Total Pageviews

Wednesday, February 10, 2016

சிறப்புச் சலுகைகள் பெறுவதற்கான சிறப்புரிமை பெற்றிருப்பது


(ஜாதியின் பெயரிலான  அடக்குமுறை திட்டமிட்டு பின்பற்றப்படுகிறது;
அறிந்தோ அறியாமலோ நம்மில் ஒவ்வொருவரும் அதில் பங்கெடுத்துக் கொள்கிறோம்)
அண்மையில் கணினி வலைதளத்தில் வளைய வந்து கொண்டிருக்கும் ஒரு காட்சியை நீங்கள் பார்த்திருப்பீர்கள். உடல் பருத்த ஒருவன் ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டு முழுவதும் குடிக்க முடியாமல் வாயில் வைத்துக் கொண்டிருக்கும் தண்ணீர் கீழே சிந்துவது போலவும், கீழே தரையில் உட்கார்ந்து கொண்டிருக்கும் மெலிந்த ஒருவன் அவன் சிந்தும் தண்ணீரை தாகத்துடன் பருகுவது போலவும் சித்தரிக்கப்பட்டிருந்த காட்சிதான் அது. பின்னர் அந்த கேலிச் சித்திரம், அந்த நடைமுறையை நீங்கள் வெறுத்தால், உங்கள் உணர்வை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் என்று நம்மை கேட்கிறது. புகழ்பெற்ற கலாச்சாரத்தைப் பெற்றவர்கள் என்று பறைசாற்றிக்கொள்பவர்களின் இந்த ஒரு தோற்றத்தைப் பார்த்தால்போதும், ரோஹித் வெமுலா போன்ற தலித்துகள் ஏன் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்பது நமக்குப் புரியும்.
இந்த கேலிச்சித்திரம் செய்யும் மாயவித்தை என்னவென்றால், சிறப்பு சலுகைகள் பெற்று கீழ்ஜாதி மக்களை அடக்கி ஒடுக்கி வரும் உயர்ஜாதி மக்களைப் பாதிக்கப்பட்டவர்களாகக் காட்டுவதுதான். மக்கள் தொகையில் 15 - 20 விழுக்காட்டினராக இருக்கும் நிலை யில்    நாட்டில் உள்ள அரசுப் பணிகளிலும், கல்வி நிறு வனச் சேர்க்கையிலும் 50 விழுக்காட்டுக்கு மேலாக உயர்ஜாதி மக்கள் பெற்று வருவதை இந்த மாயவித்தையினால்தான் நியாயப்படுத்த முடியும்.
அவ்வாறு இருக்கும்போது, வெமுலாவின் தற் கொலை ஒரு ஜாதிப் பிரச்சினையே அல்ல என்றும், வெமுலா ஒரு தலித்தே அல்ல என்றும் உயர்ஜாதியினர் மறுத்துவருவதில் வியப்பேதும் இல்லை. மத்திய அமைச்சர்கள்,  செயல்திட்டங்களை வடிவமைக்கும் தொலைக்காட்சி நிறுவனத்தினர், எழுத்தாளர்கள் எனப் பலதரப்பட்டவர்களால் வெளியிடப்படும் இத் தகைய அறிக்கைகள் வந்துகொண்டிருக்கின்றன. மன அழுத்தம்தான் அவரது தற்கொலைக்குக் காரணம் என்று மனநோய்மருத்துவர்களின் கருத்துகளும் உயர் ஜாதியினரின் கேலிச்சித்திரங்களும் கணினி தளத்தில் வளைய வந்து கொண்டிருக்கின்றன.
முன்னேற்றக் கருத்து கொண்ட உயர்ஜாதியினரும் கூட, இந்த தலித்துகளின் பிரச்சினை,  பல்கலைக் கழக அளவில் தீர்க்கப்படவேண்டிய ஒரு நிர்வாகப் பிரச்சினை என்றே கூறுகின்றனர். கோட்பாட்டு அளவிலும், பொருளாதார ரீதியிலும், அவர்கள் எந்த அரசியல் கட்சியையோ, எந்த மதத்தையோ சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி, மக்களை ஜாதியின் அடிப்படையில் பிளவு படுத்தி நிற்கும் ஒரு மிகப் பெரிய சமூகத்தின் ஒரு சிறிய பகுதிதான் இந்தப் பல்கலைக் கழகம் என்பதைக் கூட எவரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. வாழ்க்கையின் ஒவ்வொரு நடைமுறையிலும் நிலவி வரும் ஜாதிய நடைமுறை ஒழிக்கப்படாத வரை,  கல்வி நிறுவனங்களில் எந்த அளவில் சீர்திருத்தம் மேற்கொள்வதும் பயன்தராது.
