Wednesday, February 10, 2016

மீண்டும் நுழைவுத் தேர்வா? (1)


இப்பொழுது என்னவென்றால் மாநில அரசுகளுக்குச் சொந்தமான மருத்துவக் கல்லூரிகளில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கு அகில இந்திய நுழைவுத் தேர்வைக் கொண்டு வருவதாக அறிவித்துள்ளது.
நெருக்கடி நிலை காலத்தில் கல்வியைப் பொதுப் பட்டியலுக்குக் கொண்டு சென்றதைப் பயன்படுத்திக் கொண்டு, மத்திய அரசு என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று மனப்பால் குடிக்கிறது போலும்!
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எதிலும் நுழைவுத் தேர்வு கிடையாது என்ற நிலை இருக்கும்பொழுது மத்திய அரசு எப்படி அதற்கு மாறான ஒன்றைத் திணிக்கலாம்?
இந்தியா முழுவதும் மூன்று மொழி இருக்கிறது. தமிழ்நாட்டில் இரண்டே மொழிகள்தான். தமிழும், ஆங்கிலமும்தான். தமிழ்நாட்டில், இந்திக்கு இடம் இல்லை என்பது தமிழ்நாட்டின் சட்ட பூர்வமான நிலை. அப்படி இருக்கும் பொழுது அகில இந்தியக் கொள்கை என்று மத்திய அரசு தமிழ்நாட்டில் திணிக்க முடியுமா?
அதே நிலைதான் இந்த நுழைவுத் தேர்வு பிரச்சினையிலும்; தமிழ்நாடு அரசு உடனடியாக இதனை எதிர்த்து அரசுக்குக் கடிதம் எழுதி இருக்க வேண்டாமா? எதிலும் தயக்கம் - மயக்கம் தானா?
இதில் வேடிக்கை என்னவென்றால் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு குறித்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அல்டம்ஸ் கபிர் மற்றும் நீதிபதி விக்கிரமஜித்சிங் ஆகிய இருவர் அடங்கிய அமர்வு நுழைவுத் தேர்வு அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று வரையறுத்துத் தீர்ப்புக் கூறி விட்டது.
நுழைவுத் தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 16 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதன் மீதான தீர்ப்பில்தான் மேற்கண்ட தீர்ப்பு வழங்கப்பட்டது.
மருத்துவக் கவுன்சில் என்ற அமைப்பின் கருத்துரையை ஏற்றுத்தான் மத்திய அரசு நுழைவுத் தேர்வை அறிவித்துள்ளது. இதை நினைத்தால் விலா நோக சிரிப்புதான் குமட்டிக் கொண்டு வருகிறது; மத்திய அரசில் சட்டத்துறை ஒன்று இருக்கிறதா? அது நீதிமன்றம் தொடர்பான கோப்புகளைக் கைவசம் வைத்துள்ளதா என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.
2013 ஜூலை 18ஆம் தேதி தீர்ப்பிலேயே மட்டையடியாக உச்சநீதிமன்றம் கூறி விட்டது.
மருத்துவக் கல்விக்கான நெறிமுறைகளை வகுப்பதைத் தவிர, நுழைவுத் தேர்வை நடத்திட உத்தரவிடும் அதிகாரம் மருத்துவக் கவுன்சிலுக்குக் கிடையாது என்று உச்சநீதிமன்ற அமர்வு ஆணியடித்து அறைந்ததுபோல தீர்ப்புக் கூறிய பிறகும், மருத்துவக் கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது என்று கூறி மத்திய அரசு நுழைவுத் தேர்வை அறிவிக்கிறது. என்னே இந்த ஆட்சியின் இலட்சணம்!
இதனைப் பார்க்கும் பொழுது மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் நிருவாகத் திறன் எந்த அளவு கெட்டுப் போயிருக்கிறது என்பதை உணரலாம்.
மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவு நீதிமன்ற அவமதிப்பே என்பதில் அய்யமில்லை. நீதிமன்றத்தில் குட்டு வாங்குவது மோதிரக் கையால் வாங்கப்பட்ட குட்டு என்று ஒருக்கால் இந்த அரசுகள் கருதுகின்றனவோ என்றுகூட நினைக்கத் தோன்றுகிறது.
பிளஸ் டூ தேர்வு எழுதி அதில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கும் வழக்கத்தில் உள்ள நடைமுறையில் என்ன குற்றத்தைக் கண்டுபிடித்து விட்டார்கள் - இந்தக் ‘கொலம்பசுகள்?’
மாநில அரசு நடத்திய தேர்வு செல்லத்தகாததா? அதில் மாணவர் பெற்ற மதிப்பெண்கள் மதிக்கத் தகுந்தவையல்ல என்று மத்திய அரசு கருதுகிறதா? இது தேவையில்லாமல் மாநில அரசோடு மத்திய அரசு மோதிப் பார்க்கத் துடிக்கும் அதிகப் பிரசங்கித்தனமாகும்.
தமிழ்நாட்டிலும் எம்.ஜி.ஆர். அவர்கள் முதல் அமைச்சராக இருந்தபோது நுழைவுத் தேர்வு திணிக்கப்பட்டது. (1982) அந்த ஆணையை அப்பொழுதே எரிக்கும் போராட்டத்தைத் திராவிடர் கழகம் நடத்தியதுண்டு.
நுழைவுத் தேர்வு செல்வி ஜெயலலிதா அவர்கள் ஆட்சியில் ரத்து செய்யப்பட்டது. அந்த ஆணையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது (27.6.2005) உண்மைதான்.
கல்வி நிபுணர் குழு அமைத்து அவர்கள் தரும் பரிந்துரைகளின் அடிப்படையில் தனி சட்டம் இயற்றி நுழைவுத் தேர்வை ரத்து செய்யலாம் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் கூறிய யோசனையை (விடுதலை 16.1.2006) முதல் அமைச்சர் ஜெயலலிதா ஏற்றுச் செயல்பட்டு இருந்தால் உயர்நீதிமன்ற தீர்ப்பு வேறு மாதிரியாகவே இருந்திருக்கும். அதைச் செய்யத் தவறியதால் மற்றொரு முறையும் தமிழ்நாடு அரசு ஆணையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது (27.2.2006).
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் 2006இல் ஆட்சிக்கு வந்தவுடன் கல்வியாளர் டாக்டர் அனந்தகிருஷ்ணன் அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்ட குழு அளித்த பரிந்துரை (7.7.2006) அடிப்படையில் கலைஞர் தலைமையிலான அரசு சட்டமியற்றி (5.3.2007) குடியரசு தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டது. அதனை எதிர்த்தும் வழக்குப் போடப்பட்டது. முறைப்படி ஆய்வு நடத்தப்பட்டு சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதால் தமிழ்நாடு அரசின் சட்டம் செல்லும் என்று அதே சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததே (27.4.2007).
2010ஆம் ஆண்டில் இதே மருத்துவக் கவுன்சில் நுழைவுத் தேர்வுக்குப் பரிந்துரைத்தபோது திராவிடர் கழகம் அதனை எதிர்த்து மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தியதை(29.12.2010) நினைவூட்டுகிறோம்.
இந்த வகையில் தந்தை பெரியார் பிறந்த தமிழ்நாடுதான் அகில இந்தியாவுக்கே வழிகாட்டும் என்பதில் அய்யமில்லை.

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...