Friday, October 9, 2015

பார்ப்பனர்கள் பார்வையில் தமிழ்ப் பற்று

 
இந்த வார துக்ளக் இதழில் (14.10.2015) தமிழர்களின் தமிழ்ப் பற்று என்று கிண்டலோ கிண்டல் என்று அடித்து உதறித் தள்ளியுள்ளது. தொண்ணூறு சதவிகிதத் தமிழ்க் குடும்பங்களில் தமிழுக்குப் பதிலாக ஆங்கிலத்தைத் தான் பயன்படுத்து கிறார்கள். 
நடைமுறை பேச்சு வழக்கிலும் ஆங்கிலம் தான் கோலோச்சுகிறது; சேத்துப்பட்டு, சேப்பாக்கம் என்று எவரும் மறந்தும் கூடச் சொல்வதில்லை. சேத்பட், சேப்பாக் என்று ஆங்கிலத் தொனியுடன் சொல்கிறான் இந்தச் சுரணைகெட்ட தமிழன் என்கிற அளவுக் குக்கூட வார்த்தைகள் சூடாக நீள்கின்றன.
இவ்வளவும் துக்ளக் எழுதுவது தமிழன் மீதுள்ள பற்றுதலால் அல்ல - பார்ப்பனர்கள் புழங்கும் தமிழ் என்றே தனியாக இருக்கிறதே!
தமிழ் செம்மொழி என்று ஆக்கப்பட்ட போது, இதே துக்ளக் தினமலர் கும்பல் என்ன எழுதின என்பது நமக்குத் தெரியாதா?
கேள்வி: தமிழ்மொழியை செம்மொழியாக்க சட்டம் கொண்டு வந்தால் என்னென்ன பயன்?
பதில்: காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். ஏழை நெசவாளர் வீட்டுத் தறி நிற்காமல் இயங் கும். ஒரு வேளை கஞ்சிக்கே வழி இல்லாதவருக்கு மூன்று வேளையும் மட்டன் பிரியாணி கிடைக்கும்.
(தினமலர் வார மலர் 13.6.2004)
சென்னை மாநகர மேயர் மானமிகு மா. சுப்பிர மணியன் அவர்கள் விளம்பரப் பலகைகளில் தமிழ் முதலிடத்தில் இருக்க வேண்டும் தமிழ் மணம் கமழ வேண்டும் என்ற முயற்சியை மேற்கொண்டார். அப் பொழுது இதே துக்ளக் என்ன எழுதிற்று தெரியுமா?
தமிழை வளர்க்கிறேன் என்று அரசு நிர்வாகத்தில் புகுந்து குட்டிச் சுவராக்கும் இவர்களை மொழி நக்ச லைட்டுகள் என்றுதான் கருத வேண்டும். முதல்வரே (கலைஞர்)  தமிழைச் சொல்லி ஏமாற்றுகிறவராக இருப்பதால், சென்னை மேயர் முதல் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் வரை தமிழை அமல்படுத்துகிறோம் என்று கம்பு, கடப்பாரை சகிதம் கிளம்புகிறார்கள். துப்பாக்கி ஏந்துகிறவர்கள்தான் தீவிரவாதிகள் என்பதல்ல. 
இதுபோல் நடைமுறைக்கு ஒவ்வாத மொழி வெறி பிடித்து அலைகிறவர்களும், அந்த மொழி வெறியைத் தங்கள் அதிகாரத்தின் மூலம், ஜனங்கள் மீது திணிக்கிறவர்களும், தீவிரவாதிகள்தான், இவர்கள் மொழி நக்சலைட்டுகள் (துக்ளக் 15.9.2010) என்று எழுதிய அதே துக்ளக் தான் அய்யய்யோ தமிழர்கள் வீட்டில் தமிழ்ப் புழக்கம் இல்லையே என்று இதுதான் சந்தர்ப்பமாகக் கருதி தமிழர்களை சுரணை கெட்ட வர்கள் என்று ஒரு சாடு சாடுகிறது.
அவாள் வீட்டில் புழங்கும் தமிழ் எத்தகையது என்பது நமக்குத் தெரியாதா? தண்ணீர் என்று தப்பித் தவறி வருமா? ஜலம் என்றுதானே சொல்லுவார்கள். தப்பித் தவறி சோறு என்று உச்சரிப்பார்களா? சாதம் என்று தானே அக்கிரகார நாக்குச் சுழலும்? மைத்துனர் என்று அவர்கள் வாய்ப் பேசுமா? அத்திம்பேர் என்றுதானே அவாள் அழைப்பாள்?
தமிழர்கள் வீட்டில் ஆங்கிலம் புழங்குவது தான் கேவலம் - மற்றபடி இதுபோல சமஸ்கிருதம் புகுந்து புறப்பட்டு வருகிறதே, அதைப்பற்றி ஏன் எழுதவில்லை துக்ளக்? ஏ. சொரணை கெட்ட தமிழர்களே, தாய்மொழி தமிழ் இருக்க இந்தச் சமஸ்கிருதக் குப்பை ஏன்? என்று எழுதாதது ஏன்?
இன்றைக்கும் கோயிலுக்குள் வழிபாடு மொழி என்கிறபோது பெரும்பாலும் சமஸ்கிருதம்தானே! அதனை எதிர்த்துக் கேட்டால் இதே துக்ளக் என்ன தலையங்கம் தீட்டியது?
மொழி ஆர்வமா? மத துவேஷமா? என்ற தலைப்பில் என்ன எழுதப்பட்டது துக்ளக்கில்? நாயன் மார்களும், ஆழ்வார்களும் இயற்றிய தமிழ்ப் பாடல்களை ஸம்ஸ்கிருதத்தில் மொழி பெயர்த்தால் அர்த்தம் இருக்கும், அருள் இருக்காது. ரிஷிகளும் பக்த சீலர்களும் இயற்றிய ஸமஸ்கிருத துதிகளை தமிழில் மொழி பெயர்த்தால் பொருள் இருக்கும், புனிதம் இருக்காது. அதாவது, இங்கே முக்கியத்துவம் மொழிக்கு அல்ல. ஒலிக்கு என்று துக்ளக் (18.11.1998) தலையங்கத்தில் குறிப்பிட்டதே - இதுதான் துக்ளக் பார்ப்பன வட்டாரத்தின் தமிழ்ப் பற்றா?
சங்கராச்சாரியாரே பூஜை வேளையில் தமிழில் பேச மாட்டாரே - கேட்டால் பூஜை வேளையில் நீஷப் பாஷையான தமிழில் பேசக் கூடாதாம். சமஸ் கிருதம்தான் தெய்வீக பாஷையாம். இந்த நஞ்சைக் கன்னத்தில் தேக்கி அடக்கிக்  கொண்டுதான் (சுரணை கெட்ட தமிழர்கள் வீட்டில் ஆங்கிலத்தில் பேசு கிறார்களே!) என்று ஆதங்கப்படுவதாக துக்ளக் காட்டிக்கொள்கிறது.
ஒரே ஒரு பரிதிமாற் கலைஞரைத் தவிர தமிழில் பெயர் சூட்டிக் கொண்ட பார்ப்பனரைக் காட்டுங்கள் பார்க்கலாம்.
தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்றால், இந்தப் பார்ப்பனர்கள் தங்கள் ஏடுகளில் எப்படி எப்படியெல்லாம் கேலியும் கிண்டலும் செய்தார்கள்?
வீட்டில் ஆங்கிலமா என்று அங்கலாய்க்கிறார்களே - உண்மையில் பார்ப்பனர் ஆங்கிலத்தை வெறுக்கக் கூடியவர்களா? வெள்ளைக்காரனை எதிர்ப்பதாகக் காட்டிக் கொண்டு இங்கிலீஷைக் கற்றுத் தேர்ந்து  வெள்ளையர் ஆட்சியில் கொள்ளைக் கொள்ளையாக உத்தியோகங்களைப் பெற்று உயர்ந்த நிலைக்கு வந்தவர்கள் இந்தப் பார்ப்பனர்கள் தானே, மறுக்க முடியுமா?
பார்ப்பனர் அல்லாதார் ஆங்கிலத்தைப் படிக்காமல் பார்த்துக் கொள்வதுதான் பார்ப்பனர்களுக்குப் பாதுகாப்பு என்பது அவர்களுக்குத் தெரியும் அதனால் தான் ஆங்கிலத்தை வெறுப்பதுபோல பாசாங்கு செய் கிறார்கள் - தமிழர்களே, எச்சரிக்கை! எச்சரிக்கை!!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...