இதில் உள்ள முக்கியமான அம்சம் என்னவென்றால்,  சமூகத்தை முழுமையாகத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்  நாம்  என்னும் உயர்ஜாதியினர்தான் பிரச்சினையே என்பது ஏற்றுக் கொள்ளப்படவில்லை. தலித்துகளை (அவர்களை) சீர்திருத்துவது என்பதில் இருந்து தேடும் விளக்கை, ஜாதியின் பெயரால் தாங்கள் பெறும் சிறப்பு சலுகைகளைத் தாங்கள் பெறுகிறோம் என்பதை  ஏற்றுக் கொள்ளாமல் ஜாதிய அடக்குமுறையை நடைமுறைப்படுத்தி வரும்  உயர்ஜாதியினர் (நம்மை நாமே) சீர்திருத்திக் கொள்வது என்பதன் பக்கம் நகர்த்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. பல ஆயிரம் ஆண்டு காலமாக உயர்ஜாதி மக்கள் அனுபவித்து வரும் சமூக, பொருளாதார, கலாச்சார அளவிலான சிறப்புச் சலுகைகளை மறைப்பதற்காகப் போடப்படும் திரையே தகுதி மற்றும் திறமை என்பவையாகும்.
இந்த சிறப்புச் சலுகைகள் ஜாதிக்கு மட்டும்தான் பொருந்தும் என்பதல்ல; பிரிவு, பாலினம், இனம் போன்ற மற்றவைகளுக்கும் கூடப்பொருந்தும். அமெரிக்காவில் நிலவும் மனஅளவிலான போராட்டத்தைப் பற்றி கீ.ஙி.ஞிu ஙிஷீவீs என்பவர் குறிப்பிடும்போது, வெள்ளைய ரின்ஆதிக்கத்தில் இருக்கும் ஒரு சமூகத்தில், ஏழையான ஒரு வெள்ளைக்காரனும் கருப்பர்களை விட உயர்ந்தவன் என தன்னை நினைத்துக் கொள்கிறான் என்று கூறி யுள்ளார். இதனைத்தான் ஜாதிப் பிரிவினை என்பது உழைப்பைப் பகிர்ந்துகொள்வது என்பதாக இல்லாமல், உழைப்பாளர்களைப் பிரித்து வைப்பதாகவே உள்ளதென அம்பேத்கர்  கூறியிருக்கிறார்.
இடஒதுக்கீட்டில் அளிக்கப்பட்டு நிரப்பப்படாமல் காலியாக உள்ள 40-50 விழுக்காடு ஆசிரியர் பணியி டங்கள் உள்ள மத்திய, மாநில அரசுப் பல்கலைக் கழ கங்கள் மற்றும் அரசியல் அமைப்புகள் நீங்கலான மற்ற அனைத்துத் துறைகள் ஒவ்வொன்றிலும் உயர்ஜாதி சமூகத்தினரின் ஆதிக்கம் அதிகஅளவில் நிலவி வருவதன் காரணமாகவும், இடஒதுக்கீடு இல்லாத சக்தி வாய்ந்த தனியார் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் தலித் மக்கள் எவருமே இடம் பெறாத நிலை காரணமாகவும்,  கிரிக்கெட், பாலிவுட், நுகர்வோர் கலாச்சாரத்தைத் தூக்கிப் பிடிக்கும் ஆங்கில மொழிவழி ஊடகங்களின் பிரச்சாரங்கள் காரணமாகவும்  ஏற்படும்  ஜாதி பற்றிய மனவியல் ரீதியான போராட்டங்கள் இருப்பதை ஏற்றுக்கொள்ள உயர்ஜாதி மக்கள் முழுமையாகத் தவறி விடுகிறார்கள்.
இத்தகைய சிறப்புச் சலுகைகள் தங்களுக்கு இருப்பதை அவர்கள் ஏற்றுக் கொள்ள மறுப்பதே,  ஜாதி ஒழிப்பிற்குத் தடையாக இருப்பதும்,   உயர்ஜாதியினரின் பழிவாங்கும் மனப்பான்மைக்குக் காரணமாக இருப்பது மாகும். இத்தகைய சிறப்புச் சலுகைகள் இருப்பது ஏற்றுக் கொள்ளப்படாதது ஜாதிக்கு மட்டுமே பொருந்துவது அல்ல. அண்மையில் அமெரிக்காவில் எல்.டெய்லர் பிலிப்ஸ் மற்றும் பிரியான் லோயரி என்பவர்கள் மேற்கொண்ட ஆய்வில் இருந்து, இத்தகைய சிறப்புச் சலுகைகள் வெள்ளைக்காரர்களுக்கு இருப்பது பற்றி அவர்களிடம் கேள்வி கேட்டபோது,  அதனை அவர்கள் மறுக்காதது மட்டுமன்றி,  தனிப்பட்ட தடைகளால் அவர்கள் அந்தச் சலுகைகளை அனுபவிக்க முடியாமல் இருப்பதாகக் கூறியதும் தெரியவருகிறது. லோயரி கூறுகிறார்:  நல்ல விஷயங்களைப் பெறுவதற்கு நீங்கள் விரும்புகிறீர்கள். ஆனால் அவைகளை உங்கள்  உழைப்பினால் பெறாமல், சிறப்புச் சலுகைகளாக நீங்கள் பெறுகிறீர்கள் என்பதை நினைத்துப் பார்க்க நீங்கள் விரும்புவதில்லை என்று கூறுகிறார்.
தகுதி, திறமை என்ற இது போன்ற தவறாக வழிநடத்தப்பட்ட புரிதல்,  ஜாதி ஆதிக்கத்தை நிலை நாட்ட வேண்டும் என்ற தீவிர முயற்சிகளுடன் சேர்ந்து, உயர்ஜாதியினருக்கு சிறப்புச் சலுகைகள் இருப்பதை மறுக்கும் மனப்பான்மைக்கு ஆணிவேராக அமைந் துள்ளது. பொருளாதார ரீதியில் நல்ல நிலையில் இல்லாத உயர்ஜாதி மக்களும், உயர்ஜாதி காரணமாக சிறப்புச் சலுகைகள் அளிக்கப்படும் நடைமுறையை அழிக்கவேண்டும் என்ற நல்ல நோக்கம் கொண்ட உயர்ஜாதியினரும்  இருக்கின்றனர் என்பது உண்மைதான்.  ஆனால், ஒரு பெண்ணியலாளராகவும், இனக்கோட்பாட்டு ஆர்வலராகவும் உள்ள பெக்கி மெக்கின்டோஷ் என்பவர் கூறுகிறார்: தனிப்பட்ட மனிதர்களின் இழிசெயல்களில் மட்டுமே இனவெறி இருப்பதைக் காண்பதற்கு எனக்குக் கற்பிக்கப்பட்டுள்ளதே அன்றி,  எனது குழுவின் மீது ஆதிக்கம் செலுத்தும் கண்ணுக்குத் தெரியாத நடை முறைகளில் உள்ள இனவெறியைக் காண்பதற்கு எனக்குக் கற்பிக்கப்படவில்லை.
ஜாதிய அடக்குமுறை என்பது திட்டமிட்டு நடை முறைப்படுத்தப்படுவதாகும்.  சிறப்புச் சலுகை பெறும் உயர்ஜாதியினர் ஒவ்வொருவரும் அதில் பங்கேற்கின்றனர். இங்கு தனிப்பட்ட மனிதரின் பண்பாடு முக்கியமானதாகக் கருதப்படுவதில்லை. மெக்கின்டோஷ் கூறுவது போல, நீங்கள் மென்மையாக இருக்கும் அதே நேரத்தில் அடக்கி ஒடுக்குபவராகவும் இருக்க உங்களால் முடியும். உயர்ஜாதி காரணமாக சிறப்புச் சலுகைகள் அளிக்கப்படுவதை நாம் எதிர்க்கும்போது,  இந்த எதிர்மறையான உண்மையை நாம் எதிர்கொள்கிறோம். அவசரமாக நாம் செய்யவேண்டியது என்னவென்றால், புதிய பாதையைத் திறந்து காட்டவல்ல 1988 இல் மெக்கின்டோஷ் வெளியிட்ட ஒரு கட்டுரையில்  வெள்ளைக்காரர்கள் பெற்றிருந்த 50 சிறப்புச் சலுகை களை பட்டியலிட்டுக் காட்டியிருந்தது போன்று உயர் ஜாதியினருக்கு அளிக்கப்படும் சிறப்புச் சலுகைகள் பட்டியல் ஒன்றினை முழுமையாகத் நாம் தயாரிக்க வேண்டும். தலித் மாணவர்களின் தற்கொலையைப் பொருத்த அள வில் இவ்வாறு செய்வது மிகவும் பொருத்தமானதும் அவ சியமானதும் ஆகும்.
உயர்ஜாதியினர் தாங்கள் பெறும் சிறப்புச் சலுகைகளை ஒப்புக் கொள்வது,  திறமையும் தகுதியும் நிறைந்த உயர்ஜாதி என்னும் நற்தோற்றத்தை மறுப்பதாக இருக்குமானால், நாம் எடுத்துவைக்க வேண்டிய இரண்டாவது அடி மிக வும் கொடியதும், துன்பம் தரத்தக்கதுமாகும். அத்தகைய சிறப்புச் சலுகைகளைப் பெறாமல் கைவிட உயர்ஜாதியினர் தயாராக இல்லாதநிலையில், அத்தகைய சிறப்புச் சலு கைகள் தங்களுக்கு இருப்பதை அவர்கள் ஒப்புக் கொள்வதால் விளையும் பயன் ஏதுமில்லை. ஜாதிய பொய்களை முடிவுக்குக் கொண்டு வரும் உண்மையான போராட்டம் இதில்தான் இருக்கிறது. இளைய மார்டின் லூதர் கிங் கூறுகிறார்: சிறப்புச் சலுகைகள் பெற்ற குழுக் கள் தாங்களாகவே முன் வந்து அத்தகைய சிறப்புச் சலுகைகளைப் பெறாமல் கைவிட்டுவிடமாட்டார்கள் என்பதுதான் வரலாற்று உண்மையாகும்.
கல்வி மற்றும் வேலை வாய்ப்பில்  அளிக்கப்படும்  இட ஒதுக்கீடு என்னும் ஒரு சிறு ஜனநாயக நடைமுறை,  உயர்ஜாதியினரிடையே ஒரு மோசமான, வன்முறையுடன் இணைந்த மாபெரும் எதிர்ப்பையே உருவாக்கிவிடுகிறது. எனவே, ஜாதிய அடக்குமுறையை முடிவுக்குக் கொண்டு வருவது என்பது, உயர்ஜாதி மக்களின் கருணையின் மூலம் எப்போதுமே நடைபெற இயலாததாகும். ஜனநாயக நடைமுறையில் பொதிந்துள்ள தவிர்க்க இயலாத, அவசரமான, முக்கியமான நியாய உணர்வை உயர்ஜாதியினர் அங்கீகரித்து ஏற்றுக் கொள்வதற்கான நேரம் இதுவே. ஆப்பிரிக்க-அமெரிக்க ஆசிரியர் மாயா ஏஞ்சலு  வாதிட்டபடி, செல்வச் செழிப்பு மிகுந்த வெள்ளைக்காரர் சமூகத்தில் வளர்வது என்பது,  கிரடிட் கார்டுகளுக்கு மரியாதை கொடுப்பது, திருமணம் செய்து கொள்வது, குழந்தைகள் பெற்றுக்கொள்வது போன்ற செயல்களின் மூலம் வாழ்வது ஆகாது. நீங்கள் எடுத்துக் கொள்ளும் நேரத்திற்கும், நீங்கள் ஆக்கிரமித்துள்ள இடத் துக்கும் நீங்கள் பொறுப்பேற்றுக்கொள்வதும்,  ஒருவரது மனிதத் தன்மைக்கு ஒவ்வொரு வாழும் மனிதரும் மரியாதை செலுத்துவதும்தான் வளர்வது என்பது.  நாமும், அதனைப் போல, உயர்ஜாதியினரின் ஆதிக்கத்தில் உள்ள ஒரு சமூகத்தில்,  தகுதியற்ற முறையில் நாம் ஆக்கிர மித்துள்ள பெரிய இடத்தை, எந்த அளவுக்கு விட்டுக் கொடுக்கவேண்டுமோ, அந்த அளவுக்கு விட்டுக் கொடுப்போம்.

நன்றி: தி ஹிந்து ஆங்கில இதழ் ஞாயிறு மலர் 7-2-2016
தமிழில்: த.க.பாலகிருட்டிணன்


0 comments: