Total Pageviews

Thursday, November 26, 2015

அறிவுக்கு சுதந்திரம் கொடுக்கும் இயக்கம் திராவிட இயக்கம் உசிலம்பட்டி வட்டார மாநாட்டில் தமிழர் தலைவர் எழுச்சியுரைஅறிவுக்கு சுதந்திரம் கொடுக்கும் இயக்கம் திராவிட இயக்கம்
உசிலம்பட்டி வட்டார மாநாட்டில் தமிழர் தலைவர் எழுச்சியுரை
உசிலம்பட்டி, நவ. 26- உசிலம்பட்டி பேரையூர் சாலையில் 25.11.2015 அன்று மாலை 4 மணி முதல் உசிலம்பட்டி கழக மாவட்டக் கழகத்தின் சார்பில் தெருமுனை பகுத்தறிவுப் பரப்புரை பயண நிறைவு விழா, திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடு மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது.
அனைவரையும் வரவேற்று பேசினார் மாவட்ட ப.க. தலைவர் அ.மன்னர்மன்னன், மாவட்டச் செயலாளர் ரோ.கணேசன், மாவட்ட அமைப்பாளர் சு.தனபாலன், மாவட்ட துணைத் தலைவர் அழ.சிங்கராசன், மாவட்ட துணை செயலாளர் ப.முத்துக்கருப்பன், ஒன்றியச் செயலாளர் கா.பெரியசாமி ஆகியோர் முன்னிலை ஏற்றார்கள்.
நிகழ்ச்சி தொடக்கத்தில் உரையாற்றியவர் மாவட்டத் தலைவர் கா.சிவா, கழக சொற்பொழிவாளர் அ.வேங்கைமாறன் தொடர்ந்து திண்டுக்கல் ஈட்டி கணேசன் மந்திரமா! தந்திரமா! பகுத்தறிவு நிகழ்ச்சி நடத்தி காட்டினார்.
அதனைத் தொடர்ந்து தலைமை கழக சொற்பொழிவாளர் முனைவர் அதிரடி க.அன் பழகன், கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு, மதுரை மண்டலச் செயலாளர் மா.பவுன்ராசா உரைக்கு பின்பு மாநாடு எழுச்சியுரையாற்றினார் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். அவர் ஆற்றிய உரையின் சுருக்கம் வருமாறு:
தமிழர் தலைவர் சிறப்புரை
நடைபெறக்கூடிய 369ஆவது வட்டார மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இங்கே மண்டல செயலாளர் பவுன்ராசா பேசும்போது சொன்னார் இந்த உசிலம்பட்டி நகருக்கு நான் வருவது 9ஆவது முறை என்று.
எங்களின்  நோக்கம் மக்கள்  மத்தியில் பகுத்தறிவு கருத்துகளை பரப்பும் நோக்கோடு நூல்களை விற்றும் வருகிறோம் என்றால் ஏதோ வியாபார நோக்கோடு அல்ல.நாங்கள் சொல்வதில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்று மக்கள் சிந்திக்க வேண்டும்.
இந்த இயக்கம் அறிவுக்கு சுதந்திரம் கொடுக்கும் இயக்கம். இனிப்பை விட கசப்பை தருகிறார்கள் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் ஜாதீய,மூடநம்பிக்கை  சிந்தனைகளும் புரையோடிப் போயிருக்கும் சமூகத் திற்கு இதுதான் மாமருந்தாகும். அந்த கருத்துகள் அறி வுக்கு முட்டுக்கட்டை போடுகின்றன.
இங்கே பவுன்ராசா பேசும்போது மிகவும் வேதனை யுடன் சொன்னார். இந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள் பி.ஜே.பி.யில் இருக்கலாமா என்று? குற்றப்பரம்பரை என்று நம்மை தினமும் காவல் நிலையத்தில் கையெழுத்து போட வைத்த நிலை இருந்ததை யாரும் மறுக்க முடியுமா?அவர்கள் மீது எங்களுக்கு தனிப்பட்ட முறையில் கோபம் எதுவும் இல்லை . வருத்தமிருக் கிறது.
சுயமரியாதை இயக்கம், நீதி கட்சி, திராவிட இயக்கம் இவைகளெல்லாம் இல்லையென்றால் நமது மக்கள் தோளில் துண்டு அணிய,முழங்காலுக்கு கீழே வேட்டி  கட்ட முடிந்திருக்குமா?
1917 ஆம் ஆண்டு நீதிக்கட்சியின் முன்னோடி டாக்டர் டி.எம்.நாயர் ஸ்பர்டாங் சாலையில் பேசிய உரையில் மிகத் தெளிவாக அசல் மனுதருமத்தில் உள்ள ஆதாரங்களைக் காட்டி நமது மக்கள் எவ்வாறெல்லாம் இழிவு படுத்தப்பட்டனர் என்று பேசியிருக்கிறார்.
இன்றைக்கு  சுயமரியாதை என்ற சொல் இருக்கிறதே தமிழகத்தை  கடந்து பீகாருக்கு சென்றுள்ளது. அங்கே வெற்றி பெற்றுள்ள லாலு, நிதீஷ், சோனியா காந்தி போன்றவர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் தெரியுமா? இது சுயமரியாதை கூட்டணி, வெற்றி பெற்றுள்ளது என்று கூறியுள்ளார்கள் என்றால் தந்தை பெரியார் உருவாக்கிய அந்த சொல் உசிலம்பட்டியில் மட்டுமல்ல உலகம் முழுவதும் பரவக்கூடிய நிலை தான் உள்ளது.
