையும் அர்ச்சகர்களாக நியமிக்க முதலமைச்சர் தயங்குவது ஏன்?

குலக்கல்வி திட்டம் ஒழிக்கப்பட்ட நாளில் (ஏப் 18) நடத்தப்படும்
மறியலில் அனைத்துத் தரப்பினரும் பங்கேற்க வாரீர்! வாரீர்!!

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை

பிரதமர் மோடிக்கு நெருக்கடியைகொடுக்கிறார்-ஆர்.எஸ்.எஸ்தலைவர்?  வெளியுறவுக் கொள்கையில் கடும் சிக்கல் வரும் எச்சரிக்கை!
தந்தை பெரியார் அவர்களால் தம் வாழ்நாளில் இறுதியாக அறிவிக்கப்பட்ட அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்ற மனித உரிமைக் கருத்தினை நடைமுறைப்படுத்த, சட்டத் தடையோ, நீதிமன்றத் தடையோ இல்லாத நிலையில், அர்ச்சகர் பயிற்சி மற்றும் தீட்சை பெற்ற 206 பேரையும் அர்ச்சகர்களாக நியமனம் செய்ய முதல் அமைச்சர் தயங்குவது ஏன் என்ற வினாவை எழுப்பி, குலக்கல்வி திட்டம் ஒழிக்கப்பட்ட நாளான ஏப்ரல் 18 அன்று திராவிடர் கழகம் முன்னின்று நடத்த உள்ள மறியல் போராட்டத்தில் அனைத்துத் தரப்பினரும் பங்கேற்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
திருச்சி - சிறுகனூர் பெரியார் உலகத்தில் கடந்த 19,20 (மார்ச்) தேதிகளில் திராவிடர் கழக மாநில மாநாடு, ஜாதி - தீண்டாமை ஒழிப்பு மாநாடு, சமூக நீதி மாநாடு களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், வரலாற் றினை வருங்காலத்தில் மாற்றப் போகும் லட்சியத் தீர்மானங்களாகும்.
அரசியல் மற்றும் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட பல சான்றோர்கள் அதனை வெகுவாகப் பாராட்டி நம்மிடம் பேசினார்கள் - மகிழ்ந்தார்கள்!
சட்டமன்றத்தில் முதல்வர் கொடுத்த வாக்குறுதியை
முதல் அமைச்சர் நிறைவேற்றட்டும்!
நமது அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள் தமது இறுதிப் போராட்டமாக பிரகடனப்படுத்திய ஜாதி - தீண்டாமை ஒழிப்பினை மய்யமாக்கிடும் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகி விட வேண்டும் என்பதற்கு சட்டபூர்வ இசைவும் - மறுப்பேதுமின்றி. கிடைத்து விட்ட நிலையில், ஏனோ, தமிழ்நாடு (அதிமுக) அரசு அதன் முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் சட்டமன்றத்தில் கொடுத்த வாக்குறுதியைக்கூட - சட்டத் தடைகள் இல்லை யானால் இந்த அரசு நியமனங்கள் செய்யும் என்று முன்பு தந்த உறுதிமொழியைக்கூட - செயல்படுத்தாமல் உள்ளது, வேதனைக்கும், கண்டனத்திற்கும் உரியது.
முறைப்படி ஆகமக் கல்லூரிகளில் தனித்தனியே சிவன் கோயில், வைஷ்ணவக் கோயில்களில் பூசை செய்ய “தீட்சை” பெற்ற 206 பேர் பார்ப்பனர் முதல் ஆதி திராவிடர் வரை பலரும் பல ஆண்டுகளாக நியமனமின்றி காத்துக் கிடக்கும் நிலை உள்ளது!
தமிழ்நாட்டில் உள்ள 36,000 கோயில்களில் பல முக்கிய பிரபல கோயில்களில் அர்ச்சகர்கள் ஆகமப் பயிற்சியே முறைப்படி பெறாதவர்கள் என்பது ஜஸ்டிஸ் ஏ.கே. ராஜன் கமிட்டியே தெரிவித்துள்ளது.
இந்து அறநிலையத்துறைக்கு ஆணையிட வேண்டிய முக்கிய பொறுப்பு தமிழ்நாடு அரசுக்கு, குறிப்பாக முதல் அமைச்சருக்கு உண்டு.
முதற்கட்ட பட்டியலில் 7000 பேர்
இதை வலியுறுத்தும் முதல் கட்ட அறப்போர் வருகின்ற ஏப்ரல் 18ஆம் தேதி குலக்கல்வித் திட்டம் ஒழிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிகுந்த நாளில் - தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளது.
மாநாட்டில் தீர்மானம் முன்மொழியப்பட்ட நிலையில், (முன்கூட்டியே போராட்டம் அறிவிக்கப்படும் என்று தெரிவித்த காரணத்தால்) அறப் போரில் ஈடுபடும் அறப்போர் வீரர்களின் பட்டியல்கள் மேடைக்கு வந்தன!
சுமார் 7000 தோழர்கள் பல மாவட்டங்களில் கலந்து கொள்ள பெயர்களோடு இசைந்து அறிவித்தனர்.
அதன் பின்னரும் சுமார் 1000 பேருக்கு மேல் நம்மிடம் நேரில் பல ஊர்களில் தந்தனர்.
ஜாதியின் உயிர் நிலை, சட்ட பூர்வமாகவும் நடைமுறைத் தன்மையிலும் கோயில் கருவறைக்குள் ‘கர்ப்பகிரகத்தில்’ உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.
நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவரான டாக்டர் டி.எம். நாயர் தாம் 1916ஆம் ஆண்டு சென்னையில் நிகழ்த்திய உரையில் இக்கருத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
பாரம்பரிய அர்ச்சகர் முறை ஒழிய வேண்டும்
என்றவர் பாபா சாகெப் அம்பேத்கர்
தந்தை பெரியாரும், புரட்சியாளர் அம்பேத்கரும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்பதனை உறுதிப்படுத்தும் பல்வேறு கொள்கை அணுகுமுறைகளில், பாரம்பரிய பார்ப்பன அர்ச்சகர் முறை ஒழிய வேண்டும் என்பதை 1929ஆம் ஆண்டே ஒரு பார்சி கோயில் பாரம்பரிய அர்ச்சகர் முறையை எதிர்த்து நடந்த போராட்டத்தினை ஆதரித்து ஒரு கட்டுரையே தீட்டினார் அம்பேத்கர்.
‘’Supporting the move in his article entitled “wanted an Anti-Priest-Craft Association”. Ambedkar wrote in the Bombay Chronicle that the Hindu priestly classes stood   no way superior ethically, educationally or otherwise to the average member of Parsee priesthood. “The counts in the indictment,” he proceeded, against the heriditary Hindu priests are numerous and appalling. He is a clog on the wheel of civilisation. Man is born, becomes the father of the family and then in time dies. All along the priest shadows him like an evil genius,”
Ambedkar described the officiating Brahmin as a miserable specimen of humanity and further said, “He practises the sham of being a middleman between the unseen powers and  helpless man and makes a living by it.” 
-Dr. B.R. Ambedkar: Life and Mission
by Dhananjay Keer (page 134)
தமிழாக்கம் வருமாறு:
‘பாம்பே கிரானிக்கிள்’ ஏட்டில் 1929ஆம் ஆண்டில் அக்டோபர் மாதத்தில் பார்சி ஒருவர் ஜாதி அடிப்படையில் அர்ச்சகர் முறை இருக்கக்கூடாது என்று வலியுறுத்தி அதற்காகவே சங்கம் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றும் எழுதியிருந்தார்.
அதை ஆதரித்து ‘அர்ச்சகர் எதிர்ப்பு சங்கத்தைக் கட்டமைக்க விரும்பினேன்’ எனும் தலைப்பில் பாம்பே கிரானிக்கிள் ஏட்டில் டாக்டர் பாபாசாகெப் அம்பேத்கர் எழுதியுள்ளார்.  இந்துக்களில் அர்ச்சகர்கள் எவரும் அறத்தின்படியும், கல்வியிலும், மற்றவகையில் சராசரியாக உள்ள பார்சி அர்ச்சகர்களைவிட மேலானவர்களாக இருக்கவில்லை.
‘குற்றச்சாற்றுகளின் எண்ணிக்கை’ என்று கூறுகையில், “இந்து மத அர்ச்சகர்களின்  பழைமைவாதங்கள் எண்ணிலடங்கா அச்சுறுத்தலாக இருக்கின்றன. இந்து அர்ச்சகன் என்பவன் நாகரிக சக்கரத்துக்கு தடையாக இருந்திருக்கிறான். மனிதன் பிறக்கிறான், குடும்பம், குழந்தைகள் என்று வாழ்ந்து காலத்தால் மறைகிறான். அனைத்து நிலைகளிலும் அர்ச்சகன் என்பவன் தீமை தரக்கூடிய நிழலாக இருந்திருக்கிறான்”
“பார்ப்பனர்களைக் கொண்டு எதையும் செய்வது என்பது மனிதத்தன்மையில்லாத, தவறான முன்மாதிரியாகவே இருந்துவந்துள்ளது” என்று கூறும் அம்பேத்கர் மேலும் கூறுகையில்,காணமுடியா சக்தி என்று கூறிக்கொண்டு அதைக்கொண்டு ஆதரவற்ற மனிதனின் வாழ்வை மேம்படுத்துவதாகக் கூறி இடைத்தரகனாக இருக்கின்ற வெட்ககரமான செயலைச் செய்து பிழைத்து வருகிறான்” என்று குறிப்பிட்டுள்ளார்.
(டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் வாழ்வும், பணியும் என்று தனஞ்செய கீர் எழுதியுள்ள நூலின் பக்கம் 134)
அனைத்துத் தரப்பினரும்
மறியலில் கலந்து கொள்க!
அம்பேத்கர் பற்றாளர்கள் உட்பட இந்த அறப்போரில் கலந்து கொள்ள முன் வர வேண்டும்!
ஏற்கெனவே ஆதித் தமிழர் பேரவையின் தலைவர் இரா. அதியமான் அவர்களும் தோழர்களுடன் இந்த அறப்போரில் கலந்து கொள்ளுவோம் என்று அறிவித்தார்கள்.
பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் நிறுவனர் - தலைவர் பெருங் கவிக்கோ வா.மு. சேதுராமன் தனது தோழர்களுடன் கலந்து கொள்ள அறிக்கை விடுத்துள்ளார்.
இது ஒரு  கட்சியின் போராட்டமோ, இயக்கத்தின் கிளர்ச்சியோ அல்ல. மாறாக, ஒட்டு மொத்த சமுதாய அமைப்பினைப் புரட்டிப் போடும், ஜாதி தீண்டாமை ஒழிப்பையே முன்னிறுத்தும் மாபெரும் போராட்டமாகும்!
வைதீக சனாதனத்தவர் தவிர, மற்ற அத்தனைப் பக்தர்களும்கூட இதனை வரவேற்கவே செய்கிறார்கள்.
எனவே, ஏப்ரல் 18ஆம் தேதி போராட்டத்தை இனஉணர்வாளர்கள், பகுத்தறிவாளர்கள், முற்போக்குச் சிந்தனையாளர்கள் உட்பட பலரும் பல்லாயிரக்கணக்கில்  கலந்து கொண்டு அறப்போரில் ஈடுபட முன்வர வேண்டும். போராட்ட இடங்கள், முறைகள்பற்றி ஏப்ரல் முதல் நாள் அன்று திராவிடர் கழக தலைமைச் செயற்குழு முடிவு செய்து வழிகாட்டும்.
அனைவரும் வாரீர்! வாரீர்!!


கி.வீரமணி
தலைவர்,    திராவிடர் கழகம்


சென்னை
29.3.2016  .
 1

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

0 comments: