Monday, March 28, 2016

வைகோவுக்கு வைகோதான் பதில் சொல்ல வேண்டும்!


மறுமலர்ச்சி திமுகவின் ஆற்றல் வாய்ந்த பொதுச் செயலாளர் அருமை வைகோ அவர்களைப் பற்றிய ஒரு பொது மதிப்பீடு என்ன தெரியுமா?
தேர்தல் வரும்பொழுதெல்லாம் தவறான முடிவுகளை மிகச் சரியாக எடுப்பார் என்பதுதான் அந்தப் பொது மதிப்பீடு.
2001 சட்டப் பேரவைத் தேர்தலில் திமுகவோடு கூட்டணி பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்; இரண்டே இடங்கள் பிரச்சினைக்காக -  போயஸ் தோட்டத்தின் கதவைத் தட்டிய நிலை ஏற்பட்டதிலிருந்து அவர் மீதிருந்த  மதிப்பும் தலை  குப்புறக் கவிழ்ந்து விடவில்லையா?
வளர்ந்து வரும் இளம் அரசியல்வாதி என்று கட்சிக்கு அப்பாற்பட்டு கணித்தவர்கள் கூட.. முகம் சுளிக்கும் அளவிற்கு தனக்குத்தானே பல விலங்குகளை ஆபரணம் என்று கருதிப்பூட்டிக் கொண்டு விட்டாரே!
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட (2014) பிஜேபி யோடு கூட்டணி வைத்துக்கொண்டு, தமிழ்நாட்டில் மோடி அலை வீசுகிறது என்று புயல் வேகப் பிரச்சாரம் செய்ததோடு மட்டுமல்ல.
தி.மு.க. - அதிமுக வுக்கு மாற்றாக பா.ஜ.க அலை வீசுகிறது (தி.இந்து - 17.12.2014) என்ற அளவுக்குக் கூட சகோதரர் வைகோ சென்றதுண்டு.
இவ்வளவுக்கும் 2014 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தவை என்னென்ன என்பது தெரியுமா?
அயோத்தியில் ராமன் கோயில், அரசியல் நிர்ணய சட்டத்தில் 370ஆம் பிரிவு நீக்கம், யுனி ஃபார்ம் சட்டம் இயற்றப்படும், பசு பாதுகாப்பு பேணப்படும் என்ற ஹிந்துத்துவா அஜண்டா இடம் பெற்றிருந்தது.
அந்தத் தேர்தல் அறிக்கையை தயார் செய்த முரளி மனோகர் ஜோஷி என்ன சொன்னார் தெரியுமா? ஆர்.எஸ்.எஸின் அறிவுரையைக் கேட்டுத்தான் தேர்தல் அறிக்கையைத் தயாரித்தேன் என்றாரே! (தினமலர் 1342014)
இந்தக் கொள்கையை உடைய பிஜேபி தான் தமிழ்நாட்டில் திமுக, அதிமுகவுக்கு மாற்று அணி என்று மார்புப்புடைத்து மனங்கனிந்து பேசினார் புரட்சிப் புயல் வைகோ அவர்கள்
1996ஆம் ஆண்டில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலின்போது இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியோடு (மார்க்சிஸ்ட்) கூட்டணி வைத்திருந்த தேர்தலில் ஈழப் பிரச்சினையை முன்னிறுத்தக் கூடாது என்ற சி.பி.எம். வைத்த நிபந்தனைக்கு கட்டுபட்டவர்தான் நமது வைகோ அவர்கள்.
இதற்குப்பிறகும் ஈழத்தமிழர் பிரச்சினை என்பது எம் உதிரத்தின் ஒவ்வொரு துளியிலும் உயிர் நாடியாகத் துடிப்பது என்று பேசுவதெல்லாம் வசனமாகத்தானே கருதப்படும்.
இன்றைக்கு திமுக - அதிமுக வை எதிர்ப்போம் - படுதோல்வி அடையச் செய்வோம் என்று முழங்குபவர்கள் சொல்வது என்ன?
1967லிருந்து திராவிட இயக்க ஆட்சி நாட்டை குட்டிச்சுவராக்கிவிட்டது - நாட்டை திராவிட இயக்க ஆட்சியிலிருந்து மீட்போம் என்று தானே சொல்லுகிறார்கள்.
தெரிந்தோ தெரியாமலோ அவர்களின் வில்லுக்கு அம்பா கிறோமே என்று ஒரு கணம் சிந்திக்க வைகோ கடமைப்பட வில்லையா?
திராவிட இயக்க ஆட்சி என்கிற போது  அறிஞர் அண்ணா அவர்கள் முதல் அமைச்சராக இருந்ததும் அடங்கும் தானே! அதற்குப் பிறகு வைகோ திமுகவில் இருந்த காலகட்டமும் அடங்கும்தானே! அவையெல்லாம் யோசிக்கப்பட வேண் டாமா?
தான் ஒரு திராவிட இயக்கத்தை சேர்ந்தவன். தான் நடத்துவதும் திராவிட இயக்கம் தான் என்ற அழுத்தமான எண்ணம் அவர் உள்ளத்தில் உருக்கொண்டிருந்தால்,  எதிரிகளின் வியூகங்களை சல்லடைக் கண்களாக நொறுக்கித் தள்ள தோள் தூக்கி இருக்க வேண்டாமா?.
சில மாதங்களுக்கு முன் வரை வைகோ அவர்கள் தமது கட்சியின் உயர்மட்டக்கூட்டங்களிலும், மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திலும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் சொல்லி வந்த, அழுத்தமாக வலியுறுத்திய கருத்து என்ன?
வரும் தேர்தலில் திமுகவுடன் தான் கூட்டணி என்று கூறிடவில்லையா?
இதனைச் சொல்லுபவர்கள் யார்? கட்சியின் பொருளாளர் என்ற மிகப்பெரிய பொறுப்புகளில் உள்ளவர்கள், உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் அல்லவா இதற்கு சாட்சியாக இருப் பவர்கள்.
இந்த நிலையிலிருந்த வைகோ அவர்கள் திமிறிக் கொண்டு தலைகீழ் முடிவை எடுத்தது ஏன்? இதன் பின்னணி என்ன? இடையில் என்ன நடந்தது? என்ற சந்தேகம் எழத்தானே செய்யும். அந்த சந்தேகம் கட்சிக்குள்ளேயே முக்கியப் பொறுப்புகளில் இருந்தவர்களிடத்திலேயே வெடித்து கிளம்பி விட்டதே! எதிர்கட்சிக்காரர்கள் சொன்னால் அதற்கு உள் நோக்கம் கற்பிக்கலாம், சந்தேகத்தை கிளப்பியவர்கள் சொந்த கட்சியினராக அல்லவா இருக்கிறார்கள்!
வைகோ அவர்கள் தேர்தல் நேரங்களில் திடீர் திடீர் என்று தலைகீழ் முடிவுகளை எடுத்து வருவதால் தானே கட்சியின் தொடக்கத்தில் இருந்த முக்கியமானவர்கள் எல்லாம் வெளியேறும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.
மதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைவது திமுகவின் சதி என்று சொல்வதெல்லாம் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்வதாகும். இப்படி சொல்வது கூட கட்சியை நடத்திச் செல்பவர்களின் பலகீனத்தைத் தான் பறைசாற்றும்.
நால்வர் கூட்டணி என்று மற்றவர்கள் சொன்னாலும் மக்கள் நலக்கூட்டணி என்ற வசீகரமான பெயர் சூட்டப்பட்டது. ஒரு பொதுத் திட்டமும் உருவாக்கப்பட்டது. கொள்கை முகம் என்றெல்லாம் போற்றப்பட்டது. அதையாவது காப்பாற்றிக் கொள்ள முடிந்ததா?
திடீர் என்று கேப்டன் விஜயகாந்த் அணி என்று அறிவிக்கப்பட்டது எப்படி? இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு போன்றவர்கள் அதனை ஏற்றுக்கொள்ள இயலாது என்று கூறி விட்டனரே! என்ன செய்யப் போகிறார்கள்?
மக்கள் நலக் கூட்டணி முன்வைத்த திட்டங்களை ஏற்றுக் கொண்டுதான் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இந்த அணியை தலைமை தாங்கி வழிநடத்த போகிறாரா இந்த  முக்கிய பிரச்சினைகள் குறித்து இதுவரை வாய் திறக்காதது ஏன்? தனியே விஜயகாந்த் தேர்தல் அறிக்கை வெளியிட்டு விட்டார் என்பதுதான் தற்போதைய செய்தி. (LATEST) இதில் எதை எடுத்துக் கொள்வது?
மக்கள் நலக்கூட்டணியின் தேர்தல் திட்டத்தையா? விஜயகாந்த் வெளியிட்டிருக்கும் தேர்தல் அறிக்கையா? அட குழப்பமே! பெருங்குழப்பமே!
தேர்தலில் போட்டியிடுவோர்களிலேயே எங்களிடம் தான் பொதுத்திட்டம் உண்டு என்று தோள் புடைக்கச் சொன்னது கூட இப்பொழுது புஷ்வாணமாகி விட்டதே.
தேமுதிக என்ற கட்சி இதுவரை எந்த  கொள்கையைத்தான் முன் வைத்து வந்திருக்கிறது? யாருக்காவது தெரிந்து சொன்னாலும் அந்த ‘கொலம்பசுகளுக்கு’ப் பரிசுகள் கூட வழங்கலாம்.
குழப்புவது தான் என் வேலை என்று  சொல்பவர்தான் கூட்டணியின் தலைவரா?
தேசிய முன்னணி, அய்க்கிய முற்போக்குக் கூட்டணி, தேசிய ஜனநாயக முன்னணி, மக்கள் நலக்கூட்டணி என்றெல்லாம் கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் ஒருவரின் தனிப்பட்ட பெயரை முன்னிறுத்தி அவர் பெயரால் கூட்டணி என்று சொல்லுவது எவ்வளவுப் பெரிய தடுமாற்றம் - தலை குப்புற விழுந்த பரிதாபம். கையறு நிலை!
அந்தப் பெயருக்குரியவர்தான் பெரிய லட்சியவாதியா? நாட்டுக்காக உழைத்தவரா? தியாகத் தீயில் குளித்து எழுந்தவரா? குறைந்தபட்சம் எதிர்க்கட்சித் தலைவர் என்ற தகுதியையாவது தக்க வைத்துக் கொண்டவரா?
கொள்கை போய் தனி நபர் தலைமை என்னும் தடுமாற்றக்குழியில் இவ்வளவு சீக்கிரம் விழுவார்கள் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் தாம்.
வைகோ அவர்களுக்கு அப்படி என்ன திமுக மீது அளப்பரிய கோபம்? அந்தக்கட்சி தானே அவரை உருவாக்கி அடைகாத்து அடையாளம் கொடுத்தது. ஆத்திரம் அறிவுக்குச் சத்துரு என்பது அவருக்குத் தெரியாதா? உணர்ச்சி வயப்படுவது, குலுங்கி அழுவது என்பதெல்லாம், லட்சியவாதி களுக்கான அணிகலன்கள் அல்லவே.
இனி என் வாழ்நாளில் கலைஞரை எதிர்க்க மாட்டேன். காலம் எனக்குக் கற்றுக் கொடுத்த பக்குவம் இது என்று ஆனந்தவிகடன் இதழுக்கு வைகோ அவர்கள் கொடுத்த பேட்டியில் சொன்னாரே, என்னவாயிற்று?
பக்குவம் அடைந்த பிறகும் ஒருவர் தடுமாறுவது நல்லதல்ல என்று பக்குவமாக எடுத்துக் கூறுவது தாய் கழகத்தின் கடமையாகும்.
விஜயகாந்தைக் கூட்டணியில் சேர்க்க திமுக, பா.ஜ.க. நடத்திய பேரம் என்ன என்று கேட்கப்போய், திமுக தலைவர் கலைஞர், வைகோ அவர்களுக்கு வக்கீல் நோட்டீஸ் கொடுத்துள்ளார்.
இதில்கூட புத்திசாலித்தனம் இல்லையே. கூட்டணியின் தலைவராக இருக்கக்கூடியவரை ‘தர்ம சங்கடத்தில்’ ஆழ்த்தக் கூடியது என்பது கூட அறியாத குழந்தையா சகோதரர் வைகோ?
அம்மையார் பிரேமலதாவே சூடாகப் பதில் கொடுத்து விட்டாரே - பேரம் நடந்ததாக வைகோ கூறுகிறாரே என்ற கேள்வியை அம்மையார் பிரேமலதா அவர்கள் இந்த கேள்விக்கு அவரிடமே (வைகோவிடமே) போய்க் கேளுங்கள் என்று சீறியிருக்கிறாரே - மத்தளத்துக்கு இருபக்கமும் அடி என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டாரே-என்ன செய்யப்போகிறார் சகோதரர் வைகோ?
மக்கள் மறந்து விடுவார்கள், மக்களின் மறதி தானே அரசியல்வாதிகளின் மூலதனம் என்று ஒரு காலத்தில் நினைத்திருக்கலாம். இப்பொழுது மக்களுக்கும் விவரம் தெரிய ஆரம்பித்து விட்டதே - மாஜி மக்கள் நலக்கூட்டணி கொஞ்சம் சிந்திக்கட்டும்!
------------------
அன்று சொன்னதும் அந்த வைகோதான்
பல்லடம், செப்.16- மதிமுக மாநில மாநாடு, அண்ணாவின் 107-வது பிறந்த நாள் விழா, திராவிட இயக்க நூற்றாண்டு விழா, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் 15, செப்டம்பர் 2015  செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாநாட்டில் பேசிய வைகோ, மத்தியில் ஆளும் பாஜக அரசு இந்தித் திணிப்பு செயலில் ஈடுபடுகிறது. அய்.நா. சபையில் இந்தியை அலுவல் மொழியாக்க முயற்சிக்கிறது. அய்.நா. சபையில் அலுவல் மொழியாக்க தகுதியுடைய ஒரே மொழி தமிழ் மட்டுமே. இதுதவிர, கல்வித்துறையில் சமஸ்கிருதத்தை திணிக்கிறது. இன்றைய சூழலில் இந்தி யாவில் கல்வித்துறை காவித்துறையாக மாறிக் கொண்டி ருக்கிறது.
இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு ஒரே தீர்வு சுதந்திர தமிழ் ஈழம் மட்டுமே. அங்கு நடைபெற்ற இனப்படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும்.
தமிழகத்தில் வரும் 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக, அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளுடனும் மதிமுக கூட்டணி வைக்காது. இரண்டு கட்சிகளுமே ஊழலில் திளைத்துப் போயுள்ளன. இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் உள்ள மக்கள் நலக் கூட்டியக்கத்துடன் எங்களது கூட்டணி இருக்கும். மக்கள் நலக் கூட்டியக்கத்தில் மனித நேய மக்கள் கட்சி சேர வேண்டும். எங்களது கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் குறித்து தேர்தல் வெற்றிக்கு பிறகே முடிவு செய்யப்படும் என்றார்.
- நக்கீரன் இணையம், 16.9. 2015
கிருஷ்ணகிரி, சனவரி08, 2016, மக்கள் நலக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக வைகோ மறைமுகமாக விருப்பம் தெரிவித் துள்ளதால் அக்கூட்டணியில் முதல்வர் வேட்பாளருக்கு கடும் போட்டி நிலவுகிறது என்று செய்தி வெளியானது. இதனிடையே சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்கள் அடங்கிய மண் டல ம.தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் கிருஷ்ணகிரியில் இன்று காலை நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட வைகோ  செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது, மக்கள் நலக் கூட்டணியில் யாரும் முதல்அமைச்சர் வேட்பாளர் கிடையாது. தேர்தல் முடிந்த பிறகு முதல்அமைச்சர் யார்? என்பதை எம்.எல்.ஏக்கள் கூடி தேர்வு செய்வோம். எனக்கு முதல் அமைச்சர் வேட்பாளராக வேண்டும் என்ற எண்ணம் கிடையாது. சட்டமன்றம் மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் நிற்க எனக்கு விருப்பம் கிடையாது. இந்த முறை சட்டமன்ற தேர்தலில் நான் நிற்கவேண்டும் என்று நிர்வாகிகளும், தொண்டர்களும் வலியுறுத்தி உள்ளனர். அவர்கள் விருப்பத்தை ஏற்று இந்த முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்.”என்று தெரிவித்தார்.
-ஜன்னல் மீடியா, இணையம், 8.1.2016
----------------
இன்று சொல்வதும் அதே வைகோதான்!
மக்கள் நலக்கூட்டணி - தேமுதிக அணி இனி விஜயகாந்த் அணி என அழைக்கப்படும். இக்கணம் முதல் நாங்கள் தேர்தல் களம் கண்டுள்ளோம். இக்கூட்டணி மகத்தான வெற்றி பெறும். விஜயகாந்த் கிங்காவார். முதல்வராவது உறுதி. தேர்தலில் வெற்றி பெற்றால், கூட்டணி ஆட்சியே அமையும். மக்கள் எதிர்பார்த்த கூட்டணி, மாற்றம் தரும் கூட்டணி, மகத்தான கூட்டணி, மாபெரும் வெற்றிக் கூட்டணி கேப்டன் விஜயகாந்த் அணி. இந்தக் கூட்டணி உருவாக வித்திட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றி என வைகோ தெரிவித்தார்.
----------------
ஆறுவது சினமே - வைகோ அவர்களே!
பாலிமர் தொலைக்காட்சியினர் வைகோ அவர்களுடன் நேர்காணல் நடத்தி கொண்டிருந்தனர். அ.இ.அ.தி.மு.கவின் ‘பி’ டீமாக இருப்பதற்காக விஜய்காந்த் தலைமையில் கூட்டணியை அமைக்க வேண்டும் என்று அதிமுகவிடமிருந்து 1500 கோடிரூபாய் தங்களுக்கு அளிக்கப்பட்டதாக.... என்று நெறியாளர் திரு.கண்ணன் அவர்கள் கூறி வாக்கியத்தை முடிக்கும் முன்னரே வைகோ அவர்கள் திடீர் என்று எழுந்து, தன் சட்டைப் பொத்தானில் மாட்டியிருந்த ஒலி வாங்கியைக் கழற்றி எறிந்து விட்டு வேக வேகமாக இடத்தைக் காலி செய்த காட்சியைப் பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் தொலைக்காட்சியில் பார்த்துப் பரிதாபப்பட்டுள்ளனர்;
பொது வாழ்க்கையில் உள்ளவர்களுக்கு இருக்க வேண்டிய சகிப்புத் தன்மை பொறுமை என்ற அணிகலன்களையல்லவா கழற்றி எறிந்து வெளியேறி இருக்கிறார்! பொது வாழ்க்கையில் தந்தை பெரியார் எதிர்நோக்காத கேள்வியா?
பொதுவுடைமைபற்றிப் பேசிய தந்தை பெரியாரிடம் உங்கள் மனைவி நாகம்மையாரைப் பொதுவுடைமை ஆக்குவீர்களா என்று பார்ப்பனர் ஒருவர் கேட்டபொழுது கூட, சற்றும் சங்கடப்படாமல் அதை ஏன் என்னிடம் கேட்கிறீர்கள்?
நாகம்மையாரிடமே கேளுங்கள் என்று சொன்ன தலைவரைப் பெருமையாகப் போற்றும் வைகோ அவர்கள், என்ன சொல்லியிருக்க வேண்டும்? இந்தக் கேள்வியைக் கேட்டதற்காக மகிழ்ச்சி அடைகிறேன். இந்த அபவாதத்தை மறுத்துச்  சொல்லுவதற்குக் கிடைத்த ஒரு அரிய சந்தர்ப்பமாகவே கருதுகிறேன். - என்று கூறி மட்டையை இரண்டு கீற்றாக கிழித்து எறிந்திருந்தால், இவரல்லாவோ தலைவர் என்ற உச்சாணிக் கொம்பில் , வைகோ அவர்களை மக்கள் போற்றும் ஓர் அரிய வாய்ப்பை - அவருக்கே உரித்தான முன் கோபத்தால் காலில் போட்டு மிதித்து விட்டாரே!
தன்னைப் பற்றிய ஒரு கேள்விக்காக இவ்வளவு ஆத்திரப்படும் வைகோ அவர்கள் விஜயகாந்திடம் 500 கோடி ரூபாய் வரை பேரம் பேசியது தி.முக.. என்று பேசி இருக்கிறாரே - அதற்கு என்ன பதில்?
கேள்வி கேட்பதெல்லாம் தமக்கே உரித்தான பிதிரார்ஜித உரிமை - சொத்து என்று ஒருக்கால் தமக்குத்தாமே வரித்துக் கொண்டு விட்டாரோ - என்னவோ!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...