இங்கே சிலர் திராவிடத்தால் வீழ்ந்தோம் என்கிறார் களே! டாஸ்மாக்கால் வீழ்ந்திருப்பானே ஒழிய திராவிடத்தால் எழுந்தோம் என்பதுதான் உண்மை! ஒரு செய்தியை சொன்னால் தெரியும், உச்சநீதிமன்றத் தின் நீதிபதியாக பணியாற்றிய ஜஸ்டிஸ் ரத்தினவேல் பாண்டியன் 9 நீதிபதிகள் கொண்ட ஒரு அமர்வு ஒரு முறை கூடிய போது உடன் இருந்த சக நீதிபதிகளிடம் சொன்னாராம்!
எங்களை குற்றப்பரம்பரை என்று ஒதுக்கி வைத்தது ஒரு காலம், இன்று நான் நீதிபதியாக அமர்ந்து கையெழுத்து போட்டு தீர்ப்பு சொல்லும் காலம் வந்திருக்கிறது என்றால் அதற்கு காரணம் திராவிட இயக்கம் என்று சொன்னாராம்.
எப்படி இந்த மாறுதல் வந்தது? சரஸ்வதி பூஜை, கொண்டாடுவதாலா? கார்த்திகை தீபம் ஏற்றுவதாலா? அறியாமை எனும் இருள் அகற்றி வெளிச்சத்தை உண்டாக்கிய இயக்கம் திராவிட இயக்கம் - உண்டாக் கிய தலைவர் தந்தை  பெரியார்.
எங்களுடைய பணி என்பது பெண்ணடிமை, ஜாதி, மூடநம்பிக்கைகள் இவற்றை வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்துவதுதான். இவ்வளவு நாகரிகம் வளர்ந்த பின்னும் நரபலிகள் நடக்கலாமா? இந்த செய்தி வெளிவருவது மதுரை மாவட்டத்திற்கு அழகா? சமூகத்தில் பெரிய அளவிற்கு மாற்றம் வந்துள்ளது, உடல் உறுப்பு தானம், இரத்ததானம் என்று!
விபத்து ஒன்றில் அடிபட்ட அய்யங்கார் ஒருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் போது ஆதி திராவிடர் ஒருவரின் இரத்தம் தான் இருக்கிறது அவர்களை பார்த்தால் தீட்டு என்று சொல்வீர்களே ஏற்றலாமா என்று கேட்டால் வேண்டாம் என்று சொல்லிவிடுவாரா?
அட நீங்க ஒண்ணுங்க நான் பெரியார் கட்சியில் சேர்ந்து பல வருசமாச்சுங்க என்று சொல்வாரு! அங்கே ஜாதி ஒழிக்கப்படுகிறது.மனிதம் போற்றப்படுகிறது. இது போன்ற கருத்துகள்தானே சிந்தனைகள் வளர்த்தெடுக்கத்தான் நாடு முழுவது இந்த பகுத்தறிவு பரப்புரையை நாங்கள் செய்து வருகிறோம். இவ்வாறு பேசினார்.
பாராட்டு
தமிழர் தலைவர் அவர்களுக்கு சால்வை மற்றும் கழக ஏடுகளுக்கு சந்தா வழங்கியவர்கள் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் தி.மு.க. ஆசையன், தி.மு.க. மாவட்ட அவைத் தலைவர் அன்புமாறன், தி.மு.க. நகரச் செயலாளர் தங்கமலை பாண்டியன், தி.மு.க. ஒன்றியச் செயலாளர் சுதந்திரம் உள்ளிட்டவர்கள்.
பங்கேற்றோர்:
கழகப் பொதுச் செயலாளர் இரா.செயக்குமார், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தே.எடிசன் ராசா, அமைப்புச் செயலாளர் வே.செல்வம், மதுரை மண்டலத் தலைவர் எஸ்.முனியசாமி, நீதிபதி (பணி நிறைவு) பொ.நடராசன், மதுரை பழக்கடை அ.முருகானந்தம், மாநகர் மாவட்டச் செயலாளர் மீ.அழகர்சாமி, மேலூர் கழக மாவட்டத் தலைவர் எரிமலை, செயலாளர் மோதிலால், மாவட்ட இளைஞரணி தலைவர் பிரபாகரன், ச.செயப்பிரகாஷ், பு.கணேசன் மாவட்ட மகளிரணி பாக்கியலெட்சுமி, வழக்குரைஞர்கள் தமிழ்மணி, தியாகராஜன், து.சந்திரன், ஆசிரியர் சுந்தரராசன்,
தனராசு, விருதுநகர் மாவட்டத் தலைவர் ஆதவன், நெல்லை மண்டல இளைஞரணி வெற்றிவேந்தன், திண்டுக்கல் மண்டல தலைவர் இரா.வீரபாண்டி, செயலாளர் ச.இரகுநாகநாதன், மதுரை மாநகர், உசிலம்பட்டி, மேலூர் கழக மாவட்டங் கள், தேனி திண்டுக்கல், விருதுநகர் மற்றும் பல்வேறு மாவட்டங்கள் கார், வேன்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கழக தோழர்கள் பங்கேற்றனர். உசிலம்பட்டி ஒன்றிய தலைவர் காசி மாயன் நன்றி கூறினார்.

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

0 comments: