Friday, November 27, 2015

ஏடுகள், எதிர்க்கட்சிகள் என்றால் ஆட்சிக்குத் துதி பாட வேண்டும் என்று நினைக்கலாமா?

ஏடுகள், எதிர்க்கட்சிகள் என்றால் ஆட்சிக்குத் துதி பாட வேண்டும் என்று நினைக்கலாமா?
உச்சநீதிமன்றம் இடித்துக் கூறிய பிறகும்கூட தமிழக ஆட்சி அவதூறு வழக்குகளைத் தொடருவதா?

வழக்குகளை - வாபஸ் வாங்குக!

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை
ஆளும் கட்சிமீது குறைகூறும் - விமர்சனம் செய்யும் ஏடுகள்மீது பழி வாங்கும் நோக்கில் அவதூறு வழக்கு களைத் தொடர்ந்து கொண்டு இருப்பது ஒரு ஜனநாயக ஆட்சிக்கு உகந்ததல்ல - இன்னும் சொல்லப் போனால் விமர்சனங்களை வரவேற்கும் பக்குவம் தான் ஓர் ஆட்சிக்கு நல்லது; தமிழ்நாடு அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகளை உடனடியாக வாபஸ் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
ஒரு ஜனநாயக நாட்டில், ஆட்சி, நிர்வாகம், நீதித்துறை, பத்திரிகை ஆகியவை முறையே தூண்கள் என்பது உலகம் ஒப்புக் கொண்ட நியதி.
பாராட்டுவதற்காகத்தான் பத்திரிகையா?
பத்திரிகைத் துறை என்றால் வெறும் பாராட்டும் ஒலி குழல் என்று நினைப்பது தவறானது. இன்னும் சொல்லப் போனால் பத்திரிகைகளுக்குத் தான் பல கண்கள். துழாவித் துழாவி செய்திகளைக் கொண்டு வருவதும்,  அவற்றின் அடிப்படையில் விமர்சனங்கள் எழுதுவதும் பத்திரிகைத் துறையின் மிகப் பெரிய பண்பாடும் கடமையும் ஆகும். துதிபாடுவதுதான் பத்திரிகா தர்மம் என்று எதிர்பார்ப்பது ஒரு வகையான எதேச்சதிகார மனப்பான்மையாகும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ஆட்சியின் பார்வை என்பது ஜனநாயகத்துக்கு விரோதமாக இருந்து வருவது வேதனைக்குரியது - கண்டிக்கத்தக்கதும்கூட
விமர்சனத்தை விரும்புவதே ஆளும் கட்சிக்கு நன்மை!
உண்மையைச் சொல்லப் போனால் ஆட்சியைக் குறை கூறியும், கண்டித்தும் எழுதுவதை நல்லாட்சி என்றால் அதனை வரவேற்க வேண்டும். தவறுகளைத் திருத்திக் கொள்ள நல்ல சந்தர்ப்பம் கிடைத்ததே என்று மகிழ வேண்டும்; நோயைக் சுட்டிக் காட்டினால் டாக்டர்மீது பாயலாமா?
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானும் கெடும்               (குறள் 448)
என்ற குறள் மற்றவர்களைவிட ஆட்சியில் இருப்ப வர்களுக்கு மிகவும் அவசியமானதாகும்.
தமிழ்நாட்டைப் பொறுத்த வரை ஆட்சிக்கு எதிராகப் பேசுவோர்மீதும், ஆட்சியைக் குறை கூறும் ஏடுகள்மீதும் வழக்கு என்பது எந்த வகையில் மக்கள் ஆட்சிக்கு உகந்தது?
ஒருபடி மேலே சென்று விமர்சனம் செய்யும் ஏடுகளை விற்பனை செய்யும் இடத்திலும் சென்று அச்சுறுத்துவது, முக நூலை முடக்குவது போன்றவை அபாயகரமான போக்காகும்.
மறுப்பு எழுத வேண்டியது தானே?
ஒரு இதழில் - ஏட்டில் வெளிவந்த தகவல் தவறாக இருந்தால் - அதனைச் சுட்டிக் காட்டி, மறுப்பு அறிக்கையை அரசு சார்பில் கொடுக்கலாம். அந்த மறுப்பை வெளியிடா விட்டால், சட்டப்படியான நடவடிக்கையை சம்பந்தப்பட்ட ஏடுகள்மீது எடுக்கலாம் - அது நியாயமும்கூட!
அத்தகு சந்தர்ப்பத்தைக் கொடுக்காமல், ஒரு சார்பாகவே முடிவெடுத்து - ஏடுகள்மீது  வழக்குத் தொடுப்பதற்குப் பெயர் வழக்கல்ல - வல்லடி வழக்கே!
உள்ளெண்ணம் இல்லாது நல்லெண்ணத்துடன் விமர்சனம் செய்தால் அது சட்டப்படி எப்படி குற்றமாகும்?
கடந்த அ.இ.அ.தி.மு.க. ஆட்சியிலும் இதே நிலைதான்!
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை - அதுவும் அ.இ.அ.தி.மு.க. ஆட்சிக்கு வரும்போதெல்லாம் ஆட்சிக்கு எதிராக விமர்சனம் எழுந்தால், அதனைப் பொறுத்துக் கொள்ளும் - அதனைப் பற்றி சிந்திக்கும் பக்குவமின்றி, இம்மென்றால் சிறைவாசம் என்ற எதேச்சதிகாரத் தொனி ஏற்புடையதல்ல.
ஆனந்த விகடன் இதழில் வெளிவந்த ஒரு கட்டு ரைக்காக ஆனந்த விகடன் மீதும், அதனை எடுத்துக்காட்டி, கட்டுரை எழுதியதற்காக 5 முறை முதல் அமைச்சராக இருந்த - மூத்த பத்திரிகையாளர் கலைஞர்மீதும் அவதூறு வழக்கு என்பதெல்லாம் எதிர் விளைவைத்தான் ஏற்படுத்தும்.
பழி வாங்கப்பட்ட ஏடுகளின் பட்டியல்!
நக்கீரன்  தி இந்து, இந்தியா டுடே, டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆனந்தவிகடன் ஜூனியர் விகடன் முரசொலி, தினகரன் ஏடுகள் அ.இ.அ.தி.மு.க. ஆட்சியால் அவதூறு வழக்குப் புனையப்பட்ட ஏடுகளாகும்.
இதுவரை இத்தகு வழக்குகளில் ஆட்சிக்குச் சாதகமான தீர்ப்புகள் வந்ததுண்டா?
2003ஆம் ஆண்டில்கூட இந்து நாளிதழில் எழுதப்பட்ட தலையங்கம் தமிழக சட்டசபையின் உரிமையை மீறியதாக ஹிந்து ஏட்டின் ஆசிரியர் மற்றும் உரிமையாளர், அந்தத் தலையங்கத்தை மொழி பெயர்த்து வெளியிட்ட முரசொலி யின் நிர்வாகியைக் கைது செய்ய ஆணைப் பிறப்பித்தார் - சபா நாயகர் மாண்புமிகு காளிமுத்து என்பதையும் - இந்த இடத்தில் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். ஆனந்த விகடன் ஆசிரியர் திரு. பாலசுப்பிரமணியம் மீதும் வழக்குத் தொடுக்கப்பட்டது.
சகிப்புத் தன்மை இன்மை!
சகிப்புத் தன்மை இன்மைபற்றி இந்தியாவில் மதவா தத்தை முன்னிறுத்தி சர்ச்சைப் பெரும் அளவுக்குப் புயலாக வீசிக் கொண்டு இருக்கிறது. அந்தச் சகிப்புத் தன்மை இன்மைப் பட்டியலில் தமிழக ஆட்சியின் இந்தச் செயல் பாடுகளையும் இணைத்துக் கொள்ளத்தான் வேண்டும்.
வடக்கைப் பாரீர்!
மத்திய அமைச்சர்களை முகநூலில் விமர்சித்திருந்த அய்தராபாத்தைச் சேர்ந்த இரு நபர்கள் கைது செய்யப் பட்டனர்; 2012ஆம் ஆண்டில் சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேயை அவமதித்து முகநூலில் எழுதிய இரு பெண்கள் கைது செய்யப்பட்டனர். கடும் எதிர்ப்புக்குப் பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இவை எல்லாம் தமிழக ஆளும் தரப்பினருக்குத் தெரியாதா?
உச்சநீதிமன்றம் இடித்துக் கூறியதே!
தமிழ்நாடு அரசு தொடர்ந்து வரும் அவதூறு வழக்கின் தன்மைபற்றி உச்சநீதிமன்றமே இடித்துச் சொன்ன பிறகாவது, தம் போக்கைத் தமிழக அரசு மாற்றிக் கொண்ட தாகத் தெரியவில்லையே!
2001-2006 ஆட்சியில் இருந்தபோது அ.இ.அ.தி.மு.க. வின் இத்தகு நடவடிக்கைகளால் மக்கள் தேர்தலில் பாடம் கற்பித்ததைக்கூட ஒரு பாடமாக ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை.
மத்திய மாநில ஆட்சியில்..
மத்தியிலும் மாநிலத்திலும் சகிப்புத்தன்மை இல்லாத ஜனநாயகக் கண்ணோட்டம் இல்லாத இரு ஆட்சிகளின் கீழ்  நாடு அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறது. திருத்திக் கொள்ளவில்லையென்றால் மக்கள் அதற்கான தண்ட னையைச் சரியான நேரத்தில் வழங்குவார்கள் என்பதில் அய்யமில்லை.
ஆளும் கட்சியின் அதிகாரப் பூர்வ ஏடுகளில் அருவருக்கத்தக்க எழுத்துகளுக்கு என்ன பதில்?
ஒரு செய்தி - மற்ற மற்ற ஏடுகள்மீது அவதூறு வழக்கைப் போடும் தமிழக அரசு - அ.இ.அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ ஏடான டாக்டர் நமது எம்.ஜி.ஆரில் எழுதப்படும் அவதூறு கொழிக்கும் ஆபாசமான அருவருக்கத்தக்க அடாவடித்தனமான எழுத்துகளுக்கு என்ன பதில்? ஒவ்வொரு நாளும் வெளிவரும் அவ்வேட்டின்மீது வழக்குத் தொடுக்க ஏராளமான காரணிகள் உண்டு. அவற்றை அலட்சியப்படுத்தும் பெருமான்களாக தலை வர்கள் இருந்து வருகிறார்கள்; அதனைக் கோழைத்தனம் என்று எண்ணிவிட வேண்டாம்!
ஆளும் கட்சி என்பது கண்ணாடி மாளிகை எச்சரிக்கை!
ஆளும் கட்சி - ஆட்சி என்பது கண்ணாடி மாளிகை - அங்கிருந்து மற்றவர்கள்மீது கல்லெறிய ஆசைப்படக் கூடாது; ஆசைப்பட்டால் எதிர்வினையைத்தான், விளை வைத்தான் சுமக்க நேரிடும். அவதூறு வழக்குகளை வாபஸ் வாங்குவது அவசியம். கட்சிக் கண்ணோட்டமின்றி இதனை எடுத்துச் சொல்லுவது எங்கள் கடமை - கசப்பான உண்மையும் ஆகும். ஆட்சித் தலைமை சிந்திக்குமாக!
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
27-11-2015

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...